உலகத்திற்கும், எனக்கும்
தெரிந்த பொதுத்தொழில்
“சுற்றுவது”.
அது சூரியனைச் சுற்றியும்
நான் அவள் பின்னே சுற்றியும்
காலம் கழித்திருக்கின்றோம்.
ஒரு சுற்றுக்கு
அது எடுத்துக் கொண்டது
ஒரு வருடம்.
நான் காலமெல்லாம்!!
எனக்கான சுற்றுவட்டம்
முடியவேயில்லை.
“என்ன இழவடா இது?”
இந்த லட்சணத்தில்
எல்லோரும் கேட்கின்றார்கள்.
“அண்ணை உலகம் அழியப் போகுதாம்”.
நாசா விஞ்ஞானியில் இருந்து
பக்கத்து வீட்டு ராசாவரை
சேதி சொல்கின்றார்கள்.
மாயன் நாட்காட்டியில்
மேலதிகமாக
நாட்கள் இல்லையாம்.
“அழியப் போகுதாம்.”
என் சுற்றுவட்டத்தில்
சிறுபராயம், மீசை முளைத்த பருவம்
நரை கூடிய பருவம்
எல்லாம் வந்து போயிற்று!!!
உருவாக்கியதும், செதுக்கியதும்
உயிர்ப்பாக்கியதும்
உழல வைத்ததும்
எல்லாம் அவளேயாக!!
அவளாகிய என் உலகம்
எப்படி அழியும்?
**********************************************************************************************
உங்கள் உலகமே அவளாகிப் போனது! எப்படி அது அழியும்?
சிறப்பான கவிதை ஆருத்ரா!
பாராட்டுக்கள்!
By: ranjani135 on திசெம்பர் 22, 2012
at 8:07 முப