சாவகச்சேரியின் குறுக்கு மறுக்காக எங்களைச் சுமந்து திரிந்தவை சைக்கிள்கள். கனகன்புளியடி ஊடாக மட்டுவிலுக்கும் மறுகரையாக வேம்பிராய் சந்தி, புத்தூர்சந்தி வரைக்கும், தினசரி பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்குமான எமது போக்குவரத்து ஊடகம் சைக்கிள்கள். சமயங்களில் இடம்பெயர்வு தருணங்களில் முரசுமோட்டை வரை சைக்கிள் மிதித்த சாகசகங்களுமாக பயணத்தின் உற்ற நண்பன் என்னால் 900 ரூபாவிற்கு வாங்கப்பட்டு என்னுடன் எட்டு வருடங்கள் கழித்த பழைய றலி சைக்கிள்.
ஆரம்பத்தில் 3ம் வகுப்பில் நான் வைத்திருந்த சின்ன சைக்கிளால் நான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன். சைக்கிள ஓட்டுவதற்கான ஆரம்பக் கல்வி அதனூடாகவே நடந்தது. பெரிய சைக்கிள்களில் குரங்கு பெடல் போட்டு மற்றவர்கள் ஓட்டப்பழகிய காலங்களில், நான் இலகுவாக சீட்டில் இருந்தவாறே பலன்ஸ் பண்ணப் பழகிய காலங்களில், சிறிது தார் ஊற்றி ஊரி போட்டு மெழுகிய ஒற்றை வீதிகளில் முட்டிக்கால் தேய்ந்து இரத்தம் சிந்திய பொழுதுகள் ஏராளம். ஒரே ஒரு சிரமம், ஏறி இருந்து ஓடுவதற்கு உதவி புரியும் சீமெந்துக்கட்டு இறங்கும் இடத்திலும் இருக்க வேண்டும். அல்லாவிடில் விழுந்து எழும்புவது தவிர்க்க முடியாதது. அந்த சைக்கிளின் ஆரம்ப உரிமையாளர் சிலாபம்-மாதம்பை பொலிஸ்ஸில் பணிபுரிந்த பொலிஸ் ஒருவரின் மகனுடையதாகும். பின்னரான காலத்தில் எனக்கான உடமையான பொழுதில் பள்ளிக்கு பயணிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஊர் கூடித் தேரிழுத்த கதையாக பாடசாலை முன்றலில் பலரின் பார்வைக் கணைகளுக்கு மத்தியில் பயணம் தொடர்ந்தது. நண்பர்களின் தொடர்ந்த வற்புறுத்தலால் வகுப்பறையின் கரும்பலகைக்கு அருகில் நிறுத்தப்பட்ட சைக்கிள், சரவணமுத்து வாத்தியாரின் பலத்த கண்டிப்பினிடையில் தரையிறக்கப்பட்டு வகுப்பிற்கு வெளியே நிறுத்தப்பட்டது.
இப்போதெல்லாம் திருமண, பூப்புனித நீராட்டு விழா வைபவங்களில் சந்திக்கும் எம்முடன் ஓரே பாடசாலையில் படித்தவர்கள், அந்த சைக்கிளையும் நினைவுபடுத்தி என்னை குசலம் விசாரிக்கையில் பழைய நினைவுகள் நீருள் அமிழ்த்தப்பட்ட பந்தாக மேலே எழும்புகின்றன. எங்களுடன் கல்வி கற்ற பரன் மாஸ்டரின் மகன் ஒரு சிவப்பு நிற கேபிள் பிறேக் சைக்கிள் வைத்திருந்ததை, அவருடைய பேஸ்புக்கில் இன்னொரு நண்பரான விமலன் நினைவுபடுத்தினார். பவித்ரா வைத்திருந்த, இருந்து சாய்ந்து ஓடும் சொப்பர் சைக்கிள் மிகவும் பிரத்தியேகமானது. அவ்வகையான சைக்கிள் சாவகச்சேரியில் வேறொருவரும் வைத்திராதது. இப்படி சைக்கிள்களின் பெருமையும் அதை அவர்கள் வைத்திருந்த உரிமையுமாக நிலையாக அடுக்குகள் தோறும் நிலைத்திருக்கின்றன நினைவுகள். அவர்களை நினைவுபடுத்துகையில் அழையா விருந்தாளிகளாக சைக்கிள்கள் குறித்த பதிவுகளும் வருவது தவிர்க்கமுடியாதது. அவர்களில் யாரேனும் இன்றைய பொழுதுகளில் விலை கூடுதலான வாகனங்களில் ஏறிப் பயணிக்கின்ற வேளைகளில் எல்லாம், சைக்கிளில் பயணிக்கின்ற நினைவு சுமந்த “மண்சுமந்தமேனியராகவே“ நான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றேன்.
கடந்த மாதம் கொழும்பு சென்றிருந்த பொழுதில் ஆட்டோ ஒன்றிலேலே பயணம் செய்யும் பேரானந்தம் கிடைத்தது. உண்மையில் சொல்லப்போனால் நம்நாட்டு போக்குவரத்துக்கு நிறுத்தவும், ஜனநெருக்கடியான சந்து பொந்துகளுக்கூடாக பிரயாணிக்கவும் உகந்த ஓரே போக்குவரத்து சாதனம் ஆட்டோ தான்.
ஆட்டோ ஓட்டுனரான குமார் அடிக்கடி தன்னைக் கடந்து செல்லும் ஆட்டோக்களை உன்னிப்பாக கவனிப்பதை கண்டிருக்கின்றேன். நான் கேட்காவிட்டாலும் தானாகவே பேச்சு சுவாரஸ்யத்தில் கதைபகரும் குமார், தன்னைக் கடந்து செல்லும் ஆட்டோக்களின் வகைபற்றியும் அண்மையவரவு பற்றியும், சிலாகித்து கதைத்து தானும் இப்போதுள்ளதை விற்றுவிட்டு செல்ஃஸ்ராட்டர் மாடல் வாங்க வேண்டுமென்பதையும் சொல்லிச் சொல்லி அலுத்துக்கொள்வார். பழைய மாடலில் உள்ள கையால் இழுத்து ஸ்ரார்ட் செய்வதால் நெஞ்சு நோவதாக கூறி அலுத்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநரை, முன்னே விரையும் ஏனைய ஆட்டோக்களுடன் கலந்து பிரயாணிப்பவராக காட்சிப்படுத்திக்கொண்டேன்.
மாந்தர்கள் ரகம்-ரகமாக, வகை-தொகையாக கனவுகளின் மீதேறி பயணிப்பவர்களாக காணப்படும் இவர்களும் அடையாளங்களால் தம்மை உருவகித்துக் கொள்பவர்களாக தெரிகின்றனர்.
இவ்வாறே மனிதர்களின் முகங்கள், கார்களால் கைக்கடிகாரங்களால் பாதணிகளால் அடையாளப்படுத்தப்படுவதை கீழேயுள்ள ஜெயபாஸ்கரனனின் கவிதை சொல்கிறது. அவை அந்தஸ்தின் அடையாளங்கள்.
என்னுடைய நூற்றியம்பது காட்டுகிற
அதே நேரத்தை காட்டினாலும்
உன்னுடையது ஏழாயிரத்து எழுநூறு.
காரில் போவதற்கு மூவாயிரத்துக்கு நீயும்
காலில் போடுவதற்கு அறுபது ரூபாய்க்கு நானும்
காலணிகள் வாங்குகின்றோம்.
எனக்கான கடைகளில் நீ நுழைவதில்லை
உன் கிரெடிட்கார்டு நுழையும் கடைகளில்
நான் நுழைய முடிவதில்லை.
இருந்தும் கூட குஸன் மெத்தையிலிருந்து
அடிக்கடி குதித்து கோரைப்பாயில் உறங்கும் என்னை
தட்டியெழுப்பிச் சொல்கிறாய்
தூக்கம் வரவில்லை என்று.
THIRUNAVUKARASU PADMAN
எனது தந்தை எனக்கு புத்தம் புதிய ரலி சயிக்கிள் ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம் ரலி கம்பனியில் 1500 ரூபாவுக்கு 24 /12 /1979 ல் (5 ம் வகுப்பில்) வாங்கித்தந்தார் .அங்கிருந்து நாமிருவரும் அதே சயிக்கிளில் பயணம் செய்து வீடு வந்தோம் அந்த அனுபவம் என்னை மிகவும் புளங்காகிதம் அடைய செய்தது .அந்த சயிக்கிள் இலக்கம் இன்றும் எனது ஞாபகத்தில் உள்ளது 79L644
JV PILLAI
உங்கள் பதிவிற்கு ஜெயபாஸ்கரனின் கவிதை சுட்டிபுரம் அம்மன் கோவில் திருவிழாவும் சீர்காழி கோவிந்தராயன் அவர்களி ன் இசைகச்சேரியும் போல பொருத்தமாக அமைந்துள்ளது.
அருமையான பதிவு. பழைய நினைவுகளில் மாந்தர்கள் மட்டுமல்ல…. மண்குடங்கள் கூட நின்றுநிலைத்து கதைசொல்லி ஆகுமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. தொடர்ந்தும் பதிவிடுங்கள்….
By: inayatamil on மார்ச் 23, 2012
at 9:10 பிப
நான் இன்றும் சைக்கிள்காரன்தான். படிக்கிற காலத்திலிருந்து இன்றுவரை சைக்கிளில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ”கூட வரும் தெய்வம்” என்ற பெயரில் ஒரு பதிவொன்று எழுத நினைத்திருந்தேன். தங்கள் பதிவை வாசித்ததும் விரைவில் சைக்கிள்குறித்த பதிவு எழுத ஆசையாயிருக்கிறது. இறுதியில் உள்ள ஜெயபாஸ்கரனின் கவிதை அருமை. பகிர்விற்கு நன்றி.
By: சித்திரவீதிக்காரன் on மார்ச் 25, 2012
at 2:31 பிப
Mika nanri, Thodarnthu ezhuthungal!!
By: wijayendran on ஜனவரி 21, 2014
at 8:16 பிப