மார்க்கோனிக்கும், தோமஸ் ஆல்வா எடிசனுக்கும் என்ன வகையான உறவுமுறை நீடித்தது என்பதெல்லாம் தெரியாது. அவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்களா? அதுவும் தெரியாது எனக்கு. மார்க்கோனி வானொலிப்பெட்டியை கண்டுபிடித்தவர் என்பதும், தோமஸ் ஆ.எடிசன் மின்சாரத்தை கண்டுபிடித்தவர் என்பது மாத்திரமே அச்சிறுவயதில் எனக்கு தெரிந்திருந்தது.
எங்கள் வீட்டிலிருந்த ஒரு வானொலிப்பெட்டி அவர்கள் இருவருக்குமான நெருங்கிய உறவை அடிக்கடி வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.
மார்க்கோனியை தொட்டால் எடிசன் அடித்தார். அதை வானொலிப்பெட்டி என்றழைப்பதை விட பாட்டுப்பெட்டி என்றழைப்பதே மேலானது. அவ்வளவு பருமனானதும் பாரமானதுமான பெட்டியை நாங்கள் வானொலி கேட்பதற்காக பயன்படுத்தி வந்தோம் என்பதும் அது அந்தக்கால பிலிப்ஸ் வால்வு றேடியோ வகையை சார்ந்தது எனவும் காதுக்கு இனிய உணவாக இசையை தருவது மட்டுமன்றி மூக்கிற்குப் பிடிக்காத தீய்ந்து போன வாசனையொன்றையும் அது தந்து கொண்டிருந்ததாகவும் இது நடந்த காலப்பகுதி 1975 – 1980 வரையானது எனவும் ஏகப்பட்ட நினைவலைகள் எனக்கு.
டிரான்சிஸ்டர் என்ற ஒன்று கண்டு பிடிக்காத காலத்திற்கு முந்தைய வானொலிப்பெட்டிகளில் இரண்டு மூன்று வால்வு போன்ற ஒளிரும் சாதனங்கள் இணைந்து வானொலியை இயக்கியதோடு தீய்ந்து போன வாசனையையும் தந்து கொண்டிருக்கும். அத்துடன் எங்கள் வீட்டிலிருந்த அதே வகைப்பாட்டுப் பெட்டியில் மின்ஒழுக்கு, கைபிடித்து திருகும் கட்டை வரை வந்து தொலைத்ததால் மார்க்கோனியை தொட்டால் எடிசன் அடித்துக்கொண்டேயிருந்தார்.
இப்படியாகப்பட்ட அந்த வானொலியூடாகவே சனிக்கிழமை இரவு 9.30 க்கு ஒலிபரப்பாகும் நாடகங்களையும் இலங்கை வானொலியின் வர்த்தக சேவைகளையும் இந்தியாவிலிருந்து ஒலிபரப்பாகும் “தேன்கிண்ணம்” திரையிசைப் பாடல்களையும் காது புளிக்காமல் கேட்டுக்கொண்டேயிருந்தோம். அது ஒரு சுகானுபவம்.
எங்கள் வீட்டிற்கு மின்சார இணைப்புக் கிடைத்தது அதிசயம் என்றால் அந்தப்பாட்டுப்பெட்டி ஊடாக இசை பருகியது பேரதிசயம். நடராஜசிவம் என்ற வானொலி அறிவிப்பாளர் சமூக அரசு-இராசதானி நாடகங்களில் தனது சிம்மக்குரல் மூலம் சிவாஜியின் குரலை ஒத்த பிரமிப்பை ஏற்படுத்துவதும், சில்லையூர் செல்வராசனின் வாத்சல்யம் மிகுந்த தோழமை வணக்கத்துடன் மக்கள் வங்கியின் தணியாத தாகம் தொடர்நாடகம் திரைப்படப்பிரமிப்பை ஏற்படுத்துவதுமாக அந்தப்பாட்டுப்பெட்டி ஊடாக வேறொரு கனவுலகம் விரிந்தது.
ஜோக்கிம் பெர்னான்டோ, மயில்வாகனம் சர்வானந்தா, கமலினி செல்வராஜன், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீத்,ராஜேஸ்வரி சண்முகம் போன்ற அறிவிப்பாளர்களும் மரிக்கார் ராமதாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உப்பாலி செல்வசேகரன் ஆகியோரின் “கோமாளிகள்” நாடகம் என நிகழ்ச்சிகளும், சௌந்தரராஜன்- சுசீலாவும் அந்தப்பாட்டுப் பெட்டியூடாகவே எங்கள் வீட்டிற்குள் இறங்கிக்கொண்டிருந்தனர்.
“அத்தானே அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே? இருமனம் ஒரு மனதாகும்.திருமணம் எப்போ தாகும்?” என்ற சில்லையூர் செல்வராசனின் மக்கள் வங்கிக்கான விளம்பரப்பாடல் இன்றளவும் காதுக்குள் இசைத்துக்கொண்டிருக்கின்றது.
சிறுவயது என்பது கவலைகளற்ற காற்றிலேறி கனவு காணும் வயது. எல்லாவற்றையும் இயல்பாகவும் இசைவாகவும் பார்க்கக்கூடிய மகிழ்ச்சிப்பருவம். அந்தவயதில் அந்தப்பாட்டுப் பெட்டி மிகப்பெரிய கனவுலகத்தை எங்களுக்குள் விதைத்துக்கொண்டிருந்தது.
இலங்கை பூமத்திய கோட்டிற்கு அண்மையில் இருக்கும் நாடென்பதும், வருடத்தின் ஒரு பகுதிக் காலம் வடக்கிலிருந்து தெற்காகவும், மீதிக்காலம் தெற்கிலிருந்து வடக்காகவும் பருவப்பெயர்ச்சிக் காற்று வீசுவதாகவும் சமூகக்கல்வி ஆசிரியர் கற்பித்த தருணத்தில் அது எனக்கு மிகப்பெரும் உண்மையாகப்பட்டது. வருடத்தின் முற்பகுதி முழுவதும் அங்கிருந்து இங்கு வீசும் காற்றால் தேன்கிண்ணம் மிகத்தெளிவாகக் கேட்பதும், மீதிக்காலங்களில் தேன்கிண்ணம் எங்கோ கொட்டிப்போய் கேட்காமல் விடுவதும் உண்டு.
தேன்கிண்ணத்தை மிகச்சரியாக பிடிக்கப்போன ஒரு கணத்தில் தான் மின்ஒழுக்கின் (எடிசனின்) தாக்குதலுக்கு உள்ளானேன். ஒரு சிறிது ஆகர்ஷம் என்னை கவர்வதாகவும் சிறுஅதிர்வு என்னை இயக்குவதாகவும் உணர்ந்த கணத்தில்” ஐயோ” என்ற அலறலில் என்னைத் தொட்ட அன்னைக்கும் பாசப்பிணைப்பு மின்னிணைப்பாக தொடர்ந்து ….. பெரிதாக ஒன்றும் ஆகவில்லை.
இத்தாலியில் பிறந்த மார்க்கோனியும், அமெரிக்காவில் “அல்” என்று அழைக்கப்பட்டு எங்கள் நான்காம் வகுப்பு புத்தகத்தில் கோழிமுட்டை அடைகாத்த தோமஸ் ஆல்வா எடிசனும் எங்கள் பாட்டுப்பெட்டி ஊடாக உறவினர்களானார்கள். எங்கள் வீட்டில் பிலிப்ஸ் பாட்டுப்பெட்டி இசை வழங்க எங்கள் பெரியம்மா வீட்டில் “நஷனல்-பனசொனிக்” வகை ரேப்-றெக்கோடர் அறிமுகமாகி பதிவு இசையை பவனி வரச்செய்து கொண்டிருந்தது. பாட்டுப்பெட்டிக்கு இரண்டு பக்கமும் இரு திருகு-கட்டைகளும் நான்கு அமத்துக்கட்டைகளும் இருந்தனவென்றால், ரேப்-றெக்கோடருக்கு வேறுவித தொழில்நுட்பத்துடன் தலையின் மேற்பகுதியில் திருகு அமத்து கட்டைகளும் இருந்தன. சிலர் அவற்றிற்கு அழகான உடை கூட தைத்துப்போடுவதுண்டு. எனினும் எங்கள் பாட்டுப்பெட்டி நிர்வாண சாமியார் வகையைச் சார்ந்தவராக பற்றற்று உடையணிந்து கொள்வதில்லை.
சாவகச்சேரி நவீன சந்தையின் மேல்மாடி கட்டடத்தொகுதியில் ஒரு றெக்கோடிங்-பார் இயங்கி வந்தது. என் வயதொத்த என் பெரியம்மா மகன்- ஒன்றுவிட்ட சகோதரர் புதுப்பாடல்கள் வெளிவந்த சில நாட்களில் றெக்கோடிங்-பார் செல்வதும், அவற்றை கசற்றில் பதிவுசெய்து வருவதும் என்னை அழைத்து புது இசையை பருக வற்புறுத்துவதும் நடக்கும். முதல் தரம் கேட்கும் போதில் அந்நிய இசையை கேட்பது போலவும், பலதடவை வானொலியில் ஒலிபரப்பான பின் கேட்டாலே எனக்கு பிடித்தமானவையாக அவை தென்படுவதாகவும் சொல்லியிருந்தாலும், தனது மனத்திருப்திக்கு என்னை அழைத்து பாட்டு போட்டுக்காட்டுவதை அவர் விடவில்லை. எங்கள் இருவருக்கும் பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கலாம்.
அவர்கள் வீட்டிலேயே BoneyM என்ற “ஒலியிழை- கசற்” காணக்கிடைத்தது. மூன்று அரைகுறை ஆடை நங்கைகள் ஒரு கறுப்பின இளைஞனுடன் பின்னிப்பிணைந்திருப்பதான முகப்புக் கொண்ட ஒலியிழை பார்ப்பதற்கு சங்கடம் தந்தாலும் கேட்பதற்கு சங்கடம் தரவில்லை. அழகான இசைக்கோர்வைகளும், சந்தத்திற்கு இசைவான சொற்கோர்வைகளும், இசை என்பது மொழி கடந்தது என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தது.
76ம் ஆண்டுகளில் மேற்குலகை இசையால் வசீகரித்த BoneyM குழுவினர் மேற்கு-ஐரோப்பிய கிழக்கு-ஐரோப்பிய நாடுகள் தோறும் வரவழைக்கப்பட்டு, மேடை நிகழ்ச்சிகள் TV SHOW க்கள் என நடைபெற்று பெரும் ரசிகர் பட்டாளம் கூடி நிற்க கௌரவிக்கப்பட்டார்கள். பெருமளவான இசை ரசிகர்கள் திரண்டார்கள்.
“BY THE RIVERS OF BABYLON” மேற்குலகின் தேசிய கானம். YEAH YEAH என்ற HUMMING அந்தக் காலத்தில் படுபிரசித்தம். இப்போது கேட்டாலும் மெய்மறக்கும் அற்புத இசை.
ஜமைக்கா நாட்டு இசைக்குழுவால் இயற்றி இசை அமைக்கப்பட்ட இந்தப் பாடல் ஜெர்மானிய இசை நிறுவனம் ஒன்றால் தெரிவாகி வெளியுலகில் பிரசித்தமானது. வணிகமாக்கப்பட்டது. பெரும் வரவேற்ப்பை பெற்றுக் கொண்டது.
அந்த ஒலியிழையில் அடங்கி இருந்த
1. BY THE RIVERS OF BABYLON
2. DADDY COOL
3. RASPUTIN
பாடல்களைத் தேடி அலைந்த பொழுதுகளில் தற்போது ஓளியிழைகளாகக் கிடைத்தது ஆனந்தப்பரவசம். பல மில்லியன் ரசிகர்கள் இன்றளவும் அந்த ஓளியிழைகளை (VIDEO) பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.அந்தப் பாடல்களின் ஒளியிழையை பார்ப்பதற்கு பாடல்களின் மீது கிளிக் பண்ணவும்.
By the rivers of Babylon, there we sat down
Ye-eah we wept, when we remembered Zion.
By the rivers of Babylon, there we sat down
Ye-eah we wept, when we remembered Zion.
When the wicked
Carried us away in captivity
Required from us a song
Now how shall we sing the lord’s song in a strange land
When the wicked
Carried us away in captivity
தென்னிந்திய தமிழ் திரைப்பாடல்களிலும் எண்பதுகளில் BoneyM இனால் உருவாக்கப்பட்ட இசைக்கோர்ப்புக்கள் தெரிந்தோ தெரியாமலோ இணைக்கப்பட்டிருந்தன. இந்தப் பாடல்களின் இசையைப் பருகும் தருணங்களில் இவை தமிழ்பாடல்களிலும் பயன்படுத்தப்படடிருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
Rasputin பாடல் A.E.MANOKARAN இன் பொப்பிசை ஒன்றிலும் “வா வா ரஸ்புடின் கோழி ஒன்று நான் தருவேன்” என இசைக்கப்பட்டது. Rasputin இனிய துள்ளலிசை. ஆண் பாடகரின் பாடல், நடனம், உடல்மொழி பிற்காலங்களில் புகழ்பெற்ற மற்ற இசைக்குழுக்களுக்கு ஆதிமூலம். இந்தப் பாடலின் இசைக்கோர்ப்பு அலாதியான சுகப்பரிச்சியம்.
She’s crazy like a fool
What about it Daddy Cool
She’s crazy like a fool
What about it Daddy Cool
I’m crazy like a fool
What about it Daddy Cool
BoneyM இன் ஆரம்பம்.
1975 ம் ஆண்டில் உருவான DISCO இசைப்பண்பின் மேலாதிக்கம் ரசிகர்களின் கவனம் அதன் மீது விழ ஏதுவாயிற்று.ஜேர்மன்நாட்டு இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான FRANK FARIAN தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டபின்பு 1976 இல் மூன்று பாடகிகளையும், ஒரு பாடகரையும் இணைத்து BoneyM உருவானது. ஆண்பாடகரானBOBBY FARELL மிகச் சிறப்பான நடனக்கலைஞராக NETHARLAND நாட்டில் திகழ்ந்தவர். BOBBY FARELL இனால் பாடப்பட்டDADDY COOL பாடல் மூலம் BoneyM ஐரோப்பா அளவில் மிகச் சிறந்த இசைக்குழுவாகவும் BoneyM இசைத்தட்டுக்கள் வெளியிட்ட நான்கு வாரங்களுக்குள் 2 மில்லியன் விற்கப்பட்டு புகழ்பெற்ற இசைக்குழுவாகவும் தன்னை இனங்காட்டியது.
DADDY COOL, BY THE RIVERS OF BABYLON பாடல்கள் மூலம் மிகச் சிறப்பான விற்பனை சாதனையை எட்டிய BoneyM சோவியத் ரஸ்யாவிலும் மெதுவாக புகழடையத் தொடங்கியது. Rasputin பாடல் வரிகள் சோவியத் ரஸ்யாவின் அரசியல் நிலவரங்களை கேலி பண்ணியதாக அமைந்ததால் அங்கு தடை செய்யப்பட்டது. 75 ம் ஆண்டுகளில் BoneyM, ABBA இசைக்குழுக்களின் பிரசன்னமும்,பிரசித்தமும் இன்றளவும் இசை ரசிகர்களால் நினைவுகூரப்படுவதோடு DADDY COOL பாடல் YOUTUBE மூலம் 20 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
RA RA RASPUTIN
Lover of the Russian queen
There was a cat that really was gone
RA RA RASPUTIN
Russia’s greatest love machine
It was a shame how he carried on
DADDY COOL Rasputin பாடல்களை இசைத்த BOBBY FARELL ஒரு இசை நிகழ்ச்சிக்காக ரஸ்யாவின் St.Petersberg சென்றிருந்தவேளையில் தனது அறுபத்தோராவது வயதில் 2010 ம் ஆண்டு ஹோட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். Rasputin பின் விளைவா? என்று ஐயம் தெரிவிக்கப்படுகின்றது. 76 ம் ஆண்டுகளில் உருவான BoneyM இசைக்குழு 1986 ம் ஆண்டு கலைக்கப்பட்டு இசைக்கலைஞர்கள் பிரிந்து சென்றார்கள்.
வாசகர் கவனத்திற்கு:-ஆருத்ராவின் பாட்டுப்பெட்டி மேலும் பாடும்.
**************************************************************************************
நல்ல நினைவுகளை சுவாரசியமாக தந்துள்ளீர்கள்….. வாழ்த்துகள்.
By: madurai saravanan on செப்ரெம்பர் 25, 2012
at 2:29 முப