ஆருத்ரா எழுதியவை | ஜூன் 5, 2012

மயிர் Vs மசிரு

நீங்கள் முடிவெட்டப்போகும் போது முடிதிருத்தகங்களை கவனித்திருக்கின்றீர்களா? முடிதிருத்தகங்கள் யாவும் சிலபல உபகரணங்களோடு நீளப்பாங்கான வாங்குகளையும் கொண்டிருக்கும். வாங்குகளில் பழைய புதிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், சுவர்களில் ஏகத்துக்கும் கவர்ச்சிகரமான பெண்ணின் படங்கள் என”ஏ” கிளாஸ் அமைப்புடன் காட்சியளிக்கும். முடிதிருத்தகங்கள் எதிலும் பெண்கள் வந்து முடிவெட்டிக்கொள்வதில்லை. அவர்களுக்கென்றே தனியாக வெட்டிவீழ்த்தவென நவீன சலூன்கள் இப்போது பரவலாக முளைத்துள்ளன. எனினும் ஆண்களுக்கான முடிதிருத்தகங்கள் பண்டைய கால பக்குவங்களோடு, அரைகுறை ஆடை சுவர்ப்படங்களோடு “காத்திருத்தலும் சுகமானது” என ஏங்க வைக்கும் அமைப்போடு காட்சி அளிக்கின்றன. “பெண்கள் யாரும் இதற்குள் உள்நுழைவதில்லை” என்ற சத்தியத்தோடு ஊர்க்கதை பேசும் திடல்களாக முடிதிருத்தகம், சலூன் என்றழைக்கப்பட்டு அவைகள் அழகியலின் சந்நிதிகளாக அமைப்புப்பெற்றுள்ளன. கோவில் கட்டுவதற்கென்றே ஆகமவிதிகளை பின்பற்றும் சமூகம் அதற்கென்றே பிரத்தியேக ஆகமஅமைப்புடன் கூடிய சலூன்களை கொண்டிருப்பது நவீன சமூக அமைப்பின் அடையாளம்.

ஒவ்வொரு முடிதிருத்தகமும் உரிமையாளருடன்,சில முடிதிருத்தும் பணியாளர்களை கொண்டிருந்தாலும் வாடிக்கையாளர்கள் தமக்குப் பிடித்தமான பணியாளரிடமே முடிவெட்டிக்கொள்ள பிரியப்படுவது அவர்களது தனித்திறமையை, முடிவெட்டும் போதான அவர்களின் கவனிப்பை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கும். அழகாய் வாரப்பட்டிருக்கும் முடிகொண்ட இளைஞர்கள் யாரும், அங்கே பணியாற்றும் முதிய பணியாளரிடம் முடிவெட்டிக்கொள்ளப் பிரியப்படுவதில்லை. அது அந்தப் பணியாளர்கள் மீதான புறக்கணிப்பாக திறமையின் மீதான அவமதிப்பாக அமைந்து அவர்களுக்குப் பெரும் மனஉளைச்சலாக அமைந்து விடுகின்றது. பாவப்பட்ட ஜென்மங்களாக, அவர்களின் காத்திருத்தல் தொடர்கின்றது. மனிதத்தின் ஏகபோக மன உன்னதங்களை வெளிக்காட்டும் முடிதிருத்தகங்கள், மயிரைப்போன்றே மகத்துவம் இழந்து உன்னதங்களை தரைமேல் வீசிச் சென்றிருக்கிறது. இது துயரங்களின் மீதான படிமமாக வாழ்வின் புறக்கணிப்பாக அமைந்து இதயங்களை சீண்டி துவம்சம் செய்கின்றது.

கட்டணங்கள் கொடுத்து செய்யும் காரியங்களுக்கு கஸ்டமர்கள் சமரசம் செய்துகொள்வதில்லை என மனம் சமாதானப்பட்டுக் கொள்கின்றது.

எங்கள் சிறுபராயத்தில் முடிதிருத்தகங்கள், எங்களை கொல்லும் களங்களாக பயமுறுத்தி இருக்கின்றது. பெருங்குளம் சந்தியில் அமைந்திருந்த சின்னத்துரையின் சலூன் பெருவேம்பின் நிழலில் வயற்காற்றை வாரி வழங்கி இயற்கையாக ஏ.சி குளிர்காற்றை ஏகத்துக்கும் இறைக்கும். பத்திரிகைகள் படபடக்கும். காத்திருத்தல்கள் எதுவும் இங்கு காலாவதியாவதில்லை, என்பதை பறைசாற்றவே பத்திரிகைகள் படபடக்கின்றன. கதவு நிலையில் பொருத்தப்பட்ட கத்தரி சாணை பிடிக்கும் பட்டி, எப்போதோ வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட கிரீம் வகையறாக்கள், படிகாரம் என பக்கா சலூன் மகாத்மியங்கள் அரங்கேறுகின்றன. ஒன்றரை மாதத்திற்கொரு தடவை பலவித நிர்ப்பந்தங்களோடு எங்களது வெறுப்பு சுமந்து முடிதிருத்தகத்திற்கு ஏகும் எங்களை பயமுறுத்துவது கத்திரியால் முடிவெட்டியபின் போடும் முள்ளு மெஷினாகும். சிறுசிறு ரத்தப்பூக்களையும் எங்கள் பிடரியில் பூக்க வைக்கும் முள்ளுமெஷின் இப்போது எந்த சலூனிலும் காணக்கிடைக்காத பண்டைய சமாச்சாரம்.

முதல் நாளோ, அதற்கு முதல்நாளோ சின்னத்துரையை சந்திக்கும் எனது தகப்பனார் “ஒட்ட வெட்டிவிடவேண்டும்” என்று முனைப்போடு கூறிவைக்கும் கோரிக்கைகள் எங்களுக்கு உடன்பாடானது அல்ல. அந்த ஒட்ட வெட்டவேண்டும் என்பதன் சாரம் “பொலீஸ்குரோப்” என்ற தமிழல்லாத வார்த்தையோடு மிகப் பின்னிப்பிணைந்தது. எனது தந்தையாரின் கோரிக்கையை சிரமேற்கொண்டு பணியாற்றும் சின்னத்துரை சடசடவென்று கத்திரியை வீசும் பாங்கில் தரையில் வீழ்ந்து தொலைக்கும் முடித்துகள்களால், தன்னை பெரும் சாதனை நாயகனாக எண்ணிக்கொள்வதும், நாங்கள் பலிக்கடாக்கள் போல் ஆக்கப்பட்டிருப்பதும் சமகாலத்தில் நடந்தேறும். எப்படா வெட்டுதல் முடியும் என்று காத்திருந்து வீடு திரும்பும் எங்களை தகப்பனார் தலையில் தடவி கண்காணிப்பதும், சந்தோசப்பட்டுக் கொள்வதும் “விடுங்கடா எங்களை” என்று விசனமேற்படுத்தும். இவ்விடத்தில் “முடி”வாய் என்ன சொல்கின்றீர்கள்? என்று யாரும் கேட்பீர்களாயின் நான் “முடி”வாய் சொல்வது சிறுபராயத்து முடிவெட்டுதல்கள் யாவும் எங்கள் கையில் இல்லை என்பதே.

“சத்யமேவ ஜெயதே” அல்ல “சின்னத்துரை மேவ ஜெயதே”

வரலாறு ஒரே பாதையில் பயணிப்பதில்லை. அதற்கும் சில ஆசுவாசங்களும், அக்கறைகளும் தேவைப்படுகின்றன. எங்களது ஆறாம் வகுப்பிற்கு பிறகு நாங்கள் யாரும் அந்தபக்கமே தலை வைத்துப்படுப்பதில்லை. எங்களெங்கள் சொந்தத்தலைகளை பாதுகாக்கும் ஏகபோகப் பாதுகாவலர்களாக எங்களை நினைத்து சின்னத்துரை முடிதிருத்தகத்தை புறக்கணித்ததோடு, சாவகச்சேரியின் நீதிமன்ற வளாகத்தின் முன்னாலிருந்த ஓடியன் சலூனிலேயே பின்னான காலங்களை கஷ்டமர் என்ற தகுதிச் சொல்லோடு அர்ப்பணித்துக் கொண்டோம்.

சின்னத்துரை சலூனில் எங்கும் எதிலும் கவர்ச்சிப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதில்லை என்பதோடு, அந்த சைவம் நமக்கு ஆகாதே என்ற உண்மையுடன், ஓடியன் சலூனின் ஆடைஅவிழ்ந்து விழும் நங்கைகள் எம்மை வரவேற்று எம்மையும் தங்கள் கஷ்டமர்கள் ஆக்கிக்கொண்டார்கள் என்ற பேருண்மையையும் நான் சொல்லாமலேயே நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள் . அந்த சலூன் வளாகத்தில் எனது தந்தையாரின் கோரிக்கைகள் யாவும் செல்லுபடியற்றவை என்பதையும் பதிவில் இணைத்துக் கொள்ள விரும்புகின்றேன்.

“பொலிஸ்குரோப்” என்ற ஆங்கிலப் பதப்பிரயோகம் தூக்கி எறியப்பட்டு “சக்கிகட்” என்ற காதைமூடி முடி வளர்க்கும் சமாச்சாரத்தில் இறங்கிவிட்ட எங்களுக்கு, ஓடியன் சலூன் மிகப்பெரும் வரப்பிரசாதம். அங்கே இருக்கும் பணியாளர்கள் யாவரும் இளைஞர்கள் என்பதோடு, நாம் யாரையும் பாகுபடுத்தி இவரிடம் தான் வெட்டவேண்டும் என்ற முனைப்பு காட்டாமல் அழகியலின் திருத்தத்தை, அமைதியாக காத்திருந்து சுகித்துக் கொண்டோம். இனிவரும் பதிவில் இடம்பெற இருக்கும் “திரீஇடியட்ஸ்” மூவரும் அங்கேதான் முடிவெட்டிக் கொள்வோம்.

இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது “தேனும்பாலும்”, “ஒருபடப்பாட்டு”. எஸ்பி. பாலசுப்பிரமணியம் கனிந்து பாடும் “இளையநிலா” சூப்பர்சவுண்ட் சிஸ்ரத்துடன் அங்கு ஒலிப்பதால், காத்திருத்தலின் நேரவிரயத்தை கணக்கிலெடுக்காத நாங்கள் சவுண்ட் சிஸ்ரமே இல்லாத சின்னத்துரை சலூனை கணக்கிலெடுத்து கவலை கொள்வோம்.முடிவெட்டி வரும் என்னை நன்கு உற்றுக் கவனிக்கும் தந்தையார்,என்னிடம் பேசுவதை தவிர்த்து எனது தாயாரிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார் “இன்னும் கொஞ்சம் ஒட்ட வெட்டி இருக்கலாமே”.

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்கள் என்பதெல்லாம் கூடுதலாக மானம் குறித்த பார்வைகளை பதிவு செய்கின்றன. எங்கள் மானம்” மயிரோடு போச்சு”என்பதாக நினைவு வைத்துக்கொண்டாலும் கூட நாங்கள் இழந்த மயிர்களுக்காக பல லட்சம் தடவைகள் உயிர்துறந்திருக்க வேண்டும். அப்படி ஏதும் நடந்ததாக நினைவிலில்லை.

இந்த முடிதிருத்தகங்கள் கூட யாழ்ப்பாண சமுதாய அமைப்பில், சாதீயம் உச்சத்தில் இருந்த காலத்தில் அமைக்க அனுமதிக்கப்படவில்லை. சலூன்கள் எனப்படும் முடிதிருத்தகம் சனப்புழக்கம் அதிகமான சந்திகளில் அமைப்பதற்கு கூட ஒரு காலத்தில் போராட வேண்டி இருந்திருக்கின்றது. யாழ்ப்பாண வெள்ளாள சாதிமான்களால் நாகரீகத்திற்குட்பட்டு அனுமதிக்கப்பட்ட விடயங்களில் முடிதிருத்தகமும் ஒன்று.

நாவிதர்கள் என்ற பெயரோடு அழைக்கப்பட்ட முடிதிருத்தும் கலைஞர்கள், வீடுகளுக்கே சென்று முடிவெட்டி பணமாகவோ பொருட்களாகவோ பெற்றுக்கொள்வது, பழமைவாத யாழ்ப்பாண அடையாளம். கிணற்றுக்கு பக்கத்தில் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து முடிவெட்டி, முழுக்கதைபேசி சொற்ப பணத்தை பெற்றுக்கொள்ளும் நாவிதர்கள் கழுத்துக்கு அருகே கத்தியை வைத்துக்கொண்டு “போகேக்கை கொஞ்சம் குழை அறுத்துக்கொண்டு போகவோ” என்று கேட்பதாக யாழ்ப்பாண வெள்ளாள சமூகம் சில நகைச்சுவைப் புனைவுகளை ஆக்கி வைத்திருக்கின்றது. எல்லாம் வயிற்றுக்கும், வாய்க்கும் பற்றாத பற்றாக்குறையில் செய்யும் ஆவல்கள் என்பதை காணத்தலைப்படுவதில்லை. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட வேண்டாம்,என நீங்கள் கேட்பதாக எடுத்துக்கொண்டால் யாழ்ப்பாண சாதிய சம்பிரதாயங்களை பதிவிலிருந்து நீக்கி விடுகின்றேன்.

மயிர் என்பது பெறுமதியற்றது, அதற்கெல்லாம் அதிகம் மதிப்புக்கொடுக்க வேண்டியதில்லை என்பதான மனிதக்கோட்பாடுகள் அதிகம் வலுப்பெற்றுள்ளதால் தான் மயிரிற்கு அகராதியில் இரண்டு அர்த்த பரிமாணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மயிர் என்பது ஒரு வசைச்சொல்லாக அகராதியில் குறிக்கப்பட்டுள்ளது.

