எனது காதலுக்கு இளையராஜா இசையமைத்தார் என்று சொன்னால் இப்போது யாரும் நம்பப் போவதில்லை. எனக்கும் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. காதல் என்பது அத்தி பூத்தாற் போல் நடந்தெய்தும் விடயம். இளையராஜாவின் இசை என்பதும் கேட்டு வாங்கும் வரம் போன்ற வரப்பிரசாதம். உங்களுக்கு அவரின் இசை கிடைக்கவில்லையாயின் நீங்கள்அனுபவித்து காதலித்திருக்கவில்லை என்பது அர்த்தமாகும்.
இளமை என்பது எரியும் நெருப்பு போன்றது. அதில் பதின்ம வயதுகள் பற்றிக் கொள்ளும் கங்குகளுக்கு ஒப்பானவை. நெருப்பும், கங்குகளும் நெருங்கி இருந்தால் பற்றிக்கொள்ளும். இது தெரியாதா உங்களுக்கு?
தொழுவது சுகமா? வண்ணத் தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா? உண்ணும் விருந்து தான் சுகமா?
பழகிய காதலெண்ணி பள்ளியில் தனியே சாய்ந்து
அழுவதே சுகம் என்பேன் யான்! அறிந்தவர் அறிவாராக ! -கண்ணதாசன்-
உனக்கும் எனக்கும் பிடித்த பாடல்
தேனீர் கடையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
கடைசிப் பேரூந்தையும் விட்டு விட்டு
கேட்டுக் கொண்டிருக்கின்றது காதல். -நா.முத்துக்குமார்-
என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இங்கு காதல் சொல்வதுதான் காரியம்: கனத்த ஞாபகம். என் பெயரைச் சொன்னாலே புரிந்து கொள்வது அவளாகத்தான் இருக்கும். மற்றவர்களுக்கு ஆருத்ராவாக இருந்து விட்டுப் போகட்டும். பெயரில் என்ன இருக்கின்றது? ஆருத்ராவிடம் கண்ணில் கண்ணீரும், கனவுகளும் மீதமிருந்தன.
ஆருத்ராவாகிய நான் திருவைக் கொண்டிருக்கவில்லை. செல்வச் செழிப்பில்லாத நடைமுறைக்கும்,சராசரிக்கும் இடையில் கனவு காணும் கல்லூரியின் கடைமாணவன். பாடசாலை நாட்களை கூறுமிடத்து பாடசாலைப் பெயரும் சொல்லியாக வேண்டும். சாவகச்சேரி இந்துக்கல்லூரி. எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு புதுமுக வகுப்பு. பதின்ம வயது எனக்கு. காதலின் வீரியமும் விஸ்தீரணமும் தெரியாத வயது. இரத்த அணுக்களில் கனவும் காட்சிகளும் குடிகொண்டிருந்த காலம். உண்மையிலேயே நீண்ட கனவுகளை நெடுதுயிலின்றி பகலில் காணும் பாக்கியம் பெற்ற காலங்கள். உங்களுக்கு சொல்வதனால் எனக்கொன்றும் ஆகப்போவதில்லை. இளையராஜா இசையமைத்ததை கூறுவதற்கு இவையெல்லாம் தேவைப்படுகின்றன.
காதல் வயப்படுதல் பதின்மவயதின் குளறுபடிகள். அவள் எங்கள் வீடு கடந்து தான் பாடசாலை சென்றாக வேண்டும். எனது “சாவகச்சேரியும் சைக்கிள்களும“ பதிவில் அவள் சைக்கிள்கள் வைத்திருந்த காலத்திற்கு முந்திய காலம். கல்வயலில் இருந்து நடந்து செல்லும் அவளை, எங்கள் வீட்டை பலமுறை கடந்து செல்கையிலும் கவனிக்காத காலம் இருந்திருக்கிறது. ஏன் கவனிக்கவில்லை என்று காலத்திடம் பலமுறை கேட்டிருக்கிறேன். காலம் மௌனமாக இருந்து தொலைத்தது. அதற்கும் பதில் தெரியவில்லை. எனக்கும் பதில் புரியவில்லை.
நீ பார்த்த நிலவும் நான் பார்த்த நிலவும்
நிலவாக மட்டுமே இருந்தது.
நாம் பார்த்த நிலவிற்கு நினைவு என்று பெயர்.
நினைவுகளைக் கைப்பிடித்து கனவுகளைக் காலம் முழுக்க விதைத்த காலம். அழப்பிடித்தால் நிறுத்திக் கொள்ளமுடியாத துயரது.
ஒரு வெள்ளிக்கிழமையின் மாலைநேரம் என்று நினைவு. கடவுள் வழிபாடு ஆன்மீகம் என்று தெரியாத வயதில் அம்மாவின் அழைப்பிற்கு செவிசாய்த்து பெருங்குளம் பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தேன். அந்த கோவில் மிக அழகானது உன்னைப் போலவே. முன்னிருந்த வயற்பரப்பில் வீசும் காற்று கோயிலுக்கு உட்புகுதல் உன்னையும் என்னையும் தாலாட்டிச் செல்வதற்கே. காற்று இன்னொரு கனத்த மௌனம்.
நீ இரட்டை சடையுடன் இழுத்து வாரிய கூந்தலுடன் அதீத திருநீற்றுப் பூச்சுடன் காட்சியளித்தாய். கருவறை கடவுளை விட எழில் சூழ் அழகு. சாமி பார்த்து கும்பிடுதல் உன்னை தரிசித்தலுக்கு ஒப்பானதாக நினைவு தடுக்கிக் கொள்கிறது.
கோவில் கைங்கர்யங்களில் ஈடுபட்டிருந்த அர்ச்சகரின் கண்ணசைவிற்கு இணங்க மணியடித்தலுக்காக கைவைத்த வேளை, அதை உனக்கான சைகைக்குறிப்பாக ஏற்று நீயும் விரைந்து கோவில் மணியில் கைவைத்த போது சட்டென கைகளிலும் கண்களிலும் மின்சாரம். அன்று தான் நானுன்னை அதீதமாய் கவனித்ததாய் கொள்ள வேண்டும்.
தகதோம் தகதோம் தகதோம் தகதோம்
தக தக தகதோம்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே. (இசை கேட்க அழுத்துக.)
பின்னணி இசைக் கோப்புகளுடன் ஆரவாரமான இசையது. என் கண்ணும் நின் கண்ணும் நிலை எடுத்துக் கொண்டன. மான் மருண்ட பார்வை உன்னது. புலி பதுங்கிய பார்வை என்னது. அன்றைய பொழுது அத்தோடு கழிந்தது. ஆரவாரமான இசைக் கோர்ப்புடன் அனிச்சையாகப் பாடல் தெருவெங்கும் விரவிப் பாய்ந்தது. இசைஞானியின் பிரத்தியேக இசை எனக்களிக்கப்பட்ட முதல் நாளாக அமைந்தது. அதன் பின்னரான நாட்கள் என் கவனிப்பும், உன் கவனிப்பும் கவனிப்பாரற்று காலம் நகர்த்திச் சென்றது. நீ கவனிப்பதாகவே எனக்கான கற்பனைகள் என்னில் சொல்லிச்சென்றன. நீ இல்லை என்று சிலவேளை மறுக்கக் கூடும்.
இனி மேற்கொண்டு தொடர்வதற்கு முதல் நீ எனக்காக அளித்த விம்பத்தை மற்றவர்கள் கண்களுக்கு கொண்டுவந்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு வாய்த்த பொழுதில் எதைக் கொண்டு உன்னை முன்னிறுத்துவது. எனக்கு எல்லாம் இளையராஜாவாகவே வாய்த்திருக்கின்றது.
நீண்ட வகிடெடுத்த கூந்தல், மல்லிகைச்சரம், நாணிய விழிகள், கூர்நாசி, தாவணிக்கனவுகள் ,கரங்களில் இறப்பர் வளையங்கள், ஒற்றைச்செயின்…….. விகடனின் அண்மைய வரவான ஓவியர் இளையராஜாவின் ஓவியம் உன்னை தூரிகைபார்த்து வரைந்ததாக சொல்ல வேண்டும்.
நீ சிரிக்கும் போது பௌர்ணமிநிலவு அத்தனை திசையும் உதிக்கும்.
நீ மல்லிகைப் பூவை சூடிக்கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.
அடுத்த வரியில் விழியில் என்பதை விடுத்து பிழியில் என்று வைரமுத்து கூறுவது ஆர்மோனியப்பெட்டியின் கட்டைகளை.
