ஆருத்ரா எழுதியவை | ஏப்ரல் 5, 2012

K.S.ராஜா- RADIO CEYLON

மனிதப் பிறவி மகா உன்னதமானது. உயிர் பிறப்பின் இறுதிநிலை மனிதப்பிறப்பாகுமென சொல்லிச் செல்கிறார்கள், இறுதி இருப்பை உய்த்துணர்ந்து கொண்டவர்கள். துன்பத்தை பரிசளிப்பவர்கள் எம்மில் ஏராளமானோர்கள் இருக்கின்றார்கள். நாம் கேட்காமலேயே துன்பத்தை பரிசளிப்பவர்கள் அப்பால் சிரித்து மகிழ்ந்து கொள்கின்றார்கள். அகமும் புறமும் மலர மகிழ்ச்சியை பரிசளிப்பவர்கள் மானுடத்தின் மகத்துவங்கள். எம்முடனே நடமாடிச் சென்றவர்கள், மகிழ்ச்சியை பரிசளித்தவர்கள் எனில் இறுதி இருப்பை சுகப் பதிவாக்கிய மானுட மகானுபாவர்கள்.Image இயந்திர மயமாகிவிட்ட விஞ்ஞான உலகில் மானுடம் குறித்த தேடல்கள் அரிதானவை. காலத்தின் காலமாதலுக்கு உயிர் சேகரித்த உன்னதமானவர்கள்; வறட்சிப் பிடிப்பின் நீர்த்திவலைகள். அடித்து அழவைக்க முடியும் பிடித்து வைத்து மகிழ்ச்சிப் பரப்பிலாழ்த்த முடிந்தவர்கள் வெகு சிலரே.

K.S ராஜா கனவிருப்பின் சாட்சி. மறைந்த மானுடன். வானொலிகளே வாழ்வாகிப்போன என் சிறு பராயத்து வாழ்க்கைச் சூழலை கனவிலேற்றி மகிழ்ச்சிப்படுத்திப் போனவன். கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற இயற்பெயரும் K.S ராஜா என்ற கனவுலகப் பெயரும் தரித்த மானுடனால் மகிழ்வெய்திக் கொண்டவர்கள் ஏராளமானவர்கள்.

இலங்கை வானொலி இந்து மகா சமுத்திரத்தில் கடல் கடந்த மகிழ்வின் பிரவாகம். இன்று பல தொலைக்காட்சி அலைவரிசைகள் , ஆயிரம் வானொலிகள் என வலம் வந்தாலும், என்னை மகிழ்ச்சிப்படுத்தியவை எழுபதுகளில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவை.

இப்போது கேட்டாலும் எந்த அறிவிப்பாளரைக் கேட்டாலும் மறைக்காமல் மறக்காமல் சொல்லும் பெயர்கள் அறிவிப்புத்துறையில் கோலோச்சிச் சென்றவர்கள் மயில்வாகனன் மற்றும் K.S ராஜா
வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் திரைப்பட ரசிகப் பெருமக்களுக்கு எனது அன்பு வணக்கங்கள் என்று அழைத்தபடியே வரும் K.S ராஜா இலங்கை தமிழ் பேசும் மக்களின் உறவல்லாத உறவினர். வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகன். கல்வி கேள்விகளால் மானுடம் மறுசீரமைக்கப் படுவதாக ஆன்றோர்கள் கூறியிருப்பின் ஆசான்களால் தரப்பட்ட அறிவிற்கு நிகரானதே கேள்விகளால் தரப்பட்ட அறிவும் என்றெண்ணி வானொலி பால் மனது இன்புற்றிருக்கின்றது.

