நேற்றுப் போன்றிருக்கின்றது பாடசாலைக் காலங்கள். காலையிலிருந்து பின்மதிய நேரம் வரை கனவு தின்று காலம் கழித்ததை சிறுபராயமும், பதின்மத்தின் முழுவதும் செய்து முடித்திருக்கின்றது. மனம் இறக்கை கட்டிப் பறந்ததையும், காதல் களிநடனம் புரிந்ததையும் கல்லூரிக் காலம் உள்ளடக்கி வைத்திருக்கின்றது. கல்லூரிக்கு வருவது கல்விகற்க மட்டும் தான் என்று சொல்லும் ஜென்மமாயின் நீங்கள் சிறுபராயத்தில் சுகப்பிரவேசம் செய்யவில்லை என்றும், வாழ்வின் வசந்தத்தை தவற விட்டவர்கள் என்றும் அர்த்தமாகும்.
பெரிய பாடசாலையின் பின்புறமுள்ள கனிஸ்டபிரிவு கட்டடம் இப்போது என்னவாக இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பது தெரியவில்லை. முப்பந்தைந்து வருடங்களுக்கு முன்னரான காலத்தில் “பிடியதன் உருவுமை” ,”சொற்றுணை வேதியன்” சொல்லித்தந்த இடம். அந்தக்கட்டடத் தொகுதியின் முதல் அறை அழகரத்தினம் ஆசிரியையுடைய இரண்டாம் வகுப்பு. அதற்குப் பக்கத்திலேயே சிறுவர்கள் நம்பர் ONE போகும் அறையும் நெருங்கி இருந்ததால் அந்த இரண்டாம் வகுப்பு மறுநினைவிற்கு மூத்திர வகுப்பாக முன்நிற்கின்றது.
திருக்குறளை எழுதியவர் முருகக்கடவுள் என்ற பிழைபாடான அறிவின் திருத்தமும், ஆக்கினை பண்ணுபவர்கள் ஆசிரியர்கள் என்ற கருத்தின் நெருக்கமும் எம்மை அந்த வகுப்பிற்கூடாக அழைத்துச் சென்றிருக்கின்றது. இரண்டாம் வகுப்பும், அழகரத்தினம் ஆசிரியையும் இனிமையானவர்கள்.
இரண்டாம் வகுப்பு இருட்டான வகுப்பு. ஆசிரியை தேவாரம் சொல்லச் சொல்ல மிக விரைவாக எழுதி முடித்த மாதவனும், பின்னாட்களில் மிக நெருக்கமான இன்னொரு தோழனும் இந்த இரண்டாம் வகுப்பிற்குள் எனக்கு கிடைத்தார்கள். பென்சிலின் விலை 10 சதத்திற்கும், கறுவாப்பட்டை ஐந்து சதத்திற்கும் கிடைத்த காலங்கள். சிறு இடைவேளையில் காற்சட்டைப்பையில் கெயார் பிஸ்கட்டும், மேசையில் சிறுகடை பரப்பி கறுவாப்பட்டை, கோணல்புளி , பாடசாலை உபகரணம் விற்கும் ஆச்சியிடம் வாங்கிய கறுவாப்பட்டை, கோணல்புளியும் இடம்பெற்றிருக்கும். கோணல்புளியின் மெத்தென்ற தோலும் வாயில் வைத்தவுடன் கரைந்து விடும் அதன் உள்ளடக்கமும் ஞாபகத்திற்கு நன்றி சொல்கின்றன.
மிகக் கறுப்பான வைத்திலிங்கம் மாஸ்ரர் அவர்கள் கனிஸ்டபிரிவு அதிபராக கடமையாற்றியதாகவும், அவரது அதிபர் அறை கால் வைக்க கூசும் கவலைக்குரிய பிரதேசமாக எமக்கு ஆகிப்போயிருந்ததையும் சொல்லியாக வேண்டும். அவரிடம் சிக்கிக்கொண்டால் சின்னாபின்னப்பட்டு போய்விடுவோமோ என்கின்ற பயம் ஆறாம் வகுப்பு கற்கும்வரை மறையாமல் இருந்தது.
கனிஸ்ட பிரிவின் கேளிக்கை களமாக சரஸ்வதி பூசை காலங்கள் நினைவில் நிறுத்தப்படுகின்றது. அந்தப்பத்து நாட்களும் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாடலுக்கு அபநயம் பிடித்த சின்னஞ்சிறு கிளியும், சிறுவயது வில்லுப்பாட்டு நிகழ்வும், மகிழ்ச்சிப் பரப்பின் மானசீகக்காலங்கள். முதலாவது பாட வகுப்பிலேயே உபத்திரமான கணித பாடத்திடம் இருந்தும், வாய்ப்பாடு கேட்டு பிரம்பால் வெளுத்து தள்ளும் மூன்றாம் வகுப்பு ஆசிரியரிடம் இருந்தும் பத்துநாள் சரஸ்வதி பூசை காப்பாற்றி எமை அழைத்து சென்றிருக்கின்றது. வெற்றிலை மென்று குதப்பும் லாவகமும், நெற்றியில் பட்டையாக இட்டுக்கொண்ட திருநீறும், வெள்ளைவெளேர் வேட்டியும் அவ்ஆசிரியரை என்றென்றும் நினைவில் நிறுத்தும்.
அக்காலத்திய கற்பித்தல் முறைகள், அதற்கு முந்தைய கற்பித்தல் முறைகளில் இருந்து சிறிது தளர்வாக ஆக்கப்பட்டிருந்ததாலும் பெரும்பாலான பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் வைக்கும் வேண்டுகோளான “நல்லா அடிச்செண்டாலும் உவனை படிப்பிச்சு விடுங்கோ” என்பது ஆசிரியர்களுக்குரிய வானளாவிய அதிகாரங்களை வழங்கி விடுகின்றன. மூன்றாம் வகுப்பை போன்று பயமுறுத்திய காலங்கள் போர் உச்சத்தை தொட்ட காலங்களில் கூட அமையவில்லை. தினமும் வயிற்றில் புளியை கரைத்தது போன்ற உணர்வுடன் பாடசாலை ஏகிய காலங்கள்.
எங்கள் ஐந்தாம் வகுப்பு காலங்கள் கணபதிப்பிள்ளை என்ற ஆசிரியையுடயவை. ஆசிரியைகள் எவரும் அவர்களது கணவர் பெயர்களால் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அந்த ஆசிரியைகளது சொந்த பெயரை அறியும் ஆவல் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு. ஒவ்வொரு பெண்ணின் பெயர்களும், அடையாளங்களும், பெண்ணின் அதீத விருப்புடன் ஆணாதிக்க சுவர்களுக்குள் வெட்டி வீழ்த்தப்பட்டதை கவலையுடன் கவனித்திருக்கின்றேன்.
இப்பொழுதெல்லாம் வெளிநாட்டு உற்பத்தியை புறக்கணிப்போம், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்போம் என்ற கோசத்தோடு COLA, PEPSI, WALLMART போன்ற அமெரிக்க பெரு நிறுவனங்களின் பொருளாதார பெரும்பசிக்கு மூன்றாம் உலக நாடுகள் இரையாவதை பற்றியெல்லாம் பெருமளவில் கவன ஈர்ப்பு நடைபெறுகின்றது.
எனது ஐந்தாம் வகுப்பிலேயே எனது சக மாணவர் எனது கவனத்தை ஈர்த்தார். ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் கைவினை சம்பந்தமான பாடம் ஒன்று இருந்தது. பரீட்சை சமயத்தில் கைவினை சம்பந்தமாக ஏதாவது ஒரு பொருளை உருவாக்கி ஆசிரியையிடம் காட்டி புள்ளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். சில மாணவர்கள் கலர் கலரான பேப்பர்களின் உதவியுடன் பூக்கள் செய்வதும், அட்டைப்பெட்டிகள் கொண்டு சிறிய CARகள் செய்வதும், பெண்பிள்ளைகள் சிறிய கைக்குட்டை தைத்தல் போன்றன வழக்கமான வாடிக்கையானவற்றை செய்து கொண்டிருப்பார்கள்.
கல்வயலில் இருந்து எங்கள் வீதிவழியே பாடசாலை விரையும் தோழன் ஊறப்போட்ட தென்னை ஓலையின் பாதியை எடுத்துச் செல்வதை கண்டேன். எனது தாயாரும் “இந்தப்பெடியன் எதற்கு பாடசாலைக்கு தென்னை ஓலையை இழுத்துச் செல்கின்றது” என்று ஐயம்பட வினவினார்.அன்றைய கைவினை பரீட்சையில் நாங்கள் பூக்கள், மரம் என்று மினக்கெட்டுக் கொண்டிருக்க நண்பர் வகுப்பிற்கு வெளியே வைத்திருந்த தென்னை ஓலையை வகுப்பிற்குள் இழுத்து வந்து கிடுகு பின்னிக் காட்டி 85 புள்ளிகள் எடுத்துக் கொண்டார்.வாழ்க உள்ளுர் உற்பத்தி… வளர்க தேசப்பற்று.. அந்த நண்பர் இப்போது நல்லூர் செயலகத்தில் கடமையாற்றி வருகின்றார். சுதாகரன் என்ற திருநாமத்தை வெளியே சொல்வதற்காக என்னை கோபித்துக் கொள்ளமாட்டார் என நம்புகின்றேன். கடந்த பெப்ரவரி விடுமுறைக்கு சாவகச்சேரி சென்றிருந்த போது மட்டுவிலில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது கடைக்குட்டிப் பெண் உருண்டை விழிகளுடன், இரட்டை சடையுடன் அப்பா செல்லமாக அவரது மடியில் உட்கார்ந்து என்னை கவர்ந்து கொண்டிருந்தாள்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரி பற்றிய பதிவில் பூ.வெற்றிவேறு என்கின்ற ஆளுமை மிக்க, மற்றவர்களால் கீழ்படிதலோடு மதிக்ககூடிய, கம்பீரமான எங்கள் அதிபரை பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் நீண்ட காலம் அதிபராக இருந்தவர் என்பதோடு பாடசாலையை திறம்பட நிர்வகித்தவர் என்பதற்கு அப்பால், காலை வேளைகளில் பாடசாலை விறாந்தை வழியே அவர் நடந்து வருவதே தனி அழகு -கம்பீரம். வெள்ளை அரைக்கை சட்டை அவரது தனித்த அடையாளம். பெரும் சத்தத்தோடு பேச்சுத் தொனிகளால் நிரம்பி வழியும் வகுப்பறைகள் நிசப்த நிலைக்கு வருமானால் அதிபர் அவர்கள் அவ்வழியே ROUNDS வருகின்றார் என்று உய்த்துணர்ந்து கொள்ளலாம். எந்த வகுப்பில் எவர் குளப்படி என்பதெல்லாம் அவர் விரல்நுனியில் தகவல்களாக சேமிக்கப்பட்டிருக்கும். குளப்படிகாரரை தனிப்பட கவனித்தாலே வகுப்பு மொத்தமும் அடங்கிவிடும் என்பதெல்லாம் அதிபரால் கைக்கொள்ளப்படும் எளிதான நடவடிக்கைகள்.
பூ.வெற்றிவேலு அதிபரிடம் அடிவாங்க இருந்து தப்பித்துக் கொண்ட நிகழ்வு ஆருத்ராவிற்கும் இருக்கின்றது.அன்று அடிவாங்காமல் விட்டுவிட்டதற்காக கவலைப்பட்டு ஏங்கிக் கொள்வது இன்று நடந்தெய்திக் கொண்டிருக்கின்றது.
பாடசாலை வளாகத்திற்குள் சைக்கிள் ஓட்டிச் செல்லல் ஆகாது என்று பொதுவிதி இருக்கின்றது. பரீட்சை சமயத்திலும், மதிலால் எட்டி நோக்கி “அதிபர் அறைக்குள் இல்லை” என்று உறுதிப்படுத்திக் கொள்ளும் நேரத்திலும் இவ்விதி எங்களால் மீறப்பட்டு வந்தது.
அன்று பரீட்சை என்பதாலும் மதிலால் எட்டிப்பார்த்ததில் அதிபர் அறை பூட்டப்பட்டிருக்கின்றது என்றதாலும் பாடசாலைக்குள் சைக்கிள் ஓடி வந்தால் அவர் அதிபர் அறையின் வராந்தாவில் நின்று கொண்டிருக்கின்றார். அவர் யாரையாவது கூப்பிட வேண்டுமானால் கைதட்டிக் கூப்பிட்டுக் கொள்வதும் எனக்கும் அவ்வாறே நிகழ்ந்ததும் நினைவில் நிற்கின்றது.
சைக்கிளால் இறங்கி அவரிடம் சென்றால் சிக்கி சின்னாபின்னப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் சைக்கிளை அதிவிரைவாக செலுத்தி சைக்கிள் விடும் இடத்தில் விரைவாக விட்டுவிட்டு, அருணாச்சல மண்டபத்தின் பரீட்சை HALLக்குள் சென்று உட்கார்ந்துவிட்டேன். அங்குள்ள மாணவர் குழாத்தினுள் கலந்துவிட்டால் தனித்து என்னை அடையாளப்படுத்த முடியாது என்ற தைரியம் என்னை அவ்வாறு வழிநடாத்தியது.
இரண்டு தடவை HALLக்குள் வந்து எட்டிப்பார்த்து விட்டு கைக்கு அகப்படாத கோபத்தில் அதிபர் சென்று விட்டார். அவர் எனக்கருகில் வந்திருந்தால் பயத்திலேயே நடுங்கி பிடிபட்டிருப்பேன். தினமும் கனவுகளை தின்று செரித்து வாழும் எனக்கு தற்போதெல்லாம் அதிபரிடம் ஒரு அடி வாங்கியிருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகின்றது.
எங்கள் பாடசாலைக் காலத்திலேயே நடந்த இன்னொரு நடப்பும் நினைவில் தடம் பதிக்கின்றது.1978, 1980 களில் அது நடந்ததாக நினைவு. சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆசிரியர்களுக்கான சம்பளப் பணம் மாதத்தின் தொடக்கத்தில் அதிபர் அறையில் வைத்து வழங்கப்பட்டு வந்தது. அதற்கான பணத்தை மக்கள் வங்கி கிளையிலிருந்து அதிபர், இன்னொரு ஆசிரியர் எடுத்து வந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது மாதாந்த நடவடிக்கை.
அக்காலத்தில் சிறு ஆயுதப் புழக்கமும், விடுதலைப் போராட்ட எழுச்சியும்,கூ டவே வளர்ந்த கொள்ளைகளும் தாராளமாக இருந்தன. மக்கள் வங்கிக் கிளையிலிருந்து பணம் எடுத்து வந்த கார் கல்லூரிக்குள் நுழைய வேண்டிய இடத்தில் சிறு ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் வழிமறிக்கின்றனர். அதிபர் அவர்கள் பணம் எடுத்து வந்த பையை விடவேயில்லை. இழுபறியில் பணப்பை கிழிந்து வீதியில் பணம் கொட்டியதும், திட்டமிட்ட கொள்ளை பிசுபிசுத்து விட்டதும், கொள்ளையர்கள் ஓடிவிட்டதும் மைதானத்தினூடாக வகுப்பறையிலிருந்து தரிசித்த நிகழ்வுகள். வெற்றிவேல்-வீரவேல்.
நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க, உயர்வகுப்பு மாணவர்களால் உற்று நோக்கப்பட்டு “நடையலங்காரம்” என்ற பட்டப்பெயரோடு அழைக்கப்பட்ட ஆசிரியை தற்போது எங்கிருக்கின்றார் என்பதும், தனது “நாபிக்கமலத்தை” வெளித்தெரியும்படி சாறி கட்டிக்கொண்டு வரும் பௌதீக ஆசிரியை தற்போதும் இரட்டை அர்த்த நகைச்சுவை சொல்லி சிரித்துக் கொள்வாரா? என்பதும் என் மண்டைக்குள் குத்திக் குடையும் கேள்விகளாக இருந்து கொண்டிருக்கின்றன. (ரொம்ப முக்கியம்)
படிப்புகளை பெற்றுக்கொள்கின்ற இடமாக பாடசாலைகள் திகழ்கின்றன என்றால் நான் பெரும் படிப்பினையை பெற்றுக்கொண்ட இடமாக அது திகழ்கின்றது. மீளமுடியாத கனவுகளையும், தாளமுடியாத துக்கங்களையும் பாடசாலை பரிசளித்திருப்பின் அவைகள் படிப்பினைகள் தானே.வேறென்ன சொல்வது?
ஒவ்வொரு விடுமுறைக்கும் ஐரோப்பாவில் இருந்து சாவகச்சேரி செல்லும் பொழுதுகளில் பிரதான வீதிவழியே சங்கத்தானை நெருங்குவதும் இருளின் பிடியில் அமிழ்ந்திருக்கும் பாடசாலைக் கட்டடங்கள் ஆழ்ந்த நினைவுப் பிடிப்பை என்னுள் ஏற்படுத்துவதும், இறந்த கால நினைவுகளில் நான் மூச்சு திணறுவதும் இன்றளவும் வாடிக்கை.
எல்லோருக்குள்ளும் ஏதோ கதைகளும், பிணைக்கப்பட்ட பதிவுகளும் இருக்கின்றனவே?.தூக்க முடியாமலும், தவிர்க்க முடியாமலும் இருக்கின்ற தவிப்புகளும் இருக்கின்றனவே.ஆறுதல்களால் ஆற்ற முடியாத அம்மணங்கள் அவை.
பாடசாலை மனதிற்கு நெருக்கமானது. அழகானது. நெஞ்சார்ந்த உவகையை அள்ளித்தருவது.பக்கத்திலே இராமநாதன் வீடு, சைக்கிள் விட்டு வருகின்ற விதானையார் வீடு, முருகமுர்த்தி கோவில், அதற்கு முன்னான சனசமுக நிலையம் என சற்று நேரம் நின்று நெடு மூச்செறியலாம். வாழ்வு அதற்குத்தான் வாய்ப்பளித்திருக்கின்றது.பாடசாலைக் காலங்கள். சொர்க்கத்தின் உற்சவங்கள்.
வெறும் கட்டடங்களால் ஆனதாக எண்ணிக் கொண்டதில்லை. அதற்குள் உயிர்த்துடிப்பான உணர்வுகளும் கடவுள்களாக எண்ணிக் கொண்ட கனவுகளும் மீதமிருக்கின்றன. வாழ்வின் ஆதார சுருதி அங்குதான் இசைக்கப்பட்டது.வெளித்தெரியாத உணர்வுகளுக்கான வடிவம் செதுக்கப்பட்ட சிற்பக்கூடம். நினைவாலே சிலை செய்த சில நினைவுத்துளிகள்.காதலின் கனதி. கனவின் மீதம்.
குறிப்பு: எழுதியவற்றில் பெரிய பதிவு. எழுதி முடிக்கப்படாமல் “இன்னும் , இன்னும்” ஏதோ இருப்பதாக எண்ணுகின்றேன்.எங்கள்A/L புதுமுக வகுப்பு, BAG வாத்தியார் என்கின்ற சிவலிங்கம் MASTER, எங்களுடன் ஐந்து வருடங்களாக வகுப்பாசிரியராக பயணித்த லோகநாதன் ஆசிரியர், இரசாயன ஆய்வுகூட நெருப்பு என ஏராளமான எண்ண அலைகள். கண்ணாடி டீச்சர்!!எங்கே போய் கனப்பது!! கண்ணீர் சிந்துவது!!!!!
பரம்பரம் சோதி.பரனே போற்றி. நலம் நாடுக! புரிக! ஔிர்க!
நண்பர்களே! இந்தப் பதிவை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்கள். இதுவே எனது கடைசிப் பதிவாகவும் அமையலாம்.
***************************************************************************************************
வருகின்ற சனிக்கிழமை 27.04.2013 சாவகச்சேரி இந்துக்கல்லுாரி இங்கிலாந்து கிளையினரால் 19 வது வருட ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TICKETS:
£20 for a Family ticket (2 Adults & 2 Children)
I also studied in the same period couldn’t forget Nadaraja master ,Kannadi teacher and Kanapathipallai teacher.Thanks for remembering them.
By: Dr.K.Lavakumar on ஏப்ரல் 24, 2013
at 4:54 முப
இப்பந்தியில் வரும் மாதவன் சிலவேளை நானாக இருக்கலாம். ஏனெனில் நானும் நீங்கள் குறிப்பிடும் காலப்பகுதியில் அழகரத்தினம் ஆசிரியையிடம் இரண்டாம்வகுப்பில் படித்தேன்.
(இரண்டாம் வகுப்பு இருட்டான வகுப்பு. ஆசிரியை தேவாரம் சொல்லச் சொல்ல மிக விரைவாக எழுதி முடித்த மாதவனும், பின்னாட்களில் மிக நெருக்கமான இன்னொரு தோழனும் இந்த இரண்டாம் வகுப்பிற்குள் எனக்கு கிடைத்தார்கள். பென்சிலின் விலை 10 சதத்திற்கும், கறுவாப்பட்டை ஐந்து சதத்திற்கும் கிடைத்த காலங்கள். சிறு இடைவேளையில் காற்சட்டைப்பையில் கெயார் பிஸ்கட்டும், மேசையில் சிறுகடை பரப்பி கறுவாப்பட்டை, கோணல்புளி , பாடசாலை உபகரணம் விற்கும் ஆச்சியிடம் வாங்கிய கறுவாப்பட்டை, கோணல்புளியும் இடம்பெற்றிருக்கும். கோணல்புளியின் மெத்தென்ற தோலும் வாயில் வைத்தவுடன் கரைந்து விடும் அதன் உள்ளடக்கமும் ஞாபகத்திற்கு நன்றி சொல்கின்றன.)
By: Kathiresu. Mathavan. on மே 3, 2013
at 10:29 பிப
நான் சாவகச்சேரி இந்துக்கல்லுாரி பதிவில் எழுதிய மாதவன் நீங்கள்தான். தங்கள் தந்தையார் கதிரேசு ஆசிரியரிடம் இராமநாதன் TUITION இல் சிலகாலம் விஞ்ஞானம் கற்றிருக்கின்றேன்.
By: ஆருத்ரா on மே 4, 2013
at 6:59 பிப
ஆருத்ரா என்பது உங்கள் சொந்தப்பெயரா? இல்லையெனில் உங்களது சொந்தப்பெயர் என்ன? ஞாபகப்படுத்தி பார்க்கின்றேன் முடியவில்லை. தயவுசெய்து மன்னித்துகொள்ளவும்.
By: Kathiresu. Mathavan. on மே 9, 2013
at 8:32 பிப
Jana vijayakumar Toronto Canada
லாவகமான நகைச்சுவை உணர்வு முதலிருந்து முடிவுவரை முறுவலுடன் வாசித்தேன். ஒவ்வருவருக்கும் கலவையான பல அனுபவங்கள் பாடசாலை காலங்களில் இருந்தாலும் அவற்றை சொற்களில் இயம்ப தெரியாது. ஆனால் உங்கள் அனுபவங்கள் எல்லாம், எல்லோரும் இப்பொழுதும் நினைத்தால் கூட இனிமையாக இருக்க கூடியவை. மூன்றாம் வகுப்பை போன்று பயமுறுத்திய காலங்கள், போர் உச்சத்தை தொட்ட காலங்களில் கூட அமையவில்லை – இது நகைச்சுவையின் உச்சம். அருமையான ஒப்பீடு. கால் வைக்க கூசும் கவலைக்குரிய பிரதேசம் – நன்றாகவே சிரித்தேன். அதில் வந்த பல ஆசிரியர்களின் பட்ட பெயர்கள் நமது குளாத்தினரால் சூட்டப்பட்டவை. அருமையான ஞாபகங்கள். இதுவே எனது கடைசி வரைவாக இருக்கலாம் என எழுத பட்டு இருந்தது. அசை போடுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது ஆருத்ராவிடம். எழுதுங்கள். நன்றி.
By: ஆருத்ரா on ஜூன் 26, 2013
at 6:10 பிப
Javakathevan Swiss.
Aruththira, unkalukku enatu manamartha vaalththukkal.Emathu sorkka bumijaka katutum enkal Chavakachcheri HINDU COLLEGE kuddichchnrulirkal.atbuthamana veligedu.naan balamurai vasiththen.Pu,Vettivelu emathu collegein valatcijin muthukelumbu.
unkal kalankalil naankalum.
Aruththiravukku mendum nanrikal.
By: javakathevan on நவம்பர் 25, 2014
at 9:01 பிப