ஒரு பியர் என்பது மதுசாரத்தின் அளவிடலில் மிகக்குறைந்த அளவு கொண்ட “கூறுகெட்ட கழுதை” ரகத்தை சேர்ந்ததாகவும், இதைக்குடித்தால் குடிமுழுகிப் போய்விடுவதில்லை என்ற வாதத்தை முன்வைக்கும் பெருங்குடிமகன்களும், நிறைய குடித்து சிறிது தள்ளாட்டத்துடனும் அகலக்கால் வைக்கும் அவலப்பொழுதுகளை எண்ணிப்பார்த்து பியர் தண்ணிக்கு நிகரானதில்லை என்ற வாதப்பிரதி வாதங்களை முன்வைக்கும் என்னைப் போன்றவர்களுக்கும்
சந்தி சிரிக்கும் சங்கதிகளை பதிவாக்குவதில் “கூறு கெட்ட கழுதைதான்” முதலிடம் வகிக்கின்றது.
மிக மிக வெக்கையான நாட்களில் ஒரு ரின்னை உடைத்து வைத்துக்கொண்டு சந்திகளில் நின்று சரசமாடும் எம்மவர்களை நினைத்தால் ஏதோ பற்றிக்கொண்டு வருகின்றது. அந்த எம்மவர்கள் மெதுமெதுவாக கூட்டினின்றும் கழன்று ஒவ்வொன்றாக வந்து கூடுமிடம் சந்திகளாகவும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளாகவும் இருந்து சிலவேளைகளில் விரசமான வார்த்தையாடல்களாக பலமான சத்தங்கள் வெளிப்பரப்பிற்கு கொண்டுவரும் தருணங்களிலெல்லாம் நான் அவர்களை கடக்க நேரிடுகின்றது. விலத்திச் செல்ல முற்படுகின்றேன்.
இதையொத்த தருணங்களை எல்லாம் இங்கே தான் முதன்முதலாக காண்பதாக சொல்ல முடியாது. பெருங்குளம் சந்தியிலிருந்து கல்வயலுக்கு பயணிக்கும் பாதையில் இருந்த தவறணைகளிலும்,பெருங்குளம் சந்தியில் இருந்து மட்டுவில் வீதிக்கு இடம் மாறி தற்போது இப்போது இருக்கின்ற இடத்திலும் பலதடவை கள்ளுண்டு மயங்கி நிற்கும் “மாமனிதர்களை” கடந்து போகின்ற தருணங்களிலெல்லாம் குடி என்பது வெல்ல முடியாத பகையோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இங்கே தான் எல்லாம் கொட்டிக்கிடக்கின்றது. தேவையான பொழுதுகளில் எல்லாம் வாங்கி வைத்துக்கொள்வதற்கு ஏற்ப பணவசதியும் இருக்கின்றது. சுவிற்சர்லாந்தில் 8 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இரண்டு மடங்கு விலைகளில் கிடைத்த Red-Labelம், Black-Labelம், Remy-Martin களும் இன்று Tax-Free கணக்கில் பாதி விலைகளில் கிடைக்கின்றன. மிக அண்மையில் வீடு வாங்கிக்கொண்ட எம்மவர்கள் வீடுகளின் நிலக்கீழ்பகுதிகளில் Bar வைத்துக் கட்டிக்கொண்டு நேரே நண்பர்களை வீட்டிற்கு எடுக்காமல் தங்கள் சந்திப்புக்களை நிலக்கீழ்ப்பகுதிகளில் வைத்துக்கொள்வார்கள்.
ஸ்கண்டிநேவியா நாடுகளில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கு செல்லும் போதெல்லாம் சனி-ஞாயிறு பெரும் கொண்டாட்ட களமாக மாறிவிட்டிருப்பதையும், வெள்ளி பின் மாலைப்பொழுதுகளில் தொடங்கும் கொண்டாட்ட கலாச்சாரம் ஞாயிறு மதியம் முடிவுக்கு வருவதையும், இரண்டு மூன்று குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்ந்து அளவளாவி, சுதி சேர்த்து கதை கதைத்து கரியல் பொரியல் BARBIQUE சுட்டுண்ணும் கலாச்சாரத்தில் ஊறிப்போயிருப்பதையும் கண்டு கொள்ள முடிகின்றது.
இங்கே இது சரியெனவும் அது பிழையெனவும் வாதாடும் மனநிலையில் இந்தப்பதிவு முன்வைக்கப்படவில்லை.
சுவிற்சர்லாந்தில் BIER என்பது இங்கே இருக்கின்ற 26 பிரதேச இடங்களுக்கும் தனித்தன்மையான அடையாளமாக மாறிப்போயிருக்கின்றது. OKTOBER-FEST என்று அழைக்கப்படுகின்ற பெரும்கொண்டாட்ட களியாட்டம் தனியே பியரை முன்னிலைப்படுத்தி கொண்டாடப்படும் ஒருசந்தோசச்சாரலாக நினைவு கொள்ளப்படுகின்றது.
சூரிச்சில் LöwenBräu வும், BASEL நோக்கிப்பயணிக்கும் போது பெரிய அரண்மனை போன்ற தோற்றத்துடன் இயங்கி வரும் Feldschlossen, Hürlimann ம், CHUR நகருக்கென்றே Calanda Bierம் அந்தந்த நகர்களின் தனி அடையாளங்கள்.
2011ம் ஆண்டில் 4.63 மில்லியன் Hecto-Liter Bier இங்குள்ளவர்களால் குடித்து தீர்க்கப்பட்டுள்ளது. ஒரு தனிமனித நுகர்வு 57.9 Liter ஆக இருந்திருக்கின்றது. சுவிஸ்நாட்டின் BIER தொழிற்சாலைகளில் 2011ம் ஆண்டுக்கான பியர் உற்பத்தி 3.5 மில்லியன் Hecto-Liter களாக இருந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. (நல்லா சொல்றார்ய்யயயயயா டீடெய்லுலுலுலு)
ஓவ்வொரு பியரும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவது அதை புளிக்கவிடும் காலங்களில் ஏற்படும் வேறுபாடுகளையும் உட்சேர்க்கப்படும் வாசனைப்பொருட்களையும் பொறுத்ததாக அமைகின்றது.
சுவிற்சர்லாந்தின் மிகச்சிறிய மாநிலமான Appenzell என்ற இடத்தில் உருவாக்கப்படும் Appenzeller என்பது Aperetif வகையைச் சார்ந்தது. ஒரு விருந்து தொடங்குவதற்கு முன்னரான மிகச்சிறிய உணவு வகைகளுடன் பரிமாறப்படும் குடிவகைகள் Aperetif வகைகளாக அறியப்படுகின்றது.
Appenzeller என்ற குடிவகை மிக இரகசியமான தயாரிப்பு முறைகளை பின்பற்றி தயாரிக்கப்படுவதோடு அதற்குள் 42 வகையான வாசனைச்சேர்மானங்கள் அடங்கியுள்ளன. ஒரு விருந்தை முன்னெடுத்துச் செல்வதற்கு Aperetif வகையைச் சேர்ந்த Alcohol குறைந்த மென்குடிபானங்கள் முதலிடம் வகிக்கின்றன. இன்னென்ன குடிவகைகளுக்கு இன்னென்ன உணவுப்பதார்த்தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்களை பெருமளவான உணவுபரிமாறும் இடங்கள் பின்பற்றுகின்றன.
RED-WINE ற்கு ஒரு வகையான பதனிட்ட இறைச்சி வகைகளும், WHITE-WINE ற்கு சிலவகை பதப்படுத்தப்பட்ட பாற்கட்டிகளை, CHEESS களையும் பரிமாற வேண்டுமெனவும் அதுவே உவப்பானதாகவும் இருக்குமெனவும் வழிகாட்டுதல் தொடர்கின்றது.
OKTOBER-FEST என்று ஜேர்மனியின் München நகரில் கொண்டாடப்படுகின்ற இரவுநேர கொண்டாட்டத்தில் மிக மிகப்பபெரிய GLass களில் BIER ஐ திறந்து பரிமாறும் பெண் BAR-GIRLS ஐரோப்பிய பாரம்பரிய உடையில் வலம் வருவதைக் கண்டு கொள்ளலாம்.München கொண்டாட்டங்கள் வணிக வர்த்தக நோக்கங்களுக்காக சூரிச் வரை வந்து விட்டன. ஒரு வாரமாக சூரிச்சின் மத்திய புகையிரத நிலையத்தின் மேற்பகுதியில் OKTOBER-FEST கொண்டாடப்பட்டது.
இலங்கையர்கள் காலைகளில் அருந்தும் பானமாக தேநீரும் ஐரோப்பாவில் காலைகளில் மிக அருந்தும் பானமாக Espresso-Cafe ம் ஆகிவிட்டிருப்பதைப் போன்றே இரவு நேரங்களில் அருந்தும் போதை சமாச்சாரங்களில் BIER முன்னிலை வகிக்கின்றது.
பியரில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாகவும் அதை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது என்பதான கருத்துக்களை சிலர் வைத்திருக்கின்றார்கள். அவற்றினால் மிக மேலான பயன் ஏதும் இல்லை எனவும் பார்லி விதைகள் நொதிப்பதால் உருவாகும் பியரில் அதிகளவு ALCOHOL மாத்திரமே நிறைந்திருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. HELL, LaGER, DUNKEL-LAGER என்ற பியர் வகைகள் நொதித்த மாக்கரைசலை வடித்து பெறப்படுவதில் பின்பற்றும் முறைகளினை குறிப்பனவாகவே உள்ளன.
ஆரம்பத்தில் ஐரோப்பாவுக்கு வரகை தரும் ஆசிய நாட்டவர்களுக்கு பியரும் தண்ணீர்ப்போத்தலும் ஒரே விலைக்கு விற்பனையாவதைக் கண்டு குழம்பி, பியர் அருந்துவதற்குரிய காரணமாக அமைவதாக நம்மவர்கள் நகைச்சுவையாக குறிப்பிடுவார்கள். இங்கே வீதிகளிலோ பொது இடங்களிலோ யாரும் பெருமளவுக்கு BIER-TIN உடன் அலைவதில்லை.
புதிதாக வருகைதரும் எம்மவர்களுக்கு BIER-TIN “ஆண்மை”யின் அடையாளமாக ஆகிவிட்டிருப்பதாக நண்பர் ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். LONDON ன் TOOTING பகுதிகளிலும் “பியர் ரின் காவிகள்” உலவுவதாகவும் , தங்களுக்கு இலவசமாக பியர் தரவேண்டும் என அங்கு கடை வைத்திருக்கும் தமிழர்களை மிரட்டுவதாகவும் குறிப்பிட்ட நண்பர் அதை இந்த பதிவில் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைத்த போது அந்த கோரிக்கையை ஏற்க நான் மறுத்துவிட்டேன். பெருமளவு லண்டன் வாழ் தமிழர்களின் பகையைச் சந்தித்துக்கொள்ள நான் தயாரில்லை.
முன் பந்திகளில் ஸ்கண்டிநேவியா நாடுகளில் வெள்ளி பின்மாலைகளில் கொண்டாடப்படுவதாக குறிப்பிடப்படும் PARTY கலாச்சாரம் நான் நோர்வேயிலேயே தரிசித்திருக்கின்றேன். அதை நான் நோர்வே என்று குறிப்பிடாமல் ஸ்கண்டிநேவியா என்று குறிப்பிட்டது வீணாக யாரையும் வம்பிற்கு இழுக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் என்பதை “இதை இணை, அதை இணை” என்று கேட்கும் நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஓம் நாராயணா! வந்த வேலை முடிந்துவிட்டது.
சுவிட்சர்லாந்தின் பியர் தொழிற்சாலை ஒன்றின் “ஒளிப்பதிவு நிகழ்வை” காண்பதற்கு இங்கே அழுத்துங்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்