இந்தியாவை விடுமுறைக்குரிய சுற்றுலாத்தலமாக தேர்வு செய்தவுடன் தமிழ் நாட்டின் பெருநகரங்களும், ஆன்மீகத்தலங்களும் நினைவாக மேலெழும்புகின்றன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெருநகரங்களும் பெரும்பாலும் கோவில்களை மையப்படுத்தித்தான் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஊர் சுற்றிப் பார்ப்பது சந்தோசமான விசயம் தான். ஊர்சுற்றிப் பார்ப்பதுடன் கூடவே ஆன்மீகத்தலங்களையும் தரிசிப்பது மேலும் உவப்பான விசயம்.
2010ம் ஆண்டின் விடுமுறைக்கு இந்தியா போவதாக முடிவெடுத்தவுடன் என் நினைவுக்கு வந்தது திருவண்ணாமலை. திருவண்ணாமலை பெருநகரம் கிடையாது. அருணாச்சலேச்சுவரர் ஆலயமும்,அதனை அண்டிய வணிக ஸ்தலங்களும் இணைந்த சிறு நகரம். ரமண மகரிஷி , விசிறி சாமியார் வாழ்ந்து மறைந்த திருத்தலம் என்ற அளவிலான சிறு புத்தக வாசிப்புடன் எனக்கு அறிமுகமாகிய திருவண்ணாமலையை நேரில் தரிசிப்பதற்கு ஆவலுற்ற கணங்களை இந்த சுற்றுலாப்பயணம் நிறைவேற்றித் தந்தது.
தட தடத்து விரைந்து வாழுகின்ற ஐரோப்பிய வாழ்க்கைச் சூழலை, தாளகதியுடன் இணைந்த இரசமான நிலைக்கு எடுத்துச் செல்பவை வருடத்தில் ஒருமுறை பயணிக்கின்ற இந்த சுற்றுலாப்பயணங்கள் தான். பயண ஏற்பாடுகளில் முதன்மை பெறுவது இந்த பயணதிட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள், ருசிக்க வேண்டிய உணவு விடுதிகள் என நான் தயாரிக்கும் சிறு பட்டியல். பெருமளவிற்கு பார்த்த இடங்களையும், தரிசித்த தலங்களையும் மீண்டும் மீண்டும் காண நேரிட்டாலும் அன்றலர்ந்த பொழுதில் அந்தக்கணங்கள் புதிதானவை தான். எப்பொழுதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
இது மூன்றாவது முறையான இந்தியப்பயணம் என்றாலும் எண்பத்து மூன்றிலும், எண்பத்து எட்டிலும் வசித்த மேட்டுப்பாளையம் சிறுநகரமும், அங்கேயே இருக்கின்ற சில நண்பர்களும், திருவண்ணாமலையும் பார்க்க வேண்டியதில் முதன்மை பெற்றன. வளசரவாக்கத்தில் சகோதர முறையான உறவினர் ஒருவர் தங்கள் வீட்டிலேயே எங்களைத் தங்கச் சொல்லி கேட்டிருந்தார். எங்களது சௌகரியம் கருதிய தந்தையாரோ வளசரவாக்கத்தில் உணவுவிடுதியுடன் கூடிய HOTEL ஒன்றில் அறை ஏற்பாடு செய்திருந்தார். அந்த HOTEL வளசரவாக்கத்தில் விடுமுறைக்கு வருகின்ற அனைவருக்கும் உகந்தது என்பதை அங்கே தங்கி இருக்கின்ற கனடா, பிரான்ஸ் இலிருந்து வந்திருந்த இலங்கையர் குழாம் உறுதிப்படுத்தி இருந்தது.எனது போதாத காலம் தண்ணீர் குழாயை திறந்தால் வெடில் மணத்துடன் கூடிய மஞ்சள் தண்ணீர் அந்த HOTEL ஐ விட்டு விட்டு உறவினர் வீட்டிலேயே தங்கலாம் என எனக்கு சொல்லியது.
உண்மையில் வீட்டுச்சூழலை HOTEL அறைக்குள் எதிர்பார்ப்பது மடத்தனம். இரண்டும் நேரெதிர் துருவங்கள்.
உறவினர் உரையாடல், அன்பு, வீட்டுச்சாப்பாடு, நட்பு , மேலதிக நெருக்கம் எல்லாம் உறவுகளிலும் உறவினர் வீடுகளிலும் தான் கிடைக்கின்றன. வளசரவாக்கம் நாம் போயிருந்த போது அதிகளவு யாழ்ப்பாணத்தவர் என்று எங்களால் கூறப்படுகின்ற குடாநாட்டுத் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற பகுதியாக தென்பட்டது.பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்கள் வளசரவாக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. சலங்கைஒலி படத்தில் கமலுக்கு அம்மாவாக நடித்த துணை நடிகை, தொலைக்காட்சி தொடர்களின் சிறுநடிகர்கள் பக்கத்து வீடுகளில் தொடர் படமாக்கப்பட்டிருந்த போதும் வீதிவழியே போகும் போதும் காணக் கிடைத்தார்கள்.. உலகம் ஒரு நாடக மேடை. வாழ்க்கை அங்கே நடக்கின்ற நிகழ் தரிசனம்.
எனக்கு பிடித்த காலை உணவு வெண்பொங்கல். கூடவே சில்வர் டபாரா தட்டில் தரப்படுகின்ற காபி. நான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வளசரவாக்கத்தின் பிரதான வீதியான ஏற்காடு றோட்டில் அமைந்துள்ள சிறு உணவு விடுதிக்கு ஒன்றரை கீ.மீ தூரம் நடந்து செல்வேன். உறவினர் வீட்டில் சாப்பிடக் கிடைத்தாலும் அந்த வெண்பொங்கல் ருசிக்காக அந்த கடையை தெரிவு செய்திருந்தேன். பச்சை அரிசி, பயறு, பால் சேர்த்த அந்தப் பொங்கலில் மிதக்கும் மிளகும், சிறுசீரகமும் அந்த வாசனையும் “பேஷ்.. பேஷ்” ரொம்ப நல்லாயிருக்கும். கூடவே ஒரு சுள்ளென்ற காபியும் சாப்பிட்டால் அன்றைய காலை அழகான காலை.
திருவண்ணாமலை போக வேண்டும் என்ற எண்ணத்தை சொன்னவுடன் உறவினர் வாகன ஏற்பாடு செய்துதருவதாக கூறியதை அந்தக் கணமே மறுத்து விட்டேன். நானும் மனைவியும் மாத்திரமே போக எண்ணியிருந்த திருவண்ணாமலைக்கான பயணம் பொதுப்போக்குவரத்து பேரூந்து ஊடாக பயணிக்க விருப்பமாக இருந்தது. காலை பத்து மணிக்கு முதல் திருவண்ணாமலையில் தங்கியிருக்கவும், காலை வனப்பை இழக்காத அந்தப் பொழுதுக்குள் சுவாமி தரிசனத்தையும், திருவண்ணாமலை கோவிலை சுற்றியுள்ள 8 கீ.மீ தூரமான கிரிவலத்தையம் பகற் பொழுதுக்குள் இடையிலும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்பது சிறு பயணத்திட்டத்தின் பதிவாக வைத்திருந்தேன்.
கோயம்பேடு மத்திய பேரூந்து நிலையத்தை சென்றடைவதற்கு ஒரு ஆட்டோ மாத்திரம் ஏற்பாடு செய்து தரும்படி கேட்டிருந்தேன். அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு ஆட்டோவுக்கு உறவினர் ஏற்பாடு செய்து தந்திருந்தார். தி..நகர் போத்தீஸ், குமரன்ஸ் போன்ற வணிக வளாகத்திற்குள் எனது விருப்பத்திற்கு மாறாக அவர்களின் தெரிவுக்கு காத்திருந்து களைக்கின்ற ஆண்வர்க்கத்தினரில் ஒருவனான எனக்கு நான் கேட்டவுடன் திருவண்ணாமலைக்கு வருவதற்கு சம்மதம் சொன்ன சகதர்மிணிக்கு கோடானுகோடி நன்றிகள்.
அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து அடங்கி கிடக்கின்ற தெருவழியே விரைந்து கோயம்பேடு அடைந்தால், கோயம்பேடு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. கோயம்பேடு மத்திய சந்தை தொகுதிக்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் காய்கறிகள் லாறிகளில் கொண்டு வரப்பட்டு மொத்த விற்பனையாவது வாடிக்கை. அந்த இரைச்சலான அதிகாலையும், விற்பனை பரபரப்பும் கோயம்பேட்டிற்கு மாத்திரமே உரித்தானது.
கோயம்பேடு பேரூந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை 193 கீ.மீ தூரத்திலானது.நான்கு மணி நேர பிரயாணம். ஐந்து மணிக்கே பஸ் பிடித்து மனைவியின் அருகே உட்கார்ந்து நகர்ப்பகுதி விலகி பின்னர் வருகின்ற கிராம வெளிகள், மரங்களடர்ந்த சோலை, காலையின் குளிர் இதம், காற்றின் மிதமான வருடல் என இப்படியான பிரயாணங்கள் எப்போதாவது தான் வாய்க்கும். காலாகாலத்திற்கும் மறக்காது. பஸ்ஸில் பிரயாணிப்பது சக பயணிகள், அவர்கள்தம் உரையாடல் அது இன்னொரு அனுபவம்.
திருவண்ணாமலை ஆன்மீகத்தின் அதி உச்சம். அக்கினித் திருத்தலம். சிவன் பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் பெரு நெருப்பாக காட்சியளித்த தலம். சிவனின் அடி முடி தேடிப்புறப்பட்ட பிரம்மாவும், விஷ்ணுவும் முடியாது திரும்பிய பொழுதில் பிரம்மா மாத்திரம் தாழம்பூவை பொய்ச்சாட்சி சொல்ல வைத்து, முடியை கண்டதாக சொன்ன நாளில் இருந்து தாழம்பூ கோவில் பூசைகளுக்கு விலக்கி வைக்கப்பட்டதும், பிரம்மாவிற்கு கோவில்கள் இல்லாமற் போனதும் புராணக் கதை. பகவான் ஸ்ரீ ரமணர் , சேஷாத்திரி சுவாமிகள் முக்தியடைந்ததும் பல வெளிநாட்டினர் திருவண்ணாமலையில் வீடு எடுத்து தங்கியிருந்து ஆன்மீகத் தேடலை அமைதியாக தியான வழி ஊடாக அடைவதற்கும் இந்த திருத்தலம் உதவியாக இருக்கின்றது.
காலை 9.00 மணியளவில் கோவிலை அடைந்திருந்தோம். கோவிலின் மூலவரை தரிசித்து விட்டு அதற்கு அருகில் ரமணர் சிறுவயதில் தங்கியிருந்த குகை கோவிலையும் தரிசித்துவிட்டு வீதிவழியே இறங்கி நடந்தால் ரமணாச்சிரமம் வருகின்றது. அங்கு அதிகமான நேரம் செலவழிப்பதற்கு தேவையிருந்தது. மிக அமைதியான இடம். இரண்டு நாட்களாவது தங்கியிருந்து அந்த அமைதியை இரசிக்கலாம். ரமணாச்சிரமத்தின் பின்புறத்தில் விருப்பாட்சி தேவரின் குகை இருக்கின்றது. மலையில் ஏறி சிறிது தூரம் பயணிக்க வேண்டும். இந்த மலைப் பயணத்தில் திருவண்ணாமலையை மேலிருந்து கண்டு உவகையடையலாம்.
ரமணாச்சிரமத்திற்கு பின்பு கிரிவலம் வந்தோம். கிரிவலம் என்பது திருவண்ணாமலை கோவிலை புறவீதி வழியே சுற்றுவது. 8 கீ.மீ நீளமான இந்தப்பிரயாணத்தில் பல இறையனார்கள் முக்தியடைந்த சமாதிகளையும், அதனைச் சுற்றியுள்ள இடங்களையும், அழகான திருவண்ணாமலைக் கிராம சூழலையும் காணலாம். உண்மையில் கிரிவலம் என்பது நடந்துதான் போகவேண்டும். நெருக்கமான பயணத்திட்டத்தில் தரிசிப்பவர்களுக்கு ஆட்டோ உகந்தது. ஆட்டோ ஓட்டுநர்கள் தேவையான இடங்களில் ஆட்டோவை நிறுத்தும் போதில் ஆங்காங்கேயுள்ள அந்த சிறு தலங்களை தரிசிக்கலாம்.
திருவண்ணாமலையை எண்ணும் போதும் எழுதும் போதும் அங்கேயே ஒரு நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும் என்ற உள்மனக்கிடக்கை எனக்குள் உறங்கிக் கிடக்கின்றது. கிரிவலம் முடிந்து மதியத்தின் பெரும்பசியை விசிறி சாமியார் என்றழைக்கப்படுகின்ற ராம் சூரத்குமார் ஆச்சிரமத்தில் நிவர்த்தித்து கொண்டோம். அருமையான உணவு. அற்புதமான சுவை. காலாறா நடந்தால் யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் வழியே நடந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அ ருமையான கிராமியச் சூழல்.
விசிறி சாமியாரின் பெரு ஆச்சிரம வளாகத்தில் தங்கியிருந்து வழிபட்டு திருவண்ணாமலை கடைத்தொகுதிகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு 4 மணி வாக்கில் திரும்ப பஸ் பிடித்தால் 9 மணியளவில் வளசரவாக்கம் வந்து விடலாம்.நான் என் மனைவியுடன் தனித்து செய்த நீண்ட பிரயாணமாக திருவண்ணாமலை விளங்குகின்றது.
போகும் வழியில் பெரு மலையில் தென்பட்ட கோட்டை கொத்தளங்கள் செஞ்சிக் கோட்டை. புராதன கால மன்னர்கள் அரசாண்ட பகுதி. அடுத்த பயணத்தில் பார்க்க வேண்டும்.
**********************************************************************************************************
மறுமொழியொன்றை இடுங்கள்