ஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 16, 2012

எனக்கான பழத்தோட்டம்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அழகான மைதானம். ஒரு கரையில் பிரதான நெடுஞ் சாலை. மறுகரையில் தொடர் வகுப்பறைகள் . உயர் தர வகுப்பினரின் இரு மாடிக் கட்டிடமான H BLOCK இற்கு அணித்தான மற்றைய இரு மாடிக் கட்டிடத்தின் மேற் பரப்பில் எழுதப்பட்ட வாசகத்தில் OSA என்று குறிக்கப் பட்டிருக்கும். OSA வை விரிபுபடுத்தினால் OLD STUDENT ASSOCIATION -பழைய மாணவர் சங்கம்.

1976ம் ஆண்டுகளில் முன்னைய பழைய மாணவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டு நாம் உட்கார்ந்து வாங்கு தேய்த்து வெளியேறி நாமும் பழைய மாணவராகி போய்விட்ட நிலையில் இன்றளவும் கல்விச் செல்வம் வழங்கி வருகிறது அந்தக் கட்டடம்.

அதன் தொன்மைக்கு நிதி அளித்தவர் எவர்? கல் அரிந்த உழைப்பாளி- திட்டமிட்ட செயலாளர், பெருமட்டம்- சிறுமட்டம் என பலபேரின் உழைப்பும், கனவும் ஒருங்கு சேர்ந்த நிலைப்பாடு, எண்ணம்-செயலாக்கம் எல்லாவற்றையும் எண்ணும் போதில்

“யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பொண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் ப்ராங்க்போர்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழி தவறி
அலாஸ்கா வந்துவிட்ட
ஒட்டகம் போல் ஒஸ்லோவில்,

என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?

பாட்டனார் பண்படுத்தி
பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழிய விட்டு
தொலை தேசம் வந்தவன் நான்.
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத்தோட்டம்?

தன்னுடைய வரிகளால் தன்னையே சாடுவது போன்ற ஈழக்கவி வ .ஐ.ச ஜெயபாலனின் கவிதை எங்களையும் குறிவைத்து தாக்குகின்றது.

பழைய மாணவர்கள் சங்கம் குறித்தான ”பழைய மாணவர் சங்கமும் உளுந்து வடையும்” அங்கதத்திற்க்கும் அவசரத்திற்க்கும் எழுதப்பட்டதல்ல. வெறுமனே கேலி பேசி அனைவரின் மனத் தாங்கல்களுக்கும் உள்ளாகி ஒரு பதிவை வெளிக்கொணர்வது அதன் நோக்கமாக இருக்கவில்லை. எங்களால் ஆரம்பிக்கப்பட்டு எங்களுக்குள் அழிந்துவிட்ட பழையமாணவர் சங்கத்தை விமர்சித்தது சுய விமர்சனம் தான். அந்த சுயவிமர்சனமானது எங்களை நாங்களே முள்வேலியில் தூக்கிக் கொழுவி, தயவு தாட்சணியம் பாராது அடித்து நொறுக்கி பிழைகளையும் களைகளையும் கண்டுணர்ந்து “நாங்கள் காயப்பட்டு நின்றதை மற்றவர்களும் படக்கூடாது” என்ற நோக்கில் வரையப்பட்டது தான்.

எங்களுடைய நிர்வாண நிதர்சனங்கள் வெட்கமானவை. வெளியே சொல்லக் கூடாதவை. அழுக்காறு மிகுந்தவை. காலையில் இருந்து மாலை வரையான எமது உழைப்புக்கள் எனது,தனது என்பதான குறுகிய வட்டத்திற்குள் முடங்கி விடுபவை. சல்லிக் காசுகளை சரிபார்த்து பத்திரப்படுத்தி கணக்குப் பண்ணும் கணக்காளர்களாக,காலத்தின் இழுப்புக்கெல்லாம் இசைந்தோடி வாழும் நாம், நாளை பேரனுக்காய் எவன் வைப்பான் பழத் தோட்டம்? என ஏங்கி நிற்கப் போகின்றோம். யாராவது எங்களுக்காக எதனையும் செய்யமாட்டார்களா? என்பதாக அலைகின்றன புலம்பெயர் பொழுதுகள்.

சாவகச்சேரி இந்துக்கல்லுாரியில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியை தனது ஓய்வூதியப் பணம் முழுவதையும் “ஆதார நிதிப் பங்களிப்பாக” தந்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்டதே ‘ ‘கல்விக் கண்” அறக்கட்டளை. லண்டனை தளமாக கொண்டு இயங்கும் “கல்விக்கண்” நண்பர் குழாமொன்றினால் இயக்கப்படுகின்றது.கல்வி தான் மனிதகுலத்தின் அறிவுக்கான திறவுகோல் -அதனூடாக உற்று நோக்கிப் பெற்றுக் கொள்ளப்படும் அனுபவங்களே பாடங்களாகவும், அறிவுறுத்தலாகவும் அமைந்து நேர்வழி நடக்க உதவுகின்றன. கல்விக்கண் சரியான பெயரிடல் என்பதோடு அமைந்து விடவில்லை, அதனது செயற்பாடுகள்.

மூன்றாம் உலகநாடுகளின் பொருளாதார வசதி வாய்ப்புகள் மிகவும் அருகியவை, குறைவானவை.ஈழத்தின் போர் சூழல் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டி விட்டிருக்கின்றது. அதுவும் போர்ச்சூழலில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நிர்க்கதியான நிலையில் உறவினர், தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி கல்வி கற்கும் இளைய மாணவ சமுதாயத்தினரின் கற்றல் தேவைகளை கவனத்திற்கெடுத்து கல்விக் கண்ணின் செயற்பாட்டுத் திட்டங்கள் வரைபு படுத்தப்பட்டுள்ளன.அவர்களுக்குத் தேவையான காகிதாதிகள் புத்தகங்கள்,பாடசாலை வசதிக் கட்டணம்,பாடசாலைக்கு வெளியேயான கற்கை நெறிகளுக்கான கட்டணங்கள்,பாடசாலை உபகரணங்கள் எல்லாம் பெரு மனதோடும், பெருவிருப்போடும் கல்விக் கண்ணால் உவந்தளிக்கப் பட்டிருக்கின்றன.

பல தொண்டு நிறுவனங்கள் பல்வேறு செயற் திட்டங்களுடன் ஊழியர்களுடன் மக்களின் வாழ்வாதார நிலைகளுக்கான உதவிகளுடன் தொழில்பயிற்சி ,நிதிப்பங்களிப்பு ஆற்றி வருகின்ற நிலையில் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டு தனியே வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்ற, பயில்கின்ற மாணவர்களை நினைவிலுருத்தி (தென்மராட்சி மாணவர்களை முதன்மைப் படுத்தி) செயற்திட்டங்கள் வகுத்து திடமாக அடியெடுத்து வைத்துள்ள கல்விக் கண் அதனது ஐந்தாண்டுத் திட்டத்தில் பல மாணவர்களை இணைத்து பயனுற வைக்கப் போகின்றது. முதல் கட்டமாக 72 மாணவர்களையும் தற்போது 92 மாணவர்களையும் கொண்டு கல்விக்கண்ணின் செயலாக்கம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் தமது இளம் பராயத்தை கழித்து விட்டு இன்னும் தாயக உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர் குழாம் ஒருங்கு சேர்ந்து வறுமைக் கோட்டிற்க்குள் வாழும் மாணவர்களின் கல்விக் கண் திறக்க ஆரம்பிக்கப்பட்டதான கல்விக் கண் அறக் கட்டளை செயற்திட்டங்கள் தொடர்பான வரைபுகளை ஆருத்ரா தரிசனம் முகநுாலின் ARUTHRA THARISANAM GROUP பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

Contact Address : 98A,Highland Road
Northwood.HA6 1JU
MIDDX
UK.

kkalvikan@gmail.com-Contact email

மிகத் தெளிவான செயன் முறைத் திட்டங்களை தன்னகத்தே   கொண்டு,   எதிர் காலத்தில்  மாணவர்களின்   கனவை   நகர்த்திச்  செல்லும் வலுவும் உணர்வும்   “ஒன்று சேர்ந்த நண்பர்” குழாத்தில் காணப்படுகின்றது.

கல்விக் கண் அறக்கட்டளையால் இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களது மேற்ப்பார்வையில் செயற்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாணவர் மத்தியில் நிலவும் குறை குற்றங்களை கண்டுணர்ந்து கொள்ளும் வகையிலான மாதாந்த ஒன்று கூடல்கள் பணியாளர்களால் நிறைவேற்றப்பட்டு, அடுத்து வரும் காலங்களில் மேலும் சிறப்பாக நடந்தெய்துவதற்க்கான சாதகங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

மிக அண்மையில் தாயகம் சென்று திட்டப் பணிகளை திறம்பட ஆற்றி கல்விக் கண் அறக்கட்டளையின் நிறுவக நிர்வாகத்தை கவனித்து வரும் நண்பர் இது குறித்தான தகவற் பெட்டகத்தை தந்துதவி இருந்தார்.மாணவர்களின் பெயர் விபரங்கள்,செயலாக்கப் பணி தொடர்பான விபரங்கள்,கொள்கை திட்டமிடல் தொடர்பான அறிக்கைகள் தகவற் பெட்டகத்தில் அடங்கி உள்ளன.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் அனைத்துலக நிர்வாகிகள் சந்திப்பு கல்லூரியின் அருணாசலம் அரங்கில் பாடசாலை அதிபர் திரு.கைலாயபிள்ளை அருணாசலம் அவர்கள் தலைமையில் கடந்த மாதம் இடம் பெற்றது. பழைய மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாத தேவையாக உருவெடுத்திருப்பதாகவும் ஐரோப்பாவில் இயங்கி வரும் மூன்று பழைய மாணவர்சங்கங்கள் மிகத் திறம்பட பங்களிப்பு செய்து வருவதாகவும் குறிப்பிட்ட பாடசாலை அதிபர் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் செயற்திறனையும் ஆதரவையும் உவப்பாக நினைவு கூர்ந்ததாக நண்பர் குறிப்பிட்டார். இவ்வேளையில் சாவகச்சேரி இந்துக்கல்லுாரியின் லண்டன் பழைய மாணவர் சங்க தலைமை நிர்வாகத்தினரை ஆருத்ரா தரிசனம் மனதார வாழ்த்திக்கொள்கின்றது.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மிக நேர்த்தியான ஐரோப்பிய கட்டடக்கலை பாரம்பரியத்துடன் அழகாக வடிவமைக்கப் பட்டிருப்பதாகவும், கட்டடங்களை கட்டும் போது குறுக்கிட்ட பெரு மரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு கனிஷ்ட பாடசாலை அமைந்தததாகவும் நண்பர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பெருமளவு தகவல்கள் புகைப்படங்கள்,அதிபரின் கடிதங்கள் இந்த செய்திப் பரிமாற்றத்திற்காக ஆருத்ரா தரிசனத்துக்கு தந்துதவப்பட்டன.

மிக மிக இக்கட்டான தருணங்களில் புலம் பெயர் தமிழர்களின் உணர்வு பூர்வ ஒன்று கூடல்கள், பங்களிப்புகள் லண்டன் மாநகரிலே எழுச்சியுடன் வடிவமைக்கப்பட்டு செயலாக்கம் கண்டன. அறிவும், ஆக்கமும் இணைந்த செயல் முறைத் திட்ட வடிவங்கள் நேர்த்தியாக நிகழ்த்திக் காட்டப்பட்டதாக தரவுகள் எடுத்து காட்டுகின்றன.

ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாததை ஒரு புகைப்படம் வெளிப்படுத்தி விடும் என்பார்கள்.கட்புலனின் சொரூப விளக்கம் (visual) ஆயிரம் சேதி சொல்லும்.

சாவகச்சேரி இந்துக்கல்லுாரி கனிஷ்டபிரிவு  அதிபரின்  உதவிகோரல் கடிதம்  இது. கனிஷ்டபிரிவு  மாணவர்களுக்கான  ஆங்கிலக்கற்கை நெறிக்கான   செலவினை வெளிநாட்டு வாழ்  அன்பர்கள்  ஏற்றுக்கொண்டு  உதவுமாறு  கேட்கும்    கடிதம் உங்கள்  பார்வைக்கு  வைக்கப்பட்டுள்ளது. மனமுவந்து  தாராள  நிதி  வழங்கும்  வள்ளல்கள்  பாடசாலை   அதிபருடன்  தொடர்பு  கொள்க.  கடிதத்தை   மீள்  அழுத்தி  பெரிதாகப் பார்க்கலாம்.

”கல்விக்கண் ” மேலும் சிறப்புற்று தகமையுடன் செயலாற்றி ஏழை மாணவர்களின் கனவுக் கல்வியை அவர்களுக்கு நிதர்சனமாக கிடைக்க செய்ய செயலாற்றி வருவதற்காக தென்மராட்சிப் பகுதி வாழும் எம்மவர்கள் உங்களை ஆண்டாண்டு காலம் நினைவில் வைத்திருப்பார்கள்.

எழுத்தறிவித்தவன் இறைவன்  ஆவான் .

வன்னியில் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி எனதுஅப்பா,அம்மா மற்றும் சகோதரர்கள் இருவரும் அங்கு உயிர் பிரிந்தனர்.வன்னியில் எமது குடும்பம் ஓரளவு வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வந்த குடும்பமாகும். கல்வியில்எனக்கு நல்ல பிடிப்பு. நான் படித்து ஒரு ஆசிரியராக வரவேண்டும் என ஆவல் கொண்டு என்படிப்பைத் தொடர்ந்தேன்.ஆயினும் வன்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டினால் என் அப்பா, அம்மா மற்றும் இருசகோதரர்களைப் பறி கொடுத்தேன். எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. படிப்புக்குமுற்றுப்புள்ளி வைக்கலாமா? என யோசித்தேன்.

அச்சமயத்தில் தான் அறவழி நிறுவனத்தினரின் தொடர்பு எனக்கு கடவுளின் சித்தத்தினால்கிடைத்தது. லண்டனில் இருக்கும் அண்ணாமார்களின் உதவியுடன் அமுல்படுத்தப்படும்கல்வித்திட்டத்தில் நான் கடவுளின் பாக்கியத்தால் இணைக்கப்பட்டேன்.

இப்போது நான் அறவழி நிறுவனத்தினரின் ஆதரவுடன் சாவகச்சேரி கல்லூரி ஒன்றில்தரம் 09 ல் கல்வி கற்று வருகின்றேன் எனக் குறிப்பிட்டார். நுணாவிலைச் சேர்ந்த மாணவர் ஒருவர்.

எங்களுக்கான   பழத்தோட்டங்களை  விரும்பி  நாங்கள்   ஆக்கி  வைப்போம்!

—————————————————————————————————————————-


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: