ஆருத்ரா எழுதியவை | ஒக்ரோபர் 7, 2012

ஒரு பியரும் பின்னே ஞானும்.

ஒரு பியர் என்பது மதுசாரத்தின் அளவிடலில் மிகக்குறைந்த அளவு கொண்ட “கூறுகெட்ட கழுதை” ரகத்தை சேர்ந்ததாகவும், இதைக்குடித்தால் குடிமுழுகிப் போய்விடுவதில்லை என்ற வாதத்தை முன்வைக்கும் பெருங்குடிமகன்களும், நிறைய குடித்து சிறிது தள்ளாட்டத்துடனும் அகலக்கால் வைக்கும் அவலப்பொழுதுகளை எண்ணிப்பார்த்து பியர் தண்ணிக்கு நிகரானதில்லை என்ற வாதப்பிரதி வாதங்களை முன்வைக்கும் என்னைப் போன்றவர்களுக்கும்

சந்தி சிரிக்கும் சங்கதிகளை பதிவாக்குவதில் “கூறு கெட்ட கழுதைதான்” முதலிடம் வகிக்கின்றது.

மிக மிக வெக்கையான நாட்களில் ஒரு ரின்னை உடைத்து வைத்துக்கொண்டு சந்திகளில் நின்று சரசமாடும் எம்மவர்களை நினைத்தால் ஏதோ பற்றிக்கொண்டு வருகின்றது. அந்த எம்மவர்கள் மெதுமெதுவாக கூட்டினின்றும் கழன்று ஒவ்வொன்றாக வந்து கூடுமிடம் சந்திகளாகவும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளாகவும் இருந்து சிலவேளைகளில் விரசமான வார்த்தையாடல்களாக பலமான சத்தங்கள் வெளிப்பரப்பிற்கு கொண்டுவரும் தருணங்களிலெல்லாம் நான் அவர்களை கடக்க நேரிடுகின்றது. விலத்திச் செல்ல முற்படுகின்றேன்.

இதையொத்த தருணங்களை எல்லாம் இங்கே தான் முதன்முதலாக காண்பதாக சொல்ல முடியாது. பெருங்குளம் சந்தியிலிருந்து கல்வயலுக்கு பயணிக்கும் பாதையில் இருந்த தவறணைகளிலும்,பெருங்குளம் சந்தியில் இருந்து மட்டுவில் வீதிக்கு இடம் மாறி தற்போது இப்போது இருக்கின்ற இடத்திலும் பலதடவை கள்ளுண்டு மயங்கி நிற்கும் “மாமனிதர்களை” கடந்து போகின்ற தருணங்களிலெல்லாம் குடி என்பது வெல்ல முடியாத பகையோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இங்கே தான் எல்லாம் கொட்டிக்கிடக்கின்றது. தேவையான பொழுதுகளில் எல்லாம் வாங்கி வைத்துக்கொள்வதற்கு ஏற்ப பணவசதியும் இருக்கின்றது. சுவிற்சர்லாந்தில் 8 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இரண்டு மடங்கு விலைகளில் கிடைத்த Red-Labelம், Black-Labelம், Remy-Martin களும் இன்று Tax-Free கணக்கில் பாதி விலைகளில் கிடைக்கின்றன. மிக அண்மையில் வீடு வாங்கிக்கொண்ட எம்மவர்கள் வீடுகளின் நிலக்கீழ்பகுதிகளில் Bar வைத்துக் கட்டிக்கொண்டு நேரே நண்பர்களை வீட்டிற்கு எடுக்காமல் தங்கள் சந்திப்புக்களை நிலக்கீழ்ப்பகுதிகளில் வைத்துக்கொள்வார்கள்.

ஸ்கண்டிநேவியா நாடுகளில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கு செல்லும் போதெல்லாம் சனி-ஞாயிறு பெரும் கொண்டாட்ட களமாக மாறிவிட்டிருப்பதையும், வெள்ளி பின் மாலைப்பொழுதுகளில் தொடங்கும் கொண்டாட்ட கலாச்சாரம் ஞாயிறு மதியம் முடிவுக்கு வருவதையும், இரண்டு மூன்று குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்ந்து அளவளாவி, சுதி சேர்த்து கதை கதைத்து கரியல் பொரியல் BARBIQUE சுட்டுண்ணும் கலாச்சாரத்தில் ஊறிப்போயிருப்பதையும்  கண்டு கொள்ள முடிகின்றது.

இங்கே இது சரியெனவும் அது பிழையெனவும் வாதாடும் மனநிலையில் இந்தப்பதிவு முன்வைக்கப்படவில்லை.

சுவிற்சர்லாந்தில் BIER என்பது இங்கே இருக்கின்ற 26 பிரதேச இடங்களுக்கும் தனித்தன்மையான அடையாளமாக மாறிப்போயிருக்கின்றது. OKTOBER-FEST என்று அழைக்கப்படுகின்ற பெரும்கொண்டாட்ட களியாட்டம் தனியே பியரை முன்னிலைப்படுத்தி கொண்டாடப்படும் ஒருசந்தோசச்சாரலாக நினைவு கொள்ளப்படுகின்றது.

சூரிச்சில் LöwenBräu வும், BASEL நோக்கிப்பயணிக்கும் போது பெரிய அரண்மனை போன்ற தோற்றத்துடன் இயங்கி வரும் Feldschlossen, Hürlimann ம், CHUR நகருக்கென்றே Calanda Bierம் அந்தந்த நகர்களின் தனி அடையாளங்கள்.

2011ம் ஆண்டில் 4.63 மில்லியன் Hecto-Liter Bier இங்குள்ளவர்களால் குடித்து தீர்க்கப்பட்டுள்ளது. ஒரு தனிமனித நுகர்வு 57.9  Liter ஆக இருந்திருக்கின்றது. சுவிஸ்நாட்டின் BIER தொழிற்சாலைகளில் 2011ம் ஆண்டுக்கான பியர் உற்பத்தி 3.5 மில்லியன் Hecto-Liter களாக இருந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. (நல்லா சொல்றார்ய்யயயயயா டீடெய்லுலுலுலு)

ஓவ்வொரு பியரும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவது அதை புளிக்கவிடும் காலங்களில் ஏற்படும் வேறுபாடுகளையும் உட்சேர்க்கப்படும் வாசனைப்பொருட்களையும் பொறுத்ததாக அமைகின்றது.

சுவிற்சர்லாந்தின் மிகச்சிறிய மாநிலமான Appenzell என்ற இடத்தில் உருவாக்கப்படும் Appenzeller என்பது Aperetif வகையைச் சார்ந்தது. ஒரு விருந்து தொடங்குவதற்கு முன்னரான மிகச்சிறிய உணவு வகைகளுடன் பரிமாறப்படும் குடிவகைகள் Aperetif வகைகளாக அறியப்படுகின்றது.

Appenzeller என்ற குடிவகை மிக இரகசியமான தயாரிப்பு முறைகளை பின்பற்றி தயாரிக்கப்படுவதோடு அதற்குள் 42 வகையான வாசனைச்சேர்மானங்கள் அடங்கியுள்ளன. ஒரு விருந்தை முன்னெடுத்துச் செல்வதற்கு Aperetif வகையைச் சேர்ந்த Alcohol குறைந்த மென்குடிபானங்கள் முதலிடம் வகிக்கின்றன. இன்னென்ன குடிவகைகளுக்கு இன்னென்ன உணவுப்பதார்த்தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்களை பெருமளவான உணவுபரிமாறும் இடங்கள் பின்பற்றுகின்றன.

RED-WINE ற்கு ஒரு வகையான பதனிட்ட இறைச்சி வகைகளும், WHITE-WINE ற்கு சிலவகை பதப்படுத்தப்பட்ட பாற்கட்டிகளை, CHEESS களையும் பரிமாற வேண்டுமெனவும் அதுவே உவப்பானதாகவும் இருக்குமெனவும் வழிகாட்டுதல் தொடர்கின்றது.

OKTOBER-FEST என்று ஜேர்மனியின் München நகரில் கொண்டாடப்படுகின்ற இரவுநேர கொண்டாட்டத்தில் மிக மிகப்பபெரிய GLass களில் BIER ஐ திறந்து பரிமாறும் பெண் BAR-GIRLS ஐரோப்பிய பாரம்பரிய உடையில் வலம் வருவதைக் கண்டு கொள்ளலாம்.München கொண்டாட்டங்கள் வணிக வர்த்தக நோக்கங்களுக்காக சூரிச் வரை வந்து விட்டன. ஒரு வாரமாக சூரிச்சின் மத்திய புகையிரத நிலையத்தின் மேற்பகுதியில் OKTOBER-FEST கொண்டாடப்பட்டது.

இலங்கையர்கள் காலைகளில் அருந்தும் பானமாக தேநீரும் ஐரோப்பாவில் காலைகளில் மிக அருந்தும் பானமாக Espresso-Cafe ம் ஆகிவிட்டிருப்பதைப் போன்றே இரவு நேரங்களில் அருந்தும் போதை சமாச்சாரங்களில் BIER முன்னிலை வகிக்கின்றது.

பியரில்  அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாகவும் அதை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது என்பதான கருத்துக்களை சிலர் வைத்திருக்கின்றார்கள். அவற்றினால் மிக மேலான பயன் ஏதும் இல்லை எனவும் பார்லி விதைகள் நொதிப்பதால் உருவாகும் பியரில் அதிகளவு ALCOHOL மாத்திரமே நிறைந்திருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. HELL, LaGER, DUNKEL-LAGER என்ற பியர் வகைகள் நொதித்த மாக்கரைசலை வடித்து பெறப்படுவதில் பின்பற்றும் முறைகளினை குறிப்பனவாகவே உள்ளன.

ஆரம்பத்தில் ஐரோப்பாவுக்கு வரகை தரும் ஆசிய நாட்டவர்களுக்கு பியரும் தண்ணீர்ப்போத்தலும் ஒரே விலைக்கு விற்பனையாவதைக் கண்டு குழம்பி, பியர் அருந்துவதற்குரிய காரணமாக அமைவதாக நம்மவர்கள் நகைச்சுவையாக குறிப்பிடுவார்கள்.  இங்கே வீதிகளிலோ பொது இடங்களிலோ யாரும் பெருமளவுக்கு BIER-TIN உடன் அலைவதில்லை.

புதிதாக வருகைதரும் எம்மவர்களுக்கு BIER-TIN “ஆண்மை”யின் அடையாளமாக ஆகிவிட்டிருப்பதாக நண்பர் ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். LONDON ன் TOOTING பகுதிகளிலும் “பியர் ரின் காவிகள்” உலவுவதாகவும் , தங்களுக்கு இலவசமாக பியர் தரவேண்டும் என அங்கு கடை வைத்திருக்கும் தமிழர்களை மிரட்டுவதாகவும் குறிப்பிட்ட நண்பர் அதை இந்த பதிவில் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைத்த போது அந்த கோரிக்கையை ஏற்க நான் மறுத்துவிட்டேன். பெருமளவு லண்டன் வாழ் தமிழர்களின் பகையைச் சந்தித்துக்கொள்ள நான் தயாரில்லை.

முன் பந்திகளில் ஸ்கண்டிநேவியா நாடுகளில் வெள்ளி பின்மாலைகளில் கொண்டாடப்படுவதாக குறிப்பிடப்படும் PARTY கலாச்சாரம் நான் நோர்வேயிலேயே தரிசித்திருக்கின்றேன். அதை நான் நோர்வே என்று குறிப்பிடாமல் ஸ்கண்டிநேவியா என்று குறிப்பிட்டது வீணாக யாரையும் வம்பிற்கு இழுக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் என்பதை “இதை இணை, அதை இணை” என்று கேட்கும் நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஓம் நாராயணா! வந்த வேலை முடிந்துவிட்டது.

சுவிட்சர்லாந்தின்   பியர் தொழிற்சாலை   ஒன்றின்  “ஒளிப்பதிவு நிகழ்வை”   காண்பதற்கு  இங்கே  அழுத்துங்கள்.

ஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 23, 2012

பாட்டுப் பெட்டி.

மார்க்கோனிக்கும், தோமஸ் ஆல்வா எடிசனுக்கும் என்ன வகையான உறவுமுறை நீடித்தது  என்பதெல்லாம் தெரியாது. அவர்கள்  இருவரும் நெருங்கிய உறவினர்களா? அதுவும் தெரியாது  எனக்கு. மார்க்கோனி வானொலிப்பெட்டியை கண்டுபிடித்தவர் என்பதும், தோமஸ் ஆ.எடிசன் மின்சாரத்தை கண்டுபிடித்தவ‌ர் என்பது  மாத்திரமே அச்சிறுவயதில் எனக்கு தெரிந்திருந்தது.

எங்கள் வீட்டிலிருந்த ஒரு வானொலிப்பெட்டி அவர்கள் இருவருக்குமான நெருங்கிய உறவை அடிக்கடி வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

மார்க்கோனியை தொட்டால் எடிசன் அடித்தார். அதை வானொலிப்பெட்டி என்றழைப்பதை விட பாட்டுப்பெட்டி என்றழைப்பதே மேலானது. அவ்வளவு பருமனானதும் பாரமானதுமான பெட்டியை நாங்கள் வானொலி கேட்பதற்காக பயன்படுத்தி வந்தோம் என்பதும் அது அந்தக்கால பிலிப்ஸ் வால்வு றேடியோ வகையை சார்ந்தது எனவும் காதுக்கு இனிய உணவாக இசையை தருவது மட்டுமன்றி மூக்கிற்குப் பிடிக்காத தீய்ந்து போன வாசனையொன்றையும் அது தந்து கொண்டிருந்ததாகவும் இது நடந்த காலப்பகுதி 1975 – 1980 வரையானது எனவும் ஏகப்பட்ட நினைவலைகள் எனக்கு.

டிரான்சிஸ்டர் என்ற ஒன்று கண்டு பிடிக்காத காலத்திற்கு முந்தைய வானொலிப்பெட்டிகளில் இரண்டு மூன்று வால்வு போன்ற ஒளிரும் சாதனங்கள் இணைந்து வானொலியை இயக்கியதோடு தீய்ந்து போன வாசனையையும் தந்து கொண்டிருக்கும். அத்துடன் எங்கள் வீட்டிலிருந்த அதே வகைப்பாட்டுப் பெட்டியில் மின்ஒழுக்கு, கைபிடித்து திருகும் கட்டை வரை வந்து தொலைத்ததால் மார்க்கோனியை தொட்டால் எடிசன் அடித்துக்கொண்டேயிருந்தார்.

இப்படியாகப்பட்ட அந்த வானொலியூடாகவே சனிக்கிழமை இரவு 9.30 க்கு ஒலிபரப்பாகும் நாடகங்களையும் இலங்கை வானொலியின் வர்த்தக சேவைகளையும் இந்தியாவிலிருந்து ஒலிபரப்பாகும் “தேன்கிண்ணம்” திரையிசைப் பாடல்களையும் காது புளிக்காமல் கேட்டுக்கொண்டேயிருந்தோம். அது ஒரு சுகானுபவம்.

எங்கள் வீட்டிற்கு மின்சார இணைப்புக் கிடைத்தது அதிசயம் என்றால் அந்தப்பாட்டுப்பெட்டி ஊடாக இசை பருகியது பேரதிசயம். நடராஜசிவம் என்ற வானொலி அறிவிப்பாளர் சமூக அரசு-இராசதானி நாடகங்களில் தனது சிம்மக்குரல் மூலம் சிவாஜியின் குரலை ஒத்த பிரமிப்பை ஏற்படுத்துவதும், சில்லையூர் செல்வராசனின் வாத்சல்யம் மிகுந்த தோழமை வணக்கத்துடன் மக்கள் வங்கியின் தணியாத தாகம் தொடர்நாடகம் திரைப்படப்பிரமிப்பை ஏற்படுத்துவதுமாக அந்தப்பாட்டுப்பெட்டி ஊடாக வேறொரு கனவுலகம் விரிந்தது.

ஜோக்கிம் பெர்னான்டோ, மயில்வாகனம் சர்வானந்தா, கமலினி செல்வராஜன், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹ‌மீத்,ராஜேஸ்வரி சண்முகம் போன்ற அறிவிப்பாளர்களும் மரிக்கார் ராமதாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உப்பாலி செல்வசேகரன் ஆகியோரின் “கோமாளிகள்” நாடகம் என நிகழ்ச்சிகளும், சௌந்தரராஜன்- சுசீலாவும் அந்தப்பாட்டுப் பெட்டியூடாகவே எங்கள் வீட்டிற்குள் இறங்கிக்கொண்டிருந்தனர்.

“அத்தா‌னே அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே? இருமனம் ஒரு மனதாகும்.திருமணம் எப்‌போ தாகும்?” என்ற சில்லையூர் செல்வராசனின் மக்கள் வங்கிக்கான விளம்பரப்பாடல் இன்றளவும் காதுக்குள் இசைத்துக்கொண்டிருக்கின்றது.

