ஆருத்ரா எழுதியவை | மார்ச் 30, 2012

கொன்னே புடுவேன்.

ஒரு   புதன்கிழமை மதியநேரம் ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சி ஒன்றில்” டொக்டருடன் பேசலாம் “என்றநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.மிகவும் பயனுள்ள    நிகழ்ச்சியாக அமைந்தது மற்றவர்களுக்கு. பலபேர் தங்கள் வியாதிகளை கூறி அதற்குரிய வியாக்கியானங்களை மருத்துவரிடம் இருந்து    கேட்டுக்கொண்டிருந்தார்கள்.     மருத்துவரும்     சாந்தமாகவும் பொறுமையாகவும் முகத்தில் புன்னகை ஏந்தி பதிலளித்துக் கொண்டிருந்தார். தங்கள் வியாதிகளை சொஸ்தமாக்கும்படி பலபேர் வேண்டிக் கொண்டார்கள்.Image
சொ ஸ்த்தம்- சுகமாக்குதல் நன்றி-பைபிள்.

மருத்துவர் கோட் சூட் அணிந்து டை கட்டிக்கொண்டிருந்தார். தவறில்லை- குளிர் நாடுகளில் அணியும் உடைதானே அது. அது பற்றி நானொன்றும் குறை கூறவில்லை. வினவுதலும் விடையுறுத்தலும் தொடர்ந்து கொண்டிருந்தது. தொலைபேசி அழைப்பில் பெண்னொருவர் வந்தார்.

“டொக்டரோடை கதைக்கேலுமே – பெண்”

” நான் டொக்டர்தான் கதைக்கிறன். சொல்லுங்கோ”

இங்கு ஒன்று சொல்லியாக வேண்டும். டொக்டர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பன்னெடுங்காலம் லண்டனில் பணியாற்றி வருபவர் என்பதால் சொல்லுங்கள் என்று உச்சரிக்க வேண்டியவர் சற்று முயன்று சொல்லுங்கோ என ஈழத் தமிழிற்கு நெருக்கமானார்.

அதுபற்றி நான் கதைக்க வரவில்லை. எங்கு கதைத்தாலும் தமிழ் ஒன்றுதானே. பிரித்துப்பேசுதல் பிழைபாடுடையதாகும் என்பதை அறிக. அடுத்து அந்தப் பெண்
” டொக்டர் என்ர பிள்ளைக்கு உங்களிடம் ஆறுமாதமாக மருந்து எடுத்துக் கொண்டு வாறன். இன்னும் சுகமாவில்லை இப்பவும் சரியான சுகமில்லை. என்ன செய்யுறது?” என்றார்.

முகத்தில் புன்னகை ஏந்தி பதிலளித்துக் கொண்டிருந்த அந்த டொக்டர் கலவரப்பட்டு பிரகாசமான முகத்தில் கவலை ரேகை படர்ந்தாலும் தெரியாதபடி மறைத்துக் கொண்டு சாமானியருக்கு சரியாக விளங்காத மருத்துவ லத்தீன் சொற்களை பயன்படுத்தத் தொடங்கினார்.
மண்ணில் போட்ட விதை மண்ணிலிருந்து கொண்டு வளர்ச்சிக்கு தயாராகுதல் பிந்தைய நாட்களில் மண்ணிலிருந்து வெளிக்கிளம்புதல் என தொடர்ந்தது அவரின் உதாரணம்.சாராம்சம் – விதை முளைக்க நாட்களாகும்.வியாதி; குணமாக LONG LONG GO AWAY. கனகாலம் எடுக்கும்.
அதுபற்றியும்  எனக்கு வருத்தமில்லை.டொக்டர் பாடு அவ பாடு. அதற்கு அடுத்ததாக அவர் வாயிலிருந்து  உதிர்ந்த நல்முத்துகள் விசனமளிப்பவை.
டாக்டர்கள் முதலில் தங்களிடம் வரும் வியாதியஸ்தர்களுக்கு மிகவும் கூடுதலாக மருந்தெழுதித் தருவார்களாம். வியாதி ஸ்தர்கள் எங்கே ஒழுங்காக மருந்தெடுக்காமல் விட்டுவிடுவார்களோ என்ற    நல்லெண்ணத்தின்   அடிப்படையில்   இவ்வாறு நடந்து   கொ(ல்)ள்வார்களாம். நீடித்து மருத்துவருடன் உறவை பேணி வருதலால் அடுத்து வரும் சந்திப்புகளில் டாக்டர் மருந்துகளின் அளவைக் குறைத்து ஓவர் டோசில் இருந்து காப்பாற்றுவாராம் என்பதாக தொடர்ந்தது டாக்டரின் வாக்குமூலம் .
ஏதோ மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் வைத்திய கலாநிதிகளும் கூட்டுகளவாணிக் கொள்கை வைத்துக்கொண்டு  வருத்தப்பட்டு  வருபவர்களை  மேலும்   பாரஞ்சுமக்கிறவர்களாக மாற்றுகின்றார்களோ  என்ற  சந்தேகமே   எழுகின்றது.  மருத்துவர்கள்    கடவுளுக்கு அடுத்தபடியானவர்கள் உயிர் காக்கும் அற்புத பணியில் ஈடுபடுபவர்கள் என்றெல்லாம் சாமானியர்கள் மனதில் விம்பம் வைத்து வழிபடுகிறார்கள். அதற்கு உதாரணமாக சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி எம் நாட்டிலேயே நல்ல பெயரெடுத்த பல மருத்துவர்கள் இருந்திருக்கிறர்கள். தென்னிந்தியாவிலும் கூட மிகக்குறைந்த செலவில் ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் பல உத்தமர்கள் இருந்திருக்கிறார்கள்; மறைந்திருக்கிறார்கள்.

மருத்துவத்தின் அடிப்படைப் பண்புகளே மாறிப்போய்விட்டன. பெருமளவுக்கு மருத்துவம் வணிக மயமாகிவிட்டதென    பல்வேறு கூக்குரல்கள்   ஆங்காங்கே     எழ ஆரம்பித்துவிட்டன.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சாம்பிளுக்கு தரப்படும் மருந்துகளையே சந்தைப்படுத்தும் வணிகமயமாதல் பற்றி பரவலாகப் பேசப்படுகின்றது.Image

அதற்கு வலுவூட்டுவதுபோல் ஓவர் டோஸ் மருந்து வழங்குதல் பற்றி பிரஸ்தாபித்த அந்த வைத்தியர் பற்றி

இன்னும் நான்கு மாதங்களுக்கு மாத்திரம் உயிர்வாழ்வார்   என கைவிடப்பட்ட  சுவாசப்பையில் புற்றுநோய் நன்கு பரவியநிலையிலுள்ள பெண்ணொருவருக்கு முற்றிலும் சுகப்படுத்தி தருவதாக பணம் வாங்கி பையில் போட்டுக்கொண்டவர்.அப் பெண் நான்கு மாதம் முடிய முன்னரே மண்டையை போட்டது தனிக்கதை.

மிக  அண்மையில்  இலங்கை   சென்று வந்திருந்தேன்.   தாயாரின்    மருத்துவ பராமரிப்பிற்காக சென்று வரவேண்டிய நிலையிலிருந்த பயணம் அது.
ஐரோப்பிய நடைமுறைக்கு பழக்கப்பட்டு நேரம் காலம்   தப்பாது     பணியாற்றுபவர்களுக்கு மத்தியில் ஆறு மணிக்கு நேரம் தந்துவிட்டு பதினொரு மணிவாக்கில் வந்து நின்று கதைக்க நேரமில்லாமல் ஒன்றிரண்டு  நிமிடத்திற்குள்   கடகடவென்று குதிரையோட்டும்           அந்த வைத்திய கலாநிதிகள் அந்நியப்பட்டுப்போனார்கள். ஒவ்வொரு வைத்தியரும் நோயாளியுடன் குறைந்தது  அரைமணி நேரமாவது செலவிடவேண்டும். நோவு, வலி, சுண்டி இழுத்தல் என வேறுபடுத்தி சொல்ல முடியாத நிலையில் நோகுது என்பவரிடம், வலி எத்தகையது என்றும் தொடர்ந்த     உரையாடலின் மூலமே    நோயின் தீவிரம் நோய்க்கான காரணம்   நோயாளியின் பின்புலம் என அறிந்து கொண்டு சிறப்பாக பணியாற்ற முடியுமென ஆர்வலர்கள் பதிலுறுக்கிறார்கள்.

ஒரு நிமிடத்திற்குள் பெயரும் வயதும் ஆண்பால் பெண்பால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும்!
என் தாயார் அனுமதிக்கப்பட்டிருந்த அத் தனியார் வைத்தியாலையில் அந்நோய்க்கென ஏலவே எடுக்கப்பட்டிருந்த  Scan report    அனுமதிக்கப்படவில்லை.   தங்களிடம்  தனியாக Scan எடுக்கச் சொல்லி நின்றார்கள். நோயுற்ற    இடத்திற்கான Scan  உடல்    முழுதிற்குமான Scan  என பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை விழுங்கிக் கொண்டார்கள். வீங்கியிருந்த எனது காற்சட்டைப் பை மெலிந்துகொண்டே வந்தது.
எழுத்தாளர் சுஜாதா சிறுநீரகங்கள்  பாதிப்படைந்த   நிலையில்   சென்னையின்    தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்த நிலையில் ஆனந்தவிகடனில்   வைத்தியசாலை அனுபவங்களைத் தொகுத்திருந்தார்.    இன்னும் சிலநாட்கள் அங்கு இருந்திருந்தால் “எனது ஒற்றைக் கோவணத்தையும் உருவியிருப்பார்கள்” என வருந்தியிருந்தார்.

சாவகச்சேரியில் இரண்டு வைத்திய திலகங்கள் இருந்தார்கள். சின்னப்பு பரியாரியார். இப்போதும் கென்ஸ் மன் லேனில் முன்பிருந்த இடத்தில் இருக்கின்றார். மற்றவர் Dr.Phlips தெற்கு மட்டுவிலில் வைத்தியசாலை வைத்திருந்தவர். இருவருமே ஆயுர்வேத வைத்தியர்கள். அவர்களின் கைபட்டு குணமடையாத நோயாளிகளே கிடையாது.  தூர இடங்களில் இருந்தெல்லாம் வந்து வைத்தியம் பார்த்துச் செல்வார்கள். தெற்கு மட்டுவிலில்   இருந்த கட்டை போட்டு   வைத்தியம் பார்க்கும் வைத்தியரிடம் எவ்வளவு பேர் வருவார்கள்? என்பு பிறழ்வு, முறிவிற்கெல்லாம் கட்டை போட்டு வைத்தியம் பார்க்கும் முறைமை பிரசித்தமானது.

இவர்கள் தரும் மருந்துகள் எல்லாமே கசப்பானவை. கசப்பானவைகள் அதிக களங்கமில்லாததாக தோன்றுகிறது.
நம்மை காலகாலமாக தொடர்ந்து வரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறாதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கமுடியாது –எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ் ணன்.

முதலில் வைத்தியகலாநிதிகள் குற்றமற்றவர்களாக வேண்டும்.

aruthra.tharisanam@hotmail.com


மறுவினைகள்

  1. shiva's avatar

    ARUTHRA, Good Job.
    Nicht nur die Doktor sondern auch Aiyar, Kovil usw.. heute gute Buisness geworden! Leider!

  2. SIVA - BARKAVI's avatar

    Good article…

    http://sivaparkavi.wordpress.com/
    sivaparkavi

  3. சித்திரவீதிக்காரன்'s avatar

    கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகிப்போனது. மருத்துவரோ, ஆசிரியரோ, நீதிபதியோ எல்லோரும் மனிதர்களாக இருக்க வேண்டும். கமல்ஹாசனின் வசூல்ராஜா படம்தான் ஞாபகம் வருகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவல் வாய்ப்பிருந்தால் வாசித்து பாருங்கள். நோய்மையின் சகல தளங்களிலும் அற்புதமாக பயணிக்கும் நாவல். நல்ல பகிர்வு. நன்றி.


சித்திரவீதிக்காரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

பிரிவுகள்