கவிதை என்பது மிகக்குறைந்த சொல்லாட்சியுடனான இலக்கிய வடிவமாகும். அதற்குள் சப்தங்கள் சந்தங்களுக்குள் அடங்கி நிற்பதும், வெளிப்படும் தன்மையில் வானுயர் நிலையில் வளர்ந்து நிற்பதும் அற்புதமாக நடந்தேறுகின்றன. அணுவின் அளவும் அடங்கிடாத சக்தி வடிவமுமாக கவிதைகள் வீரியமானவை.
ஓவ்வொரு கவிதைகளும் அதன் வாசிப்புத்தளத்தில் உறைந்து போன நினைவுகளை உருக வைத்துவிடுவதாக இருக்கின்றன. அந்த நினைவுகளை காலாகாலத்திற்கும் சுமந்துதிரிந்து வாசிப்புத்தளத்திற்கும், வாழ்க்கைத்தளத்திற்கும் விதைத்துவிட்டுப் போகின்ற ஒரு சராசரி கனவுடை மனிதனாக காலம் என்னை ஆக்கி வைத்திருக்கின்றது.
ஜெயபாஸ்கரனின் கவிதைகள் எனக்கு அறிமுகமானது எனது முதல் பெண்குழந்தைக்கு நான் அறிமுகமான ஒரு அந்திமாலை நேரம். ஆனந்தவிகடன் தனது எழுபத்தைந்தாவது வயதைக் கொண்டாடிய பவளவிழா மலரின் கவிதைத்தொகுப்பில் “நானும் நீயும்“ கண்டேன். வாழ்வென்பது காலத்திற்கும் கொண்டாடவேண்டிய நாட்களின் சாரம் என்பது போன்ற அன்றைய நாட்கள் வாசிப்பிலேயே கழிந்தது. ஜெயபாஸ்கரனின் ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடான அக்கவிதை ஒரு நீண்ட நெருடலாக என்னுள் உட்கார்ந்து கொண்டது.
வாழ்வு முறித்துப்போட்ட மானுடர்களும், காலச்சேற்றுக்குள் முக்குளித்து மூச்சுத்திணறும் மனுசிகளும் வகைதொகையன்றி வந்து போனார்கள். வாழ்வும் வளமும் எப்போதும் வசந்தகாலமாகவே இருப்பதில்லை. ஏதாவதொரு பின்னரவில் திடுக்கிட்டு முழித்துக் கொண்டு,அந்தகார இருளில் தொலைந்து போன மௌனங்களுக்காக அழுது வடிக்க வேண்டியிருக்கின்றது.
கரை அழுக்கேறி புகைபடிந்த புகைப்படங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தாத்தாவின் நாற்காலியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் பாட்டியின் உருவம், எதையோ சொல்லமுற்பட்டு முடியாததன் துயரமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பாட்டிகளின் கண்களும் துயரப் பெருங்கடலில் நீந்தும் மீன்களாக உலாவி வருகின்றன.
எங்களது சாவகச்சேரி வீட்டிற்கருகில் வாழ்ந்து வந்த அக்கா ஒருவர் நினைவில் வந்து போகின்றார். என் சிறு பராயத்தில் அவர் இளவயதை அண்மித்திருந்தார். சிட்டென பறக்கும் தருணத்தில் அழகாகத் தென்பட்டு,அலை கூந்தல் காற்றிலாட முகம் முழுவதும் அன்றலர்ந்த மலராக காட்சி தந்த அவளை காலம் தன்னோடு மகிழ்ச்சிக்கான அடையாளமாக வைத்துக்கொள்ளும் என எதிர்பார்த்திருந்தேன். அவளது அண்ணன்கள் இருவரும் சிறுதொழில் வணிகர்கள். உதவிகளும் ஒத்தாசைகளும் நட்புகளும் சூழ்ந்த தருணத்தில் அவளின் திருமண ஏற்பாடுகள் நடந்தேறிய பொழுதில் அவ் ஏற்பாடுகள் பற்றிய அறிதலில் ஆர்வமுடையவனாக இருந்தேன்.
