ஊரின் நினைவுகளும், பழைய ஞாபகங்களும் எல்லோருக்கும் எப்போதும் ஒரே மாதிரியானவை தாம். வேண்டுமானால் வாழ்ந்த காலங்களும்,ஊரின் பெயர்களும் அவரவருக்கு மாறுபடலாம். அவை ஏற்படுத்தி தருகின்ற வலிகளும், மனதை கிளர்த்தி ஏற்படுத்துகின்ற நெருடல்களும் அலாதியானவை. அதனை எழுத்தில் வடித்துவிடும் வல்லமை பெற்றவர்கள், அதனை பதிவாகவோ கதையாகவோ எழுதி தத்தமது மனப்புழுக்கங்களுக்கு வடிகால் அமைத்துவிடுகிறார்கள். மற்றவர்கள் மனதுக்குள் பதியம் போட்டுவிட்டு புழுங்கித்திரிவார்கள். அப்படித்திரிபர்கள் கண்களில் தென்படும் ஊரின் நினைவுகள் நிறைந்த படைப்புகள் பிறந்த பயனை நொடியில் எய்தும். குறித்த படைப்புகளில் பதிவுகளில் வரும் குளங்களில், கோயில்களில் ,கதாபாத்திரங்களில், பழையகாதல்களில் எல்லாம் தங்களுடையதை தரிசித்து அரைக்கிறுக்காக சிலநாள் சுற்றுவார்கள்.
ஆருத்ராவின் பதிவுகளை படித்துவிட்டு இப்படி அரைக்கிறுக்கில் திரிந்த என்மீது தான் ஆருத்ராவின் “கொலைவெறி”ப் பார்வைபட்டது. அடுத்த TARGET கந்தர்மடம் தான். நீர் தான் எழுதுகிறீர். வரும் 19ம் திகதி DEADLINE என கால எல்லை வகுத்துவிட்டு பிரம்புடன் அலையும் வாத்தியார் தோரணையில் மிரட்டுகிறார். எனக்குத் தெரிந்து ஒரு மாதஇதழ் நடத்தும் அளவுக்கான நேர்த்தியுடன் பதிவு எழுதும் நபர் இவராகத்தானிருப்பார்.
பொதுவாக மனிதர்களை அவர்களின் குணஇயல்புகளை வைத்து மதிப்பீடு செய்வர். சிலவேளைகளில் மனிதர்களின் குணஇயல்புகளை அவர்களின் ஊருடன் தொடர்புபடுத்துவதும் உண்டு. மனிதர்கள் பற்றிய இவ்வாறான மதிப்பீடுகளுக்கு நான் எதிரானவன் என்ற போதும் இவ்வாறான சிந்தனைகளின் தொடர்ச்சி பற்றி யோசிப்பதுண்டு. இப்படிப்பார்த்தால் எனது ஊருக்கும், ஊரின் மாந்தர்களின் குணநடைகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பது போலவும் தோன்றுகின்றது. இது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் அலுவலாகவும் இருக்கலாம்.
ஆருத்ராவிடம் இருந்து தப்பிக்க நானும் எதையாவது எழுதியாக வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க. மற்றையது நான் சொல்லவருவது இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய எனது குழந்தை நினைவுகளை. கந்தர்மடத்தின் இன்றைய முகம் இப்போது மாறிப்போயிருக்கலாம்.
கந்தர்மடம் என்பது சிற்றூர் என்றோ,கிராமம் என்றோ, நகரம், பெருநகரம் என்றோ வகைப்படுத்த முடியாத ஒரு வகையறா. அதிலும் எனது வீடு அமைந்திருக்கும் பகுதி பலாலி-வீதி பழம்-வீதி அரசடி-வீதி என்ற மூன்று நதிகளின் சந்திப்பாக, ஒரு ஏழாற்றுப்பிரிவின் சுழிபோல இருக்கும்.
இங்கு வாழும் மாந்தர்களை உற்றுப்பார்த்தால் அவர்களுக்குள்ளும் இது அப்பிப்போயிருப்பது போலத் தோன்றும். ஒரு வீதியில் வாழும் மாந்தர்கள் தங்களை பெருங்குடி மக்களாய் சொல்லிக் கொள்வர். வீடுகளும் பழையகால நாற்சார் வீடுகளாய், வாழ்ந்து கெட்ட அரண்மனைகளாய் காட்சி தரும். பழம்பெருமை ஒன்றைத் தவிர அவர்களுக்கான வாழ்வாதாரமாய் ஏதுமிருக்காது. வீடுகளை பெருக்கி சுத்தம்செய்வதென்றால் கூட குறைந்தது முப்பது மனித மணித்தியாலங்கள் மொத்தமாய் தேவைப்படும். ஆனால் பழுத்து விழும் பலாக்குழைகளை யாரும் வந்து பொறுக்கிச்சென்று மாடுகளுக்கு தீவனமாய் போடுவதற்கு கூட அந்த அரண்மனைகளின் நீதிபரிபாலனம் இடமளிக்காது. பலாமரங்களில் இருந்து பழுத்து விழுந்த பழங்கள் நிலங்களில் கிடந்து அழுகி புழுத்து உக்கி மண்ணோடு மண்ணாகும். வயிறு வளர்த்த பெருமான்கள் மூன்றுநேர நித்திரை ,ஆறுநேர உணவு என தம்பாட்டில் தங்கள், தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து தொலைப்பர். அவரவர்களின் பெயர்களுக்கு முன்னால் LAWYER,DOCTOR என தொடங்கி மக்கள் அவர்களில் வைத்திருக்கும் மதிப்பிற்கேற்ப புறக்கிறாசி, பரியாரி என்பதாக அடைமொழிகள் நீளும்.
இன்னொரு வீதியின் மாந்தர்களை கவனித்தால் அவர்களின் அகராதியில் நாளை என்பது இருக்காது. நாளை என்பது இருக்காது என்பதால் அவர்கள் இன்றையை இன்பமாய் வாழ்ந்து தொலைக்கிறார்கள் என எண்ண வேண்டாம். இன்றையை வாழ்வதற்கும் அவர்களிடம் ஏதும் இருக்காது. காலை எழுந்தவுடன் படிப்பு, பின் கனிவுகொடுக்கும் நல்ல பாட்டு என்பதெல்லாம் தங்களை மிடில்கிளாஸ் என்று கூறிக்கொண்டே மேட்டுக்குடிகளாய் வாழ்பவர்களுக்கு மட்டும் தானோ? என்றுகூட சிலவேளைகளில் எண்ணத்தோன்றும். அவர்களின் காலைகள் எப்போதும் சூரியனுடனும், பிரச்சனைகளுடனும் சேர்ந்தே உதயமாகும். காலைக்கடன் கழிப்பதில் தொடங்கும் பிரச்சனைகள் பெரும்பாலும் இரவின் சோமபான சபாக்களின் விரசமான வார்த்தைகள், கத்தல்கள், அலறல்களுடன் கூடிய கலகங்களில் முடிவுக்கு வரும். கலகங்கள் இல்லாத நாட்களில் வாடகைக்குப் பெற்ற தொலைக்காட்சிப்பெட்டியின் சத்தம் இட்டுநிரப்பும். அந்த தொலைக்காட்சிப் பெட்டியை இயக்குவதற்கான மின்சாரம் “கள்ளகறன்ற்” என்று சொல்லப்படுகின்ற அனுமதி பெறப்படாத முறையில் பெறப்படும். அது பலவேளைகளில் எமது வீட்டிலிருந்து தான் செல்லும். இதற்காக அவர்களுக்கு மின்சார இணைப்பு வழங்க மறுத்து ,அதனால் வரும் பின்பகைகளை சந்திக்க எனது தந்தை விரும்பவில்லை என்பதுதான் ஒற்றைக்காரணமாய் இருக்கமுடியும். அப்படி செல்கின்ற மின்சாரத்திற்கான பில் எமக்கு வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள அவர்களுக்கும் அதீத ‘தொழில்நுட்பம்’தெரிந்திருந்தது. அது ஊரேகூடி ஒற்றைத் தொலைக்காட்சி பார்க்கும் திருவிழா அவர்களுக்கு.
உண்மையில் அவர்கள் தங்கள் வீடு, தங்கள் காணி என்று சொல்லிக்கொள்பவை அவர்களுடையவை அல்ல. (அதை அவர்களிடமே கொடுத்து விடலாம். அது வேறுகதை) கோயில்காணிகள் என்று சொல்லப்படுகின்ற மாநகராட்சியின் ஆளுகைக்குட்பட்ட பல்வேறு கோயில்களுக்கும் தானமாக வழங்கப்பட்ட காணிகள். கந்தர்மடத்தின் குறிப்பிடத்தக்க பெரும்பகுதி எனது அம்மம்மாவின் தகப்பனாருக்கு முதுசமாக இருந்ததாம். அவர் குறிப்பிட்ட பகுதிகளை விற்றும் மற்றையவற்றை தன் பிள்ளைகளுக்கு சீதனமாகவும் கொடுத்தாராம். ஒரு ஒழுங்கைக்குள் (முட்டுசந்து) பக்கம், பக்கமாக இருந்த இந்தக்காணிகளையும் அம்மம்மாவின் சகோதரங்கள் விற்றுவிட்டு செல்ல, இப்போது எங்கள் காணிமட்டும் தனியாக பழம்பெருமை பேசியபடி GOOGLE தேடுபொறியில் தேடியபோது பரமேஸ்வரிகாணி என குறித்த காணிகள் எனது அம்மம்மாவின் பெயரால் குறிக்கப்பட்டிருந்தது எனக்கு ஆச்சரியமூட்டிய விடயம். மேலும் அக்காகடை, தமயந்தியக்காவீடு , வீரசிங்கம் விறகுகாலை என பேச்சுவழக்குப் பெயர்களெல்லாம் GOOGLE வரை வந்திருப்பது புரியமுடியாப் பெரும் ஆச்சரியம். சரிவிடயத்திற்கு வருவோம். இப்படியாக கோயில்காணிகள் என்றழைக்கபட்டவை பராமரிப்பின்றி பற்றைக்காடாய் பயனின்றி கிடந்தபோது மேலே நான் சொன்ன மாந்தர்கள் அவற்றை வெட்டித்திருத்தி அதில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டனர். வாழ்வை அமைத்துக்கொண்டனர் என்று நான் சொல்வதால் கோட்டை கோபுரம் எல்லாம் அமைத்துக்கொண்டனர் என நினைக்கத்தேவையில்லை. அந்த காணிகளுக்குள் படுத்து எழும்ப கற்றுக்கொண்டனர் எனக் கொள்க.
விறகு கொத்த கந்தையாவை அழைப்பதற்கு அல்லது மாவிடிப்பதற்கு நாகம்மாவை, தவமணியை அழைப்பதற்கு செல்வதற்காக என்னை அனுப்புகின்ற சின்னசின்ன சந்தர்ப்பங்களில்லாம் எனது நட்புப்பாராட்டும் குணஇயல்பினால் அவர்களின் நல்ல நண்பனானேன். நண்பனானேன் என்பதை விட நட்புள்ள சின்னப்பெடியனானேன் என்பதே பொருத்தமாகும். அதனால் அவர்கள் வாழ்வின் உள்முகத்தை காணும் சந்தர்ப்பங்களும் அவ்வப்போது வாய்த்தது. அம்மா கோயிலில் சந்தித்தபோது மாவிடிக்க வேணும், எனச்சொல்லியும் வராத தவமணி நான் வீடு போய் வரச்சொன்னதும் மறுநாள் காலை ஏழுமணிக்கே வீட்டிற்கு வந்து நட்பின் பெருமையை நிலைநாட்டியிருந்தார்.
அவர்களின் வாழ்விடங்கள் எனக்கு இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமூட்டுபவை. வேலிகள் வேலிகள் போலிருக்கும், ஆனால் அவை வேலிகளில்லை. ஒழுங்கைகள் போலிருக்கும் அவை ஒழுங்கைகல்ல. வீடுகளும் அப்படித்தான். ஒருமுறை போகும்போது ஒருமாதிரி இருக்கும் வீடுகள், அடுத்த ஒன்றரை மாதத்தில் வேறு வடிவமைப்பில் வேறு திராணியில் இருக்கும். நான் மண்டையை பிய்த்துக்கொள்வேன். நான் நாகம்மா வீடு என்று நினைத்து பெல் அடித்தால் அங்கிருந்து கிளம்பிவரும் பெண் எனக்கு நாகம்மா வீட்டிற்கு வேறொரு வழி காண்பித்து விடுவார்.
இந்த பித்துநிலையை தெளிவிக்க எண்ணி ஒருமுறை இராசுவிடம் கேட்டேன். இராசு எனது மாமா வயதை ஒத்த எனது நண்பர். (எனது நண்பர்கள் வட்டத்தையும் அவர்கள் வயதையும் கவனிக்க) இராசு நல்ல வியாபாரி. பழம்வீதியில் புகழ்பெற்றது அவர்களது கடை. தான்சார்ந்த சமுதாயமக்கள் அப்போதிருந்த கடைநிலையிலிருந்து தேறவேண்டும் என்ற பெருவிருப்புக் கொண்டவர். ஆனால் அதற்கு அவர் கைக்கொண்ட நடைமுறைதான் என்னை அவர் பக்கம் ஈர்த்தது. மற்றவர்கள் போல் மேட்டுக்குடி என்று சொல்லிக்கொள்பவர்கள் மேல் பழிசுமத்திக் கொண்டிராமல் செயல்முறையில் அவர்களை மிஞ்சும் வகையில் முயற்சி செய்தார்கள். அதற்காக தங்கள் பக்கத்தில் இருக்கும் பலவீனங்களை கண்டறிந்து அகற்றினார்கள். பழக்கவழக்கங்களில் மாறினார்கள். கிட்டத்தட்ட சிங்கள அரசியல் ஆய்வாளர் இக்பால்-அத்தாசின் பத்தி எழுத்துக்களைப் போல. நான் நேர்மையாக கேட்ட கேட்ட கேள்விக்கு இராசுவும்; நேர்மையாகவே பதில் சொன்னார். இங்கு பெரும்பாலும் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் படிப்பை நிறுத்திவிட்டு தங்களுக்கு தக்கதாய் ஒரு பையனை பிடித்துக்கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் குடித்தனம் நடத்த தொடங்கும் போது அவர்கள் இருக்கும் துண்டுக்காணி இரண்டு துண்டாக துண்டாடப்படும். இது இங்கு தொடர்கதை. இரண்டு மூன்றாகும். மூன்று ஆறாகும். காணிகளுக்கு என்ன உறுதியா? பத்திரமா? இவர்களாகப் பார்த்து இட்டுக்கொள்ளும் எல்லைகள் தான் வேலிகள். அவற்றில் முட்டுப்பாடு வரும்போது உண்டாகும் கலகம் தான்,சோமபான திருவிழாக் கலகம் என என்னைப்போன்றவர்களால் விளங்கிக்கொள்ளப்பட்ட நான் மேற்சொன்ன வசவுகளுடன் கூடிய கலகங்கள். இவை இராசு எனக்குத் தந்த தரவுகள்.
ஆனாலும் அவர்கள் சொந்தக் கைகளை நம்பிய மாந்தர்கள். காலை எழுந்து எந்த தொழிலுக்கும் தயாராக இருப்பார்கள். விறகுகொத்துதல், வேலிஅடைத்தல், மாவிடித்தல் போன்ற உடலைவருத்தும் வேலைகளை தொழிலாக செய்வார்கள். பெறுகின்ற கூலியில் அன்றிரவு அவர்கள் வீட்டில் அடுப்பெரியும். கூடவே உடலலுப்புத் தீர சோமபானம். கலகங்களும் தொலைக்காட்சிப்பெட்டியும் இல்லாத இரவுகளில் உடுக்குடன் கூடிய பாடல்கள் காற்றை நிறைக்கும். நடேசு என்பவரின் உடுக்கொலி இப்போதும் காதில் ஒலிப்பது போன்ற பிரமை என்னை ஆட்கொள்கின்றது.
இந்த இரண்டுவீதி மாந்தர்கள் இப்படி என்றால் மூன்றாவது வீதி மாந்தர்கள் வேறு ரகம். அவர்களுக்கு வெளியிலிருந்து பிரச்சனைகள் வருவது குறைவு. காரணம் அவர்கள் பிரச்சனைகளில் தன்னிறைவு அடைந்தவர்கள். தங்களுக்குத் தேவையான பிரச்சனைகளை தாங்களே உருவாக்கி கொள்வார்கள். அப்படி அவர்கள் உருவாக்கி வைக்கும் பிரச்சகைனகளால் சிலசமயங்களில் முழு கந்தர்மடமும் அல்லோலகல்லோலப்படும். பக்கத்திலிருக்கும் ஆரியகுளம்,அல்லது அத்தியடி பிரதேசத்தவர்களுடன் இவர்கள் கொழுத்தி வைத்துவிட்டு வரும் பிரச்சனைகள் அவர்கள், இவர்களை தேடிவரும் போது கந்தர்மடத்தில் வியாபிக்கும். தற்போதைய தமிழ்சினிமாவின் வில்லன்கள் துரத்துப்பாட்டு காட்சிகளை அப்போதே நான் நேரில் தரிசித்திருக்கின்றேன். எங்கள் வீட்டு மதிற்சுவர்களை ஏறிக்குதித்து தாண்டி “திடும்திடும்” என அவர்கள் ஓடும்போது என்ன நடக்கிறதென்றே தெரியாமல் வேடிக்கை பார்த்திருக்கின்றேன். “எங்கள் மதிற்சுவர்களை எங்கள் அனுமதியின்றி எப்படி நீங்கள் ஏறிக்குதிக்கலாம்” என்று கேட்கின்ற உரிமை எங்களுக்கு இருந்தும் கேட்பதற்கான தைரியம் இப்போது போலத்தான் அப்போதும் எங்கள் வசம் இருக்கவில்லை. ஆகமிஞ்சிப்போனால் இரண்டு சதுரகிலோமீற்றர் பரப்பளவுக்கு மேற்படாத இந்த பிரதேசத்தற்குள் எத்தனை வேறுபாடுகளும், மாறுபட்ட மனிதஇயல்புகளும் மண்ணின் மாந்தர்களும்.
இந்த மேற்சொன்ன மூன்று வகையறாக்களிலும் அடங்காமலும் கந்தர்மடத்தில் மாந்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் பெருபாலும் எந்தன் வீட்டையும் அதனை அண்டிய அயல்வீட்டையும் சேர்ந்தவர்கள். இருப்பதை இழந்துவிடக்கூடாது என்கின்ற அதீத எச்சரிக்கை உணர்வில் எதிலும் அதிகம் ஒட்டாமல் நடுத்தரவர்க்கம் என்கின்ற லேபிளையும் மேட்டுக்குடி நோக்கிய சிந்தைப்புலனும் கொண்டவர்கள்.
கந்தர்மடம் ஏன் கந்தர்மடமானது என உங்களில் யாராவது கேட்கக்கூடும். எனக்குத் தெரிந்து பண்டைய நாட்களில் எங்கள் ஊரில் ஒரு ‘கந்தபுராணபடலம் ‘வாசிக்கின்ற மடம் இருந்ததாக ஒரு செவிவழிக்கதையுண்டு. இதனை எனது அம்மம்மாவும் பக்கத்துவீட்டு சின்னம்மாக்காவும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். வேறு வரலாற்று ஆதாரம் எதுவும் என்வசம் இல்லை. (சின்னம்மாக்கா என்னில் பாசமழை பொழிந்த ஒரு வெள்ளந்தி மனுசி. அவரை பற்றி தனியான பதிவில் பின்னர் பார்க்கலாம்.)
கந்தபுராணவீதி மற்றும் அரசடிவீதி சந்திக்கும் முடக்கில் இருந்த மேற்படி மடத்தின் காணிகள், அயலவர்கள் வேலிகளை தள்ளிதள்ளி பிடித்துப்போட மிகுதியிருந்த பகுதியை காப்பாற்றும் நோக்கில் யாரோ ஒருவர் அதில் முருகன் சிலையை வைத்து அதனை கந்தபுராணக்கோவிலாக்கியது என்றும் சொல்கிறார்கள். அத்தோடு முடியவில்லை கந்தர்மடத்தின் கதை. ஒரு மூலைக்குள் முடங்கி ஒரு வேலுடன் ஒதுங்கியிருந்த முருகப்பெருமானை பிளாட்(FLAT) கட்டித்தருகிறேன் என ஆசைகாட்டி அருகிலுள்ள காணிகளை மீளவும் பிடித்து முருகனுக்கு ஒரு பிளாட் கட்டினார் ஒரு கல்யாணபுறோக்கர். முருகன் கோமணாண்டியான கதை அங்கே தான் தொடங்கியிருக்கும் என்பது என் எண்ணம். பிளாட் கட்டிய முருகனுக்கு என்னாச்சு? என்றால் முன்னர் இருந்ததை விட இன்னும் சின்னதாய் பிளாட் போட்ட கீழ் மூமில் முருகன் தங்கிக்கொள்ள மேல்தளத்திலும் மற்றைய அறைகளிலும் கல்யாணபுறோக்கர் குடிபுகுந்தார். ஆக முருகன் இப்போது கல்யாணபுறோக்கர் வீட்டு “சோக்கேஸ் பொம்மை” போல் ஆகியிருந்தார். முருகனுக்கும் பெப்பே. முருகனுக்குத் தானே என காணிகளை ஒதுக்கிக்கொடுத்த அயலவர்களுக்கும் பெப்பே. (வெள்ளை வேட்டி வெள்ளை நஷனல் வாரிஇழுத்ததலை என மிடுக்காய் அலையும் கல்யாணப் புறோக்கரின் கூத்துகள் பின்னால் வரும் தனிப்பதிவாக.)
“ச்சே…. இப்பவே கண்ண கட்டுதே”…. கந்தர்மடம் பற்றிய என் மனப்பதிவுகள் தொடரும்……
*வாசகசாலை நாட்கள்
*ரின் போல் விளையாடிய பொழுதுகள்
*பழம்வீதி பிள்ளையார்
*நல்லூர் விழாக்கால தண்ணீரப்பந்தல்
*ஐஸ்கிறீம் குடிப்பதற்கான சாமிதரிசனங்கள்
*இந்துக்கல்லூரி கனவிலிருந்தவன் ஸ்ரான்லிக்கு ஜாகா வாங்கிய கதை…….
தொடர்ந்தும் பகிரலாம்….. நீங்களும் தான் நண்பர்களே…..
(ப்பா…. ஒரு கொலைவெறிக்கு பயந்து என்னமா எல்லாம் எழுத வேண்டிக்கிடக்கு. ஒரு மனுஷன இப்புடியா பயமுறுத்துறது…… ராஸ்கல்ஸ்……..)
“ஆருத்ரா”வின் தரிசனம்
நண்பர் நாக.தயாகரனின் எழுத்தின் மீது அதிக பற்றுக் கொண்டு காதலித்திருக்கின்றேன். “இதனை இவன் செய்வான் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” கோட்பாடு பெருத்த நம்பிக்கை தருகின்றது.
“கந்தர்மடம்” யாழ்நகர வாழ்வின் சிறுபகுதி. வாசகர்களுக்கு இது யாழின் பதிவு என கூறிக்கொள்ளலாம். மாவிடிக்கும் நாகம்மா சாவகச்சேரியிலும் இருந்தார்கள் வேறொருவராக. ஒரு ஊரின் பின்புலத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களை முன்னிலைப்படுத்தி பதிவைத் தொடங்கி, ஆரோக்கியமான பயணத்திற்கு அடி எடுத்து வைக்கும் தயாகரன் ஆருத்ரா தரிசனம் தள அமைப்பிலும், அடுத்து வந்த பணிகளிலும் கூட நடந்த கைத்தடி-நண்பேண்டா.
தொடர்ந்து செல்வோம்.-ஆருத்ரா
அடுத்த பதிவு.
* “கண்ணா உனைத் தேடுகின்றேன் வா”
* கடுதாசிக் கடிதங்கள்.
கந்தர்மடம் குறித்த நல்லதொரு பதிவு. வாசிக்கும் போது அந்த வீதிகளை கற்பனையாக எண்ணிப் பார்த்துக்கொண்டேன். பகிர்விற்கு நன்றி.
By: சித்திரவீதிக்காரன் on ஜூன் 19, 2012
at 2:32 பிப
வாசித்த போது மனதில் சந்தோஷம் நிறைந்தது.
காலச்சக்கரத்தின் ஓட்டத்தில், சிற்றூர், பேரூர், நகரம்
பெரு நகரம் என்கிற வேறுபாடுகளைக் கடந்து, எல்லா
ஊர்களும் தங்கள் உண்மை முகத்தை இழந்து விட்டதாகவே
தோன்றுகிறது. அனைத்திலும் மாற்றம் நிகழ்ந்து, முகத்தை
மறைத்துக் கொண்டு நிற்கிறது. பார்வைக்கு வியப்பாகவும்
மிரட்டலாகவும் இருக்கிறது. மனிதர்களும் தங்கள்
நிறத்தையும் இயல்பையும் மாற்றிக் கொண்டு எதிர் திசையில்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பார்க்க சிரிப்பு முந்துகிறது.
ஆனால், மனம் இன்னமும் பால்யத்தில் பார்த்தையும்
நம்பியதையும், பழகியதையும், உணர்ந்ததையும் (?)
மாற்றங்களின் ஊடே தேடுகிறது. நினைவுகள் அழிவதில்லை.
நாக.தயாகரனின் “கந்தர்மடம்” அத்தகைய நினைவலைகளின்
தொகுப்பு. நன்றி.
பழைய நினைப்புடா பேராண்டி, பழைய நினைப்பு.
By: venkataramani on ஜூன் 21, 2012
at 2:38 பிப