“கழட்டு அப்பு”
“மனோ பார்த்து.. கைவலிக்கப் போகுது!”
“அதெல்லாம் ஒண்ணும் அப்புவுக்கு வலிக்காது. உனக்கு வலிக்குதா என்ன?என்ன அப்பு நீ?”
என்றைக்குமே மற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியாத வேடிக்கை மனிதர்கள் தங்களுக்குள் வலியான துன்பம் சுமந்து கண்கலங்கிக் கொள்ளும் காட்சிப்படிமத்தின் சிலவரிகள் மேலே கண்டவை. “அபூர்வ சகோதரர்கள்” படத்தில் வரும் இந்தக் காட்சியமைப்பு குள்ளமான, மற்றவர்களால் கேலிக்குட்படுத்தப்படும், சின்னஞ்சிறு மனிதனுக்குள் தேக்கி வைத்துள்ள மலையளவு துன்பத்தின் காட்சிப்படுத்தல். கமலைத் தவிர வேறு யாராலும் அப்பாவித்தனமான, மற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியாத, சோக ரேகைகளை முகத்தில் கொண்டு வருவது … கமல் அற்புத கலைஞன்.
இது படம் பற்றிய சொற்சித்திரம் அல்ல. காதல் என்ற மனித உயிர்ப்பிடிப்பின் அர்த்தம் பொதிந்த சொல், எல்லோருக்கும் சந்தோசத்தை அள்ளித்தருவதில்லை. துன்பத்துள் தோய்ந்து கண்களில் கண்ணீர் தேக்கி காலாகாலத்திற்கும் மழைக்குள் நின்று அழும் மனிதனின் சோகம் வெளிப்பரப்பில் யாருக்கும் தெரிவதில்லை. சிலபல சமயங்களில் கண்கலங்கிவிட்டு அடுத்தவர்கள் பார்த்துவிடப் போகின்றார்களே என்று இயல்பு வாழ்க்கைக்குள் தங்களையும் கட்டி இழுத்துக் கொண்டு விரையும் மனிதப்பிறப்புக்கள் தானா வேடிக்கை மனிதர்கள்?
கழட்டு அப்பு” என கமலிடம் இருந்து மோதிரத்தை மாத்திரமே கழற்றிக்கொள்வதாக படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அவள் கமலிடம் இருந்து கழற்றிக்கொள்வது, அவன் உயிர்ப்பாக சேமித்து வைத்திருந்த அவள் பற்றிய நினைவுகளை, மந்திரச் சொல்லான அவளின் பெயர் பதிவை, காலாகாலத்திற்கும் கண்டு கொள்ள வேண்டிய கனவை என்பதாக விரிகின்றது – எனக்கான மேலதிக காட்சிப்படிமம்.
“அதெல்லாம் ஒண்ணும் அப்புவுக்கு வலிக்காது. உனக்கு வலிக்குதா? என்ன?” படத்தின் கதாநாயகி கமலிடம் கேட்கும் இடத்தில் அழுதுகொண்டே இல்லையென்று தலையாட்டுவது எம்மில் பலருக்கு எப்போதாவது நடந்திருக்கும்.
அப்புவுக்கு வலிப்பதை பார்க்க இங்கே அழுத்தவும்.
கடும் பாறாங்கற்களுக்கும், மலைகளுக்கும், மனிதமேயில்லாத உணர்வாளர்களுக்கும் தான் துன்பத்தின் வலி புரிவதில்லை. கால விசித்திரத்தின் தன்மைகளில் எதிர்ப்பரப்பில் இணைக்கப்பட்டிருந்தாலும், மனப்பரப்பில் தோழமைகளும், நட்புக்களும், காதல்களும் கனன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க – இடைநடுவில் இறங்கிப் போய்விடுகின்ற சாமர்த்தியம் நிறைந்த கெட்டித்தனத்தின் விளைவு வாழ்நாள் பரப்பிற்கும் துன்பம் சுமக்கின்ற அப்புக்களுக்கு வலித்துக் கொண்டேயிருக்க வகை செய்து விடுகின்றது. பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் ஓ வென்று அழுவதற்கு அவர்களுக்கு அவள்களின்பால் அவள்களின் நினைவுகளின்பால் அன்பு ஊறிக்கொண்டேயிருக்கின்றது.
அண்மையில் வாசித்த எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் கவிதை அழகான காதல் எப்படிப்பட்டது என்பதை பாசாங்கற்ற சொற்களால் நிரப்புகின்றது.
“இடுப்பை விட்டு எங்கானாலும்
இறங்க மாட்டேன் என்கிறதாய்
அவளின் நினைப்பை இடுக்கிக்கொண்டு
அடங்கள் செய்யுது மனக்குழந்தை.”
அப்படித்தான் இருக்க வேண்டும் அன்புக்கும் நினைவுக்குமான ஊசலாட்டம்.
இதே படத்தில் தேசிய விருது பெற்ற பாடலான “உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்” பாடல் பிறந்த கதை. முழுக் குள்ள மனிதனின் சோகத்தை வெளிப்பரப்பில் கொட்டுவதற்கு பாடலாசிரியர் வாலியை கேட்ட போது, வாலியும் எழுதிக் கொடுக்க, கமலும் திருப்திப்படாமல் போக, வாலி கோபித்துக்கொண்டு பதினொரு தடவையாக “இதற்கு மேலும் எழுத மாட்டேன்” என்று சொல்லி எழுதிப்போட்ட பாடல் தேசிய விருது பெற்றது.
“கண்ணிரண்டில் நான் தான்
காதல் எனும் கோட்டை
கட்டி வைத்துப் பார்த்தேன்
அத்தனையும் ஓட்டை”
மணமக்களுக்கான விருந்து உபசாரத்தில் வேடிக்கை மனிதனின் உள்ளம் கசிந்த பாடலாக, உணர்ச்சிப் பிழம்பாக கசிந்துருகும் இந்தப்பாடல் தத்துவ முத்துக்களால் கோர்க்கப்பட்டவை. காதல் பிரிவையும், தத்துவாசாரத்தையும் கலந்து உணர்ச்சி மிகு பாடல் எழுதிய வாலி – வாலிபக்கவிஞன்.
மரணம் தான் நினைவுகளின் நிறுத்தம். அதுவரை துன்பம் சுமந்தே வாழ்ந்தாக வேண்டும். விழிமூடி நினைவுகளை நிறுத்த முற்பட்டாலும் கனவுகளில் களிநடம் புரியும் குட்டி தேவதைகள் தானே அர்த்த இரவுகளின் இனிய சாட்சி.
“ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்.
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே”
அப்புக்கள் காலமெலாம் அழுது கொண்டேயிருக்க விதி செய்த இறைவனுக்கும், விமர்சித்து விடைபெற்ற மற்றவர்களுக்கும் “தப்புக் கணக்கை போட்டு தவித்தேன். பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்”.
முகமூடிகள் வேடிக்கை மனிதர்களுக்கான பெருங்கவசம். உள்ளே உயிர் கசிந்துருகுவதை வெளியே தெரியாதபடி மறைக்கின்ற வேலிகள். வாழ்வியல் சாகசங்களுக்கு தப்பிப்பிழைத்து வெருண்டோடி, தினமும் செத்துச் செத்து விளையாடும் வாழ்க்கை வரம் சிலருக்கு இறைவனால் சபிக்கப்பட்டது.
“செத்த பின்னர் சிறுசிதை அடுக்கி
உற்றவர் உறவினர் ஊருலகம் காவிச்சென்று
முத்தமிட்டு பெற்றவள் பிரிவுத் துயரம் தாளாது
கத்தியழும் எனது சாவீடு
சத்தியமாய் சாவகச்சேரியில் நடக்கவேணுமென்று
எத்தனை தரம் எழுதியிருப்பேன்”.
ஆருத்ரா 93 களில் எழுதிய “சுட்டமண்” என்ற தலைப்பிலான கவிதை- புலம்பெயர்ந்த தமிழர் மாநாட்டு மலரில் மீள் பிரசுரம் செய்யப்பட்டதின் சிறுபகுதி. எங்கேயோ சுத்தி சுப்பர் தனது கொல்லைக்குள் வந்துவிட்டதாக தப்பாக கருதி விடாதீர்கள்.
சுப்பர்களுக்கும், அப்புகளுக்கும், அநாதியாக எனக்கும்- உனக்கும், அவனுக்கும்- இவனுக்கும் ஏதோ ஒரு மறைப்பான வெளியே சொல்ல முடியாத சோகங்கள் ஒளிந்து கொண்டிருக்கும்.
உத்தமன் சிவாஜி மஞ்சுளா நடித்து 70களில் ராணி தியேட்டரில் பார்த்த ஞாபகத்துடன்…. சிவாஜி SKATING கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும், மஞ்சுளா மருத்துவக்கல்லூரி மாணவியாகவும் .. காதலுக்கு பணம் தடையாக சிவாஜி தூக்கி வீசப்படுவதும் … உத்தமன் என்னவோ சாதாரண வியாபார சினிமாவின் சிறு கூறு தான். எனினும் நினைவுகளே பெரும்பாலும் நெருடல்களாகப் போய்விடுவதையும், அப்புவுக்கு வலிப்பதானதை ஒத்ததான பழைய சினிமாவின் ஒரு பக்கத்தை கண்டு கொள்வதற்காக இப்பதிவில் கொண்டு வருவதற்கு ஒன்றாக அமைந்திருப்பதுவுமேயாகும்.
“கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ?
