உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங்கில எழுத்துக்களால் நிரப்பப்பட்டிருக்கும் ஆங்கில, ஜேர்மன் புத்தகங்களுக்குள் ஆங்கிலப் புத்தகங்களை தனியே வேறுபடுத்தி அறியும் அளவுக்கே ஆங்கில அறிவு இருந்து கொண்டிருகிறது. போதல் என்பதற்கான GO வை கதைக்கும் தொனியில் வைத்தே நிகழ்கால, இறந்த காலங்களிற்கு பாவிக்கும் வகையிலான அறிவு வாய்க்கப் பெற்றிருப்பது நான் செய்த புண்ணியங்களில் ஒன்று.சார்ல்ஸ் டிக்கென்சும், எமிலி டிக்கின்சனும் என்னால் வாசிக்காமலே போனார்கள்.
திரும்பியும் உண்மையைச் சொல்வதானால் எனக்கு வாய்த்த ஆங்கில ஆசான்களோ, பெற்றோரோ, மற்றோரோ இதற்குக் காரணமில்லை.ஆங்கில ஆசான்களின் திணிப்புத்திறனும், எனது ஏற்புத்திறனும் சமஅளவில் வாய்க்காததே இதற்குக் காரணம் என அறியக் கிடக்கின்றது.
படுத்துக் கொண்டு யோசனையில் ஆழ்கையில் ஒன்று மாத்திரம் தெளிவாகப் புரிகின்றது. சாவகச்சேரியின் மூன்று திசைகளிலுமுள்ள ஆங்கில ஆசான்களிடம் ஆங்கிலம் கற்க நான் அனுப்பட்டிருக்கின்றேன் என்பதுதான் அது. சரசாலையில் கனகசபை மாஸ்ரரிடமும் , எங்கள் வீட்டிற்கு வடக்கால் சாவகச்சேரி POST OFFICE பக்கத்திலிருந்த குலம் மாஸ்ரரிடமும், நகரிலிருந்து தெற்கால் நுணாவிலில் இன்னொரு ஆசிரியரிடமும் எனது சிறுபராயம் ஆங்கிலம் கற்றலில் கழிந்தது.
மிகுந்த பிரயாசையுடன்தான் கற்பித்தலும், கற்றலும் தொடர்ந்தது. எனது உள்வாங்கும் திறனின்றி ஆசிரியர்களின் பிரயாசைகள் காற்றிலே கரைந்தன. ஆங்கிலம் கற்றதனால் ஆய பயன் எனது நண்பர்கள் வட்டம் பெருகிப் போயிற்று. ஒரு ஆசிரியரிடம் பதினைந்து பேர் என்றால் மூன்று ஆசிரியர்களிடமும் பெருக்கிப் பார்க்கவும்.
ஒவ்வொரு வகுப்பும் கலவையான மாணவர் கூட்டத்தால் நிரம்பி வழியும். பன்னிரண்டாம் வகுப்புக்காரனும் பாடசாலை விட்டு அகன்றோரும், இளைய சிறிய வகுப்பினரும் என கலவை காக்டெயில் அது.
சரசாலை கனகசபை மாஸ்டரிடம் போன காலங்கள் மிக்க மகிழ்ச்சி அளிப்பவை. போகின்ற வழியில் முருகமுர்த்தி கோவில், பின்னரான பெருவெளி , பயமூட்டும் ஏகாந்தப் பரப்பில் பெயர் தெரியாத மரத்தின் பிரமாண்டத்தின் கீழ் வீற்றிருக்கும் வைரவர் கோவிலென ரசனை மிகுந்த பயணம். கனகன்புளியடி சந்திக்குப் போகாமல் வரும் வழியால் கனகசபை மாஸ்டர் வீட்டிற்குப் போக குறுக்கு வழியுமிருந்தது. ஒரு சைக்கிள் மாத்திரம் விலத்திச் செல்லக் கூடிய ஒற்றை வழி.
காலாகாலத்திற்குமான ரசனை வீதிவழியே வீசப்பட்டுப் போனதால் கற்றுத் தரப்படும் பாடங்களின் பால் அசமந்தப்போக்கு அதிகமாயிற்று. கனகசபை மாஸ்டரிடம் ஆங்கிலம் பயில்பவர்கள், அவரினால் பரிந்துரைக்கப்படும் ஒரு ஆங்கில வழிகாட்டிப் புத்தகத்தை வைத்திருக்க வேண்டும். வழக்கமான புத்தகக் கடைகளில் அது கிடைக்காது. சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கக் கிளையொன்றிலேயே அப்புத்தகம் வாங்கக் கிடைத்தது. மிகத் தடிமனான அப்புத்தகம் எனக்குப் பயன்பட்டது தூக்கிக் காவிச் செல்வதற்கே.
வீதியின் ஒருபக்கத்தில் அவரின் வீடும் மறுபக்கத்தில் பூட்டப்பட்ட கடையொன்றின் உட்பக்கத்தில் வகுப்புமாக நடந்து வந்தது.
மாலை நேரங்களிலும், சிலஇடை நேரங்களிலும் வெள்ளிக் கிண்ணமொன்றில் சுடச்சுட ஆவி பறக்கும் நெருக்கமான வாசனை கொண்ட பால் அவரின் மகளினால் அவருக்கு கொண்டு வந்து தரப்படும். அவ்வேளைகளில் எல்லாம் அம்மாவும், அடுக்களையும் ஞாபகத்தில் வர மனப்பால் குடிப்பேன். வேறு என்னதான் செய்வது. பின்பு வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும். முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் என இரசனை உயர்வடைந்தது.ஆங்கிலம் தாழ்ந்து போயிற்று.
சற்றேறக்குறைய இதேவகையான சூழலுடன் பாடசாலை போவதற்கு முன்னான பொழுதில் குலம் மாஸ் டரிடம் ஆங்கிலக்கல்வி. அளவாக நறுக்கி விடப்பட்ட தாடி வைத்திருந்த JOHN ABRAHAM போன்ற தோற்றம். படித்த பொழுதுகள் எல்லாம் தூக்கக் கலக்கத்திலான பொழுதுகள். என் தூக்கத்தைக் கெடுத்த அம்மாவும், இறைவனும் சபிக்கப்படுவார்கள். எனக்கு எரிச்சல் ஊட்டுவதற்காகவே அவரின் மகளும் கிண்ணத்தில் பால் கொண்டு வருவார். மனப்பால் குடிக்க கற்பனையில் எங்கள் அடுக்களை ஏகிவிடுவேன்.
இவ்விடத்தில் பகிர்வை வாசிப்பிற்கு உட்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது எனது தனிப்பெரும் கவனமெல்லாம் ஆங்கிலத்தில் கிடையாது. ஆசிரியர்களுக்கு கொண்டு வரப்படும் பாலிலும் , இன்ன பிறவிடயங்களிலும் கவனம் சிதறடிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
பேச்சுச்சுதந்திரம் எல்லை மீறிப்போனது. சாப்பாட்டிற்கு முன்னர்,பின்னரான மாத்திரைகளென வகுப்பிற்கு முன்னர் வகுப்பிற்கு பின்னர் எங்கள் உரையாடல்கள் தொடர்ந்தன. உரையாடல்கள் எதுவும் பாடத்தில் சந்தேகம் கேட்பதாக ஆகிப்போகாமல் விட்டது நான் செய்த துரதிர்ஸ்டம். பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என சொலவடை சொல்வார்கள். என்னிடத்தில் ஆங்கிலப் பேச்சும் கால்நடையாகப் போனது நிகழ்கால சோகம்.
எனக்குத் தெரிந்து ஆங்கிலம் கற்ற நட்புவட்டத்தில் இளங்கோ சாவகச்சேரியில் கடை வைத்திருக்கின்றார். நிர்மலன் கனடாவில் காலூன்றி எனக்குத் தெரியாத ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுகின்றார். அண்மைய அதிகாலை ஒன்றில் ஆங்கில இலக்கியத்தின் சாராம்சத்தை என்னோடு தமிழில் பகிர முற்பட்ட பொழுதில் அடித்தளம் இட்ட கனகசபை மாஸ்டர் அவருக்கு கடவுளாக தென்பட்டிருப்பார். தொடர்ந்த உரையாடலில் நான்” உம்” கொட்டிக் கொண்டிருந்தேன் காலத்திற்கும் கடவுளிற்கும். வேறு என்னதான் செய்வது?
