ஆருத்ரா எழுதியவை | ஜூன் 8, 2013

ஆப்பரேஷன் சக்சஸ்..

மே மாதம் 31 ம்திகதி,  சூரிச்  பல்கலைக்கழக வைத்தியசாலை.

அக்காளைப் பெண் பார்க்க வந்து தங்கையை திருமணம் செய்ததாகி விட்டது என் நிலைமை.சொல்லுவதற்கு இந்த உவமானம் தான் வேண்டியிருக்கின்றது. எனக்கு அக்காளும் தங்கையும் சந்தோசத்தை அள்ளித் தந்து விடவில்லை என்பதே யதார்த்தம்.

hospitalஒன்றரை மாதங்களுக்கு முன்னர்தான் இந்த வைத்தியசாலைப் பக்கம் வரவேண்டியதாகப் போய்விட்டது.இதற்கு முன்னர் பலதடவை வந்திருக்கின்றேன்.எனது இரு பெண்பிள்ளைகளும் இதே வைத்தியசாலையில்தான் பிறந்தார்கள்.மனைவியும் ஒருமுறை நோய்வாய்ப்பட்டு ஏழுநாட்கள் இங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.அப்போதெல்லாம் பார்வையாளர் நேரத்திற்குள் வந்து செல்லும் பாக்கியம் தான் கிடைத்ததே தவிர இங்கே படுத்துக்கிடக்கும் தேவை ஏற்படவில்லை.

சில உபத்திரவமான வலிகள் மறக்க முடியாதவைகளாக அமைந்து விடுவதுண்டு.ஒருமாலை நேரத்தில் ஆரம்பித்து… நடு இரவு வரை தொடர்ந்து…. எதற்காக எங்கே வலிக்கின்றது என்று தெரியாமல் மிகப் பெரிய அவஸ்தைப்பட்டு, இனி வீட்டில் நிற்காமல் வைத்தியசாலைக்குத்தான் போக வேண்டும் என நினைத்து, போன வேளையில் இருந்து இந்த வைத்தியசாலையுடனான பந்தம் தொடர்கின்றது.

அதே நாளில் அவசரசிகிச்சை மையத்தில் என்னை இறக்கிவிட்டு காரைப் பார்க் பண்ணப் போய்விட்ட மனைவி, வைத்தியசாலை நுழைவுக்குள் நிரப்பப்படவேண்டிய காகிதங்களை நீட்டிய தாதி, தாங்கமுடியாத வேதனையுடன் இவற்றை எதிர் கொண்ட நான் என மூன்று கதாபாத்திரங்களுடன் ஆரம்பித்து  இன்றைய பொழுதில் அறுவை சிகிச்சை டாக்டர், அவருக்கு உதவியான அடிக்கடி  வெட்கப்பட்டு சிரிக்கும் அழகான பெண்டாக்டர், எஞ்சிய அழகான தாதிகள் என பல்தேசிய கதாபாத்திரமாகிவிட்டது என் வாழ்க்கை.

அக்காள் – தங்கை என்ற முதல் உவமானத்தை விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது.வந்த முதல் நாளில் எனது சிறுநீரகத்தில் 6 மி.மீ கல் சிறுநீரககுழாயில் அடைப்பை ஏற்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது.அப்பொழுதுதான் எனக்கு குடலிறக்கம் ஆரம்பநிலையில் இருப்பதும் தெரிந்தது.அக்காள் சிறுநீரககக்கல்.சிகிச்சை ஏதும் தேவையின்றி தானாக கரைந்து வெளியேறிவிட்டது.தங்கை குடலிறக்கம் கட்டி அழவேண்டி இருக்கின்றது.அப்படியும் சொல்ல முடியாது ; நேற்றைய பொழுதில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிட்டார்கள்.

பெரிய அறுவைச் சிகிச்சை என்று சொல்ல முடியாதுதான் எனினும் அடிவயிற்றில் இரண்டு பக்கமும் ஆறு சென்டிமீட்டர் நீளத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.இதைத்தான் அடிமடியில் கைவைக்கின்றது என்கிறார்களோ..?

நான் இந்த வைத்தியசாலைக்கு வந்ததின் பின்னர் இரண்டு தடவை பரிநிர்வாணம் அடைந்தேன்.ஆன்மீகத்தின் அதி உச்சமான நிர்வாணநிலை என்றெல்லாம் யாரும் நினைத்துவிடத் தேவையில்லை.

opகேர்ணியா என்ற குடலிறக்கத்தின் ஆரம்பநிலை எப்படி இருக்கும் என்பதை OBERARZT என்ற முதன்மை வைத்தியர் தனக்கு கீழ் பணியில் சேர்க்கப்பட்ட அந்த இளம் பெண்டாக்டருக்கு கற்பிக்க என்னைப் பயன்படுத்திக் கொண்டார்.அந்தப் பெண் டாக்டர் அநியாயத்திற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்.நான் இந்த பரிநிர்வாணநிலையை அடைந்தது என் மனைவியின் கண்ணெதிரில் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

