ஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 29, 2013

கெவின் கார்ட்டர்.

பசியும், பட்டினியும் உலகத்தின் மிகப்பெரும் நோயாக உருவெடுத்திருக்கின்றன. பசியின் தீவிரம் அதிகமாகும் போது தேடுதலின் தீவிரமும் அதிகரிப்பதாக சொல்லப்படுகின்றது. தேடலும் தீவிரமும் அதிகரிக்க சொல்லப்படும் “பசித்திரு விழித்திரு“ எல்லாம் பாசாங்கு சொற்கள்.

நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போன்றது பசித்த வயிற்றுடன் கண்கள் பஞ்சடைய துக்கித்திருப்பது. பசியின் அனுபவத்திறனை பட்டினி கிடந்து தான் கண்டுகொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய பசியை ஒரு புகைப்படம் சொன்னால்- காட்சிப்படுத்தினால் பசியை ஒரு செய்தியாகப் பார்த்தவர்களுக்கு பசியின் தீவிரம் தெரியும். உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் ஒன்றைப் பிடித்து ஒன்று தின்பதற்காக அலைகின்றன. பசி மாத்திரம் இல்லையெனின் உலகின் இயக்க நியதி பாதிக்கப்படும்.

பசியை மையமாக வைத்துத்தான் ஜீவராசிகளின் இயக்க ஒழுங்கு தீர்மானிக்கப்படுகின்றது. ஒன்றிற்கு ஒன்று உணவாக அமைகின்றன. உணவுச்சங்கிலியின் உயர்நிலை மனிதன். எல்லாவற்றையும் உட்கொள்ள பழகிக்கொண்ட மனிதனுக்கு ஒன்றுமே கிடைக்காது போய்விடின் பசியின் தீவிரம் அதிகரிக்கின்றது.

kalukuகெவின் கார்டர் எடுத்து ” டைம்ஸ்” பத்திரிகையில் வெளியான சூடான் சிறுமியின் பசி- உணவுத்தேடல் குறித்த புகைப்படம்- பார்த்தவர்களுக்கு வேதனையையும், கெவின் கார்டருக்கு புலிட்சர் விருதையும் பெற்றுத்தந்தது. சூடான் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடிய பொழுதில் பின்மதிய நேரமாக இருக்க வேண்டும். சூடான் நாட்டிற்கு செய்தி சேகரிப்பவராக சென்றிருந்த கெவின் கார்டர் தனது வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பசியால் உடல் நலிந்திருந்த சிறுமி உடைந்த மானுடத்தோடு நடக்கவியலாமல் சிரமப்பட்டு ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்த ஐக்கிய நாடுகள் உணவு வழங்கும் நிலையத்திற்கு தவழ்ந்து செல்கின்றாள். அவளின் உடலில் எஞ்சியிருந்த சக்தியை திரட்டி தூரத்தே கொடுக்கப்படும் உணவை உட்கொண்டால் மாத்திரமே உடலில் உயிர் தங்கியிருக்கும் இறுதி மணித்துளிகளாக அந்தப்பசி அந்தப் பெண்ணிற்கு வாய்த்திருக்கின்றது.

ஒரு தொழில்முறைப் புகைப்படப் பிடிப்பாளரான கெவின் கார்டர் புகைப்படத்திற்கு கோணம் பார்க்கத் தொடங்குகின்றார். ஈனத்திலும் கோணம் பெரிதாகப் போயிற்று புகைப்படம் எடுப்பவர்களுக்கு. ஒரே நேர்கோட்டில் மண்ணில் தவழும் நலிந்த சிறுமி, அவள் உயிர் தொலைத்தால் அவளை உண்ணக் காத்திருக்கும் கழுகு – ஒரே நேர்கோட்டில் வருகின்றன. கெவின் கார்டர் ஒரு தேர்ந்த புகைப்படக்கலைஞராக, பத்திரிகையாளராக இருப்பதன் காரணமாக இந்தப் புகைப்படக்கோணமும் அதனது முக்கியத்துவமும் அது ஏற்படுத்தப்போகும் அதிர்ச்சியும் அவரால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கின்றது.

ஒரு கணத்தில் தவறவிட்ட காட்சியை மறுகணத்தில் காணக்கிடைப்பதில்லை. அது அதற்குரிய கணத்தில் நடக்கின்ற வேளையில் காட்சிப்படுத்த வேண்டும். ஒரு பொழுது மறு பொழுதாக இருக்காது.

கெவின் கார்ட்டரிற்கு அந்தச் சிறுமியை, பின்புலத்து கழுகுடன் மாத்திரம் காட்சிப்படுத்த விருப்பமில்லை. கழுகு மேலும் சிறகை விரித்தால் நன்றாக இருக்குமென எண்ணத்தலைப்பட்டார். அதற்காக மேலும் இருபது நிமிடங்கள் கரைந்தன. கழுகு சிறகை விரிக்காத நிலையில் 1993ம் ஆண்டு வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

kevinஇறுதி நேரத்தில் அந்தச் சிறுமி என்னவானாள்? அவள் உயிருடன் இருக்கின்றாளா? பசி அவளைக் கொன்று விட்டதா? டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தை தொலைபேசி அழைப்புகளால் நிரப்பியது மானுட அக்கறைகள். ஒரு தொழில் முறை பத்திரிகை புகைப்படக்காரராக தன்னை முதன்மைப்படுத்திக் கொண்ட கெவின் கார்ட்டர், வந்த அலுவல் முடிந்தவுடன் அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டார். பசித்திருந்த சிறுமி பற்றிய தகவல்களை அவர் அறிந்திருக்கவில்லை. மனித நேயத்துடன் நடந்து கொள்ளாமல் தொழில் நேர்த்தியான ஒரு புகைப்படக் கலைஞராக தன்னை வெளிப்படுத்திய கெவின் கார்ட்டர், திரும்பி வந்த கேள்விக்கணைகளால் திக்குமுக்காடிப் போனார். மானுடத்தின் மனச்சாட்சி உலுக்கியது. உயிரின் இறுதி இருப்பை கவனிக்காத குற்ற உணர்வுடன் புகைப்பட பத்திரிகையாளருக்கு வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் விருதைப் பெற்றுக்கொண்டார்.

உலகத்தின் ஒட்டுமொத்த கண்டனத்தையும் வெறுப்பையும் பெற்றுக்கொண்டவராக- சொற்களால் வதைபட்டவராக கெவின் கார்ட்டர் ஏலவே பலமுறை தற்கொலைக்கு தூண்டப்பட்டவராக இருந்து தோற்ற நிலையில் தனது இறுதி தற்கொலையை வெற்றிகரமாக்க முயற்சித்தார்.

கார்பன் மொனொக்சைட்டு வாயுவை தனது வாகனத்தை இயங்குகின்ற நிலையில் வைத்திருந்து அதன் புகைபோக்கியை உள்முகமாகத் திருப்பி பெற்று சுவாசித்து, தான் சிறு வயதில் மகிழ்வுடன் விளையாடித்திரிந்த கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இவ்விடத்தில் இப்பதிவில் கெவின் கார்ட்டரை வேறு சிந்தனைத் தடத்தோடு மேல் நோக்காகப் பார்க்கலாம். அவரிடம் இயல்பிலேயே அரக்க குணம் குடிகொண்டிருக்கவில்லை.தனது இராணுவ சேவையில் அவருடன் பயிற்சியிலிருந்த ஏனைய சகாக்கள் ஜோகனஸ்பேர்க் நகரில் ஒரு கறுப்பின இளைஞரை தாக்கிய துயரப்பொழுதில் இராணுவத்தில் இருந்து முரண்பட்டு தனது சேவையை கைவிட்டவர்.

கெவின் கார்ட்டர் பணம் பண்ணுவதற்காகவே கமராவும் கையுமாக அலைந்து துரத்தி துரத்தி படம் பிடிக்கும் PAPPARAZZI வகையை சேர்ந்தவர் அல்லர். இயற்கையின் வறுமையை பதிவு பண்ணிய கலைஞன்.

sudan2உலகத்திற்கும் மனச்சாட்சி என்ற ஒன்று இருக்கின்றது.ஒரு ஊடகமோ ஒரு கலைஞனோ அதை வெளிக் கொணரும்போது அதை ஆமோதிப்பதற்கும் வழிமொழிவதற்கும் “உலக மனச்சாட்சி” தன்னை தயாராக வைத்துக் கொண்டிருக்கின்றது.கெவின் கார்ட்டர் சூடானின் வறுமையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியபோது “உலக மனச்சாட்சி” அவர் மீதே பாய்ந்ததுதான் ஆச்சரியம்.

வீதி விபத்தில் சிக்கி உயிருக்காக போராடும் நிலையிலுள்ள ஒருவரை விட்டு விலகி அவசர வேலையாக போய்க் கொண்டிருக்கின்ற- வெயிலின் வீச்சிலும், பசி மயக்கத்திலும் வீதியோரத்தில் சுருண்டு படுத்திருக்கும் ஒருவனுக்கு மதிய உணவு ஈயாத  மனநிலையில் சட்டைப்பையில் பணம் வைத்திருக்கின்ற- என அந்த ஒவ்வொருவரும் குற்றவாளிகள்தான். கெவின் கார்ட்டரைவிட மிக மோசமானவர்கள்தான். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட மனச்சாட்சியும் சுய விமர்சனத்தை முன்வைக்காத  வரை இந்த பிரகிருதிகள் கெவின் கார்ட்டரை விமர்சனங்களால் கொன்று கொண்டேயிருப்பார்கள்.

பணம் கொடுத்து உணவுப்பொருள் வாங்க முடிந்தவனால் அநாயாசமாக உணவுப்பையை துாக்கிநடக்க முடிகின்றது.பசித்த வயிறுடையவனால் அதை தவழ்ந்துதான் ஏக்கமுற முடிகின்றது.ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனிப்பட்ட கருத்துக்களை மனத்திற்குள் விதைக்கின்றன.

pillaiபோபாலில் எண்பத்து நான்கில் ஏற்பட்ட விஷ‌வாயு கசிவால் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மானுடங்கள் உயிரிழக்க நேர்ந்தது. இந்திய அரசு வெறும் ஆயிரத்து எண்ணுாறு பேர் மரணித்ததாக அறிக்கை வெளியிட்டது. இறந்த பின்பு புதைத்த குழந்தையை தோண்டி எடுத்து முகம் பார்க்கும் தாயாரின் நிலை கூட கெவின் கார்ட்டரால் புகைப்பட பதிவாக எடுக்கப்பட்டிருக்கின்றது. போபால் விஷ‌வாயு அனர்த்தத்தை இந்த புகைப்படம் ஒன்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கப் போகின்றது.

இயல்பிலேயே உணர்ச்சி வசப்பட்ட ஒரு பத்திரிகை புகைப்படப்பிடிப்பாளர் தான் ஒரு உலகப் புகழடையப்போகும் புகைப்படத்தை எடுத்த மகிழ்வில் தன்னிலை மறந்து மகிழ்வு கொண்டவராக- மானுடம் மறந்த மனிதனாக அவரை பதிவாக்க விழைகின்றேன்.

செய்திச் சேகரிப்பில் தீவிரமாக அலைகின்ற ஒரு பத்திரிகையாளனுக்கு அந்த நிமிடத்தில், அந்தக் கணத்தில் பிரத்தியேகமாக நிகழ்கின்றவையும், அபூர்வமாக காட்சி அளிக்கின்றவையும் மிகமகிழ்வான செய்தி சேகரிப்பின் சாராம்சம் தான். அடையாளம் தான்.

தனது முப்பத்துமூன்றாவது வயதில் உயிர்தொலைத்து குற்றவுணர்வில் இருந்து மீண்ட மானுடன் கெவின் கார்டர். மரித்து நிமிர்ந்தார். அவர் எழுதி வைத்துவிட்ட இறுதி வரிகள் Sorry..I am really …really very sorry.

Titanic மூழ்கிய போது LEANARDO DI CAPRIO வும் அழகான KATE WINSLET மாத்திரம் மூழ்கவில்லை. அவர்களுடன் ஒரு ஜப்பானியரும் மூழ்கிக்கொண்டிருந்தார். சிறுவர்களும், பெண்களும் முன்னுரிமை அடிப்படையில் உயிர்காக்கும் படகினால் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதில், தனது உயிரை வெல்லக்கட்டியாக மதித்து உயிர்காக்கும் படகிற்குள் குதித்து உயிர் தப்பிய ஜப்பானியர் நாடு திரும்பிய பொழுதில் ஏளனங்களும் அவமானங்களும் அவருக்காக காத்திருந்தன. ஜப்பானுக்கே பெரும் துரோகமிழைத்து உயிர் தப்பி அவமானப்படுத்தியதாக கண்டனங்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்ட போது தான் Titanic உடன் மூழ்கி இருக்கலாம் `ஏன் உயிர் தப்பினோம்` என்றாகிவிட்டது அவருக்கு.

பெருத்த அவமானங்களையும், ஏளனங்களையும் சந்தித்து தினம் தினம் செத்துப்பிழைத்த அந்த ஜப்பானியர் 1939ல் உயிரிழந்த போது அதில் தப்பியவர்- இதில் உயிர்விட்டார் என்ற கணக்கில் செய்தி வெளியிட்டன. மரணமில்லாப் பெருவாழ்வு

white colouredஉலகின் தலைசிறந்த 10 புகைப்படங்களின் தொகுப்பில் 1950 களில் இன ஒதுக்கீடு உச்சத்தில் இருந்த சமயத்தில் வெள்ளையர்களின் பாவிப்பிற்கு தனித்தண்ணீர் குழாயும் கறுப்பர்களுக்கென்று தனிக்குழாயும் அமைக்கப்பட்டிருந்த அவலத்தையும் கறுப்பர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அழகாகப் பதிவு செய்கின்றது மேற்கண்ட புகைப்படம். அந்தப்பொழுதில் “BLACK IS BEAUTY” என்று அவர்களுக்கு சொல்லத் தோன்றவில்லை.

வரலாறு கறைபடிந்தது.

******************************************************************************************


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: