ஆருத்ரா எழுதியவை | மார்ச் 23, 2012

கருணாநிதியும் , விசர் வினாசித்தம்பியும்

Image

தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து, முடிந்தால் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுடைய துணையோடு இப்போது எப்படி இந்தத் தீர்மானத்தில் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தோமோ அதைப் போல ஒருமித்த குரலைக் கொடுத்து ஆவன செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனால் இல்கை இதுவரை தமிழர்களுக்குப் புரிந்த கொடுமைகளுக்கு பரிகாரம் தேடுகின்ற நெருக்கடி ஏற்படும். ஏனென்றால் சிசுக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்களும், தமிழர்களும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சவக்குழிக்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படவும், உலக நாடுகள் முன்னால் தலை குனிந்து நின்று காரண காரிய விளக்கங்கள் சொல்லவும் இலங்கை அரசு கடமைப்பட்டிருக்கிறது.

இப்போது தான் பெரும்பாலான நாடுகளுடைய தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த நாடுகள் தான் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

விசர் வினாசித்தம்பியின்ர விமர்சனம்.

அடங்கொக்க மக்கா! சுடலைஞானம் சுடலைஞானம் எண்டது இதுதானோ!

ஆராவது ஆக்கி வைச்சால் பரிமாறுறதுக்கு முன்னுக்கு நிப்பியளாக்கும்.

எலெக்சன்  டைமிலயும் ,சொத்து சம்பந்தமா வழக்கு வரேக்கையும் தான்  ஈழத்தமிழரிலை உங்களுக்கு    பாசம் பொங்கி வழியும். இது விளங்காத சனங்கள் என்னை விசர் வினாசித்தம்பி என்கினம்.
பரதேசி  ஆடேக்கை  பன்னாடை  கழண்டு  விழுந்த  கதையாயல்லோ  இருக்கு!

ஆருத்ரா எழுதியவை | மார்ச் 19, 2012

சாவகச்சேரி-துயரின் படிமம்.

Image

வாழ்ந்த வீடு வடிவிழந்து
போயிற்று.

வீட்டிற்கு தேவையானவர்கள்
வீதிவழி போனார்கள்.
காற்றின் மௌனம்
பேரிரைச்சலாயிற்று.

மாமரத்தினடியில் விளையாடிய
கிட்டிப்புள்ளும் கிளித்தட்டும்
நினைவுப் பதிவில் நின்றாடுகின்றன.

கிணறும், வாய்க்காலும், வரப்பும்
தீண்டாத துலாக்கொடியுடன்
பார்வைக்கு வைக்கப்பட்டு
பத்தியப்படாமல் போயிற்று.

கூப்பிடு தொலைவிற்கு மனிதசஞ்சாரமற்ற
வெற்றிடப் பெருவெளி.
கூடி வாழ்வதற்கான பெருந்துணையின்றிய
வாழ்வின் கூத்து.

விடுமுறைக்காலத்தின்
பெருந்துயர் படிந்த நினைவுச்சிதறலாக
சாவகச்சேரி- என்வீடு எனக் கழிகின்றது
என் மனஇறுக்கம்.

மகளின் கைபற்றி
இது” என்வீடு” எனச் சுட்டுகையில்
அம்மாவும் அப்பாவும் தங்கைகளும்
முற்றத்து மாமரத்தினடியில்
முழுக் கனவாகப் போயினர்.

எப்போது புலரும்
பழைய பனிக்காலம்?

ஆருத்ரா எழுதியவை | ஜனவரி 23, 2012

நகுலபாஸ்கரன்.

சிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும். சிலவேளை அதைவந்து அலைகொண்டு போகும்.

என்ற மகாகவியின் வரிகளும்

சிறகிலிருந்து பிரிந்து விழும் பறவையின் இறகொன்று காற்றின் தீராப்பக்கங்களில்

பறவையின் சுயசரிதத்தை எழுதிச்செல்கின்றது.

என்ற பிரமிளின் படிம வரிகளும் நிலையாமை என்ற நிரந்தரமின்மை குறித்தும், முடிவற்ற துயர் குறித்தும் வினவிச்செல்கின்றது. காற்றின் தீராப்பக்கங்கள் முழுவதும் மானுடத்தின், மரணத்தின், பிறப்பின், வாழ்வின் அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன போன்றே தோன்றுகின்றது.

சாவகச்சேரி என்ற ஊர்ப்பெயர், புலம்பெயர்ந்த மண்ணிடைவாழும் மாந்தர்க்கு விடுமுறைக்கு மாத்திரம் வாயில் புழங்கி, எஞ்சிய காலங்கள் கனவுகளில் கைகோர்த்த ஒரு பெயராகவே எண்ணத்தோன்றுகின்றது. அவ்வாறு விடுமுறை செல்லும் காலங்களில் ஏதாவதொரு துயரின் படிமம் நெஞ்சில் வந்து அறைந்துவிட்டுச் செல்கின்றது.

சாவகச்சேரி குறித்த வனப்புகள் மறைந்து போய், வீதிகளில் தரிசிக்கும் முககங்களில் ஏதாவதொன்றில் எம்முடன் படித்தவர்கள், பரிச்சயமானவர்கள், தெரிகின்றார்களா? என்று முகவிலாசம் பார்த்து அலைகின்ற வேளைகளில் …

அல்லாரை, மீசாலை வீதிகளின் நெருக்கத்தில் நண்பன் நகுலபாஸ்கரனின் நினைவுகள் வந்து நின்றாடி போகின்றன. இறப்பின் படிமப் பிடிப்பாகி இளவயதில் மறைந்த நகுலபாஸ்கரன் 80களின் மத்தியில் எம்முடன் கல்விபயின்றவன். கனவுகள் கண்வழி கொப்பளித்த வேளைகளில் சாவகச்சேரி கொட்டில்கள் ஒன்றில் A/L உயர்தர வகுப்பில் எம்முடன் இணைந்தவன். சாவகச்சேரி கல்லூரிகளில் கல்வி கற்றவர்களுக்கும், யாழ்நகர கல்லூரிகளில் கல்விகற்றவர்களுக்கும் இணைப்புபாலமாகவே கொட்டில்கள் நிகழ்ந்தன.

நகுலபாஸ்கரனை அவ்வாறான ஒரு காலப்பகுதியில் எம்முடன் பயிலும் நண்பனாக உள்வாங்கிக்கொண்ட தருணத்தில் அவனின் அவ்வயதிற்கேயுரிய குளப்படிகளும், பகிடிகளும் எமக்குள் ஒரு இணைபிரியா நெருக்கத்தை தோற்றுவித்ததை இவ்விடத்தில் சொல்லியாகவேண்டும். முடிவற்ற நீண்ட பெருவெளிகளில் பேச்சொலிகளும், கூச்சல்களுமாக எம் இளமை கரைந்த இன்பப்பொழுதுகள் அவை.

பெரும்பாலான வகுப்புகளில் நிறையப்பேர் படித்தாலும், அவர்களுக்குள்ளும் ஒவ்வொரு குழுவாகவும், ஒவ்வொரு கோஷ்டிகளாகவும் தமக்குள் மீண்டும் ஒன்றிணைதல்கள் நடக்கின்ற தருணத்தில், இந்த A/L புதுமுக வகுப்பு நாம் அனைவரும் ஒன்றாகவே கலந்து பழகிட வழி வகுத்தது. அந்த ரியூசன் சென்டரின் மாமரத்தின் கீழும், வேலிஓரங்களிலும் எங்கள் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அல்லது படுக்க வைக்கப்பட்டிருக்கும். படுக்க வைக்கப்பட்டவை திருப்பியும் விழாது என்பதில் நீண்ட நம்பிக்கை வைத்திருந்த நண்பர் குழாம் அது.

நகுலபாஸ்கரன், டொக்கு இருவரும் மீசாலையில் இருந்து வருபவர்கள். நானும் இன்னும் இருவரும் தபாற்கந்தோர் வீதியை வீடுசெல்லும் மார்க்கமாக பாவிப்பவர்கள். வீட்டில் இருப்பது வீடுபேறு தராது என்ற காரணத்தால், நாளும் பொழுதும் ரியூசன் சென்டரிலேயே தவமாய் தவமிருப்பவர்கள் தான் என்றாலும்…. எஞ்சிய வேளைகளில் படிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்துவதுண்டு என்ற பேருண்மையை சொல்லியாக வேண்டும்.

யாழ் இந்துக்கல்லூரி மாணவனான நகுலபாஸ்கரன் படிப்பில் மிகவும் கெட்டி. அதே கல்லூரியில் அவருடன் பயின்ற குருபரன் என்ற மாணவருக்கும் அவருக்குமான போட்டியில் உயர்தர வகுப்பின் நான்கு பாடங்களிலும் 100க்கு அண்டிய 96, 97 இல் ஒற்றைப்புள்ளியில் இருவருக்கும் போட்டி நடக்கும். ஆரோக்கியமான போட்டி போடுதல் குறித்து ஒரு முறை ரியூசன் வகுப்பில் விலங்கியல் ஆசிரியர் தம்பிராஜா ஆர்வத்துடன் வினவியதால் மாத்திரமே இதை நாமறிந்து கொள்ள முடிந்து. Thats all என்ன? என்று ஒவ்வொரு பாடமுடிவிலும் கேட்கும் திரு.தம்பிராஜா ஆசிரியர் சிகரெட்டை ஒரு பப் இழுத்து, கண்களை மூடி வன்கூட்டுத் தொகுதி என்பார். அவ்வளவு அழகு அந்த மாலைகளும், மாணவர்களாக நாமிருந்த வேளைகளும்.

இருப்பின் மீதான துயரம் இழப்பின் மீதாக வருகின்றது. மரணத்தின் அந்தியந்த பரியந்தம் எம்மீது திணிக்கப்பட்டதான நாள் அடுத்து வரும் நாளொன்றில் வருகின்றது.

முதல்நாள் அரசடி லேனில் பௌதிகவகுப்பில் எம்முடன் பயின்றுவிட்டு கலைந்து சென்ற நகுலபாஸ்கரனை, அடுத்த நாள் அவர்வீட்டின் மாமரத்தடியில் வாங்கொன்றில் உயிரற்ற உடலமாக கண்டேன்.

அந்த ஞாயிறொன்றின் மாலைவேளை பௌதிகவகுப்பு, துயரொன்றின் முடிவுடன் ஆரம்பித்ததாக நாம் நினைத்தே பார்க்கவில்லை. இருளில் ஒவ்வொருவராக கலைந்து சென்றோம். கனவின் மீதூர்ந்து அலைந்து சென்றோம்.

அப்போது யாழிற்கான பிரதான பாதையாக கோப்பாய் பாலம் திகழ்ந்து கொண்டிருந்தது. வழமையான கைதடி வீதியில் இராணுவமுகாம் அமைத்திருந்த பாதை இறுக்கமாக மூடப்பட்டிருந்த காரணத்தால், கோப்பாய் பாலத்திற்கூடாக பெருவெளியை கடந்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தென்மராட்சி மக்கள் உட்பட்டிருந்தனம்.

அப்பாதையூடான பிரயாணம் மிகப்பாதுகாப்பாக அமைந்திருக்கவில்லை. கைதடி இராணுமுகாமிற்கு உணவு ஆயுத விநியோகம் ஆகாய மார்க்கமாகவே நிகழ்ந்து வந்ததால், பொதுமக்கள் உலங்குவானூர்தி, விமான தாக்குதல்களிற்கு ஆளாகி வந்த துயரம் சர்வசாதாரண நிகழ்வாக தொடர்ந்து வந்தது.

பரீட்சை சமயமாதலால், பரீட்சை முடிந்து சக மாணவர்களோடு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நகுலபாஸ்கரன் வெளியே இருந்த அசாதரண நிலையை கவனத்தில் கொள்ள தவறிவிட்டதானது, அவர் உலகின்றும் தள்ளிவிடக் காரணமாக அமைந்தது. கோப்பாய் பாலத்திற்கூடாக பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் வானத்தை நோக்கி, வானில் பறப்பை மேற்கொண்டிருந்த உலங்குவானூர்தி வேட்டுக்ளை தீர்த்துக்கொண்டிருந்தது. ஒருமுறை வேட்டுக்ளைத் தீர்த்து விட்டு அப்பால் சென்று, திரும்பி வந்து திருப்பியும் வேட்டுக்களை தீர்த்துக்கொண்டிருந்த பொழுதில், பேருந்தில் இருந்து வெளியேறி நிலைமையை உணரமுற்பட்ட நகுலபாஸ்கரன் மீது தோள்பட்டையிலும், நெஞ்சிலும் துளைத்தன இரும்புத்துணுக்குகள். பிணமாக விழுந்த நகுலபாஸ்கரனை அள்ளிவந்த தோழர்களினால், இறுதிச்சடங்குகள் பாரிய அளவில் திரளான மக்கள் கூட்டத்துடன் நிகழ்த்தப்பட்டன.

மரணத்தின் துயர் வலியது. 86ன் நிகழ்வுகள் அனிச்சையாக கண்களை குளமாக்குகின்றது. மாணவப் பருவத்தில் நிகழ்ந்த முதல் இழப்பின் பிரிவு.

இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு அனைத்து மாணவர்களும் அணிதிரண்டிருந்த பொழுதில், யாழ் இந்துக்கல்லூரியின் அவரது தோழர்களும் மற்றவர்களும் ஆசிரியர்களும் பிரசன்னமாகி துயரில் துணை சேர்ந்தனர்.

அவரது வீடு அப்போது முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டிருக்கவில்லை. நிலைகளும் ஜன்னல்களும் வெறுமனே திறந்த படி இருந்தன. நகுலபாஸ்கரனின் கடைசித் தங்கை ஜன்னல் நிலைகளுக்குள் குந்தியிருந்து கண்ணீர் சிந்தி அழுதது, இன்றளவும் மாபெரும் துயரின் படிமமாக என்னுள் நிலைத்திருக்கின்றது.

அரையில் வேட்டியும், மேலில் துண்டுமாக காட்சி தந்த நகுலபாஸ்கரனின் தந்தை, அங்கு திரண்டிருந்த நகுலபாஸ்கரனின் கல்லூரித் தோழர்கள் கைகொடுத்து விடைபெறமுயலும் தருணத்தில் எல்லாம், துண்டால் முகம்பொத்தி விம்மிக்கொண்டிருந்தது, கரைந்து விட்ட காலத்தின் சோகம். வந்திருந்த அனைத்து மாணவர் முகத்திலும், தன் இளவயது மைந்தனின் முகத்தை கண்டு துக்கித்த தந்தையொன்றின் பெருந்துயரம்.

கோப்பாய் பாலத்திற்கு ஊடாக அவருடன் பயணித்த மாணவக்கூட்டம், தற்போதும் அப்பாதை வழியாக பயணப்படும் போது, புலம் பெயர்ந்த சோகத்தை விட துயரமானது நினைவின் நெகிழ்வுகள் என்பதை அனுபவித்திருக்ககூடும்.

காலமான காலத்தின் பின் எமது, மாலைநேர தனியார் வகுப்புகன் களையிழந்து போயின. கண்டிவீதி மார்க்கமாக, அவருடன் பயணிக்கும் டொக்கு தனியே சென்று வந்தான். நகுலபாஸ்கரனின் புகைப்படமொன்றை பெரிதாக்கி தன் வீட்டு சாமியறையில் வைத்திருப்பதாக நினைவு கூர்ந்தான்.

பின்னாட்களில் நாட்டினின்றும் வெளியேறிய நான் டொக்குவையும் காணவில்லை. அதன் பின்னராக வேறெந்த பெருந்துயரையும் காணவில்லை.

மனிதம் மரிக்கின்ற தருணங்கள், வாழ்வின் தீராப்பக்கங்களில் பெருந்துயர சரிதத்தை எழுதிச் செல்கின்றது.

இப்போது நகுலபாஸ்கரன் இருந்திருந்தால், Facebook வழி ஏதாவது நாடொன்றில் இருந்து கொண்டு குசலம் விசாரித்து பின்னைய நாட்களை கழித்திருப்போமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஆருத்ரா எழுதியவை | ஜனவரி 17, 2012

அகவெளி

ஏதாவது எழுத வேண்டும் என்ற பெரு அரிப்பும், பெரு விருப்பும் மனதில் அலையடித்த வேளைகளில் எல்லாம் எவ்வித பிடிமானமும் இன்றி அலைக்கழிதலாக காலம் கழிந்திருக்கின்றது. சில வேளைகளில் வந்து துரத்தியடிக்கும் சமூகச் சீற்றமும் அடங்கி அமுங்கி அவமாய் போயிருக்கிறது.

வடிகால் தேடி அலைந்த பொழுதுகளில் ஒருகாலத்தின் முந்தைய வெளிப்பாடுகளான கவிதைகளும் சிறுகதைகளும் அச்சு வாகனமேறி பழுத்த காகிதத்தில் பதிவாகிப்போயின. பதிவுகளை படித்துப் பார்க்கையில் நிரப்பப்படாத பக்கங்கள் நீண்டு கொண்டே போயின. மனப்பெருவெளியில் நாங்கள் நிர்வாணமாக நிற்றலை உணர்ந்து வெட்கி தலைகுனிந்து போன கணங்கள் ஏராளம்.   இலக்கியப்பரப்பில் நுழைந்து ஒரு சாகசம் பண்ணிப் போகும் சாணக்கியம் எமக்கில்லாத போதும், பதிவு செய்து எம்மை பத்திரப்படுத்திக் கொள்ளும் இருப்பின் மீதான படிமம் வகை தொகையின்றி வாய்திருக்கின்றது.

“ஆருத்ரா தரிசனம்“ வந்து விழும் நினைவின் நெகிழ்வுகள், ஆக்கங்கள் பிறரின் வாசக கவனத்தைப் பெற்றாலே ஈன்றதின் பெரும்பேறை அடைந்து கொள்வோம்.

தொடர்ந்து பயணிக்க கைத்தடி தேடும் காலம் இது. அங்கேயும் இங்கேயுமாக கிள்ளித்தெளிக்கும் நேரத்தின் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும், துறைசார் அறிவின் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும், வந்து வாய்த்த தோதான நட்புத்துணையுடன், பேச்சுவாக்கில் கதைத்து, பயண அலுப்பில்லாமல் நீளவாக்கில் நெடும் பயணம் புரிய நட்புத்தோழன் பலமாக பாலமாக இருப்பான் என்றெண்ணி முடிக்கும் தறுவாயில் ஒன்று தலையில் தட்டுகின்றது

“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே“

அன்புடன்

ஆருத்ரா


« Newer Posts

பிரிவுகள்