நான் எனக்கான இந்த அறுவைச்சிகிச்சைக்காக மூன்றுநிலைகளில்  தயார்படுத்தப்பட்டேன்.அதற்கான டாக்டர் அறுவைச்சிகிச்சை மிக இலகுவானதென்றும், FAMILY PLANNING பண்ணாவிட்டாலும் இரண்டு வீதமளவில் அதற்கான சேதாரம் நடைபெற வாய்ப்பிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.இதனால் சுவிஸ் சனத்தொகையில் பாதியளவை என்னால் குறைக்க முடியாது போய்விட்டாலும், அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடியளவிற்கு முடியும் என்பதை ஏற்றுக் கொண்டேன்.

மயக்கநிலைக்கு தயார்படுத்தும் டாக்டருடன் அடுத்த சந்திப்பு.முழு மயக்க நிலையில் சத்திரசிகிச்சையை எதிர்கொள்ளப் போகின்றீர்களா?அரைமயக்க நிலையில் எதிர்கொள்ளப் போகின்றீர்களா? என்பதே அவரது கேள்வியாக இருந்தது.முழுதாக மயக்கநிலைக்கு ஆட்படுத்துமாறு சொல்லிவிட்டேன்.

மூன்றாவதுநிலை நான் வேலை செய்யும் இடத்தில் விடுமுறை பெற்றுக்கொள்வது.நான் வேலைக்கு வரமுடியாத இரண்டு வாரத்திற்கும் புதிதாக ஒருவரை வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள்.

30.5.2013 தேதிகுறிக்கப்பட்டு காலை ஏழு மணிக்கு ZURICH UNIVERSITY வைத்தியசாலைக்கு வரும்படியும் பத்து மணிக்கு சத்திரசிகிச்சை செய்வதாகவும் சொல்லப்பட்டது.

முதல்நாள் இரவு பன்னிரண்டு மணிக்கப்பால் உணவு உட்கொள்ளாமல், நீரேதும் அருந்தாமல், காலை ஏழு மணியளவில் இந்த வைத்தியசாலை வளாகத்திற்கு வந்ததும், பெரிய பதைப்புடன் காத்திருந்ததும், ஒவ்வொரு கணத்தையும் பதிவாக எழுத ஆர்வத்துடன் இருந்ததும் எல்லாமுமான பொழுதில் ஒன்றும் தெரியாமல் நினைவிழந்ததும் நடந்து போய்விட்டது.

கண்விழித்துப் பார்த்தால் பகல் ஒன்றரை ஆகிவிட்டிருந்தது.கையால் அடிவயிற்றை தடவிப் பார்த்தால் ஆபரேசன்  நடந்துவிட்டிருந்தது. பெரிய எதிர்பார்ப்பு போய் சப்பென்றாகிவிட்டது.அதன்பின்னர் அனஸ்தீசியா டாக்டரை சந்தித்தபொழுதில் எனக்கென்ன நடந்தது என கேட்டபொழுதில் அவர்கள் தந்த மாத்திரை ஒன்றில் நான் உறங்கிப் போய்விட்டதும், அனஸ்தீசியா தந்து தயாரானதும், ஆபரேசன் நடந்ததும் தெரியவந்தது.

நான்கு நாட்கள் இங்கேயே இருந்தாக வேண்டும்.தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.பார்வையாளர் நேரமென்பது காலையில் இருந்து மாலை வரையானது.இந்த வைத்தியசாலை ZURICH இன் சற்று உயரமான பகுதியில் அமைந்தது.இதன் சன்னலூடாக வெளியே நோக்கினால் ஒரே பார்வையில் எனது வீடு இருக்கும் பகுதியை காணலாம்.

தொடர்ந்து படுத்திருப்பது, தொடர்ந்து புத்தகம் வாசிப்பது, பின்பு எழுதுவது என நேரத்தை கழிக்க தெரியாமல் அவஸ்தையுடன் கழிந்து கொண்டிருக்கின்றது எனக்கான நேரம். வைத்தியசாலையில் தங்கியிருத்தலும், சிறையிலடைத்தலும் தான் மனிதனுக்கான அதிக பட்ச தண்டனையாக இருக்கக் கூடுமென எண்ணத் தோன்றுகின்றது.BED REST கேட்க அழகானதாக தோன்றினாலும் பெரிய சித்திரவதை அதுதான். சுதந்திரமான நடமாட்டத்தை கட்டிப்போட்டுவிட்டு, நோயாளி மனநிலையுடன் வாழ்வதே பெரிய நோய்மையும் மனமுடக்கமும்.

வியாழன் நடந்த ஆப்ரேஷனுக்கு பிறகு வந்த சனியன்றே வீடு போகப்போவதாக அங்கு கடமையிலிருந்த டாக்டரிடம் கூறிவிட்டேன். இருந்தாலும் இன்னொருநாள் பொறுத்து ஞாயிற்றுக்கிழமை வீடு ஏகலாம் என்ற டாக்டரின் கூற்றும் அடுத்த நாளின் விடுதலையும் ஆருத்ராவை களிப்பில் ஆழ்த்தின.

பாரதியாரின் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்ற பாடல் என் நினைவிற்கு வந்தது.

susrutharஅறுவைச் சிகிச்சை பற்றிய வரைபுக்குறிப்பை இதனுடன் இணைத்து விடலாம் எனத் தோன்றுகின்றது.

அறுவைச் சிகிச்சையின்  தந்தை ஆசான் எனப் போற்றப்படுபவர் சுஸ்ருத‌ர். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட சுஸ்ருத‌ சம்ஹிதை கி.மு. 600-800 காலப்பகுதியைச் சார்ந்தது. இந்தியாவின் வட மாநிலமான பனாரஸ் மாநில பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர். உடற்கூற்றியலை ஆரம்பத்திலேயே தெளிவாக அறிந்தவர். மனித உடலை உடற்கூற்றியலை அறிவதற்கு தடையாக சமயசம்பந்தமான தடைகள் ஐரோப்பாவில் இருந்த காலத்தில் கி.மு 600ம் ஆண்டு காலப்பகுதியில் சுஸ்ருதர் கங்கையில் இறந்த குழந்தைகளை நீரில் அழுகவிட்டு  பிண்டம் நீக்கி உடற்கூற்றியலை தனது மாணவர்களுக்கு கற்பித்தார்.

அக்கால வழக்கப்படி போரில் தோற்றவர்களில் உடல் உறுப்புக்களை அறுத்துவிடும் பழக்கம் இருந்து வந்தது. அறுப்பட்டவர்களின் மூக்கு, காது என்பவற்றை வேறுபகுதிகளில் இருந்து தோல் வெட்டியெடுத்து இன்று வழக்கத்திலுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி முறையை அக்காலத்தில் முனைந்து பார்த்து வெற்றி கண்டவர் சுஸ்ருத‌ர். மருத்துவ உலகின் சத்தியப்பிரமாண முறையை வழக்கத்திற்கு கொண்டுவந்தவரும் இவரே.

சுஸ்ருதர் பற்றிய பெரியளவிலான ஆராய்ச்சிகளை செய்த ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறை தலைவரான மெக்டோனேல் அவர்கள் சுஸ்ருதர் காலம் கி.மு. 600-800 என்பதை உறுதிப்படுத்துகின்றார்.

மகிழ்வு

நான் இன்றளவும் மகிழ்ந்து கொண்டிருப்பது நான் சுஸ்ருதர் காலத்தில் வாழவில்லை என்பதை எண்ணியே.இன்றைய மருத்துவ முன்னேற்றம் அளப்பரியது.


மறுவினைகள்

  1. சிறு நீரகத்தில் கல், குடலிறக்கம் இவைகளுக்கான அறுவை சிகிச்சை நடைபெற்றதை பற்றிய அருமையான பதிவு, அருமையான முறையில் in satire manner எழுதியிருக்கிறார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி ஆருத்ரா தரிசனம்
    நன்றி திருமதி Suchithra Krisnamoorthy

  2. “அக்காளை பெண் பார்க்க வந்து தங்கையை கட்டி கொண்ட” என்று கதை தொடங்க, ஏதோ ஒரு காதல் கதை என நினைத்து வாசிக்க தொடங்கினேன். ஒரு சத்திர சிகிச்சையை இப்படி இலகுவாக சொல்லியிருக்கிறார் ஆருத்ரா. அழகு!
    -JANA VIJAYAKUMAR-TORONTO

  3. சத்திரசிகிச்சைக்கு அடுத்தநாளின் அதிகாலையில், நித்திரை தொலைத்த பொழுதொன்றில் “ஆப்பிரேஷன் சக்ஸஸ்”
    வலி வேதனைகளுடன் வைத்தியசாலையில் வைத்தே எழுதப்பட்டது. அந்த நீண்ட வறாந்தாவை கடந்து செல்பவர்கள் சத்திரசிகிச்சை உடையுடன் பேப்பர்களை பரப்பி வைத்து எழுதிக் கொண்டிருந்த என்னை “மறை கழண்ட கேஸ்” என நினைத்திருக்க கூடும்.

    நேற்று பதிவிலிட்டதிலிருந்து நிறைந்த வாசகர் தளம் , நெருக்கமான வாசகர் கருத்து என வலி மறக்க செய்திருக்கின்றது “ஆப்பிரேஷன் சக்ஸஸ்”. வேறென்ன வேண்டும் எனக்கு?


ஆருத்ரா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

பிரிவுகள்