பரீட்சைகள், பெறுபேறுகள் கல்வி கற்கும் மாணவர்களை மாத்திரம் பாதிப்பதில்லை. பெற்றோர்களையும்,அவர்களுக்கு கற்று தந்த ஆசிரியர்களையும் பாதிக்கின்றன. பாதிப்பு என்பது வெறுமனே துயர் கவிந்த பாதிப்பு மாத்திரம் அல்ல, இன்பம் நிறைந்த பாதிப்புகளாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றன.
கல்வி என்பது மேலான செல்வம் என்ற பொருளுடன் மேலான இன்பம் என்றும் பொருள் கொள்ளவேண்டும்.அலைந்து அலைந்து வந்தேறு குடிகளாக வாழ்வமைத்துக்கொண்ட ஈழத்தமிழனுக்கு சற்றேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான முதலீடு கல்வி மாத்திரம்தான்.
அண்மையில் சுவிட்சர்லாந்தில் Gimi prüfung என்றழைக்கப்படும் ஆறாம் வகுப்பில் மாணவர்களை தரம் பிரிக்கும் பரீட்சைகள் நடந்து முடிந்திருக்கின்றன. சூரிச் மாநிலத்தில் மார்ச் 12ம் திகதி பரீட்சைகள் நடந்தெய்தின. டொச் மொழிப் பரீட்சை, கணிதப் பரீட்சை என இரண்டு வினாத்தாள்கள் கொண்ட இத் தேர்வில் தோற்றும் மாணவர்கள், ஏற்கனவே வகுப்புகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று ஆசிரியர்களினால் தெரிவு செய்து அனுப்பப்பட்டவர்கள். இந்த பரீட்சையில் மாணவர்கள் சராசரியாக 4.5 புள்ளிகளுக்கு கூடுதலாக எடுத்திருக்க வேண்டும்.
இங்கே நூற்றிற்கு புள்ளிகள் இடப்படுவதில்லை. ஆறிற்கு புள்ளிகள் அளிப்பதால் 4.5 என்பது 75 வீதமான புள்ளிகளாகும். டொச் வினாத்தாள் இரு பகுதிகளை கொண்டது. மொழிவளம், கட்டுரை எழுதுதல் என்ற வகையில் இரண்டு பரீட்சைகள். பரீட்சையில் தவறான விடைகளுக்கு கழித்தற் புள்ளிகள் அளிக்கப்படுவதால் தேர்வு மிக இறுக்கமானது.
இப்பரீட்சைக்கான மாணவர்களை தயார்படுத்தல் மிக அளப்பரிய பணி. பெற்றோர்களுக்கு அதிக நேரத்தை பிள்ளைகளுடனே செலவிட வேண்டும். நல்ல கல்வி நிலையங்களை அடையாளம் கண்டு கொள்வது, கற்க அனுப்புவது, காத்திருந்து கூட்டி வருவது, பிள்ளைகளுடன் அலைவது என நீண்ட பட்டியல்.
பாடசாலைக் கல்விக்கு வெளியேயாக, தனியார் கல்வி நிலையங்களுடன் மாத்திரம் நின்று கொள்ளாது சில பெற்றோர்கள் ஆர்வ மேலீட்டில் வேறு பல ஆசிரியர்களிடம் அனுப்பி, கல்வி திணிக்கும் கைங்கர்யம் நடக்கும். சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த ஆசிரியரிடம் கல்வி கற்கிறார்கள் என்ற விடயத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. யாம் பெற்ற இன்பம் தங்களுடனேயே தொலையட்டும் என்ற தொலைநோக்கு அவர்களுக்கு வாய்த்திருக்கின்றது.
பாடசாலையால் ஐந்து மணிக்கு வரும் மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு படை எடுத்துவிட்டு வீடு திரும்ப இரவு எட்டுமணி ஆகிவிடும். பாடசாலையில் கொடுத்து விடும் வீட்டுவேலை சமாச்சாரங்களை முடித்துவிட்டு நிமிர்ந்தால் கற்றவற்றை திருப்பிப் பார்ப்பதற்கு போதுமான அவகாசம் இருப்பதில்லை. கற்றலும் கற்றலை மீட்டலும் அதிக பலன் தரும் என எனக்கு கற்பித்த ஆசிரியர் அடிக்கடி சொல்வது நினைவில் வந்தாடுகின்றது.
பரீட்சை, தேர்வு, சோதனை என்று எல்லாமாக அழைக்கப்படுகின்ற இத்தெரிவு முன்னெப்பொழுதோ உணவுக்காக திணித்து ஊட்டப்பட்ட வாத்துக்களை ஞாபகப்படுத்துகின்றன. ஐரோப்பாவில் மிகப்பிரபலமான உணவொன்றிற்காக திணித்து ஊட்டப்பட்டு வாத்துக்கள் வளர்க்கப்படுகின்றன. தொண்டைக்குழிக்குள் குழாய் திணிக்கப்பட்டு அதனூடாக உணவு வாத்துக்களுக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிராணி நலன்சார் அமைப்புகள் இதற்கெதிராக போர்க்கொடி உயர்த்தி இருந்தன. பிராணிகள் வதைத்தடுப்புச் சட்டத்தின் ஏதாவதொரு ஷரத்தின் கீழ் மாணவர்களையும் காப்பாற்றியாக வேண்டும்.கல்வி என்பது மாணவர்களின் விருப்பத்தின் பேரில் நடப்பதாயின் அறிவுவிருத்தி. பேற்றோர்களின் திணிப்பின் பேரில் நடப்பதாயின் அழிவுவிருத்தி.
KANTON SCHULE என்றழைக்கப்படுகின்ற இப்பாடசாலைகள் சூரிச் மாநிலத்தில் பரீட்சைக்கு தோற்றி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களால் நிறைக்கப்படுகின்றனர். ஏனைய மாணவர்கள் பிறபாடசாலைகளுக்கு சென்றாக வேண்டும். KANTON SCHULE இற்கு செல்லும் மாணவர்கள் ஆறு கல்வி ஆண்டுகளை பூரணப்படுத்த வேண்டும். ஆறாம் கல்வி ஆண்டில் நடைபெறும் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழக அனுமதி கோரமுடியும். இது நேர்வழி.
ஆறாம் வகுப்பில் அல்லாது எட்டாம், ஒன்பதாம் வகுப்புகளிலும் இப்பரீட்சைக்கு தோற்றமுடியும். ஆறாம் வகுப்பில் இரண்டு வினாத்தாள் கொண்ட இப்பரீட்சை எட்டாம் வகுப்பில் பிரெஞ்சையும் உள்ளடக்கி மூன்று வினாத்தாள்களை கொண்டதாக அமைகின்றது.
ஈழத்தமிழ் சமூகம் எப்பொழுதும் நேர்வழியிலான வழிமுறைகளை கைக்கொண்டதாக, இலங்கை கல்வி முறைகளுக்கு பழக்கப்படுத்திக்கொண்டதால் வேறு மாற்றீட்டு தேர்வு முறைகளை பரிசீலித்துப் பார்ப்பதில்லை. பிரிட்டிஷ் பழைய பாடத்திட்டத்தின் எச்ச சொச்ச நினைவுகளை தம் மக்கட்செல்வங்களிடம் திணித்து தங்கள் மேலான விருப்பங்களை அவர்களுக்கூடாக அடைதல் பெற்றோர்களின் வெற்றி மதிப்பீட்டின் தேர்வுகளாக அமைகின்றன. பெற்றோர்களின் தெரிவு மாணவர்களுக்கு சோதனைகளமாக அமைகின்றன. இப்பொழுதாவது தேர்வு, சோதனை என்ற ஒரு பொருள் கொண்ட சொல்லின் பல்வேறு பரிமாணங்களை உணர்ந்திருப்பீர்கள்.
ஒவ்வொரு கல்விநிலையங்களிலும் Gimi prüfung என்றழைக்கப்படும் இப்பரீட்சைக்கான பிரத்யேக வகுப்புக்கள் நடைபெற்றன. பாடசாலைகளிலும் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களினால் தெரிவான மாணவர்கள் ( ஒன்று இரண்டு மாணவர்கள்) பிரத்தியேகமாக கவனிக்கப்பட்டார்கள்.
Learn büro என்றழைக்கப்படும் கல்வி நிறுவனம் 10 பாடவகுப்பு கொண்ட பயிற்சிநெறிக்கு 750 Sfr அறவிட்டுக் கொள்கின்றது. இதுவரை நடைபெற்ற பரீட்சை வினாத்தாள்களுக்கு மாணவர்களை தயார்படுத்தி தோற்றவைத்து அதனடிப்படையில் புள்ளி வழங்குவார்கள். அந்நிறுவனத்தின் மதிப்பீடும், பின்னரான தேர்வின் மதிப்பீடும் ஒத்துப்போவது பெருமளவிற்கு நடந்தேறி வருகின்றது.
