ஏதாவது எழுத வேண்டும் என்ற பெரு அரிப்பும், பெரு விருப்பும் மனதில் அலையடித்த வேளைகளில் எல்லாம் எவ்வித பிடிமானமும் இன்றி அலைக்கழிதலாக காலம் கழிந்திருக்கின்றது. சில வேளைகளில் வந்து துரத்தியடிக்கும் சமூகச் சீற்றமும் அடங்கி அமுங்கி அவமாய் போயிருக்கிறது.
வடிகால் தேடி அலைந்த பொழுதுகளில் ஒருகாலத்தின் முந்தைய வெளிப்பாடுகளான கவிதைகளும் சிறுகதைகளும் அச்சு வாகனமேறி பழுத்த காகிதத்தில் பதிவாகிப்போயின. பதிவுகளை படித்துப் பார்க்கையில் நிரப்பப்படாத பக்கங்கள் நீண்டு கொண்டே போயின. மனப்பெருவெளியில் நாங்கள் நிர்வாணமாக நிற்றலை உணர்ந்து வெட்கி தலைகுனிந்து போன கணங்கள் ஏராளம்.
இலக்கியப்பரப்பில் நுழைந்து ஒரு சாகசம் பண்ணிப் போகும் சாணக்கியம் எமக்கில்லாத போதும், பதிவு செய்து எம்மை பத்திரப்படுத்திக் கொள்ளும் இருப்பின் மீதான படிமம் வகை தொகையின்றி வாய்திருக்கின்றது.
“ஆருத்ரா தரிசனம்“ வந்து விழும் நினைவின் நெகிழ்வுகள். ஆக்கங்கள் பிறரின் வாசக கவனத்தைப் பெற்றாலே ஈன்றதின் பெரும்பேறை அடைந்து கொள்வோம்.
தொடர்ந்து பயணிக்க கைத்தடி தேடும் காலம் இது. அங்கேயும் இங்கேயுமாக கிள்ளித்தெளிக்கும் நேரத்தின் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும், துறைசார் அறிவின் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும், வந்து வாய்த்த தோதான நட்புத்துணையுடன், பேச்சுவாக்கில் கதைத்து, பயண அலுப்பில்லாமல் நீளவாக்கில் நெடும் பயணம் புரிய நட்புத்தோழன் பலமாக பாலமாக இருப்பான் என்றெண்ணி முடிக்கும் தறுவாயில் ஒன்று தலையில் தட்டுகின்றது
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே“
அன்புடன்
ஆருத்ரா
மறுமொழியொன்றை இடுங்கள்