இசை பெருவெள்ளம் எனக்குள் விரவிப் பாய்ந்தது. இளையராஜவின் இசையாய், இளையராஜாவின் ஓவியமாய் எனக்குள் பரவி எனக்குள் விரவி கங்குகள் நெருப்பில் பற்றிக் கொண்டன. காதல் என்று பெயர். அவள் என்பது பெயர்ச்சொல்.
காதல் திடீரென்று பார்த்த கணத்தில் ஒருவர் மேல் ஏன் வரவேண்டும்? இவள் எனக்கானவள் என்று மனம் எப்படி இட்டுக்கட்டிக் கொள்கின்றது. முழுதாக அறிந்து கொள்ள முதலே கண்கள் சிக்கி சின்னாபின்னப்பட்டு போவது எதனால்? அறிவியல் தெரியாதவற்றிற்கு விடைதேடி அலைகின்றது. காதலிக்கும் கணத்தில் எல்லாம் அறிவை விட உணர்வுகள் உன்னதமானவை. கல்யாணியை பிடிக்கிறது. காமாட்சியை பிடிப்பதில்லை. இதற்கும் விஞ்ஞானம் பதில் சொல்கின்றது. இயற்கை நம்மை ஒரு வகையான நபருக்கு மட்டும் தயார் செய்து வைத்திருக்கின்றது. நம்; ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்திலும் ஒரு பிரத்தியேக நாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட காதல் வரைபடம், தனிப்பட்ட முகம், சுருள்முடி,அழுத்தமான உதடு ……தனிப்பட்ட…….. தனிப்பட்ட……. இந்த உருவம் உங்கள் ஆரம்ப இளமைக்காலத்தில் மனதில் உருவாகின்றது. அந்த முகத்தை சந்திக்கும் போது ஒரே சொடக்கில் காதல்….. சுஜாதாவின் வரிகள்.
அவள் எங்கள் வீதியால் பயணிப்பது, வீடு கடக்கையில் சடக்கென மின்வெட்டியது போன்றபார்வை என அடுத்தடுத்து தொடர்ந்தது காதல்.மனம் ஒவ்வொரு செய்கைக்கும் அர்த்தம் சொல்லக் கற்றுக்கொண்டது. அவளது பிந்திய வருகைகள் எனது தனிப்பட்ட தவிப்பாக அலைய ஆரம்பித்தன. செக்கன் நேரக்கணக்குகள்
நீண்டயுகாந்திரங்களாயின.
உன் நதியில் சுழித்தோடும் சருகுநான்
உன் இஷ்டப்படி எங்கேனும் கூட்டிச்செல்.
என் அடுத்து வந்த நாட்கள் புவியீர்ப்பு விசைப்பிரகாரம் நடக்கவில்லை.. எல்லாம் விழியீர்ப்பு விசைப் பிரகாரம். நிற்பதும், நடப்பதும்,நினைவின்றி இருந்ததுமென என்வசம் நானிருக்கவில்லை. நீயே நிறைந்திருந்தாய்.
மடியில் இருப்புக்கொள்ளாத குழந்தையென திமிறியது காதல்.
அள்ளிக்கொண்டு போயேன்
என் காதலியாக இல்லையென்றாலும்
எனது காதலைப் பிரசவித்த தாயாகவேனும்!
நாங்கள் இருவரும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் பாடசாலைக்கு பிந்திய மாலைகளை விரயம் செய்தோம். கருத்தூன்றி வினவுவதெனவும், கண்ணூன்றி பார்ப்பதெனவும் எழுதப்படாத ஒப்பந்தங்களில் எங்கள் விழிகள் கையொப்பமிட்டன. (கைகள் போட்டால் தானே கையொப்பம்?????) ஆமாம், இல்ல! அதனால் கண்ணொப்பம்.
நியூட்டனின் மூன்றாம் விதி, சமனும் எதிருமான மறுதாக்கம் என மாய்ந்து மாய்ந்து காதலித்தது கண்கள்.. அந்தக் கல்வி நிலையம் சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியில் இருந்தது. செருக்கல் பிள்ளையார் கோவிலின் உபதெருவும்,தபாற்கந்தோர் வீதியும் சந்தித்த வளைவான இடங்கள் படிப்பைத் தவிர எல்லாவற்றையும் கற்பித்தது.
மருதடி சங்கக்கடையும், அதனை அண்டிய பிரதேசங்களும் என் கண்காணிப்பு வலயங்கள்.
தரிசனம் கிடைக்காதா? என்மேல் கரிசனம் கிடையாதா?
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்.
உன் பூஜைக்கு நெஞ்சினில் பூ வளர்த்தேன். (இசை கேட்க அழுத்துக.)
உன் பூஜைக்கு நெஞ்சினில் பூ வளர்த்தேன்.
Mail: aruthra.tharisanam@hotmail.com
00000000000000000000000000000000000000000000000000000
மறுமொழி எழுதியவர் சித்திரவீதிக்காரன்
இளையராஜாவின் இசையின் காதலனாகவே நானும் இருக்கிறேன். அவரது இசையமைத்த சில பாடல்களைத்தான் இப்போது அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
அவை,
1. மல்லிகையே மல்லிகையே தூதாகப்போ!
2. நிக்கட்டுமா! போகட்டுமா! நீலக்கருங்குயிலே!
3. மானின் இரு கண்கள் கொண்ட மானே! மானே!
4. மீனம்மா! மீனம்மா! கண்கள் மீனம்மா!
அவ்வப்போது சிலபாடல்களை இப்படி அடிக்கடி விரும்பிக்கேட்கிறேன். அது இளையராஜா பாடலாக இருந்தால் கொண்டாட்டந்தான்.இளையராஜாவின் சித்திரத்திற்கும் ரசிகன் நான். ஆனந்தவிகடனைப் புரட்டும் போது இளையராஜா, ஹாசிப்கான், ராஜ்குமார்ஸ்தபதியின் சித்திரங்கள் வந்திருந்தால் அவற்றைத் தனியே எடுத்துவைத்துக்கொள்கிறேன். அற்புதமாக வரைகிறார்கள்.
உங்கள் காதல் அனுபவப்பதிவுகள் அருமை.
பகிர்விற்கு நன்றி.
ஆருத்ரா: நன்றி மதுரை நண்பரே
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
மறுமொழி எழுதியவர் kausikan
I like very much your way of writing in tamil. Most of the words are new to me. Really good and i will suggest this web site to my friends and relatives.
—————————————————————————————————————————————————-
மறுமொழி: ஜே.வி.வேலாயுதம்பிள்ளை.
பதிவினை வாசிக்கும் அனைவரும் தமது பதின்மவயதினை நிச்சயமாக நினைவுகூருவர். பதின்மவயது பிள்ளைகளை அனுசரித்துவாழ்வதற்கு உதவும் நல்ல பதிவு. இளையராசாவின் இசை தொடரட்டும்.
I like very much your way of writing in tamil. Most of the words are new to me. Really good and i will suggest this web site to my friends and relatives.
By: kausikan on மே 15, 2012
at 3:15 முப
இளையராஜாவின் இசையின் காதலனாகவே நானும் இருக்கிறேன். அவரது இசையமைத்த சில பாடல்களைத்தான் இப்போது அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
அவை,
1. மல்லிகையே மல்லிகையே தூதாகப்போ!
2. நிக்கட்டுமா! போகட்டுமா! நீலக்கருங்குயிலே!
3. மானின் இரு கண்கள் கொண்ட மானே! மானே!
4. மீனம்மா! மீனம்மா! கண்கள் மீனம்மா!
அவ்வப்போது சிலபாடல்களை இப்படி அடிக்கடி விரும்பிக்கேட்கிறேன். அது இளையராஜா பாடலாக இருந்தால் கொண்டாட்டந்தான்.
இளையராஜாவின் சித்திரத்திற்கும் ரசிகன் நான். ஆனந்தவிகடனைப் புரட்டும் போது இளையராஜா, ஹாசிப்கான், ராஜ்குமார்ஸ்தபதியின் சித்திரங்கள் வந்திருந்தால் அவற்றைத் தனியே எடுத்துவைத்துக்கொள்கிறேன். அற்புதமாக வரைகிறார்கள்.
உங்கள் காதல் அனுபவப்பதிவுகள் அருமை.
பகிர்விற்கு நன்றி.
ஆ மா
By: சித்திரவீதிக்காரன் on மே 15, 2012
at 9:42 முப