யாழ் நகருக்கு அண்மித்த பகுதியில் இருந்து மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து பெண் பார்த்துப் போனார்கள். அடுத்த சில வாரங்களில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேறின. அண்ணன்களின் நண்பர்கள் அத்திருமணத்தில் தங்களுக்கான பணிகளை பகிர்ந்து கொண்டு செயலாற்றினார்கள். சிறுவர்களான எங்களுக்கு அந்நாட்கள் கோலாகலமானவை. திருவிழா காலங்களுக்கு ஒப்பானவை.
பக்கத்து வீட்டுக்காரர்கள் பலகாரம் சுடப்போதல், உதவி ஒத்தாசை பண்ணுதல்என அவர்கள் வீட்டில் ஒருவரென ஒன்றித்திருப்பார்கள். கேளிக்கை கூடாரமாக காட்சிதரும் அக்கால திருமண வீடுகள், உறவுகள் ஒன்றித்திருப்பதற்கும் கூடி மகிழ்வதற்கும் வழி அமைத்தன.
திருமண நாட்களின் முதல்நாளின் இரவுகள் பலரையும் இணைத்திருக்கும். வேலிகள் வெட்டப்பட்டு தென்னோலை மடித்து பலகைகளில் வைத்து அடித்து வளைவுகள் அமைத்து பொருத்துவது அழகான கைவினை. இருபக்கமும் தூங்கித் தொங்கும் குலைவாழைகள்,தென்னோலை மடித்த தோரணங்கள்,சமையலுக்கான ஆண்களின் பெருமெடுப்பிலான ஏற்பாடுகள் என திருமண வீடுகள் கலகல ரம்மியம்.
இரவு நேரங்களில் புகைப்படம் எடுப்பவரால் கழற்றிப்போடப்படும் FLASH லைற்றுகள் சிறுவர்களான எமது சேகரிப்பிற்குட்பட்டவை. அத்தருணத்தில் புகைப்படம் எடுப்பதற்கு என்னையும் நிற்பாட்டி வைத்தால் நாணிக்கோணி பெரும் வெட்கமுடைய மாந்தனாக காட்சி தருவேன். புகைப்படம் எடுத்தலும் பின்னாட்களில் அதனைப் பார்த்தலும் சந்தோச சாட்சியங்கள்.
அவ்வாறான பொழுதொன்றில்நிகழ்ந்த அளவின் திருமணத்திலன்று அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட பஸ் ஒன்றிலேறி மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் கால்மாற்று விசேடத்திற்கும் சென்று வந்திருந்தேன். கால நகர்வில் காட்சிகள் மாறின. அந்த அக்காள் யாழிற்கு குடிபெயர்ந்தாள். அதில் ஆறு மாதங்கள் தொலைந்து போயின. எனது பத்து சோலிகளுடன் இது பதினொன்றாம் சோலி என்பதால் அது என் கவனத்தைப் பெறவில்லை.
எஞ்சிய நாட்களில் அவளது அண்ணன்கள் யாழிற்கு சென்று தங்கையைப் பார்ப்பதும் அதன் செய்திகள் வேலிகளால் பரிமாறப்படுவதாகவும் இருந்தது. அவள் சீரும் சிறப்புமாக வாழ்வதாக ஒரு காட்சி என் மன அடுக்குகளில் வியாபித்திருந்தது.
எண்பத்தொன்றாம் வருடம் எனநினைவு. பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் அவர்கள் வீட்டில் பலமான கூச்சல்களும், நாறல் பேச்சுக்களும், நயமான தொடரின்றி வீதி எங்கணும் பரிமளித்தது. குடிபோதையில் திணறும் மாப்பிள்ளையின் அடி உதைகள் அக்காள் மேல் விழுந்தன. நாராசமான கெட்ட வார்த்தைகள் காற்றில் தவழ்ந்தன. குடிகாரன் ஒருவனுக்கு தங்கையை தாரை வார்த்துக்கொடுத்த அண்ணன்கள் பதுங்கிப் பலமிழந்து போனார்கள். விக்கிரமாதித்தன் கதையில் வருவது போன்று நாடாறு மாதம், காடாறு மாதம் என தாய்வீட்டிலும் நாய்வீட்டிலும் அவளது காலங்கள் கழிந்தன.
20 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் யாழ் சென்றபோது தேடிப்பிடித்து சென்று பார்த்தேன். காலம் சப்பித்தின்று விட்டு போட்ட எச்சங்களாக அவர்கள் தெரிந்தார்கள். தன்னைத் தேடி பார்க்க வந்ததற்காக கண்ணீர் உகுத்தார்கள்.மகனை அருகிலிருந்த கடைக்கு அனுப்பி குளிர்பானம் வாங்கி வரச்செய்து உபசரித்தார்கள். அந்த மகன் அவர்களது இரண்டாவது மகன். கடையொன்றில் வேலை பார்ப்பதாக கூறி வைத்தாள்.
ஒரு நிறைவற்ற கவிதையின் சந்தப்பிழைகளாகவும் காட்சிப்பிழைகளாகவும் அவள் காட்சி தந்தாள். இப்போது நினைத்துப்பார்த்தால் ஆணின் அடக்குமுறைக்குள்ளான அவல மனுசியாகி ஜெயபாஸ்கரனின் கவிதை நாயகியாக திகழ்கின்றாளோ என அவதியுற்றுப் போகின்றேன்.
முன்னெப்பொழுதிலும் இல்லாத அளவிற்கு தென்படாத அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன. நாகரீக சமூக அடையாளங்களில் வேறுவிதங்களில், வேறுவடிவங்களில். வேலைசெய்வதான சுதந்திர உலகில் அவர்களைப் பிரவேசிக்கவிட்டு அலுத்துக்களைத்திருக்கும் அவர்களின் மீது உரிமையுடன் கணவனால் பாலியல் பலாத்காரம் பண்ணப்படுகின்ற வகையில் வடிவங்கள் மாறியிருக்கின்றன.
நானும் நீயும்
நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ
உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாய் இருப்பாய் நீ
நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ
எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.
ஜெயபாஸ்கரன்.
சமூக அக்கறை கொண்ட வெகுஜன கவிஞர். நூற்பாலை ஒன்றில் எளிய தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கி தேவி வார இதழில் சிலகாலம் பணி புரிந்துவிட்டு மக்கள் தொலைக்காட்சி ஆலோசகராக பணி செய்து வருகின்றார்.காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேருர் அருகே காட்டுப்பாக்கம் சொந்த ஊர். புதுக்கவிதையின் தேர்ந்த சொல்லாடல், சொற்சிக்கனம், எளிமை, சிறிதானகேலி இவரின் கவிதை அடையாளம்.
இவரது கவிதைகள் ஜெயபாஸ்கரன் கவிதைகள் என்று முழுத்தொகுப்பாகவும், கட்டுரைகள் ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் என்ற தலைப்பில் முழுத்தொகுப்பாகவும் வெளிவந்துள்ளன. இவரது அண்மைய கட்டுரை கடைசிப் புகையின் கல்லறை.
வாசகர்கள் கவனத்திற்கு!
பத்திரிகைத்தாள்களின் விலையேற்றம் காரணமாகவும், அச்சு மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாகவும்”ஆருத்ரா தரிசனம்” அடுத்த பதிவில் இருந்து ஒரு ரூபாய் ஐம்பது காசுகளால் விலை உயர்த்தப்படுகின்றது.வாசகர்கள் தொடர்ந்த ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
– நிர்வாகம்.
ஜெயபாஸ்கரனின் இந்தக் கவிதையை நானும் விகடனில் வாசித்திருக்கிறேன். ஆனால், இப்போதுதான் அதன் பாதிப்பை உணர்கிறேன். ஜெயபாஸ்கரன் குறித்த அறிமுகத்திற்கு நன்றி.
By: சித்திரவீதிக்காரன் on மே 7, 2012
at 1:41 முப
ஜெயபாஸ்கரனின்(?) எழுத்து நடை எல்லாருக்கும் புரிகின்ற வகையில வித்யாசமா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு. வாழ்த்துகள்.
By: jana vijay on ஜூன் 13, 2012
at 2:50 முப