எழுதுவதற்கான தேவையின்
பாதிகள்
உன்னால் நிறைவேற்றப்படுகின்றன!
ஆசைகளின் அனர்த்தங்கள்
உன்னால் தீர்க்கப்படுகின்றன!!
போதை கொள்ளுமளவிற்கு
கிறங்கிக் கிடக்கின்றது மனது.
புலம்பல்கள் யாவும்
புதிய இராக கீர்த்தனைகளாயின.
ஏதாவது எழுதுவதற்குண்டான
வேட்கைகள்
உன் மலர்ச் சிரிப்பில்
தாக சாந்தி செய்தன.
துயரப்படிமத்தை வழித்துத் துடைத்து விட்டு
மாவிலைத் தோரணம் கட்டி
மகிழ்ந்து கொள்கின்றது இயல்பறியா மனம்.
இப்போதெல்லாம்
வேதாளம் அடிக்கடி
முருக்க மரம் ஏறித் தொலைக்கின்றது.
தலை சுக்குநூறாகிப் போகுமளவிற்கு
கேள்விகள் கேட்பதில்லை.
வேதாளத்திற்கும் விக்கிரமாதித்தனுக்கும்
தெரியாதா காதல் கிறுக்கின் கோலங்கள்?
இடியும் மின்னலுமாக
கொட்டித் தீர்க்கும் மழைதான்
அடங்காத ஆசையின் ஆர்ப்பரிப்பு.
“கண்ணம்மா என் காதலி”
பாரதியின் அதியுச்ச அன்பின் வெளிப்பாடு.
உன்னைப் படித்து முடிக்கவில்லை.
எழுத எதுவும் தோன்றவில்லை.
*********************************************************************************************
மறுமொழியொன்றை இடுங்கள்