சாதாரண யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பாவிக்கும் மயிரை, தமிழ்நாட்டில் பாவித்தால் தர்மஅடி வாங்க நேரிடலாம். மயிரை விட “மசிர்” என்பது ஆகக்கூடிய கெட்ட சொல். அது தலையில், உடலின் மற்ற பாகங்களில் உள்ள முடிகளைக் காட்டிலும் பிரத்தியேகமாக குறிப்பது வேறொன்றை. கெட்டசொல்லாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள மயிரைக் காட்டிலும் அதன் வினை வடிவமான “சிரைத்தல்” என்பதும் தமிழில் மிக ஆகாத கெட்ட சொல்.

“நீர் என்னத்தை சிரைச்சிட்டீர்?” என்பதும் “நீர் என்னத்தை புடுங்கிட்டீர்?” என்பதும் பெறுமதியற்ற மயிரின் மீதான ஏச்சு வழக்கு வார்த்தைகளாக தமிழை அலங்கரிக்கின்றன. நிஜ வாழ்வியலுக்கு பேச்சுவழக்கும், ஏச்சுவழக்கும் அதிகமான சொற்களை வழங்கி கோபமும் கூட உடல்மொழியாக பதியப்படுகின்றது. கோபத்தை பதிவாக்குவதற்கு மயிர்,சிரைக்கிறது,மயிராண்டி என்பவை சொல்லும் சொல்லை கண வெப்பத்துடன் களமிறக்குபவை.

இயல்புநிலையில் மகிழ்வும் ,கோபமும் சரிசம விகிதத்தில் கலந்து உறவாடுகின்றன. கோபம் வெளியே உலவாத மிருகமாக மனிதனுக்குள் அடங்கி நிற்கிறது. வெளிப்படும் தருணங்களில் கடித்துக்குதறி விடுகின்றது. அந்த வெளிப்படும் தருணம் இயல்புநிலையை மீறி நடக்கின்றது. சுயமதிப்பிடலில் சுயகௌரவம் அசைத்துப்பார்க்கப்படும் தருணங்களில் கோபம் வெளியே வந்து, தன்னாலான சாகசங்களை வெளிப்பரப்பில் வார்த்தைகளாக வெடித்துக் கிளப்புகிறது.

எஸ்.ராமகிருஸ்ணனின் “இயல்பு” குறுங்கதையில் ஒரு குரங்கு விற்பனைப் பிரதிநிதியாக செல்போன் விற்க முனைகின்றது. மனிதரிலும் விட தான் எவ்வளவு மேலானவன் என்பதைக் குரங்கு சிலபல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டுகின்றது. மனிதரிலும் பார்க்க முற்றிலும் சிறந்த அறிவுஜீவியாக தன்னை வெளிக்காட்டும் குரங்கு பழகும் தன்மையில், பேசும் விதத்தில் தன்னை மிகப்பண்பாளனாகவும் பெறுமதி மிக்கவனாகவும் எஸ்.ராமகிருஸ்ணனின் கதை சொல்லும் உத்தியில் வெளிப்படுத்துகின்றது.

நடைமுறையில் குரங்கு பேசுமா? என்று கேட்டால் அவ்வாறான கதைகள் உருவாக சாத்தியமில்லாமல் போகக்கூடும். MAGICAL REALISM எனப்படும் நடைமுறைச்சாத்தியமற்றதை கருப்பொருளாக கொண்டு, கதைபுனையும் தன்மையின் பெருக்கத்தால் விளைந்த “இயல்பு” குறுங்கதை மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை உங்களுக்குத் தரும்.

“மசிரானுங்க” என்று இயல்பு பிறழ்ந்த தருணத்தில் ஏசும் குரங்கு “உருவி உருவி” என்ற கெட்டசொல்லையும் பதிவு பண்ணுகின்றது. “மசிரானுங்க” என்பதை யாழ்ப்பாண வட்டார வழக்கில் “மயிராண்டி” என்று பொருள் கொள்க.

மயிர்கள்(முடிகள்) அத்தனை பெறுமதியற்றவையா? அவைகளால் பெரும் பயனேதும் இல்லையா? அதனால்தான் கீழ்நிலை மனிதனை சகமனிதன் “மசிர்” என்கின்றானா?

திருப்பதி தேவஸ்தானத்தில் வெட்டி வீழ்த்தப்படும் முடிகள், வருடந்தோறும் பொது ஏலத்தில் ரூபா 133 கோடிக்கு விற்பனையாகின்றது. ஐரோப்பிய வணிகசந்தையில் தரம் பிரிக்கப்பட்ட முடி ஒரு கிலோ ரூபா 12000 திற்கு விற்பனையாகின்றது என்ற உபரிதகவலோடு, இனிமேலும்   மனிதனை மனிதன் மசிரானுங்க  என்று திட்டாதீங்கப்பா.

“இயல்பு”  குறுங்கதையை  வாசிக்க இங்கே  அழுத்துக.

எஸ். ராமகிருஸ்ணன்.

தாகூர் இலக்கிய விருது    பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்  என்ற  பெருமைக்கும் சிறப்புக்கும் உரியவரான எஸ். ராமகிருஸ்ணன் அவர்கள் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர்.  நாவல், சிறுகதை, விமர்சனக் கட்டுரைகள், திரைப்பட உரையாடல்கள் எழுதுபவர் என தொடர்ச்சியாக தமிழில் இயங்கிக் கொண்டிருப்பவர்.இவர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

 ஆங்கில இலக்கியம் கற்று அதில் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்.  இவரது இலக்கிய ஆர்வம் பதினெட்டு வயதில் துவங்கியது. இந்தியாவின் அத்தனை முக்கிய நுலகங்களுக்கும் சென்று வந்தவர். இலக்கியத்தின் மீதான ஈடுபாட்டினால் நெருக்கிய நண்பரான கோணங்கியோடு சேர்ந்து பல இலக்கியவாதிகளை தேடித்தேடி சந்தித்திருக்கிறார், சென்னையில் அறையில்லாமலும் கையில் பணமில்லாமலும் பத்தாண்டுகளுக்கு மேலாகத் திரிந்த அவமானங்களும் வலியும் இன்று அவருடைய எழுத்தின் அடிநாதமாக ஒடிக் கொண்டிருக்கிறது. ஆனந்த விகடனில் இவர் எழுதிய துணையெழுத்து என்ற தொடர் பரவலான வாசகர் கவனத்திற்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி என்று வெளியான கட்டுரைகள் இவருக்கு தமிழில் பரந்த வாசகர் தளத்தினை உருவாக்கியது.

பின்குறிப்பு: ஆக்கத்தில் இடம் பிடித்துள்ள “கவர்ச்சி காலண்டர்” படத்திற்கு நான் பொறுப்பேற்க இயலாது. ஆக்கத்தின் தேவை கருதியே அப்படத்தினை இணைத்ததாக லே-அவுட் நண்பரின் விளக்கத்தை ஆனந்தவிகடன்- மதனின் இயலாமையோடு சொல்லிக்கொள்கின்றேன்.  -ஆருத்ரா


மறுவினைகள்

  1. சிறுவயதில் ஒட்ட முடிவெட்டிவிடுவதால் அன்றெல்லாம் எதையோ இழந்ததுபோல அழுதிருக்கிறேன். இப்போது முடிவெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் அப்படியேதானிருக்கு எங்க முடிவெட்டியிருக்க என கேட்கிறார்கள்.
    மயிறு, புடுங்கி என மதுரைப்பக்கம் திட்டும் போதே அழுத்தம் திருத்தமாக திட்டுவார்கள்.
    எஸ்.ராமகிருஷ்ணன் கதையும் அருமை. இறுதி வரிகளின் அங்கதம் அருமை. பகிர்விற்கு நன்றி.

  2. எனது இளம் பிராயத்தில் முடி திருத்தம் செய்த அண்ணாமலையை நினைவுக்கு கொண்டு வந்தது இந்த பதிவு. அவர் இப்போது இல்லை. அவருக்கு நான் வைத்த (அறிந்தும் அறியாமலும்) வைத்த 0.25 பைசா கடன் (அப்போது அவ்வளவு தான் கட்டணம்) இன்னமும் நிலுவையில் உள்ளது.

    வேலைகெல்லாம் போய் சம்பாதித்து, சுஜாதா எழுதிய எதோ ஒன்றை வாசித்த பின், கணக்கெல்லம் போட்டு பார்த்துவிட்டு, கடனை அடைத்து விடலாம் என்று அரியாங்குப்பம் போன போது, அண்ணாமலை இறந்து போயிருந்தார்.

    பின்னர் செல்வம், ரவி கோபால் (இருவரும் கோவையில்)
    என்று மாறி, இப்போது சென்னையில் முத்து என் சிகையைத் திருத்துகிறார்.

    கோவையில், சலூன், முடிதிருத்தகமெல்லாம் இல்லை.
    ஹேர்லைன்ஸ் தான்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: