ஆருத்ரா எழுதியவை | ஓகஸ்ட் 25, 2012

ஒரு குருடனின் நிறப்பிரிகை.

அமாவாசை இருட்டுக்கும்
அப்துல் காதருக்கும்
வெளிச்சங்கள் குறித்த
விவாதம் கிடையாது.

பூமியின் ஆதி இருப்பு
கறுப்பெனவும்
இருட்டெனவும்
கலகம் செய்கிறது அறிவியல்.

தம்மை
நிறப்பிரிகைகளுக்கு
உட்படுத்தாத வானவில்
குறித்து வானங்களுக்கு
அதீத கவலை.

மல்லிகைகளும், ரோஜாக்களும்
இதற்காக
காலம் நெடுக உட்கார்ந்து
கதைத்துக் கொண்டிருப்பதில்லை.

ஈஸ்ட்மென் கலர்களுக்கு
முந்திய கறுப்பு வெள்ளைகளில்
அஞ்சலிதேவியும்
சரோஜா‌‌தேவியும்
கனவில் வந்தார்கள்.

தாத்தாக்களுக்கு
அவர்கள்  உடுத்த
சாறி குறித்த
சஞ்சலம் கிடையாது.

பள்ளிச் சீருடையின் அழகு
வர்ணங்களின் வர்ணாச்சிரமங்களுக்கு
புரிவதேயில்லை.

எல்லாவற்றையும்
தொலைத்த குருடனை
‌மின்னல் வெளிச்சம்
கண்ணைப் பறிப்பதில்லை.

குருடனுக்கு ஏது
கனாவும்   வினாவும்?

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


மறுவினைகள்

  1. “…தாத்தாக்களுக்கு
    அவர்கள் உடுத்த
    சாறி குறித்த
    சஞ்சலம் கிடையாது…” நல்ல கவிதையில் நான் மிகவும் இரசித்த வரிகள்

  2. குருடனுக்கு ஏது
    கனாவும் வினாவும்?\\
    கவிதையின் இறுதி வரிகள் சிந்திக்கத்தூண்டுவதகாவும், அருமையாகவும் அமைந்து உள்ளது.


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்