ஆருத்ரா எழுதியவை | ஏப்ரல் 17, 2012

SWISS+ புது வருடம்+ நான்.

சித்திரை வருடப்பிறப்பு பற்றிய சிதறலான எண்ணங்கள். தை மாதத்தின் முதல்நாளே வருடப் பிறப்பாகுமென ஒரு சாராரும், இதுவரை இருந்த இராசியிலிருந்து மேட இராசிக்குள் புகும் நாளே வருடப்பிறப்பாகுமென மறுசாராரும் கருத்துக்களால் கட்டிப் புரள்கையில் , அடியேன் அது பற்றிய பிரக்ஞை இன்றி வருடம் முழுவதும் பண்டிகைகளால் நிறைந்திருக்கக் கடவது என இரு சாராருக்கும் காற்றிலே கனவு விதைத்தேன்.

பின்னே என்னவாம்? புலம்பெயர்ந்து வந்ததில் இருந்து இயந்திரமயச் சூழலில் தனித்தனித் தீவுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழர்கள் ஒன்று கூடி மகிழ்வெய்தும் காலம் பண்டிகை நாட்களாகும். கோவிலுக்கு போவது கூட ஆத்மார்த்த ஆன்மிகம் என்று ஏதுமில்லையாயினும், எமது மக்களுடன் ஒன்றாகக் கலத்தலை செய்யும் ஆன்மிகம் இதுவாகுமென மனம் சமாதானம் கொள்கின்றது.

இந்த புது வருடம் நந்தன வருடம். தமிழ் வருடங்களை அறுபதாகக் கொண்ட சுழற்சியில் நந்தன வருடம் இருபத்தாறாம் வருடம். சென்று கழிந்தது கர வருடம். நான் பிறந்தது பிங்கல வருடத்தில். இத் தரவுகளை வைத்துக் கொண்டு எனது வயதை நிறுவ முற்படுவது தேவையில்லாத விடயம்.

சிறு வயது புத்தாண்டு நாட்கள் கனவுகளால் நிறைக்கப்பட்டவை. பண்டிகை நாட்களே எமது நிர்வாணங்களை மறைக்கும் அணிகலன்களை அளிக்கும் திருநாட்களாக மிளிர்ந்தன. தீபாவளிக்கும் வருடப் பிறப்பிற்கும் மாத்திரமே எங்களுக்கு புதுத் துணி கிடைக்கும். பண்டிகை நாட்களின் பிற சம்பிரதாயங்களால் அச்சிறுவயது ஆதாயப்படாமல் போன நாட்கள் அவை.

முதல் நாள் முட்டி மோதி வாங்கி வைத்திருக்கும் புதுத்துணியின் வாசம் வேறெந்த சுகந்தங்களை விடவும் உயர்வானது. காலையில் சில்லென்ற கிணற்று நீரில் வெடவெடத்து நடுங்கிக் குளிக்கும் துயரம் புத்தாடை அணிவதில் மறந்து போகின்றது.

அவ் ஆடை அணிதலின் FASION SHOW அருகிலிருந்த உறவினர் வீடுகளுக்கு அணி வகுப்பதன் மூலம் நடந்தேறுகின்றது. கண்களே ஆயிரம் மொழி பேசக் கூடிய வல்லமையை உவந்தளித்திடும் அத் தருணங்கள். எல்லா உறவினர் வீடுகளுக்கும் செல்லும் படலம் அத்தை வீட்டில் முடிவுறும். அத்தை வீடானது எங்கள் சிறு வயது குருகுலம். சிற்றுண்டிகள், தேநீர்கள் என வயிறு நிரப்பி டின் வைத்து விளையாடும் பிள்ளையார் விளையாட்டில் முடிவடையும். -இது அன்றைய நினைவுச் சிதறல்.

முதல் நாளே மருத்துநீர் வாங்கி வைக்க வேண்டியதாயிற்று. மூல நட்சத்திரத்து, மகர நட்சத்திரத்து மாந்தரெல்லாம் கட்டாயம் மருத்துநீர் வைத்து நீராட வேண்டும் என முன்னர் சென்ற கோவிலில் புரோகிதர் பீதியைக் கிளப்ப ZURICH திரும்பிய நாங்கள் இவ் விடயத்தை கவனமாக கையாண்டோம். மருத்துநீர் கோமியத்தலானது என்று எங்கோ படித்த ஞாபகத்தில் சென்ற வருடத்தில் இருந்து நான் வாயைத் திறந்து வைத்து குளிப்பதில்லை. மாட்டின் கோமியம் மாடுகளுக்கே சொந்தம்.

காலுக்கும், தலைக்கும் அறுகம்புல் வேப்பிலை என கோவிலில் தந்து விட்டதில் காலை பள்ளி செல்லும் என் சின்னமகள் முழுவதையும் எடுத்துக் கொண்டதில் எனக்கு கிடைத்தது ஒற்றை வேப்பிலை. ஆனாலும் சம்பிரதாயங்களை விட்டுக் கொடுக்க மனமில்லை. சம்பிரதாயங்கள் ஏதாவது நல்ல நோக்கத்திற்காக உருவானவை.-நம்பிக்கை! நம்பிக்கை!!

மற்றவர்கள் வேலைகளிற்கும், பாடசாலைகளிற்கும் சென்று விட கோவிலிற்கு தனித்து பயணமானேன்.சூரிச் சிவன்கோவில் சூரிச் நகருக்கு மிக அண்மித்த ஆலயம் இது. சூரிச் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து 5 கி.மீ தூரத்திலும், சூரிச் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் தலை தட்டும் தூரத்திலும் கோவில்
அமைந்திருக்கின்றது.

புலம்பெயர்ந்த தேசத்துக் கோவில்களுக்கு என்று தொன்மை ஏதும் கிடையாது. பாண்டிய சோழர் காலத்தை சேர்ந்தவை என்ற கல்வெட்டுக்களோ, இத்தலத்திற்கான மானியம் வழங்கிய மன்னர்களின் பெயர் பொறித்த பட்டயங்களோ கிடையாது. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் சுவிஸ் இன மக்களுக்கு தமிழர்கள் தொந்தரவளிக்காத இடத்தில் (ஒதுக்குப் புறம்) தொழிற்பேட்டைக்குள்ளான கட்டிடத் தொகுதி ஒன்றில் கோவில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் பரிகசிப்பு ஏதும் கிடையாது.

ஆனாலும் நிறைய சிரமங்களுக்கிடையில் கோவில் பணியாளர்களின் சீரிய செயலாற்றலில் கோவில்கள் தமிழர்களின் பாரம்பரியத் தொன்மங்களை காத்து வருகின்றன- என்பதில் ஐயமற்ற தெளிவு வைத்துள்ளேன். ஈழத்தில் நிராதரவான சிறுவர்களுக்கு உதவியளிப்பதிலும், மக்கள் நலன்சார் செயற்பாடுகளிலும் கோவில்கள் துணை நிற்கின்றன. கோவிலில் மந்திர உச்சாடனம் செய்து வழிபட காயத்ரி மந்திரங்களடங்கிய புத்தகத்தில் இருந்து நவக்கிரக வழிபாட்டிற்கான பகுதியை எடுத்து சென்றிருந்தேன். நவக்கிரக வழிபாட்டில் இப்பீஜ மந்திரங்களை உச்சாடனம் செய்து வழிபடுவதில் சிறப்பான பலன்கள் இருப்பதாக என் வாசிப்பிற்குட்பட்ட புத்தகங்களில் இருந்து அறியக்கிடக்கின்றது.

