எங்களுக்கு ஐந்தாம் வகுப்பிலோ, அதற்கு முன்னரான வகுப்பிலோ கடிதம் எழுத கற்பிக்கப்பட்டது .கடிதம் எழுத்துப் பரிமாற்ற ஊடகத்தினுாடான எண்ணப் பரிமாற்றம். மனதின் பிரதிவிம்ப படிமங்களாக கடிதங்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு நாள் காலையும் அழகாக விடிகின்றது. கடிதங்கள் வரக்கூடும் என்ற நினைப்புடன் வீதியை வெறித்துப் பார்த்த ஞாபகங்களுடன் தபாற்காரரை நோக்கித் தவமிருக்க ஆரம்பிக்கின்றன காலைகள். ஒரு மணி ஓசையின் அழைப்பில் ”கடித வருகை” வானவீதியெங்கும் அறிவிக்கப்படுகின்றது .அவ்வளவு மகத்துவம் கடிதங்களுக்கு. அது அன்றைய காலம். குறும் செய்திகளும், முகநூல்களும் மனிதனின் ஆறறிவுக்கு எட்டாத காலம்தான் போதிய காலம். போதிய காலத்திற்கு எதிர்மறைதான் போதாத காலம்.
அப்போதைய காலம் எதற்கும் நேரஅட்டவணை கிடையாது .உங்களுக்கு இயன்றதை இயன்ற பொழுதில் செய்து முடிக்க அவகாசங்களும், அன்புகளும் நிரம்பவே இருந்தன.மனதின் கண் சேமிக்கப்படும் பிறந்த நாள் நினைவுகளும், திருமண நாள் நினைவுகளும் இலத்திரனியல் சாதனங்கள் முன் வந்து நினைவூட்டத்தேவையில்லை .மறப்பவர்களுக்குத்தானே தனியே நினைவூட்டல் தேவைப்படுகின்றது .
யாரும் ஆத்திர அவசரத்தில் ஓடித்திரிவதில்லை.மனிதனுக்கு பிரமாண்டக்கனவுகள் ஏதும் கிடையாது. பக்கத்து ஊருக்குப் பிரயாணப்படுவதற்கே நாள் கணக்கில் யோசித்து பயண ஏற்பாடுகளும், மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்ட காலம்.காலையைப் பருகாமல் யாரும் தேனீர் பருகிய காலமன்று அது . நின்று நிதானிக்க காலங்களும் அக்கறைகளும் காத்திருந்து களித்திருந்த காலம் .கடிதம் வரைவது அற்புதத்தின் அழகியல்.யாருக்கு எழுதுகிறோம் என்பதைப் பொறுத்து உள்ளடக்கமும், உபரிச்செய்திகளும் அணிவகுக்கின்றன. அப்பாவிற்கான உள்ளடக்கமும்,ஆசிரியருக்கான உள்ளடக்கமும்வேறுபடுகின்றன.காதலிக்கான உள்ளடக்கம் விரிதெரி சொற்களால் இட்டு நிரப்பப்படுகின்றன .
கடிதம் வரைவது மூன்று தனிப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு எங்களுக்கு கற்பிதம் செய்யப்பட்டது .
1.ஆரம்பம் விளிநிலை – யாருக்கானது -அதற்கான முகமன் ,சுகம் விசாரிப்பு.
2.உள்ளடக்கம் (சாராம்சம்)-எனக்குப் பணம் தேவை, வேலை கிடைத்து விட்டது, சச்சரவுகள்- பின்னணிகள், சரசின் உரசல் எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். கடிதத்தின் தேவையை உள்ளடக்கத்தின் ஊடாக வெளிப்படுத்துதல்.
