பாட்டுப்பெட்டி இதுவரை கேட்டு பரவசமான இசையை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் வரையப்பட்ட பதிவு. இசை எல்லை கடந்த மொழியின் பரிமாணம். இசைக்கோர்ப்பிற்குள் தனித்து ஒரு மொழியை அடையாளப்படுத்தும் பண்பற்ற இலக்கணம் அமைவதில்லை. எந்த மொழியிலமைந்த பாடலாயினும் கேட்டவுடன் மனதிற்கு நெருக்கமான ஒரு தன்மையை இசைச்சுரம் அமைத்து விடுகின்றது. இசை எல்லை கடந்த இலக்கணம் என்றால் காதல் எல்லை கடந்த இலக்கியம்.
எண்பத்து ஒன்பதாம் ஆண்டு என்று நினைவு. அப்போது தான் நான் சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்தேன் என்று சொல்ல முடியாது.அடித்து விரட்டப்பட்டு புகலிடம் தேடி வந்திருந்தேன் என்பதாக வெளியில் சொல்லிக் கொள்ளலாம் தப்பில்லை.எனக்கு சுவிஸ் மிக அந்நிய பூமியாக சாவகச்சேரிப் பரப்பிலிருந்து நீங்கி வேறு ஒரு கலாச்சார வாழ்வியலுக்கு என்னை பொருத்த எத்தனித்து முடியாத கனத்த துயரப்படிமமான இடமாக ஆகிப்போயிருந்த பொழுதொன்றில்….
“லம்பாடா” என்ற இந்தப்பாடல் சுவிஸின் பட்டி தொட்டி எங்கும் பரவலாக புசிக்கப்பட்டுக்கொண்டிருந்த இசை. “லம்பாடா” என்பது ஸ்பானிஸ் கலாச்சார நடனம். இரண்டு கால்களுக்கிடையில் நடன ஜோடியின் ஒரு கால் இணைக்கப்பட்டு ஆடப்படும் ஒரு நடனவகை என வரையறை செய்யப்பட்டிருந்தாலும் அந்த இசை எங்கெங்கோ செல்லும் என் மேகங்கள்.
நான்கோ ஐந்தோ நிமிடங்கள் கொண்ட பாடலில் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் மிகச்செறிவான ஒரு காதல் கதை பதிவாக்கப்பட்டிருப்பது தெரியும். கண்களின் சிறு பதின்ம வயதிற்குரிய ஏக்கங்கள் அழகாக உள்வாங்கப்பட்டிருக்கும். காதலை பற்றி பத்தி பத்தியாக எழுதிச் செல்லலாம். அதுவல்ல நோக்கம்.
பாட்டுப் பெட்டியில் “லம்பாடா” வை இணைக்க அற்புதமான இசைக்கோர்ப்பு, காட்சிப்படுத்தப்பட்ட விதம், ஒரு கறுப்பின சிறுவன், வெள்ளை வெளேர் சிறுமி, வேறுபாடுகளை கடந்து காதல் கொள்ளும் தருணம் என நிறையச் சொல்லலாம்.
ஒரு முடிவற்ற நீண்ட கடற்கரையில் இயங்கும் உணவகத்தில் தந்தைக்கு உதவியாக வெள்ளை வெளேர் சிறு பெண். உணவகத்தின் ஒரு பரப்பில் நடனக்குழுவும் பாடகியும். ஆடுவதற்கு தோதான ஜோடியின்றி ஏக்கம் தோய்ந்த சிறுவன். அவர்களுக்கிடையிலான முதல்பார்வை என சின்ன சின்ன வனைவுகளுடன் இலகுவான ஒளிப்பதிவில் அற்புதமான காட்சிப்படிமம்.
இடையில் கோபம் கொண்டு தந்தை கை நீட்டுவது, அதையும் உடைத்துக் கொண்டு அந்த ஏக்கம் நிறைந்த சிறுவனுடன் நடனமாட காதல் கொண்டு விளைவது என பரந்து விரிந்த அழகான லம்பாடா இசை காதலை மனதிலிருத்தி செய்யப்பட்ட பாடல். தந்தை கோபப்பட்டு அடிக்க வரும் தருணத்தில் லம்பாடா பாடகி தந்தையை இழுத்து வைத்து நடனமாடுவதும் சிறு சிரிப்புடன் வன்மத்தை மறப்பதும் அழகுக்கவிதை காட்சியமைப்பு.
