ஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 3, 2012

ZURICH- மழை நாளின் காலை.

“வெள்ளத்தனைய மலர்நீட்டம். மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு”.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா”.

எனக்கு பதிவு எழுதுவதற்கு மாபெரும் சந்தோசம் உகந்ததாக இருப்பதில்லை. மிகப்பெரும் துயரம் மனதை அழுத்த அதன் பீறிடலாக பதிவுகள் அமைய எழுதுவது இலகுவாக இருக்கின்றது. அவ்வாறான ஒரு மழைநாட்காலை சனிக்கிழமை விடுமுறையுடன் அமைந்திருப்பதும் முகசோதிடத்தில் தேர்ந்த மனையாள் முகக்குறிப்பறிந்து எழுதுவதை எழுதிவிட்டு பின்பான நேரத்தை தங்களுடன் செலவழிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்ததாலும் ஆங்கிலத்தேதி 1.9.2012 தமிழுக்கு நாள் ஆவணி மாதம் 17 திகதி சுக்கிலபட்சத்து பிரதமையில் நந்தன வருடம் காலை 8.30 மணிக்கு கற்பூரச்செடி முளைவிட்டு கிளை பரப்பிய சன்னலோரம் எழுதுவதற்கு உட்கார்ந்துள்ளேன்.

“இன்றைய நாள் எல்லோருக்கும் அழகாக விடியவேண்டும் “என்ற பதமும் “இதுவும் கடந்து போகும்” தத்துவமும் ஒவ்வொரு நாளையும் இனிதாக கடக்க உதவி புரிகின்றது. துயரத்தின் முழுமையான பரிமாணம் ஒட்டு மொத்தமாக சில வேளைகளில் எல்லாவற்றையும் கலைத்துவிடுகின்றது.

காலையில் தேதி பார்த்ததும் “ஆருத்ரா தரிசனம்” ஒவ்வொரு கிழமையும் புதிய இடுகைகளால் நிரப்பப்படவேண்டிய நெருடலும், நீண்ட மனஇறுக்கத்தை வெளிப்பரப்பில் வைத்து காற்றாகி இலகுவாக வேண்டிய தேவையும் எமை எட்டி உதைத்தது. எட்டி உதைத்து கலைத்தால்தான் எட்டுவயதுக்கழுதைக்கும் புத்தி உறைக்கும். முழுச் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு தொடர விளைந்தால் நினைவின் அடுக்கு நெடிதுயர்கின்றது.

இந்தவாரம் முழுச் சோம்பேறித்தனமாக அமையவில்லை. பதிவில் இடுவதற்கு இருவேறு பதிவுகள் நண்பர்களிடம் தட்டச்சு செய்ய கொடுத்தாகிவிட்டது.

” தேமாவும் காதலும்” பதிவின் ஆறுபக்கங்களும் கிடைத்ததாகவும் Print out எடுத்து டைப் பண்ணப் போவதாகவும் நண்பர் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். ”இளையராஜா என் காதலுக்கு இசையமைத்தவர் பாகம்-3” என்றுதானே வரவேண்டும்? ஏன் ”தேமாவும் காதலும்” என்று பெயர்மாற்றம்? என்று ஏக்கம் தொனிக்க அடுத்த குறுஞ்செய்தி.

கெவின் கார்ட்டர் பற்றிய அடுத்த பதிவு. புலிட்சர் விருதுபெற்ற தென்னாபிரிக்க புகைப்படப்பிடிப்பாளர் பசியையும், வறுமையையும் காசாக்கி தன்னை நிலைப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் புடைசூழ மன அழுத்தத்திற்கு ஆளாகி உயிர்துறந்த துயரப்பதிவு.

இவ்விரண்டு பதிவுகளும் தற்போதைக்கு இல்லையென்றாகிவிட்டது. ஒரு பதிவை தற்போதைக்கு நிறுத்தி வைத்து இன்னொன்றை மற்றொன்றாக மாற்ற வேண்டிய சூழலும் அலைக்கழிக்க வைக்கின்றது.

1993 ம் ஆண்டில் கனடா “செந்தாமரை”யில் சில ஆக்கங்கள் வெளிவந்த நிலையில் அதன் பிரசுரத்திற்கு தயாரானதே “என் காதலுக்கு இசையமைத்தவர் இளையராஜா“. பதின்மவயதுக் காதலை பதின்ம வயதை தாண்டிய மிகக் குறுகிய காலத்திற்குள் எழுதிவைத்து தர்மசங்மடம் காரணமாக அனுப்பி வைக்காமல் இருந்து, பதிவர்- பதிவுலகம் கணணியில் கைவரப் பெற்றநிலையில் பரணில் இருந்து தூசி தட்டி சில பிற்சேர்க்கை சேர்த்து பதிவிலிடப்பட்டது.

