கடந்த பெப்ரவரி இலங்கைக்கு செல்வதற்கு அதற்கு மூன்று மாதங்கள் முன்னரே டிக்கெட் வாங்கி வைத்தாயிற்று. முன் அலுமாரியின் கீழ்த்தட்டில் அந்த டிக்கெற் உறங்கிக் கொண்டிருந்தது. பயணத்திகதி, நேரம் சரிபார்த்து கொள்ளுமாறு மனையாள் அறிவுறுத்தியும் மனநிலை, மந்தநிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. விடுமுறை குறித்த கனவுகளும், ஊர் பற்றிய நினைவுகளுமாக முளைவிட்டு மகிழ்ச்சிப் பரப்பில் ஆழ்த்தும் முந்தைய பயணங்களைப் போல இது அமையப்போவதில்லை என எனக்குத் தெரிந்திருந்தது. வாதைகளும், உபாதைகளும் நிறைந்த வயதான பெற்றோருடன் மூன்று வாரங்கள் தங்கி நிற்றல் என்பது இன்னோரு துயரப்படிமானத்தை என்னுள் விதைக்கும், என்னை சிதைக்கும் என்ற பயம் தான் பிரயாணம் செய்வதான சுகங்களை மழுங்கடித்திருந்தது.
புத்தர் தனது 16வது வயதில் தரிசித்த மூப்பு, பிணி, சாக்காடு பற்றிய வாழ்க்கை நிதர்சனங்கள் எனக்கு இந்த வயதில் வந்து வாய்த்திருக்கின்றது. புத்தரைப் போன்று தப்பித்து செல்லமுடியாது. “போய்வா அனுபவித்து வா”என்று அனுப்பி வைத்து விட்டு கைகொட்டிச் சிரித்தது என் மீதமுள்ள வாழ்க்கைக்காலம். இதற்கு நடுவில் எனது பிரயாணம் குறித்து தெரிந்த நல்ல உள்ளங்கள் “பிரயாணம் சிறப்பாக அமையட்டும்” என்று அனுப்பி வைத்த குறுஞ்செய்திகள் என் கைத்தொலைபேசியில் பதிவாயின. கடவுளே!
விமான டிக்கெட்டுக்கள் யாவும் போக வர என இரண்டு தாள்களை கொண்டு கிழித்து வைத்துக்கொள்ளும் பரிமாணத்தில் இருந்து கணணியால் துப்பப்படும் கலாசாரத்திற்கு மாறி கன நாட்களாகிறது. பயணச்சீட்டின் இலக்கத்தை, பயணிக்கின்ற விமான சேவையின் இணையத்தளத்திற்கு சென்று சரிபார்த்துக்கொள்ளும் வசதிகள் வாய்த்திருந்தும் சரிபார்க்காமல் போய் டுபாய் விமாநிலையத்தில் 7 மணிநேரம் TRANSIT ல் காத்திருக்க வேண்டியதாயிற்று. கஸ்ட உபயம் சூரிச்சில் இயங்குகின்ற ஒரு தமிழ் பிரயாண முகவர்.
அதைவிட மோசமானது பிரயாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக கையோடு எடுத்து செல்வதற்கு ஆக எடுத்து தந்திருந்த பிரயாணப் பை. BODY LINE BRAND உள்ளாடை (கோவணம் என்றும் சொல்லலாம். BRANDED உள்ளாடை அணியும் முதல் மனிதா) நான்கைந்து கோப்பு நிறைய காகிதங்கள் (வீட்டு உறுதி,சோலைவரி கட்டிய ரசீதுகள்) எல்லாம் உள்ளடங்கி வயிறு உப்பி 10 கிலோவாகி இருந்த பிரயாணப்பையின் கீழ்ச்சக்கரம் லொடலொடத்தது. ஓட்டுமொத்த உலகமும் இந்த பிரயாணத்திற்கெதிராக சதி செய்வதாகப்பட்டது.
இரவு 8.40 ற்கு சூரிச்சிலிருந்து புறப்பட்டு அழகான வனிதையரின் அன்பு பரிமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு 6 மணி நேரப் பிரயாணத்தின் பின்னர் மிகப்பெரும் வணிக வளாகத்தில் இறக்கி விடப்படும் நாங்கள் சுவிஸ் கடிகாரங்கள், சுவிஸ் CHOCOLATE கள் என நிறைந்திருக்கும் வணிக வளாகத்தில் திரும்பவும் பிரவேசிப்பது சுவிட்சர்லாந்திற்குள் நிற்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தும்..
ஒண்டுக்கு அடிக்கப் போனால் மலசலகூடத்தை தொடர்ந்து சுத்தமான பராமரிக்க வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் இந்திய இலங்கை கவலை தோய்ந்த முகங்களையும் பணிப்பெண் வேலைக்கென இலங்கையில் இருந்து வந்திறங் பலதரப்பட்ட முகங்களையும் தரிசிக்க இயலும். வாழ்க்கை கோடு போட்டு அழைத்து வந்திருக்கின்றது.
ஒவ்வொரு அரைமணிக் கொருதரம் வணிக வளாகத்தை பார்வையால் மேய்ந்துவிட்டு திரும்பவும் உறங்குவதற்கு தோதாக அமைக்கபட்ட இருக்கையில் அமர்ந்து எதையாவது நோண்டி நொங்கெடுத்து, அலுத்துப்போய் அடுத்த விமானமேறி கட்டுநாயக்க போயடைந்தால் என்னை அழைத்துப் போக வந்திருந்தது வழக்கமாக அழைத்துப்போக வரும் அப்பா அல்ல; சித்தி மகன்.
இவ்விடத்தில் தான் நீக்கமற நிறைந்திருந்த அப்பா என்ற விம்பம் கலைந்து போயிற்று. நிகழ்கால சோகம். விடுமுறைக்கு வருவதாக சொன்னதும் எந்த விமானம்? எத்தனை மணிக்கு வருகின்றது? என்பதான தகவல்களை சேகரித்துக் கொண்டு தொலைபேசியில் திரும்ப திரும்ப அதை உறுதிப்படுத்திக்கொண்டு விமான நிலைய வரவேற்பறையில் காத்திருத்து அழைத்துப்போகின்ற அப்பா இப்போது காலாவதியாகி படுக்கையில் முடங்கிக் கொண்டார். எழுந்து நடமாடுவதும் உரையாடலும் முடங்கி கொண்டன. எஸ்.ராமகிருஸ்ணனின் துயில் நாவலில் நோய் வாதை என்ற சொற்களும் நோய்மையின் தீவிரமும் கதைக்களனாக அமைந்திருக்கும். வாதைக்கு பொருள் கொண்டால் “வேதனையோடு கூடிய நோய்” என்பதின் தெளிவான பொருள் அப்பாவாக எனக்கு தென்பட்டார்.
விமான நிலையத்தை அடைந்ததும் புலன் நுகர்ச்சி, வேறு விதமானதட்பவெப்பம் , வாகனப் புகைகளின் வாசனை, புழுதி மணம் என்பதாக பழைய நினைவுகளோடு ஒன்றிப்போகும். இலங்கையும் இருபது வருட மாற்றத்திற்கு ஊடாக மாறுபட்டிருக்கின்றது. உள்நுழைந்து பொருட்களை தெரிவு செய்து வாங்கும் CARGILLS களும் KEELS SUPER MARKET களும் எங்கும் பெருகிவிட்டன.BROILER கோழிகள் கழுத்தில் தூக்கு போட்டபடி ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்தன. வங்கிகளில் வங்கி அட்டைகளில் 10 ஆயிரத்திற்கு உட்பட்ட தொகைகளை பெற்றுக்கொள்ளும் பணப்பட்டுவாடா இலகுவாக்கப்பட்டிருக்கின்றது. குப்பை பொறுக்கும் குப்பனும் சுப்பனும் காதுக்குள் தொலைபேசியை பொருத்திக் கொண்டு வேலை நேரத்தில் உரையாடிக் கொள்ளும் கனத்த கலாச்சாரம் தேசிய மயமாக்கப்பட்டிருக்கின்றது.MINI SKIRT கள் முட்டிக்கு மேலான SHOTRS களாகி விட்டன. (தயா! இவ்விடத்தில் கவனிக்க… அண்ணை போன அலுவலை விட வேறு அலுவலும் கவனிக்கிறார்.)
கடந்த வருடங்களைப் போலவே இந்த முறையும் DUTY FREE ல் வாங்குவதற்கான தொலைக்காட்சிப் பெட்டி INTERNET YOU TUBE வசதிகளுடன் வாங்கி வர வேண்டுமென்பதாய் உறவினர் சொல்லியிருந்தார். DUTY FREE ஐ தாண்டும் போது அலங்க மலங்க விழித்தபடி கடைகளை நோக்கினீர்கள் என்றால் உங்களை கடைக்காரர்கள் சூழ்ந்து கொள்வார்கள். தெரிவு செய்ய வழியே இல்லாமல் தங்களது தான் சிறந்தது என தலையில் கட்டி விடுவார்கள். பின்னர் உறவினர்களுடன் லோல் பட வேண்டியிருக்கும். இணையத்தில் உலாவி சிறிதான தகவல்களையும் தாங்கி சென்றீர்கள் என்றால் கொள்வனவிற்கு இலகுவாகி இருக்கும். உறவினர்கள் இன்முகத்துடன் வரவேற்றுக் கொள்வார்கள். சிறப்பான விருந்து உபசாரம் நடைபெறும்.
ஆனாலும் விமான நிலையம் விட்டு சிறு வெள்ளை வானில் புறப்படுகையில் வெளித்தெரிவன எல்லாம் அழகாக இருக்கும். மனதிற்கு நெருக்கமானதாக தோன்றும். ஐரோப்பாவின் முழு அந்நியத் தனம் எமது பார்வையை விட்டு மறைந்திருக்கும். ஒரு இலகுதன்மை தொற்றிக்கொள்கின்றது.
நான் எண்ணும் பொழுது சிறு சுகம், இன்பதினம்.
…. செல்லும் மனது
ஆற்றிலே ஆற்றங்கரை ஓரத்திலே
அங்கு வந்த காற்றினிலே தென்னை இளங்கீற்றினிலே
சீதுவை, கந்தானை, மாபாகே எல்லாம் கடந்து வத்தளைப் பெரு நகரம். கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட எல்லைக்கு அணித்தான நகரம். தமிழும் தமிழர்களும் பெருகி வாழ்கின்ற சூழல்.
வீட்டை அடைந்தால் அம்மா வந்து அன்புடன் கட்டிக் கொண்டார்கள். அப்பா கைபற்றி விசிப்புடன் சிறு விசும்பல். நேற்றியில் சூடான முத்தம். நீண்ட நேரம் கனத்த பெரு மௌனம். ஒரே வருடத்திற்குள் இரண்டாவதான பயணம் என்றாலும் அப்பாக்களின் அம்மாக்களின் அழுகைகளும், விசும்பல்களும் அன்பும் பெருகித்தான் போயின.
தென்னை மரங்களினூடே அணில்களின் கீச்சுகீச்சு சத்தம். சாமியறையில் இருந்து தருவித்து நெற்றியில் அப்பா பூசிவிட்ட திருநீறு. சற்றே முறுகலான நெய்வாசத்துடன் அம்மா வார்த்து வைத்த தோசை. தொட்டுக்கொள்ள உளுந்து வறுத்து கூடவே கூடவே இடித்து வைத்திருந்த சம்பல்.
வாழ்க்கை கனவு மீதாக பயணிக்கின்றது. இந்த நாள் என்பது இன்றைய கணப்பொழுதுதான். இன்னும் இரண்டு மணி நேரத்தில் சாவகச்சேரி நோக்கி பயணிக்க வேண்டும். அண்ணை ரைட்.
***************************************************************************************************
ஆருத்ராவின் மருத்துவமனைக் குறிப்புகள்.
இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சூரிச் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாயிற்று. சிறுவலியாக உருவெடுத்தது இடது வயிற்றுப்புறத்தில் பெருவலியாக உணரப்பட்டது.இது போன்றதொரு வேதனையை இதுவரைஅனுபவித்ததில்லை.
நோய்களின் வருகை வாழ்வை அதீதமாக உணரவைப்பதற்காகத்தான் என்று எனக்குப் படுகின்றது.அந்த இரவுப்பொழுது வலி மிகுந்த துயர் நிறைந்தது.அங்கு பணியாற்றும் நண்பர்களல்லாத தமிழ் அன்பர்கள் ஓரளவிற்கு பரிச்சயமானார்கள்.
அடுத்த நாளில் இருந்து அங்கு பணியாற்றும் பயிற்சி பெறும் மருத்துவ மாணவிகள் சிவகௌரியும், வாத்சனாவும் அடிக்கடி வந்து கதைத்து கவனித்துக் கொண்டார்கள். சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.தெரியாத இடத்தில் புதிதான நட்பு. வாழ்க்கை நோய் சார்ந்தும் அன்பு சார்ந்தும் இயங்குகின்றது.
****************************************************************************************************
நெகிழ வைக்கும் பதிவு.
By: rathnavelnatarajan on ஏப்ரல் 8, 2013
at 10:51 முப