ஆருத்ரா எழுதியவை | நவம்பர் 16, 2012

இளையராஜா என் காதலுக்கு இசையமைத்தவர். பாகம்-4

பதின்ம வயதில் தோன்றும் பக்குவமற்ற தன்மையில் காதல் தோன்றியதும், அதுவே காலா காலத்திற்கும் கனவின் இருப்பாக மேல்நிலைப்படுத்தப்பட்டதும் எனக்கு நடந்தேறி இருக்கின்றது. பதின்ம வயதை சிலர் முளைத்து மூணு இலை விடாத வயதாக வர்ணித்தாலும் காலா காலத்திற்கும் மிகப்பெரும் உண்மையான அன்பையும், மீதி வாழ்நாள் காலத்திற்கான நீர்ப்பிடிப்பான உவகைத்தருணங்களையும் அந்த வயது தான் அள்ளித்தந்திருக்கின்றது.

அவள் என் உயிரின் இருப்பு. பக்குவவயதில் எனக்கு பிறந்திருக்கும் உயிர்த்துடிப்பான வாரிசுகளுக்கு மூத்த முதல்இருப்பு; காதல் குழந்தை ; காதல் தாய் எனக்கு அவளாக அமைந்தாள்.

girl_w_pigion1.38ci0rkktxci80wkcgssg84so.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.thஒரு முதல் பார்வையிலேயே யாரிடமாவது உங்களை முழுமையாக ஒப்படைத்து இவள், இவன் என அந்திம காலம் வரை பாதுகாப்பையும் இனிதான தருணங்களையும் தர முடியுமென கங்கணம் கட்ட முடியுமானால் காதல் பிறந்திருக்கின்றது; இளையராஜா மீண்டும் இசையமைக்கப்போகின்றார் என்று அர்த்தம். இளையராஜா அற்புதமான சிருஷ்டிகர்த்தா. எனக்கான காதலுக்கு இசையை விசிறி விட்டதும் “இந்தா வைத்துக்கோ” என்று வீசி விட்டதுமான காதல் தளத்தின் இராகதேவன்.

அது பதின்ம வயதுதான். எனக்கு ஒன்றுமே தெரியாதுதான். ஆனால் காதல் தெரிந்திருக்கின்றது. அவளுடன் சேர்ந்திருக்க பிரியப்பட்டேன். எனக்கான துன்பத்திற்கான சுமைதாங்கியாக வாழ்நாள் பரப்பில் வலம் வருவாள் என்று எதிர்பார்த்து ஏங்கி அவள் பின்னால் காதல் கொண்டு அலைந்த தருணங்கள் பூக்கள் பூத்த தருணங்கள்.

விருப்பையும் இருப்பையும் ஒருசேர சுகித்த தருணங்கள். அவளின் சின்னஞ்சிறு கைகள் எனக்கு அபயமுத்திரை அளித்ததாக கனவுகள் சாட்சி சொல்கின்றன.

water copyபிரம்மனின் தெளிவான வடிவச் செதுக்கல் ஒரு உயிர்த்துடிப்பாக நடமாடியதாக என் காதல் எனக்கு சொல்லிற்று. மீண்டும் அந்த தனியார் கல்வி நிலையப்பக்கமே என் கனவு தலை வைத்துப் படுக்கின்றது. பூலோக சுவர்க்கம் என்பது ஒரு அடையாளத்திற்கான சொல் எனினும் நேர்வழிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட நிஜ சுவர்க்கமாக அந்த தனியார் கல்வி நிலையம் திகழ்ந்தது.

பாடசாலைக்கு பின்னரான பாய்ந்தோடி வீடு விரைந்து, வெள்ளைச்சீருடை விட்டுத்தொலைத்து இணக்கமான  உடைதரித்து- இயல்பான கனவு சுமந்து , திரும்ப பாய்ந்தோடிப் பறக்கின்ற தருணங்கள் அதி அற்புதமானவை. ஆங்கே போய்ச் சொல்வதற்கும், பேசுவதற்கும் நிறைய நினைவுகள் சுமந்து ஏகி விரைந்து கண்களால் அவளைத் துழாவி, அந்த வனப்பான சிரித்த முகம் ஏற்று, நண்பர்களுடன் கைகோர்த்துக் கொள்கின்ற அழகியல் அங்கு நடந்தேறியது.

கல்விக்கு முன்னரான பேச்சுத்தளத்தில் எல்லோரும் கனவுகள் கிறுகிறுக்க கதைத்து தள்ளி இனிப்பேச ஒன்றுமேயில்லை என மௌனித்து, இன்னும் ஏதோ சொல்ல விளைகின்ற ஏக்கத்து தொனிப்பொருட்கள் ஏராளமிருந்தன.

கற்பிக்கும் ஆசிரியரை உடல்மொழியால் வெளிப்பரப்பில் உலவவிட்டு சிரிப்பில் ஆழ்த்துவதற்கு சில நண்பர்களும், கதைத்துப் பேசி சிரிப்பை சிதறவிடுவதற்கு பல நண்பர்களும், பார்த்து இன்புற்று தலையசைவை கூந்தல் ஒதுக்கித்தள்ளும் லாவகத்தை கைஅசைத்து பேசும் காட்சியை கண்டு களித்து இன்புற்றிருக்க நானும் இருந்திருக்கின்றோம். வேறு என்ன சொல்ல? காதல் தடதடத்து விரைந்தது.

challaram_love_couple_12794அந்த தனியார் கல்வி நிலையத்தில் கணிதவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.கற்பித்த கணித ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். அந்த கண்டிப்பும் கோபமும் பெரும்பாலான தருணங்களில் கைகளூடாக முதுகில் பேசும் அறைகளாக இருந்திருக்கின்றன.

அவள் மீதான அன்புப்பிடிமானத்தில் அவளது பெயரின் முன்னாலுள்ள N என்ற இனிஷியலை தமிழில் என் என்று அவளின் பெயருடன் இணைத்து உள்ளங்கைகளில் எழுதி அடிக்கடி பார்த்துக் கொள்ளும் தருணம் அந்த கணித ஆசிரியர் என்னை கவனித்திருக்க வேண்டும். மற்றவர்கள் பாடத்தினை குறிப்பெழுதிக் கொண்டிருக்க என்னருகில் வந்தவர் என்கைகளை மெதுவாக விரித்துப் பார்த்தவேளை அடுத்து நடக்கப் போகும் அவமானங்களுக்காக காத்திருந்து கண் நிமிர்த்தினால் ஒன்றுமே ஆகவில்லை. சிறு முறுவலுடன் எனது உள்ளங்கைகளை திருப்பி மூடி இறுகப்பற்றிவிட்டு தொடர்ந்த ‌அவர் என் கடவுள். அவளை கை பிடித்து பத்திரமாக வைத்திருக்க வாழ்த்தியதாக எடுத்துக் கொண்டேன்.

என் என்றுமே எனதாகவில்லை. அவளைப் பத்திரப்படுத்தவும் முடியவில்லை. இயலாமை குறித்த துயர் என்னுள் ஆழமாக வேர் பிடித்துள்ளது. எல்லாவற்றையும் எனதாகப் பார்த்த தருணங்களில் விதி மறுபார்வை பார்த்துள்ளது. விதிக்கு என்னைத் தெரியாது. என் விழிகளுக்கு கண்ணீர் மறவாது.

ஏறுநெற்றி- வாரிமுடித்த கூந்தல்- சற்று விடைத்த நாசி – கீழ் உதட்டின் சிறுபள்ளம் அவளைப் பிடித்துப் போக அதுவும் காரணமோ என்னமோ? எனக்கு காதல் பிடித்தது. காதல் பயணத்திற்கு இலக்குகள் தான் முக்கியமானவை. இலக்குகள் நோக்கிப் பயணிப்பதற்கு இரகசியங்கள் இணக்கமானவை.

kathalஅவளிடம் ஏதோ ஒன்று இருந்திருக்கின்றது. என்னை ஆகர்ஷிப்பதற்கு அவைகளே போதுமானவையாக இருந்திருக்கின்றன. அவளுக்கு அந்தச் சின்னஞ்சிறு வயதில் வந்து போகும் ஆஸ்துமா தொல்லை அவள் அதன் காரணமாக வராத தருணங்களில் என்னை அழ வைத்திருக்கின்றது. அவளின் சிரமங்கள் என்னை சித்திரவதை செய்திருக்கின்றன. அன்பின் சிரமங்களுக்கிடையில் அழகை ரசிப்பதும் அழகான சிரமங்களுடன் அன்பை பேணுவதும் காதலுக்கான தனிச்சிறப்பு அடையாளம்.

மழையையும் தனிச் சிறப்பாக குறிப்பிட்டேயாக வேண்டும். மழை என்பது உயரே உள்ள வானத்துக்கும் கீழேயுள்ள தரைக்குமான உறவின் நீள்கோடு. முதன்முதலாக அவளுடன் உரையாட முற்பட்ட- முதன் முதலாக அவளுடன் என்னை பகிர்ந்து கொள்ள முற்பட்ட வேளையில் பெரும் சத்தத்துடன் பெய்த மழை, இயற்கை காதலை ஆசீர்வதித்த தருணமாக இருக்க வேண்டும். அன்று அவள் அணிந்திருந்த ரோஸ் கலர் அரைக்கை சட்டையும் அதற்கேற்ற வண்ணத்தில் அணிந்த கீழ் உடையும் பெருமையான அழகாக தென்படுகின்றன. அன்றுதான் அவள் பெரிதாக வெட்கப்பட்டிருக்க வேண்டும்.

எதைக் கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய் – நான்
வெட்கத்தை கேட்டால் எதைத் தருவாய்? -தபூசங்கர்

முகத்தில் சிறிய பெரிய தயக்கங்கள். வெட்டி வெட்டிப் பார்த்த விழிகள். முட்டி முட்டி பார்த்த எண்ணங்கள். சேவகிகளால் அழைத்து வரப்பட்ட அரண்மனைக் கிளி போல அவள் மெதுவாக தோழிகளால் அழைத்து வரப்பட்டாள். அவளது தோழிகளில் ஒருத்தி எனது பால்யகால நெருங்கிய தோழியாகவும் என்னை புரிந்தவளாகவும் இருந்ததில் காதல் கைமாறு.

மிகப்பழமையான புளியமரமும் மிகப்பழமையான காலமுமாக இடம் காலம் அறிந்து கழிந்த காதல். சாவகச்சேரி மகளிர் கல்லூரி கழிந்து நூற்றியம்பது மீற்றர் தொலைவிற்குள் வருகின்ற புளியமரம். ஒரு குச்சொழுங்கையின் முதல் தொடக்கத்தில் நிழல் தரும் நினைவுகள்.

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?-கபிலர்

girl-dancing-rain_thumb2மழையும் காற்றும் எல்லோருக்குமானது. இடையில் நீக்கி பெய்வதில்லை. நீக்கி வீசுவதில்லை. மழை தருமோ என் மேகம். ஒரு நீண்ட மௌனம். அவளின் பெரிதான வெட்கம், நினைத்து வைத்து மறந்த பேச்சாடல், திடீரென பெய்த பெருமழை, வீதிவழி அருகி விரைந்த அவளின் அண்ணன் இவையெல்லாம் சேர்ந்து பின்னொருநாளில் பேசிக்கொள்ளலாம் என்ற தீர்மானம்.

ஆனாலும் அந்த பெருமழைப் பொழுதின் முதல் சந்திப்பு நெருக்கமான நினைவாக இன்றளவும் நின்று தொலைக்கின்றது. அவளைத் துரத்தி ஓடிய அந்த வயல்வெளி வீதிகள்- மாரிகாலத்து சிறுகுளிர் – வயலுக்கூடான மென் காற்று- அவளும் அவளது குண்டுத் தோழியும். பொத்திப் பொத்தி என்னென்ன மாயம் வைத்தாய் இறைவா?

பால்ய காலத்தில் அவளுடன் வாழ்ந்து பார்க்கும் ஆசை வந்திருக்கின்றது. வாழ்ந்து பார்க்கும் ஆசை வந்ததால் தான் காதல் வந்திருக்கின்றது. அவளின் சிறுமடி, அதிலான உறக்கம், அதற்கான கிறக்கம்,சிறுவயதிலேயே கனவாக அனுபவித்திருக்கின்றேன். இன்றளவும் நீள்துயரமாகவும் உணர்கிறேன்.

இளையராஜா இவ்விடத்தில் வந்து வைரமுத்து துணையுடன் இசையமைத்தது எனக்கான எண்பதுகளில். இவ்வயதில் இப்பாடலின் முழுஅர்த்தம் புரிந்து அழகான பாடலுக்குள் என்னையும் அவளையும் பொருத்திக் கொண்டேன். இளமை தொடங்கி முதுமை வரைக்குமான அக்காதல் மாய்ந்து மாய்ந்து வைரமுத்து வரிகளால் வரைந்தது. பாய்ந்து பாய்ந்து என்மனம் காதல் கொண்டது.

ஒரு குங்கும செங்கமலம்.
இளமங்கையின் தங்கமுகம்.
முதுமை ஒருநாள் நமை வந்து தீண்டும்.
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்.
முடியை பார்த்தால் முழு வெள்ளை.
மடியில் தவழும் மகன் பிள்ளை.
நீ ஏந்திக் கொஞ்ச … நான் கொஞ்சம் கெஞ்ச..
பூப்போல பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாயதனில்  நீ சாய்ந்திருக்க பசியடங்கி நான் ஓய்திருக்க!
இருக்கும் வரைக்கும்  எனைத் தினசரி அனுசரி!

காதலின் பெரும் கருத்தை விதைத்த அவளுக்கான பாடலில் இடையில் ஒருவரி வரும்.

சாம்பல் ருசிக்க தனியாவாய்!
காயைப் புசிக்கும் கனியாவாய் !!

twoஎங்கள் கல்லூரியின் மதிலோரத்தேமாவும் நாணிக்கொண்டு காதல் கொள்ளும். பால்ய காலநினைவுகள் கசிந்துருகி வளர்ந்து வசந்தத்தின் பரிபாஷையாகி மௌனத்தில் திகைக்கின்றது.

இது மௌனமான நேரம்.
மனதில் ஓசைகள்! இதழில் மௌனங்கள்!!
ஏனென்று கேளுங்கள்.
குளிக்கும் ஓர் கிளி. கொதிக்கும் நீர்த்துளி.
கூதலான மார்கழி. நீளமான ராத்திரி.

நீ வந்து  ஆதரி.

வைரமுத்து உணர்ச்சிப் பெருக்கில் வரைந்து போட இளையராஜா காற்றின் கங்குகளுக்கு இசைபரப்ப எங்கும் நெருப்பு பற்றிக்கொண்டது. காதல் என்று பெயர்.

புளியமரம் மௌனித்து தனித்து நிற்கின்றது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


மறுவினைகள்

  1. பக்குவமற்ற பதின்ம வயதை தெரியாத வயது, அறியாத வயது, இரண்டும் கெட்டான் வயது என்றெல்லாம் சொல்வார்கள். ஏனெனில் “சரி எது”, “பிழை எது” என தெரியாத வயது. வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பக்குவப்படாத வயது என்று கூட எடுத்துகொள்ளலாம். “கண்டதும் காதல்”, ஆங்கிலத்தில் “LOVE AT FIRST SIGHT” என்பார்கள். பிள்ளைகள் பதின்ம வயதை எட்டும் போது பெற்றோர் அறிய வேண்டிய தகவலாக ஏதோ ஒரு புத்தகத்தில் எப்பவோ வாசித்த ஞாபகம். ஒரு காதலுக்கோ உறவுக்கோ தேவையான மூன்று தகைமைகள்;

    ATTRACTION – கவர்ச்சி (உடல் ரீதியான)
    CLOSENESS – நெருக்கம்
    COMMITMENT – காதல் / உறவு வெற்றி பெறுதலுக்கான பங்களிப்பு

    ஒரு குழந்தையின் பதின்ம வயதில் இன்னொரு ஆண் அல்லது பெண் இன் மீது முதல் வருவது உடல் ரீதியான கவர்ச்சி, அப்போது அந்த குழந்தைக்கு தான் விரும்பும் பெண்ணோ ஆணோ நல்லவரா, கெட்டவரா எதுவுமே தெரிவதில்லை. இதை தெரிந்து கொண்டால் தான் அந்த இருவருக்கும் இடையில் நெருக்கம் உண்டாகும். இது ஒரு புதிய உறவுக்கான இரண்டாவது தகைமை. இந்த தகைமைகளை அறிய குழந்தை கொஞ்சம் பெரியவனாகவோ பெரியவளாகவோ ஆகி இருக்க வேண்டும். மூன்றாவது முக்கியமான தகைமையான உறவு வெற்றி பெறுவதற்கான COMMITMENT வருவது ஒரு பையனோ பெண்ணின் இருபதை அண்டிய வயதில். இதன் பின்னர் பூத்த காதலை அந்த ஆண்டவன் வந்தாலும் பிரிக்க முடியாது.

    முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்று சொல்லக் கேட்டிருகின்றேன். அதை உங்களது “என் காதலுக்கு இசைஅமைத்தவர் இளையராஜா” ஆக்கங்களின் ஊடாக கண்டுகொண்டேன். அருமையான சிந்தனை வளத்துடன் கூடிய மனதை நெகிழ வைக்கும் படைப்புக்கள். உங்கள் அனுபவ பகிர்விற்கு நன்றி, வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    குயிலி

  2. முடியல! நண்பா ……….முடியல !!

  3. very true bro but please stop your love story and the music composer because at your age so many kids were almost even fantasising
    about their class teacher why ? that is the nature no body has the answer yet
    the other thing do you really know much about the girls mentality they are so much adopted to the comfy life style to reach that sort of destiny they will do anything its so obvious our tamil cinema doesnt charectorise this because of
    the distribution of the film and the production.when they showed the reality no body bothered.thats the fact,and if you had married that girl you would have been divorced by now so thank god.because love is not really a defined article i am sorry to say this because its only men who really feel the sense and the scent of it not the women.they will always be at the winning side and the men grow beard and roam around with a whiskey bottle.we should be helping our parents at the age where as we dont even feed the cows or the goats when we realize its too late.but its stays like a stain in the mind.our parents work hard and sacrifice so many things to give us a better life but do we really think about it some fools even cross the ocean with out the passport to see the beloved girl but the girl didnt even come out of the room due to her mothers ordeal.so tell me whats love,love is nothing a pure infatuation or obsession.but we still say god is love but love is blind so god is blind.but always our mum dad’s love is very pure and real thats call affection.because i am one of the idiot who lost my child hood with the artificial time wasting thing call love.

  4. காதலின் மெல்லிய பக்கங்களை அனுபவத்தின் பட்டறிவுகளுடன் பகிர்கின்ற தங்களின் பதிவுகள் அருமை. காதலை வiரைவிலக்கணங்களுக்குள் உட்படுத்த முடியாது என்கின்றவர்ளே, பின்னர் காதலில் பெண்கள் வெல்லுகின்ற பக்கம் கைதட்டுவார்கள் என்ற கணக்கில் சூத்திரம் செய்ய முயற்சிப்பது காதல் பற்றிய அவர்களின் முரண் மதிப்பீடும் வாசிப்பிற்கும் எழுத்திற்குமிடையில் இருக்கும் ஒரு ஜனநாயக வெளி பற்றிய அவர்களின் தெளிவின்மையே ஆகும். “நான் எழுதுவதை எல்லாம் நீ வாசி” என ஒரு படைப்பாளி வாசகனையும் “நான் வாசிப்பவற்றை மட்டும் நீ எழுது” என ஒரு வாசகன் படைப்பாளியையும் நெருக்குவாரம் செய்யமுடியாத ஒரு ஜனநாயகப்பொதுவெளியே அந்த இருவரையும் இணைக்கின்றது.

    ஒரு சிறந்த படைப்பாளியாக பதிவராக தங்கள் படைப்புகளை தொடரந்தும் கொண்டு வாருங்கள். காதலுக்கு இசையமைத்தவர் இளையராஜா பதிவில் அதன் நேர்மையும் காலம் கடந்தும் மறந்து போகாத மனப்பதிவுகளுமே தனிச்சிறப்பு. அந்த அழகியலை தொடர்ந்தும் கடைப்பிடியுங்கள்.

    புலம்பெயர்ந்த மண்ணில் இருந்து ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு ஒரு படைப்பாளி தயார்!!!

  5. 15:37
    Theresa Selvan
    அருமையான சொல்லாக்கங்கள். கதையின் எழுத்து நடை ரொம்பவும் பிடித்துள்ளது. அதிலும் உண்மையான உணர்ச்சிகள் கலந்து எழுதியதால் படிக்கும் நம் மனதைத் தொட்டு விட்டது கதை. மிக மிக நல்லா இருக்கிறது. இவ்வளவு நாட்களாகக் கருத்தெடுத்து அதைப் படிக்காமல் விட்டதற்கு நான் வெட்கப் படுகிறேன். படித்துக் கருத்துக்கள் சொல்லக் கால தாமதம் எடுத்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

    by Theresa Selvan -Head of People Of Chavakachcheri

  6. Nothing is beautiful than a man Heart has been broken ,but he still believe in LOVE 🙂


inayatamil க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: