வாழ்வென்ற நீள் வழிப் பயணத்தில் பிரிவுகளும் வந்து ஏகிப் போகின்றன. சந்திப்பதில் குதூகலித்துக் கொள்ளும் மனம் பிரிவைச் சிரமத்துடன்ஏற்றுக் கொண்டு ஆதிக்காலத்தின் மீதிக் கணங்களில் கண்கள் பனிக்க கவலை கொள்கின்றது.பிரிவின் கடைசிக் கணங்களை ஞாபகப் படுத்திக்கொள்ள முடியுமானால், உறவின் முதல் சந்திப்பும் ஞாபகத்தில் இருந்து கனத்துக் கொண்டிருக்கும். எனக்கும் அப்படித்தான் ஆகி இருக்கிறது. காதலில் மோசமான தருணங்களும், பிரிவுகளும் காலம் தோறும் அழகாகப் பரிணமித்து அழுது தொலைக்கும், நினைவின் வீச்சும் பேச்சும், இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டிருக்கும்.
இளையராஜா என் காதலுக்கு இசை அமைத்து பாகம் ஒன்று, இரண்டை கொண்டிழுத்து என்னை பரவசப்படுத்தியது போன்றே ஜீவாவின் மரணத்திற்குப் பின்னும் இளைய-ராஜாவாக வலம் வருவது காதலின் கனதியை வெளிச் சொல்கின்றது.
கடவுள் இருக்கின்றாரோ இல்லையோ
தேவதை இருக்கின்றாள்
அது போதும் எனக்கு – தபூ சங்கர்
தேவதைகளுக்கு சிரிப்பு என்பது அழகாக வாய்த்து விடுகின்றது. உனது ஒவ்வொரு சிரிப்பும் கண்களின் வழியாக நடைபெற்றுப் போவதாகவே நினைவு கொள்ளப்படுகின்றது. அண்மைய சிரிப்பும் அவ்வாறு தானோ?. முகநூலில் கண்கள் கொப்பளிக்க சிரிக்கும் சிரிப்பு உன்னுடையதாகையில் பிரிவின் பெருவெளியில் உன்னை தவற விட்டதற்கான மூழ்கும் தருணம் அடிக்கடி என்னை அலைக்கின்றது.
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்.
அந்த தனியார் கல்வி நிலையத்திலும், தேமா மர மதிலோர கல்லூரியிலும் வளர்த்துக் கொண்ட காதல் எனக்கான பால்ய காலத்து ஆதிப் பூக்கள். காலமெல்லாம் வசந்தமாக கன பரிமாணத்துடன் வீச வேண்டிய காதலைக் கடைசிவரை கொண்டிழுப்பதற்கு வசதிக் குறைபாடும், சமனாகாத பொருளாதார ஏற்றத்தாழ்வும் காரணமாகப் போயிருக்கலாம்.
நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே.
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்
நீ வளர்ந்ததாலே .
இங்கே குறிப்பிடப்படுவது பதின்ம வயது காதல். அது அதற்குரிய குணாதிசயங்களையும், நினைவற்ற ஏக்கங்களையும், முடிவற்ற துயரங்களையும் கொண்டது.
எண்பதுகளின் ஆரம்பம். தனியார் கல்வி நிலையத்தில் நீ, நான் தவிர மற்றவர்களும் கற்ற காலம். உனக்கென்ன? தனித்து ஒரு பெண். டியூசனுக்கு பணம் தருவதற்கே பற்றாக்குறைப் பொருளாதாரம் இடமளிக்காத சூழல் என்னது. இடையில் மூன்று மாதங்கள் மிக இறுக்கமான வாழ்வுச் சூழலும், வசதிக் குறைபாடும் வாட்டி எடுத்த நிலையில் டியூசனில் இருந்து நின்று கொள்ளலாம் என்ற நிலையும் வந்தது.
”தான் போகக் காணேல்லை மூஞ்சூறு விளக்குமாற்றையும் கொண்டிழுத்ததாம்” போல ஆகி விட்டது எனது காதல். உன்னை காண முடியாததான பெருந்துயரம், காதலை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்,அதைத் தொய்வின்றி கொண்டிழுப்பதற்கான மன நிலை எல்லாவற்றையும் ஒருசேர தலை முழுகி விட்டு பற்றாக்குறைப் பொருளாதாரத்திற்கு பதுங்கி உயிர் விடும் நடுத்தர வர்க்கத்து நரகம்.
கூரை வீட்டு பொத்தலுக்குள் மழை நீர் மட்டும் ஒழுக வேண்டியதில்லை. கண்களும் ஒழுகி கண்ணீர் மல்கும். .
அந்தமான் காதலி படத்தில் சுஜாதா சொல்லும் வசனம் முழு ஏழ்மையை அறைந்து சொல்லும்.
“ஏழை வீட்டில் கோழிக் குழம்பு என்றால் ஒன்று அந்த வீட்டில் யாருக்கோ நோய் வந்திருக்கின்றது” என்று அர்த்தம்.அல்லது “கோழிக்கு நோய் வந்திருக்கின்றது”என்று அர்த்தம்.
உனது பளபள Chopper சைக்கிளும் துருப்பிடித்து கிரீச் போடும் 900 ரூபா சைக்கிளும் காதலுக்குரிய சம தகுதிகளை என்னிடமிருந்து விலக்கிய வேளைகளில், நீயும் அதிகம் தொலைவில் என்னை விலகிச் சென்றாய். இதற்காக என்றோ, அதற்காக என்றோ காரணம் கூறி சொல்ல முடியாது போனாலும், எதற்காகவோ அதுவும் நிகழ்கின்றதான நிகழ்தகவு வறுமையின் நீர் பிடிப்பற்ற துயரின் படிமமாக என்னுள் படிந்து கிடக்கின்றது.
டியூசன் பணம் கட்டமுடியாத அவமானத்துடன் குறுகிய வேளையில், என் உயிரனைய நண்பன் மட்டுவில் நிமலன் எனது மூன்று மாத டியூசன் காசையும் தனது மாதச் சேமிப்பில் இருந்து தந்து உதவியதோடு ”என் கல்வி தடையற வழி வகுத்தான்” என்று இவ்விடத்தில் பதிவிட விரும்பவில்லை. என் காதல் தடையற வழி வகுத்தான் அல்லது நீட்டிக்க வழி வகை செய்தான்.
வாரத்தில் ஒரு நாளாவது கனடாவிலிருந்து அதிகாலையில் என் நித்திரையைக் குழப்பி மணிக்கணக்கில் கதைத்து கனவுப்படிமங்களை மீள் நிறுத்தும் நிமலனை எங்கள் கதைத்தலின் சாராம்சம் ஜே. கிருஷ் ணமூர்த்தியோ,எம் எஸ் உதயகுமாராகவோ இருந்தாலும் நான் பொறுத்துக்கொள்வது மூன்று மாத காலம் என் வறுமைக்கு நீர் வார்த்த வள்ளல் என்பதனாலேயே.
அந்த தனியார் கல்வி நிலையத்தில் சரஸ்வதி பூஜை நடப்பதற்கு ஏற்பாடாகிற்று அந்த தனியார் கல்வி நிலையம் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே என்பதால், அந்த வருடத்துடன் பத்தாவதை நிறைவு செய்யும் வகுப்பினர் அதை கோலாகல விழாவாக கொண்டாடி விடுவார்கள். பெரிய அலங்கரிப்பு, தென்னந்த் தோரணம், குலை வாழை மரம் கட்டுதல் சற்றேறக் குறைய ஒரு திருமண வீட்டிற்கான முழு சோடனையும் இடம்பெறும்.
கல்வி கற்கும் மாணவர்கள் முடிந்த அளவு முழுச் சிரத்தையோடு சிறிய கலை நிகழ்வுகளையும் தாங்கி, பெரிய கலை நிகழ்வாக மோகன் பூர்ணிமாவுடன் காதல் கொண்டு இருமி இருமி செத்த ”பயணங்கள் முடிவதில்லை ”படத்தை தொலைக் காட்சியில் திரையிட்டார்கள்.
” மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து” பாடலும்,
“இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ? அது மழையோ?
பாடலும் கேட்கும் போதெல்லாம் அந்த தனியார் கல்வி நிலையமும், இருமி இருமிச் செத்த மோகன் பூர்ணிமாவும், எனது பதின்ம வயதுக் காதலும், கண்கள் கொப்பளிக்க சிரிக்கும் நீயும், என்கண் வழியும் நீரும், சூரிச்சும் லண்டனும் ஆகி தொலைவான காதலும் தட்டாமாலை சுற்றுகின்றன.
பருவம் பொல்லாதது
பள்ளி கொள்ளாதது
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி இச்சைகளை மேனி கேட்கின்றது –வாலி
தனது பிராத்தனாவை இழந்த பெருந்துயரை ”வட்டியும் முதலு”மாக போட்டு வாங்க தமிழ் நாட்டின் பெரிய வாசகர் தளமான ஆனந்த விகடனை ராஜு முருகனும், சசியை இழந்த பெருந்துயரை தனது கவிதைத் தொகுப்புக்கள் ஏதாவதை கலாப்பிரியாவும் பயன்படுத்த இந்த ஆருத்ராவும் மறுகி உருகிக் கவலை வாங்கிக் கொண்டதை பதிவில் இடக் கூடாதா என்ன?.
ஊரே உறங்கிக் கொண்டிருக்க, மூன்றாவது சாமத்தின் நள்ளிரவொன்றில் படுக்கை தொலைத்து பதிவு எழுத வேண்டிய துர்ப்பாக்கியம் நமக்கு வாய்த்திருக்கின்றது .உங்களுக்கு தேவையான எதனையும் முழு விருப்பத்துடன் பற்றிக் கொள்வதற்கும், தேவையற்ற தருணத்தில் விட்டு விலகவும் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கின்றது. முழுச் சுதந்திரத்தின் நியாயாதி,அநீதிகள் ஒருவருக்கு ஆழ்ந்த மனத் துயரத்தையும், மற்றவருக்கு அலட்டிக் கொள்ளாத மனப்பக்குவத்தையும் அளித்திருக்கின்றது.
பாண்டி ஆட்டத்தின் முதல் உப்பை
நான் கடவுளுக்கு கொடுத்தது கிடையாது.
முதல் பல் விழுந்த போது
சாணத்தில் பொதிந்து சொர்க்கம் நோக்கி
எறிந்தது கிடையாது.
ஒரே ஒரு முறை தான் நூலில் பக்கத்திற் கொன்றாய்.
விட்டில் பூச்சிகளை கட்டி பரிதவிக்க விட்டிருக்கின்றேன்.
இருந்தும் மருத மர நிழல்கள் மீட்டாத
தண்டவாளச் சோகங்களை
எனக்கேன் நிரந்தரித்தாய் சசி- கலாப்பிரியா
இங்கே மனிதர்கள் தங்களுக்கான மொத்த மனச் சாட்சிகளையும் தொலைத்துப் பல நாட்களாகின்றது.
கல்லூரியின் தல விருட்சமான தேமாக்களுக்கு உயிர் வலித்துயரமும், நீண்ட பெரு வழித் துயரமும் புரிந்து கொள்ள முடியுமெனில் நான் தேமாக்களுடன் உரையாடத் தலைப்படுகின்றேன்.தேமாக்கள் நான் சொல்வதை,உணர்வதை மௌனமாக தலையாட்டிக் கேட்க அங்கு வீசும் மென் காற்று உதவி புரிந்து போகட்டும்.
நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்.
மேடைக்கு ராஜா போல் வேசங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது?.
நெற்றியில் ஒற்றை திருநீற்றுடன் சைக்கிள் இல்லாத காலத்தில் தோளில்புத்தகப் பையுடன் எங்கள் வீதி வழியாக செல்லும் தேமாவை 2002 இல் கூட எனது அன்னை நினைவில் வைத்து கேட்டார்கள்.
“கல்வயல் கறுத்தப் பிள்ளை ” என்று அவளால் நினைவு கூரப்பட்டு வினவப்பட்ட உன்னை காலவழியில் தொலைத்த கிளிஞ்சல்களாக காலம் ஆக்கி வைத்திருக்கின்றது.
ஒரு நள்ளிரவு சிவராத்திரியாகிக் கொண்டிருக்கப் போகின்றது காலைவரை!.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000
உங்கள் கடந்த ஞாபக மீட்டல் அருமை.வாழ்த்துக்கள்.கொக்குவில்லில் உள்ள எனது நண்பன்
அடிக்கடி பயன்படுத்தும் பழமொழி:-
”தான் போகக் காணேல்லை மூஞ்சூறு விளக்குமாற்றையும் கொண்டிழுத்ததாம்”
எதிர்காலத்தை பற்றிய கனவை விட,கடந்த கால
நினைவுகளே சுகமானது என்பதை உங்கள் பதிவு
சொல்கிறது.
உங்கள் நன்றியுணர்வு உங்கள் நண்பனை
பெருமைகொள்ள செய்யும்.
By: E.Jeyachandran on செப்ரெம்பர் 8, 2012
at 3:36 முப
இளமை அனுபவங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவை இனிய நாட்கள். மறக்க முடியாதவை.
By: Dr.M.K.Muruganandan on செப்ரெம்பர் 10, 2012
at 4:30 பிப
கலாம் சொல்லிவிட்டார் என்பதற்காக தேவையல்லாத கனவுகள் வளர்த்துக்கொள்ளக்கூடாது.
காதல் என்ற சொல்லுக்கு அன்பு என்று கருத்து என எங்கோ படித்த நினைவு.மனிதர்களிடம் அன்பு இருக்கிறதா இப்போது ?,,,,,,,
By: jv on திசெம்பர் 10, 2012
at 12:50 முப