இப்பரீட்சைக்கு தோற்றமுடியாத மாணவர்கள் 8ம் வகுப்பிற்கு பின்னர் ஏதாவதொரு தொழிற்கல்வியை தெரிவு செய்து அதனடிப்படையில் மேற்கொண்டு கல்வியை தொடரவேண்டும். உதாரணம் கொள்வதாயின் வங்கிகளிலோ, அலுவலகங்களிலோ பணிபுரிய விரும்புபவர் வங்கிகளுக்கு அலுவலகங்களிற்கு விண்ணப்பங்களை அனுப்பி அவர்களால் தெரிவான பின்னர் அங்கே மூன்று நாட்கள் வேலை செய்துகொண்டு இரண்டு நாட்கள் பாடசாலைக்கு சென்றாக வேண்டும். மூன்று வருட முடிவில் அந்த வங்கியில் பணியிடம் காலியாக இருக்கும் பட்சத்தில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அங்கேயே வேலை கிடைக்காவிட்டால் வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலை பெற்றாக வேண்டும். மூன்று நாட்கள் தொழிற்கல்வி+ இரண்டு நாட்கள் பாடசாலைக் கல்வி எனத் தொடரும் கற்கைநெறி மூன்று ஆண்டுகள் கொண்ட DIPLOM பரீட்சையுடன் நிறைவு பெறுகின்றது. இதே வகையில் பிறபணிகளுக்கான கற்கைகளைத் தொடர முடியும்.
– இவை இப்பரீட்சை தொடர்பான விபரங்கள்.
என்னை உறுத்திய விடயம்:
பெறுபேறுகள் வெளியான நாளிற்கு அடுத்தநாள் பரீட்சை எழுதிய ஒரு மாணவனின் தாயார் அழுது வீங்கிய முகத்துடன் காணப்பட்டார். அவருடன் உரையாடமலேயே காரணம் விளங்கிவிட்டது. சாதாரண சிறு விடயங்களுக்கே கண்டித்து அடி பின்னி வாங்கிவிடும் அவர், பரீட்சையில் சித்தியடையாத தன்மகனை போட்டு மிதித்திருப்பார் என எண்ணினேன். ஒரு பாடத்திற்கே ஒன்றிற்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் மகனை அனுப்பி திணித்து ஊட்டப்பட்ட கல்வியை பரீட்சை நாளில் வாந்தி எடுக்கும்படி செய்ய விளைந்த அந்தத்தாய் மனரீதியாக அழுத்தப்பட்டிருக்கும் மகனக்கு ஆறுதல் சொல்லவல்லவா முயற்சித்திருக்க வேண்டும்?
மாணவர்களுக்கு தேவை அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு உணர்வு, அதை மிஞ்சிய கருணை. பரீட்சைப் பெறுபேறுகள் வாழ்வாதாரங்களை தேடிக் கொள்ள முனையும் மனிதர்களுக்கான கௌரவப் பட்டயங்கள். வாழ்வின் தெரிவிற்கான தேர்வு அல்ல.
சுவிட்சர்லாந்தில் ஒப்பீட்டளவில் மிகக்குறைவான எண்ணிக்கை கொண்ட தமிழ் சமூகத்திலிருந்து விகிதாசார அடிப்படையில் பல மாணவர்கள் சித்தியடைந்திருக்கிறார்கள்.
மகிழ்வு கொள்க!
எனது தளத்தை மேய்பவர்கள் கீழ்காணும் google+1 ஐ அழுத்தி email ID கொடுப்பதன் மூலம் புது இடுகைகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்வீர்கள்.
மனப்பாடக்கல்விமுறை ஒழிந்தால்தான் மாணவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் சிறப்பு வகுப்புகள் வைத்து பள்ளிகளும், டியூசன் அனுப்பி பெற்றோர்களும் மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள். இந்நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை. வெளிநாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது என்று அறியும் போது மாணவசமுதாயம் ரொம்ப பாவம்.
By: சித்திரவீதிக்காரன் on ஏப்ரல் 29, 2012
at 1:32 முப
வெளிநாட்டில் கல்விமுறை எல்லாம் சிறப்பாகத் தான் இருக்கின்றது. வெளிநாடு என்று அங்கிருந்து சொல்லப்படுகின்ற…. நாம் வசிக்கின்ற மேற்கத்தேய நாடுகளில் உள்ள நம்மவர்கள் தான் திக்குத்திசை தெரியாமல் திக்குமுக்காடுகின்றனர்.
எனது நண்பனொருவன் அடிக்கடி சொல்லும் ஒரு பகடி மனதை தொடுகின்றது….. அடேய் வெள்ளைக்காரன் எங்களுக்கும் படிப்பிச்சு தங்கட நிலைமைக்கு கொண்டு வரலாம் எண்டு றைபண்றான்…. இருந்துபார்… கடைசியில எங்கட ஆக்கள் அவங்களையும் எங்கள மாதிரி மாத்தாட்டி”
சிரிப்பாக இருந்தாலும்…… உண்மையும் இல்லாமல் இல்லை. ஆருத்ராவின் பதிவிற்கான எனது விரிவான பதிவான்றை நாளை தருகின்றேன்.
By: inayatamil on ஏப்ரல் 30, 2012
at 6:35 பிப