எப்போதும் காதலென்பது மிக இறுக்கமான சூழ்நிலைகளைக் கொண்டிருப்பதில்லை. இறுக்கத்தை மீறிக் கடந்து விட்டால் அது தன் இயல்பிற்குள் மீண்டு விடுகின்றது. காதல் வாழ்க்கையின் வனப்பு; சுந்தரகாண்டம்.
எண்பத்து மூன்றாம் ஆண்டுகளில் ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒரு பாடல் மிகப்பிரபலமாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. FREDDY SILVA என்ற சிங்கள நகைச்சுவை நடிகர் பாடகர் இசைத்த அந்தப்பாடல் ஊர்ப்புறத்திலிருந்து கொழும்பு மாநகருக்கு வந்திறங்கும் நாட்டுப்புறத்தான் தோற்றத்தில், கையில் குடையுடன் கொழும்புத் தெருக்களில், வாகன இடுக்குகளில் நுழைந்து எழுந்து பாடும் கேலியான நகைச்சுவைப் பாடல். குண்டுமணியை விளித்து கேலிகளால் நிரவப்பட்டது இந்தப்பாடல்.
ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் லலிதா ஜீவல்லர்ஸ் ஆதரவில் தமிழ் திரை ப்படம் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் தருணங்கள் தான் சாவகச்சேரிப்பரப்பில் தொலைக்காட்சிப் பெட்டிகள் அறிமுகமான காலங்களாக விடிகின்றன. கறுப்பு வெள்ளையில் 14″ அந்தச் சிறு பெட்டிக்கூடாக ரூபவாகினியால் ஒளிபரப்பப்படும் அரதப்பழசான தமிழ்ப்படங்கள், KNIGHT RIDER எல்லாம் பார்த்து வியந்த காலங்கள்.
இப்போது விஞ்ஞானத்தின் விரைவில் எல்லாப் பழைய சங்கதிகளும், எல்லாப் புது சங்கதிகளும் உங்கள் விரல் நுனிகளுக்குள் வித்தை காட்டுகின்றன. மாஜா-பஜார் வேண்டுமா? ஒரே சொடக்கில் YOU TUBE னூடாக திருச்சி லோகநாதன் “கல்யாண சமையல் சாதம்” பாடத்தொடங்குகின்றார். இன்னொரு சொடக்கில் “வாராய் நீ வாராய்” என CS ஜெயராமன் தடித்த குரலில் பரவசப்படுத்துகின்றார். இணையம் எல்லாவற்றையும் இலகுவாக்கி வைத்திருக்கின்றது.
பண்டைய கால மன்னர்கள் அனுபவித்திராத பல வசதிகளை இன்றைய நிலையில் ஒரு சாதாரண மனிதன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக ஜக்கி வாசுதேவ் தனது புத்தகமொன்றில் குறிப்பிட்டுள்ளது வாழ்வியலின் யதார்த்த பார்வை.
ஒரு மனிதன் மிக்க புகழுடன் பணச்செறிவுடன் வாழ்ந்து விட்டு, பின்னாட்களில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நடுத்தெருவில் நிற்பது கலைஞர்களுக்கே உரித்தான சாபம். ஏப்போதும் கற்பனை உலகில், சிருஷ்டிப் பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் அவர்களால் நிகழ்கால நடைமுறைகள் உள்வாங்கப்படுவதில்லை என்ற காரண விளைவு காரணமாக புகழ் போதை கடந்த நிலையில் வறுமைக்குள் வீழ்த்தப்படுகின்றார்கள். FREDDY SILVA வறுமையில் புள்ளி கொண்டு எழுந்து அற்புதமான நகைச்சுவை நடிகர், பாடகர் என பல அவதாரங்கொண்டு மிக்க வசதியுடன் வாழ்ந்து இறுதிக்காலங்களை கார் விடுவதற்கு பயன்படும் CAR SET இனுள் கழித்த மானுடன்.
1938 – 2001 இவரின் காலப்பகுதி.
இசையை ரசிப்பதற்கு இனவாதம், சமகால அரசியல் என்பவற்றை மூட்டை கட்டி வைத்து விட்டு இயல்பு ரசனைக்கு கொண்டு வரலாம். தப்பென்று ஒன்றில்லை
1.குண்டுமணி மன்னாரங் பிட்டிவெல்ல
2.PANKRITTA தக்கிட தரிகிட பாடல் கேட்க இணைப்பை அழுத்துங்கள்.
இசை காலத்தின் கண்ணாடி. சில திரை இசைப்பாடல்கள் நாம் அந்த இசையை கேட்டுப் பருகிய தருணங்களுக்கு எம்மை அழைத்துச்சென்று, நினைவின் அடுக்குகளை நிரவி விடுகின்றன. இன்று இடைக்காலப் பாடல்கள் என்றழைக்கப்படும் மத்திய காலத்தை சேர்ந்தவை எங்களது எண்பதுகளை நினைவு கூர்பவை.
வாழ்க்கை இசையூடாக பரிணமிக்கின்றது. அழகான நாட்களானவை இசைக்கூடாக பயணப்படுகின்றன.
16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற பாடலான “செந்தூரப்பூவே பாடல்” மெல்லிய இசை அதிர்வுகளுடன் இலகுவாக மனம் என்ற மாயத்தை எங்கோ கட்டியிழுத்து விரைகின்றது. ஆரவாரமற்ற இரவுப்பொழுதுகளில் மௌனத்தின் துணையிருப்புடன் இந்தப்பாடலை கேட்பீர்களாயின் ஒரு காலத்திற்குள் கட்டி இழுத்துச் சென்று கண்ணீர் வரவழைக்கும்.
செந்துாரப் பூவே பாடலுக்கான இணைப்பு.
கர்நாடக இசை விமர்சகர்களில் முதன்மையானவர் காலம் சென்ற பி.வி.சுப்ரமணியமம் என்றழைக்கப்படுகின்ற “சுப்புடு” அவர்கள். செந்தூரப்பூவே பாடலில் இளையராஜா என்ன மாயம் செய்தாரோ? இந்தப்பாடல் மெதுவாக உள்ளத்தை எங்கோ அழைத்துச் செல்வதாக சுப்புடு கூறியிருந்தது இளையராஜாவிற்கான சிறப்பு அங்கீகாரம்.
சுப்புடுவின் கடுமையான இசை விமர்சனங்களுக்குப் பயந்து “நாய்கள் மற்றும் சுப்புடுவிற்கு இங்கு அனுமதி இல்லை” எனMUSIC ACADEMY சென்னையில் விளம்பரத்தட்டி வைத்தது.
செந்தூரப்பூவே என்றால் அது என்ன பூ? செவ்வரத்தையா என ஒருமுறை விமர்சனம் வந்த போது பாடலின் சந்தத்திற்கு இசைவாக சொற்களை கோர்க்க முற்பட்ட வேளையில் செந்தூரப்பூவே என்ற சொல் வந்து விழுந்ததாக பாடலாசிரியர் கங்கைஅமரன் குறிப்பிட்டார். செந்தூரப்பூ என ஓரு பூவும் கிடையாது எனக் கூறிவிட்டார். ஆனாலும் செந்தூரப்பூவிற்குள் ஏதோ நினைவுகளும், ஞாபகங்களும், கனவுகளும் புதைந்திருப்பதாக கண்ணீர் தெரிவிக்கின்றது.
பின்னர் 1988 களில் செந்தூரப்பூவே என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி பின்னாட்களிலும் ஒரு காலப்பதிவை இசை செய்துவிட்டுப் போயிருக்கின்றது.
செந்துாரப் பூவே (1988) பாடலுக்கான இணைப்பு.
இவ்விடத்தில் 1988 கள் என்னை மேட்டுப்பாளையத்திற்கும் ஊட்டிக்கும் அழைத்துச் சென்று சுகஅனுபவம் செய்கின்றன. ஊட்டி என்ற மலை வாசஸ்தலத்தின் அடிவார ஊரான மேட்டுப்பாளையம் பின் இரவுப்பனிப் பொழுதுகளையும் மொட்டை மாடியில் அண்ணாந்து பார்த்த அழகான நட்சத்திரங்களையும் ஞாபகப்படுத்தும்.
இசை என்னை எங்கோ அழைத்துச் செல்கின்றது.மெலிதான மனவருத்தங்களையும், கவலைகளையும் கரைத்துவிடுகின்றன இசைச்சுரங்கள்.
******************************************************************************************************
அடுத்த பதிவில் “அப்புவுக்கு வலிக்கும்”.
காதல் என்ற மனித உயிர்ப்பிடிப்பின் அர்த்தம் பொதிந்த சொல் எல்லோருக்கும் சந்தோசத்தை அள்ளித்தருவதில்லை.
துன்பத்துள் தோய்ந்து கண்களில் கண்ணீர் தேக்கி காலாகாலத்திற்கும் மழைக்குள் நின்று அழும் மனிதனின் சோகம் வெளிப்பரப்பில் யாருக்கும் தெரிவதில்லை. சில சமயங்களில் கண்கலங்கி விட்டு அடுத்தவர்கள் பார்த்துவிடப் போகின்றார்களே என்று இயல்பு வாழ்க்கைக்குள் தங்களையும் கட்டி இழுத்துகொண்டு விரையும் மனிதப்பிறப்புகள் தானா வேடிக்கை மனிதர்கள்?
********************************************************************************************************
Natarajan Sundharabuddhan படித்தேன். பாடலைக் கேட்டேன். இனிமையின் ராகம்.
ஒரு முதல் பார்வையிலேயே யாரிடமாவது உங்களை முழுமையாக ஒப்படைத்து இவள், இவன் என அந்திம காலம் வரை பாதுகாப்பையும் இனிதான தருணங்களையும் தர முடியுமென கங்கணம் கட்ட முடியுமானால் காதல் பிறந்திருக்கின்றது; இளையராஜா மீண்டும் இசையமைக்கப்போகின்றார் என்று அர்த்தம். இளையராஜா அற்புதமான சிருஷ்டிகர்த்தா. எனக்கான காதலுக்கு இசையை விசிறி விட்டதும் “இந்தா வைத்துக்கோ” என்று வீசி விட்டதுமான காதல் தளத்தின் இராகதேவன்.
பிரம்மனின் தெளிவான வடிவச் செதுக்கல் ஒரு உயிர்த்துடிப்பாக நடமாடியதாக என் காதல் எனக்கு சொல்லிற்று. மீண்டும் அந்த தனியார் கல்வி நிலையப்பக்கமே என் கனவு தலை வைத்துப் படுக்கின்றது. பூலோக சுவர்க்கம் என்பது ஒரு அடையாளத்திற்கான சொல் எனினும் நேர்வழிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட நிஜ சுவர்க்கமாக அந்த தனியார் கல்வி நிலையம் திகழ்ந்தது.
அந்த தனியார் கல்வி நிலையத்தில் கணிதவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.கற்பித்த கணித ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். அந்த கண்டிப்பும் கோபமும் பெரும்பாலான தருணங்களில் கைகளூடாக முதுகில் பேசும் அறைகளாக இருந்திருக்கின்றன.
அவளிடம் ஏதோ ஒன்று இருந்திருக்கின்றது. என்னை ஆகர்ஷிப்பதற்கு அவைகளே போதுமானவையாக இருந்திருக்கின்றன. அவளுக்கு அந்தச் சின்னஞ்சிறு வயதில் வந்து போகும் ஆஸ்துமா தொல்லை அவள் அதன் காரணமாக வராத தருணங்களில் என்னை அழ வைத்திருக்கின்றது. அவளின் சிரமங்கள் என்னை சித்திரவதை செய்திருக்கின்றன. அன்பின் சிரமங்களுக்கிடையில் அழகை ரசிப்பதும் அழகான சிரமங்களுடன் அன்பை பேணுவதும் காதலுக்கான தனிச்சிறப்பு அடையாளம்.
எங்கள் கல்லூரியின் மதிலோரத்தேமாவும் நாணிக்கொண்டு காதல் கொள்ளும். பால்ய காலநினைவுகள் கசிந்துருகி வளர்ந்து வசந்தத்தின் பரிபாஷையாகி மௌனத்தில் திகைக்கின்றது.
இன்றும் கந்தர்மடத்திலிருந்தே ஆரம்பிக்கலாம். கந்தர்மடத்திலிருந்து நான் படித்த யாழ்.இந்து ஆரம்பபாடசாலை ஏறக்குறைய இரண்டு கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்திருக்கலாம். (இப்போதும் அது அங்கேயே தான் இருக்கும்) அங்கே படிப்பதாலேயே அங்கு படிக்கும் எல்லோருக்கும் தாங்கள் எல்லோரும் வருங்கால இந்துக்கல்லூரி மாணவர்கள் என்கின்ற கற்பனை ஒன்று தொற்றிக்கொள்வதுண்டு. இப்போதும் அவ்வாறான கற்பிதம் ஒன்று வளர்ந்திருப்பதாக எனது மருமகன் மூலம் அறியக்கிடைக்கிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை. இந்துக்கல்லூரி என்பது வேறு. இந்து ஆரம்ப பாடசாலை என்பது வேறு. இந்துக்கல்லூரியில் சேர்வதற்கான நடைமுறைகள் தனியானவை. இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு என அதில் தனியான எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
படிக்கின்ற பிள்ளை எங்கு வேண்டுமானாலும் படிக்கும் என்பதாக சிலர் முணுமுணுப்பது எனக்கும் கேட்கின்றது. இவ்வாறான கோஷங்களில் சில காலம் நானும் மயங்கித் திரிந்திருக்கின்றேன். ஆனால் உண்மை அதுவல்ல. இன்றைய பதிவை நான் கந்தர்மடத்திலிருந்து ஆரம்பித்திருந்தாலும் நான் சொல்ல நினைப்பது நான் பார்த்த ஆசிரியர்களையும் கல்விச்சாலைகளையும் அவை மாணவ மனநிலைகளில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் பற்றித்தான்.
பின்னாட்களில் உயர்தரத்தில் தாவரவியல் கற்பித்த குணசீலன் ஆசிரியர் அவர்களையும் மறக்கவியலாது. ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையங்களுக்கு வருவதே பணம் பண்ணும் ஒற்றை நோக்கத்திற்காகத் தான். அந்த தனியார் கல்விநிலையத்திலும் கட்டணம் செலுத்தமுடியாதவர்களுக்கு இலவசமாக அவர் கற்பித்தது அவர் பற்றிய உயர்வான எண்ணத்தை உருவாக்கியது. அதிலும் அதனை அவர் பண்ணிய விதம் சிறப்பானது. குறித்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள் அவரைச் சந்தித்துக் கதைத்தோ, அல்லது வேறு படிவங்கள் பூர்த்தி செய்யவோ வேண்டியதில்லை. அலுவலகத்தில் தமது கட்டணம் செலுத்தும் அட்டையை ஒப்படைத்தால் அனைத்து மாணவர்களுக்கும் தாவரவியல் பாடத்திற்கு கட்டணம் செலுத்தப்பட்டதாக முத்திரைகுத்தி தரப்படும். இதனால் இலவசமாக கற்பவர்கள் என்னும் அடையாளம் யாருக்கும் தெரியவராது. ஆசிரியர் உட்பட. இதில் எத்தனை மாணவர்களும் பங்குபெறலாம். நான் பார்த்து வியந்த முதல் அப்பழுக்கற்ற சேவை அதுவாகத்தானிருக்கும்.
போர்விமானம் சுற்றுவதாலோ பக்கத்து வீட்டு தாத்தா மண்டையை போடுவதாலோ அல்லது எனக்கே வருத்தம் வருவதாலோ பள்ளிக்கூடம் போகவேண்டியதில்லை என்பது எனக்குள் ஏற்படுத்திய சந்தோசம் போன்று எனது மகளுக்கும் இருப்பது போல் தெரியவில்லை. அதற்கு காரணம் ஆசிரிய-மாணவ உறவுகள் ஒருவித இயல்புநிலையில் அமைவதாக நான் கண்டிருக்கின்றேன். இங்கு ஆசிரியர்கள் என்பவர்கள் சட்டாம்பிள்ளைகளாக இருப்பதில்லை. ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மட்டுமே அதியுச்ச பட்ச அறிவுத்திறன் கொண்டவராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆசிரியரே அனைத்தும் அறிந்தவர் போன்ற ஒரு தேவையற்ற சம்பிரதாயத்தை கடைப்பிடிக்க முனைவதன் விளைவே எமக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே எழுந்த இடைவெளியாக இருக்குமோ என நான் எண்ணுவதுமுண்டு.
பத்தாம் வகுப்பில் கணித-பாடத்திலும் பின்னர் உயர்தரத்தில் தாவரவியல் பாடத்திலும் ஆசிரியர்கள் பிழையானதை சொல்கிறார்கள் என்பதை நிரூபித்ததால் வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றேன். பாடசாலையில் இறுதி ஒன்றரை ஆண்டுகள் தாவரவியல் பாடநேரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. அந்தப்பாட நேரத்தில் ஒழுங்காக இருந்து அந்த ஆசிரியையிடம் தொடர்ந்தும் கற்ற அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல் குறைந்தபட்ச புள்ளிகளைக் கூட பெறாமல் போனது குறித்த ஆசிரியையின் திறமைக்கு சான்றாகலாம்.
பயணம் அலுப்பில்லாமல் சுவாரஸ்யம் நிறைந்ததாய் ஆக்குவதற்கு ஒவ்வொரு நிறுத்தத்திலும் சிலர் இறங்க, சிலர் ஏறிக்கொள்கிறார்கள்.தொண்டுக்கிழம், இளைஞர்கள், யுவதிகள், கன்னகுழி விழச் சிரிக்கும் குழந்தைகள் என வயது வேறுபாடு, வசதி வேறுபாடு நிறைந்த பயணிகள் கூட்டம் சிரித்தும், சந்தோஷித்தும், மௌனித்தும், கூக்குரலிட்டும் கலந்துகட்டிய உணர்ச்சிக் குவியலாய் அரக்கப் பரக்க விரைவது காலை நேர ரயில் பயணங்களில் காணக்கிடைக்கின்ற ஒன்று தான்.
அதே போன்றதுதான் பின்னாட்களில் கொழும்பு செல்வதற்காக சாவகச்சேரி இரயில் நிலைய மேடையில் காத்திருக்கின்ற பொழுதுகளில் தனங்கிளப்பு வயற்காற்று வீசும் பாருங்கள். நான் புதிதாய் பிறந்தெழுவேன். நீடித்த இரயில் பயணத்தில் இரவுப் பொழுதில் சங்கத்தானை இரயில் நிலையம் கடந்து யாருமற்ற மோனத்தில் உறைந்திருக்கும் சாவகச்சேரி இந்துக்கல்லூரியை தாண்டுகையில் என் உயிருக்குயிரான உறவைத் தொலைத்ததை ஒத்த துன்பம் அடைவேன். என்னளவில் உயர்திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் சிறுவயதில் தொலைத்தவன். பிரிவுத்துயரம் தாங்கிக் கொள்ளமுடியாதது. துருப்பிடித்த சைக்கிளில் வைத்திருந்த பாசத்தை போன்றதே உயிர்த்துடிப்பான மாந்தர்களிடத்தில் வைத்திருந்தது என ஒப்புவமை கூறமுடியும். எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. மனிதருக்கு மனிதர் உணர்ச்சித் திறனில், உணர்வுத்திறனில் கனிவாயும், கல்லாயும் இருந்து விட்டுப்போகின்றார்கள்.
இரயிலில் ஏறி எங்களுடன் உட்கார்ந்து பயணித்து அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி விடுகின்றவர்களான – எங்கே போனார்கள்? எங்கே இருக்கின்றார்கள்? என்றே தெரியாத எண்ணற்றவர்களை நாமும் வாழ்க்கை பயணத்தில் தொலைத்திருக்கின்றோம். அவர்களை எப்போதாவது திரும்பிப் பார்க்க முடியுமா? அவர்களுடன் அளவளாவி கூடிக் குதூகலித்திருக்க முடியுமா? என்றெல்லாம் எல்லோரும் ஏக்கப்படுவதைப் போன்றே எனக்கும் துயரப்படிமங்கள் நிறைந்துள்ளன.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொள்ள கற்றுக்கொண்டவர்களால், இரயில் சிநேகித அனுபவங்களை இலகுவாக வலியின்றி கடந்து கொள்ள முடியும். நினைவின் நெகிழ்வுகளை உட்சுமந்து தினம் தினம் நினைவுறுத்தி கண்ணால் கசிந்து கொள்பவர்களுக்கு எங்கள் 82ம் வருடத்து தனியார் கல்வி நிலைய மாணவ குழாமும், கச்சேரியில் வேலை பார்த்துவிட்டு ஓடி வந்து வகுப்பெடுக்கும் அந்த ஆசிரியரும், அதே தனியார் கல்வி நிலையத்தில் கணிதம் கற்பித்து சிலபல வேளைகளில் நட்பு பாராட்டி அரவணைத்த சோதிலிங்கம் மாஸ்டரும், சிறுவயதில் “சொற்றுணை வேதியனை” உறுப்பமைய எழுதிக் கொள்ள கற்பித்த அழகரத்தினம் ஆசிரியையும்,
கணியன் பூங்குன்றானாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது. உலகத்தையே ஒரே ஊராகவும் உலக மக்களை நண்பர்களாகவும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் பாடப்பட்ட இந்தப்பாடல் புறநானூற்றில் 192 வது பாடல். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நினைப்பிருந்தால், உலகில் போரற்ற சமாதான வாழ்வு கிட்டியிருக்கும். சானல் 4 தமிழர்களுக்கு தெரியாது போயிருந்திருக்கும். விமான நிலையங்களில் யாரும் எதையும் அவிழ்த்துக்காட்ட வேண்டிய தேவையிருக்காது. ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களை விட பிரயாணத்திற்கான இணைப்பு (TRANSIT) விமான நிலையங்களான DUBAI லும் QATAR லும் காலணி, இடுப்புப்பட்டி எல்லாவற்றையும் கழற்றி வைத்து பரதேசியாகும் பயண கைங்கர்யம் பெரும் கெடுபிடி எதேச்சாதிகாரம். அதே பாடலின் மீதி வரிகளைப் பார்க்கலாம்.
சங்க இலக்கியம் என்பது தமிழின் மிகப்பெரும் கடல். இதில் விழுந்தெழுந்து வியப்புக்கொள்வதற்கு 2381 பாடல்கள் 473 புலவர்களால் பாடப்பட்டவை. 473 புலவர்கள் என்றவுடன் இவர்களை பாடல் பாடி பொழுதைக்கழித்தவர்களாக எண்ணிக் கொள்ளத் தேவையில்லை. அரசர்கள், போர்வீரர்கள், விவசாயி, சிற்பி, கடற்தொழிலாளி என பல்வேறு தரப்பினரின் வீரம், காதல், அன்பு என மலர்ந்திருக்கின்றது சங்க இலக்கியம்.
காதல் என்பது பரந்த அன்பின் அடையாளம். நல்லன எல்லாவற்றையும் உண்மையான காதல்தான் கற்றுத்தந்திருக்கின்றது. அழவும் சிரிக்கவும் கற்றுத்தருகின்ற காதல் நீண்டகனவொன்றின் காலடிகளைப்பற்றி நடந்ததாக “உயிர்மேவும் காதல்” காலாகாலத்திற்கும் இசைக்கப்படுகின்றது.
பாண்டிய மன்னனிடம் பரிசு பெறுவதற்காக இறைவனரால் பாடப்பட்ட சங்கஇலக்கியப் பாடலொன்றையே தருமி எடுத்துச் செல்கின்றார். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா? அன்றில் வாசனைத்திரவியங்கள் பூக்கள் சூடிக்கொள்வதனால் பெறப்படுகின்ற செயற்கை வாசனையா? என்ற பெரும் சந்தேகம் பாண்டிய மன்னரால் ஏற்படுத்தப்பட்டு சங்கம் வளர்த்த மதுரையிலே நக்கீரன் தலைமையிலே கவி-விவாதம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
சங்கப்பாடலான “கொங்குதேர் அஞ்சிறைத்தும்பி” காட்சிப்படுத்தப்பட்டதனால் “சங்கஇலக்கியம்” என்று தெரியாமலே சினிமா பாடல் வரிகள் போல பெரும் ஜனரஞ்சக அந்தஸ்தை பெற்று விட்டது.