பொழுது போக்கு சாதனங்களில் வானொலி மட்டுமே வாழ்க்கைக்கு நெருக்கமானதாக தோன்றுகிறது. தொலைக்காட்சி பார்ப்பது ஏதோ மனதிற்கு தொலைவானதாக ஆகிப்போயிருக்கின்றது. தொலைக்காட்சி ஓரிடத்தில் உட்கார்த்தி வைத்து வேலைகளையும் செயற்பாடுகளையும் முடக்கி காலத்தை வீணடிப்பதாய் ஆக்கிவைத்திருக்கின்றது. வானொலி கேட்டல் இப்போது மாத்திரமல்ல எப்போதும் உவப்பான விடயம்.

இலங்கை வானொலியானது காலை திருப்பள்ளி எழுச்சியில் தொடங்கி; பொங்கும் பூம்புனல் பாடசாலை செல்லும் நேரமாகவும், மதியத்தில் ஒருபடப்பாட்டு மீண்டும் பாடசாலை செல்லும் நேரமாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் கதம்பம் என்ற பல்சுவை நாடக அரங்கம் காலை பத்து மணியைக் குறித்து நிகழ்ச்சிகளைக் கொண்டு காலம் அளக்கும் கருவியாக மாறிப்போனது.
Image

கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரனான மதுரக்குரல் மன்னன் K.S ராஜா காரை நகரை பிறப்பிடமாக கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டதாரி. வானொலி அறிவிப்பு பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் குரல்வளத்தேர்வில் மயில்வாகனன் பாணியை பின்பற்றிக் கொண்ட சூழலில் தன் தனித்துவப்பாணியைக் கொண்டு பின்னாட்களில் குரல்வளத்தேர்விற்கு தன்பாணியை முன்னுதாரணம் கொள்ளச் செய்தவர் K.S ராஜா.

கனத்த சாரீரமும் மெலிந்த சரீரமும் கொண்ட K.S ராஜா வை தென்னிந்திய இதழ்கள் பேட்டி கண்டு வெளியிட்டன. ஏற்கனவே குரலால் அறிமுகமான அவருக்கு இவை வானளாவிய அங்கீகாரம்.

இரவின் மடியில் என்ற நிகழ்ச்சி வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் போதெல்லாம் ஆசை நெஞ்சமே என்ற பாடல் அவருக்கு ஆத்மார்த்தமாக இருந்திருக்கவேண்டும். அடிக்கடி இடம் பெறும். இன்ன பாடல்களை அவர் ஒலிபரப்புவார் என்றெண்ணி அதற்காகவே கேட்டு ரசித்த கூட்டம் , திரைப்படங்களின் விளம்பரங்களில் கைக்கொள்ளும் உத்திகளுக்காகவே கேட்டு ரசித்த கூட்டம், விநோதவேளை –ஒரு நிமிடம் உரையாடும் நிகழ்வில் கம்பீர அறிவிப்பிற்கும் கலகல உரையாடலுக்கும் வானொலியை வலம் வந்த கூட்டம் என ஏராளமான ரசிகர்கள் அவருக்கு.

நீயா பட விளம்பரத்தில் ஸ்ரீப்பிரியா கதறிக் கேட்கும் ” என்னை விட்டிட்டு போகாதீங்க ராஜா” இதை விளம்பரத்தின் இறுதியில் வைத்து போகவில்லை நேயர்களே மீண்டும் அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நிகழ்ச்சியில் சந்திப்போம் என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம்.

இலங்கை திரைப்பட தணிக்கை குழுவில் பணியாற்றிய K.S ராஜா இலங்கையில் திரையிடப்படும் படங்களுக்கு தன் விளம்பர சாகசத்தால் திரையரங்குகளுக்கு கணிசமான வர்த்தகப் பங்காற்றிய பங்காளி.
வானொலி அறிவிப்பிற்கு இடையிடையே நேரம் சொல்வதற்கு பாவிக்கும் மணி ஒலியைக் கூட பகல் இரவென பாகுபடுத்துவதற்கு சிறிய அழுத்தமான ஒலிக்குறிப்பாய் கையாண்டவர் K.S ராஜா என IBC யில் பணியாற்றிய திருநாவுக்கரசு விக்னராஜா சொன்ன ஆச்சரியத் தகவல்.

யாழ் முற்றவெளி அரங்கில் K.J .ஜேசுதாசின் இசை நிகழ்வு. மேடை அறிவிப்பாளர் K.S ராஜா பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். அற்புத இசை நிகழ்வும் அற்புத மேடை அறிவிப்பும் நிகழ்விற்கு உயர் அந்தஸ்து. தமிழும் ஆங்கிலமும் கலந்து கட்டிய அவ் அறிவிப்பை கேட்க இங்கே அழுத்தவும்.

இப்போது கேட்கிறதா ஏப் பாடல் ஒன்று. 1966 இல் வெளியான செம்மீன் இலங்கை திரைப்பட வரலாற்றில் நீண்ட நாட்கள் ஓடிய மலையாள திரைப்படம். இசை சலீல் சௌத்ரி. பின்னாட்களில் பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் படத்திற்கு இசையமைத்தவர். செம்மீன் படத்தில் இடம்பெற்ற” கடலினக்கர போனோரே” திகட்டாத தேனிசை. K.S ராஜா செம்மீன் படத்தில் இடம்பெற்ற K.J .ஜேசுதாசின் பாடல் குறித்து அறிவிப்பில் சொன்னவைகள் உபரித் தகவல்.

இசைச் சிகரமும் அறிவிப்பு அகரமும் இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும். பின்னாட்களில் வானத்து நட்சத்திரம் தரையிறங்கிய பொழுது வந்தேகியது. தடை செய்யப்பட்ட பாடலொன்றை ஒலிபரப்பியதாக K.S ராஜாவும் அவருடன் இணைந்து கட்டுப்பாட்டாளரும் இடைநிறுத்தப்பட்ட பொழுதுகள் வடமாகாணத்தின் சிறு நகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் தோறும் அவரின் அறிவிப்பில் பல மேடை நிகழ்வுகள் நடப்பதற்கு வழி செய்து கொடுத்தன. அந்தப் பொழுதுகளே காதுகளால் கேட்ட K.S ராஜாவை கண்களால் பருகச் செய்த புதிய ஏற்பாடு.

ஊர் தோறும் நடைபெற்ற ராஜாவின் நிகழ்வுகள் இரு பெரும் உண்மைகளை உணர்த்தியது. பளைப் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு நானும் நண்பர் ஒருவரும் சென்றிருந்தோம்.

K.S ராஜாவின் குரலை வைத்துக்கொண்டு இதற்கு முன்னர் அவரை பார்த்திராத நான் அவரைப் பற்றி அதீதத்திற்கு விம்பம் ஒன்றை உருவாக்கி வளர்த்து வந்தேன். மிகக் கம்பீரமான, எடுப்பான ,அகலமான, உயரமான என்ற உடல்வாகு குறித்த கற்பனைகள் அவை. இந்த விம்பவிருத்தி அவரைக் கண்ட கணத்தில் உடைந்து போயிற்று. நிறுத்தி வைக்கப்பட்ட ஒலிவாங்கியின் உயரத்திற்கும் குறைவான உயரத்தில் மெலிந்த உடல்வாகுடன் தென்பட்ட அவர் அடுத்து வந்த சில நிமிடங்களில் வானின் காற்றுப் பரப்பை தன் குரலால் வசமாக்கி………நான் பழையபடி மீண்டு வந்தேன் இவ்வுலகிற்கு. குரலை வைத்து எடை போடாதே.
அடுத்த உண்மை. இரண்டு நிமிடம் உரையாடும் நிகழ்ச்சியில் நீண்ட மௌனம் சாதித்து நிகழ்ச்சியில் இருந்து விலத்தி விடப்பட்ட நபரொருவர் K.S ராஜா தன்னில் மட்டும் வன்மம் பாராட்டி நடந்து கொண்டதைப் போன்று மேடையை விட்டு K.S ராஜா கீழ் இறங்கி வரும்போது தான் யாரெனக் காட்டுவதாக மேடையின் கீழ் நின்று கலவரம் செய்தார். பளையின் தென்னந்தோட்டம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னர் அந்த ஆசாமி தென்னையிலிருந்து இறக்கியதை அதிகம் உட்கொண்டிருக்க வேண்டும். அவரின் கூச்சல் அளப்பரியதாக இருந்தது. பின்னர் K.S ராஜா பத்திரமாக மற்றவர்களால் பார்த்துக் கொள்ளப்பட்டு நிகழ்ச்சி இறுதிவரை சுவாரஸ்யம் குறையாது நடந்து முடிந்தது.

