ரயில் பயணம் நீண்டு கொண்டே செல்கின்றது. இறுதி தரிப்பிடம் பற்றிய பிரக்ஞை எல்லோருக்கும் தெரியும். எனினும் எந்த நேரத்தில் அவ்விடத்தை அடைவோம்? என யாருக்கும் தெரிவதில்லை. அதுவரை நீண்ட தொலைதூரப்பயணம். சென்றாக வேண்டும். நீண்டு செல்லும் இரயில் பயணங்கள் பசுமை நிறைந்த வயல்வெளிகளூடாகவும், சலசலத்து ஓடும் சிற்றாறை மேவியும், வறண்டு வெடித்த தரிசு நிலத்திற்கூடாகவும் என இரசனையான பயணம்.
பயணம் அலுப்பில்லாமல் சுவாரஸ்யம் நிறைந்ததாய் ஆக்குவதற்கு ஒவ்வொரு நிறுத்தத்திலும் சிலர் இறங்க, சிலர் ஏறிக்கொள்கிறார்கள்.தொண்டுக்கிழம், இளைஞர்கள், யுவதிகள், கன்னகுழி விழச் சிரிக்கும் குழந்தைகள் என வயது வேறுபாடு, வசதி வேறுபாடு நிறைந்த பயணிகள் கூட்டம் சிரித்தும், சந்தோஷித்தும், மௌனித்தும், கூக்குரலிட்டும் கலந்துகட்டிய உணர்ச்சிக் குவியலாய் அரக்கப் பரக்க விரைவது காலை நேர ரயில் பயணங்களில் காணக்கிடைக்கின்ற ஒன்று தான்.
எனக்கும் கடந்த இரண்டு மாதமாக இரயில் பிரயாணம் வாய்த்திருக்கின்றது. மேற் பராக்களில் நான் விபரித்தது வாழ்க்கைப் பயணம். ஓவ்வொரு நாளின் காலையிலும் 9.39 க்கு ரயில் பிடித்து 16 கி.மீ தூரம் பயணம். 21 நிமிட விரைவுப்பயணத்தில் வேலைக்கு சென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளைவது எனினும் நன்றாகவே உள்ளது.
பயணத் தூரத்தின் இடையில் சூரிச் விமான நிலையத்தை கடந்து செல்கின்றது இரயில் பயணம். இரயிலின் விரைவுப்பயணத்திற்கு இடையில் தலைதட்டும், தரைதட்டும் – மேலெழுவதும் கீழிறங்குவதுமாக விமானங்கள் விரைகின்றன. பயணங்கள் முடிவதில்லை. இங்கே அவசர கதியில் நடந்தேறுகின்ற அசைவற்ற இரயில் பிரயாணங்களைக் காட்டிலும் சாவகச்சேரி-கொழும்பு இரயில் பிரயாணங்கள் ஆடி அசைந்து, தடதடத்து பெருங்குரலெழுப்பி விரைவது கடந்த காலத்தின் மகிழ்ச்சிக் கோலங்கள்.
எனது முதலாம் இரண்டாம் வகுப்பு பள்ளிக் காலங்கள் மாதம்பை என்ற சிறுநகரிலிருந்து சிலாபம் வரையான 10 மைல் பிரயாணம் இரயில் பிரயாணமாகவே இருந்திருக்கின்றது. சிலாபம் ST.BENADETTE பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கின்றேன். மாதம்பை என்ற தனித்த பெரும்பான்மை சமூகம் வாழ்ந்த இடத்தில் சிறுவயதுப் பராயம் நண்பர்களின்றி , விளையாட வேறு துணையின்றி, பின்னேரப் பொழுதுகளில் தங்கையையும் அழைத்துக்கொண்டு இரயில் நிலைய மேடையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாக இருந்திருக்கின்றது. இரயிலில் பயணிப்பதும், இரயில் நிலைய மேடையில் இருந்து கொண்டு ரயில் பார்ப்பதும் இனிமை நிறைந்த பொழுதுபோக்குகள். மாதம்பையில் எனக்கு இருந்த ஒரே பொழுது போக்கிடம் இரயில் நிலையம் தான்.
அதே போன்றதுதான் பின்னாட்களில் கொழும்பு செல்வதற்காக சாவகச்சேரி இரயில் நிலைய மேடையில் காத்திருக்கின்ற பொழுதுகளில் தனங்கிளப்பு வயற்காற்று வீசும் பாருங்கள். நான் புதிதாய் பிறந்தெழுவேன். நீடித்த இரயில் பயணத்தில் இரவுப் பொழுதில் சங்கத்தானை இரயில் நிலையம் கடந்து யாருமற்ற மோனத்தில் உறைந்திருக்கும் சாவகச்சேரி இந்துக்கல்லூரியை தாண்டுகையில் என் உயிருக்குயிரான உறவைத் தொலைத்ததை ஒத்த துன்பம் அடைவேன். என்னளவில் உயர்திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் சிறுவயதில் தொலைத்தவன். பிரிவுத்துயரம் தாங்கிக் கொள்ளமுடியாதது. துருப்பிடித்த சைக்கிளில் வைத்திருந்த பாசத்தை போன்றதே உயிர்த்துடிப்பான மாந்தர்களிடத்தில் வைத்திருந்தது என ஒப்புவமை கூறமுடியும். எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. மனிதருக்கு மனிதர் உணர்ச்சித் திறனில், உணர்வுத்திறனில் கனிவாயும், கல்லாயும் இருந்து விட்டுப்போகின்றார்கள்.
சிலாபம் ST:BENADETTE பள்ளியில் படித்த காலத்தில் எனது வகுப்பாசிரியர் “மெனி” மாஸ்டர். மாதம்பையை விட்டு நீங்கி இலகுவாக நான் கல்வியை தொடர்வதற்காக சிலாபம் அளுத்வத்தையில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். மெனி மாஸ்டர் எங்கள் வீடு கடந்தே பாடசாலை சென்றாக வேண்டிய பொழுதில் வீட்டு வாசலில் புத்தகப்பையுடன் காத்திருக்கும் என்னையும் தனது சைக்கிளில் ஏற்றி பாடசாலைக்கு கூட்டிச் செல்வார். வகுப்பாசிரியருடன் கூடவே பாடசாலை செல்வதனால் மற்ற மாணவர்கள் என்மீது பயம் கலந்த மரியாதை வைத்திருந்தார்கள்.
ஞாயிற்றுக்கிழமை தெதுறுஓயா ஆற்றில் குளித்ததும், பின்மாலை நேரங்களில் லக்ஷ்மி தியேட்டரில் படம் பார்த்ததும் பசுமை நினைவுகள். பெரும் தென்னந்தோட்டம் ஒன்றின் மத்தியில் அமைந்திருந்த லக்ஷ்மி தியேட்டர் இப்போது இல்லை. அரைவட்ட வடிவிலான சாகாரா தியேட்டரும் இப்போதிருக்கின்றதா? தெரியாது. லக்ஷ்மி தியேட்டரில் எஸ்வி..ரங்கராவ் நடித்திருந்த, பின்னணியில் கண்டசாலாவின் குரலில் துன்பம் ததும்பும் “முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக” பாடல் இடம்பெற்ற “அன்புச்சகோதர்கள்” படம் பார்த்தது மறக்க முடியாத நினைவுகள்.
இரண்டாம் வகுப்புடன் சிலாபம் ST.BENADETTE பள்ளி வாழ்க்கை முடித்து சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இணைந்ததும், அழகரத்தினம் ரீச்சர் எனக்கு வகுப்பாசிரியையாக அமைந்ததும், இரண்டாம் வகுப்பில் -திருக்குறளை யார் எழுதினார்? என்ற விடைதெரியாத வினாவிற்று முருகனே எழுதியதாக எழுதியதிற்கு அழகரத்தினம் ஆசிரியை எனது தந்தையாரிடம் சொல்லி சிரித்ததும் நினைவடுக்கில் நெருக்கமாக உள்ளது.
பின்பாக எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் சிலாபம் சென்ற பொழுதில் மெனிமாஸ்டரை பாரக்க ஆசைப்பட்டு தந்தையாரிடம் கேட்டு அவர் வீட்டிற்கு சென்ற போதில் மெனிமாஸ்டர் அன்பு மிகுதியில் என்னை கட்டி அணைத்துக் கொண்டார். என் கண்களில் கர கர கண்ணீர்.
இப்படித்தான் வந்தமைகின்றன, இரயில் பயணங்களின் போது சந்தித்து சிறிது நேரம் அளவளாவி சந்தோஷித்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப் போய்விடுகின்றவர்களை பின்னாட்களில் நாம் விருப்பப்பட்டாலும் காணமுடிவதில்லை. இறங்கிப்போய்விடுகின்றார்கள் மனிதர்கள் மனதினின்றும். சிலருடன் குறுகிய தூர பயண அமைவும், சிலருடன் நீண்ட தூர பயண அமைவும் வாய்த்து விடுகின்ற தருணங்களில் சிலருடனான பேச்சு சுவாரஸ்யம் இவர்கள் வழி நெடுக எங்களுடன் பயணிக்கமாட்டார்களா? என்று ஏங்க வைத்திருக்கின்றன.உற்சாக மனிதர்களிடத்தே அவர்களைச் சுற்று ஒரு ஈர்ப்பு வட்டம் இணைந்திருப்பதாகவும் அது அவர்களுடன் கூட இருப்பவர்களையும் பற்றி சந்தோசம் கொள்ளச் செய்வதாயும் கணித்திருக்கின்றார்கள். அவ்வாறான நபர்களுடன் தொடர;ந்திருக்க பிரியப்படுவீர்கள். இலகுவாக நட்புப்பாராட்டிக் கொள்ளும் “டேய்” என்ற அடைமொழியுடன் விளித்துக்கொள்ளும், மரியாதை நிமித்தம் “நீங்கள்” என்று விளிக்காமல்- “நீ” என விளிக்கும் எல்லா நண்பர்களும்,நண்பிகளும் பிடித்தமானவர்கள்.
தடதடத்து ஓடும் இரயில் பயணத்தில் பச்சைப்பசேல் வயல்வெளிகள், சலசலத்து ஓடும் ஆறுகள், வறண்டு காய்ந்த தரிசுநிலங்கள் எல்லாவற்றையும் கற்பனையில் கொண்டு வந்து துன்பம், இன்பம், எழுச்சி, துவள்தல், சிரிப்பொலி, விசும்பல் என மனநிலை மாறுபாடுகளுடன் தொடர்ந்தியங்கும் வாழ்க்கையை பொருத்திப் பாருங்கள். உண்மையில் நொந்து விடுவீர்கள்.
இரயிலில் ஏறி எங்களுடன் உட்கார்ந்து பயணித்து அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி விடுகின்றவர்களான – எங்கே போனார்கள்? எங்கே இருக்கின்றார்கள்? என்றே தெரியாத எண்ணற்றவர்களை நாமும் வாழ்க்கை பயணத்தில் தொலைத்திருக்கின்றோம். அவர்களை எப்போதாவது திரும்பிப் பார்க்க முடியுமா? அவர்களுடன் அளவளாவி கூடிக் குதூகலித்திருக்க முடியுமா? என்றெல்லாம் எல்லோரும் ஏக்கப்படுவதைப் போன்றே எனக்கும் துயரப்படிமங்கள் நிறைந்துள்ளன.
சாவகச்சேரிஇந்துக்கல்லூரியின் TV HALL என்றழைக்கப்படுகின்ற மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து “லைசியம்” என்ற பெயரில் வாரத்தின் ஒரு நாளில் மாணவர்கள் அரங்கேறுகின்ற பொழுதில் ஒரு குட்டி தேவதை பாடி விட்டுப்போன “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” பாடலை …. அவ்விசையை இனி எங்கு போய்க் கேட்பேன்? அவ்வாறான பொழுதொன்றை என்னால் தரிசிக்க முடியுமா? கண்ணால் கசிந்து கொள்ளத்தான் முடியும். இரயில் சிநேகிதங்களா நம் நட்புகள்?
பின்னேரப் பொழுதுகளில் சாவகச்சேரி நூலக வளாகத்தின் முற்பரப்பில் இணைந்து, அளவளாவி மகிழ்ந்த நண்பர்கள் எங்கெங்கோ உலகின் அனைத்து பாகங்களுக்கும் தூக்கி வீசப்பட்டு உரையாட நேரமில்லாமல் ஓடி ஒளிகின்ற காலங்கள் எங்களுக்கு அவலமாக வாய்த்திருக்கின்றது.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொள்ள கற்றுக்கொண்டவர்களால், இரயில் சிநேகித அனுபவங்களை இலகுவாக வலியின்றி கடந்து கொள்ள முடியும். நினைவின் நெகிழ்வுகளை உட்சுமந்து தினம் தினம் நினைவுறுத்தி கண்ணால் கசிந்து கொள்பவர்களுக்கு எங்கள் 82ம் வருடத்து தனியார் கல்வி நிலைய மாணவ குழாமும், கச்சேரியில் வேலை பார்த்துவிட்டு ஓடி வந்து வகுப்பெடுக்கும் அந்த ஆசிரியரும், அதே தனியார் கல்வி நிலையத்தில் கணிதம் கற்பித்து சிலபல வேளைகளில் நட்பு பாராட்டி அரவணைத்த சோதிலிங்கம் மாஸ்டரும், சிறுவயதில் “சொற்றுணை வேதியனை” உறுப்பமைய எழுதிக் கொள்ள கற்பித்த அழகரத்தினம் ஆசிரியையும், “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” இசைத்த குட்டி தேவதையும் மறக்க இயலாமல் தவிக்க வைப்பவர்களில் என் மனக்கண்ணில் நிற்பவர்கள்.
நான் இப்போதெல்லாம் இறைவனை வேண்டுவது
பிறர்வாட பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் வேடிக்கை மனிதர்கள் நிறைந்த
இம்மானிட வாழ்வில் “இனி என்னை புதிய உயிராக்கி, மதி தன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்” என்பதே.
பாடல்களை கேட்க பாடல்களின் இணைப்பை அழுத்துங்கள்.
********************************************************************************************
இந்த பதிவு குறித்த நாக.தயாகரனின் விமர்சனம்
இது வெறும் இரயில் பயணத்தை குறிக்கும் பதிவு அல்ல என்பதும் இரயில் பயணத்தை படிமமாக்கி ஆருத்ரா எதையோ சொல்ல விளைகின்றார் என்பதும் ஆரம்ப பந்தியிலேயே புரிந்து போனது. மூன்றாம் பந்தியில் அதனை அவரே உறுதிசெய்கின்றார்.
ஒரு அழகிய கவிதை போல இரயில் பயணத்தின் மூலம் தனது வாழ்க்கையின் பட்டறிவை பதிவாக்கியிருக்கும் அழகு தனிச்சிறப்பு. மேலும் தொடர்ச்சியாக விடாமுயற்சியுடன் பதிவு-எழுதும் ஆருத்ரா வின் உழைப்பு போற்றப்பட வேண்டியதே.
பயணங்களில் கடந்து போனவர்களை நினைத்து நெகிழ்வதும், உருகுவதும் சிறந்த உணர்வுத்திறன் தான். இருந்த போதும் பயணத்தின் நிகழ்காலத்தில் நம்முடன் கூட இருப்பவர்களை கவனிக்காது விட்டுவிடக்கூடிய விபத்தும் நிகழ்ந்துவிடவும் வாய்ப்புள்ளது. இறங்குபவர்களையும் இறங்க நினைப்பவர்களையும் மகிழ்வுடன் வழியனுப்பி வைக்கவும், ஏறி வர நினைப்பவர்களையும், கூட வருபவர்களையும் அரவணைத்து செல்வதாகவும் மட்டுமே வாழ்க்கை தரப்பட்டிருக்கின்றது. இதில் விபத்துகளின்றி பயணத்தை கொண்டு செலுத்தும் வல்லமை பெற்றோர் பெரியோர்.
இது ஆருத்ரா எழுதியதற்கு எதிர்க்கருத்து அல்ல. பொதுவாக நிகழ்ந்து விடுகின்ற விபத்தைப் பற்றி சொல்லவந்தேன்.மற்றும்படி ஆருத்ரா வின் பதிவு எப்போதும் போன்றே அருமை. தொடர்ந்தும் பதிவிடுங்கள்.
ஆருத்ராவின் விளக்கம்.
தயா! விபத்துக்கள் கவனப் பிரகாரம் விளைவதில்லை. கவலைப் பிரகாரம் விளைபவை.என்னைத் துாக்கி வைத்து “தொப்பென்று” கீழே போட்டதற்கு நன்றி. இது “அவலை நினைத்து உரலை இடித்த கதை” அல்ல. அவளை நினைத்து உணர்வைப் படைத்த கதை.
அன்பு ஆருத்ரா,
இரயில் பயணங்கள் பதிவு பழைய நினைவுகளை கலைத்துப் போட்டது.
சில வரிகளை திரும்பத்திரும்ப வாசித்தேன்:
//…. என்னளவில் உயர்திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் சிறுவயதில் தொலைத்தவன். பிரிவுத்துயரம் தாங்கிக் கொள்ளமுடியாதது. துருப்பிடித்த சைக்கிளில் வைத்திருந்த பாசத்தை போன்றதே உயிர்த்துடிப்பான மாந்தர்களிடத்தில் வைத்திருந்தது என ஒப்புவமை கூறமுடியும்.//
//தடதடத்து ஓடும் இரயில் பயணத்தில் பச்சைப்பசேல் வயல்வெளிகள், சலசலத்து ஓடும் ஆறுகள், வறண்டு காய்ந்த தரிசுநிலங்கள் எல்லாவற்றையும் கற்பனையில் கொண்டு வந்து துன்பம், இன்பம், எழுச்சி, துவள்தல், சிரிப்பொலி, விசும்பல் என மனநிலை மாறுபாடுகளுடன் தொடர்ந்தியங்கும் வாழ்க்கையை பொருத்திப் பாருங்கள். …//
உரைநடையிலே கவித்துவம் உணர வைக்கின்றீர்கள்.
பாராட்டுக்கள்!
அன்புடன் ரஞ்சனி.
By: ranjani135 on ஒக்ரோபர் 31, 2012
at 8:10 முப