சிறுவயது என்பது கவலைகளற்ற காற்றிலேறி கனவு காணும் வயது. எல்லாவற்றையும் இயல்பாகவும் இசைவாகவும் பார்க்கக்கூடிய மகிழ்ச்சிப்பருவம். அந்தவயதில் அந்தப்பாட்டுப் பெட்டி மிகப்பெரிய கனவுலகத்தை எங்களுக்குள் விதைத்துக்கொண்டிருந்தது.

இலங்கை பூமத்திய கோட்டிற்கு அண்மையில் இருக்கும் நாடென்பதும், வருடத்தின் ஒரு பகுதிக் காலம் வடக்கிலிருந்து தெற்காகவும், மீதிக்காலம் தெற்கிலிருந்து வடக்காகவும் பருவப்பெயர்ச்சிக் காற்று வீசுவதாகவும் சமூகக்கல்வி ஆசிரியர் கற்பித்த தருணத்தில் அது எனக்கு மிகப்பெரும் உண்மையாகப்பட்டது. வருடத்தின் முற்பகுதி முழுவதும் அங்கிருந்து இங்கு வீசும் காற்றால் தேன்கிண்ணம் மிகத்தெளிவாகக் கேட்பதும், மீதிக்காலங்களில் தேன்கிண்ணம் எங்கோ கொட்டிப்போய் கேட்காமல் விடுவதும் உண்டு.

தேன்கிண்ணத்தை மிகச்சரியாக பிடிக்கப்போன ஒரு கணத்தில் தான் மின்ஒழுக்கின் (எடிசனின்) தாக்குதலுக்கு உள்ளானேன். ஒரு சிறிது ஆகர்ஷ‌ம் என்னை கவர்வதாகவும் சிறுஅதிர்வு என்னை இயக்குவதாகவும் உணர்ந்த கணத்தில்” ஐயோ” என்ற அலறலில் என்னைத் தொட்ட அன்னைக்கும் பாசப்பிணைப்பு மின்னிணைப்பாக தொடர்ந்து ….. பெரிதாக ஒன்றும் ஆகவில்லை.

இத்தாலியில் பிறந்த மார்க்கோனியும், அமெரிக்காவில் “அல்” என்று அழைக்கப்பட்டு எங்கள் நான்காம் வகுப்பு புத்தகத்தில் கோழிமுட்டை அடைகாத்த தோமஸ் ஆல்வா எடிசனும் எங்கள் பாட்டுப்பெட்டி ஊடாக உறவினர்களானார்கள். எங்கள் வீட்டில் பிலிப்ஸ் பாட்டுப்பெட்டி இசை வழங்க எங்கள் பெரியம்மா வீட்டில் “நஷனல்-பனசொனிக்” வகை ரேப்-றெக்கோடர் அறிமுகமாகி பதிவு இசையை பவனி வரச்செய்து கொண்டிருந்தது. பாட்டுப்பெட்டிக்கு இரண்டு பக்கமும் இரு திருகு-கட்டைகளும் நான்கு அமத்துக்கட்டைகளும் இருந்தனவென்றால், ரேப்-றெக்கோடருக்கு வேறுவித தொழில்நுட்பத்துடன் தலையின் மேற்பகுதியில் திருகு அமத்து கட்டைகளும் இருந்தன. சிலர் அவற்றிற்கு அழகான உடை கூட தைத்துப்போடுவதுண்டு. எனினும் எங்கள் பாட்டுப்பெட்டி நிர்வாண சாமியார் வகையைச் சார்ந்தவராக பற்றற்று உடையணிந்து கொள்வதில்லை.

சாவகச்சேரி நவீன சந்தையின் மேல்மாடி கட்டடத்தொகுதியில் ஒரு றெக்கோடிங்-பார் இயங்கி வந்தது. என் வயதொத்த என் பெரியம்மா மகன்- ஒன்றுவிட்ட சகோதரர் புதுப்பாடல்கள் வெளிவந்த சில நாட்களில் றெக்கோடிங்-பார் செல்வதும், அவற்றை கசற்றில் பதிவுசெய்து வருவதும் என்னை அழைத்து புது இசையை பருக வற்புறுத்துவதும் நடக்கும். முதல் தரம் கேட்கும் போதில் அந்நிய இசையை கேட்பது போலவும், பலதடவை வானொலியில் ஒலிபரப்பான பின் கேட்டாலே எனக்கு பிடித்தமானவையாக அவை தென்படுவதாகவும் சொல்லியிருந்தாலும், தனது மனத்திருப்திக்கு என்னை அழைத்து பாட்டு போட்டுக்காட்டுவதை அவர் விடவில்லை. எங்கள் இருவருக்கும் பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கலாம்.

அவர்கள் வீட்டிலேயே BoneyM என்ற “ஒலியிழை- கசற்” காணக்கிடைத்தது. மூன்று அரைகுறை ஆடை நங்கைகள் ஒரு கறுப்பின இளைஞனுடன் பின்னிப்பிணைந்திருப்பதான முகப்புக் கொண்ட ஒலியிழை பார்ப்பதற்கு சங்கடம் தந்தாலும் கேட்பதற்கு சங்கடம் தரவில்லை. அழகான இசைக்கோர்வைகளும், சந்தத்திற்கு இசைவான சொற்கோர்வைகளும், இசை என்பது மொழி கடந்தது என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தது.

76ம் ஆண்டுகளில் மேற்குலகை இசையால் வசீகரித்த BoneyM குழுவினர் மேற்கு-ஐரோப்பிய கிழக்கு-ஐரோப்பிய நாடுகள் தோறும் வரவழைக்கப்பட்டு, மேடை நிகழ்ச்சிகள் TV SHOW க்கள் என நடைபெற்று பெரும் ரசிகர் பட்டாளம் கூடி நிற்க கௌரவிக்கப்பட்டார்கள். பெருமளவான இசை ரசிகர்கள் திரண்டார்கள்.

“BY THE RIVERS OF BABYLON” மேற்குலகின் தேசிய கானம். YEAH YEAH என்ற HUMMING அந்தக் காலத்தில் படுபிரசித்தம். இப்போது கேட்டாலும் மெய்மறக்கும் அற்புத இசை.

ஜமைக்கா நாட்டு இசைக்குழுவால் இயற்றி இசை அமைக்கப்பட்ட இந்தப் பாடல் ஜெர்மானிய இசை நிறுவனம் ஒன்றால் தெரிவாகி வெளியுலகில் பிரசித்தமானது. வணிகமாக்கப்பட்டது. பெரும் வரவேற்ப்பை பெற்றுக் கொண்டது.

அந்த ஒலியிழையில் அடங்கி இருந்த

1. BY THE RIVERS OF BABYLON
2. DADDY COOL
3. RASPUTIN

பாடல்களைத் தேடி அலைந்த பொழுதுகளில் தற்போது ஓளியிழைகளாகக் கிடைத்தது ஆனந்தப்பரவசம். பல மில்லியன் ரசிகர்கள் இன்றளவும் அந்த ஓளியிழைகளை (VIDEO) பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.அந்தப் பாடல்களின் ஒளியிழையை பார்ப்பதற்கு பாடல்களின் மீது கிளிக் பண்ணவும்.

LYRICS

By the rivers of Babylon, there we sat down 
Ye-eah we wept, when we remembered Zion. 
By the rivers of Babylon, there we sat down 
Ye-eah we wept, when we remembered Zion. 
When the wicked 
Carried us away in captivity 
Required from us a song 
Now how shall we sing the lord’s song in a strange land 
When the wicked 
Carried us away in captivity 

தென்னிந்திய தமிழ் திரைப்பாடல்களிலும் எண்பதுகளில் BoneyM இனால் உருவாக்கப்பட்ட இசைக்கோர்ப்புக்கள் தெரிந்தோ தெரியாமலோ இணைக்கப்பட்டிருந்தன. இந்தப் பாடல்களின் இசையைப் பருகும் தருணங்களில் இவை தமிழ்பாடல்களிலும் பயன்படுத்தப்படடிருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

Rasputin பாடல் A.E.MANOKARAN இன் பொப்பிசை ஒன்றிலும் “வா வா ரஸ்புடின் கோழி ஒன்று நான் தருவேன்” என இசைக்கப்பட்டது. Rasputin இனிய துள்ளலிசை. ஆண் பாடகரின் பாடல், நடனம், உடல்மொழி பிற்காலங்களில் புகழ்பெற்ற மற்ற இசைக்குழுக்களுக்கு ஆதிமூலம். இந்தப் பாடலின் இசைக்கோர்ப்பு அலாதியான சுகப்பரிச்சியம்.

DADDY COOL LYRICS

She’s crazy like a fool
What about it Daddy Cool

She’s crazy like a fool
What about it Daddy Cool
I’m crazy like a fool
What about it Daddy Cool

BoneyM இன் ஆரம்பம்.

1975 ம் ஆண்டில் உருவான DISCO இசைப்பண்பின் மேலாதிக்கம் ரசிகர்களின் கவனம் அதன் மீது விழ ஏதுவாயிற்று.ஜேர்மன்நாட்டு இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான FRANK FARIAN தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டபின்பு 1976 இல் மூன்று பாடகிகளையும், ஒரு பாடகரையும் இணைத்து BoneyM உருவானது. ஆண்பாடகரானBOBBY FARELL மிகச் சிறப்பான நடனக்கலைஞராக NETHARLAND நாட்டில் திகழ்ந்தவர். BOBBY FARELL இனால் பாடப்பட்டDADDY COOL பாடல் மூலம் BoneyM ஐரோப்பா  அளவில் மிகச் சிறந்த இசைக்குழுவாகவும் BoneyM இசைத்தட்டுக்கள் வெளியிட்ட நான்கு வாரங்களுக்குள் 2 மில்லியன் விற்கப்பட்டு புகழ்பெற்ற இசைக்குழுவாகவும் தன்னை இனங்காட்டியது.

DADDY COOL, BY THE RIVERS OF BABYLON பாடல்கள் மூலம் மிகச் சிறப்பான விற்பனை சாதனையை எட்டிய BoneyM சோவியத் ரஸ்யாவிலும் மெதுவாக புகழடையத் தொடங்கியது. Rasputin பாடல் வரிகள் சோவியத் ரஸ்யாவின் அரசியல் நிலவரங்களை கேலி பண்ணியதாக அமைந்ததால் அங்கு தடை செய்யப்பட்டது. 75 ம் ஆண்டுகளில் BoneyM, ABBA இசைக்குழுக்களின் பிரசன்னமும்,பிரசித்தமும் இன்றளவும் இசை ரசிகர்களால் நினைவுகூரப்படுவதோடு DADDY COOL பாடல் YOUTUBE மூலம் 20 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

RA RA RASPUTIN
Lover of the Russian queen
There was a cat that really was gone
RA RA RASPUTIN
Russia’s greatest love machine
It was a shame how he carried on

DADDY COOL Rasputin பாடல்களை இசைத்த BOBBY FARELL ஒரு இசை நிகழ்ச்சிக்காக ரஸ்யாவின் St.Petersberg சென்றிருந்தவேளையில் தனது அறுபத்தோராவது வயதில் 2010 ம் ஆண்டு ஹோட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். Rasputin பின் விளைவா? என்று ஐயம் தெரிவிக்கப்படுகின்றது. 76 ம் ஆண்டுகளில் உருவான BoneyM இசைக்குழு 1986 ம் ஆண்டு கலைக்கப்பட்டு இசைக்கலைஞர்கள் பிரிந்து சென்றார்கள்.

வாசகர்  கவனத்திற்கு:-ஆருத்ராவின்  பாட்டுப்பெட்டி  மேலும்  பாடும்.

**************************************************************************************

ஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 16, 2012

எனக்கான பழத்தோட்டம்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அழகான மைதானம். ஒரு கரையில் பிரதான நெடுஞ் சாலை. மறுகரையில் தொடர் வகுப்பறைகள் . உயர் தர வகுப்பினரின் இரு மாடிக் கட்டிடமான H BLOCK இற்கு அணித்தான மற்றைய இரு மாடிக் கட்டிடத்தின் மேற் பரப்பில் எழுதப்பட்ட வாசகத்தில் OSA என்று குறிக்கப் பட்டிருக்கும். OSA வை விரிபுபடுத்தினால் OLD STUDENT ASSOCIATION -பழைய மாணவர் சங்கம்.

1976ம் ஆண்டுகளில் முன்னைய பழைய மாணவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டு நாம் உட்கார்ந்து வாங்கு தேய்த்து வெளியேறி நாமும் பழைய மாணவராகி போய்விட்ட நிலையில் இன்றளவும் கல்விச் செல்வம் வழங்கி வருகிறது அந்தக் கட்டடம்.

அதன் தொன்மைக்கு நிதி அளித்தவர் எவர்? கல் அரிந்த உழைப்பாளி- திட்டமிட்ட செயலாளர், பெருமட்டம்- சிறுமட்டம் என பலபேரின் உழைப்பும், கனவும் ஒருங்கு சேர்ந்த நிலைப்பாடு, எண்ணம்-செயலாக்கம் எல்லாவற்றையும் எண்ணும் போதில்

“யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பொண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் ப்ராங்க்போர்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழி தவறி
அலாஸ்கா வந்துவிட்ட
ஒட்டகம் போல் ஒஸ்லோவில்,

என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?

பாட்டனார் பண்படுத்தி
பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழிய விட்டு
தொலை தேசம் வந்தவன் நான்.
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத்தோட்டம்?

தன்னுடைய வரிகளால் தன்னையே சாடுவது போன்ற ஈழக்கவி வ .ஐ.ச ஜெயபாலனின் கவிதை எங்களையும் குறிவைத்து தாக்குகின்றது.

பழைய மாணவர்கள் சங்கம் குறித்தான ”பழைய மாணவர் சங்கமும் உளுந்து வடையும்” அங்கதத்திற்க்கும் அவசரத்திற்க்கும் எழுதப்பட்டதல்ல. வெறுமனே கேலி பேசி அனைவரின் மனத் தாங்கல்களுக்கும் உள்ளாகி ஒரு பதிவை வெளிக்கொணர்வது அதன் நோக்கமாக இருக்கவில்லை. எங்களால் ஆரம்பிக்கப்பட்டு எங்களுக்குள் அழிந்துவிட்ட பழையமாணவர் சங்கத்தை விமர்சித்தது சுய விமர்சனம் தான். அந்த சுயவிமர்சனமானது எங்களை நாங்களே முள்வேலியில் தூக்கிக் கொழுவி, தயவு தாட்சணியம் பாராது அடித்து நொறுக்கி பிழைகளையும் களைகளையும் கண்டுணர்ந்து “நாங்கள் காயப்பட்டு நின்றதை மற்றவர்களும் படக்கூடாது” என்ற நோக்கில் வரையப்பட்டது தான்.

எங்களுடைய நிர்வாண நிதர்சனங்கள் வெட்கமானவை. வெளியே சொல்லக் கூடாதவை. அழுக்காறு மிகுந்தவை. காலையில் இருந்து மாலை வரையான எமது உழைப்புக்கள் எனது,தனது என்பதான குறுகிய வட்டத்திற்குள் முடங்கி விடுபவை. சல்லிக் காசுகளை சரிபார்த்து பத்திரப்படுத்தி கணக்குப் பண்ணும் கணக்காளர்களாக,காலத்தின் இழுப்புக்கெல்லாம் இசைந்தோடி வாழும் நாம், நாளை பேரனுக்காய் எவன் வைப்பான் பழத் தோட்டம்? என ஏங்கி நிற்கப் போகின்றோம். யாராவது எங்களுக்காக எதனையும் செய்யமாட்டார்களா? என்பதாக அலைகின்றன புலம்பெயர் பொழுதுகள்.

சாவகச்சேரி இந்துக்கல்லுாரியில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியை தனது ஓய்வூதியப் பணம் முழுவதையும் “ஆதார நிதிப் பங்களிப்பாக” தந்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்டதே ‘ ‘கல்விக் கண்” அறக்கட்டளை. லண்டனை தளமாக கொண்டு இயங்கும் “கல்விக்கண்” நண்பர் குழாமொன்றினால் இயக்கப்படுகின்றது.கல்வி தான் மனிதகுலத்தின் அறிவுக்கான திறவுகோல் -அதனூடாக உற்று நோக்கிப் பெற்றுக் கொள்ளப்படும் அனுபவங்களே பாடங்களாகவும், அறிவுறுத்தலாகவும் அமைந்து நேர்வழி நடக்க உதவுகின்றன. கல்விக்கண் சரியான பெயரிடல் என்பதோடு அமைந்து விடவில்லை, அதனது செயற்பாடுகள்.

மூன்றாம் உலகநாடுகளின் பொருளாதார வசதி வாய்ப்புகள் மிகவும் அருகியவை, குறைவானவை.ஈழத்தின் போர் சூழல் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டி விட்டிருக்கின்றது. அதுவும் போர்ச்சூழலில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நிர்க்கதியான நிலையில் உறவினர், தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி கல்வி கற்கும் இளைய மாணவ சமுதாயத்தினரின் கற்றல் தேவைகளை கவனத்திற்கெடுத்து கல்விக் கண்ணின் செயற்பாட்டுத் திட்டங்கள் வரைபு படுத்தப்பட்டுள்ளன.அவர்களுக்குத் தேவையான காகிதாதிகள் புத்தகங்கள்,பாடசாலை வசதிக் கட்டணம்,பாடசாலைக்கு வெளியேயான கற்கை நெறிகளுக்கான கட்டணங்கள்,பாடசாலை உபகரணங்கள் எல்லாம் பெரு மனதோடும், பெருவிருப்போடும் கல்விக் கண்ணால் உவந்தளிக்கப் பட்டிருக்கின்றன.

பல தொண்டு நிறுவனங்கள் பல்வேறு செயற் திட்டங்களுடன் ஊழியர்களுடன் மக்களின் வாழ்வாதார நிலைகளுக்கான உதவிகளுடன் தொழில்பயிற்சி ,நிதிப்பங்களிப்பு ஆற்றி வருகின்ற நிலையில் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டு தனியே வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்ற, பயில்கின்ற மாணவர்களை நினைவிலுருத்தி (தென்மராட்சி மாணவர்களை முதன்மைப் படுத்தி) செயற்திட்டங்கள் வகுத்து திடமாக அடியெடுத்து வைத்துள்ள கல்விக் கண் அதனது ஐந்தாண்டுத் திட்டத்தில் பல மாணவர்களை இணைத்து பயனுற வைக்கப் போகின்றது. முதல் கட்டமாக 72 மாணவர்களையும் தற்போது 92 மாணவர்களையும் கொண்டு கல்விக்கண்ணின் செயலாக்கம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் தமது இளம் பராயத்தை கழித்து விட்டு இன்னும் தாயக உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர் குழாம் ஒருங்கு சேர்ந்து வறுமைக் கோட்டிற்க்குள் வாழும் மாணவர்களின் கல்விக் கண் திறக்க ஆரம்பிக்கப்பட்டதான கல்விக் கண் அறக் கட்டளை செயற்திட்டங்கள் தொடர்பான வரைபுகளை ஆருத்ரா தரிசனம் முகநுாலின் ARUTHRA THARISANAM GROUP பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

Contact Address : 98A,Highland Road
Northwood.HA6 1JU
MIDDX
UK.

kkalvikan@gmail.com-Contact email

மிகத் தெளிவான செயன் முறைத் திட்டங்களை தன்னகத்தே   கொண்டு,   எதிர் காலத்தில்  மாணவர்களின்   கனவை   நகர்த்திச்  செல்லும் வலுவும் உணர்வும்   “ஒன்று சேர்ந்த நண்பர்” குழாத்தில் காணப்படுகின்றது.

கல்விக் கண் அறக்கட்டளையால் இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களது மேற்ப்பார்வையில் செயற்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாணவர் மத்தியில் நிலவும் குறை குற்றங்களை கண்டுணர்ந்து கொள்ளும் வகையிலான மாதாந்த ஒன்று கூடல்கள் பணியாளர்களால் நிறைவேற்றப்பட்டு, அடுத்து வரும் காலங்களில் மேலும் சிறப்பாக நடந்தெய்துவதற்க்கான சாதகங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

மிக அண்மையில் தாயகம் சென்று திட்டப் பணிகளை திறம்பட ஆற்றி கல்விக் கண் அறக்கட்டளையின் நிறுவக நிர்வாகத்தை கவனித்து வரும் நண்பர் இது குறித்தான தகவற் பெட்டகத்தை தந்துதவி இருந்தார்.மாணவர்களின் பெயர் விபரங்கள்,செயலாக்கப் பணி தொடர்பான விபரங்கள்,கொள்கை திட்டமிடல் தொடர்பான அறிக்கைகள் தகவற் பெட்டகத்தில் அடங்கி உள்ளன.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் அனைத்துலக நிர்வாகிகள் சந்திப்பு கல்லூரியின் அருணாசலம் அரங்கில் பாடசாலை அதிபர் திரு.கைலாயபிள்ளை அருணாசலம் அவர்கள் தலைமையில் கடந்த மாதம் இடம் பெற்றது. பழைய மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாத தேவையாக உருவெடுத்திருப்பதாகவும் ஐரோப்பாவில் இயங்கி வரும் மூன்று பழைய மாணவர்சங்கங்கள் மிகத் திறம்பட பங்களிப்பு செய்து வருவதாகவும் குறிப்பிட்ட பாடசாலை அதிபர் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் செயற்திறனையும் ஆதரவையும் உவப்பாக நினைவு கூர்ந்ததாக நண்பர் குறிப்பிட்டார். இவ்வேளையில் சாவகச்சேரி இந்துக்கல்லுாரியின் லண்டன் பழைய மாணவர் சங்க தலைமை நிர்வாகத்தினரை ஆருத்ரா தரிசனம் மனதார வாழ்த்திக்கொள்கின்றது.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மிக நேர்த்தியான ஐரோப்பிய கட்டடக்கலை பாரம்பரியத்துடன் அழகாக வடிவமைக்கப் பட்டிருப்பதாகவும், கட்டடங்களை கட்டும் போது குறுக்கிட்ட பெரு மரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு கனிஷ்ட பாடசாலை அமைந்தததாகவும் நண்பர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பெருமளவு தகவல்கள் புகைப்படங்கள்,அதிபரின் கடிதங்கள் இந்த செய்திப் பரிமாற்றத்திற்காக ஆருத்ரா தரிசனத்துக்கு தந்துதவப்பட்டன.

மிக மிக இக்கட்டான தருணங்களில் புலம் பெயர் தமிழர்களின் உணர்வு பூர்வ ஒன்று கூடல்கள், பங்களிப்புகள் லண்டன் மாநகரிலே எழுச்சியுடன் வடிவமைக்கப்பட்டு செயலாக்கம் கண்டன. அறிவும், ஆக்கமும் இணைந்த செயல் முறைத் திட்ட வடிவங்கள் நேர்த்தியாக நிகழ்த்திக் காட்டப்பட்டதாக தரவுகள் எடுத்து காட்டுகின்றன.

ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாததை ஒரு புகைப்படம் வெளிப்படுத்தி விடும் என்பார்கள்.கட்புலனின் சொரூப விளக்கம் (visual) ஆயிரம் சேதி சொல்லும்.

சாவகச்சேரி இந்துக்கல்லுாரி கனிஷ்டபிரிவு  அதிபரின்  உதவிகோரல் கடிதம்  இது. கனிஷ்டபிரிவு  மாணவர்களுக்கான  ஆங்கிலக்கற்கை நெறிக்கான   செலவினை வெளிநாட்டு வாழ்  அன்பர்கள்  ஏற்றுக்கொண்டு  உதவுமாறு  கேட்கும்    கடிதம் உங்கள்  பார்வைக்கு  வைக்கப்பட்டுள்ளது. மனமுவந்து  தாராள  நிதி  வழங்கும்  வள்ளல்கள்  பாடசாலை   அதிபருடன்  தொடர்பு  கொள்க.  கடிதத்தை   மீள்  அழுத்தி  பெரிதாகப் பார்க்கலாம்.

”கல்விக்கண் ” மேலும் சிறப்புற்று தகமையுடன் செயலாற்றி ஏழை மாணவர்களின் கனவுக் கல்வியை அவர்களுக்கு நிதர்சனமாக கிடைக்க செய்ய செயலாற்றி வருவதற்காக தென்மராட்சிப் பகுதி வாழும் எம்மவர்கள் உங்களை ஆண்டாண்டு காலம் நினைவில் வைத்திருப்பார்கள்.

எழுத்தறிவித்தவன் இறைவன்  ஆவான் .

வன்னியில் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி எனதுஅப்பா,அம்மா மற்றும் சகோதரர்கள் இருவரும் அங்கு உயிர் பிரிந்தனர்.வன்னியில் எமது குடும்பம் ஓரளவு வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வந்த குடும்பமாகும். கல்வியில்எனக்கு நல்ல பிடிப்பு. நான் படித்து ஒரு ஆசிரியராக வரவேண்டும் என ஆவல் கொண்டு என்படிப்பைத் தொடர்ந்தேன்.ஆயினும் வன்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டினால் என் அப்பா, அம்மா மற்றும் இருசகோதரர்களைப் பறி கொடுத்தேன். எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. படிப்புக்குமுற்றுப்புள்ளி வைக்கலாமா? என யோசித்தேன்.

அச்சமயத்தில் தான் அறவழி நிறுவனத்தினரின் தொடர்பு எனக்கு கடவுளின் சித்தத்தினால்கிடைத்தது. லண்டனில் இருக்கும் அண்ணாமார்களின் உதவியுடன் அமுல்படுத்தப்படும்கல்வித்திட்டத்தில் நான் கடவுளின் பாக்கியத்தால் இணைக்கப்பட்டேன்.

இப்போது நான் அறவழி நிறுவனத்தினரின் ஆதரவுடன் சாவகச்சேரி கல்லூரி ஒன்றில்தரம் 09 ல் கல்வி கற்று வருகின்றேன் எனக் குறிப்பிட்டார். நுணாவிலைச் சேர்ந்த மாணவர் ஒருவர்.

எங்களுக்கான   பழத்தோட்டங்களை  விரும்பி  நாங்கள்   ஆக்கி  வைப்போம்!

—————————————————————————————————————————-

ஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 8, 2012

இளையராஜா என் காதலுக்கு இசையமைத்தவர் பாகம்-3

வாழ்வென்ற நீள் வழிப் பயணத்தில் பிரிவுகளும் வந்து ஏகிப் போகின்றன. சந்திப்பதில் குதூகலித்துக் கொள்ளும் மனம் பிரிவைச் சிரமத்துடன்ஏற்றுக் கொண்டு ஆதிக்காலத்தின் மீதிக் கணங்களில் கண்கள் பனிக்க கவலை கொள்கின்றது.பிரிவின் கடைசிக் கணங்களை ஞாபகப் படுத்திக்கொள்ள முடியுமானால், உறவின் முதல் சந்திப்பும் ஞாபகத்தில் இருந்து கனத்துக் கொண்டிருக்கும். எனக்கும் அப்படித்தான் ஆகி இருக்கிறது. காதலில் மோசமான தருணங்களும், பிரிவுகளும் காலம் தோறும் அழகாகப் பரிணமித்து அழுது தொலைக்கும், நினைவின் வீச்சும் பேச்சும், இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டிருக்கும்.

இளையராஜா என் காதலுக்கு இசை அமைத்து பாகம் ஒன்று, இரண்டை கொண்டிழுத்து என்னை பரவசப்படுத்தியது போன்றே ஜீவாவின் மரணத்திற்குப் பின்னும் இளைய-ராஜாவாக வலம் வருவது காதலின் கனதியை வெளிச் சொல்கின்றது.

கடவுள் இருக்கின்றாரோ இல்லையோ
தேவதை இருக்கின்றாள்
அது போதும் எனக்கு – தபூ சங்கர்

தேவதைகளுக்கு சிரிப்பு என்பது அழகாக வாய்த்து விடுகின்றது. உனது ஒவ்வொரு சிரிப்பும் கண்களின் வழியாக நடைபெற்றுப் போவதாகவே நினைவு கொள்ளப்படுகின்றது. அண்மைய சிரிப்பும் அவ்வாறு தானோ?. முகநூலில் கண்கள் கொப்பளிக்க சிரிக்கும் சிரிப்பு உன்னுடையதாகையில் பிரிவின் பெருவெளியில் உன்னை தவற விட்டதற்கான மூழ்கும் தருணம் அடிக்கடி என்னை அலைக்கின்றது.

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்.

 அந்த தனியார் கல்வி நிலையத்திலும், தேமா மர மதிலோர கல்லூரியிலும் வளர்த்துக் கொண்ட காதல் எனக்கான பால்ய காலத்து ஆதிப் பூக்கள். காலமெல்லாம் வசந்தமாக கன பரிமாணத்துடன் வீச வேண்டிய காதலைக் கடைசிவரை கொண்டிழுப்பதற்கு வசதிக் குறைபாடும், சமனாகாத பொருளாதார ஏற்றத்தாழ்வும் காரணமாகப் போயிருக்கலாம்.

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே.
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்
நீ வளர்ந்ததாலே .

இங்கே குறிப்பிடப்படுவது பதின்ம வயது காதல். அது அதற்குரிய குணாதிசயங்களையும், நினைவற்ற ஏக்கங்களையும், முடிவற்ற துயரங்களையும் கொண்டது.

எண்பதுகளின் ஆரம்பம். தனியார் கல்வி நிலையத்தில் நீ, நான் தவிர மற்றவர்களும் கற்ற காலம். உனக்கென்ன? தனித்து ஒரு பெண். டியூசனுக்கு பணம் தருவதற்கே பற்றாக்குறைப் பொருளாதாரம் இடமளிக்காத சூழல் என்னது. இடையில் மூன்று மாதங்கள் மிக இறுக்கமான வாழ்வுச் சூழலும், வசதிக் குறைபாடும் வாட்டி எடுத்த நிலையில் டியூசனில் இருந்து நின்று கொள்ளலாம் என்ற நிலையும் வந்தது.

”தான் போகக் காணேல்லை மூஞ்சூறு விளக்குமாற்றையும் கொண்டிழுத்ததாம்” போல ஆகி விட்டது எனது காதல். உன்னை காண முடியாததான பெருந்துயரம், காதலை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்,அதைத் தொய்வின்றி கொண்டிழுப்பதற்கான மன நிலை எல்லாவற்றையும் ஒருசேர தலை முழுகி விட்டு பற்றாக்குறைப் பொருளாதாரத்திற்கு பதுங்கி உயிர் விடும் நடுத்தர வர்க்கத்து நரகம்.

கூரை வீட்டு பொத்தலுக்குள் மழை நீர் மட்டும் ஒழுக வேண்டியதில்லை. கண்களும் ஒழுகி கண்ணீர் மல்கும். .

அந்தமான் காதலி படத்தில் சுஜாதா சொல்லும் வசனம் முழு ஏழ்மையை அறைந்து சொல்லும்.

“ஏழை வீட்டில் கோழிக் குழம்பு என்றால் ஒன்று அந்த வீட்டில் யாருக்கோ நோய் வந்திருக்கின்றது” என்று அர்த்தம்.அல்லது “கோழிக்கு நோய் வந்திருக்கின்றது”என்று அர்த்தம்.

உனது பளபள Chopper சைக்கிளும் துருப்பிடித்து கிரீச் போடும் 900 ரூபா சைக்கிளும் காதலுக்குரிய சம தகுதிகளை என்னிடமிருந்து விலக்கிய வேளைகளில், நீயும் அதிகம் தொலைவில் என்னை விலகிச் சென்றாய். இதற்காக என்றோ, அதற்காக என்றோ காரணம் கூறி சொல்ல முடியாது போனாலும், எதற்காகவோ அதுவும் நிகழ்கின்றதான நிகழ்தகவு வறுமையின் நீர் பிடிப்பற்ற துயரின் படிமமாக என்னுள் படிந்து கிடக்கின்றது.

டியூசன் பணம் கட்டமுடியாத அவமானத்துடன் குறுகிய வேளையில், என் உயிரனைய நண்பன் மட்டுவில் நிமலன் எனது மூன்று மாத டியூசன் காசையும் தனது மாதச் சேமிப்பில் இருந்து தந்து உதவியதோடு ”என் கல்வி தடையற வழி வகுத்தான்” என்று இவ்விடத்தில் பதிவிட விரும்பவில்லை. என் காதல் தடையற வழி வகுத்தான் அல்லது நீட்டிக்க வழி வகை செய்தான்.

வாரத்தில் ஒரு நாளாவது கனடாவிலிருந்து அதிகாலையில் என் நித்திரையைக் குழப்பி மணிக்கணக்கில் கதைத்து கனவுப்படிமங்களை மீள் நிறுத்தும் நிமலனை எங்கள் கதைத்தலின் சாராம்சம் ஜே. கிருஷ் ணமூர்த்தியோ,எம் எஸ் உதயகுமாராகவோ இருந்தாலும் நான் பொறுத்துக்கொள்வது மூன்று மாத காலம் என் வறுமைக்கு நீர் வார்த்த வள்ளல் என்பதனாலேயே.

அந்த தனியார் கல்வி நிலையத்தில் சரஸ்வதி பூஜை நடப்பதற்கு ஏற்பாடாகிற்று அந்த தனியார் கல்வி நிலையம் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே என்பதால், அந்த வருடத்துடன் பத்தாவதை நிறைவு செய்யும் வகுப்பினர் அதை கோலாகல விழாவாக கொண்டாடி விடுவார்கள். பெரிய அலங்கரிப்பு, தென்னந்த் தோரணம், குலை வாழை மரம் கட்டுதல் சற்றேறக் குறைய ஒரு திருமண வீட்டிற்கான முழு சோடனையும் இடம்பெறும்.

கல்வி கற்கும் மாணவர்கள் முடிந்த அளவு முழுச் சிரத்தையோடு சிறிய கலை நிகழ்வுகளையும் தாங்கி, பெரிய கலை நிகழ்வாக மோகன் பூர்ணிமாவுடன் காதல் கொண்டு இருமி இருமி செத்த ”பயணங்கள் முடிவதில்லை ”படத்தை தொலைக் காட்சியில் திரையிட்டார்கள்.

” மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து” பாடலும்,

“இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் ‌தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால் அழுதிடு‌மோ? அது மழையோ?

பாடலும் கேட்கும் போதெல்லாம் அந்த தனியார் கல்வி நிலையமும், இருமி இருமிச் செத்த மோகன் பூர்ணிமாவும், எனது பதின்ம வயதுக் காதலும், கண்கள் கொப்பளிக்க சிரிக்கும் நீயும், என்கண் வழியும் நீரும், சூரிச்சும் லண்டனும் ஆகி தொலைவான காதலும் தட்டாமாலை சுற்றுகின்றன.

பருவம் பொல்லாதது
பள்ளி கொள்ளாதது
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி இச்சைகளை மேனி கேட்கின்றதுவாலி

தனது பிராத்தனாவை இழந்த பெருந்துயரை ”வட்டியும் முதலு”மாக போட்டு வாங்க தமிழ் நாட்டின் பெரிய வாசகர் தளமான ஆனந்த விகடனை ராஜு முருகனும், சசியை இழந்த பெருந்துயரை தனது கவிதைத் தொகுப்புக்கள் ஏதாவதை கலாப்பிரியாவும் பயன்படுத்த இந்த ஆருத்ராவும் மறுகி உருகிக் கவலை வாங்கிக் கொண்டதை பதிவில் இடக் கூடாதா என்ன?.

ஊரே உறங்கிக் கொண்டிருக்க, மூன்றாவது சாமத்தின் நள்ளிரவொன்றில் படுக்கை தொலைத்து பதிவு எழுத வேண்டிய துர்ப்பாக்கியம் நமக்கு வாய்த்திருக்கின்றது .உங்களுக்கு தேவையான எதனையும் முழு விருப்பத்துடன் பற்றிக் கொள்வதற்கும், தேவையற்ற தருணத்தில் விட்டு விலகவும் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கின்றது. முழுச் சுதந்திரத்தின் நியாயாதி,அநீதிகள் ஒருவருக்கு ஆழ்ந்த மனத் துயரத்தையும், மற்றவருக்கு அலட்டிக் கொள்ளாத மனப்பக்குவத்தையும் அளித்திருக்கின்றது.

பாண்டி ஆட்டத்தின் முதல் உப்பை
நான் கடவுளுக்கு கொடுத்தது கிடையாது.
முதல் பல் விழுந்த போது
சாணத்தில் பொதிந்து சொர்க்கம் நோக்கி
எறிந்தது கிடையாது.
ஒரே ஒரு முறை தான் நூலில் பக்கத்திற் கொன்றாய்.
விட்டில் பூச்சிகளை கட்டி பரிதவிக்க விட்டிருக்கின்றேன்.
இருந்தும் மருத மர நிழல்கள் மீட்டாத
தண்டவாளச் சோகங்களை
எனக்கேன் நிரந்தரித்தாய் சசி-   கலாப்பிரியா

இங்கே மனிதர்கள் தங்களுக்கான மொத்த மனச் சாட்சிகளையும் தொலைத்துப் பல நாட்களாகின்றது.

கல்லூரியின் தல விருட்சமான தேமாக்களுக்கு உயிர் வலித்துயரமும், நீண்ட பெரு வழித் துயரமும் புரிந்து கொள்ள முடியுமெனில் நான் தேமாக்களுடன் உரையாடத் தலைப்படுகின்றேன்.தேமாக்கள் நான் சொல்வதை,உணர்வதை மௌனமாக தலையாட்டிக் கேட்க அங்கு வீசும் மென் காற்று உதவி புரிந்து போகட்டும்.

நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்.
மேடைக்கு ராஜா போல் வேசங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது?.

நெற்றியில் ஒற்றை திருநீற்றுடன் சைக்கிள் இல்லாத காலத்தில் தோளில்புத்தகப் பையுடன் எங்கள் வீதி வழியாக செல்லும் தேமாவை 2002 இல் கூட எனது அன்னை நினைவில் வைத்து கேட்டார்கள்.

“கல்வயல் கறுத்தப் பிள்ளை ” என்று அவளால் நினைவு கூர‌ப்பட்டு வினவப்பட்ட உன்னை காலவழியில் தொலைத்த கிளிஞ்சல்களாக காலம் ஆக்கி வைத்திருக்கின்றது.

ஒரு நள்ளிரவு சிவராத்திரியாகிக் கொண்டிருக்கப் போகின்றது காலைவரை!.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000

ஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 3, 2012

ZURICH- மழை நாளின் காலை.

“வெள்ளத்தனைய மலர்நீட்டம். மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு”.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா”.

எனக்கு பதிவு எழுதுவதற்கு மாபெரும் சந்தோசம் உகந்ததாக இருப்பதில்லை. மிகப்பெரும் துயரம் மனதை அழுத்த அதன் பீறிடலாக பதிவுகள் அமைய எழுதுவது இலகுவாக இருக்கின்றது. அவ்வாறான ஒரு மழைநாட்காலை சனிக்கிழமை விடுமுறையுடன் அமைந்திருப்பதும் முகசோதிடத்தில் தேர்ந்த மனையாள் முகக்குறிப்பறிந்து எழுதுவதை எழுதிவிட்டு பின்பான நேரத்தை தங்களுடன் செலவழிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்ததாலும் ஆங்கிலத்தேதி 1.9.2012 தமிழுக்கு நாள் ஆவணி மாதம் 17 திகதி சுக்கிலபட்சத்து பிரதமையில் நந்தன வருடம் காலை 8.30 மணிக்கு கற்பூரச்செடி முளைவிட்டு கிளை பரப்பிய சன்னலோரம் எழுதுவதற்கு உட்கார்ந்துள்ளேன்.

“இன்றைய நாள் எல்லோருக்கும் அழகாக விடியவேண்டும் “என்ற பதமும் “இதுவும் கடந்து போகும்” தத்துவமும் ஒவ்வொரு நாளையும் இனிதாக கடக்க உதவி புரிகின்றது. துயரத்தின் முழுமையான பரிமாணம் ஒட்டு மொத்தமாக சில வேளைகளில் எல்லாவற்றையும் கலைத்துவிடுகின்றது.

காலையில் தேதி பார்த்ததும் “ஆருத்ரா தரிசனம்” ஒவ்வொரு கிழமையும் புதிய இடுகைகளால் நிரப்பப்படவேண்டிய நெருடலும், நீண்ட மனஇறுக்கத்தை வெளிப்பரப்பில் வைத்து காற்றாகி இலகுவாக வேண்டிய தேவையும் எமை எட்டி உதைத்தது. எட்டி உதைத்து கலைத்தால்தான் எட்டுவயதுக்கழுதைக்கும் புத்தி உறைக்கும். முழுச் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு தொடர விளைந்தால் நினைவின் அடுக்கு நெடிதுயர்கின்றது.

இந்தவாரம் முழுச் சோம்பேறித்தனமாக அமையவில்லை. பதிவில் இடுவதற்கு இருவேறு பதிவுகள் நண்பர்களிடம் தட்டச்சு செய்ய கொடுத்தாகிவிட்டது.

” தேமாவும் காதலும்” பதிவின் ஆறுபக்கங்களும் கிடைத்ததாகவும் Print out எடுத்து டைப் பண்ணப் போவதாகவும் நண்பர் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். ”இளையராஜா என் காதலுக்கு இசையமைத்தவர் பாகம்-3” என்றுதானே வரவேண்டும்? ஏன் ”தேமாவும் காதலும்” என்று பெயர்மாற்றம்? என்று ஏக்கம் தொனிக்க அடுத்த குறுஞ்செய்தி.

கெவின் கார்ட்டர் பற்றிய அடுத்த பதிவு. புலிட்சர் விருதுபெற்ற தென்னாபிரிக்க புகைப்படப்பிடிப்பாளர் பசியையும், வறுமையையும் காசாக்கி தன்னை நிலைப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் புடைசூழ மன அழுத்தத்திற்கு ஆளாகி உயிர்துறந்த துயரப்பதிவு.

இவ்விரண்டு பதிவுகளும் தற்போதைக்கு இல்லையென்றாகிவிட்டது. ஒரு பதிவை தற்போதைக்கு நிறுத்தி வைத்து இன்னொன்றை மற்றொன்றாக மாற்ற வேண்டிய சூழலும் அலைக்கழிக்க வைக்கின்றது.

1993 ம் ஆண்டில் கனடா “செந்தாமரை”யில் சில ஆக்கங்கள் வெளிவந்த நிலையில் அதன் பிரசுரத்திற்கு தயாரானதே “என் காதலுக்கு இசையமைத்தவர் இளையராஜா“. பதின்மவயதுக் காதலை பதின்ம வயதை தாண்டிய மிகக் குறுகிய காலத்திற்குள் எழுதிவைத்து தர்மசங்மடம் காரணமாக அனுப்பி வைக்காமல் இருந்து, பதிவர்- பதிவுலகம் கணணியில் கைவரப் பெற்றநிலையில் பரணில் இருந்து தூசி தட்டி சில பிற்சேர்க்கை சேர்த்து பதிவிலிடப்பட்டது.

வாசித்து கண்கலங்கி கருத்திட்டும், தனிப்பட்ட முறையில் மின்மெயிலிட்டும் உவந்த அன்பர்குழாம் உணர்ச்சிபெருக்காக அமைந்திருப்பதாகவும் தங்களின் கல்விச்சூழலை வாழ்க்கை தராதரங்களை ஒப்பிட்டதாகவும் கனமழை பொழிந்து போனார்கள். பதின்ம வயதைத் தாண்டிய முதிர்காலத்து அந்திம ஆத்மா பதிவை பதிவாக பாரக்கும் ஒரு பதிப்பாளருக்குரிய மனச் சிரத்தையுடன் சில நாட்கள் காலம் கழித்தது. இளையராஜா கா.இ. 1 ,2 எல்லாம் பதிவிலிடும்போது ஒன்றும் ஆகவில்லை. பிறழ்ந்த மனம் முதிர்காலத்துக்கு முந்தைய பதின் வயதிற்கு மீண்டும் பிரவேசித்தவேளை துயரம் ஊற்றெடுத்தது. உயிரனைய உள்ளங்களை காயப்படுத்துவதை விட்டு அது என்னை அதிகம் பாதித்தது.

பிரிவு என்பது சிலவேளை மாபெரும் சந்தோசமல்லவா? “தெளிவான மனநிலைதானே மனிதனுக்கு மாபெரும் வரப்பிரசாதம்” என்பதாகவெல்லாம் கலவரப்பட்டுப்போன மனம் ஓஷோவின் தத்தவங்களுள் மூழ்க ஆரம்பித்துவிட்டது. நீ! நீயாகவே இரு. அந்த நான் பதிவரா? பதிவிலிருந்து என்னை விடுவித்து பதின்வயதில் மூழ்க ஆரம்பிக்கும் முனையற்ற ஈட்டியா?

பதிவர் தன்னிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ஒரு பார்வையாளராக தன்னை வெளிக்கொணர்கின்ற நிலையில் இளையராஜா காலாகாலத்திற்கும் என் காதலுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பார். இன்னும் இரு பதிவுகளின் பின் முற்றுப்பெற்று, முற்றுப்பெற்ற பின் ஞானாதிக்க நிலையின் பிரிவான “தன்னிலையறிதலு”க்குள் தன்னை முழுதாக அர்ப்பணித்து விட இயல்பு அழைக்கின்றது. பல் விருபமாகி , பறவையாய், பாம்பாகி, வல்ல சிவனாகி, முனிவராய், தேவராய்.

“எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்”.

காமமும், காதலும் தான் ஒரு வாசகர் தளத்தில் அதிக கவனிப்பையும் கைதட்டலையும் பெறுகின்றன. எனது “நித்தியானந்தாவும் றஞ்சிக்குட்டியும்“ ஜனவரி பதிவிடப்பட்ட “நகுலபாஸ்கரனில்” இருந்து அண்மைய பதிவான “ஒரு குருடனின் நிறப்பிரிகை” வரையான இருபத்துநான்கு பதிவுகளில் அதிகம் வாசிக்கப்பட்டதாக தளமேலாண்மை தகவல் தெரிவிக்கின்றது.

இளையராஜா என்காதலுக்கு இசையமைத்தவர் பாகம்-2ம், கண்ணா உனைத்தேடுகிறேன் 3 வதுமாக வாசக கவனத்தைப் பெற்றன. “ஆருத்ரா-தரிசனம்” மிகப்பெரிய மனச்சாந்தியை தந்துகொண்டிருக்கின்றது.

நித்தியானந்தாவும் றஞ்சிக்குட்டியும் அமோக வரவேற்பை பெற்றபின் எனக்குள் எழுந்த மிகப்பிரதான கேள்வி “சிட்டுக்குருவி லேகியம் விற்கப்போய்விடலாமா”? என்பது தான். இன்று பாதிப் பத்திரிகைகளை அலங்கரிப்பவை உறுப்புச்சிறுத்துப்போதல், துவண்டுவிடல், துரிதஸ்கலிதம் பற்றிய விளம்பரங்களும்- ஏழாவது தலைமுறை வைத்தியர்களும் தான்.

பதிவுகள் பதிவர்களுக்கு மிக நீண்ட ஊடக சுதந்திரத்தை கொடுத்துள்ளது. பதிவர்களது தனிப்பட்ட ஆளுமை ஆக்கத்திறனாகவும், படைப்புத்திறனாகவும் அமைந்து “ஒற்றைப்படையல் – ஒருவிருந்து” கணணிவலை ஊடாக அரங்கேற்றம் ஆகின்றது. தகவல் யுகத்தின் கட்டுக்கடங்காத பெரு வெள்ளமாக வலையகமும், ஊருக்குள் வாய்த்த “பொதுக்கிணறு”களாக தனிநபர் பதிவுகளும் இடம் பெற்று உடல் சோரக்குளித்து – ஊர்க்கதை பேசி- வயலோரம் காற்று வாங்கி மகிழ்வெய்திக் கொள்ளும் இருப்பு உயர்ந்திருக்கின்றது.

வாசிப்புப்பழக்கம் அருகி விட்டதெனவும் தமிழின் கலை- இலக்கிய ஆக்கங்கள் பெரும் வாசகப்பரப்பை அடையவில்லை எனவும் பரவலான ஏக்கங்கள் எங்கும் ஒலிக்கின்றன. வாசகர் தளத்தின் பாதிப்பேர் முன்னேறி பெரும் படைப்பாளிகளாக இணையவலையின் சிறுகுறிப்புகளுக்கு Likes,Comment வரையத் தொடங்கிவிட்டார்கள். மாபெரும் இலக்கிய சாதனையாக நாளை Likes,Comment அமைந்து உயிரெடுக்கப் போகின்றன.

சிலருடைய முகநூல்களில் அருமையான கருத்தேற்றம், சுவையான செய்திப்பரிமாற்றம் என இணக்கமான வரைபுகள் காணக்கிடைக்கின்றன.

முதல் நாளிரவு இணையவலை Twitter இல் கண்டு களித்தவை.

1. வாழ்க்கையும் பிரியாணியும் பீஸ் புல்லா இருக்கணும்.

2.அண்ட்ராயர்  தெரியும்படி    தனது வேட்டியை  மடித்துக்கட்டிய தமிழன்தான்,பரிணாம வளர்ச்சியில் இன்று  ஜ‌ட்டி  தெரியும்படி ஜீன்ஸ் அணிகின்றான்.

இன்றைய சனிக்கிழமை கோலாகலமாக கழியவில்லையாயினும் குழப்பமின்றி கழிந்தது. இங்குள்ள தமிழ்கடைகளில் உயிர்கோழி என நாட்டுக்கோழி விற்பனை செய்கின்றார்கள். செத்த கோழி எப்படி உயிர்க்கோழியாகும் என்ற வினா தமிழ்கூறும் நல்லுலகத்தில் ஓங்கி ஒலிக்கட்டும்.

அவ்வாறான நாட்டுக்கோழி ஒன்றை வாங்கி நான் கொத்திக் கொடுக்க (கொத்தியா? வெட்டியா?) ஆக்கிக் கொடுத்த மனையாளின் அன்புப் பரிமாறலுடன் ஒரு சனிக்கிழமை ஜென்ம சாபல்யம் அடைந்தது.

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்