3.கடித முடிவு:- சீக்கிரம் பணம் அனுப்பிவை , வேலை கிடைத்துவிட்டது- ஊருக்கு தம்பட்டம் அடித்து பெண் தேடு, சரசை சமாளிக்க முடியவில்லை -இயலாமை என்ற தொனிபொருளுடன் இவ்வண்ணம், இங்ஙனம், உங்கள், உங்கள் பிரியமுள்ள ஏதோ ஒன்று பிரயோகித்து விடை கொடுத்தல்.
கடிதம் எழுத கற்பிக்கப்பட்ட நாளின் மறுநாள் வீட்டிலிருந்து கடிதம் எழுதி வந்து காண்பித்தோம் .கடித உள்ளடக்கத்தில் சிறுபராய சிந்தனைகள் ,கனவுகள். நாய் குட்டி போட்டது ,சேமித்து வைத்த கோலி குண்டுகள், உண்ட உணவு என கடித வரிகள் நீண்டன.
கடிதம் எழுதுவது அன்றைய அளவில் மிகப்பெரும் தேவையுடைய ஊடகம். முகமன், ஓலை,திருமுகம்,பிரெஞ்சு ஆட்சியில் துபாசாகப் பணி புரிந்த ஆனந்தரங்கம்பிள்ளை தனது நாட்குறிப்பேட்டில் “லிகிதம்” எனவும் கூறுவது கிராமப்புறங்களில் சாதாரண வழக்கில் கூறப்படும் ”கடுதாசி”யைக் குறிக்கின்றது .
அந்தக் கடிதக் கடுதாசியை விநியோகம் செய்யவும்,வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் பெரிய- சிறிய தபாலகங்கள் இயங்கின. சாவகச்சேரி -பருத்தித்துறை வீதியின் மறு பெயர் சாவகச்சேரி நகர எல்லை வரை தபாற்கந்தோர் வீதி.
வாரத்தில் ஒரு நாளோ, மாதத்தின் இரு தடவையோ வந்து ஏகும் கடிதங்களுக்காக நாள் தோறும் காத்திருந்து தொலைப்பது வாடிக்கை விவகாரம். கட்டு எடுத்தல், கட்டுப்பிரித்தல் என எளிதான சொற்பதப் பிரயோகம் இயல்பானது. கட்டு எடுக்க முதல் தபாலில் கடிதம் சேர்ப்பது இறுதி நேர பிரயத்தனம். கட்டுப்பிரித்தல் காலை பகுதிவாரியாக தரம் பிரித்த காகிதங்களுடன் வரும் தபாற்காரரை தபால் நிலைய வாசலில் வழி மறித்தல். இவ்விரண்டு காரியங்களையும் எப்போதோ வந்து வாய்த்த தருணங்களில் செய்ததாக ஞாபகம்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு செல்லும் இரவு நேர ரயிலைக் குறிப்பது MAIL TRAIN. அதே போன்றே அங்கிருந்து இங்கு வருவதையும் MAIL TRAIN என்றுதான் அழைப்போம். அவை அதிகாலை 4 .30 க்கு பலமாகக் கூவி எஙகள் நித்திரைகளை தொலைத்தன.
சிறு வயதுக் கடிதங்களுக்கு பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை .சம்பவங்களும், அது நடந்த காலங்களும் தான் அவசியமானவை .அக்கடிதங்களில் பெரிதான விஷய ஞானமோ, பாண்டித்தியமான பதப் பிரயோகங்களோ இருந்ததில்லை .குருவிப் படம் பொறித்த 25 காசு- அசோகச் சக்கரம் பொறித்த 25 காசு கட்டண முத்திரைகளும்,15 காசு கட்டணம் கொண்ட தபாலட்டைகளும் (POST CARD ) எங்கள் காலத்தில் எண்ண விநியோகத்தை எளிதாக்கின.
அஞ்சல் அட்டைகளில் நிரம்பவிஷயங்களை எழுதக் கை தேர்ந்த விற்பன்னர்கள் முகவரி எழுதும் இடத்தைத் தவிர முழு இடத்தையும் தங்கள் கைவரிசை காட்டப் பயன்படுத்தி இருப்பார்கள்.நுணுக்குக்காட்டி உதவியுடன் தான் சிலவற்றை வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் முடியும்.