பின்னாட்களில் K.S ராஜா அவ்வாறான நபர்களுடன் சைக்கிளில் பிரயாணிப்பதையும் வீதிகளில் உலா வந்ததையும் நெருக்கத்தில் அவதானித்திருக்கின்றேன். வானத்து நட்சத்திரம் தரையிறங்கி வந்ததான தோற்றம். அடுத்தவர்களின் காலடிகளால் மிதிபட்டு விடக்கூடாது. K.S ராஜா மண்ணில் மறைந்த நட்சத்திரம்.

இந்த பதிவிற்கான படங்கள் ஒலிக்குறிப்புகள் யாழ் சுதாகரின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. நன்றி;- யாழ் சுதாகர். K.S ராஜா வின் மறைவின் பின்னர் திருமதி.ராஜேஸ்வரி சண்முகம் தொகுத்தளித்த அஞ்சலி இங்கே.

தொடர்பு:  aruthra.tharisanam@hotmail.com


மறுவினைகள்

  1. k.s.ராஜாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது நிகழ்ச்சிகளை கேட்டிருக்க வாய்ப்பில்லை என எண்ணுகிறேன். அப்துல்ஹமீது அவர்களின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். கே.எஸ்.ராஜா குறித்த நல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி.

  2. siruvarmalar on every sunday .. at 12.00 noon from 80’s to 85’s
    the great enteraintment for me..

    http://sivaparkavi.wordpress.com/
    sivaparkavi

    • எனது நன்றிகள். சிறுவர் மலர் காலை 11 மணியிலிருந்து 11.15 வரை. ‌அந்த நேரங்களில் எங்களை வீட்டில் யாரும் வீட்டு வேலைகள் சொல்வதில்லை. சொன்னாலும் செய்ய மாட்டோம்.

  3. கே.எஸ்.ராஜாவினது ஜனரஞ்சகமான அறிவிப்பு பாணி என்றால் .. அப்துல் கமீது அவர்களினது தொழில்நேர்த்தியான அறிவிப்பு பாணி என்பது எனது அபிப்பிராயம். கே.எஸ்.ராஜாவினது
    பாணியை ஒருவரால் பிரதி பண்ணி பிழைப்பு நடத்த முடிகிறது. அப்துல் கமீதினது பாணியை பிரதி பண்ண முயன்றுதோற்றவர்கள் ஏராளம். அவரது சரளமான தமிழ் உரையாடல்… பாடல்கள் பற்றிய விரல்நுனித் தகவல்கள்… கம்பீரமான தோரணை….. இன்னும் விரசமில்லாத நகைச்சுவை என்பன அவரின் தனித்தன்மைகள். அப்துல் கமீது அவர்களை தமிழ்உலகம் சரிவரக் கண்டுகொள்ளவில்லையோ என எண்ணத்தோன்றுகின்றது.

  4. மாளிகைக்காடு சிறோ பகி‌ர்ந்திருந்த பதிவில்
    இருந்து-

    அறிவிப்பு
    உற்சாகம் பொங்க வைப்பது தான்
    உயிர்த்துடிப்பான அறிவிப்பு’ என்று…

    எழுபதுகளில் எழுந்து வந்த
    மின்சாரத் தமிழே… வணக்கம் ! …

    வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்
    ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள்
    வானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை…

    உங்களை
    மறக்க முடியுமா அய்யா ?
    By: மாளிகைக்காடு சிறோ


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: