அந்திமந்தாரை,கனகாம்பரம் என்று உங்கள் ஊரின் ஆதிப்பூக்களைத் தேடி நீங்கள் பெருமூச்சடைகையில்,ஒரு ஆர்க்கிட் பூச்செண்டை அல்லது ஜெர்பரா ஒற்றைப் பூவை உங்கள் கையில் கொடுத்து மேடையில் உட்கார்த்தி வைத்து விடும் மாநகரம் –வண்ணதாசன்.
மேடையில் உட்கார்த்தித்தான் வைத்துவிட்டது மாநகரம். இறங்கி விட முடியவில்லை. “பளிச்” வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்குள் பயணப்பட்டு விடுவோமோ என்று பயமாகத்தான் உள்ளது. புலம் பெயர்ந்த வாழ்க்கைச்சூழலில் அகப்பட்டுக்கொள்கின்ற ஒவ்வொருவரும் பின்னாட்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வாழ்ந்து விட முடிவதில்லை.பொருளாதாரம், அவர் தம் பிள்ளைகளின் கல்வி,வசதிப்பட்ட வாழ்க்கைமுறை எல்லாம் தான் ஒரு பூச்செண்டாக கைகளில் உட்கார்ந்து விடுகின்றன. பிடிக்கவில்லை என்று ஒரு போதும் தூக்கி எறிந்து விட்டு போக மனம் அனுமதிப்பதில்லை.
ஆதிப்பூக்கள் கனவாகவே போய் விடுகின்றன. அகதியாகுதல் ஒரு பொருள் கொண்ட சொல் இல்லை. அர்த்தப்படுத்தினால் நிறைய அர்த்தங்கள். சொந்த ஊரினின்றும் நீங்குதல், உறவினின்றும் விடுபடல் ,சந்தோசங்களை முற்றிலுமாக தொலைத்து விடல் என நீள் வரிசை கொள்கின்றன அர்த்தங்கள்.
ஆதிப்பூக்கள் அழகுடன் அமைதியானவை. பெரிய பளபளப்பு,ஜிகினா தந்திரங்கள் எதுவும் அதற்குத் தெரியாது. வேலிக்கரையோரம் சிவப்புச் செம்பரத்தை, மஞ்சள் செம்பரத்தை, அடுக்குச் செம்பரத்தை என்று அழகாக பூத்துக் குலுங்கிய செடிகளுடன், கிணற்றடி வேலி மறைப்பில் பெயர் தெரியாத கொடி மரத்தில் நீலப்பூக்களும் மழை நாட்களின் ஈரலிப்பை இதழ் தாங்கி பூத்திருக்கும்.
பூக்களின் வண்ணங்கள் கூட அதற்கு ஒரு அடையாளம் தான். மலர்ந்திருத்தல்,இதழ் விரிந்திருத்தல் தான் முக்கியம். தங்களது மகிழ்ச்சியை வெளிப்பரப்பில் காட்டிக் கொள்கின்ற அந்த தருணத்து அழகு தான் அவைகளை தனித்து அடையாளப்படுத்துகின்றன.
மாமரங்களின் சோலையாகக் காட்சியளிக்கும் சாவகச்சேரிக்கு மாம்பூக்களும் அழகுதான் . ஒரு பருவத்தில் மரம் முழுக்க மஞ்சள் இறைத்து தெளித்த மாம்பூக்கள் பிறிதொரு பருவத்தில் நிலத்தில் சுயவரைபாக கோலமிட்டு விடுகின்றன. ஆழ்ந்த மோனத்தில் பகற்பொழுதில் அசையாத காற்றில் காட்சி அளிக்கும் மாமரம், பின்னேரப் பொழுதுகளில் ஈரலிப்பை ஏந்திய காற்றின் அழுத்தத்தில் அசைந்தாடுவது, வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத எங்களது மனக்கிடக்கையை குறித்த ”ஆதிப்பூக்களின்” தேடல்களாக விரிகின்றன.
ஒவ்வொரு தடவையும் கண்டி வீதி வழியாக நுணாவில் பயணப்படும் பொழுதுகளில் போலீஸ் நிலையம் முன்னால் இருந்த வீட்டில் பச்சையும் வெள்ளையும் கலந்து அழகாக இலை விரித்த அந்த பெயர் தெரியாத செடி என்னை இம்சைப் படுத்திக் கொண்டே இருந்தது. எங்கள் வீட்டு முற்றத்தில் வேலிக்கரைகளில் குரோட்டன்களுடன் அதுவும் கூடவே இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்புடன், “ஒரு தடி வெட்டித் தருவீர்களா?” என்ற ஐயப்பாடு பெரிதானதால் கேட்காமல் நீண்டு கொண்டே போயின காலங்கள்.
சாவகச்சேரி போலீஸ் நிலையம் 84 ம் ஆண்டு தாக்கப்பட்டபோது அருகிலிருந்த அந்த வீடும் முழுச் சேதாரத்தோடு ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடிப் போயிற்று. நானும் எனது பெருவயது நண்பரும் ஓர் மெல்லிருட்டில் தயாரானோம். வேலியோரம் என்னை நிறுத்தி வைத்துவிட்டு பெருவயது நண்பர் வேலி பாய்ந்து அந்த மரத்தின் பதியனிட தடி வெட்டித்தந்ததோடு எங்கள் வீட்டு மரங்களுடன் புதியதாக இலை விரித்தன பச்சை,மஞ்சள் கலந்த வண்ணக் கோலங்கள்.
”போலீஸ் ஸ்டேஷன் மரம் ”என்றே எங்கள் வீட்டில் அழைக்கப்பட்ட அதன் கிளைகள் பக்கத்து வீடுகளிலும் அழகை அள்ளி இறைத்தன. அதனை ஒத்த பச்சை மஞ்சள் கலந்த செடியை வெள்ளவத்தை வீட்டில் கண்டபோது என் முக ஆச்சரியத்தை கண்ட அம்மா சொன்னாள் “போலீஸ் ஸ்டேஷன் மரம்” . ஆதிப்பூக்களால் கண் கலங்கிபோயிற்று மனம்.
ஒவ்வொரு வெள்ளி பின்மாலை நேரங்களில் வாரிவநாதர் சிவன் கோவிலுக்கோ,பெருங்குளம் பிள்ளையார் கோவிலுக்கோ சென்றீர்களானால் மென்பச்சை நிறத்தில் வேப்பிலை கருக்குடன் கூடிய நீள் இலையுடன் நீள் கூம்பு மஞ்சள் பூக்கள், சிறு காற்றசைவில் அதன் மென் சுகந்தம் உங்கள் ஆயுசுக்கும் மறக்காது. என் ஆயுசுவுக்கு இன்றளவும் மறக்கவில்லை.அதன் பெயர் பொன்னொச்சி.
இன்றளவில் ”ஆதிப்பூக்கள்” என்பது பெருங்கனவுகள் தான். பெரு நினைவுகள் உங்களைத் துரத்தி துரத்தி அடிக்கும். பெரு மூச்சடைய வைக்கும். என்னை கரையேற்றி விடுபவையும், காலமாக்கி விடுபவையும் கனவுகள் தான், பெரு நினைவுகள் தான்.
அதிகாலைக் கனவுகளால் கரைந்து போயிற்று, தொன்னுாறுகளை அண்டிய காலமாகிய காலம். முழுதும் மறந்திருக்க முடியாத ஊரின் நினைவுகளுடன் நண்பர்களையும் பிரிந்திருந்த அந்த அவக்காலத்தின் அதிகாலைக் கனவுகள் – நான் நுணாவில் வீதி வழி பயணிப்பதை, தொடர்ந்து பயணிப்பதாகவே நிகழ்த்திக்கொண்டு இருந்தன. என்னால் ஒருபோதும் வைரவர் கோவிலடியைத் தாண்டி அப்பால் போக முடிந்ததில்லை. அது ஒரு மீட்சிமைப்படுத்த முடியாத ஒரு நீண்ட துயரின் படிமமாக கனவின் நெகிழ்வாக ஆகிப் போய்விட்டது. அவ்வளவில் எனக்கு அந்திமம் நிகழ்ந்திருந்தால் அதனை அண்டிய இடங்களில் அலைந்து கொண்டிருக்கப் போகின்றோமோ என்று வியாபகம் கண்ட எண்ணம் மிக அண்மையில் முடிந்து போயிற்று.
2010 இன் இறுதியில் விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்றிருந்த நான் பக்கத்து வீட்டில் இரவலுக்கு சயிக்கிள் வாங்கி டச்சு வீதி, பூபதி டீச்சர் வீட்டு ரோட், முருகமூர்த்தி கோவிலூடாக இந்துக் கல்லூரி, கண்டி வீதி வழியாக தேவேந்திரா-ஆஸ்பத்திரி, நவீனசந்தை கட்டிடத்தொகுதி, தொடர்ந்து பயணித்து நுணாவில் வைரவ கோவில் அதற்கு அப்பாலும் போக முடிந்தது. தேவை நிறைவு அடைந்தது ஆன்ம ஈடேற்றம் கிட்டியது. இனிமேல் அதிகாலை கனவுகளில் நுணாவில் ஊடாக பயணிக்கப் போவதில்லை. திடுக்கிட்டு முழித்து கண்கலங்கத் தேவையில்லை.
தேமாக்கள் கூட ஆதிப்பூ வகையில் அடங்குபவை. சாவகச்சேரி இந்துக் கல்லூரி மதிலோரம் பூத்திருக்கும் அழகிய தேமாக்களால் அழகிழந்து போயினர் நடமாடும் தேவதைகள்.
நீங்கள் தேடுவதைப் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வரமும் வாழ்வும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நினைவுகள் யாவும் ஆதி முடிச்சுகளில் முட்டி மோதி அவிழ்ந்து விடத் துடிக்கின்றன. கனவான இருப்புக்கள் காலத்தின் பின் பதிவை முகிழ்த்து விடத் துடிக்கின்றன.
“வெடிபலவன்” என்று சொல்லப்படுகின்ற வேலி யோரத்து சிறு மரத்து பூவை எச்சில் தடவி வைத்திருந்தால் ” பட், பட்”டென்று வெடித்துச் சிதறும். அது பூ வகையைச் சார்ந்தது தான். அதன் ஆதார காரணம் இனப்பெருக்க வித்துக்களை ஊர்முழுக்கப் பரப்புவது தான். எனிலும் எங்கள் சிறு பராயத்து பால்ய நினைவுகளே நல்லூரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் விதைக்கபபட்டிருந்தன.
நல்லுார் திருவிழா நாட்களில் துளசி அக்கா வீட்டில் தங்கும் பொழுதுகளில் எங்களை விட ஒருவயது மூத்த அவள் சிறுகைபற்றி அழைத்து சென்று வேலியோர கதிகால்களின் அடியில் முளைத்திருந்த வெடிபலவனை பிடுங்கி வந்து தண்ணீர் தொட்டிக்குள் போட்ட போது ஆச்சரியமான ஆச்சரியம் பட் பட்டென்று வெடித்துச் சிதறின. அன்று மாலை முழுதும் வெடிபலவன் தேடி வீதி வழி அலைந்தும், பிடுங்கி வந்து நீர்ப்பரப்பில் இட்டதும், அதன் சிறு சிறு டப் டப் சத்தத்தில் மகிழ்ந்ததுமான பொழுதுகள் இனி வந்து வாய்க்கப் போவதில்லை. தனது ஆசைச் சேகரிப்பாய் வைத்திருந்த காந்தத்தை வி டைபெறும் நாளில் தந்ததும் கண்கலங்கி நின்றதுமான பொழுதுகளை சென்னையில் புறநகரப் பகுதியில் வசிக்கும் துளசி அக்காள் மறந்து பல நாட்களாகிறது.
ஆதிப் பூக்கள் என்பது பின்னோக்கி வாழ்தல் குறித்த ஒரு குறியீட்டுச் சொல் என்பது இப்போது விளங்குகின்றது. அவை தனியே இதழ் விரித்த, மலர்ந்திருந்த பூக்களைப் பற்றிய தனிக் கவனஈர்ப்பு அல்ல என்பதும், பால்யம் குறித்த பதிவுகளின் தொகுப்பு என்பதும் விரிவான வியாக்கியானம் ஆகித் தொலைக்கின்றன.
சுருட்டுத் தொழில் புரியும் தொழிலாளர்களால் தங்கள் தின சேகரிப்பில் சேர்த்து வைத்த பணத்தில் ஞாயிறன்று சிறுமீன்கள், இறால், சிறு நண்டு, பலாக்கொட்டை, பயற்றங்காய் “கள்ளு வாய்க்கு சுள் உறைப்பு” என பொடித்த மிளகாய், மேற்பரப்பில் தெளிந்த ஒடியல்மா இட்டு கரைத்து ”வத வத” வென்று கொதிக்கும் மீன்கூழின் ஆதிச் சுவை எங்கள் நாக்குகளுக்கு எப்போதாவது தான் வாய்கின்றது.
நக்கல், விளாசல், நையாண்டி, எள்ளல் என முசுப்பாத்தி கலந்த அந்த தொழிலாளர்களின் இட்டுக்கட்டி கதைத்து சிரிக்கும் மனப் பரிமாற்றம் மற்றவர்க்கு வாய்க்காதது. இன்றளவும் சுருட்டுச் சுப்பையாவும், அப்பையா அண்ணையும், சிலாபம் சுருட்டுக் கொட்டிலில் சீவித்திருந்து விடுமுறைக்கு மட்டுவில் சென்று கிணற்றில் வீழ்ந்து வாழ்வை முடித்துக்கொண்ட குமாரண்ணையும் அடிமட்டத்தின் ஆதிக்குடிகள். நகைச்சுவையின் நாயகர்கள். அவர்களது இட்டுக்கட்டி கதை சொல்லும் திறன் அவர்களுக்குரிய தனித்துவ அடையாளம்.
புலம் பெயர் தேசத்தின் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மஞ்சி மலிபன் பிஸ்கட்டுகளும், கண்டோஸ் என்றழைக்கப்படுகின்ற சாக்லேட்டுகளும், தோலகட்டி நெல்லிகிரஸும், நெக்டோ சோடாவும், பனங்கிழங்கும் நினைவு அடுக்கில் நின்றாடும் உங்கள் ஆதிச்சுவைக்கு உங்களை அழைத்துச் செல்கின்றன
இவற்றை விட தரத்திலும் சுவையிலும் சிறந்த பிஸ்கட்டுகளும், குளிர்பானமும் மிக நெருக்கமாக கிடைத்தாலும் எல்லோருக்கும் ஆதிச்சுவை பற்றிய பிரஞ்ஞை அதிகமாகவே பாதித்திருக்கின்றது.
இன்றளவும் சூடை மீன் குழம்பிற்கும், சிறு மாங்காய்ச் சொதிக்கும் அல்லல்ப்பட்டு ஏங்கித் தவிக்கும் நாக்கிற்கு KFC யும் MC DONALDS உம், PIZZA BURGER உம் ஆதிச்சுவை அளிக்கப் போவதில்லை.ஒவ்வொரு மனிதனும் தனது தாயின் அன்புக் கவனிப்பில் தயாரிக்கப்பட்டு -அவசரத்திற்கு சிரட்டையில் வைத்து சுவைக்கப்பட்ட பயற்றங்காய் வதக்கலுக்கும் ,முளைக் கீரை மசியலுக்கும் ஆண்டாண்டு காலம் ஏங்கித் தவிக்கப் போகின்றான்.
தாயோடு அறுசுவை போம்! தந்தையுடன் கவனிப்பு போம்! ஊரோடு நினைவுகள் போம்.
*****************************************************************
வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் வரையும் எஸ். கல்யாணசுந்தரம் இடையிடை தன்னை கல்யாணியாகவும் காட்டிக் கொள்வதுண்டு. தமிழ்நாட்டின் திருநெல்வேலி சொந்த ஊர்.
“உயரப்பறத்தல்” சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையின் சிலவரிகளே என் பதிவின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. மிக நுட்பமான சிறுகதைகள் உயரப்பறத்தலில் அடங்கியுள்ளன. ” ஈரம் , அச்சிட்டு வெளியிடுபவர்கள்” வாசித்தளவில் வண்ணதாசன் என்னுள் உயரப் பறந்து கொண்டுள்ளார். நானும் உயரப் பறக்க விழைகின்றேன். – ஆருத்ரா
இது கதை அல்ல, நாளாந்தம் எமது மனதில் ஓடி விளையாடி திரிகின்ற நினைவுகள் எமது ஊரில் இருந்து 769 பஸ் இல் யாழ்ப்பாணம் சென்று படம் பார்த்து வருவதே எமக்குள் எவளவு சந்தோசம். யாழ் பஸ் ஸ்டாண்ட் இல் மணிக்குரல் மேஜர் சண் இன் பாட்டு தெரிவுகள் K S ராஜா இன் திரை விருந்து B H அப்துல் ஹமீது இன் பாட்டுக்கு பாட்டு காலை வேலைகளில் தென்னைக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் வேளையில் வானொலியில் போகும் பொங்கும் பூம்புனல், school நடந்து போகையில் எம்மை அரவணைக்கும் புது வெள்ளம் பாட்டு நிகழ்ச்சி பஸ் கிளம்பும் போது ஓடிபோய் பூட் போர்டில் ஏறறியவுடன் முறைத்து பார்க்கும் கண்டக்டர் எங்கே போறாய் என கேட்க கச்சேரியடி என்று சொல்ல டிக்கெட் தரும் போது சீசன் டிக்கெட் ஐ தூக்கி காட்ட அவர் வாறன் பின்னேரம் மாஸ்டர் இடம் என்று சொல்ல அதிலை என்ன வடையும் வாங்கி வா அண்ணை என்று நான் சொல்ல,நீ எல்லாம் படிக்கவா போறாய் என்று அவர் சொல்ல வீடு கட்டி முடிந்த பின் இருக்கும் வெள்ளை மண்ணை பழைய நியூஸ் பேப்பர் இல் சணல் கயிற்றால் கட்டி அதை சாலை ஓரங்களில் தெரியாமல் விழுத்திய மாதிரி செய்து விட்டு சைக்கிளை slow பண்ணி அதை சீனி என நம்பி எடுத்து செல்பவரை பார்த்து அடையும் சந்தோசம், காலை வேளைகளில் வீட்டிற்க்கு அருகில் உள்ள bakery இல் போய் அண்ணை 5 இறத்தல் பாண் என, அருளம்பலம் பாணோடு வர ஓடி மறைவதும் பின் நேரத்தில் இல் அருளம்பலம் அப்பாவிடம் கம்ப்ளைன்ட் பண்ண அப்பா தடியுடன் கலைக்க ஓடி போய் நாவல் மரத்தில் ஏறி ஒழிக்க அப்பா மூங்கில் thadi கொண்டு வந்து தட்ட இறங்கி ஓடுவதும் ஆஹா என்ன சுகம். principal போய் அப்பாவை கூட்டி வா என்று சொல்ல எனது நண்பர்கள் market இல் போய் மிளகாய் வியாபாரியை கூட்டி வந்து இவர் தான் எனது அண்ணா என்பதும், பின் வாங்கில் இருக்கும் நண்பர்கள் சண்முகம் அண்ணனின் கள்ளை குடித்து விட்டு gold leaf smoke பண்ணியபடி வந்து இருப்பது பின் வாங்கார் எதுக்கும் பின் வாங்கார் என சிவலிங்கம் மாஸ்டர் சொல்வதும் இப்படி பல இருந்தது அப்போ இருந்தது ஒரேஒரு சைக்கிள் அனால் என்ன சந்தோசம் இன்று 2 car 3 van எங்கே அந்த சந்தோசம் ???
எழுதியவர் N.M.PRAHALATHAN நாள் ஆவணி 20, 2012
நேரம் 12:38 முப
By: prahalathan on ஓகஸ்ட் 19, 2012
at 3:08 பிப
என்னால் பூக்களை விட முடியவில்லை. அது குளத்திலாயினும், தோட்டத்திலாயினும், தோட்டத்திற்கு வெளியிலாயினும். ஏதாவது ஒரு வகையில் என் வரிகளுக்கும் அதற்குமான சம்பந்தம் தீர்ந்துவிடவில்லை. ‘விடுமென்று தோன்றவில்லை.’ விடவேண்டும் என்ற அவசியமுமில்லை. பூ எதற்குத் தீர வேண்டும். தீ எதற்கு அணைய வேண்டும்? – வண்ணதாசன்.
நல்ல பதிவு. சொந்த ஊரைப் பிரிவது கடினமான விசயம். நீங்கள் சொல்வது போல எவ்வளவுதான் கொடுத்தாலும் அன்று நாம் பெற்ற சில விசயங்களை இன்று பெறுவது கடினமாகத்தானிருக்கிறது. கவரில் கிடைக்கும் எத்தனையோ திண்பண்டங்கள் தேன் மிட்டாய்க்கு ஈடாகுமா என்று தெரியவில்லை.
பகிர்விற்கு நன்றி.
By: சித்திரவீதிக்காரன் on ஓகஸ்ட் 22, 2012
at 2:23 பிப
Dear Aruthra,
I was delighted to see Vedip-palavan picture in one of the articles.
It is a rare plant, not properly identified. The Sinhala equivalent name is not known yet.
Vedip-palavan is equated to Paduvan-keerai by the Sidhdha Maruththuva text, Vaiththiya Malai Akaraathi (Madras Tamil Lexicon).
The botanical term for Paduvan-keerai/ Vedip-palavan is Dyschoriste erecta sensu Alston (A Check List of the Flowering Plants of Sri Lanka, page 3).
If you could present pictures of plants photographed in Jaffna with Tamil as well as equivalent botanical terms, it will be useful for those who search the web. It will also make them acknowledge and recognize your site.
Ragupathy
By: Ragupathy on ஓகஸ்ட் 28, 2012
at 1:28 பிப