நினைவுகளே நினைவுகளே நின்று போகமாட்டீரோ
நிம்மதியை தாரீரோ”
கனவுகள். கனவுகள் துரத்தும் கனவுகள். நிம்மதியான நித்திரைகளை தொலைத்த இரவுகள். தலையணைகளை நனைக்கும் கண்களின் ஈரப்பதன்கள். அவளை ஒத்த சாயலைக் கொண்டவர்களைக் கண்டால் அவளை நினைத்த காலத்திற்குள் கொண்டு சென்று ஞாபகங்களை கிளர்ந்தெழச் செய்யும் அர்த்த பரிமாணங்கள்.
எப்போதாவது எல்லாவற்றையும் சொல்லி அழுதுவிட்டு எங்காவது ஓடிப்போய் விடலாமென்றால் இயலாத்தன்மையுடன் இறுக்கிப்பிடிக்கும் உறவின் பிடிமாணங்கள்.
“காயமொன்று நீ கொடுத்தாய்
காய்ந்த வடு தீரவில்லை
காய்ந்த வடு ஆறுதற்கோ
கை தவழும் சேய் கொடுத்தாய்”.
கண்ணதாசன் மகா கவிஞன். தத்துவம் பாடலாக மிளிர்வதை கண்ணதாசனுக்கூடாக காணவேண்டும்.”கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு” என்று வைரமுத்து வரைந்த பாடலுக்கு அதைவிட தெளிந்த அர்த்தம் செறிந்த பாடல் வரிகளை இவ்விடத்தில் கண்ணதாசன் பதிவாக்கிவிட்டார்.
“கவிதைக்கு பொய் அழகு” என்று வெறுமனே சொல்லிவிட்டுக் போகாமல் அதை உறவின் பிரிவிற்குள் இணைத்து சொன்னது கண்ணதாசனின் கவித்துவம். கெட்டிக்காரத்தனம்.
“கவியுரைத்த கற்பனை போல்
கை பிடித்த பூங் கொடியாள்
பொய்யுரைத்த கவிதையைப் போல்
போன கதை என்ன சொல்வேன்?“
பிரிவை பொய்யுரைத்த கவிதைக்குள் புகுத்திய அந்த கவிச்சக்கரவர்த்தியை கட்டியணைத்து “இச்” தரவேண்டும் போலிருக்கின்றது. “இச்” அன்பின் நெருக்கம்.
அப்புவை ஒத்த சொல்ல முடியாத துயரப்படிமங்களை கொண்டவர்கள், சோகம் வெளிப்பரப்புக்கு சொந்தமானதில்லை என்ற கருதுகோள் கொண்டவர்கள், ஏன் காயங்களை காட்டிக்கொள்ள வேண்டும் என்று பரிதவிப்பவர்கள், உரக்க சிரித்து உட்கார்ந்து அழுபவர்கள், மழைக்குள் கண்ணீர் மறைப்பவர்கள்.
“உன் கதையை நான் எழுத
உயிரை வைத்து காத்திருந்தேன்
என் கதையை நீ எழுதி
ஏடுகளை மறைத்து விட்டாய்”
அதுவரை அப்புகள் கதையின் நாயகிகளால் “அதெல்லாம் ஒண்டும் அப்புவுக்கு வலிக்காது. உனக்கு வலிக்குதா என்ன?”என்று கேட்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.
**************************************************************************************************
வேடிக்கை மனிதர்கள், வேடிக்கை மனிதர்கள் என பதிவு கூறிச்செல்வதால், இது நம்மை பற்றியதல்லாத வேறொரு மாந்தர்புலத்து கதையென்பதாக எண்ணிக்கொண்டு தொடர்ந்து வாசிக்க முடிகின்றது. ஆனால் உள்மன வாசிப்பாக பதிவை உள்வாங்கும் போது தான் மரமண்டையில் உறைக்கின்றது…. அந்த வேடிக்கை மனிதரில் ஒருவராகவே நம் வாழ்வும் சமைக்கப்பட்டிருக்கின்றது என்பது. வலிப்பது அப்புவுக்கு மட்டுமல்ல. அப்புவைப் போல இருக்கும் நம் போன்ற பலருக்கும், மனோவைப் போல இருக்கும் அவள் போன்ற பலருக்கும் தான். நடைமுறை வாழ்க்கையின் அங்கலாய்ப்புகளில் நீர்த்துப்போகாமல் மனித வாழ்வின் உயிர்ப்பிடிப்பை உலுக்கிப் பார்க்கும் ஆருத்ரா வை பிடித்தமான நண்பன் என்பதற்கும் அப்பால் ஒரு படைப்பாளியாக கட்டியணைக்கத் தோன்றுகின்றது.
By: inayatamil on திசெம்பர் 7, 2012
at 8:08 பிப
அப்புவிடம் நட்பு பாராட்ட நான் இருக்கிறேன் என்று சொல்லுங்கள், அவன் சந்தொஷப்படுவான்.
By: ஜானகி சேதுராம சுப்பிரமணியன் on திசெம்பர் 10, 2012
at 4:12 பிப