சாவகச்சேரி வாரிவனநாதர்.
எல்லோருக்கும் தெரிந்து
“சிவன் கோவில்”.
பழைய சிவன் கோவில்
மற்றது
புதுச் சிவன்கோவில்.
ஒரே மதிற்சுவர்.
இருபக்கமும்
பழசும் புதிசும்.
புதியவருக்கு
அபிஷேகம், ஆராதனைகள்
நித்திய பூஜைகள் நியமமானவை.
பழையவர் தொன்மையானவர்
எனினும்
எல்லாவற்றிற்கும்
காய்ந்து கொண்டிருப்பார்.
தொன்மை தெரிந்தவர்கள்
மாத்திரமே
“ஒரு எட்டு” எட்டிப் பார்ப்பர்.
திருவிழாக் காலங்களில்
புதிய சிவன்கோவில்
நிரம்பச் சனங்கள்,புதுப்பொலிவு
அல்லோலகல்லோலப்படும்.
ஆதிச்சிவன் அழகிழந்து
அமைதி கொள்வதும்
தேற்றாப் பெருவெளியில்
நினைவு தவறுவதும் நடந்தெய்தும்.
கடவுளைப்
பிரித்துக் கொண்டார்கள்
மனிதர்கள்.
ஏதும் ஒரு ஏகாதசி இரவில்
கடவுள்கள்
கைகுலுக்கிக் கொள்ளக் கூடும்.
“உன்னவள்” பற்றி நீயும்
“பற்றாக்குறை”பற்றி அவரும்
பேசிக் கொள்ளலாம்.
மனிதர்கள்
தெருப்புழுதி வெக்கைக்குள்
கடவுள் பற்றிய சர்ச்சையில்
சண்டையிட்டுக் கொண்டார்கள்.
பிரிவினை
உப்பிப் பெருத்து
உலா வந்தது.
*********************************************************************************************************
சிறப்பான பதிவு.
அவனருளால் தான் அவன் தாளையே தொழ முடியுமென்கிற
உண்மையை நம்மாட்கள் மறந்து பல காலமாகிறது.
பாடல் பெற்ற தலமா? புராதன சின்னமா? நாயன்மார்கள்
வைப்புத் தலமா? இறைவனின் திருவிளையாடல்களோடு
தொடர்புடையதா? தொன்மைச் சிறப்பு மிக்கதா? என்றெல்லாம்
“பக்தர்கள்” யோசிக்க மறந்தே போய்விட்டனர்.
அவர்கள் வேண்டுவதெல்லாம் — எங்கு போய் வந்தால்
தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்பதில் தொடங்கி,
நல்ல வேலை, நல்ல சம்பளம், அழகு (கவனிக்க இங்கு “நல்ல”
இல்லை) நிறைந்த மனைவி, பிள்ளை, காது குத்து,
நல்ல பள்ளியில் அட்மிசன், நல்ல மதிப்பெண்… (அப்படியே
தொடர்கிறது) கிடைக்கும்.
ஆலயம் போய் வந்தால் “அவனருளை அள்ளி வர முடியுமா?” என்பது தான் இப்போதெல்லாம் “பக்தர்களின்” முன் நிற்கும் பிரதான் யோசனை.
பெண்டாட்டி வந்ததும் தாயை மறந்தவன் மாதிரி, சாவகச்சேரி
வாரி வனநாதரை மட்டுமல்ல, பல தொன்மை சிறப்பு மிக்க
தலங்க்களின் தலைவனை மக்கள் மறந்ததோடு மட்டுமன்றி
அவற்றை புறம் தள்ளி, புதிய தலங்க்களை நோக்கி “படை”யெடுத்து வருகின்றனர்.
By: venkataramani on ஜூன் 12, 2012
at 3:41 பிப
ஒரே கடவுளுக்கே இந்த நிலைமை. புதிய சிவனுக்கும், ஆதி சிவனுக்கும் இடையே வேற்றுமை இல்லை. வழிபடுபவர்கள் மனதில் உள்ளது.
திருப்பதி சென்று பெருமாளைக் கும்பிட செல்பவர்களில் பாதிப்பேர் அவர்கள் வீட்டருகில் உள்ள பெருமாளைக் கும்பிட மாட்டார்கள். மேலே மறுமொழியிட்ட வேங்கட ரமணியும் அருமையாக நிறைய குறிப்பிட்டுள்ளார். நன்றி.
By: சித்திரவீதிக்காரன் on ஜூன் 14, 2012
at 1:01 முப
உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன். அழகான ரசிக்கத்தக்க எழுத்துநடை.
நன்றி
நட்புடன்
சஞ்சயன்
By: Sanjayan on ஜூலை 23, 2012
at 7:52 பிப