ஆருத்ரா எழுதியவை | திசெம்பர் 13, 2012

டிசம்பர் பூக்கள்.

08.12.2012 சூரிச்

நேற்று மதியத்தில் இருந்தே சுவிற்சர்லாந்தின் பெரும்பாலான மாநிலங்களில் பனிப்பொழிவு ஆரம்பித்திருக்க வேண்டும் என என்மனம் சொல்லிக்கொள்கின்றது. வானிலைத்தரவுகளை ஒப்புநோக்காமல் கண்ணால் நோக்கி கணித்திருக்கின்றேன் என்பதாக எடுத்துக்கொள்க. நேற்று மதியம் நான் வேலைத்தலத்தில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். என்னுடன் சேர்ந்து பணிபுரியும் சுவிஸ்பெண் DORIS ஜன்னலூடாக வெளிநோக்கி என்னை அழைத்துக் காட்டினாள். ஏற்கனவே சிவப்பான அவள் முகத்தில் குதூகலத் தொற்றல். பனிப்பொழிவு இங்குள்ளவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கின்றது.

பனி தூறலாக, மெதுவான மாவாக, பின்பு சிறுகுறுணி என வகை வகையாக கொட்டிக் கொண்டிருந்தது. வெளிச்சமான நிலையில் நடக்கின்ற பனிப்பொழிவு வெளிச் சூழலை வெகுவாக அழகுபடுத்துகின்றது. வெள்ளை வெளேர் வெண்மை அழகு தான்.

DSC_0100சுவிட்சர்லாந்து  டிசம்பர் மாதத்தில் தனி அழகு பெற்றுவிடும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான அழகுபடுத்தல்கள், இரவுகளில் மரங்களில் கலர் கலரான மின்சோடனை, கடைகளில் குவிக்கப்பட்டிருக்கும் பரிசுப்பொருட்கள், திடீரென வெளிப்பரப்பில் முளைக்கும் சிறுவியாபார ஸ்தலங்கள் என சுறுசுறுப்பாகி விடும் DECEMBER சீசன்.

டிசம்பர் முதலாம் திகதியே ஆருத்ராவிற்கு கொண்டாட்ட நாளாக ஊரிலேயே அறிவிக்கப்பட்டு புலம்பெயர்ந்த தேசத்திலும் தொடர்வது காலவேடிக்கை. கனவு வாடிக்கை. டிசம்பரை மகிழ்ச்சிப்பரப்பான நாட்களாக மேல்நிலைப்படுத்த வேண்டிய அவசியம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இருக்கின்றது. இவ்வாறு பனிப்பொழிவுகளையும், மனப்பொழிவுகளையும் உற்றுநோக்கி ஏலவே எழுதப்பட்ட சூரிச் மழைநாளின் காலைக்கு ஏற்றதாக சூரிச் ஒரு பனிநாளின் காலை எழுத வாய்ப்பு கிடைத்ததற்காக பதிவு எழுதுகின்ற மனம் துள்ளிக் குதித்தது.

வீட்டில் சற்றேறக்குறைய ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்து விட்டாற்போல் தெரிகின்றது. அதை தண்ணி தெளித்து விட்டு விட்டார்கள் என்றும் கௌரவமாக வெளியே சொல்லிக் கொள்ளலாம்.பேப்பரையும் பேனாவையும் எடுத்தால் வழி ஒதுங்கி வேறு வேலைகள் சொல்லாமல் ஏதாவது எழுதி விட்டு வரட்டும் என்ற நிலைக்கு பத்தினி வந்து விட்டாற்போல சிரிப்பினை சிந்துகின்றார். அடியேன் கொடுத்து வைத்தவன்.

Uetlibergபனிபொழியும் மாதங்களில் இங்குள்ளவர்களுக்கும் எங்களுக்கும் வேறுபல தேவைகள் எழுகின்றன. ஏற்கனவே அணிகின்ற உள்ளாடைகளுக்கு மேலாக ஒன்றிரண்டு மேலாடைகள் ஏறி கழுத்துக்கு சுற்றுவது, தலையில் அணியும் தொப்பி, காலுக்கு அடிபெருத்த காலணி என எனது மொத்த எடை கூடுவது அந்த நாட்களில் தான். தலைமுடி வெட்டினால் WEIGHT குறைந்து விடுகின்ற எங்களைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் அதிசயம் தான்.

சனி நாட்காலை என்பது எனக்கு அத்தியாவசிய வீட்டுப் பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்கின்ற நாளாக அமைவது வழக்கம். இன்றைய சனி அதற்கு ஒத்துழைக்கவில்லை. காருக்கு WINTER TYRE மாற்றவில்லை. அதீத பனிப்பொழிவு எல்லோரையும் காரை வெளியே எடுக்காமல் பொதுப்போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கின்றது.

எனது நண்பரான தயாகரனின் கவிதை ஒன்று இந்த நேரத்தில் நினைவில் எழுகின்றது.

தடங்கல்கள்.

இங்கே
கார்க் கண்ணாடியின்
பனிப் படலம் வழிப்பது

ஊரில்
சைக்கிளுக்கு காற்றடிப்பது

இருந்து கொண்டேதான்
இருக்கிறது

புறப்படுவதற்கு முன்னதான
தடங்கல்கள்.

உண்மை தானே.

zuerich-1நான் வாழ்வதுச் சூரிச் மாநிலம். மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் சூரிச் உயரமான மலைகள் குறைந்த பகுதி. ஆல்ப்ஸ் மலைத்தொடரை அண்மித்த CHUR, LUZERN மாநிலங்களில் ஒரு ஆளின் அரைப்பகுதி வரை பனிப்பொழிவு மிகுந்திருக்கும். சூரிச்சிலிருந்து 100 கி.மீ தொலைவிலுள்ள CHUR மாநிலம் சென்றால் அங்கே பனிச்சறுக்கு விளையாட்டிற்கான உல்லாச பிரயாணிகளின் வருகையும் HOTEL தொழிலும் டிசம்பர் சீசனில் மேன்மையுற்று இருக்கும். HOTEL தொழிலில் குளிர்கால 6 மாதங்கள் மிகுதிக்காலங்களின் வியாபாரத்தை சமன்படுத்துவதான அங்குள்ளவர்கள் சொல்லிக் கொள்கின்றார்கள்.

சூரிச் கடல்மட்டத்தில் இருந்து 500மீ உயரமானதும் 4 கி.மீ விஸ்தீரணத்திற்குள் நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட சிறு நகரமாகவும் இருக்கின்றது. LITTLE BIG CITY என்றழைக்கப்படுகின்ற சூரிச் 2012 இந்த வருடத்தின் உலகத்தில் வாழ்க்கைத்தரம் உச்ச சிறப்புடையதாக இருக்கும் 25 நகரங்களுள் முதலாவது இடமாக திகழ்கின்றது.

சுவிற்சர்லாந்தின் அனைத்துப் பெரு நகரங்களும் பெரிய அளவிலான ஏரிகளை கொண்டிருப்பது நான் பார்த்து வியந்த விடயம். சூரிச் நகரின் மையத்தில் தொடங்குகின்ற ZURICH SEE எனப்படுகின்ற ஆறு கிட்டத்தட்டCHUR மாநிலத்திற்கான வேகவீதியில் பிரயாணிக்கும் போது 30 கி.மீ தூரத்திற்கு உடன் வருவது.

இப்பொழுது ஓய்வுகள் அருகிப்போனதால் அழகை ஆராதிக்க நேரம் கிடைப்பதில்லை. அழகை ஆராதிப்பதென்பது இயற்கையை இரசிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும். மற்ற அழகுகள் யாவும் ஆங்காங்கு உறங்கிக் கொண்டுள்ளன.

எனக்கும் சக பதிவர் தயாகரனுக்கும் முட்டிக்கொள்ளவும், கட்டிக்கொள்ளவும் நேரமே கிடைப்பதில்லை. அழகான நான்கு வரிக்கவிதைகளை நறுக்காக எழுதி FACEBOOK இல் எடுத்தெறியும் அவரிடம் நான் கேட்டேன் கவிதைகளில் காதல் தூக்கலாகத் தெரிகின்றதே… ஏதாவது???? என்று கேட்டால் அவையெல்லாம் திருமணத்திற்கு முந்தியே எழுதியதாம். ஆக என் கணிப்பீட்டின்படி திருமணத்திற்கு பிறகு எல்லோரும் கற்பனையில் (கவிதைக்கான) வரண்டு போனார்களா? நான் கோடு போட்டால் அவர் ரோடு போட்டு விடுவார். அவரிடமே கேட்கலாம்.

எங்கள் இருவருக்கும் சமகாலத்தில் வாய்த்த வலிய வந்த பிரச்சனை எங்களுக்குத் தெரிந்த ஒருவர் பிரான்சில் வசிப்பவர்- தமது கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு ஒரு நாடகம் எழுதித்தரும்படி கேட்டது. கவிதை, பதிவு என ஏதாவது கலந்து கட்டி வாழ்க்கையை போக்காட்டும் எனக்கு நாடகத்தமிழ் கைவரப் பெறாதது. அதற்குள்ளும் நுழைந்து பார்க்க ஆசை இருந்தது என்னமோ உண்மைதான். காலக்கெடு வைத்துவிட்டு இதற்குள் நாடகப்பிரதி தர வேண்டும் எனக் கேட்பது எங்களது தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என்பதாக எனக்குப்படுகின்றது.

எனக்கு வந்த மலையளவு துன்பத்தில் பாதியை தனக்கானது என்று நினைக்கும் நண்பர் தயாவிடம் ( அவர் அப்படி நினைப்பதில்லை) நாடகத்திற்கான கருவையும் உத்தியையும் கூறிவிட்டு மீதிப்பகுதியை எழுதித்தருமாறு கேட்டுவிட்டு துரத்திப்பிடிக்கும் விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த இடத்தில் ஊரிலுள்ள டெய்லர் கடைகள் தான் ஞாபகம் வருகின்றது. தீபாவளித் துணிமணி தைக்கக்கொடுத்தால் இழுஇழுவென இழுத்து கடைசி நிமிடத்தில் தரும் டெய்லர்கள் ஞாபகம் வருகின்றார்கள்.

நானும் தயாகரனும் என்னவோ டெய்லர் கடைகளை விடுத்து ஆல் இன் ஆல் அழகுராஜா சைக்கிள் கடை ஓனராகவும் பணிபுரியும் சிப்பந்தியாகவுமே எங்களை நினைவில் நிறுத்திக்கொள்வது நடக்கின்றது. ஐந்து சதத்திற்கு பிரயோசனமில்லாத விசயங்களில் கைவைத்து அல்லல்படும் அழகு எங்களுக்கு தனியானது.

கதை  என்னவென்றால்  ‌தொடர் நாடகங்களுக்கு  அடிமையான இல்லத்தரசிக்கும்,  கணனி- FACEBOOK  என கதியாகக் கிடக்கும் கணவனுக்கும்,   GAMEBOY க்குள்  விழுந்துகிடக்கும்  குழந்தைகளுக்கும்  இடையிலான  உறவின்  விரிசல் தான் கதைக்களன். நாடகத்தில்  இல்லத்தரசி  வனிதாமணியை  அறிமுகம்  செய்வதற்காக  நான்  எழுதிக் கொடுத்த அறிமுக உரைதான்  கீழே  காண்பது.

கதைகளால் நிரம்பியுள்ள உலகில் காற்றில் கதைகள் உலவுகின்றன. நீக்கமற நிறைந்திருப்பது எல்லோருக்குமான கதைகள். உண்ட கதை, உடுத்த கதை, நினைத்த கதை, நிறைவேறாமல் போன கதை, வாழந்த கதை, வீழ்ந்த கதை என மனித வாழ்வுக்குள் எத்தனையோ கதைகள். சொல்லிவிட முடியாத அளவிற்கு மாறாத கதைச் சித்திரமாக மனித வாழ்வு இயங்குகின்றது.

chellamayஎங்களுக்கு கதைகள் பற்றி யாதொரு அக்கறையும் இல்லை. இந்த நாடகத்தின் இல்லத்தரசி வனிதாமணி தொடர்ந்து கதைக்களனாக இருக்கக்கூடிய தொலைக்காட்சி தொடர் நாடகங்களுக்கு அடிமையானவள். மாலைகளில் தொலைக்காட்சியே அடிமை எனக் கிடப்பவள். வீட்டு வேலைகள் ஒழுங்காக நடப்பதில்லை.

செல்வி நாடகத்தில் ராதிகா எத்தனையாம் எபிசோட்டில் இன்ன கலர் சாறி அணிந்திருந்தாள் என்பதில் இருந்து சித்தி தொடரில் ராதிகா வாழாமல் போனது வரையான வாழ்க்கைக்காலம் இவளுக்கு அத்துப்படி. தனது மகன் சிவநேசன் மூன்றாம் வகுப்பில் கணிதத்தில் என்ன மார்க்குகள் எடுத்தான் என்று கேட்டால் றிமோட்டே கதியாக கிடக்கும் இந்த ரிமோட் றீட்டா திருதிருவென விழிப்பாள்.

நிர்மலா பெரியசாமி நடாத்தும் சொல்வதெல்லாம் உண்மையின் நிகழ்ச்சி நிரலை மனதுள் வாங்கி ஊர்ப் பிரச்சனையை தனக்கான பிரச்சனையாக நினைத்து தினசரி கண்ணீர் வடிப்பவள் தான் உப்புப்போடாமல் ஆக்கி வைத்த மீன்குழம்பிற்கு குழைத்துச் சாப்பிட சாதம் வடிக்காமல் போன உண்மைக்கதையை இந்த ஊர் அறியாது.

இந்த வனிதா மணியால் தோசைக்கல்லில் இருந்து தீய்ந்து போன தோசைகளே எடுக்கப்படுகின்றன. தொட்டுக்கொள்ள சம்பல்கள் அரைக்கப்படுவதில்லை. ஊர்க்கதைகளை இவளே மென்று தின்பதால் தோசைக்கான சம்பல்கள் இன்றி நேற்று வைத்த மீன்குழம்பு, முந்தாநாள் வைத்த முட்டைக்கறி என நிகழ்காலமும் இறந்தகாலமும் கைகோர்த்துக் கொள்கின்றன.

காலையில் இருந்து மாலைவரை தொலைக்காட்சியே கதியெனக் கிடப்பதால் காலையில் பாலில் ஊறப்போட்டு உட்கொண்டCORN FLAKES உடன் பள்ளி விரைந்த இவளது குழந்தைகள் இரவில் பள்ளி கொள்ளுமுன் உட்கொண்ட வரண்ட ரொட்டித் துண்டுகளால் வயிறுநிரப்பி வாழ்க்கையை கழிக்கின்றார்கள்.

வனிதாமணி வனிதை இல்லாத மணி. நடேசு என நாமம் கொண்ட இவளது சுந்தரபுருஸனுக்கு ஏற்ற நல்லாள் கிடையாது. நல்லாள் என்று சொல்வதற்குரிய நயம்பட உரைக்கக்கூடிய காரணங்களை இவளே விட்டுத் தொலைப்பதால் வாழ்க்கைச் சேற்றில் நாளும் புதைபவள். இது சேறு என்பது இவளுக்கும் தெரியும். தனது கால்கள் தான் இவை என்பதையும் அறிவாள். சேற்றிற்குள் காலை விட்டுவிட்டு அந்தக் கால்களால் வீட்டிற்குள் நடந்து வீட்டை அசிங்கப்படுத்துபவள்.வனிதாமணி வடிவழகு இல்லாதவள்.

இந்த நாடகம் சுவிஸில்  மேடை  ஏற்றும்போது  அதன்  காணொளியை  இனி  வரும்பதிவுகளில்  இணைப்பேன். என்  இன்றைய  மனஓட்டத்திற்கு  உகந்ததான  தயாகரனின்  இன்னொரு  கவிதை.

அவளுக்கான  கவிதை.

நான்
இன்னமும்
உயிரோடு தான்
இருக்கிறேன்

உந்தன்
உயிரான நட்பை
இழந்து விட்ட
இற்றை நாட்பொழுதுகளிலும்.

******************************************************************************


மறுவினைகள்

  1. உங்களது அண்மைய பதிவு December பூக்கள் மிகவும் அழகு. இந்த ஆக்கத்தின் ஊடாக அந்த அழகிய Switzerland கண்களில் தெரிந்தன. நன்றி கலந்த வாழ்த்துக்கள். மற்றும், உங்கள் நாடக தமிழில் குடும்ப தலைவியை மிகவும் அட்டகாசமாக வர்ணித்திருந்தீர்கள். தற்போது மேற்கத்தைய நாடுகளில் வாழும் பல குடும்பதலைவிகளுக்கு ஒழுங்காக இருந்து உணவு அருந்த நேரம் கிடைப்பதே அருமை. ஒரு சுவாரஸ்யத்திற்காக எழுதியிருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    குயிலி

  2. கற்பனை வளம் வரண்டு விட்டதாகவோ கவிதை ஆர்வம் சுருங்கி விட்டதாகவோ கவலை கொள்ள வேண்டியதில்லை. சொந்த அனுபவத்தில் மட்டும்தான் எழுதுவது என்றால் ஆயிரக்கணக்கில் காதல் பாடல்களை எழுதும் கவியரசர்கள் என்ன அத்தனை காதல்களையும் அனுபவித்து விட்டா எழுதுகின்றார்கள். ஒதுங்கிப்போவதற்கு காரணங்கள் வேறுபல உள்ளன. தேடி வருகின்ற எந்தவொரு வாய்ப்பையும் பயன்படுத்த பயமாக உள்ளது. யாரேனும் நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்கள் அல்லது நன்றாக பேசுகின்றீர்கள் என்று பாராட்டினால் பயம் எம்மைப்பற்றி விசாரித்தால் பயம் அங்கே பயம் இங்கே பயம் அதிலும் வீட்டு தொலைபேசி இலக்கம் கேட்டு விட்டால் ரொம்பப்பயம். எங்கே அடுத்ததாக தங்களது ஐந்தோ ஆறோ வயது உள்ள பிள்ளைக்கு பேச்சு எழுதித்தா கவிதை எழுதித்தா என வந்த விடப்போகின்றார்கள்கள் என்று. அண்மையில் ஆருத்ராவிற்கும் எனக்கும் ஒரு வாய்ப்பு வந்தது பட்டிமன்றம் பேசுவதற்கு. உள்மனதில் ஆசை இருந்தாலும் வரப்போகும் துன்பங்களை எண்ணி ஒதுங்கிக்கொண்டோம். யாருக்காகவோ பின்னாலிருந்து மூளையை கசக்கி எழுதி முடிக்கும் துன்பம் பட்டால் மட்டுமே உணரக்கூடிய ஒன்று. வேண்டாமடா சாமி….. நீங்களும் உங்கட தமிழ் ஆர்வமும்.


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்