வாசித்து கண்கலங்கி கருத்திட்டும், தனிப்பட்ட முறையில் மின்மெயிலிட்டும் உவந்த அன்பர்குழாம் உணர்ச்சிபெருக்காக அமைந்திருப்பதாகவும் தங்களின் கல்விச்சூழலை வாழ்க்கை தராதரங்களை ஒப்பிட்டதாகவும் கனமழை பொழிந்து போனார்கள். பதின்ம வயதைத் தாண்டிய முதிர்காலத்து அந்திம ஆத்மா பதிவை பதிவாக பாரக்கும் ஒரு பதிப்பாளருக்குரிய மனச் சிரத்தையுடன் சில நாட்கள் காலம் கழித்தது. இளையராஜா கா.இ. 1 ,2 எல்லாம் பதிவிலிடும்போது ஒன்றும் ஆகவில்லை. பிறழ்ந்த மனம் முதிர்காலத்துக்கு முந்தைய பதின் வயதிற்கு மீண்டும் பிரவேசித்தவேளை துயரம் ஊற்றெடுத்தது. உயிரனைய உள்ளங்களை காயப்படுத்துவதை விட்டு அது என்னை அதிகம் பாதித்தது.

பிரிவு என்பது சிலவேளை மாபெரும் சந்தோசமல்லவா? “தெளிவான மனநிலைதானே மனிதனுக்கு மாபெரும் வரப்பிரசாதம்” என்பதாகவெல்லாம் கலவரப்பட்டுப்போன மனம் ஓஷோவின் தத்தவங்களுள் மூழ்க ஆரம்பித்துவிட்டது. நீ! நீயாகவே இரு. அந்த நான் பதிவரா? பதிவிலிருந்து என்னை விடுவித்து பதின்வயதில் மூழ்க ஆரம்பிக்கும் முனையற்ற ஈட்டியா?

பதிவர் தன்னிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ஒரு பார்வையாளராக தன்னை வெளிக்கொணர்கின்ற நிலையில் இளையராஜா காலாகாலத்திற்கும் என் காதலுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பார். இன்னும் இரு பதிவுகளின் பின் முற்றுப்பெற்று, முற்றுப்பெற்ற பின் ஞானாதிக்க நிலையின் பிரிவான “தன்னிலையறிதலு”க்குள் தன்னை முழுதாக அர்ப்பணித்து விட இயல்பு அழைக்கின்றது. பல் விருபமாகி , பறவையாய், பாம்பாகி, வல்ல சிவனாகி, முனிவராய், தேவராய்.

“எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்”.

காமமும், காதலும் தான் ஒரு வாசகர் தளத்தில் அதிக கவனிப்பையும் கைதட்டலையும் பெறுகின்றன. எனது “நித்தியானந்தாவும் றஞ்சிக்குட்டியும்“ ஜனவரி பதிவிடப்பட்ட “நகுலபாஸ்கரனில்” இருந்து அண்மைய பதிவான “ஒரு குருடனின் நிறப்பிரிகை” வரையான இருபத்துநான்கு பதிவுகளில் அதிகம் வாசிக்கப்பட்டதாக தளமேலாண்மை தகவல் தெரிவிக்கின்றது.

இளையராஜா என்காதலுக்கு இசையமைத்தவர் பாகம்-2ம், கண்ணா உனைத்தேடுகிறேன் 3 வதுமாக வாசக கவனத்தைப் பெற்றன. “ஆருத்ரா-தரிசனம்” மிகப்பெரிய மனச்சாந்தியை தந்துகொண்டிருக்கின்றது.

நித்தியானந்தாவும் றஞ்சிக்குட்டியும் அமோக வரவேற்பை பெற்றபின் எனக்குள் எழுந்த மிகப்பிரதான கேள்வி “சிட்டுக்குருவி லேகியம் விற்கப்போய்விடலாமா”? என்பது தான். இன்று பாதிப் பத்திரிகைகளை அலங்கரிப்பவை உறுப்புச்சிறுத்துப்போதல், துவண்டுவிடல், துரிதஸ்கலிதம் பற்றிய விளம்பரங்களும்- ஏழாவது தலைமுறை வைத்தியர்களும் தான்.

பதிவுகள் பதிவர்களுக்கு மிக நீண்ட ஊடக சுதந்திரத்தை கொடுத்துள்ளது. பதிவர்களது தனிப்பட்ட ஆளுமை ஆக்கத்திறனாகவும், படைப்புத்திறனாகவும் அமைந்து “ஒற்றைப்படையல் – ஒருவிருந்து” கணணிவலை ஊடாக அரங்கேற்றம் ஆகின்றது. தகவல் யுகத்தின் கட்டுக்கடங்காத பெரு வெள்ளமாக வலையகமும், ஊருக்குள் வாய்த்த “பொதுக்கிணறு”களாக தனிநபர் பதிவுகளும் இடம் பெற்று உடல் சோரக்குளித்து – ஊர்க்கதை பேசி- வயலோரம் காற்று வாங்கி மகிழ்வெய்திக் கொள்ளும் இருப்பு உயர்ந்திருக்கின்றது.

வாசிப்புப்பழக்கம் அருகி விட்டதெனவும் தமிழின் கலை- இலக்கிய ஆக்கங்கள் பெரும் வாசகப்பரப்பை அடையவில்லை எனவும் பரவலான ஏக்கங்கள் எங்கும் ஒலிக்கின்றன. வாசகர் தளத்தின் பாதிப்பேர் முன்னேறி பெரும் படைப்பாளிகளாக இணையவலையின் சிறுகுறிப்புகளுக்கு Likes,Comment வரையத் தொடங்கிவிட்டார்கள். மாபெரும் இலக்கிய சாதனையாக நாளை Likes,Comment அமைந்து உயிரெடுக்கப் போகின்றன.

சிலருடைய முகநூல்களில் அருமையான கருத்தேற்றம், சுவையான செய்திப்பரிமாற்றம் என இணக்கமான வரைபுகள் காணக்கிடைக்கின்றன.

முதல் நாளிரவு இணையவலை Twitter இல் கண்டு களித்தவை.

1. வாழ்க்கையும் பிரியாணியும் பீஸ் புல்லா இருக்கணும்.

2.அண்ட்ராயர்  தெரியும்படி    தனது வேட்டியை  மடித்துக்கட்டிய தமிழன்தான்,பரிணாம வளர்ச்சியில் இன்று  ஜ‌ட்டி  தெரியும்படி ஜீன்ஸ் அணிகின்றான்.

இன்றைய சனிக்கிழமை கோலாகலமாக கழியவில்லையாயினும் குழப்பமின்றி கழிந்தது. இங்குள்ள தமிழ்கடைகளில் உயிர்கோழி என நாட்டுக்கோழி விற்பனை செய்கின்றார்கள். செத்த கோழி எப்படி உயிர்க்கோழியாகும் என்ற வினா தமிழ்கூறும் நல்லுலகத்தில் ஓங்கி ஒலிக்கட்டும்.

அவ்வாறான நாட்டுக்கோழி ஒன்றை வாங்கி நான் கொத்திக் கொடுக்க (கொத்தியா? வெட்டியா?) ஆக்கிக் கொடுத்த மனையாளின் அன்புப் பரிமாறலுடன் ஒரு சனிக்கிழமை ஜென்ம சாபல்யம் அடைந்தது.


மறுவினைகள்

  1. பதிவுகள் பதிவர்களுக்கு மிக நீண்ட ஊடக சுதந்திரத்தை கொடுத்துள்ளது. பதிவர்களது தனிப்பட்ட ஆளுமை ஆக்கத்திறனாகவும், படைப்புத்திறனாகவும் அமைந்து “ஒற்றைப்படையல் – ஒருவிருந்து” கனிணிவலை ஊடாக அரங்கேற்றம் ஆகின்றது. தகவல் யுகத்தின் கட்டுக்கடங்காத பெரு வெள்ளமாக வலையகமும், ஊருக்குள் வாய்த்த “பொதுக்கிணறு”களாக தனிநபர் பதிவுகளும் இடம் பெற்று உடல் சோரக்குளித்து – ஊர்க்கதை பேசி- வயலோரம் காற்று வாங்கி மகிழ்வெய்திக் கொள்ளும் இருப்பு உயர்ந்திருக்கின்றது.\\
    தங்களுடைய பதிவு அருமையாக இருந்தது.

    • நண்பரே! பாதிப்பேர் ‌FACEBOOK இன் COMMENT- LIKE இற்குள் படுத்துக் கிடக்கின்றார்கள். நாளை இதற்கெல்லாம் பெரிய விருதுகள் கொடுத்து பொன்னாடை போர்த்துவார்களோ தெரியாது.

  2. பதிவு அருமை.. Now, you are at srilanka and tamil area.. is there any problem after the 2009,may 17th issue… What are u doing for your economic sources…

    Here, in tamil nadu, many of them not eat non-vegitarians on saturdays since it is a day for ‘Lord Perumal’ except few…
    But. sunday, No exception… everyone cut the fish/chick/coat/ex…..
    and put into the stomach for its craveyard..

    poor english?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: