ஆருத்ரா எழுதியவை | ஒக்ரோபர் 13, 2012

சங்கப் பலகை.

பறவைகள் எவையும் தங்களுக்கென “பாஸ்போர்ட்” வைத்துக் கொண்டிருப்பதில்லை. அவற்றிற்கு “அடையாள அட்டை” என்ற ஒன்று கிடையாது. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்திற்கு பறந்து செல்வதற்கு கட்டற்ற சுதந்திரம் அவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போதெல்லாம் விமானப் பிரயாணம் பெரும் அலுப்பூட்டுவதாக மாறியுள்ளது. இங்கேயுள்ள விமான நிலையங்களில் எல்லாவற்றையும் அவிழ்த்துக் காட்டவேண்டியுள்ளது. அதைப் பார்ப்பதற்கோ, இவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள் என்று பெரும் வியப்பு எனக்கு. கொண்டு போகும் பைகள், மருந்துப்பொருட்கள், அலங்காரப்பொருட்கள் எல்வாவற்றையும் தோண்டித்துருவி ஆராய்ந்து 1.கொண்டு செல்லலாம் 2.கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற இரு பிரிவில் பிரித்து, கொண்டுபோக அனுமதியில்லாதற்றை அங்கேயே போட்டுச்செல்ல குப்பைத்தொட்டியொன்றும் காணப்படும் விமான நிலையங்களை காண்கையில்

கணியன் பூங்குன்றானாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது. உலகத்தையே ஒரே ஊராகவும் உலக மக்களை நண்பர்களாகவும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் பாடப்பட்ட இந்தப்பாடல் புறநானூற்றில் 192 வது பாடல். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நினைப்பிருந்தால், உலகில் போரற்ற சமாதான வாழ்வு கிட்டியிருக்கும். சானல் 4 தமிழர்களுக்கு தெரியாது போயிருந்திருக்கும். விமான நிலையங்களில் யாரும் எதையும் அவிழ்த்துக்காட்ட வேண்டிய தேவையிருக்காது. ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களை விட பிரயாணத்திற்கான இணைப்பு (TRANSIT) விமான நிலையங்களான DUBAI லும் QATAR லும் காலணி, இடுப்புப்பட்டி எல்லாவற்றையும் கழற்றி வைத்து பரதேசியாகும் பயண கைங்கர்யம் பெரும் கெடுபிடி எதேச்சாதிகாரம். அதே பாடலின் மீதி வரிகளைப் பார்க்கலாம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!
பெரியோரை வியத்தலும் இலமெ!
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!

உங்களுக்கான கஸ்ட சூழ்நிலைகள் உங்களாலேயே ஏற்படுத்தப்பட்டவை. உங்களுக்கு யாரும் துன்பத்தை பரிசளிக்கவில்‌லை. முடிந்த வரை ஏதேதோ தருணங்களில் எப்போதோ விட்ட பிழைகளும், தொட்ட குறைகளும் தான் உங்கள் காலைகள் அழகாக விடியாமல் போனதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

உங்களுக்கு கிடைத்த நல்லன எல்லாவற்றிற்கும் பொறுப்பெடுத்துக்கொண்ட நீங்கள், தீயவற்றிற்கு பொறுப்பாக மற்றவர்களை சுட்டிக்காட்டுதல் எவ்வகையிலான நியாயம்? என்பதை கணியன் பூங்குன்றனார் அழகாகப் பாடி வைத்துள்ளார்.

இவர் பெரியவர் என்று யாரையும் பார்த்து வியத்தல் வேண்டேன். இவர் சிறியர் என இவரை இகழவும் போகேன். ஓடும் செம்பொன்னையும் ஒன்றாகப் பார்க்கும் ஒப்புரவான வரிகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதீயம் எல்லாவற்றையும் உடைத்துப்போடும் கணியன் பூங்குன்றனாரை கார்ல்-மார்க்ஸ், எங்கெல்ஸ் ற்கு முற்பட்ட மக்கள் நலம் பேணிய சிந்த‌னையாளராக காண்கிறேன். நவீன கருத்தியலுக்கு முற்பட்ட பாரிய சிந்தனைத் தளம் சங்க காலத்தில் இருந்திருக்கின்றது என்பதற்கு இதைத்தவிர வேறென்ன ஆதாரம் வேண்டும்.

சங்க இலக்கியம் என்பது தமிழின் மிகப்பெரும் கடல். இதில் விழுந்தெழுந்து வியப்புக்கொள்வதற்கு 2381 பாடல்கள் 473 புலவர்களால் பாடப்பட்டவை. 473 புலவர்கள் என்றவுடன் இவர்களை பாடல் பாடி பொழுதைக்கழித்தவர்களாக எண்ணிக் கொள்ளத் தேவையில்லை. அரசர்கள், போர்வீரர்கள், விவசாயி, சிற்பி, கடற்தொழிலாளி என பல்வேறு தரப்பினரின் வீரம், காதல், அன்பு என மலர்ந்திருக்கின்றது சங்க இலக்கியம்.

சங்ககாலம் கி.மு 500 – கி.பி 300 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியது. பெரும்பாலான பாடல்களில் பாடியவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. பாடலின் வரிகளாலேயே அவர்களின் பெயர்கள் அழைக்கப்படுகின்றன.

18ம், 19ம் நூற்றாண்டுகளில் தமிழிற்கு அச்சு இயந்திரங்களின் வருகையும் உ.வே.சாமிநாதையர் ஆறுமுகநாவலர் போன்றவர்களின் பெரும் முயற்சியும் காரணமாக ஏட்டில் கிடந்தவைகள் ஏணி ஏறி அச்சுப்பரப்புக்களை அடைந்து கொண்டன. மிகத்தரமான உலகஇலக்கியம் சங்க இலக்கியமாக எமக்கு கிடைத்தது.

மனித மாண்பு குறித்த கணியன் பூங்குன்றனாரின் பாடலைப்போலவே காதலைப்பாடிய செம்புலப்பெயனீரார் பாடல் எல்லாத்தரப்பினராலும் எடுத்தியம்பப்படுவது. சொல்லாட்சி மிகுந்தது.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்
யானும் நீயும் எவ்வழியறிதும்
செம் புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே.

-செம்புலப்பெயனீரார்-

my mom and your mom
how are they related?
my dad and your dad, 
how are they friends?
me and you,
how did we know each other?
nevermind, but now,
like the pouring rain and the red earth,
our loving hearts are dissolved together.

(Kuruntokai – 40)

“இருவர் “படத்தில்  மேற்கண்ட வரிகளை கேட்க  இங்‌கே  அழுத்துக.

எனக்கு உன்னை முன்பே தெரியாது. எனது தந்தையும் உனது தந்தையும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் இதற்கு முன்னமே வேறு வழியில் தொடர்புகள் அற்றவர்கள். இருப்பினும் எமது அன்பினால் செம்புலத்தில் விழுந்த நீரைப்போலே இணைபிரியாதவர்களாக கலந்திருப்போம்.

காதல் என்பது பரந்த அன்பின் அடையாளம். நல்லன எல்லாவற்றையும் உண்மையான காதல்தான் கற்றுத்தந்திருக்கின்றது. அழவும் சிரிக்கவும் கற்றுத்தருகின்ற காதல் நீண்டகனவொன்றின் காலடிகளைப்பற்றி நடந்ததாக “உயிர்மேவும் காதல்” காலாகாலத்திற்கும் இசைக்கப்படுகின்றது.

நவயுகக்காதல் எப்படிப்பட்டது? என கவிஞர் மீ.ரா செம்புலப்பெயனீராரின் வரிகளில் கவிபுனைந்திருக்கின்றார். நகைச்சுவையும் ஏளனமும் தொனிக்கும் கவிதை கீழே தரப்படுகின்றது.

உ னக்கும் எனக்கும் ஓரே ஊர்
வாசுதேவ நல்லூர்.
நீயும் நானும் ஒரேகுலம்
திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்.
உன் தந்தையும் என் தந்தையும் உறவினர்கள்
மைத்துனர்மார்.
செம்புலப்பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே.

சீதனமாக அழகான வீடும், இலட்சக்கணக்கான ரூபாய்களும், வன்னியில் வயற்காணியும் தந்ததனாலே செம்புலப்பெயனீர் போல அன்புடை நெஞ்சங்கள் கலந்ததாக எமது நாட்டிற்கேற்ற விதமாக நாமும் இக்கவிதையை வரைந்து கொள்ளலாம்.

பாண்டிய மன்னனிடம் பரிசு பெறுவதற்காக இறைவனரால் பாடப்பட்ட சங்கஇலக்கியப் பாடலொன்றையே தருமி எடுத்துச் செல்கின்றார். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா? அன்றில் வாசனைத்திரவியங்கள் பூக்கள் சூடிக்கொள்வதனால் பெறப்படுகின்ற செயற்கை வாசனையா? என்ற பெரும் சந்தேகம் பாண்டிய மன்னரால் ஏற்படுத்தப்பட்டு சங்கம் வளர்த்த மதுரையிலே நக்கீரன் தலைமையிலே கவி-விவாதம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

தருமியாக நாகேஷ் செல்வதும் அவமானப்பட்டு புலம்புவதும் முக்கண் முதல்வோன் சிவனாக சிவாஜிகணேசன் தருமியை அழைத்து செல்வதும் பெரும் சர்ச்சை கிளம்புவதும் நீங்கள் திருவிளையாடல் படத்தில் கண்டு களித்தவை. அதில் பாடப்படுகின்ற பாடலான…..

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

திருவிளையாடல் விவாதம் காண   இங்‌கே  அழுத்துக.

என்ற பாடல் மலர்களில் மகரந்தங்களை எடுத்துண்ணும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! பல பிறவிகளில் நட்புடன் பழகும் அழகிய பல்வரிசை கொண்ட என்னவளின் கூந்தலை விட, நீ அறிந்த பூக்களில் வேறேதும் மணமுடையதுண்டா கூறு? நீ எனக்காகச் சொல்ல வேண்டாம். நீ கற்றறிந்ததை கூறு? என்பதாக பொருள் கொள்ளப்படும் இந்தப்பாடல் மிக அழகான உவமான உவமேயங்களை சிறப்பான கருத்தாடலுடன் கொண்டு பெரும் விவாதப்பரப்பை விதைத்துச் செல்கின்றது.

சங்கப்பாடலான “கொங்குதேர் அஞ்சிறைத்தும்பி” காட்சிப்படுத்தப்பட்டதனால் “சங்கஇலக்கியம்” என்று தெரியாமலே சினிமா பாடல் வரிகள் போல பெரும் ஜனரஞ்சக அந்தஸ்தை பெற்று விட்டது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இந்தப் பாடல் காரணமாக ஏற்பட்ட பெரும் விவாதம் சிவன் நக்கீரனிடம் சாதி குறித்து சர்ச்சையான கருத்தை முன்வைக்கின்றார்.

அங்கம் புழுதிபட அரிவாளின் நெய்பூசி
பங்கம் படவறண்டு கால் பரப்பி
சங்கதனை கீர் கீர் என அறுக்கும்
நக்கீரனோ எம் கவியை ஆராய்ந்து
சொல்லத் தக்கவன்?

மிகவும் கீழ்சாதியைச் சேர்ந்த நீயா என்பாட்டில் பிழை கண்டபிடிப்பது என சிவன் கோபமாக கேட்க நக்கீரன் சொன்ன பதில்

சங்கறுப்பது எங்கள் குலம். சங்கரானர்க் கேது குலம்?
சங்கை அரிந்துண்டு வாழ்வோம்.
உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை.

நானாவது சங்கை அறுத்து மாலை செய்து விற்றுப்பிழைத்து வாழும் சாதியைச் சேர்ந்தவன். நீரோ பிச்சையெடுத்து வாழ்பவர் என வார்த்தைகள் வெப்பத்தில் வெடித்து பரம்புகின்றன.

“நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே”

சங்க இலக்கியம் சாகாவரம் பெற்ற இலக்கியம். 2371 பாடல்களிலும் காதல், வீரம், பிரிவுத்துயர் அழகாகப்பதிவில் இடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் காதல் கண்ணீர் வடிக்கின்றது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: