பாட்டுப்பெட்டி இதுவரை கேட்டு பரவசமான இசையை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் வரையப்பட்ட பதிவு. இசை எல்லை கடந்த மொழியின் பரிமாணம். இசைக்கோர்ப்பிற்குள் தனித்து ஒரு மொழியை அடையாளப்படுத்தும் பண்பற்ற இலக்கணம் அமைவதில்லை. எந்த மொழியிலமைந்த பாடலாயினும் கேட்டவுடன் மனதிற்கு நெருக்கமான ஒரு தன்மையை இசைச்சுரம் அமைத்து விடுகின்றது. இசை எல்லை கடந்த இலக்கணம் என்றால் காதல் எல்லை கடந்த இலக்கியம்.
எண்பத்து ஒன்பதாம் ஆண்டு என்று நினைவு. அப்போது தான் நான் சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்தேன் என்று சொல்ல முடியாது.அடித்து விரட்டப்பட்டு புகலிடம் தேடி வந்திருந்தேன் என்பதாக வெளியில் சொல்லிக் கொள்ளலாம் தப்பில்லை.எனக்கு சுவிஸ் மிக அந்நிய பூமியாக சாவகச்சேரிப் பரப்பிலிருந்து நீங்கி வேறு ஒரு கலாச்சார வாழ்வியலுக்கு என்னை பொருத்த எத்தனித்து முடியாத கனத்த துயரப்படிமமான இடமாக ஆகிப்போயிருந்த பொழுதொன்றில்….
“லம்பாடா” என்ற இந்தப்பாடல் சுவிஸின் பட்டி தொட்டி எங்கும் பரவலாக புசிக்கப்பட்டுக்கொண்டிருந்த இசை. “லம்பாடா” என்பது ஸ்பானிஸ் கலாச்சார நடனம். இரண்டு கால்களுக்கிடையில் நடன ஜோடியின் ஒரு கால் இணைக்கப்பட்டு ஆடப்படும் ஒரு நடனவகை என வரையறை செய்யப்பட்டிருந்தாலும் அந்த இசை எங்கெங்கோ செல்லும் என் மேகங்கள்.
நான்கோ ஐந்தோ நிமிடங்கள் கொண்ட பாடலில் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் மிகச்செறிவான ஒரு காதல் கதை பதிவாக்கப்பட்டிருப்பது தெரியும். கண்களின் சிறு பதின்ம வயதிற்குரிய ஏக்கங்கள் அழகாக உள்வாங்கப்பட்டிருக்கும். காதலை பற்றி பத்தி பத்தியாக எழுதிச் செல்லலாம். அதுவல்ல நோக்கம்.
பாட்டுப் பெட்டியில் “லம்பாடா” வை இணைக்க அற்புதமான இசைக்கோர்ப்பு, காட்சிப்படுத்தப்பட்ட விதம், ஒரு கறுப்பின சிறுவன், வெள்ளை வெளேர் சிறுமி, வேறுபாடுகளை கடந்து காதல் கொள்ளும் தருணம் என நிறையச் சொல்லலாம்.
ஒரு முடிவற்ற நீண்ட கடற்கரையில் இயங்கும் உணவகத்தில் தந்தைக்கு உதவியாக வெள்ளை வெளேர் சிறு பெண். உணவகத்தின் ஒரு பரப்பில் நடனக்குழுவும் பாடகியும். ஆடுவதற்கு தோதான ஜோடியின்றி ஏக்கம் தோய்ந்த சிறுவன். அவர்களுக்கிடையிலான முதல்பார்வை என சின்ன சின்ன வனைவுகளுடன் இலகுவான ஒளிப்பதிவில் அற்புதமான காட்சிப்படிமம்.
இடையில் கோபம் கொண்டு தந்தை கை நீட்டுவது, அதையும் உடைத்துக் கொண்டு அந்த ஏக்கம் நிறைந்த சிறுவனுடன் நடனமாட காதல் கொண்டு விளைவது என பரந்து விரிந்த அழகான லம்பாடா இசை காதலை மனதிலிருத்தி செய்யப்பட்ட பாடல். தந்தை கோபப்பட்டு அடிக்க வரும் தருணத்தில் லம்பாடா பாடகி தந்தையை இழுத்து வைத்து நடனமாடுவதும் சிறு சிரிப்புடன் வன்மத்தை மறப்பதும் அழகுக்கவிதை காட்சியமைப்பு.
எப்போதும் காதலென்பது மிக இறுக்கமான சூழ்நிலைகளைக் கொண்டிருப்பதில்லை. இறுக்கத்தை மீறிக் கடந்து விட்டால் அது தன் இயல்பிற்குள் மீண்டு விடுகின்றது. காதல் வாழ்க்கையின் வனப்பு; சுந்தரகாண்டம்.
எண்பத்து மூன்றாம் ஆண்டுகளில் ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒரு பாடல் மிகப்பிரபலமாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. FREDDY SILVA என்ற சிங்கள நகைச்சுவை நடிகர் பாடகர் இசைத்த அந்தப்பாடல் ஊர்ப்புறத்திலிருந்து கொழும்பு மாநகருக்கு வந்திறங்கும் நாட்டுப்புறத்தான் தோற்றத்தில், கையில் குடையுடன் கொழும்புத் தெருக்களில், வாகன இடுக்குகளில் நுழைந்து எழுந்து பாடும் கேலியான நகைச்சுவைப் பாடல். குண்டுமணியை விளித்து கேலிகளால் நிரவப்பட்டது இந்தப்பாடல்.
ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் லலிதா ஜீவல்லர்ஸ் ஆதரவில் தமிழ் திரை ப்படம் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் தருணங்கள் தான் சாவகச்சேரிப்பரப்பில் தொலைக்காட்சிப் பெட்டிகள் அறிமுகமான காலங்களாக விடிகின்றன. கறுப்பு வெள்ளையில் 14″ அந்தச் சிறு பெட்டிக்கூடாக ரூபவாகினியால் ஒளிபரப்பப்படும் அரதப்பழசான தமிழ்ப்படங்கள், KNIGHT RIDER எல்லாம் பார்த்து வியந்த காலங்கள்.
இப்போது விஞ்ஞானத்தின் விரைவில் எல்லாப் பழைய சங்கதிகளும், எல்லாப் புது சங்கதிகளும் உங்கள் விரல் நுனிகளுக்குள் வித்தை காட்டுகின்றன. மாஜா-பஜார் வேண்டுமா? ஒரே சொடக்கில் YOU TUBE னூடாக திருச்சி லோகநாதன் “கல்யாண சமையல் சாதம்” பாடத்தொடங்குகின்றார். இன்னொரு சொடக்கில் “வாராய் நீ வாராய்” என CS ஜெயராமன் தடித்த குரலில் பரவசப்படுத்துகின்றார். இணையம் எல்லாவற்றையும் இலகுவாக்கி வைத்திருக்கின்றது.
பண்டைய கால மன்னர்கள் அனுபவித்திராத பல வசதிகளை இன்றைய நிலையில் ஒரு சாதாரண மனிதன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக ஜக்கி வாசுதேவ் தனது புத்தகமொன்றில் குறிப்பிட்டுள்ளது வாழ்வியலின் யதார்த்த பார்வை.
ஒரு மனிதன் மிக்க புகழுடன் பணச்செறிவுடன் வாழ்ந்து விட்டு, பின்னாட்களில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நடுத்தெருவில் நிற்பது கலைஞர்களுக்கே உரித்தான சாபம். ஏப்போதும் கற்பனை உலகில், சிருஷ்டிப் பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் அவர்களால் நிகழ்கால நடைமுறைகள் உள்வாங்கப்படுவதில்லை என்ற காரண விளைவு காரணமாக புகழ் போதை கடந்த நிலையில் வறுமைக்குள் வீழ்த்தப்படுகின்றார்கள். FREDDY SILVA வறுமையில் புள்ளி கொண்டு எழுந்து அற்புதமான நகைச்சுவை நடிகர், பாடகர் என பல அவதாரங்கொண்டு மிக்க வசதியுடன் வாழ்ந்து இறுதிக்காலங்களை கார் விடுவதற்கு பயன்படும் CAR SET இனுள் கழித்த மானுடன்.
1938 – 2001 இவரின் காலப்பகுதி.
இசையை ரசிப்பதற்கு இனவாதம், சமகால அரசியல் என்பவற்றை மூட்டை கட்டி வைத்து விட்டு இயல்பு ரசனைக்கு கொண்டு வரலாம். தப்பென்று ஒன்றில்லை
1.குண்டுமணி மன்னாரங் பிட்டிவெல்ல
2.PANKRITTA தக்கிட தரிகிட பாடல் கேட்க இணைப்பை அழுத்துங்கள்.
இசை காலத்தின் கண்ணாடி. சில திரை இசைப்பாடல்கள் நாம் அந்த இசையை கேட்டுப் பருகிய தருணங்களுக்கு எம்மை அழைத்துச்சென்று, நினைவின் அடுக்குகளை நிரவி விடுகின்றன. இன்று இடைக்காலப் பாடல்கள் என்றழைக்கப்படும் மத்திய காலத்தை சேர்ந்தவை எங்களது எண்பதுகளை நினைவு கூர்பவை.
வாழ்க்கை இசையூடாக பரிணமிக்கின்றது. அழகான நாட்களானவை இசைக்கூடாக பயணப்படுகின்றன.
16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற பாடலான “செந்தூரப்பூவே பாடல்” மெல்லிய இசை அதிர்வுகளுடன் இலகுவாக மனம் என்ற மாயத்தை எங்கோ கட்டியிழுத்து விரைகின்றது. ஆரவாரமற்ற இரவுப்பொழுதுகளில் மௌனத்தின் துணையிருப்புடன் இந்தப்பாடலை கேட்பீர்களாயின் ஒரு காலத்திற்குள் கட்டி இழுத்துச் சென்று கண்ணீர் வரவழைக்கும்.
செந்துாரப் பூவே பாடலுக்கான இணைப்பு.
கர்நாடக இசை விமர்சகர்களில் முதன்மையானவர் காலம் சென்ற பி.வி.சுப்ரமணியமம் என்றழைக்கப்படுகின்ற “சுப்புடு” அவர்கள். செந்தூரப்பூவே பாடலில் இளையராஜா என்ன மாயம் செய்தாரோ? இந்தப்பாடல் மெதுவாக உள்ளத்தை எங்கோ அழைத்துச் செல்வதாக சுப்புடு கூறியிருந்தது இளையராஜாவிற்கான சிறப்பு அங்கீகாரம்.
சுப்புடுவின் கடுமையான இசை விமர்சனங்களுக்குப் பயந்து “நாய்கள் மற்றும் சுப்புடுவிற்கு இங்கு அனுமதி இல்லை” எனMUSIC ACADEMY சென்னையில் விளம்பரத்தட்டி வைத்தது.
செந்தூரப்பூவே என்றால் அது என்ன பூ? செவ்வரத்தையா என ஒருமுறை விமர்சனம் வந்த போது பாடலின் சந்தத்திற்கு இசைவாக சொற்களை கோர்க்க முற்பட்ட வேளையில் செந்தூரப்பூவே என்ற சொல் வந்து விழுந்ததாக பாடலாசிரியர் கங்கைஅமரன் குறிப்பிட்டார். செந்தூரப்பூ என ஓரு பூவும் கிடையாது எனக் கூறிவிட்டார். ஆனாலும் செந்தூரப்பூவிற்குள் ஏதோ நினைவுகளும், ஞாபகங்களும், கனவுகளும் புதைந்திருப்பதாக கண்ணீர் தெரிவிக்கின்றது.
பின்னர் 1988 களில் செந்தூரப்பூவே என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி பின்னாட்களிலும் ஒரு காலப்பதிவை இசை செய்துவிட்டுப் போயிருக்கின்றது.
செந்துாரப் பூவே (1988) பாடலுக்கான இணைப்பு.
இவ்விடத்தில் 1988 கள் என்னை மேட்டுப்பாளையத்திற்கும் ஊட்டிக்கும் அழைத்துச் சென்று சுகஅனுபவம் செய்கின்றன. ஊட்டி என்ற மலை வாசஸ்தலத்தின் அடிவார ஊரான மேட்டுப்பாளையம் பின் இரவுப்பனிப் பொழுதுகளையும் மொட்டை மாடியில் அண்ணாந்து பார்த்த அழகான நட்சத்திரங்களையும் ஞாபகப்படுத்தும்.
இசை என்னை எங்கோ அழைத்துச் செல்கின்றது.மெலிதான மனவருத்தங்களையும், கவலைகளையும் கரைத்துவிடுகின்றன இசைச்சுரங்கள்.
******************************************************************************************************
அடுத்த பதிவில் “அப்புவுக்கு வலிக்கும்”.
காதல் என்ற மனித உயிர்ப்பிடிப்பின் அர்த்தம் பொதிந்த சொல் எல்லோருக்கும் சந்தோசத்தை அள்ளித்தருவதில்லை.
துன்பத்துள் தோய்ந்து கண்களில் கண்ணீர் தேக்கி காலாகாலத்திற்கும் மழைக்குள் நின்று அழும் மனிதனின் சோகம் வெளிப்பரப்பில் யாருக்கும் தெரிவதில்லை. சில சமயங்களில் கண்கலங்கி விட்டு அடுத்தவர்கள் பார்த்துவிடப் போகின்றார்களே என்று இயல்பு வாழ்க்கைக்குள் தங்களையும் கட்டி இழுத்துகொண்டு விரையும் மனிதப்பிறப்புகள் தானா வேடிக்கை மனிதர்கள்?
********************************************************************************************************
Natarajan Sundharabuddhan படித்தேன். பாடலைக் கேட்டேன். இனிமையின் ராகம்.
மறுமொழியொன்றை இடுங்கள்