சேகுவேராவுக்கும் எனக்குமான ஒரே ஒரு ஒற்றுமை மிக அதிசயமானது. அந்த ஒரு ஒற்றுமையைத் தவிர சேகுவேராவை என்னுடன் இணைப்பதற்கு வேறெந்த காரணமும் இல்லை. சே மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். உயர்வான போராளி. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். நான் இக்கணம் மிகுந்தும் அக்கணம் தாழ்ந்தும் என நம்பிக்கை கொண்டவன். சேகுவேராவுக்கு எங்களுக்கு வாய்த்த ஒரு மனோமாஸ்டரோ, உப-அதிபரோ வாய்க்கவில்லை. ஆரம்பத்திலேயே அவ்வாறு வாய்த்திருந்தால் பாட்டியை காரணம் காட்டாமலேயே பொறியியல் படிப்பை கைவிட்டு மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுத்திருப்பார்.
சேகுவேராவுக்கு ஒரு பாட்டி இருந்தார் என்பதுவும் அந்த பாட்டிக்கு மார்பகப்புற்று நோய் வந்து காலமானார் என்பதுவும் பாட்டி மீது அதிகபாசம் வைத்திருந்த சேகுவேரா “இனி ஒருபாட்டியும் மார்பகப்புற்றுநோயால் இறக்ககூடாது- அதற்கு மருந்துகண்டுபிடிக்கவேண்டும்” என்று கங்கணம் கட்டி பொறியியல் படிப்பை கைவிட்டு மருத்துவபடிப்பை தேர்ந்தெடுத்தார் என்பதும் புத்தகவாயிலாக அறியக்கிடக்கும் தகவல்கள்.
எங்களது ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான காலங்கள் அலாதியானவை. ஆனந்தமளிப்பவை. நாலு தேவாரம் பாடமாக்கி ஒப்பித்து, ஒருசொல்வதெழுதுதல் எழுதிதப்பித்து – கூட்டிக் கழித்து பெருக்கி கணக்குகாட்டி இறுதி தவணைப் பரீட்சையில் புள்ளிகள் பெற்றுக்கொண்டால் பரீட்சை பெறுபேற்றுத் தாளின் அடியில் “வகுப்பேற்றப்பட்டுள்ளார்” எனஆசிரியர் எழுதி விடுவார். அதனடிப்படையில் நாங்கள் வகுப்பேற்றப்பட்டுக் கொண்டிருந்தோம். இவ்வாறான நடவடிக்கை பத்தாம் வகுப்புவரை கிரமமாக நடைபெற்று கொண்டிருந்தது. அந்தக் கிரமத்தின் காரணமாக எங்களுக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை.
பத்தாம் வகுப்பு பரீட்சையில் கொஞ்சம் நிறைவான பெறுபேறுகள் பெற்றுக் கொண்டவர்களானால் தொலைந்தோம். கணிதத்திலோ, விஞ்ஞானத்திலோ மிகக்குறைவான புள்ளிகள் பெற்றுக்கொண்டவர்கள் கலை, வர்த்தகப் பிரிவுகளை இலகுவாக தேர்ந்தெடுத்துக் கொள்ள – எல்லாப்பிரிவுகளையும் தேர்தெடுக்ககூடியபுள்ளிகள் வைத்திருப்பவர்களுக்கு எதைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகப்பெரிய பிரச்சனை ஆகிவிடும். தலையில் ஹெல்மெற் போட்டுக்கொள்ளும் படிப்பா? கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொள்ளும் படிப்பா? என தேர்ந்தெடுப்பது அதுவரை வகுப்பேற்றப்பட்டு வந்த சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கஸ்டமானதுதானே.
நான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்தது கணிதத்தை. தலையில் ஹெல்மெற் மாட்டிக்கொண்டு, பெரிய கட்டிடங்கள் கட்டும் பகுதியில் கோப்புகள் வைத்துக்கொண்டு, உத்தரவு பிறப்பிக்கும் பொறியியலாளர் கனவுகள் ஏதும் எனக்கு இல்லையாயினும் எனது நெருங்கிய இரண்டு நண்பர்களும் கணிதத்தை தேர்ந்தெடுத்ததே நானும் அவ்வழி புகக் காரணமாக இருந்தது. அதன் பெறுபேறுகளை அடுத்து வந்த இரண்டு வாரங்களில் நான் பெற்றுக்கொண்டேன்.
பாடசாலையில் க.பொ.த உயர்தரம் தொடங்குவதற்கு முன்னரான பாடசாலை விடுமுறைக்காலப் பகுதியில் தனியார் கல்வி நிலையங்களில் க.பொ.த உயர்தர புதுமுகவகுப்புகள் ஆரம்பமாகிவிட்டன. கச்சாயில் அப்போது மனோமாஸ்டர் கணித வகுப்புகள் எடுத்து வந்தார். எனது நண்பர் ஒருவரே என்னையும் மனோமாஸ்டரின் கணித வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றிருந்தார். எங்களோடு பத்தாம் வகுப்பில் படித்த பலநண்பர்கள் அங்கு வருகை தந்திருந்தார்கள். மனோமாஸ்டர் அன்றுகற்பித்தது SIN, COS, TAN.
வகுப்பு ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் நான் எனது நண்பரின் முகத்தை பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போல மனோமாஸ்டரின் கரும்பலகை எனக்கு ஆகிவிட்டிருந்தது. ஆரம்பமே இவ்வளவு அசத்தலாக இருந்தால் இனிவரும் காலங்களில் என்னாகுமோ என எண்ணத்தலைப்பட்டேன். மனோமாஸ்டர் கடுகதிவேகத்தில் பாடத்தை நடாத்திக் கொண்டிருந்தார். நான் அதன் பின்னே விரைய முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன்.
கற்பித்தல் என்பது ஒரு கலை. ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்றவர்களால் மாத்திரமே ஒரு திறமையான ஆசிரியராக முடியும் என்பதைவிட, கடிடனமான விடயங்களையும் சுவைபடக் கற்பிப்பதற்கு சில ஆசிரியர்களின் தனிப்பட்ட கற்பித்தல் ஆளுமை முழுமை பெற்றிருந்ததை சொல்லியாக வேண்டும்.
வெக்டர் வேலாயுதம், நல்லையாமாஸ்டர் போன்றோரிடம் இரட்டைக்கணித வகுப்புகளுக்கு செல்பவர்களைக் காட்டிலும் ரவிமோகன் மாஸ்டர் வகுப்பில் மாணவர் குழாம் அதிகம் இருக்கும். யாழ் பெருமாள் கோவிலுக்கு முன்பாக ரவிமோகன் மாஸ்டரின் டியூசன் கொட்டில் மிக நீண்டது. முன்னால் கரும்பலகைக்கும், கடைசி வாங்குக்கும் இடையிலான இடைவெளி 75 மீ ஆவது இருக்கும். கற்பித்த கணக்கை அழகாக எழுதி செய்முறையுடன் கடைசியாக விடையையும் எழுதிவிடுவார். பார்த்து எழுதும் கூட்டத்திற்கு எவ்வித கஸ்டமும் இருப்பதில்லை.
ஒரு நல்லஆசிரியருக்கு அழகு மாணவர்களை கலவரப்படுத்தாமல் பாடம் எடுப்பது. ஆசிரியரும் மாணவரும் பாடத்திற்கு ஊடாக பயணிப்பது. மாறாக பெரும்பாலான ஆசிரியர்கள் தாங்கள் கற்றதை மாணவர்கள் மீது திணித்துக் கொண்டிருந்தார்கள்.
மனோமாஸ்டர் ஒருவட்டம் வரைந்து அதனை நான்காகப் பிரித்து SIN- COS- TAN விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார். எனக்கு வட்டத்தைப் பார்ப்பதா? கூரையின் விட்டத்தைப் பார்ப்பதா என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அன்றைய ஒரு வகுப்பிற்கு பின்னால் அடுத்து நடந்த வகுப்புகளிற்கு நான் சமூகமளிக்கவில்லை.
கச்சாய் வகுப்புகளில் இருந்தும் கழன்று யாழ் சென்று ரவிமோகன் மாஸ்டரின் வகுப்புகளில் உட்காரத்தொடங்கினேன். உள்ளூரில் சிறிய டியூசன் வகுப்புகளில் படித்தவர்களுக்கு யாழ்ப்பாண டியூசன் கொட்டில் கலாச்சாரம் மாறுபட்டது. மாணவர்களுக்கு கரும்பலகைக்கு கிட்டேயுள்ள ஆசிரியர் நிழலாகத் தெரிவார். ஆசிரியருக்கு தன்னிடம் யார்.. யார்? படிக்கின்றார்கள் என்ற பரிச்சயமே கிடையாது. கணிதப்பிரிவில் பெண்கள் குறைவாகவே இருந்தார்கள். அவர்களை காட்டிலும் அங்கு வேலைபார்த்த செக்ரெட்டரி பெண் அழகாக தென்பட்டாள்.
பாடசாலை விடுமுறை காலப்பகுதி முடிந்து பாடசாலைகள் தொடங்கிவிட்டிருந்தது. பத்தாம் வகுப்பு வரை ஒரே பாடத்திட்டத்திற்கு ஊடாக பயணித்தவர்கள் பல்வேறு கிளைப்பாதைகளூடாக பயணிக்கத் தலைப்பட்டோம். எங்களது கணித வகுப்பிற்கு வகுப்பு ஆசிரியராக உப-அதிபராக கடமையாற்றியவர் நியமனம் பெற்றார். அவருக்கு எதையாவது சொல்லிப் புரிய வைப்பது எங்களுக்கு பெரும்பாடாயிற்று. எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை என்று சொல்வது அவருக்கு விளங்கவில்லை.
அதாவது அவருக்கு கேட்கும்திறன் மிகவும் மந்தமாக இருந்தது. எங்களது வகுப்பறை வீதிக்கருகில்- தண்டவாளத்தை ஒட்டிய பிரதானவாயிலுக்கு அணித்தான வகுப்பறை. எண்பத்து நான்கில் இரயில் போக்குவரத்து கிரமமாக இருந்தது. ஒருநாள் மதியத்திற்கு பிற்பாடான கணிதவகுப்பில் உப-அதிபர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அன்றையவகுப்பில் சார்புவேகம் பாடமாக எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு காரில் பயணிக்கும் ஒருவன் மணிக்கு இன்ன கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க அருகே விரையும் கார் என்னவேகத்தில் செல்கின்றது என்பது சார்புவேகம். அப்போது இரயில் ஒன்று சங்கத்தானை தரிப்பிடத்தை பெரும் சத்தத்துடன் கடந்து சென்றது. பாடம் நடாத்திக் கொண்டிருந்த உப-அதிபர் தனது வகுப்புமாணவர்கள் சத்தம் போடுவதாக எண்ணிவிட்டார். பெரும் கோபத்துடன் வாங்கில் அறைந்து விட்டு சொன்னார் “இனி சத்தம் போட்டீர்களானால் வகுப்பிற்கு வெளியே நிறுத்தி விடுவேன்”. இரயில் வண்டியை இவரால் எப்படி வகுப்பிற்கு வெளியே நிறுத்தமுடியும்? என எண்ணி கவலைப் படத் தொடங்கினேன்.
இவ்வாறான உசிதமற்ற போக்கு என்னை முற்றாக கணிதப்பிரிவிலிருந்து விரட்டிஅடித்தது. காற்றில் அலைக்கழிக்கப்பட்ட இலை போன்று சஞ்சரித்து கடைசியாக அடைந்தது உயிரியல். உயிரியல் உண்மையில் உயரியல். உடலின் இயக்க கூறுகளை அறிந்துகொள்வதும், சூழலியல் தாவரங்களுடன் பரிச்சயமாவதும் சந்தோசமானவிடயம் தானே.
படம் வரைந்து பாகம் குறித்து பயின்ற காலங்கள். தாவரங்களில் ஆண்டு வளையம் உண்டென்பதையும் அதைக் கொண்டு தாவரத்தின் வயதை சொல்லமுடியும் என்பதும் செவ்வரத்தை HIBISCUS குடும்பத்தை சேர்ந்தது என்பதும் மிளகாய்க்கு CAPSICUM INDICUM என்ற தாவரவியல் பெயர் கொண்டது என்பதும் கற்றலின் சுவாரஸ்யத்தை அதிகரித்துக் கொண்டே போனது.
தாவரவியல் சிவவீரசிங்கம், விலங்கியல் தம்பிராஜா ஆசிரியர்கள் எங்களுக்கு தனியார் கல்வி நிலையத்தில் ஆசிரியர்களாக கிடைத்தார்கள். விலங்கியலின் ஒவ்வொரு உட்பிரிவையும் கற்பித்து முடித்தவுடன் தம்பிராஜா ஆசிரியர் சொல்லும் THATS ALL என்ன? வழக்கமான லண்டன்காரர்கள் பாவிக்கும் THATS ALL இலும் மாறுபட்டது.
THATS ALL என்ன? SKELETAL SYSTEM- வன்கூட்டுத்தொகுதி. THATS ALL என்ன? EMBRYOLOGY–முளையவியல்.
ஆசை ஆசையாகக் கற்ற பாடங்களும், கற்பித்தஆசிரியர்களும் கனவுகளில் அணி வகுக்கின்றார்கள். சேகுவேரா தனது பாட்டியை காரணம் காட்டி படிப்பை மாற்றிக் கொண்டதைப் போல நாங்களும் தொடர்ந்து கற்காமல் போனதற்கு நாட்டின் சூழலையும், வீட்டுக்கஸ்ட நிலவரத்தையும் காரணம் காட்டலாம். தப்பில்லையே?. அதைத்தானே கடந்த முப்பது வருடங்களாக செய்து கொண்டிருக்கின்றோம்.
வாழ்க கல்வி!
************************************************************************************************
என்ன சொல்ல எல்லாம் யுத்த நிலை ஒரு புறம் என்றால் வாத்திமார் தகமை இல்லாமல் வந்த நிலையும் தான் இப்படி!ம்ம்
By: thanimaram on ஒக்ரோபர் 13, 2013
at 11:32 முப
உண்மைதான். தாரமும் குருவும் தலைவிதிப்படி. உப அதிபராக இருந்த ———— மாஸ்டரைப்பற்றி நிறைய ஜோக் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் சா.இ. வில் உயர்தரம் படிக்கவில்லை.
By: கணேஷ் on ஒக்ரோபர் 14, 2013
at 11:16 பிப