ஆருத்ரா எழுதியவை | பிப்ரவரி 23, 2014

மூன்று சம்பவங்கள்.

சுப்புவிற்கு  இப்போது  அரைநூற்றாண்டை  கடந்த  வயது. காலங்கள்  நிற்காமல்  கடந்து  போனதில்  ஏற்பட்ட  மாற்றங்கள் முகத்தில்  தெரிந்தன. எப்போதும்  சிரிப்பை  ஏந்திய  முகத்தில்  வயதிற்குரிய  மாறுபாடுகள்  தெரிந்தன. மெலிதான  தாடி ஆங்காங்கே  நரைகூடி  இருந்தது.  இதனை  அனுபவத்தின்  அடையாளம்  என்பதாக  கொள்ள முடியாது. சுப்புவின் வாழ்வில்  அவ்வப்போது  தப்புகளும்  தவறுகளும்  மற்றவர்களைப்  போலவே  ஏற்படச் செய்கின்றன. தவறு  ஏற்படும் தருணங்களில்  சோர்ந்தும், நண்பர்களிடம் புலம்பியும் தான் சுப்பு இதுவரை  காலம்  கழித்திருக்கின்றான். சுப்புவிற்கு எதையும்  மறைத்துப்   பழக்கமில்லை. சொல்ல   வேண்டிய   விடயங்களை  நண்பர்களிடம்  புலம்பித்  தீர்த்திருக்கின்றான்.

eyeglass-lensesசுப்புவிற்கு  கடந்த  காலங்களில்  இரண்டு  வெவ்வேறு சம்பவங்கள்   வெவ்வேறு  காலப்பகுதியில் நிகழ்ந்தன. சம்பவங்கள்  சராசரிதான் எனினும் அவற்றுக்கிடையில்  ஏதாவது  தொடர்பு  உண்டா  என்பது தான்  இப்போது  பெரிய ஆராய்ச்சிக்குரிய  விடயமாகி  உள்ளது.முதலாவது  சம்பவம்  மிக  அண்மையிலும்  மற்றையது  விடுமுறைக்கு  சென்ற  பொழுதில் தாயகத்திலும் இடம்பெற்றவை.

 சுப்புவிற்கு அரைநூற்றாண்டைக் கடந்த வயது என்பதை சொல்லிவிட்ட படியால் வயது உடலில் ஏற்படுத்திய மாற்றங்களில் ஒன்று பார்வைப்புலன் குறைபாடு. அதுவரை தெளிவாக புத்தகங்களை வாசித்த அவனால் இப்போது வாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எல்லாம் கலங்கலாகவும் மங்கலாகவும் தெரிவதாக சொல்லி வருத்தப்பட்டான்.

இப்போதுதான் சின்னப்பிள்ளைகளுக்கே அத்தகைய குறைபாடுகள் இருப்பதாக ஆறுதல் சொன்னாலும் அவனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தனது பாட்டி இப்போதும் கண்ணாடி எதுவும் அணியாமலேயே அவரால் எல்லாவற்றையும் வாசிக்க முடிவதாக சொல்லி வருத்தப்பட்டவன் விடுமுறைக்கு தாயகம் சென்ற பொழுதில் தலைநகரில் தனது கண்களை காண்பித்து அதற்கேற்றவாறு திருத்தமான கண்ணாடி அணிந்து வந்தான்.

prada-parfumsசுப்புவால் இப்போது முன்னைப்போல வாசிக்க முடிந்தது. முன்பைவிட எல்லாம் தெளிவாக தெரிவதாக சொல்லி ஆனந்தப்பட்டுக் கொண்டான். எனது வீட்டிற்கு வந்தவன் புத்தக அலுமாரியிலிருந்த சில புத்தகங்களை வாசித்துவிட்டு தருவதாக சொல்லி வாங்கிக் கொண்டு போனான். புத்தகங்கள் இரவல் கொடுத்தால் அவற்றை திரும்ப பெற்றுக்கொள்வதில் எனக்கு சிரமம் இருந்தது. சரி போய்த்தொலையட்டும் என விட்டுவிட்டேன். ஆதன் பின்னரான இணர்டு வருட காலப்பகுதியில் பல தடவைகள் சந்தித்துக்கொண்டாலும் பல விடயங்கள் பகிர்ந்து கொண்டாலும் எனது சில புத்தகங்கள் அவனிடமே தங்கிவிட்டன.

புத்தகமல்ல  எங்களுடைய  பிரச்சனை.  சுப்புவிற்கு  இரண்டு  வருடங்களின்  பின்னர்  மீண்டும்  பார்வைப்புலன் தெளிவற்றுப்  போனதுதான்  பிரச்சனை. 1.5ற்கு  அப்பால்  பார்வைப்புலன்  நகர்ந்ததுதான்  அவனுடைய  பிரச்சனையே. இனிமேல்  சுவிட்சர்லாந்திலுள்ள  தரமான  கண்ணாடிக்  கடையில்  நல்லதாக  ஒன்று  வாங்க  வேண்டும்  எனவும் சொல்லிக் கொண்டவன் தனது  விடுமுறை  நாளொன்றில்  நேரம்  தீர்மானித்து  மனைவி  பிள்ளைகளுடன்   KOCH  OPTIK  கடைக்கு  விஜயம்  செய்தான். தனக்கு  தோதாக  கண்ணுக்கும்  பழுதின்றி  கண்ணாடி  தெரிவு  செய்வதில்  மிகவும் சிரமப்பட்டு  போனான். கடைக்காரர்  சந்தையில்  பிரபலமான  தயாரிப்பு  நிறுவனங்களின்  கண்ணாடிகளை  அவன் முன் பரப்பி  இருக்கிறார். சுப்பு  பயந்து  போனான்.

 RAY BAN, GUESS, PRADA,  GUCCI, DIOR என பிராண்டட்  கண்ணாடிகள். அவனது  மகளின்  விருப்பத்திற்கு  இணங்க  கண் பரிசோதிக்கப்பட்டு  நல்ல  தரமான  RAY BAN  கண்ணாடி வாங்கி வந்ததாக சொன்னான். கடையில்  வைத்து  போட்டுப் பார்த்த போது  தெரியாத  குறை  எல்லாம் வீட்டில்  போட்டுப்  பார்த்த போது  தெளிவாகத்  தெரிந்தது. உட்கார்ந்த  மேசை சற்று  சரிவாக  இருப்பது  போலவும்  COMPUTER திரை விரிந்த  செவ்வக  வடிவில்  இருப்பது  போலவும்  புத்தகங்களில் எழுத்து  வரிகள்  வளைந்து  காணப்படுவதாகவும்  வருத்தப்பட்டவன்  அடுத்த நாளே  கடைக்குச்  சென்று குறை விளம்பத்த்  தொடங்கினான்.அவனது  குறைகளை  கேட்டுக்கொண்ட  கடைக்காரர்  முன்னர்  அணிந்திருந்த  இலங்கையில்  வாங்கிய  கண்ணாடியில் இல்லாத  ஒரு  சிறப்பு  அம்சம்  இப்பொழுது  வாங்கியதில்  இணைக்கப்பட்டிருப்பதாகவும்  தொடர்ந்த  புத்தக  வாசிப்பில் இக் குறைபாடு  தெளிவாகிவிடும்  எனவும்  கூறி  இருக்கிறார். கண்  கிரகிப்பதை  மூளை  சரியாக  ஏற்றுக்கொள்ள ஒரு வாரம் தேவையாம்.இப்போதும்  எனது  புத்தக  அலுமாரியில்  இரண்டு  புத்தகங்கள்  காணாமல்  போயின. அவை  இனி  திரும்பி வரப் போவதில்லை.

இலங்கையில்  4000  ரூபாவிற்கு  வாங்கிய  கண்ணாடியில்  இருந்த  திருப்தி  இங்கே  60000  ரூபா  பெறுமதியில்  வாங்கிய கண்ணாடியில்  இல்லையே  என  புலம்பிக்  கொண்டு  போனான். எனக்கு TWITER   பார்த்த வாசகம் நினைவுக்கு வந்தது.

“எல்லா  டெஸ்டுகளுக்கும் படிச்சிட்டு போகணும்.ஐ டெஸ்டுக்கு  போய்ப்  படிச்சா போதும்”.

butterfly-effectஇரண்டாவது  சம்பவம்  சுப்பு  எப்போதோ  தாயகம்  சென்று  திரும்பி  என்னை  சந்தித்த  வேளையில்  பகிர்ந்து கொண்டது.  தாயக  உறவுகள்  ஐரோப்பாவில்  இருந்து  உறவினர்கள்  அனுப்பும்  பணத்தில்  தாராள  செலவு  செய்து வீண்  ஆடம்பரமாக  வாழ்வது  பற்றி  புலம்பிக்கொண்டிருப்பான்.” கண் கடை  தெரியுறதில்லை  உவையளுக்கு”  என்பது சாரம்சம்.

 சுப்புவின்  வீடு  கொழும்பின்  புறநகர்ப்பகுதியில்  அமைந்திருந்தது. வெள்ளவத்தையில்  இருந்து  சுப்புவின்  வீட்டிற்கு செல்ல  வேண்டுமானால்  இரண்டு  பஸ்பிடித்து  ஒரு  மணிநேரத்தில்  போய்விடலாம். போக்குவரத்து  நெரிசலில் அகப்பட்டால்  மேலும்  மேலதிக  அரைமணி  நேரம்  செலவாகும். பஸ்  போக்குவரத்து  சுப்புவிற்கு  பிடித்திருந்தது. தாயக  விடுமுறைக்  காலங்களை  அதற்கே  உரிய  நினைவுகளோடும்  நிகழ்வுகளோடும்  கழிக்க வேண்டும்  என்று சொல்லிக்  கொள்வான்.

 அந்தமுறை  சுப்பு  கொழும்பு  சென்ற போது  தமது  உறவினர்  ஒருவரிடம்  கொடுக்கும்படி  சொல்லி  இங்குள்ள ஒருவர் பொதி  ஒன்றைக்  கொடுத்து  தொலைபேசி  இலக்கமும்  கொடுத்திருக்கின்றார். தான்  ஒரு  பொதிகாவியாக மாற்றப்படுவதில்  சுப்புவிற்கு  எப்போதும்  மனவருத்தம்  இருந்தது. பயணம்  புறப்படும்  போதே  ஒவ்வொருவரும் அதைக் கொடுத்து  விடுங்கோ இதைக்  கொடுத்து விடுங்கோ என ஊரான்  வீட்டு  பார்சல்களை  சுமந்து  கொண்டு  செல்ல வேண்டிய  அவலநிலை  வாய்த்து விடுகின்றதே  என்ற கவலை  அவனுக்கு.

 ஊரான் பார்சல்களை ஊட்டி வளர்த்தால்  (தூக்கிச் சுமந்தால்)தன் பொதி  தானே வளர்ந்து விடும் என்ற எனது  மொக்கைப்  பகிடிகள்  அவனுக்கு  பிடிப்பதில்லை. சந்தர்ப்பம்  தெரியாமல்  பகிடி  விடுவதாக  கோபித்துக் கொள்வான்.

 சுப்பு தான்  கொண்டு  சென்ற  பார்சலை  உரியவரிடம்  ஒப்படைப்பதற்காக  தொலைபேசியில்  தொடர்பு  கொண்டால் அவர்  ஒரு  ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை  தினத்தில்  மாலைநேரம்  நான்கு மணிக்கு  வருவதாக  சொல்லி இருக்கின்றார். மாலை  நான்கு  மணிக்கு  வருவதாக  சொன்னவர்  இன்னமும்  வரவில்லையே. வீதி  தெரியாமல் தடுமாறகின்றாரோ  என  நினைத்து  சுப்பு  பலமுறை  தொடர்பு கொண்டால்  பயனில்லை. நேரம்  தவறினால்  சுப்புவிற்கு கேந்தி  வந்து விடும்.மாலை ஆறு  மணியளவில் தான்  வரவேண்டியவர்கள்  வந்து  சேர்ந்தார்கள். வெள்ளவத்தையில்  இருந்து 1200  ரூபா கொடுத்து  ஆட்டோ ஒன்றில்  வந்திருந்தார்கள்.வந்த நண்பர் தான் TRAVEL AGENCY  வைத்திருப்பதாகவும்  தற்போது  பெரிய வருவாய்  இல்லை எனவும்  புலம்பித் தள்ளி  இருக்கின்றார். பேச்சு வாக்கில்  தன்னிடம் ஆட்டோ  இருப்பதாகவும் சொல்லி இருக்கின்றார்.

பெரிய  வருவாய் இல்லை  எனப்புலம்புபவர்  சொந்த ஆட்டோ இருக்கின்றதென  சொல்லிக்கொள்பவர்  ஏன்  1200 ரூபா கொடுத்து  ஆட்டோவில்  வரவேண்டும் என   மனதில் பட்டதை கேட்டால் அந்த நண்பர் சொன்னது “சமூக  STATUS ” என்ற பொருள் பதம்  பற்றி. தனது  ஆட்டோவை  தானே ஓட்டி வந்தால் தன்னுடன்  வியாபார நிமித்தமாக  தொடர்பு கொள்பவர்கள்  யாரும்  பார்க்க நேர்ந்தால்  அடுத்த தடவை  தன்னுடன் தொடர்பு கொள்ளமாட்டார்கள். வியாபாரம்  படுத்து விடும். சமூக  அடையாளம் தரம்  தாழ்ந்து  விடாமல் பேணிக்கொள்வதற்கு இவ்வாறான  நடைமுறைகள் அவசியம்  என்பதாக அமைந்திருந்தது  அவரின் பேச்சு.

 சுப்பு  அவருடன்  ஒன்றும்  கதைக்காமல்  என்னிடம் வந்து  புலம்பினான். பில்கேட்ஸ்  கூட சாப்பிட்டு  முடிந்தவுடன் தனது  தட்டை தானே கழுவி  வைக்கின்றார். இருப்பவர்கள்  நிறைகுடம்; இயல்பாக இருக்கின்றார்கள். இல்லாதவர்கள் குறைகுடம் ; தளம்பிக் கொள்கின்றார்கள்.

buffett-in-Indiaவாரன் பப்பெற் உலகின்  மிகப்பெரும் தனவந்தர். பங்குச்  சந்தையில் முதலீடு  செய்து  பணம் பண்ணுபவர். மற்ற முதலீட்டாளர்கள்  பெரிய பெரிய நிறுவனங்களின்  பங்குகளை  நம்பிக்கையுடன் வாங்கி  வருவாய் தேட முயற்சிக்கையில்  வாரன்  மிகச்சிறிய கொள்விலை  கொண்ட சிறு  நிறுவனங்களின் பங்குகளை  “எதிர்காலத்தில் சிறப்பாக போகும்” என ஆராய்ந்து  முதலீடு  செய்து பெரும்  பணக்காரர் ஆனவர். இவரது  2009  நிதிநிலை 39 மில்லியார்டன்  டொலர்கள். எவ்வளவு பெரிய வீடு,எவ்வளவு வேலைக்காரர்கள் என  எண்ணுவீர்களாயின் அப்படி ஒன்றும் கிடையாது. உலகின்  முதல்  மிக  எளிமையான  பணக்காரர்.

1950 களில் தான் முதல்  முதலாக வாங்கிய 5 அறை அளவு கொண்ட வீட்டில்தான்  இன்று வரை வசித்து வருகின்றார். வேலைக்கென  ஆட்கள்  யாரும் கிடையாது. காலை  உணவை  தானே தயாரித்து கொள்கின்றார். தனது மரணத்தின்  பின் சொத்துக்களின்  99 வீதத்தை  தர்மஸ்தாபனங்களுக்கு  எழுதி வைத்துவிட்டார். (பிறகு என்ன மசிருக்கு இவ்வளவு கஸ்டப்பட்டு உழைத்தனீர் என்று மாண்புமிகு வாசகர்கள் கேள்வி கேட்க வேண்டாம்.) அவர்  கூறிய  ஒரு விடயம்  உங்களுக்குப்  பிடித்த பொருட்களை வாங்குங்கள். அவை  பெரிய நிறுவனங்களின் பிராண்ட் தயாரிப்புகளாக இருக்க  வேண்டியதில்லை.பக்கத்து வீட்டு ஆச்சி செய்யும்  பப்படங்களை விட  ஆச்சி மசாலா பப்படங்களும் மசாலாப்பொடிகளும் தான் தமிழர் கரங்களில் தவழ்கின்றன. எங்கும் எதிலும் பிராண்டட் பொடிகள்  பற்பசை,  சோப்புகள், ஸாம்புகள்,    CARE FREE இன்னபிற.

 வாரன் பப்பற் பற்றி  நான் அறிந்து  கொண்டது  சம்பவம்  மூன்று.

 பந்தா  என்ற  சொல்லை  அறிந்திருப்போம்.PHANDHA  என்ற  சொல்லின்  வேர்ச்சொல்  சமஸ்கிருதம்  என்றும்  அதன் பொருள்  வழி, வழிமுறை ,அடம்பவீம்பு  என  அகராதியில்  காணக் கிடைக்கின்றது. நாம்  தற்போது  பந்தா  என்ற சொல்லை  ஆடம்பரம், பகட்டு, அலட்டல்  என்றும்  பொருள்களில்  கையாளுகின்றோம். யாராவது  ஒருவரை  தமது இயல்பிற்கு  மீறி,  இருப்புக்கு மீறி  இயங்கும் போது  அவர்  சரியான பந்தாப்  பேர்வழி  எனக்  குறிப்பிடுகின்றோம்.

சுப்புவிற்கு  நடந்த இரு  சம்பவங்களுக்கும்  நான் புத்தக  வாசிப்பில் அறிந்து கொண்ட மூன்றாவது  நிகழ்விற்கும் ஏதாவது ஒற்றுமை  இருக்கின்றதா?

 2-format3மூன்றையும் பந்தா  என்ற  அடம்பவீம்பு,  சமூகஅடையாளம்  குறித்த பதத்திற்குள்  அடக்கி விடலாம். பிராண்டட் பொருட்களை  வாங்குவது  நுகர்வுக்  கலாச்சாரத்தின் சமூக அடையாளம். தங்கள்  நிலைக்கு ஏற்ப,  இருப்புக்கு ஏற்ப வாழாது பிறரின்  பார்வைக்கு  தன்னைப்பற்றிய நேர்த்தியான அடையாளம்  கொடுப்பதற்காக  வாடகை ஆட்டோவில் வந்ததும்  சமூக  அடையாளம் தான்.

 ஆனால்  எனக்கென்னவோ இந்த  மூன்று நிகழ்வும்  ஒரு பதிவு எழுதுவதற்கு  ஏற்றதாய் அமைந்துவிட்டதையும் அதற்கு  எடுத்துக்காட்டாய்  வண்ணத்துப்பூச்சி  தத்துவத்தையும்  கூறிவிடலாம்.  அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்ணத்துப்பூச்சியின்  சிறகசைப்பில்  உண்டாகும் காற்று  காலப்போக்கில் பசுபிக்பெருங்கடலில்  புயலாக மாறலாம். இதையே  “BUTTERFLY  EFFECT” எனவும்  கூறுவர். “BUTTERFLY  EFFECT”   புனைவர்களுக்கு அறிவியல் தந்த ஒரு கொடை என்று மேலெழுந்தவாரியான ஒரு குற்றச்சாட்டும் உண்டு.

 அறிவியல்  ஒழுங்கமைப்பின்  உலகு என  மார்தட்டும்  அறிவியலாளர்கள்  ஒழுங்கற்றவைகளை  ஒழுங்குக்குள்  காட்ட முனைந்ததே  “BUTTERFLY  EFFECT”  ன் சாரம்சம். புனைவர்களாகிய எழுத்தாளர்கள்  முடிந்தால்  பயன்படுத்தி கொள்கின்றோம். முடியாவிட்டால்  போட்டுவிட்டு  போகப் போகின்றோம்.

 ஒரு சிறகசைப்பு… மெலிதான காற்று… பந்தா காட்டுவது… BUTTERFLY  EFFECT  .. தூரத்தே காற்று பெரிதாகிக்கொண்டு வருகின்றது. என்ன  நடக்குமோ தெரியாது.

*********************************************************************************************


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்