சித்திரை வருடப்பிறப்பு பற்றிய சிதறலான எண்ணங்கள். தை மாதத்தின் முதல்நாளே வருடப் பிறப்பாகுமென ஒரு சாராரும், இதுவரை இருந்த இராசியிலிருந்து மேட இராசிக்குள் புகும் நாளே வருடப்பிறப்பாகுமென மறுசாராரும் கருத்துக்களால் கட்டிப் புரள்கையில் , அடியேன் அது பற்றிய பிரக்ஞை இன்றி வருடம் முழுவதும் பண்டிகைகளால் நிறைந்திருக்கக் கடவது என இரு சாராருக்கும் காற்றிலே கனவு விதைத்தேன்.
பின்னே என்னவாம்? புலம்பெயர்ந்து வந்ததில் இருந்து இயந்திரமயச் சூழலில் தனித்தனித் தீவுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழர்கள் ஒன்று கூடி மகிழ்வெய்தும் காலம் பண்டிகை நாட்களாகும். கோவிலுக்கு போவது கூட ஆத்மார்த்த ஆன்மிகம் என்று ஏதுமில்லையாயினும், எமது மக்களுடன் ஒன்றாகக் கலத்தலை செய்யும் ஆன்மிகம் இதுவாகுமென மனம் சமாதானம் கொள்கின்றது.
இந்த புது வருடம் நந்தன வருடம். தமிழ் வருடங்களை அறுபதாகக் கொண்ட சுழற்சியில் நந்தன வருடம் இருபத்தாறாம் வருடம். சென்று கழிந்தது கர வருடம். நான் பிறந்தது பிங்கல வருடத்தில். இத் தரவுகளை வைத்துக் கொண்டு எனது வயதை நிறுவ முற்படுவது தேவையில்லாத விடயம்.
சிறு வயது புத்தாண்டு நாட்கள் கனவுகளால் நிறைக்கப்பட்டவை. பண்டிகை நாட்களே எமது நிர்வாணங்களை மறைக்கும் அணிகலன்களை அளிக்கும் திருநாட்களாக மிளிர்ந்தன. தீபாவளிக்கும் வருடப் பிறப்பிற்கும் மாத்திரமே எங்களுக்கு புதுத் துணி கிடைக்கும். பண்டிகை நாட்களின் பிற சம்பிரதாயங்களால் அச்சிறுவயது ஆதாயப்படாமல் போன நாட்கள் அவை.
முதல் நாள் முட்டி மோதி வாங்கி வைத்திருக்கும் புதுத்துணியின் வாசம் வேறெந்த சுகந்தங்களை விடவும் உயர்வானது. காலையில் சில்லென்ற கிணற்று நீரில் வெடவெடத்து நடுங்கிக் குளிக்கும் துயரம் புத்தாடை அணிவதில் மறந்து போகின்றது.
அவ் ஆடை அணிதலின் FASION SHOW அருகிலிருந்த உறவினர் வீடுகளுக்கு அணி வகுப்பதன் மூலம் நடந்தேறுகின்றது. கண்களே ஆயிரம் மொழி பேசக் கூடிய வல்லமையை உவந்தளித்திடும் அத் தருணங்கள். எல்லா உறவினர் வீடுகளுக்கும் செல்லும் படலம் அத்தை வீட்டில் முடிவுறும். அத்தை வீடானது எங்கள் சிறு வயது குருகுலம். சிற்றுண்டிகள், தேநீர்கள் என வயிறு நிரப்பி டின் வைத்து விளையாடும் பிள்ளையார் விளையாட்டில் முடிவடையும். -இது அன்றைய நினைவுச் சிதறல்.
முதல் நாளே மருத்துநீர் வாங்கி வைக்க வேண்டியதாயிற்று. மூல நட்சத்திரத்து, மகர நட்சத்திரத்து மாந்தரெல்லாம் கட்டாயம் மருத்துநீர் வைத்து நீராட வேண்டும் என முன்னர் சென்ற கோவிலில் புரோகிதர் பீதியைக் கிளப்ப ZURICH திரும்பிய நாங்கள் இவ் விடயத்தை கவனமாக கையாண்டோம். மருத்துநீர் கோமியத்தலானது என்று எங்கோ படித்த ஞாபகத்தில் சென்ற வருடத்தில் இருந்து நான் வாயைத் திறந்து வைத்து குளிப்பதில்லை. மாட்டின் கோமியம் மாடுகளுக்கே சொந்தம்.
காலுக்கும், தலைக்கும் அறுகம்புல் வேப்பிலை என கோவிலில் தந்து விட்டதில் காலை பள்ளி செல்லும் என் சின்னமகள் முழுவதையும் எடுத்துக் கொண்டதில் எனக்கு கிடைத்தது ஒற்றை வேப்பிலை. ஆனாலும் சம்பிரதாயங்களை விட்டுக் கொடுக்க மனமில்லை. சம்பிரதாயங்கள் ஏதாவது நல்ல நோக்கத்திற்காக உருவானவை.-நம்பிக்கை! நம்பிக்கை!!
மற்றவர்கள் வேலைகளிற்கும், பாடசாலைகளிற்கும் சென்று விட கோவிலிற்கு தனித்து பயணமானேன்.சூரிச் சிவன்கோவில் சூரிச் நகருக்கு மிக அண்மித்த ஆலயம் இது. சூரிச் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து 5 கி.மீ தூரத்திலும், சூரிச் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் தலை தட்டும் தூரத்திலும் கோவில்
அமைந்திருக்கின்றது.
புலம்பெயர்ந்த தேசத்துக் கோவில்களுக்கு என்று தொன்மை ஏதும் கிடையாது. பாண்டிய சோழர் காலத்தை சேர்ந்தவை என்ற கல்வெட்டுக்களோ, இத்தலத்திற்கான மானியம் வழங்கிய மன்னர்களின் பெயர் பொறித்த பட்டயங்களோ கிடையாது. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் சுவிஸ் இன மக்களுக்கு தமிழர்கள் தொந்தரவளிக்காத இடத்தில் (ஒதுக்குப் புறம்) தொழிற்பேட்டைக்குள்ளான கட்டிடத் தொகுதி ஒன்றில் கோவில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் பரிகசிப்பு ஏதும் கிடையாது.
ஆனாலும் நிறைய சிரமங்களுக்கிடையில் கோவில் பணியாளர்களின் சீரிய செயலாற்றலில் கோவில்கள் தமிழர்களின் பாரம்பரியத் தொன்மங்களை காத்து வருகின்றன- என்பதில் ஐயமற்ற தெளிவு வைத்துள்ளேன். ஈழத்தில் நிராதரவான சிறுவர்களுக்கு உதவியளிப்பதிலும், மக்கள் நலன்சார் செயற்பாடுகளிலும் கோவில்கள் துணை நிற்கின்றன. கோவிலில் மந்திர உச்சாடனம் செய்து வழிபட காயத்ரி மந்திரங்களடங்கிய புத்தகத்தில் இருந்து நவக்கிரக வழிபாட்டிற்கான பகுதியை எடுத்து சென்றிருந்தேன். நவக்கிரக வழிபாட்டில் இப்பீஜ மந்திரங்களை உச்சாடனம் செய்து வழிபடுவதில் சிறப்பான பலன்கள் இருப்பதாக என் வாசிப்பிற்குட்பட்ட புத்தகங்களில் இருந்து அறியக்கிடக்கின்றது.
யோகாசனம் பயின்ற காலத்திலிருந்து கும்பிடும் முறையிலும் மாற்றம் வந்திருக்கின்றது. கால் பெருவிரல்கள், குதி என்பவை இணைய இரு பாதங்களையும் மிக நெருக்கமாக வைத்திருந்து இறைவனை சேவித்தல் மனத்திற்கு பிடித்தமானதாகவும், கால்களைப் பரத்தி வைத்து கும்பிடுதல் இறைவனை ஏளனப்படுத்துவதாகவும் ஆகியிருக்கின்றது.
சிவன் கோவிலில் அன்று எண்ணிறைந்த பக்தர்கள். கார் பார்க்கிங் முழுதும் நிறைந்து போய் தூரத்தில் நிறுத்தி வைத்து நடந்து வரும் நிலைக்கு உள்ளானது.
சிவகாயத்ரி மந்திரம்
ஓம் சிற் சபேசாய வித்மஹே சிதாகாசாய தீமஹி
தந்நோ சபேசப் ப்ரசோதயாத்
மாலையில் சூரிச்சில் இருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள Dürnten என்ற கிராமத்தில்(DORF) எழுந்தருளியிருக்கும் விஸ்ணு துர்க்கை அம்மன் கோவிலுக்கு என் வீட்டு கோந்து, வாண்டுகளுடன் சென்றிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சூரிச்சிற்கு மிக நெருக்கமான இடத்தில் இருந்த இவ் ஆலயம் தற்போது இடம் பெயர்ந்து சொந்தக் கட்டடத்திற்கு மாறியுள்ளது. இவ் ஆலயத்தில் பூஜை புனஸ் காரங்கள் இரண்டு, மூன்று புரோகிதர்களால் நிறைவேற்றப்படுகின்றன.
தேவாரப் பண்ணிசை, பஜனை வழிபாடுகளும் சிறப்பாக நடந்தெய்தி வருவது கண்கூடு. மாத விலக்கான நாட்களில் பெண்கள் கோவில் காரியங்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டியதில்லை- என இவ் ஆலயத்தின் பிரதமகுரு சரவண பவானந்த குருக்கள் ஏதோவொரு தருணத்தில் கூறியது என் ஞாபகத்தில் வந்து போகின்றது.
புது வருடத்தின் HI LIGHT
இவ்விரு கோவில்களில் வழங்கப்பட்ட பிரசாதம் (உணவு). இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? என்ற MIND VOICE என்னுள்ளே ஒலிக்கின்றது. தனுசு இராசிக்காரர்களுக்கு வரவு 4 என்றும் செலவு 14 என்றும் பஞ்சாங்கத்தில் இருப்பதாக பிரதம குருக்கள் தனது பிரத்தியேக உரையில் தெரிவித்திருந்தமை ஏற்கனவே சிக்கி சின்னாபின்னப்பட்டிருக்கும் என்னை கலவரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடவுளே என்னைக் காப்பாற்று!
துர்க்காதேவிக்கான காயத்ரிமந்திரம்.
ஓம் காத்யாயநாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்.
மறுமொழியொன்றை இடுங்கள்