யோகாசனம் பயின்ற காலத்திலிருந்து கும்பிடும் முறையிலும் மாற்றம் வந்திருக்கின்றது. கால் பெருவிரல்கள், குதி என்பவை இணைய இரு பாதங்களையும் மிக நெருக்கமாக வைத்திருந்து இறைவனை சேவித்தல் மனத்திற்கு பிடித்தமானதாகவும், கால்களைப் பரத்தி வைத்து கும்பிடுதல் இறைவனை ஏளனப்படுத்துவதாகவும் ஆகியிருக்கின்றது.

சிவன் கோவிலில் அன்று எண்ணிறைந்த பக்தர்கள். கார் பார்க்கிங் முழுதும் நிறைந்து போய் தூரத்தில் நிறுத்தி வைத்து நடந்து வரும் நிலைக்கு உள்ளானது.

சிவகாயத்ரி மந்திரம்

ஓம் சிற் சபேசாய வித்மஹே சிதாகாசாய தீமஹி
தந்நோ சபேசப் ப்ரசோதயாத்

மாலையில் சூரிச்சில் இருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள Dürnten என்ற கிராமத்தில்(DORF) எழுந்தருளியிருக்கும் விஸ்ணு துர்க்கை அம்மன் கோவிலுக்கு என் வீட்டு கோந்து, வாண்டுகளுடன் சென்றிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சூரிச்சிற்கு மிக நெருக்கமான இடத்தில் இருந்த இவ் ஆலயம் தற்போது இடம் பெயர்ந்து சொந்தக் கட்டடத்திற்கு மாறியுள்ளது. இவ் ஆலயத்தில் பூஜை புனஸ் காரங்கள் இரண்டு, மூன்று புரோகிதர்களால் நிறைவேற்றப்படுகின்றன.

தேவாரப் பண்ணிசை, பஜ‌னை வழிபாடுகளும் சிறப்பாக நடந்தெய்தி வருவது கண்கூடு. மாத விலக்கான நாட்களில் பெண்கள் கோவில் காரியங்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டியதில்லை- என இவ் ஆலயத்தின் பிரதமகுரு சரவண பவானந்த குருக்கள் ஏதோவொரு தருணத்தில் கூறியது என் ஞாபகத்தில் வந்து போகின்றது.

புது வருடத்தின் HI LIGHT

இவ்விரு கோவில்களில் வழங்கப்பட்ட பிரசாதம் (உணவு). இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? என்ற MIND VOICE என்னுள்ளே ஒலிக்கின்றது. தனுசு இராசிக்காரர்களுக்கு வரவு 4 என்றும் செலவு 14 என்றும் பஞ்சாங்கத்தில் இருப்பதாக பிரதம குருக்கள் தனது பிரத்தியேக உரையில் தெரிவித்திருந்தமை ஏற்கனவே சிக்கி சின்னாபின்னப்பட்டிருக்கும் என்னை கலவரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடவுளே என்னைக் காப்பாற்று!

துர்க்காதேவிக்கான காயத்ரிமந்திரம்.

ஓம் காத்யாயநாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்.

Facebook Contact. ARUTHRA THARISANAM

ஆருத்ரா எழுதியவை | ஏப்ரல் 12, 2012

கால்நடைத் தமிழன்.

உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங்கில எழுத்துக்களால் நிரப்பப்பட்டிருக்கும் ஆங்கில, ஜேர்மன் புத்தகங்களுக்குள் ஆங்கிலப் புத்தகங்களை தனியே வேறுபடுத்தி அறியும் அளவுக்கே ஆங்கில அறிவு இருந்து கொண்டிருகிறது. போதல் என்பதற்கான GO வை கதைக்கும் தொனியில் வைத்தே நிகழ்கால, இறந்த காலங்களிற்கு பாவிக்கும் வகையிலான அறிவு வாய்க்கப் பெற்றிருப்பது நான் செய்த புண்ணியங்களில் ஒன்று.சார்ல்ஸ் டிக்கென்சும், எமிலி டிக்கின்சனும் என்னால் வாசிக்காமலே போனார்கள்.

திரும்பியும் உண்மையைச் சொல்வதானால் எனக்கு வாய்த்த ஆங்கில ஆசான்களோ, பெற்றோரோ, மற்றோரோ இதற்குக் காரணமில்லை.ஆங்கில ஆசான்களின்  திணிப்புத்திறனும், எனது ஏற்புத்திறனும் சமஅளவில் வாய்க்காததே இதற்குக் காரணம் என அறியக் கிடக்கின்றது.

படுத்துக் கொண்டு யோசனையில் ஆழ்கையில் ஒன்று மாத்திரம் தெளிவாகப் புரிகின்றது. சாவகச்சேரியின் மூன்று திசைகளிலுமுள்ள ஆங்கில ஆசான்களிடம் ஆங்கிலம் கற்க நான் அனுப்பட்டிருக்கின்றேன் என்பதுதான் அது. சரசாலையில் கனகசபை மாஸ்ர‌ரிடமும் , எங்கள் வீட்டிற்கு வடக்கால் சாவகச்சேரி POST OFFICE பக்கத்திலிருந்த குலம் மாஸ்ர‌ரிடமும், நகரிலிருந்து தெற்கால் நுணாவிலில் இன்னொரு ஆசிரியரிடமும் எனது சிறுபராயம் ஆங்கிலம் கற்றலில் கழிந்தது.

மிகுந்த பிரயாசையுடன்தான் கற்பித்தலும், கற்றலும் தொடர்ந்தது. எனது உள்வாங்கும் திறனின்றி ஆசிரியர்களின் பிரயாசைகள் காற்றிலே கரைந்தன. ஆங்கிலம் கற்றதனால் ஆய பயன் எனது நண்பர்கள் வட்டம் பெருகிப் போயிற்று. ஒரு ஆசிரியரிடம் பதினைந்து பேர் என்றால் மூன்று ஆசிரியர்களிடமும் பெருக்கிப் பார்க்கவும்.

ஒவ்வொரு வகுப்பும் கலவையான மாணவர் கூட்டத்தால் நிரம்பி வழியும். பன்னிரண்டாம் வகுப்புக்காரனும் பாடசாலை விட்டு அகன்றோரும், இளைய சிறிய வகுப்பினரும் என கலவை காக்டெயில் அது.

சரசாலை கனகசபை மாஸ்டரிடம் போன காலங்கள் மிக்க மகிழ்ச்சி அளிப்பவை. போகின்ற வழியில் முருகமுர்த்தி கோவில், பின்னரான பெருவெளி , பயமூட்டும் ஏகாந்தப் பரப்பில் பெயர் தெரியாத மரத்தின் பிரமாண்டத்தின் கீழ் வீற்றிருக்கும் வைரவர் கோவிலென ரசனை மிகுந்த பயணம். கனகன்புளியடி சந்திக்குப் போகாமல் வரும் வழியால் கனகசபை மாஸ்டர் வீட்டிற்குப் போக குறுக்கு வழியுமிருந்தது. ஒரு சைக்கிள் மாத்திரம் விலத்திச் செல்லக் கூடிய ஒற்றை வழி.

காலாகாலத்திற்குமான ரசனை வீதிவழியே வீசப்பட்டுப் போனதால் கற்றுத் தரப்படும் பாடங்களின் பால் அசமந்தப்போக்கு அதிகமாயிற்று. கனகசபை மாஸ்டரிடம் ஆங்கிலம் பயில்பவர்கள், அவரினால் பரிந்துரைக்கப்படும் ஒரு ஆங்கில வழிகாட்டிப் புத்தகத்தை வைத்திருக்க வேண்டும். வழக்கமான புத்தகக் கடைகளில் அது கிடைக்காது. சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கக் கிளையொன்றிலேயே அப்புத்தகம் வாங்கக் கிடைத்தது. மிகத் தடிமனான அப்புத்தகம் எனக்குப் பயன்பட்டது தூக்கிக் காவிச் செல்வதற்கே.

வீதியின் ஒருபக்கத்தில் அவரின் வீடும் மறுபக்கத்தில் பூட்டப்பட்ட கடையொன்றின் உட்பக்கத்தில் வகுப்புமாக நடந்து வந்தது.

              மாலை நேரங்களிலும்,     சிலஇடை     நேரங்களிலும்   வெள்ளிக்      கிண்ணமொன்றில் சுடச்சுட    ஆவி  பறக்கும் நெருக்கமான வாசனை கொண்ட பால் அவரின் மகளினால் அவருக்கு கொண்டு வந்து தரப்படும். அவ்வேளைகளில் எல்லாம் அம்மாவும், அடுக்களையும் ஞாபகத்தில் வர மனப்பால் குடிப்பேன். வேறு என்னதான் செய்வது. பின்பு வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும். முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் என இரசனை உயர்வடைந்தது.ஆங்கிலம் தாழ்ந்து போயிற்று.

சற்றேறக்குறைய இதேவகையான சூழலுடன் பாடசாலை போவதற்கு முன்னான பொழுதில் குலம் மாஸ்   டரிடம் ஆங்கிலக்கல்வி. அளவாக நறுக்கி விடப்பட்ட தாடி வைத்திருந்த JOHN ABRAHAM போன்ற தோற்றம். படித்த பொழுதுகள் எல்லாம் தூக்கக் கலக்கத்திலான பொழுதுகள். என் தூக்கத்தைக் கெடுத்த அம்மாவும், இறைவனும் சபிக்கப்படுவார்கள். எனக்கு எரிச்சல் ஊட்டுவதற்காகவே அவரின் மகளும் கிண்ணத்தில் பால் கொண்டு வருவார். மனப்பால் குடிக்க கற்பனையில் எங்கள் அடுக்களை ஏகிவிடுவேன்.

இவ்விடத்தில் பகிர்வை வாசிப்பிற்கு உட்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது எனது தனிப்பெரும் கவனமெல்லாம் ஆங்கிலத்தில் கிடையாது. ஆசிரியர்களுக்கு கொண்டு வரப்படும் பாலிலும் , இன்ன பிறவிடயங்களிலும் கவனம் சிதறடிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

பேச்சுச்சுதந்திரம் எல்லை மீறிப்போனது. சாப்பாட்டிற்கு முன்னர்,பின்னரான மாத்திரைகளென வகுப்பிற்கு முன்னர் வகுப்பிற்கு பின்னர் எங்கள் உரையாடல்கள் தொடர்ந்தன. உரையாடல்கள் எதுவும் பாடத்தில் சந்தேகம் கேட்பதாக ஆகிப்போகாமல் விட்டது நான் செய்த துரதிர்ஸ்டம். பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என சொலவடை சொல்வார்கள். என்னிடத்தில் ஆங்கிலப் பேச்சும் கால்நடையாகப் போனது நிகழ்கால சோகம்.

எனக்குத் தெரிந்து ஆங்கிலம் கற்ற நட்புவட்டத்தில் இளங்கோ சாவகச்சேரியில் கடை வைத்திருக்கின்றார். நிர்மலன் கனடாவில் காலூன்றி எனக்குத் தெரியாத ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுகின்றார். அண்மைய அதிகாலை ஒன்றில் ஆங்கில இலக்கியத்தின் சாராம்சத்தை என்னோடு தமிழில் பகிர முற்பட்ட பொழுதில் அடித்தளம் இட்ட கனகசபை மாஸ்டர் அவருக்கு கடவுளாக தென்பட்டிருப்பார். தொடர்ந்த உரையாடலில் நான்” உம்” கொட்டிக் கொண்டிருந்தேன் காலத்திற்கும் கடவுளிற்கும். வேறு என்னதான் செய்வது?

விரிந்த எண்ணச் சிறகுகள் பாடசாலை ஆங்கிலக் கல்வி குறித்தும் அளப்பரிய நினைவுகளை மீட்டித் தருகின்றது. நளாயினி டீச்சர் எங்கள் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான ஆங்கில ஆசிரியை. அவரின் வட்ட முகமும், பொட்டு நிலவும் நினைவுப் பெருவெளியில் ஏகாக்கிரம் செய்கிறது.

அப்போது எங்கள் வகுப்பானது சுரேந்திரன் என ஒரு பெயரில் இரண்டு ஆன்மாக்கள் உலவிய இடம். அதில் ஒரு ஆன்மா எனது பக்கத்து இருக்கையில் இருந்து கொண்டு நான் எழுதுதலை பார்த்தெழுதும் கைங்கர்யம் செய்து வந்தது. எனது எழுத்துக்களை எனது கை மறைக்கும் தருணங்களில் எல்லாம் என் கையை அப்பால் எடுத்து வைக்கும் அளவிற்கு உரிமை கொடி கட்டிப் பறந்தது. எனினும் தொடர்ந்த கையை எடுத்து அப்பால் வைக்கும் செய்கைகள், எனக்கு ஆகாத பொழுதொன்று அவருக்கு கஸ்டமாகப் போயிற்று.

அன்று நளாயினி ஆசிரியை எங்கள் குடும்பம் பற்றி எழுதச் சொன்ன “சிறு வரைபு “எழுதிக் கொண்டிருந்தேன். பலத்த சிந்தனை செறிவாக்கலில் என் வரைபு தொடர்ந்து கொண்டிருந்தது. தற்செயலாக எனது கை அவருக்கு மறைத்திருக்க வேண்டும். எனது கையை அப்பால் எடுத்து வைத்து அயல் வளவில் (அவருக்கு அயல்வளவு) பார்த்து எழுதுதற்கு தண்டனை தர நினைத்தேன். எனது குடும்பத்தில் அப்பா, அம்மா, இரண்டு சகோதரர்கள் என எழுத விழைந்த சிறுவரைபில் அப்பாவிற்கு முன்னால் TWO என எழுதி வைத்தேன்.

மிக விரைவாகப் பார்த்தெழுதி, மிக விரைவாக ஆசிரியையிடம் காட்டச் சென்றவருக்கு ஆசிரியையின் கேள்வி அதிர்ச்சி அளித்திருக்க வேண்டும்.

” உனக்கு ரெண்டு அப்பாவா?”

அந்த நண்பர் என்னை முறைத்த முறைப்பு இருக்கின்றதே! காலத்திற்கும் மறக்காதது. நான் எனது TWO வை அழிரப்பர் கொண்டு அழித்து விட்டது வரலாற்றில் நீங்காத இடம் பிடித்து விட்டது. அந்த நண்பருடன் பின்னரான உறவுகள் முறுகல் நிலைக்கு பலம் ஊட்டுவதாகவும், பிரிவிற்கு வழி சமைப்பதாகவும் இருந்தன.

இவ்விடத்தில் நீங்கள் கவனிக்க வேண்டியது ஊட்டுவது, சமைப்பது என சாப்பாட்டின் மீதான எனது ஆர்வம் வெளிப்படுகின்றது. ஆங்கில அறிவின் மீதான தாகம் அல்ல. தாகம்! அட மீண்டுமா?

மீண்டும் ஒரு பிறப்புளதேல் இங்கிலாந்தின் குக்கிராமத்தில் பிறந்து கனகசபை மாஸ்டரிடமும், குலம் மாஸ்டரிடமும் பயிலாமல் தமிழை தாய்மொழியாகவும், ஆங்கிலத்தை பேச்சுமொழியாகவும் கொண்டு ஆங்கில இலக்கியத்தையும் பருக விளையும் நான் கால்நடைத்தமிழன்.

 

Facebook.Aruthra.tharisanam

ஆருத்ரா எழுதியவை | ஏப்ரல் 5, 2012

K.S.ராஜா- RADIO CEYLON

மனிதப் பிறவி மகா உன்னதமானது. உயிர் பிறப்பின் இறுதிநிலை மனிதப்பிறப்பாகுமென சொல்லிச் செல்கிறார்கள், இறுதி இருப்பை உய்த்துணர்ந்து கொண்டவர்கள். துன்பத்தை பரிசளிப்பவர்கள் எம்மில் ஏராளமானோர்கள் இருக்கின்றார்கள். நாம் கேட்காமலேயே துன்பத்தை பரிசளிப்பவர்கள் அப்பால் சிரித்து மகிழ்ந்து கொள்கின்றார்கள். அகமும் புறமும் மலர மகிழ்ச்சியை பரிசளிப்பவர்கள் மானுடத்தின் மகத்துவங்கள். எம்முடனே நடமாடிச் சென்றவர்கள், மகிழ்ச்சியை பரிசளித்தவர்கள் எனில் இறுதி இருப்பை சுகப் பதிவாக்கிய மானுட மகானுபாவர்கள்.Image இயந்திர மயமாகிவிட்ட விஞ்ஞான உலகில் மானுடம் குறித்த தேடல்கள் அரிதானவை. காலத்தின் காலமாதலுக்கு உயிர் சேகரித்த உன்னதமானவர்கள்; வறட்சிப் பிடிப்பின் நீர்த்திவலைகள். அடித்து அழவைக்க முடியும் பிடித்து வைத்து மகிழ்ச்சிப் பரப்பிலாழ்த்த முடிந்தவர்கள் வெகு சிலரே.

K.S ராஜா கனவிருப்பின் சாட்சி. மறைந்த மானுடன். வானொலிகளே வாழ்வாகிப்போன என் சிறு பராயத்து வாழ்க்கைச் சூழலை கனவிலேற்றி மகிழ்ச்சிப்படுத்திப் போனவன். கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற இயற்பெயரும் K.S ராஜா என்ற கனவுலகப் பெயரும் தரித்த மானுடனால் மகிழ்வெய்திக் கொண்டவர்கள் ஏராளமானவர்கள்.

இலங்கை வானொலி இந்து மகா சமுத்திரத்தில் கடல் கடந்த மகிழ்வின் பிரவாகம். இன்று பல தொலைக்காட்சி அலைவரிசைகள் , ஆயிரம் வானொலிகள் என வலம் வந்தாலும், என்னை மகிழ்ச்சிப்படுத்தியவை எழுபதுகளில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவை.

இப்போது கேட்டாலும் எந்த அறிவிப்பாளரைக் கேட்டாலும் மறைக்காமல் மறக்காமல் சொல்லும் பெயர்கள் அறிவிப்புத்துறையில் கோலோச்சிச் சென்றவர்கள் மயில்வாகனன் மற்றும் K.S ராஜா
வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் திரைப்பட ரசிகப் பெருமக்களுக்கு எனது அன்பு வணக்கங்கள் என்று அழைத்தபடியே வரும் K.S ராஜா இலங்கை தமிழ் பேசும் மக்களின் உறவல்லாத உறவினர். வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகன். கல்வி கேள்விகளால் மானுடம் மறுசீரமைக்கப் படுவதாக ஆன்றோர்கள் கூறியிருப்பின் ஆசான்களால் தரப்பட்ட அறிவிற்கு நிகரானதே கேள்விகளால் தரப்பட்ட அறிவும் என்றெண்ணி வானொலி பால் மனது இன்புற்றிருக்கின்றது.

பொழுது போக்கு சாதனங்களில் வானொலி மட்டுமே வாழ்க்கைக்கு நெருக்கமானதாக தோன்றுகிறது. தொலைக்காட்சி பார்ப்பது ஏதோ மனதிற்கு தொலைவானதாக ஆகிப்போயிருக்கின்றது. தொலைக்காட்சி ஓரிடத்தில் உட்கார்த்தி வைத்து வேலைகளையும் செயற்பாடுகளையும் முடக்கி காலத்தை வீணடிப்பதாய் ஆக்கிவைத்திருக்கின்றது. வானொலி கேட்டல் இப்போது மாத்திரமல்ல எப்போதும் உவப்பான விடயம்.

இலங்கை வானொலியானது காலை திருப்பள்ளி எழுச்சியில் தொடங்கி; பொங்கும் பூம்புனல் பாடசாலை செல்லும் நேரமாகவும், மதியத்தில் ஒருபடப்பாட்டு மீண்டும் பாடசாலை செல்லும் நேரமாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் கதம்பம் என்ற பல்சுவை நாடக அரங்கம் காலை பத்து மணியைக் குறித்து நிகழ்ச்சிகளைக் கொண்டு காலம் அளக்கும் கருவியாக மாறிப்போனது.
Image

கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரனான மதுரக்குரல் மன்னன் K.S ராஜா காரை நகரை பிறப்பிடமாக கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டதாரி. வானொலி அறிவிப்பு பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் குரல்வளத்தேர்வில் மயில்வாகனன் பாணியை பின்பற்றிக் கொண்ட சூழலில் தன் தனித்துவப்பாணியைக் கொண்டு பின்னாட்களில் குரல்வளத்தேர்விற்கு தன்பாணியை முன்னுதாரணம் கொள்ளச் செய்தவர் K.S ராஜா.

கனத்த சாரீரமும் மெலிந்த சரீரமும் கொண்ட K.S ராஜா வை தென்னிந்திய இதழ்கள் பேட்டி கண்டு வெளியிட்டன. ஏற்கனவே குரலால் அறிமுகமான அவருக்கு இவை வானளாவிய அங்கீகாரம்.

இரவின் மடியில் என்ற நிகழ்ச்சி வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் போதெல்லாம் ஆசை நெஞ்சமே என்ற பாடல் அவருக்கு ஆத்மார்த்தமாக இருந்திருக்கவேண்டும். அடிக்கடி இடம் பெறும். இன்ன பாடல்களை அவர் ஒலிபரப்புவார் என்றெண்ணி அதற்காகவே கேட்டு ரசித்த கூட்டம் , திரைப்படங்களின் விளம்பரங்களில் கைக்கொள்ளும் உத்திகளுக்காகவே கேட்டு ரசித்த கூட்டம், விநோதவேளை –ஒரு நிமிடம் உரையாடும் நிகழ்வில் கம்பீர அறிவிப்பிற்கும் கலகல உரையாடலுக்கும் வானொலியை வலம் வந்த கூட்டம் என ஏராளமான ரசிகர்கள் அவருக்கு.

நீயா பட விளம்பரத்தில் ஸ்ரீப்பிரியா கதறிக் கேட்கும் ” என்னை விட்டிட்டு போகாதீங்க ராஜா” இதை விளம்பரத்தின் இறுதியில் வைத்து போகவில்லை நேயர்களே மீண்டும் அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நிகழ்ச்சியில் சந்திப்போம் என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம்.

இலங்கை திரைப்பட தணிக்கை குழுவில் பணியாற்றிய K.S ராஜா இலங்கையில் திரையிடப்படும் படங்களுக்கு தன் விளம்பர சாகசத்தால் திரையரங்குகளுக்கு கணிசமான வர்த்தகப் பங்காற்றிய பங்காளி.
வானொலி அறிவிப்பிற்கு இடையிடையே நேரம் சொல்வதற்கு பாவிக்கும் மணி ஒலியைக் கூட பகல் இரவென பாகுபடுத்துவதற்கு சிறிய அழுத்தமான ஒலிக்குறிப்பாய் கையாண்டவர் K.S ராஜா என IBC யில் பணியாற்றிய திருநாவுக்கரசு விக்னராஜா சொன்ன ஆச்சரியத் தகவல்.

யாழ் முற்றவெளி அரங்கில் K.J .ஜேசுதாசின் இசை நிகழ்வு. மேடை அறிவிப்பாளர் K.S ராஜா பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். அற்புத இசை நிகழ்வும் அற்புத மேடை அறிவிப்பும் நிகழ்விற்கு உயர் அந்தஸ்து. தமிழும் ஆங்கிலமும் கலந்து கட்டிய அவ் அறிவிப்பை கேட்க இங்கே அழுத்தவும்.

இப்போது கேட்கிறதா ஏப் பாடல் ஒன்று. 1966 இல் வெளியான செம்மீன் இலங்கை திரைப்பட வரலாற்றில் நீண்ட நாட்கள் ஓடிய மலையாள திரைப்படம். இசை சலீல் சௌத்ரி. பின்னாட்களில் பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் படத்திற்கு இசையமைத்தவர். செம்மீன் படத்தில் இடம்பெற்ற” கடலினக்கர போனோரே” திகட்டாத தேனிசை. K.S ராஜா செம்மீன் படத்தில் இடம்பெற்ற K.J .ஜேசுதாசின் பாடல் குறித்து அறிவிப்பில் சொன்னவைகள் உபரித் தகவல்.

இசைச் சிகரமும் அறிவிப்பு அகரமும் இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும். பின்னாட்களில் வானத்து நட்சத்திரம் தரையிறங்கிய பொழுது வந்தேகியது. தடை செய்யப்பட்ட பாடலொன்றை ஒலிபரப்பியதாக K.S ராஜாவும் அவருடன் இணைந்து கட்டுப்பாட்டாளரும் இடைநிறுத்தப்பட்ட பொழுதுகள் வடமாகாணத்தின் சிறு நகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் தோறும் அவரின் அறிவிப்பில் பல மேடை நிகழ்வுகள் நடப்பதற்கு வழி செய்து கொடுத்தன. அந்தப் பொழுதுகளே காதுகளால் கேட்ட K.S ராஜாவை கண்களால் பருகச் செய்த புதிய ஏற்பாடு.

ஊர் தோறும் நடைபெற்ற ராஜாவின் நிகழ்வுகள் இரு பெரும் உண்மைகளை உணர்த்தியது. பளைப் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு நானும் நண்பர் ஒருவரும் சென்றிருந்தோம்.

K.S ராஜாவின் குரலை வைத்துக்கொண்டு இதற்கு முன்னர் அவரை பார்த்திராத நான் அவரைப் பற்றி அதீதத்திற்கு விம்பம் ஒன்றை உருவாக்கி வளர்த்து வந்தேன். மிகக் கம்பீரமான, எடுப்பான ,அகலமான, உயரமான என்ற உடல்வாகு குறித்த கற்பனைகள் அவை. இந்த விம்பவிருத்தி அவரைக் கண்ட கணத்தில் உடைந்து போயிற்று. நிறுத்தி வைக்கப்பட்ட ஒலிவாங்கியின் உயரத்திற்கும் குறைவான உயரத்தில் மெலிந்த உடல்வாகுடன் தென்பட்ட அவர் அடுத்து வந்த சில நிமிடங்களில் வானின் காற்றுப் பரப்பை தன் குரலால் வசமாக்கி………நான் பழையபடி மீண்டு வந்தேன் இவ்வுலகிற்கு. குரலை வைத்து எடை போடாதே.
அடுத்த உண்மை. இரண்டு நிமிடம் உரையாடும் நிகழ்ச்சியில் நீண்ட மௌனம் சாதித்து நிகழ்ச்சியில் இருந்து விலத்தி விடப்பட்ட நபரொருவர் K.S ராஜா தன்னில் மட்டும் வன்மம் பாராட்டி நடந்து கொண்டதைப் போன்று மேடையை விட்டு K.S ராஜா கீழ் இறங்கி வரும்போது தான் யாரெனக் காட்டுவதாக மேடையின் கீழ் நின்று கலவரம் செய்தார். பளையின் தென்னந்தோட்டம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னர் அந்த ஆசாமி தென்னையிலிருந்து இறக்கியதை அதிகம் உட்கொண்டிருக்க வேண்டும். அவரின் கூச்சல் அளப்பரியதாக இருந்தது. பின்னர் K.S ராஜா பத்திரமாக மற்றவர்களால் பார்த்துக் கொள்ளப்பட்டு நிகழ்ச்சி இறுதிவரை சுவாரஸ்யம் குறையாது நடந்து முடிந்தது.

பின்னாட்களில் K.S ராஜா அவ்வாறான நபர்களுடன் சைக்கிளில் பிரயாணிப்பதையும் வீதிகளில் உலா வந்ததையும் நெருக்கத்தில் அவதானித்திருக்கின்றேன். வானத்து நட்சத்திரம் தரையிறங்கி வந்ததான தோற்றம். அடுத்தவர்களின் காலடிகளால் மிதிபட்டு விடக்கூடாது. K.S ராஜா மண்ணில் மறைந்த நட்சத்திரம்.

இந்த பதிவிற்கான படங்கள் ஒலிக்குறிப்புகள் யாழ் சுதாகரின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. நன்றி;- யாழ் சுதாகர். K.S ராஜா வின் மறைவின் பின்னர் திருமதி.ராஜேஸ்வரி சண்முகம் தொகுத்தளித்த அஞ்சலி இங்கே.

தொடர்பு:  aruthra.tharisanam@hotmail.com

ஆருத்ரா எழுதியவை | மார்ச் 30, 2012

கொன்னே புடுவேன்.

ஒரு   புதன்கிழமை மதியநேரம் ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சி ஒன்றில்” டொக்டருடன் பேசலாம் “என்றநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.மிகவும் பயனுள்ள    நிகழ்ச்சியாக அமைந்தது மற்றவர்களுக்கு. பலபேர் தங்கள் வியாதிகளை கூறி அதற்குரிய வியாக்கியானங்களை மருத்துவரிடம் இருந்து    கேட்டுக்கொண்டிருந்தார்கள்.     மருத்துவரும்     சாந்தமாகவும் பொறுமையாகவும் முகத்தில் புன்னகை ஏந்தி பதிலளித்துக் கொண்டிருந்தார். தங்கள் வியாதிகளை சொஸ்தமாக்கும்படி பலபேர் வேண்டிக் கொண்டார்கள்.Image
சொ ஸ்த்தம்- சுகமாக்குதல் நன்றி-பைபிள்.

மருத்துவர் கோட் சூட் அணிந்து டை கட்டிக்கொண்டிருந்தார். தவறில்லை- குளிர் நாடுகளில் அணியும் உடைதானே அது. அது பற்றி நானொன்றும் குறை கூறவில்லை. வினவுதலும் விடையுறுத்தலும் தொடர்ந்து கொண்டிருந்தது. தொலைபேசி அழைப்பில் பெண்னொருவர் வந்தார்.

“டொக்டரோடை கதைக்கேலுமே – பெண்”

” நான் டொக்டர்தான் கதைக்கிறன். சொல்லுங்கோ”

இங்கு ஒன்று சொல்லியாக வேண்டும். டொக்டர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பன்னெடுங்காலம் லண்டனில் பணியாற்றி வருபவர் என்பதால் சொல்லுங்கள் என்று உச்சரிக்க வேண்டியவர் சற்று முயன்று சொல்லுங்கோ என ஈழத் தமிழிற்கு நெருக்கமானார்.

அதுபற்றி நான் கதைக்க வரவில்லை. எங்கு கதைத்தாலும் தமிழ் ஒன்றுதானே. பிரித்துப்பேசுதல் பிழைபாடுடையதாகும் என்பதை அறிக. அடுத்து அந்தப் பெண்
” டொக்டர் என்ர பிள்ளைக்கு உங்களிடம் ஆறுமாதமாக மருந்து எடுத்துக் கொண்டு வாறன். இன்னும் சுகமாவில்லை இப்பவும் சரியான சுகமில்லை. என்ன செய்யுறது?” என்றார்.

முகத்தில் புன்னகை ஏந்தி பதிலளித்துக் கொண்டிருந்த அந்த டொக்டர் கலவரப்பட்டு பிரகாசமான முகத்தில் கவலை ரேகை படர்ந்தாலும் தெரியாதபடி மறைத்துக் கொண்டு சாமானியருக்கு சரியாக விளங்காத மருத்துவ லத்தீன் சொற்களை பயன்படுத்தத் தொடங்கினார்.
மண்ணில் போட்ட விதை மண்ணிலிருந்து கொண்டு வளர்ச்சிக்கு தயாராகுதல் பிந்தைய நாட்களில் மண்ணிலிருந்து வெளிக்கிளம்புதல் என தொடர்ந்தது அவரின் உதாரணம்.சாராம்சம் – விதை முளைக்க நாட்களாகும்.வியாதி; குணமாக LONG LONG GO AWAY. கனகாலம் எடுக்கும்.
அதுபற்றியும்  எனக்கு வருத்தமில்லை.டொக்டர் பாடு அவ பாடு. அதற்கு அடுத்ததாக அவர் வாயிலிருந்து  உதிர்ந்த நல்முத்துகள் விசனமளிப்பவை.
டாக்டர்கள் முதலில் தங்களிடம் வரும் வியாதியஸ்தர்களுக்கு மிகவும் கூடுதலாக மருந்தெழுதித் தருவார்களாம். வியாதி ஸ்தர்கள் எங்கே ஒழுங்காக மருந்தெடுக்காமல் விட்டுவிடுவார்களோ என்ற    நல்லெண்ணத்தின்   அடிப்படையில்   இவ்வாறு நடந்து   கொ(ல்)ள்வார்களாம். நீடித்து மருத்துவருடன் உறவை பேணி வருதலால் அடுத்து வரும் சந்திப்புகளில் டாக்டர் மருந்துகளின் அளவைக் குறைத்து ஓவர் டோசில் இருந்து காப்பாற்றுவாராம் என்பதாக தொடர்ந்தது டாக்டரின் வாக்குமூலம் .
ஏதோ மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் வைத்திய கலாநிதிகளும் கூட்டுகளவாணிக் கொள்கை வைத்துக்கொண்டு  வருத்தப்பட்டு  வருபவர்களை  மேலும்   பாரஞ்சுமக்கிறவர்களாக மாற்றுகின்றார்களோ  என்ற  சந்தேகமே   எழுகின்றது.  மருத்துவர்கள்    கடவுளுக்கு அடுத்தபடியானவர்கள் உயிர் காக்கும் அற்புத பணியில் ஈடுபடுபவர்கள் என்றெல்லாம் சாமானியர்கள் மனதில் விம்பம் வைத்து வழிபடுகிறார்கள். அதற்கு உதாரணமாக சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி எம் நாட்டிலேயே நல்ல பெயரெடுத்த பல மருத்துவர்கள் இருந்திருக்கிறர்கள். தென்னிந்தியாவிலும் கூட மிகக்குறைந்த செலவில் ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் பல உத்தமர்கள் இருந்திருக்கிறார்கள்; மறைந்திருக்கிறார்கள்.

மருத்துவத்தின் அடிப்படைப் பண்புகளே மாறிப்போய்விட்டன. பெருமளவுக்கு மருத்துவம் வணிக மயமாகிவிட்டதென    பல்வேறு கூக்குரல்கள்   ஆங்காங்கே     எழ ஆரம்பித்துவிட்டன.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சாம்பிளுக்கு தரப்படும் மருந்துகளையே சந்தைப்படுத்தும் வணிகமயமாதல் பற்றி பரவலாகப் பேசப்படுகின்றது.Image

அதற்கு வலுவூட்டுவதுபோல் ஓவர் டோஸ் மருந்து வழங்குதல் பற்றி பிரஸ்தாபித்த அந்த வைத்தியர் பற்றி

இன்னும் நான்கு மாதங்களுக்கு மாத்திரம் உயிர்வாழ்வார்   என கைவிடப்பட்ட  சுவாசப்பையில் புற்றுநோய் நன்கு பரவியநிலையிலுள்ள பெண்ணொருவருக்கு முற்றிலும் சுகப்படுத்தி தருவதாக பணம் வாங்கி பையில் போட்டுக்கொண்டவர்.அப் பெண் நான்கு மாதம் முடிய முன்னரே மண்டையை போட்டது தனிக்கதை.

மிக  அண்மையில்  இலங்கை   சென்று வந்திருந்தேன்.   தாயாரின்    மருத்துவ பராமரிப்பிற்காக சென்று வரவேண்டிய நிலையிலிருந்த பயணம் அது.
ஐரோப்பிய நடைமுறைக்கு பழக்கப்பட்டு நேரம் காலம்   தப்பாது     பணியாற்றுபவர்களுக்கு மத்தியில் ஆறு மணிக்கு நேரம் தந்துவிட்டு பதினொரு மணிவாக்கில் வந்து நின்று கதைக்க நேரமில்லாமல் ஒன்றிரண்டு  நிமிடத்திற்குள்   கடகடவென்று குதிரையோட்டும்           அந்த வைத்திய கலாநிதிகள் அந்நியப்பட்டுப்போனார்கள். ஒவ்வொரு வைத்தியரும் நோயாளியுடன் குறைந்தது  அரைமணி நேரமாவது செலவிடவேண்டும். நோவு, வலி, சுண்டி இழுத்தல் என வேறுபடுத்தி சொல்ல முடியாத நிலையில் நோகுது என்பவரிடம், வலி எத்தகையது என்றும் தொடர்ந்த     உரையாடலின் மூலமே    நோயின் தீவிரம் நோய்க்கான காரணம்   நோயாளியின் பின்புலம் என அறிந்து கொண்டு சிறப்பாக பணியாற்ற முடியுமென ஆர்வலர்கள் பதிலுறுக்கிறார்கள்.

ஒரு நிமிடத்திற்குள் பெயரும் வயதும் ஆண்பால் பெண்பால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும்!
என் தாயார் அனுமதிக்கப்பட்டிருந்த அத் தனியார் வைத்தியாலையில் அந்நோய்க்கென ஏலவே எடுக்கப்பட்டிருந்த  Scan report    அனுமதிக்கப்படவில்லை.   தங்களிடம்  தனியாக Scan எடுக்கச் சொல்லி நின்றார்கள். நோயுற்ற    இடத்திற்கான Scan  உடல்    முழுதிற்குமான Scan  என பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை விழுங்கிக் கொண்டார்கள். வீங்கியிருந்த எனது காற்சட்டைப் பை மெலிந்துகொண்டே வந்தது.
எழுத்தாளர் சுஜாதா சிறுநீரகங்கள்  பாதிப்படைந்த   நிலையில்   சென்னையின்    தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்த நிலையில் ஆனந்தவிகடனில்   வைத்தியசாலை அனுபவங்களைத் தொகுத்திருந்தார்.    இன்னும் சிலநாட்கள் அங்கு இருந்திருந்தால் “எனது ஒற்றைக் கோவணத்தையும் உருவியிருப்பார்கள்” என வருந்தியிருந்தார்.

சாவகச்சேரியில் இரண்டு வைத்திய திலகங்கள் இருந்தார்கள். சின்னப்பு பரியாரியார். இப்போதும் கென்ஸ் மன் லேனில் முன்பிருந்த இடத்தில் இருக்கின்றார். மற்றவர் Dr.Phlips தெற்கு மட்டுவிலில் வைத்தியசாலை வைத்திருந்தவர். இருவருமே ஆயுர்வேத வைத்தியர்கள். அவர்களின் கைபட்டு குணமடையாத நோயாளிகளே கிடையாது.  தூர இடங்களில் இருந்தெல்லாம் வந்து வைத்தியம் பார்த்துச் செல்வார்கள். தெற்கு மட்டுவிலில்   இருந்த கட்டை போட்டு   வைத்தியம் பார்க்கும் வைத்தியரிடம் எவ்வளவு பேர் வருவார்கள்? என்பு பிறழ்வு, முறிவிற்கெல்லாம் கட்டை போட்டு வைத்தியம் பார்க்கும் முறைமை பிரசித்தமானது.

இவர்கள் தரும் மருந்துகள் எல்லாமே கசப்பானவை. கசப்பானவைகள் அதிக களங்கமில்லாததாக தோன்றுகிறது.
நம்மை காலகாலமாக தொடர்ந்து வரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறாதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கமுடியாது –எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ் ணன்.

முதலில் வைத்தியகலாநிதிகள் குற்றமற்றவர்களாக வேண்டும்.

aruthra.tharisanam@hotmail.com

ஆருத்ரா எழுதியவை | மார்ச் 23, 2012

சாவகச்சேரியும், சைக்கிள்களும்

சாவகச்சேரியின் குறுக்கு மறுக்காக எங்களைச் சுமந்து திரிந்தவை சைக்கிள்கள். கனகன்புளியடி ஊடாக மட்டுவிலுக்கும் மறுகரையாக வேம்பிராய் சந்தி, புத்தூர்சந்தி வரைக்கும், தினசரி பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்குமான எமது போக்குவரத்து ஊடகம் சைக்கிள்கள். சமயங்களில் இடம்பெயர்வு தருணங்களில் முரசுமோட்டை வரை சைக்கிள் மிதித்த சாகசகங்களுமாக பயணத்தின் உற்ற நண்பன் என்னால் 900 ரூபாவிற்கு வாங்கப்பட்டு என்னுடன் எட்டு வருடங்கள் கழித்த பழைய றலி சைக்கிள்.

ஆரம்பத்தில் 3ம் வகுப்பில் நான் வைத்திருந்த சின்ன சைக்கிளால் நான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன். சைக்கிள ஓட்டுவதற்கான ஆரம்பக் கல்வி அதனூடாகவே நடந்தது. பெரிய சைக்கிள்களில் குரங்கு பெடல் போட்டு மற்றவர்கள் ஓட்டப்பழகிய காலங்களில், நான் இலகுவாக சீட்டில் இருந்தவாறே பலன்ஸ் பண்ணப் பழகிய காலங்களில், சிறிது தார் ஊற்றி ஊரி போட்டு மெழுகிய ஒற்றை வீதிகளில் முட்டிக்கால் தேய்ந்து இரத்தம் சிந்திய பொழுதுகள் ஏராளம். ஒரே ஒரு சிரமம், ஏறி இருந்து ஓடுவதற்கு உதவி புரியும் சீமெந்துக்கட்டு இறங்கும் இடத்திலும் இருக்க வேண்டும். அல்லாவிடில் விழுந்து எழும்புவது தவிர்க்க முடியாதது. அந்த சைக்கிளின் ஆரம்ப உரிமையாளர் சிலாபம்-மாதம்பை பொலிஸ்ஸில் பணிபுரிந்த பொலிஸ் ஒருவரின் மகனுடையதாகும். பின்னரான காலத்தில் எனக்கான உடமையான பொழுதில் பள்ளிக்கு பயணிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஊர் கூடித் தேரிழுத்த கதையாக பாடசாலை முன்றலில் பலரின் பார்வைக் கணைகளுக்கு மத்தியில் பயணம் தொடர்ந்தது. நண்பர்களின் தொடர்ந்த வற்புறுத்தலால் வகுப்பறையின் கரும்பலகைக்கு அருகில் நிறுத்தப்பட்ட சைக்கிள், சரவணமுத்து வாத்தியாரின் பலத்த கண்டிப்பினிடையில் தரையிறக்கப்பட்டு வகுப்பிற்கு வெளியே நிறுத்தப்பட்டது.

இப்போதெல்லாம் திருமண, பூப்புனித நீராட்டு விழா வைபவங்களில் சந்திக்கும் எம்முடன் ஓரே பாடசாலையில் படித்தவர்கள்,  அந்த சைக்கிளையும் நினைவுபடுத்தி என்னை குசலம் விசாரிக்கையில் பழைய நினைவுகள் நீருள் அமிழ்த்தப்பட்ட பந்தாக மேலே எழும்புகின்றன. எங்களுடன் கல்வி கற்ற பரன் மாஸ்டரின் மகன் ஒரு சிவப்பு நிற கேபிள் பிறேக் சைக்கிள் வைத்திருந்ததை, அவருடைய பேஸ்புக்கில் இன்னொரு நண்பரான விமலன் நினைவுபடுத்தினார். பவித்ரா வைத்திருந்த, இருந்து சாய்ந்து ஓடும் சொப்பர் சைக்கிள் மிகவும் பிரத்தியேகமானது. அவ்வகையான சைக்கிள் சாவகச்சேரியில் வேறொருவரும் வைத்திராதது. இப்படி சைக்கிள்களின் பெருமையும் அதை அவர்கள் வைத்திருந்த உரிமையுமாக நிலையாக அடுக்குகள் தோறும் நிலைத்திருக்கின்றன நினைவுகள். அவர்களை நினைவுபடுத்துகையில் அழையா விருந்தாளிகளாக சைக்கிள்கள் குறித்த பதிவுகளும் வருவது தவிர்க்கமுடியாதது. அவர்களில் யாரேனும் இன்றைய பொழுதுகளில் விலை கூடுதலான வாகனங்களில் ஏறிப் பயணிக்கின்ற வேளைகளில் எல்லாம், சைக்கிளில் பயணிக்கின்ற நினைவு சுமந்த “மண்சுமந்தமேனியராகவே“ நான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றேன்.

கடந்த மாதம் கொழும்பு சென்றிருந்த பொழுதில் ஆட்டோ ஒன்றிலேலே பயணம் செய்யும் பேரானந்தம் கிடைத்தது. உண்மையில் சொல்லப்போனால் நம்நாட்டு போக்குவரத்துக்கு நிறுத்தவும், ஜனநெருக்கடியான சந்து பொந்துகளுக்கூடாக பிரயாணிக்கவும் உகந்த ஓரே  போக்குவரத்து சாதனம் ஆட்டோ தான்.

ஆட்டோ ஓட்டுனரான குமார் அடிக்கடி தன்னைக் கடந்து செல்லும் ஆட்டோக்களை உன்னிப்பாக கவனிப்பதை கண்டிருக்கின்றேன். நான் கேட்காவிட்டாலும் தானாகவே பேச்சு சுவாரஸ்யத்தில் கதைபகரும் குமார், தன்னைக் கடந்து செல்லும் ஆட்டோக்களின் வகைபற்றியும் அண்மையவரவு பற்றியும், சிலாகித்து கதைத்து தானும் இப்போதுள்ளதை விற்றுவிட்டு செல்ஃஸ்ராட்டர் மாடல் வாங்க வேண்டுமென்பதையும் சொல்லிச் சொல்லி அலுத்துக்கொள்வார். பழைய மாடலில் உள்ள கையால் இழுத்து ஸ்ரார்ட் செய்வதால் நெஞ்சு நோவதாக கூறி அலுத்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநரை, முன்னே விரையும் ஏனைய ஆட்டோக்களுடன் கலந்து பிரயாணிப்பவராக காட்சிப்படுத்திக்கொண்டேன்.

மாந்தர்கள் ரகம்-ரகமாக, வகை-தொகையாக கனவுகளின் மீதேறி பயணிப்பவர்களாக காணப்படும் இவர்களும் அடையாளங்களால் தம்மை உருவகித்துக் கொள்பவர்களாக தெரிகின்றனர்.

இவ்வாறே மனிதர்களின் முகங்கள், கார்களால் கைக்கடிகாரங்களால் பாதணிகளால் அடையாளப்படுத்தப்படுவதை கீழேயுள்ள ஜெயபாஸ்கரனனின் கவிதை சொல்கிறது. அவை அந்தஸ்தின் அடையாளங்கள்.

என்னுடைய நூற்றியம்பது காட்டுகிற
அதே நேரத்தை காட்டினாலும்
உன்னுடையது ஏழாயிரத்து எழுநூறு.

காரில் போவதற்கு மூவாயிரத்துக்கு நீயும்
காலில் போடுவதற்கு அறுபது ரூபாய்க்கு நானும்
காலணிகள் வாங்குகின்றோம்.

எனக்கான கடைகளில் நீ நுழைவதில்லை
உன் கிரெடிட்கார்டு நுழையும் கடைகளில்
நான் நுழைய முடிவதில்லை.

இருந்தும் கூட குஸன் மெத்தையிலிருந்து
அடிக்கடி குதித்து கோரைப்பாயில் உறங்கும் என்னை
தட்டியெழுப்பிச் சொல்கிறாய்
தூக்கம் வரவில்லை என்று.

THIRUNAVUKARASU  PADMAN

எனது தந்தை எனக்கு புத்தம் புதிய ரலி சயிக்கிள் ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம் ரலி கம்பனியில் 1500 ரூபாவுக்கு 24 /12 /1979 ல் (5 ம் வகுப்பில்) வாங்கித்தந்தார் .அங்கிருந்து நாமிருவரும் அதே சயிக்கிளில் பயணம் செய்து வீடு வந்தோம் அந்த அனுபவம் என்னை மிகவும் புளங்காகிதம் அடைய செய்தது .அந்த சயிக்கிள் இலக்கம் இன்றும் எனது ஞாபகத்தில் உள்ளது 79L644

JV PILLAI

உங்கள் பதிவிற்கு ஜெயபாஸ்கரனின் கவிதை சுட்டிபுரம் அம்மன் கோவில் திருவிழாவும் சீர்காழி கோவிந்தராயன் அவர்களி ன் இசைகச்சேரியும் போல பொருத்தமாக அமைந்துள்ளது.

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்