அஞ்சலகங்களின் பிரதான சேவையாக கடிதப்போக்குவரத்து சேவையே விளங்கியது.வானொலி வைத்திருப்பதற்கு கட்டணம் கட்டும் சேவையும் இயங்கியது எனினும் “எங்கள் வானொலிக்கு எதற்குக் நாங்கள் கட்டணம் கட்ட வேண்டும்” என்ற அகலமான சிந்தனைத்தளம் அதைச் செய்யவிடாமல் தடுத்தது.
சாவகச்சேரி பிரதான தபாலகம் பிரதான ஊழியர்களுடன், பத்துப் பன்னிரண்டு தபால் விநியோகம் செய்யும் தபாற்காரர்களையும் கொண்டிருந்தது.
அதிகாலை mail train இல் இருந்து இறக்கி வரப்படும் கடிதகட்டுகள் தரம் பிரிக்கப்பட்டு காலை எட்டு,எட்டரை மணி வாக்கில் வீடுகளுக்கு விநியோகிக்க ஏரியா வாரியாக தபால்காரர்களால் எட்டுத்துச் செல்லப்படும். தபாற்கந்தோர் வீதி விநியோகிப்பாளர் கென்ஸ்மன் லேன், பிரதான வீதியை அண்டிய கிளை வீதிகள் ஈறாக கெருடாவில் வரை பயணித்து கடித விநியோகம் செய்வார்.சாவகச்சேரியின் நகரப் பெரும்பரப்பில் பெரிய தபாலகமும், நகர எல்லை தாண்டிய பரப்பில் உப தபாலகங்களும் அமைந்திருந்தன.எண்பத்து மூன்றாம் ஆண்டுவரை சீரான தபால் விநியோகம் பின்னரான காலங்களில் நொண்டியடிக்க ஆரம்பித்தது. இலங்கைக்குள் இரண்டு மூன்று நாட்களுக்குள் விநியோகம் செய்யப்பட்டவைகள், போக்குவரத்தை காரணம் காட்டி வாரக்கணக்கில் இழுபடத்தொடங்கின .
எனக்கான கடிதத் தொடர்பு எண்பத்து ஒன்பதாம் ஆண்டிலிருந்து முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. புலம்பெயர்ந்து ஐரோப்பிய மண் ஒன்றில் அகதி வாழ்க்கையை ஆரம்பித்த பிறகு தாயும், தந்தையும் உறவுகளும், நண்பர்களும் கடிதமூலம் என்னோடு உரையாடத் தலைப்பட்டனர் . கடிதங்களை வாசிப்பதாக நான் கருதிக்கொள்வதில்லை .எனக்கு அது உரையாடல் தளம். உறவின் செரிமானம் உணர்வுகளால் சூழப்பட்டு,என் கருத்தூன்றிய உணர்வுகளுடன் அவர்களின் எண்ணங்கள் இலகுவாக உரையாடத் தலைப்பட்டன.
சிறிய தங்கைக்கு கடிதம் எழுதத் தெரியாது என்றாலும் அவள் கூட அம்மா மூலம் உரையாடத் தலைப்பட்டாள்.நீண்ட பெரும் துயரின் ஆறுதல்கள் கடிதங்கள்.ஒவ்வொரு கடிதங்களும் ஒரு சுய, சுப வியாக்கியானங்கள்.காலத்தின் வாழ்வை கடிதங்கள் விளக்கி ஒரு வாழ்வாதாரப் போக்கை எனக்குள் விதைத்தன.தொலைபேசிகள் எல்லாம் சாவகச்சேரிப்பரப்பில் அறிமுகமாகாத காலங்கள். நகரசபை, போலீஸ் நிலையம், தபாலகம் போன்ற சிற்சில இடங்களில் மாத்திரமே தொலைபேசிகள் இருந்தன .இருந்தவைகளும் செத்துத் தொலைந்து (Death )போயின .எங்களுக்கு வரும் கடிதங்களின் உள்ளடக்கங்கள் மாத்திரமன்றி நண்பர்களின் கடிதங்களும் எங்களுக்கான நல்கருத்து விளம்பல்களாக அமைந்திருந்தன.நண்பர்களில் பாதிப்பேர் வடபுலத்தின் அனைத்து ஊர்களையும் சேர்ந்தவர்களாக அமைந்திருந்தபடியால், வரும் கடிதங்கள் எல்லாவற்றிலும் எங்கள் கவனக்கண் பதிந்திருந்தது .கடிதங்களின் பெரும்பகுதி சுயதணிக்கைக்கு உட்படுத்தப்பட்டவை. சொல்ல முடியாத சேதிகள் ,ஊர்ப்புலத்தின் அரசியல்,வேண்டாத கருத்தாடல் என தவிர்க்கப்பட்ட கருத்துக்களமாகவும் உறவு சார்ந்த உணர்வுப் பெருக்கமாகவும் கடிதங்கள் எமை வந்தடைந்தன .
பிள்ளையார் கோவில் கொடியேற்றம்,பக்கத்து வீட்டு மாந்தர்களின் வெளியேற்றம்,நண்பர்களது வருகை, பணம் குறித்த தேடல்கள் என கடிதங்கள் பல் சுவைக் கதம்பம். போகப் பத்து நாட்களும்,வரப் பத்து நாட்களுமென மாதத்தில் ஒன்று என அவை அருகிப் போயிருந்தாலும் மாதத்தின் மீதி நாட்களை சுகமாக்கி வைத்திருந்தவை அவைகள். சேமிப்பில் இருந்திருந்தால் அவைகள் காலத்தின் கண்ணாடிகளாக இருந்திருக்கும்.
எனது காலத்தின் கண்ணாடி 2008 , 2009 ஆக விரிகின்றது .அப்போதுதான் பெரியப்பாவின் கடிதங்கள் வன்னிப் பரப்பிலிருந்து வர ஆரம்பித்தன .எங்கேயோ தேடிப்பிடித்து எனது முகவரிக்கு வந்த முதல் கடிதம் பெரியப்பாவின் முகத்தில் அறைந்த வறுமையை ,இயலாமையை சொல்லிப் போனது .உணவுப் பொருட்கள் எல்லாம் வன்னிப்பரப்பில் பெரும் விலை ஏற்றத்துடன் காணப்பட்ட பொழுதில் ஒரு நாள் சீவியத்தை கொண்டு இழுக்கக் கஷ்டப்பட்ட வறிய முதியவரின் வாழ்வாதார தகவல்களாக, வந்த கடிதங்கள் சோகப்பரப்பை சொந்தமாக்கிக் கொண்டன.
தாயார் வழி உறவுகளுடன் பரிச்சயமான உறவைக் கொண்டிருந்த நான்,தந்தை வழி உறவுகளுடன் முதன் முதலாக கடித வாயிலாக களம் இறங்கினேன்.பிள்ளைகளால், அவர்களின் வறுமையால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பெரிய தகப்பனார் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கடித வாயிலாக தொடர்பு கொண்டு தனது வைத்தியச்செலவு சம்பந்தமான விடயங்களை என்னுடன் பகிர முற்பட்டார். இயலாமை குறித்த நிலவரம் , எங்களது நலம் சார்ந்து கோவிலில் பிரார்த்தனை செய்த விடயங்கள், தன்னை ஒத்த முதியவர் ஒருவருடன் தான் தங்கியிருப்பதான கருத்துக்கள் என உள்ளடக்கம் விரிந்தது. நடுங்கிய கரத்தின் எழுத்துக்கள் காகிதாதி யாவும் கனன்ற துயரத்தை, வாழ்வின் பற்றுதல்களை சுருக்கமாக இயம்பின.
இன்னொருவரில் பணத்தேவைக்காக தான் தங்கியிருப்பதன் துயரமாக வரும் கடிதங்கள் மிகச்சொற்பமானவை தான் என் கைக்கு வரப்பெற்றன என்றாலும் அவை காலாகாலத்திற்கும் நினைவுப்பரப்பில் இல்லாத சோகத்தை தமக்குரித்தாக்கி கொண்டன.
கிளிநொச்சி வைத்தியசாலையில் தனது அறுவை சிகிச்சைக்காக வைத்தியர்களின் ஆதாரக்குறிப்புகளுடன் இணைத்திருந்த கடிதம்- “தான் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணம் வீண் செலவுக்கானது இல்லை” என நிறுவமுற்பட்டு,அவைகள் மிகப்பெரும் தேவைகளுக்கானது என்ற உண்மைத் தோற்றப்பாட்டை நியாயமாக்கின. என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பணத்திற்கும் அவர் மிகவும் வெட்கப்பட்டு கூனிக்குறுகியதாக இயலாமையின் சுவடுகள் நெஞ்சில் அறைந்து சொல்கின்றன.
“ஆதாரங்களை அனுப்பி என்னை சிறுநிலைப்படுத்த வேண்டாம்” என்ற கோரிக்கையோடு, அவருக்கு நான் உதவவேண்டியதன் கடப்பாடு பற்றியும் பிறிதொரு கடிதத்தில் விளக்கமுற்பட்டேன். ஆனாலும் வருடத்திற்கு மூன்று தடவை வரும் கடிதங்களில் அவர் இணைத்திருப்பது வைத்தியசாலை மருத்துவ குறிப்புகள், தனக்கான சிகிச்சை பற்றிய தகவல்கள், அவருடன் பரிவாக இருக்கும் வைத்தியர்கள்- தாதிகள் என்பதான உள்ளடக்கங்களே.
ஒரு முழுத்தாளின் அரைப்பக்கத்திற்குள் எல்லாம் கிறுக்கி வங்கிக்கணக்கு இலக்கம் வரை குறிப்பிடப்பட்ட கடிதம் கடைசியாக வந்தது, கிளிநொச்சியை இராணுவம் முற்றுகை இடுவதற்கு முதல் வாரம். முன்னைப்போன்று தன்னால் நடமாட முடியாததான முதிர்வின் தளர்வு, நோயின் உபாதை ,நோயின் தீவிரம், அடுத்து தான் செய்ய வேண்டிய நோயிற்கான பரிகாரம் என்பவற்றை மாத்திரமே உள்ளடக்கிய கடிதத்தில் துளிக்கு கூட எனக்கும் அவருக்கும் பிடிக்காத அரசியல் கள நிலவரம் புகுத்தப்படவில்லை. மிக இயல்பான ஒரு முதிய நடுத்தரவர்க்க மனிதனின் வாதை குறித்த பதிவாக இடம்பெற்ற அந்த கடிதம்தான், எங்கள் தொடர்பாடலின் இறுதியானது என நானோ, அவரோ நினைத்திருக்கவில்லை.
“கிளிநொச்சிக்கு பணம் அனுப்பினால் பெற்றுக்கொள்ள இயலுமா”? என்று தொலைபேசியில் உரையாடிவிட்டு பணம் அனுப்பலாம் என நினைத்திருந்த பொழுதில் கிளிநொச்சி ஆட்களற்ற மனித சஞ்சாரமற்ற நினைவுப்பெருவெளி ஆகிற்று.
81ம் ஆண்டில் முரசுமோட்டையில் எனது தந்தையின் தாயாரின் (பாட்டி) இறுதிச்சடங்கில் மாத்திரமே கண்டு உணர்ந்துகொண்ட பெரியப்பாவை, இறுதிக்காலங்களில் இரண்டு வருடங்கள் வைத்திய பராமரிப்பு செலவிற்காக என்னை அணுகிய வறிய முதிர்மனிதனை, இயலாமையிலும் துயரங்களை பகிர்ந்து கொள்ளாத பண்பட்ட மனித உள்ளத்தை,தங்கியிருத்தலை சமாளித்து சமாதானப்படுத்திக்கொண்ட இயல்புநிலை மனிதனை……..
காணவில்லை. காணாமற் போனோர் பட்டியலில் மனிதம் தொலைத்த மானுடன். இனிமேல் வராத கடிதங்களுடன் தேங்கிய தபாற்பெட்டி வெறுமைபூசி திரிகின்றது. உள்ளடக்கங்கள் ஏதுமின்றி…..
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
“கடுதாசிக் கடிதங்கள்” இடுகைக்கு நன்றி.
கடிதம் எழுதுவது எப்படி என்கிற பள்ளி பாடத்தில்
ஆரம்பித்து, கடிதத்திற்கும் (அதை எதிர்பார்த்து
ஏங்கும்) உறவுகளுக்குமான தொடர்பையும்,
மிக அருமையான நடையில் “எழுதி”யுள்ளீர்கள்.
நன்றி.
கடிதங்களுக்கும், குடும்பங்களுக்கும், தபால்காரருக்கும்
ஓர் அழுத்தமான நட்பு இருந்து வந்தது. வீதிகளில் யார்
வீட்டில் யார் இருக்கிறார்கள், பையன்/பெண் எங்கு
என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், குடும்பங்களின்
நிலை, ஊரின் சந்து பொந்துகள் எல்லாம் அறிந்த நடமாடும்
விக்கிபேடியா/விக்கிமேப்பியாவாக இருந்த தபால்காரர்கள்
இன்று “கடமையாய்” தெருவுக்கு இரண்டு கடிதத்தைக்
கொடுத்துவிட்டு போகிறார்கள். பெரும்பாலும் யாரும் அவரின்
மணியோசைக்காக காத்திருக்கவில்லை. கூரியர் அவர்களை/
அவர்களின் பணியை அழிக்கும் முன்னர் வாயிற்கதவுகளில்
தொங்கும் அஞ்சல் பெட்டி “தொடர்பை” அறுத்து விட்டது.
குடும்ப வறுமையை விரட்ட கடல் தாண்டி போன
கணவனின் கடிதத்தையும், பணத்தையும், நாளும்
எதிர்பார்த்து ஏமாறும், ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை
கூறும்,
ஐயா பெரியவரே அஞ்சலுண்டோ
என்பேன் நான்
கையால் விரித்திடுவார்,
கண்கலங்கி நின்றிடுவேன்.
கம்பளம் விற்றே கடன் கழித்தேன்
கையிருப்போ எதுமில்லை
எத்தனை நாள் இப்படியே
இன்னலுற்று செத்திடுவேன் …… எனத் தொடரும் பாடலை
(பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன் படித்தது) தங்கள் இடுகை
நினைவுக்குக் கொண்டு வந்தது.
தாங்களே சொல்லியுள்ளது போல, கடிதம்
எழுதும் பழக்கம் வழக்கொழிந்து வருகிறது. அதனால்,
தூரத்து உறவுகளின் தொடர்பு அறுந்து கொண்டிருப்பதோடு,
அஞ்சல் துறையின் இருப்பும் துறை ஊழியர்களின்
பணியும் கேள்விக்குரியதாகி வருகிறது. பல இடங்களில்
அஞ்சல் அலுவலங்கள் மூடப்பட்டும், வேறு வேலைகளில்
ஈடுபட்டுக் கொண்டும் இருக்கிறது.
By: venkataramani on ஜூலை 16, 2012
at 2:05 முப