ஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 14, 2013

நினைவழியா நாட்கள்.

நேரம் எதை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.காலம் எதைக் கடந்துகொண்டிருக்கின்றது என்பது தெரியாத வானத்தின் மீதான நள்ளிரவுப் பயணம். விமானப் பயணங்களின் போதுதான் சில அகால சம்பவங்கள் நிகழ்கின்றன. நள்ளிரவில் உணவு உட்கொள்வது உறக்கமின்றி தவித்திருப்பது தொடர்ந்து உட்கார முடியாத அந்தரத்தில் எழுதுவதற்கு முற்படுவது.DSC_0046

ஆனால் வாழ்வு என்பது அதீத சுவாரஸ்யங்கள் மிகுந்தது. பரமபத விளையாட்டுப் போன்றதுதான் வாழ்க்கை. ஏணிகளில் ஏறி கிடுகிடுவென்று மேலே போனால் அடுத்த கட்டத்தில் பாம்பு எங்களை வழுக்கிக் கொண்டு கீழேவிழுத்த காத்திருக்கும். எங்களுக்கு கஷ்டமானபொழுதையும் இஷ்டமானபொழுதாக ஆக்கிக் கொள்ள முனைந்தால் வாழ்வு தினந்தோறும் திருவிழாதான். துன்பத்தின் முனையளவை ருசித்தால் தான் இன்பத்தின் திணையளவு தெரியும் என்று நண்பர் கூறுவார். பரமபத விளையாட்டு எனக்குபழகிப்போயிற்று.

கடந்த ஏழு மாதத்தில் நினைக்கவியலாத சம்பவங்கள் நடந்தேறிவிட்டன.எனது ஆருத்ரா தரிசனத்திற்கு எப்பொழுது நினைவின் நெகிழ்வு என்று சிறுதலைப்பு வைத்தேனோ அன்றிலிருந்து உருகி நெகிழ வேண்டியதாயிற்று. இது உண்மையில் எனக்கு நடந்திருக்குமோ என்றால் கற்பனையில் தான் சாத்தியம் என்பதாக  சுயஅறிவு சொல்லிக் கொள்கின்றது. பரவாயில்லை.

வாழ்வு என்பதேஅதீத  கற்பனைகளின் பிரவாகம் தானே

DSC_0119கற்பனைகளின் பிரவாகம் வானப்பறப்பில் எழுத்தாக வடிகின்றது. விமானம் துருக்கிக்கு மேலால் பறந்துகொண்டிருக்கின்றது. துருக்கியில் நேரம் 2.13 ஆக இருந்துகொண்டிருக்கின்றது. நான் ஜன்னலோர இருக்கையில் மாட்டிக்கொண்டேன். நடுப்பக்கத்தில் இருக்க கிடைத்திருந்தால் எழுந்திருப்பதற்கும் அடிக்கடிஅப்பால் போய் வருவதற்கும் வசதியாக இருந்திருக்கும்.

எனக்கருகில் இருபதுகளை அண்டிய வயதொத்த சுவிஸ் இளைஞன் ஒருவனும் அவனது அவளும். அவள் அவனின் மடியில் சிறுதலையணை போட்டுஉறங்கிக்கொண்டிருக்கின்றாள். அவர்கள் இருவருக்கும் வாழ்வின் தொடக்கபுள்ளியில் கடவுளின் நெருக்கமும்  காதலின் ஆசிர்வதிப்பும் இருந்திருக்கவேண்டும்.

DSC_0135இதே இருபது  எனக்கு…வேண்டாமே. கற்பனை கொள்வதற்கும் கனன்று கொள்வதற்கும் ஏக்கத்து தொனிப்பொருட்கள் ஏராளமிருந்தன.கிடைக்காத ஒவ்வொன்றுமே பெறுமதிமிக்கவைதான்.

சென்றமுறை அவளிடம் சொல்லிவிட்டு சென்ற பிரயாணத்தை “போய்ட்டுவாறன்” என்ற தலைப்பில் பதிவாகஎழுதி இருந்தேன். எங்கேபோனாலும் திரும்ப கட்டுக்கு வந்தாக வேண்டும் மாடு என்பார்கள். இந்த மாடும் அப்படித்தான். நூலில் கட்டிய பட்டம் போன்று சுண்டுபவனின் கெட்டித்தனத்தில் உயரப்பறந்து நூலறுந்தவுடன் ஆடி ஆடி தரையைத் தொடும் நிலைமைதான். அதிக உயரத்தில் இருக்கும் போது தரையில் வீழ்ந்தால் அடிபலமாக இருக்கும். வானத்தின் மீதான பறப்பு ஒவ்வொரு முறையும் அதீத நினைவெழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதை இம்முறைதான் எழுதவாய்த்திருக்கின்றது.

சுவிட்சர்லாந்தின் பள்ளிகளில் கோடைகால விடுமுறைநீண்டது. கோடைகால விடுமுறைகளில் மாத்திரம் தான் பெரும்பாலும் தாயகத்திற்கான பயணங்களை வைத்துக்கொள்வார்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள்.

இம்முறை மாத்திரம் சுவிட்சர்லாந்தில் இருந்துசுமார் முப்பதினாயிரம் தமிழர்கள் தாயகம் நோக்கிய பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள். கோடைகால விடுமுறையின் முதல் வாரத்தில் செல்வதற்கான திகதிகளும் இறுதி வாரத்தில் திரும்புவதற்கான திகதிகளும் கிடைக்காத அளவிற்கு டிக்கெட்டுகள் யாவும் பயணமுகவர்களிடம் விற்றுத் தீர்ந்துவிட்டன.

DSC_0127சிலவேளை போகலாம் என்றமனநிலையில் இருந்துகடைசியில் அடுக்கும் பண்ணிப் புறப்பட்ட எனக்கும் மூன்று நாட்கள் இருக்ககையில் விரும்பியதேதிக்கு டிக்கெட் கிடைத்தது. விமானம் துருக்கிக்கு அப்பால் கருங்கடலை கடந்துகொண்டிருக்கின்றது. நான் இம்முறைசாவகச்சேரிக்கு போகப் போவதில்லை என்ற திட முடிவுடனேயே எனது பயணத்தை தொடக்கிவிட்டிருந்தேன். தேவையில்லாமல் அங்குபோய்…வெறும் மாமரங்கள் சூழ்ந்த இடிந்து வீழ்ந்த வீட்டின் முன்னால் உட்காரந்து.. அந்த காலைப்பொழுதுகளில் அவளின் CHOPPER சிவப்புநிற சைக்கிளின் வருகைக்காக காத்திருப்பது பதின்மூன்று வயதுப் பிரமைகளின் நீட்சிதானே…வேறொன்றுமில்லை.

சாவகச்சேரியில் என்னதான் இருக்கின்றது? ஒருகல்வயலும் ஒரு பெருங்குளம் சந்தியும் இடையில் அந்தப் பிள்ளையார் கோவிலும். காணுமடா… இடையில் எழுதுவதை நிறுத்தி வானப்பரப்பில் தமிழ்ப்பாடல்களின் இசைக்கோர்ப்பை கேட்பதற்காக அதனது இலக்கங்களை அழுத்தினால் “குருவாயூரப்பா“ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

“வா வா என் தேவா

பரிமாறலாம் பசியாறலாம்.

ஏகாந்த இரவும் எரிகின்றநிலவும்”

அதுவரை எனது தாய் தந்தை பெயரில் இருந்த எங்கள் பூர்வீகநிலம் எனதுபெயருக்கு மாறிவந்ததும் அதை பராமரிக்கும் பொறுப்பு என் தலையில் விழுந்ததும் சாவகச்சேரியுடனான எனது தொடர்புகளை முற்றாக அகற்றுவதற்கு தடையாக இருந்தன.சில பல காரியங்களை காரணமாக முன்வைத்து என்னை சாவகச்சேரி போய்வருமாறு பணித்து இருந்தனர் என் பெற்றோர். அதனால் தான் சாவகச்சேரி போகவேண்டி இருந்தது. (உள்ளுரவிருப்பமில்லையாக்கும்)

DSC_0386இலங்கையில் காணப்படுகின்ற மிகப்பெரிய அவமதிப்பு உண்மையாக உழைத்து ஊதியம் பெற விருப்பமில்லாமனநிலை. சும்மா உட்கார்ந்து சோறு சாப்பிடுவதற்கு எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது. இப்படிச் செய்யலாம் அப்படிச் செய்யலாம் என்றுஉபதேசித்தருளும் மனநிலையில் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். ஒற்றைத் துரும்பை தன்கையால் தூக்கிஅப்பால் போடுவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. தன் வீட்டு அழுக்குகளை வீதிவழியே வீசிவிட்டு தன்சட்டையில் பன்னீர் தெளித்துக் கொள்ளும் உயரியபோக்கு அதிகரித்திருக்கின்றது.

யாழ்ப்பாணப் பக்கங்களில் வெளிநாட்டுபணப்புழக்கம் சும்மா இரு சுகம் கிடைக்கும்என்ற மனநிலையை வளர்த்து விட்டிருக்கின்றது. ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று உறவினர்களாவது வெளிநாட்டில் இருப்பதும் அவர்கள் இவர்களுக்குஉதவ வேண்டியகட்டாயத்தில் இருப்பதும் அதிசய வாழ்க்கை ஆதாரம். நாங்கள் ஊரில் இருந்த காலங்களில் இவ்வாறான வனப்புகள் காணக்கிடைக்கவில்லை. புறப்படும் போது எதையாவது செய்ய முனைவதற்கு திட்டமிட்டு அது நடைமுறையில் இயக்கமின்றி போவதான மனநிலையே மேற்கண்டபராவை எழுத காரணமாக இருந்தது.

இப்போது விமானம் மாலைதீவுக்கு மேலால் பறப்பை மேற்கொண்டிருக்கின்றது. மாலைதீவில் ஒன்றரைணி நேரம் தரித்துவிட்டு SRI LANKA சென்றாக வேண்டும். மாலைதீவுக்கும் கொழும்பிற்கும் இடையிலான பிரயாணநேரம் 1.05 மணிநேரம். பறப்பினிடையே அழகழகான குட்டித்தீவுகள். செந்தழல் சூரியன். இலங்கையை நெருங்குகின்றோம் என்ற உணர்வு–அற்புதமாக இருக்கும்.

DSC_0142விமானம் கட்டுநாயக்காவில் தரையை தொட்டிருந்தது. கொழும்பு விமான நிலையத்தில் அதிகநோண்டுதல் இல்லாமல் வெளியே வரமுடிகின்றது. இழுத்தடிக்கும் பழைய தொழில்நுட்பம் வழக்கொழிந்து போய்விட்டிருந்தது. இன்னும் அரைமணிநேரத்தில் வத்தளையை அடைந்துவிடுவேன். வத்தளை பெருநகரமுமில்லா கிராமமும் இல்லாத வனப்பான நகரம். நான் இருக்கும் இடத்தில் இருந்து அருகாமையில் மிகநீண்டஅழகானகடற்கரை. மாலை நேரத்தில் பரபரப்பாகும் கடைத்தொகுதிகள்.

பெரிய பஸ்சில் சாவகச்சேரி போவதென்றால் நீர் கொழும்பு மெயின் ரோடு போய் காத்திருக்க வேண்டும்.சொன்ன நேரத்திற்கு வரமாட்டார்கள். போய் சாவகச்சேரி பிரதான பாதையிலேயே இறங்கி கொள்ள வேண்டும்.பெரிய பஸ்சில் ஒரே வசதி அலுங்காமல் குலுங்காமல் பிரயாணம் செய்யலாம்.பதினான்கு இருக்கை கொண்ட வான்-1400 கட்டணம்-வீட்டில் வந்து ஏற்றிச் செல்வார்கள்.சாவகச்சேரியிலும் வீட்டு வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

DSC_0357மழை சிணுசிணுங்க வத்தளையில் பத்து மணிக்கு வானில் ஏறினால் அதிகாலை நாலு மணி வாக்கில் கலகலவென நிலம் காய்ந்த சாவகச்சேரிப் பரப்பில் கால் வைக்கலாம்.சாவகச்சேரியில் போய் இறங்கிக் கொள்கின்ற தருணங்களில் எல்லாம் கேட்பதற்கும் பேசுவதற்கும் நிறைய விடயங்கள் இருக்கும். அதிகாலை இருட்டுக்குள் வீட்டின் முன்னால் இறங்கி இன்னும் விடிவதற்கு இரண்டு மணி நேரமிருக்கின்ற பொழுதில் பெரிய தாயார் தயாரித்து தந்த சூடான தேநீருக்கு பின்பாக சொன்னவைகள் எதிர் வீட்டை சுட்டி “புதிதாக கல்வயல் ஆட்கள் குடி வந்திருக்கினம்.எங்களுக்க துாரத்து சொந்தமாம்”.அந்த துாரம் எத்தனை கிலோ மீட்டர்கள் என்பதை அறிய ஆவலுற்றேன்.

-இதன் அடுத்த பகுதி இந்த அம்மாவின் நினைவுகளாக வரும்.

“அன்பு” என்ற தலைப்பில்
மிகச் சிறிய
கவிதை கேட்டார்கள்.

“அம்மா” என்றேன் உடனே.

அம்மாவே கேட்டிருந்தால்
இன்னும் சின்னதாக சொல்லியிருப்பேன்.
“நீ” என்று.

*************************************************************


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்