விரிந்த எண்ணச் சிறகுகள் பாடசாலை ஆங்கிலக் கல்வி குறித்தும் அளப்பரிய நினைவுகளை மீட்டித் தருகின்றது. நளாயினி டீச்சர் எங்கள் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான ஆங்கில ஆசிரியை. அவரின் வட்ட முகமும், பொட்டு நிலவும் நினைவுப் பெருவெளியில் ஏகாக்கிரம் செய்கிறது.
அப்போது எங்கள் வகுப்பானது சுரேந்திரன் என ஒரு பெயரில் இரண்டு ஆன்மாக்கள் உலவிய இடம். அதில் ஒரு ஆன்மா எனது பக்கத்து இருக்கையில் இருந்து கொண்டு நான் எழுதுதலை பார்த்தெழுதும் கைங்கர்யம் செய்து வந்தது. எனது எழுத்துக்களை எனது கை மறைக்கும் தருணங்களில் எல்லாம் என் கையை அப்பால் எடுத்து வைக்கும் அளவிற்கு உரிமை கொடி கட்டிப் பறந்தது. எனினும் தொடர்ந்த கையை எடுத்து அப்பால் வைக்கும் செய்கைகள், எனக்கு ஆகாத பொழுதொன்று அவருக்கு கஸ்டமாகப் போயிற்று.
அன்று நளாயினி ஆசிரியை எங்கள் குடும்பம் பற்றி எழுதச் சொன்ன “சிறு வரைபு “எழுதிக் கொண்டிருந்தேன். பலத்த சிந்தனை செறிவாக்கலில் என் வரைபு தொடர்ந்து கொண்டிருந்தது. தற்செயலாக எனது கை அவருக்கு மறைத்திருக்க வேண்டும். எனது கையை அப்பால் எடுத்து வைத்து அயல் வளவில் (அவருக்கு அயல்வளவு) பார்த்து எழுதுதற்கு தண்டனை தர நினைத்தேன். எனது குடும்பத்தில் அப்பா, அம்மா, இரண்டு சகோதரர்கள் என எழுத விழைந்த சிறுவரைபில் அப்பாவிற்கு முன்னால் TWO என எழுதி வைத்தேன்.
மிக விரைவாகப் பார்த்தெழுதி, மிக விரைவாக ஆசிரியையிடம் காட்டச் சென்றவருக்கு ஆசிரியையின் கேள்வி அதிர்ச்சி அளித்திருக்க வேண்டும்.
” உனக்கு ரெண்டு அப்பாவா?”
அந்த நண்பர் என்னை முறைத்த முறைப்பு இருக்கின்றதே! காலத்திற்கும் மறக்காதது. நான் எனது TWO வை அழிரப்பர் கொண்டு அழித்து விட்டது வரலாற்றில் நீங்காத இடம் பிடித்து விட்டது. அந்த நண்பருடன் பின்னரான உறவுகள் முறுகல் நிலைக்கு பலம் ஊட்டுவதாகவும், பிரிவிற்கு வழி சமைப்பதாகவும் இருந்தன.
இவ்விடத்தில் நீங்கள் கவனிக்க வேண்டியது ஊட்டுவது, சமைப்பது என சாப்பாட்டின் மீதான எனது ஆர்வம் வெளிப்படுகின்றது. ஆங்கில அறிவின் மீதான தாகம் அல்ல. தாகம்! அட மீண்டுமா?
மீண்டும் ஒரு பிறப்புளதேல் இங்கிலாந்தின் குக்கிராமத்தில் பிறந்து கனகசபை மாஸ்டரிடமும், குலம் மாஸ்டரிடமும் பயிலாமல் தமிழை தாய்மொழியாகவும், ஆங்கிலத்தை பேச்சுமொழியாகவும் கொண்டு ஆங்கில இலக்கியத்தையும் பருக விளையும் நான் கால்நடைத்தமிழன்.
மறுமொழியொன்றை இடுங்கள்