ஆருத்ரா எழுதியவை | ஜூலை 4, 2013

ஏன் என்று கேளுங்கள்.

எனக்குத் தெரிந்து இற்றைவரை இரண்டு குரங்குக் கதைகள் ஞாபகத்தில் இருக்கின்றன. குரங்குகளை நினைவில் வைத்திருப்பதால் பெரிதாக பயன் ஒன்றும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்றாலும் கதைகளாக நினைவில் இருப்பதால் சிறிதளவேனும் பயன் இருப்பதாகவே தெரிகின்றது.

நான் ஏழுவயதாக இருக்கும் போது முதலாவது குரங்கு கதையை அறிந்து கொண்டேன். ஆத்மஜோதி எனும் மாதஇதழ் நாவலப்பிட்டியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அந்த இதழில் இடம்பெற்ற அந்த குரங்குக்கதையை தந்தையார் வாசித்துக் காட்டினார்.

DSC_0115ஒரு பரிசோதனைச்சாலையில் ஒரு தாய்குரங்கும், அதனது சேய்க்குரங்கும்- தாய்க்குரங்கின் உயரத்திற்கு சற்று மேலதிக உயரத்தைக் கொண்ட கண்ணாடி ஜாடிக்குள் விடப்பட்டன. ஜாடியினுள் கீழ் இருந்து நீர்செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. நீரினுள் தாய்க்குரங்கும், சேய்க்குரங்கும் விளையாடத் தொடங்கின. தங்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே நீர் உள்ளே வருவதாக நினைத்துக் கொண்டன. நீர்மட்டம் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியது. தாய்க்குரங்கின் இடுப்பு மட்டம்வரை நீர் அதிகரித்து விட்டது. தாய்க்குரங்கு குட்டிக்குரங்கை தனது தோள்களில் ஏற்றிக்கொண்டு விளையாட்டைத் தொடர்ந்தது. வரப்போகும் ஆபத்தை உணரவில்லை. நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. தாயக்குரங்கின் மூக்குமட்டம் வரை நீர் உயர்ந்து விட்டது. விளையாட்டை கைவிட்ட தாய்க்குரங்கு உயிராபத்தை உணரத்தொடங்கியது. குட்டிக்குரங்கை தனது தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துக் கொண்டது. தாய்மையின் உன்னதத்தை வெளிப்படுத்தி குட்டிக்குரங்கை காப்பாற்றி நின்றது.

நீர்மட்டம் அதிகரித்து தாய்க்குரங்கின் தலைக்கு மேலே வந்துவிட்டது. தாய்க்குரங்கு மூச்சுத்திணறத் தொடங்கியது. அப்பொழுது தான் அந்தத் தாய்க்குரங்கு யாரும் எதிர்ப்பார்க்காத காரியமொன்றை செய்தது. தனது தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துக் கொண்டு காப்பாற்றி வந்த குட்டிக்குரங்கை நீரினுள் இழுத்து காலடிக்கு கொண்டு சென்று அதற்கு மேல் ஏறிநின்று தன்னை காப்பாற்றிக்கொண்டது.

கதையை வாசித்துக் காட்டிய எனது தந்தையார் கதை முடிந்தவுடன் என் முகத்தைப் பார்த்தார். கதையின் முடிவு என்னை வெகுவாக பாதித்திருந்தது. குட்டிக்குரங்கின் பரிதாபநிலைக்காக கண்கலங்கி இருந்தேன். “கதைதானே விடு” எனத் தந்தையார் என்னை சமாதானப்படுத்தினாலும் அது கதையல்ல என்பது அவருக்கும் தெரிந்திருந்தது.

இதுவரை குட்டிக்குரங்கு நீருள் மூழ்கியதாலேயே இறந்து போனதாக எனது சிறுபராயத்து அறிவு சொல்லிக்கொண்டிருந்ததை நானும் நம்பிக் கொண்டிருந்தேன். நான் இன்றைய வயதில் இந்தக் கதைக்குள் மேலதிகமாக வேறொன்றும் இருப்பதாக உணர்ந்து கொள்கின்றேன். “தாய்க்குரங்கு தன்னை காப்பாற்றும்” என்று நினைத்திருந்த குட்டிக்குரங்கின் நம்பிக்கை தகர்ந்த அக்கணம் தான் அது மரணித்திருக்க வேண்டும். நம்பிக்கை பொய்த்துப்போதல் தான் மனிதனுக்கு கூட மரணிக்கின்ற தருணங்களை நினைவுபடுத்துகின்றன.

vetathiriஇரண்டாவது குரங்கு கதை “சங்கரன் பிள்ளையும் குரங்குகளும்” என்பதாக அமைகின்றது. சங்கரன்பிள்ளை இதுவரை வாழந்த வாழ்க்கையில் வெறுப்புற்று துறவி ஒருவரை நாடினார். தனக்கு மன அமைதி கிடைப்பதற்குரிய பயிற்சிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். துறவி சிறிது யோசனை செய்துவிட்டு சங்கரன்பிள்ளையிடம் கூறினார். இந்தப்பயிற்சி மிக இலகுவான பயிற்சி தான். நீ ஒரு வாரத்திற்கு எதைப்பற்றியும் பெரிதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். முக்கியமாக குரங்குகளைப் பற்றி நினைக்காமல் இருந்தால் போதும்.

“சரி” என்று சொல்லிவிட்டுச் சென்ற சங்கரன்பிள்ளை குரங்குகளை நினைப்பதில்லை என சங்கல்பம் எடுத்துக்கொண்டார். “குரங்குகளை நினைப்பதில்லை” என பல தடவைகள் மனதிற்குள் சொல்லிக்கொண்டார். உறுதி எடுத்துக்கொள்ள எடுத்துக்கொள்ள குரங்குகள் மேலெழுந்து வரத் தொடங்கின. அவருடைய நினைவுகளில் குதியாட்டம் போட்டன. இரண்டாவது நாளே சங்கரன்பிள்ளை துறவியிடம் ஓடினார். சுவாமி தயவு செய்து என்னை குரங்குகளிடம் இருந்து காப்பாற்றுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்;.

நாம் எதை, எதை நினைக்காமல் இருக்கவேண்டும் என நினைக்கின்றோமோ அவைகள் மாத்திரம் தான் மனதை பெரிதாக ஆக்கிரமிக்கின்றன. மனதிற்கு கட்டளைகள் போடமுடியாது.கஷ்டப்பட்டு செய்வன துன்பத்தை தருகின்றன.

மனம் பொறி வழியில் இயங்குகின்றது. ஐம்பொறிகளால் இயங்குகின்ற மனம் அறிவின்வழி நிற்காது- உணர்வின் வழி மயக்கமுற்று மேலதிக துன்பங்களை வருவித்துக்கொள்கின்றது. சில கணங்களில் மனம் இதை உணர்ந்து கொண்டாலும் துன்பங்களுக்கு காரணம் தான்தான் என மனத்தையே கூறிக்கொண்டாலும் அதனின்றும் வெளியேறி விடுபடமுடியாத அளவிற்று தத்தளிக்கின்றது. மனத்தை அடக்க நினைத்தால் அலையும். மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்.

இவ்விடத்தில் நான் என்ற குறியீட்டுடன் “ஆருத்ரா” என்ற படர்க்கை உங்களுடன் உரையாட முற்படுகின்றது.
சதா சர்வ காலமும் சிறுவயதிலிருந்து மத்திம வயதுவரை மற்றவர்களால் இன்பம் என உணரப்பட்ட புலன் நுகர்வுகளில் இருந்து தன்னை விலத்தியே வாழ்க்கையை கடத்தி இருக்கின்றது இந்த மனம். சதா வெறுப்புற்று சதா எரிச்சலுற்று, அனர்த்தங்களில் அல்லலுற்று என எனக்கான மனம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டதோ என ஐயம் உற்றிருக்கின்றேன். மனம் எனைக் கட்டி இழுத்து விரைந்திருக்கின்றது. நான் அதன்வழி பயணப்பட்டிருக்கின்றேன். மனத்தின்வழி விரைந்து விட்டு வீழ்ந்தவுடன் விதியின் மீது பழியைப்போடும் லாவகம் மற்றவர்களைப் போலவே எனக்கும் வாய்த்திருக்கின்றது.

ஆனால் இவற்றை எல்லாம் மீறி மனத்தை முழுதாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற பெரு விருப்பு மற்றவர்களைக்காட்டிலும் எனக்கு இருந்திருக்கின்றது. மனம் பொறிவழியில் அல்லலுறுவதை வெளிப்படையாக உணர்ந்து கொண்டவருக்குத் தான் அதில் இருந்து மீட்சி அடையவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தெழுகின்றது.

murugesuஆன்மீகத்தின்பால் உற்ற ஆவலினால் ஒருமுறை நுவரெலியா சென்றபோது காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றிருக்கின்றேன் அவரால் கற்றுத்தரப்படும் ஆன்மீக வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பு புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்கின்ற எனக்கு அவரின் மறைவிற்கு பின்பு அடிபட்டுப் போயிற்று. அதன்பின்பு யோகாசன வகுப்புகளில் கலந்து கொண்டதனால் பெற்றுக்கொண்ட சிறிய சிறிய யோக அனுபவங்கள் ஆன்மீகத்தின் பக்கம் மேலும் இழுத்துச் சென்றன.

மூச்சுப்பயிற்சி என்கின்ற பிராணயாமக்கலை பெரிதான மன அமைதியை பெற்றுத்தந்திருக்கின்றது. அதனுடன் கூடவே கற்றுத்தரப்படும் முத்திரைகைள் மனக்கூர்மைக்கும் மன ஓர்மைக்கும் வழி சமைக்கின்றன. எல்லாம் நன்றாகவே இனிதாகவே நடைபெற்றன. இவ்விடத்தில் தாய்க்குரங்கு தான் தப்பித்தலுக்காக சேய்க்குரங்கை காலடியில் போட்டு ஏறி நின்ற துயரம் நடந்தேறியது.

muthraவாழ்வியல் அனுவபங்கள் பெரிதான பாடங்களை கற்றுத்தருகின்றன. ஆனால் அதைப் பெற்றுக்கொள்வதற்காக தரப்படும் விலைகள் மிக உச்சமானவை. வலி ஏற்படுத்தக் கூடியவை.

துன்பம் ஏற்படுகின்ற வேளைகளில் எல்லாம் ஆன்மீகத்தை தூசிதட்டிப் பயன்படுத்திக்கொள்வது எனக்கு பழக்கமாக இருந்திருக்கின்றது. கெட்ட பழக்கமாக இருந்திருக்கின்றது. கற்றுத்தந்த காலத்தில் இருந்து இற்றைவரை ஒழுங்காக பின்பற்றியிருந்தால் ஆன்மீகத்தின் சில பயிற்சிகளை அடைந்திருந்திருப்பேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால் ஆன்மீகத்தின் சில உச்சங்களை தொட்டவர்கள் தன்னடக்கம் காரணமாக தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. தியானமுறைகள், அகத்தவம் என்பவற்றில் மேலோங்க மேலோங்க இயல்பான தன்னடக்கம் வாய்த்துவிடும். பூர‌ண நித்திய அமைதிக்குள் அவர்கள் உவகை கொள்வார்கள்.

2010 ன் சில நாட்கள் வேதாந்திரி மகரிஸி அவர்களின் மனவளக்கலை மன்றத்தினரின் வகுப்புக்களில் கலந்து கொண்டேன். இந்தியாவில் இருந்து வந்திருந்த பேராசிரியர் ஒருவர் அகத்தாய்வுப்பயிற்சி, காயகல்பப்பயிற்சி துரியத்தவம் வரை கற்றுத்தந்து விட்டு போயிருந்தார். அதற்கு முதலே மனவளக்கலை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து தருவித்திருந்தேன். இங்கும் அங்குமாக நடைபெற்ற ஆன்மீக சம்பந்தமான பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொண்டு வீடு வந்தால் அங்கு கற்றுத்தந்தவைகள் எல்லாம் யோகாசனத்தின் சில பகுதிகளே என்பது புலனாகும். ரவிசங்கர் அவர்களின் “வாழும்கலை” சம்பந்தமான வகுப்புக்களில் கூட கலந்து கொண்டிருக்கின்றேன்.

asanaஎல்லாவற்றிலும் அடிப்படையான சில விசயங்கள் யோகாசனம், பிராணயாமம், சில தியான முறைகள் என்பவையாக அமைந்திருந்தன.

இவற்றில் நான் மிகச் சிறந்ததாக ஏற்றுக்கொள்ளவது வேதாந்திரி மகரிஸி அவர்களின் மனவளக்கலை சம்பந்தமான அகத்தாய்வு பயிற்சிகளும், தியானமுறையும் தான். அவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க நடைமுறைப்படுத்தத் தக்க வகையில் அமைந்திருக்கின்றன.

மனதைப்பற்றி சொல்லித்தருகின்றார்கள். மனதை மனதால் ஆராய்வது பற்றி சொல்லித்தரப்படுகின்றது. காயகல்பப்பயிற்சி எனப்படும்( Anti Aging) மிகப்பழமையான பயிற்சிநெறி. இலகுவான முறையில் சொல்லித்தரப்படுகின்றது.

இவற்றை கைக்கொள்வதற்கும் உள்ளகப்படுத்துவதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்பது போல இவற்றை அறிவதற்கும் மேற்கொள்வதற்கும் இறைசித்தம் தேவையாயிருக்கின்றது.

எனக்கு சில விடயங்கள் பிடித்துப்போய் இருக்கின்றன.விலகி விலத்திப் போய் இருப்பவர்களை எல்லாம் நினைப்பில் பதியன் இட்டிருக்கின்றேன்.நெஞ்சார நினைவில் இருத்தி இருக்கின்றேன். “வாழ்க வளமுடன்” என்று இப்போது கற்றுத் தரப்படுவதற்கு முன்பே வாழ்த்தி வணங்கி இருக்கின்றேன்.அன்பை மீறிய ஆயுதம் எதுவும் இருக்காது.

நமது முன்னோர்களின் யோகக்கலையும் பிராணாயாமமும் மேலைத் தேசத்தவர்களால் விரும்பி வரவேற்கப்பட்டு கைக்கொள்ளப்படுகின்றன.அவர்களுக்கு அதன் மகத்துவம் புரிந்திருக்கின்றது.எங்களவர்கள் யோகத்தை ஆன்மிகத்துள் அடக்கி ஒதுக்கி விட்டார்கள்.

வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மன்ற தொடர்புகள்.

இந்திய முகவரி

26, II Seaward Road, Valmiki Nagar
Thiruvanmiyur, Chennai – 600041

SKY Trust UK
‘Wavertree’, 6 Hillcroft Avenue
Pinner
Middlesex HA5 5AW,
United Kingdom,

எனக்கு பயிற்சி தந்த லட்சுமணன் ஐயாவின்  பேட்டி.

*********************************************************************************************


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்