அந்திமநேரத்தில் உயில் எழுதும் வயோதிகர்கள் தட்டுத்தடுமாறுவது போன்றதான உணர்வு ஆருத்ராவிற்காக பதிவு எழுதத்தொடங்கிய பின்னர் எனக்கும் இருப்பதாக தெரிகின்றது. (நல்லவேளை நமக்குத்தான் உயில் எழுதவேண்டியதாக எதுவும் இல்லை….)
நான் சொல்லவருவது என்னவென்றால் சம்பவங்களும், கதைகளும் மூளைப்பரப்பின் இடுக்குகளெங்கும் தொங்கிக்கிடக்கின்றன. அவற்றை கோர்வையாக்கி கதையாகவோ, பதிவாகவோ கொண்டுவர வேண்டும். ஆனால் அவை காலக்கோர்வையின்றி பின்னும், முன்னுமாக தொடர்பின்றி தொத்திக்கிடக்கின்றன. எனவே பதிவை வாசிக்கும் அன்புக்குரியர்கள் நான் சொல்லும் சம்பவங்களில் காலப்பிழை, தொடர்புப்பிழை போன்ற பிழைகள் இருப்பதாக மனம்வருந்த வேண்டாம் என வருந்திக் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இதுதான் நான் கடந்த பதிவில் சொல்லியிருந்த இந்துக்கல்லூரி கனவிலிருந்தவன் ஸ்ரான்லிக்கு ஜாகா வாங்கிய கதை.
இன்றும் கந்தர்மடத்திலிருந்தே ஆரம்பிக்கலாம். கந்தர்மடத்திலிருந்து நான் படித்த யாழ்.இந்து ஆரம்பபாடசாலை ஏறக்குறைய இரண்டு கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்திருக்கலாம். (இப்போதும் அது அங்கேயே தான் இருக்கும்) அங்கே படிப்பதாலேயே அங்கு படிக்கும் எல்லோருக்கும் தாங்கள் எல்லோரும் வருங்கால இந்துக்கல்லூரி மாணவர்கள் என்கின்ற கற்பனை ஒன்று தொற்றிக்கொள்வதுண்டு. இப்போதும் அவ்வாறான கற்பிதம் ஒன்று வளர்ந்திருப்பதாக எனது மருமகன் மூலம் அறியக்கிடைக்கிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை. இந்துக்கல்லூரி என்பது வேறு. இந்து ஆரம்ப பாடசாலை என்பது வேறு. இந்துக்கல்லூரியில் சேர்வதற்கான நடைமுறைகள் தனியானவை. இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு என அதில் தனியான எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
எனது வீட்டிற்கு அருகிலேயே 500மீற்றர் தூரத்திற்கு உட்பட்டும் ஒரு பாடசாலை இருந்தது. அதற்கு இருக்க கூடிய பழம்பெருமை என்பது அலாதியானது. ஆனால் பழம்பெருமை ஒன்று மட்டுமே எப்போதும் உதவாது என்பதற்கு அதனையும் ஒரு உதாரணமாக கொள்ளலாம். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் உருவாக்கிய பள்ளிக்கூடம். யாழ்ப்பாணத்தின் பெருமைமிக்க சைவத்தமிழ் கல்விக்கூடம். யாழ்ப்பாண வரலாற்றை சொல்லவிளைகின்றவர்கள் யாரும் அந்த சைவப்பிரகாச வித்தியாசாலையை மறுதலிக்க முடியாது என அதன் பெருமைகள் ஏராளம். ஆனால் நடைமுறையில் அந்த பெருமைகளுக்காகவே யாரும் தங்கள் பிள்ளைகளை அதில் கல்வி கற்க சேர்ப்பதில்லை. அதாவது நான் கல்விகற்ற காலத்தில் அப்படி. இப்போது அதன் நிலைமை இன்னும் பரிதாபம். நான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது இடையில் படித்துப்பார்த்த எனது அக்கா உதிரியாக இன்னுமொரு தகவலையும் சொல்லி வைத்துவிட்டுப்போனார். பிள்ளைகள் படிப்பில் அக்கறையில்லாமல் விளையாட்டுத்தனமான திரியும் போது “உங்களை கொண்டு போய் சைவப்பிரகாசத்தில் சேர்த்து விட்டுவிடுவன்“ என பல இடங்களில் பிள்ளைகள் அதட்டப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றனவாம்.
மாந்தர்கள் தங்களுக்குள் போட்டுக்கொள்ளும் கோடுகள் கல்விச்சாலைகள், கோயில்கள், வாசகசாலைகள் என எல்லாவற்றையும் தான் பிரித்துப்போடுகின்றது. அதற்கு நாவலர் பெருமானின் சைவப்பிரகாச வித்தியாசாலையும் விலக்கல்ல. எனவே சைவப்பிரகாச வித்தியாசாலை தாண்டி எனது தந்தை என்னை இந்து ஆரம்ப பாடசாலையில் சேர்த்ததற்கு அவர் எனது கல்வி மீது கொண்டிருந்த அதீத அக்கறை மட்டுமே ஒற்றைக்காரணம். இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்தாலும் அனுமதிப்பரீட்சையில் 3 புள்ளிகள் குறைவான காரணத்தால் எனது கனவு மெய்ப்படவில்லை. ஆனால் என்னிலும் குறைவான புள்ளிகள் பெற்ற நண்பர்கள் பலரும் பின்கதவால் பாடசாலைக்குள் நுழைந்துவிட்டிருந்தார்கள் என்பது வேறுகதை. இதற்காக நான் ஏதோ நேர்வழியில் மட்டுமே முயற்சித்ததாக யாரும் தப்பாக “பில்டப்“ கொடுக்கவேண்டியதில்லை. எங்களுக்கு அந்த பின்கதவுகளும் திறக்கப்படவில்லை என்பதுவே யதார்த்தம்.
படிக்கின்ற பிள்ளை எங்கு வேண்டுமானாலும் படிக்கும் என்பதாக சிலர் முணுமுணுப்பது எனக்கும் கேட்கின்றது. இவ்வாறான கோஷங்களில் சில காலம் நானும் மயங்கித் திரிந்திருக்கின்றேன். ஆனால் உண்மை அதுவல்ல. இன்றைய பதிவை நான் கந்தர்மடத்திலிருந்து ஆரம்பித்திருந்தாலும் நான் சொல்ல நினைப்பது நான் பார்த்த ஆசிரியர்களையும் கல்விச்சாலைகளையும் அவை மாணவ மனநிலைகளில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் பற்றித்தான்.
கற்றல்செயலும், கற்பித்தல்சேவையும் ஒன்றில் ஒன்று கைகோர்த்தபடி ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கியபடி முன்னேறும் இரு வேறு செயல்கள் என நான் விளங்கி வைத்திருக்கின்றேன். எப்படியென்றால் ஒன்றின் முழுமையின்றி மற்றையது முழுமை பெறாது. இன்னும் இலகு வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு நல்ல மாணாக்கனுக்கு ஒரு நல்ல ஆசிரியர் அமைவதும் ஒரு நல்ல ஆசிரியர்க்கு ஒரு நல்ல மாணாக்கன் அமைவதுவும் அபூர்வம். இங்கு நல்ல என்பதை அடிக்கோடிட்டு அழுத்தி வாசிக்கவும். அப்படி அமைந்து விடுகின்ற நல்ல புள்ளியொன்றிலிருந்தே சாதனைகள் தொடக்கம் பெறுகின்றன. அந்தப்புள்ளிகள் எனக்கும் எனக்கு வாய்த்த நல்லாசிரியர்களுக்கும் அமையவில்லை என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
முன்னும் பின்னுமாக நிறைய ஆசிரியர்களை கண்டிருந்தாலும் எனது-ஆசிரியர்கள் என எண்ண விளைந்ததும் முதலில் நினைவுக்கு வருபவர் எனது நாலாம் ஆண்டு தமிழ் ஆசிரியர் வேலுப்பிள்ளை மாஸ்டர் தான். தமிழ் ஆசிரியர் என்றால் அவர் தமிழ் மட்டும் கற்பிப்பதில்லை. கணிதம், விவசாயம் சிலசமயங்களில் ஆங்கிலம் என அவர் பல அவதாரங்கள் எடுப்பார். ஆனால் அவரிடம் தமிழ் கற்றது மட்டும் இன்னமும் ஞாபகம். சொல்வதெழுதலின் போது எழுத்து பிழையின்றி எழுதுவதற்கு ஒரு நுட்பம் சொல்லித்தந்தார். “சொற்களை இணைக்கும் க், ச் போன்றவற்றை அழுத்தி உச்சரித்து வாசித்துப்பழகு! உனக்கு எழுத்துப்பிழை வராது” என அவர் சொன்ன நுட்பத்தை நான் பற்றிப்பிடித்துக்கொண்டேன். அதன் பிறகு வீட்டில் பொட்டலம் கட்டிவரும் பத்திரிகைகள், கிழித்துப்போட்ட காலண்டர் பக்கங்கள் என கண்டதிலெல்லாம் க் ச் தேடி அழுத்தி வாசித்துப் பழகினேன். இப்போதும் எனது சகோதரி அப்பாவுக்குச்சொன்னார் என எனது தமிழ் கற்றல் பற்றி கேலியாக நினைவு கூருவார். அதன் பிறகு தமிழ் என்பது எட்டுப்பாடங்களில் ஒன்றாக மட்டுமே எனக்கு இருந்தது. அதனை ஸ்ரான்லி கல்லூரியில் 10ம் வகுப்பில் ஒருவர் மாற்றியமைத்தார். அவர் செல்வரெத்தினம் மாஸ்டர். யாரோ ஒரு ஆசிரியர் வராத பாட இடைவெளியை நிரப்ப வந்தவர் எங்களுக்குள் தமிழ் நிரப்பிவிட்டு போனார். தமிழின் இலக்கணங்களை மட்டும் காட்டியே இதுவரையில் எம்மை மிரட்டி வைத்திருந்த மற்றைய தமிழ்ஆசிரியர்கள் போலல்லாமல் தமிழின் சுவையான பக்கங்களையும், குசும்புகளையும் அழகையும் அறிமுகப்படுத்தினார். அன்று அவர் மீது ஏற்பட்ட நல்லபிப்பிராயம் பின்னர் அவர் எங்களது வகுப்புக்கான ஆசிரியர் இல்லை என்றபோதும் பாடசாலை நிகழ்வுகள் விழாக்கள் என்பவற்றின் போது எம்மை அவரின் கீழ் ஒன்றிணைய வைத்தது. பின்னாட்களில் பாடசாலையில் பட்டிமன்றங்கள், விவாதங்களில் எங்களது பெயர் அடிபடுவதற்கு செல்வரெத்தினம் மாஸ்டர் மீது ஏற்பட்ட பற்றுதலும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பின்னாட்களில் உயர்தரத்தில் தாவரவியல் கற்பித்த குணசீலன் ஆசிரியர் அவர்களையும் மறக்கவியலாது. ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையங்களுக்கு வருவதே பணம் பண்ணும் ஒற்றை நோக்கத்திற்காகத் தான். அந்த தனியார் கல்விநிலையத்திலும் கட்டணம் செலுத்தமுடியாதவர்களுக்கு இலவசமாக அவர் கற்பித்தது அவர் பற்றிய உயர்வான எண்ணத்தை உருவாக்கியது. அதிலும் அதனை அவர் பண்ணிய விதம் சிறப்பானது. குறித்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள் அவரைச் சந்தித்துக் கதைத்தோ, அல்லது வேறு படிவங்கள் பூர்த்தி செய்யவோ வேண்டியதில்லை. அலுவலகத்தில் தமது கட்டணம் செலுத்தும் அட்டையை ஒப்படைத்தால் அனைத்து மாணவர்களுக்கும் தாவரவியல் பாடத்திற்கு கட்டணம் செலுத்தப்பட்டதாக முத்திரைகுத்தி தரப்படும். இதனால் இலவசமாக கற்பவர்கள் என்னும் அடையாளம் யாருக்கும் தெரியவராது. ஆசிரியர் உட்பட. இதில் எத்தனை மாணவர்களும் பங்குபெறலாம். நான் பார்த்து வியந்த முதல் அப்பழுக்கற்ற சேவை அதுவாகத்தானிருக்கும்.
உண்மையில் ஒரு ஆசிரியர் மீது மாணவர்களுக்கு ஏற்படுகின்ற பற்றுதலே அந்தப்பாடத்தின் மீதான விருப்பமாகவும் பின்னர் அந்தப்பாடம் அல்லது துறையில் சாதிப்பதற்கான பொறியாக மாறுவதாக நான் விளங்கிக்கொண்டிருக்கின்றேன். சிறுவயதில் படித்த சுற்றாடல் கல்வி, சுகாதாரம் சமூகக்கல்வி போன்றன இன்றளவும் கசந்து கொண்டேயிருப்பதற்கு அதை கற்பித்தவர்கள் மீது எனக்கு ஏற்பட்ட “பிரியம்“ மும் காரணமாக இருக்குமோ என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இப்போதெல்லாம் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் ஏராளமான மாற்றங்களும் புதிய சிந்தனைகளும் உருவாகி விட்டன. மேலைத்தேய நாடுகளில் வாழும் எங்கள் பிள்ளைகளுக்கும் பாடசாலைகளுக்கும் இடையில் இருக்கும் உறவு என்பது எமக்கும் எங்கள் பாடசாலைகளுக்கும் இடையே இருந்த உறவு போன்று அவ்வளவு கசப்பானதாக இருப்பதில்லை. அவர்கள் யாரும் பாடசாலைகளை “கட்“ அடிப்பதற்கு எங்கள் அளவுக்கு காரணங்கள் தேடுவதாக நான் கண்டதில்லை.
போர்விமானம் சுற்றுவதாலோ பக்கத்து வீட்டு தாத்தா மண்டையை போடுவதாலோ அல்லது எனக்கே வருத்தம் வருவதாலோ பள்ளிக்கூடம் போகவேண்டியதில்லை என்பது எனக்குள் ஏற்படுத்திய சந்தோசம் போன்று எனது மகளுக்கும் இருப்பது போல் தெரியவில்லை. அதற்கு காரணம் ஆசிரிய-மாணவ உறவுகள் ஒருவித இயல்புநிலையில் அமைவதாக நான் கண்டிருக்கின்றேன். இங்கு ஆசிரியர்கள் என்பவர்கள் சட்டாம்பிள்ளைகளாக இருப்பதில்லை. ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மட்டுமே அதியுச்ச பட்ச அறிவுத்திறன் கொண்டவராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆசிரியரே அனைத்தும் அறிந்தவர் போன்ற ஒரு தேவையற்ற சம்பிரதாயத்தை கடைப்பிடிக்க முனைவதன் விளைவே எமக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே எழுந்த இடைவெளியாக இருக்குமோ என நான் எண்ணுவதுமுண்டு.
நான் தகவல்-தொழில்நுட்பம் படித்த வகுப்புக்களில் நாம் கேட்கும் பல சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் பதில்களை எங்கிருந்து பெறலாம் எப்படி தேடிக் கண்டுபிடிக்கலாம் என்பதை மட்டுமே தருவார்கள். பல சமயங்களில் பதில்கள் அவர்களுக்கும் தெரிந்திருப்பதில்லை. இன்னும் சில சமயங்களில் மாணவர்களிடமிருந்தும் பதில்களை கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். இந்தவொரு இயல்புநிலை மாணவர்களை மேலும் மேலும் குறித்த துறை சார்ந்து ஈர்ப்புடன் இயங்க வைப்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். இதற்காக ஆசிரியரை மாணவர்கள் யாரும் ஒண்டும் தெரியாதவராக எண்ணிவிடுவதில்லை.
பத்தாம் வகுப்பில் கணித-பாடத்திலும் பின்னர் உயர்தரத்தில் தாவரவியல் பாடத்திலும் ஆசிரியர்கள் பிழையானதை சொல்கிறார்கள் என்பதை நிரூபித்ததால் வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றேன். பாடசாலையில் இறுதி ஒன்றரை ஆண்டுகள் தாவரவியல் பாடநேரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. அந்தப்பாட நேரத்தில் ஒழுங்காக இருந்து அந்த ஆசிரியையிடம் தொடர்ந்தும் கற்ற அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல் குறைந்தபட்ச புள்ளிகளைக் கூட பெறாமல் போனது குறித்த ஆசிரியையின் திறமைக்கு சான்றாகலாம்.
இங்கே தகவல்-தொழில்நுட்ப வகுப்புகளிலும் எனது குசும்புச் சேட்டைகள் மாறவில்லை. சரியானதற்காக ஒரு புதிய விடயத்திற்காக ஆசிரியர்களுடன் கருத்தாடும் குணம் மறையவில்லை. ஆனால் அதிசயமாக இங்கே நான் வகுப்பை விட்டு வெளியேற்றப்படவில்லை. மாறாக ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்பட்டேன். இதனால் குறித்த பாடம் தொடர்பான பற்றுதல்கள் என்னை தொற்றிக்கொள்கின்றன.
இப்போது எனக்குள் தோன்றுவதெல்லாம் ஒன்றுதான். எல்லா தவறுகளும் எங்கோ ஒற்றைப்புள்ளியில் தான் மையம் கொள்கின்றன.
******************************************************************************************************
ஆருத்ராவின் சிறு கருத்தாடல்.
எங்களுக்கும் யாழ் பாடசாலைகளில் படிப்பதான கனவுகள் இருந்திருக்கின்றன. கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுந்தம் போக முடியாததான வாழ்வியல் யதார்த்தம் ஆசைகளை அணையிட்டு தடுத்திருக்கின்றது.
எங்கள் சிறுவயதில் எங்களுக்கு கற்பித்தவர்கள் ஆசிரியர்கள் அல்ல- RING MASTERS. அவர்களின் சினம் கொண்ட விளாசல்களை பலதடவை பின்பக்கத்தில் ஏற்றிருக்கின்றேன். ஆருத்ராவிற்கு ஒரே ஒரு கனவுதான் நிறைவேறாமல் போனது. ஆருத்ரா M.B.B.S( Cey) B.H.C.H (Lon) என படித்து, அழகான பெண்களின் கைபற்றி, நாடித்துடிப்பறிந்து “ஆ” காட்டச் சொல்லி சிறப்பாக வைத்தியம் பார்க்க முடியாமல் போன முதிர் பருவத்து கனவு பாக்கி இருக்கின்றது. எங்கிருந்தோ ஒரு அசரீரி கேட்கின்றது. “நீ உருப்படவே மாட்டியா?”
அன்பு நண்பா நீயாவது உயர்தரத்துடன் வந்து விட்டாய். நான் பல்கலை முடித்து ஒரு இரசாயனவியல் ஆசிரியர் ஆனேன். அங்கு இன்னும் கொடுமைகளை பார்த்தேன். எந்தவித திறமையும் இல்லாதவர்கள் மூப்பின் அடிப்படையில் உயர் பதவிகளுக்கு வருவதுடன் திறமையான ஆசியர்களை அவர்களுக்கு பிடிக்காது. காரணம் பயம். தங்கள் பதவிகள் பறிபோயிடும் என .மன்னார் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் கலந்துரையாடல்களுக்கு சென்றிருந்தேன் அங்கு cl (chlorin ) ஒரு மூலகக் கூறா அல்லது மூலகமா என 4 ஆசிரியர்களுக்கு தெரியவில்லை இவர்களால் எப்படி மாணவர்கள் உருப்பட முடியும்? .
By: mano on நவம்பர் 4, 2012
at 9:51 முப