ஆருத்ரா எழுதியவை | ஜூன் 19, 2012

கந்தர் மடம் -நாக.தயாகரன்.

ஊரின் நினைவுகளும், பழைய ஞாபகங்களும் எல்லோருக்கும் எப்போதும் ஒரே மாதிரியானவை தாம். வேண்டுமானால் வாழ்ந்த காலங்களும்,ஊரின் பெயர்களும் அவரவருக்கு மாறுபடலாம். அவை ஏற்படுத்தி தருகின்ற வலிகளும், மனதை கிளர்த்தி ஏற்படுத்துகின்ற நெருடல்களும் அலாதியானவை. அதனை எழுத்தில் வடித்துவிடும் வல்லமை பெற்றவர்கள், அதனை பதிவாகவோ கதையாகவோ எழுதி தத்தமது மனப்புழுக்கங்களுக்கு வடிகால் அமைத்துவிடுகிறார்கள். மற்றவர்கள் மனதுக்குள் பதியம் போட்டுவிட்டு புழுங்கித்திரிவார்கள். அப்படித்திரிபர்கள் கண்களில் தென்படும் ஊரின் நினைவுகள் நிறைந்த படைப்புகள் பிறந்த பயனை நொடியில் எய்தும். குறித்த படைப்புகளில் பதிவுகளில் வரும் குளங்களில், கோயில்களில் ,கதாபாத்திரங்களில், பழையகாதல்களில் எல்லாம் தங்களுடையதை தரிசித்து அரைக்கிறுக்காக சிலநாள் சுற்றுவார்கள்.

ஆருத்ராவின் பதிவுகளை படித்துவிட்டு இப்படி அரைக்கிறுக்கில் திரிந்த என்மீது தான் ஆருத்ராவின் “கொலைவெறி”ப் பார்வைபட்டது. அடுத்த TARGET கந்தர்மடம் தான். நீர் தான் எழுதுகிறீர். வரும் 19ம் திகதி DEADLINE என கால எல்லை வகுத்துவிட்டு பிரம்புடன் அலையும் வாத்தியார் தோரணையில் மிரட்டுகிறார். எனக்குத் தெரிந்து ஒரு மாதஇதழ் நடத்தும் அளவுக்கான நேர்த்தியுடன் பதிவு எழுதும் நபர் இவராகத்தானிருப்பார்.

பொதுவாக மனிதர்களை அவர்களின் குணஇயல்புகளை வைத்து மதிப்பீடு செய்வர். சிலவேளைகளில் மனிதர்களின் குணஇயல்புகளை அவர்களின் ஊருடன் தொடர்புபடுத்துவதும் உண்டு. மனிதர்கள் பற்றிய இவ்வாறான மதிப்பீடுகளுக்கு நான் எதிரானவன் என்ற போதும் இவ்வாறான சிந்தனைகளின் தொடர்ச்சி பற்றி யோசிப்பதுண்டு. இப்படிப்பார்த்தால் எனது ஊருக்கும், ஊரின் மாந்தர்களின் குணநடைகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பது போலவும் தோன்றுகின்றது. இது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் அலுவலாகவும் இருக்கலாம்.

ஆருத்ராவிடம் இருந்து தப்பிக்க நானும் எதையாவது எழுதியாக வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க. மற்றையது நான் சொல்லவருவது இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய எனது குழந்தை நினைவுகளை. கந்தர்மடத்தின் இன்றைய முகம் இப்போது மாறிப்போயிருக்கலாம்.

கந்தர்மடம் என்பது சிற்றூர் என்றோ,கிராமம் என்றோ, நகரம், பெருநகரம் என்றோ வகைப்படுத்த முடியாத ஒரு வகையறா. அதிலும் எனது வீடு அமைந்திருக்கும் பகுதி பலாலி-வீதி பழம்-வீதி அரசடி-வீதி என்ற மூன்று நதிகளின் சந்திப்பாக, ஒரு ஏழாற்றுப்பிரிவின் சுழிபோல இருக்கும்.

இங்கு வாழும் மாந்தர்களை உற்றுப்பார்த்தால் அவர்களுக்குள்ளும் இது அப்பிப்போயிருப்பது போலத் தோன்றும். ஒரு வீதியில் வாழும் மாந்தர்கள் தங்களை பெருங்குடி மக்களாய் சொல்லிக் கொள்வர். வீடுகளும் பழையகால  நாற்சார் வீடுகளாய், வாழ்ந்து கெட்ட அரண்மனைகளாய் காட்சி தரும். பழம்பெருமை ஒன்றைத் தவிர அவர்களுக்கான வாழ்வாதாரமாய் ஏதுமிருக்காது. வீடுகளை பெருக்கி சுத்தம்செய்வதென்றால் கூட குறைந்தது முப்பது மனித மணித்தியாலங்கள் மொத்தமாய் தேவைப்படும். ஆனால் பழுத்து விழும் பலாக்குழைகளை யாரும் வந்து பொறுக்கிச்சென்று மாடுகளுக்கு தீவனமாய் போடுவதற்கு கூட அந்த அரண்மனைகளின் நீதிபரிபாலனம் இடமளிக்காது. பலாமரங்களில் இருந்து பழுத்து விழுந்த பழங்கள் நிலங்களில் கிடந்து அழுகி புழுத்து உக்கி மண்ணோடு மண்ணாகும். வயிறு வளர்த்த பெருமான்கள் மூன்றுநேர நித்திரை ,ஆறுநேர உணவு என தம்பாட்டில் தங்கள், தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து தொலைப்பர். அவரவர்களின் பெயர்களுக்கு முன்னால் LAWYER,DOCTOR என தொடங்கி மக்கள் அவர்களில் வைத்திருக்கும் மதிப்பிற்கேற்ப புறக்கிறாசி, பரியாரி என்பதாக அடைமொழிகள் நீளும்.

இன்னொரு வீதியின் மாந்தர்களை கவனித்தால் அவர்களின் அகராதியில் நாளை என்பது இருக்காது. நாளை என்பது இருக்காது என்பதால் அவர்கள் இன்றையை இன்பமாய் வாழ்ந்து தொலைக்கிறார்கள் என எண்ண வேண்டாம். இன்றையை வாழ்வதற்கும் அவர்களிடம் ஏதும் இருக்காது. காலை எழுந்தவுடன் படிப்பு, பின் கனிவுகொடுக்கும் நல்ல பாட்டு என்பதெல்லாம் தங்களை மிடில்கிளாஸ் என்று கூறிக்கொண்டே மேட்டுக்குடிகளாய் வாழ்பவர்களுக்கு மட்டும் தானோ? என்றுகூட சிலவேளைகளில் எண்ணத்தோன்றும். அவர்களின் காலைகள் எப்போதும் சூரியனுடனும், பிரச்சனைகளுடனும் சேர்ந்தே உதயமாகும். காலைக்கடன் கழிப்பதில் தொடங்கும் பிரச்சனைகள் பெரும்பாலும் இரவின் சோமபான சபாக்களின் விரசமான வார்த்தைகள், கத்தல்கள், அலறல்களுடன் கூடிய கலகங்களில் முடிவுக்கு வரும். கலகங்கள் இல்லாத நாட்களில் வாடகைக்குப் பெற்ற தொலைக்காட்சிப்பெட்டியின் சத்தம் இட்டுநிரப்பும். அந்த தொலைக்காட்சிப் பெட்டியை இயக்குவதற்கான மின்சாரம் “கள்ளகறன்ற்” என்று சொல்லப்படுகின்ற அனுமதி பெறப்படாத முறையில் பெறப்படும். அது பலவேளைகளில் எமது வீட்டிலிருந்து தான் செல்லும். இதற்காக அவர்களுக்கு மின்சார இணைப்பு வழங்க மறுத்து ,அதனால் வரும் பின்பகைகளை சந்திக்க எனது தந்தை விரும்பவில்லை என்பதுதான் ஒற்றைக்காரணமாய் இருக்கமுடியும். அப்படி செல்கின்ற மின்சாரத்திற்கான பில் எமக்கு வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள அவர்களுக்கும் அதீத ‘தொழில்நுட்பம்’தெரிந்திருந்தது. அது ஊரேகூடி ஒற்றைத் தொலைக்காட்சி பார்க்கும் திருவிழா அவர்களுக்கு.

உண்மையில் அவர்கள் தங்கள் வீடு, தங்கள் காணி என்று சொல்லிக்கொள்பவை அவர்களுடையவை அல்ல. (அதை அவர்களிடமே கொடுத்து விடலாம். அது வேறுகதை) கோயில்காணிகள் என்று சொல்லப்படுகின்ற மாநகராட்சியின் ஆளுகைக்குட்பட்ட பல்வேறு கோயில்களுக்கும் தானமாக வழங்கப்பட்ட காணிகள். கந்தர்மடத்தின் குறிப்பிடத்தக்க பெரும்பகுதி எனது அம்மம்மாவின் தகப்பனாருக்கு முதுசமாக இருந்ததாம். அவர் குறிப்பிட்ட பகுதிகளை விற்றும் மற்றையவற்றை தன் பிள்ளைகளுக்கு சீதனமாகவும் கொடுத்தாராம். ஒரு ஒழுங்கைக்குள் (முட்டுசந்து) பக்கம், பக்கமாக இருந்த இந்தக்காணிகளையும் அம்மம்மாவின் சகோதரங்கள் விற்றுவிட்டு செல்ல, இப்போது எங்கள் காணிமட்டும் தனியாக பழம்பெருமை பேசியபடி GOOGLE தேடுபொறியில் தேடியபோது பரமேஸ்வரிகாணி என குறித்த காணிகள் எனது அம்மம்மாவின் பெயரால் குறிக்கப்பட்டிருந்தது எனக்கு ஆச்சரியமூட்டிய விடயம். மேலும் அக்காகடை, தமயந்தியக்காவீடு , வீரசிங்கம் விறகுகாலை என பேச்சுவழக்குப் பெயர்களெல்லாம் GOOGLE வரை வந்திருப்பது புரியமுடியாப் பெரும் ஆச்சரியம். சரிவிடயத்திற்கு வருவோம். இப்படியாக கோயில்காணிகள் என்றழைக்கபட்டவை பராமரிப்பின்றி பற்றைக்காடாய் பயனின்றி கிடந்தபோது மேலே நான் சொன்ன மாந்தர்கள் அவற்றை வெட்டித்திருத்தி அதில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டனர். வாழ்வை அமைத்துக்கொண்டனர் என்று நான் சொல்வதால் கோட்டை கோபுரம் எல்லாம் அமைத்துக்கொண்டனர் என நினைக்கத்தேவையில்லை. அந்த காணிகளுக்குள் படுத்து எழும்ப கற்றுக்கொண்டனர் எனக் கொள்க.

விறகு கொத்த கந்தையாவை அழைப்பதற்கு அல்லது மாவிடிப்பதற்கு நாகம்மாவை, தவமணியை அழைப்பதற்கு செல்வதற்காக என்னை அனுப்புகின்ற சின்னசின்ன சந்தர்ப்பங்களில்லாம் எனது நட்புப்பாராட்டும் குணஇயல்பினால் அவர்களின் நல்ல நண்பனானேன். நண்பனானேன் என்பதை விட நட்புள்ள சின்னப்பெடியனானேன் என்பதே பொருத்தமாகும். அதனால் அவர்கள் வாழ்வின் உள்முகத்தை காணும் சந்தர்ப்பங்களும் அவ்வப்போது வாய்த்தது. அம்மா கோயிலில் சந்தித்தபோது மாவிடிக்க வேணும், எனச்சொல்லியும் வராத தவமணி நான் வீடு போய் வரச்சொன்னதும் மறுநாள் காலை ஏழுமணிக்கே வீட்டிற்கு வந்து நட்பின் பெருமையை நிலைநாட்டியிருந்தார்.

அவர்களின் வாழ்விடங்கள் எனக்கு இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமூட்டுபவை. வேலிகள் வேலிகள் போலிருக்கும், ஆனால் அவை வேலிகளில்லை. ஒழுங்கைகள் போலிருக்கும் அவை ஒழுங்கைகல்ல. வீடுகளும் அப்படித்தான். ஒருமுறை போகும்போது ஒருமாதிரி இருக்கும் வீடுகள், அடுத்த ஒன்றரை மாதத்தில் வேறு வடிவமைப்பில் வேறு திராணியில் இருக்கும். நான் மண்டையை பிய்த்துக்கொள்வேன். நான் நாகம்மா வீடு என்று நினைத்து பெல் அடித்தால் அங்கிருந்து கிளம்பிவரும் பெண் எனக்கு நாகம்மா வீட்டிற்கு வேறொரு வழி காண்பித்து விடுவார்.

இந்த பித்துநிலையை தெளிவிக்க எண்ணி ஒருமுறை இராசுவிடம் கேட்டேன். இராசு எனது மாமா வயதை ஒத்த எனது நண்பர். (எனது நண்பர்கள் வட்டத்தையும் அவர்கள் வயதையும் கவனிக்க) இராசு நல்ல வியாபாரி. பழம்வீதியில் புகழ்பெற்றது அவர்களது கடை. தான்சார்ந்த சமுதாயமக்கள் அப்போதிருந்த கடைநிலையிலிருந்து தேறவேண்டும் என்ற பெருவிருப்புக் கொண்டவர். ஆனால் அதற்கு அவர் கைக்கொண்ட நடைமுறைதான் என்னை அவர் பக்கம் ஈர்த்தது. மற்றவர்கள் போல் மேட்டுக்குடி என்று சொல்லிக்கொள்பவர்கள் மேல் பழிசுமத்திக் கொண்டிராமல் செயல்முறையில் அவர்களை மிஞ்சும் வகையில் முயற்சி செய்தார்கள். அதற்காக தங்கள் பக்கத்தில் இருக்கும் பலவீனங்களை கண்டறிந்து அகற்றினார்கள். பழக்கவழக்கங்களில் மாறினார்கள். கிட்டத்தட்ட சிங்கள அரசியல் ஆய்வாளர் இக்பால்-அத்தாசின் பத்தி எழுத்துக்களைப் போல. நான் நேர்மையாக கேட்ட கேட்ட கேள்விக்கு இராசுவும்; நேர்மையாகவே பதில் சொன்னார். இங்கு பெரும்பாலும் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் படிப்பை நிறுத்திவிட்டு தங்களுக்கு தக்கதாய் ஒரு பையனை பிடித்துக்கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் குடித்தனம் நடத்த தொடங்கும் போது அவர்கள் இருக்கும் துண்டுக்காணி இரண்டு துண்டாக துண்டாடப்படும். இது இங்கு தொடர்கதை. இரண்டு மூன்றாகும். மூன்று ஆறாகும். காணிகளுக்கு என்ன உறுதியா? பத்திரமா? இவர்களாகப் பார்த்து இட்டுக்கொள்ளும் எல்லைகள் தான் வேலிகள். அவற்றில் முட்டுப்பாடு வரும்போது உண்டாகும் கலகம் தான்,சோமபான திருவிழாக் கலகம் என என்னைப்போன்றவர்களால் விளங்கிக்கொள்ளப்பட்ட நான் மேற்சொன்ன வசவுகளுடன் கூடிய கலகங்கள். இவை இராசு எனக்குத் தந்த தரவுகள்.

ஆனாலும் அவர்கள் சொந்தக் கைகளை நம்பிய மாந்தர்கள். காலை எழுந்து எந்த தொழிலுக்கும் தயாராக இருப்பார்கள். விறகுகொத்துதல், வேலிஅடைத்தல், மாவிடித்தல் போன்ற உடலைவருத்தும் வேலைகளை தொழிலாக செய்வார்கள். பெறுகின்ற கூலியில் அன்றிரவு அவர்கள் வீட்டில் அடுப்பெரியும். கூடவே உடலலுப்புத் தீர சோமபானம். கலகங்களும் தொலைக்காட்சிப்பெட்டியும் இல்லாத இரவுகளில் உடுக்குடன் கூடிய பாடல்கள் காற்றை நிறைக்கும். நடேசு என்பவரின் உடுக்கொலி இப்போதும் காதில் ஒலிப்பது போன்ற பிரமை என்னை ஆட்கொள்கின்றது.

இந்த இரண்டுவீதி மாந்தர்கள் இப்படி என்றால் மூன்றாவது வீதி மாந்தர்கள் வேறு ரகம். அவர்களுக்கு வெளியிலிருந்து பிரச்சனைகள் வருவது குறைவு. காரணம் அவர்கள் பிரச்சனைகளில் தன்னிறைவு அடைந்தவர்கள். தங்களுக்குத் தேவையான பிரச்சனைகளை தாங்களே உருவாக்கி கொள்வார்கள். அப்படி அவர்கள் உருவாக்கி வைக்கும் பிரச்சகைனகளால் சிலசமயங்களில் முழு கந்தர்மடமும் அல்லோலகல்லோலப்படும். பக்கத்திலிருக்கும் ஆரியகுளம்,அல்லது அத்தியடி பிரதேசத்தவர்களுடன் இவர்கள் கொழுத்தி வைத்துவிட்டு வரும் பிரச்சனைகள் அவர்கள், இவர்களை தேடிவரும் போது கந்தர்மடத்தில் வியாபிக்கும். தற்போதைய தமிழ்சினிமாவின் வில்லன்கள் துரத்துப்பாட்டு காட்சிகளை அப்போதே நான் நேரில் தரிசித்திருக்கின்றேன். எங்கள் வீட்டு மதிற்சுவர்களை ஏறிக்குதித்து தாண்டி “திடும்திடும்” என அவர்கள் ஓடும்போது என்ன நடக்கிறதென்றே தெரியாமல் வேடிக்கை பார்த்திருக்கின்றேன். “எங்கள் மதிற்சுவர்களை எங்கள் அனுமதியின்றி எப்படி நீங்கள் ஏறிக்குதிக்கலாம்” என்று கேட்கின்ற உரிமை எங்களுக்கு இருந்தும் கேட்பதற்கான தைரியம் இப்போது போலத்தான் அப்போதும் எங்கள் வசம் இருக்கவில்லை. ஆகமிஞ்சிப்போனால் இரண்டு சதுரகிலோமீற்றர் பரப்பளவுக்கு மேற்படாத இந்த பிரதேசத்தற்குள் எத்தனை வேறுபாடுகளும், மாறுபட்ட மனிதஇயல்புகளும் மண்ணின் மாந்தர்களும்.

இந்த மேற்சொன்ன மூன்று வகையறாக்களிலும் அடங்காமலும் கந்தர்மடத்தில் மாந்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் பெருபாலும் எந்தன் வீட்டையும் அதனை அண்டிய அயல்வீட்டையும் சேர்ந்தவர்கள். இருப்பதை இழந்துவிடக்கூடாது என்கின்ற அதீத எச்சரிக்கை உணர்வில் எதிலும் அதிகம் ஒட்டாமல் நடுத்தரவர்க்கம் என்கின்ற லேபிளையும் மேட்டுக்குடி நோக்கிய சிந்தைப்புலனும் கொண்டவர்கள்.

கந்தர்மடம் ஏன் கந்தர்மடமானது என உங்களில் யாராவது கேட்கக்கூடும். எனக்குத் தெரிந்து பண்டைய நாட்களில் எங்கள் ஊரில் ஒரு ‘கந்தபுராணபடலம் ‘வாசிக்கின்ற மடம் இருந்ததாக ஒரு செவிவழிக்கதையுண்டு. இதனை எனது அம்மம்மாவும் பக்கத்துவீட்டு சின்னம்மாக்காவும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். வேறு வரலாற்று ஆதாரம் எதுவும் என்வசம் இல்லை. (சின்னம்மாக்கா என்னில் பாசமழை பொழிந்த ஒரு வெள்ளந்தி மனுசி. அவரை பற்றி தனியான பதிவில் பின்னர் பார்க்கலாம்.)

கந்தபுராணவீதி மற்றும் அரசடிவீதி சந்திக்கும் முடக்கில் இருந்த மேற்படி மடத்தின் காணிகள், அயலவர்கள் வேலிகளை தள்ளிதள்ளி பிடித்துப்போட மிகுதியிருந்த பகுதியை காப்பாற்றும் நோக்கில் யாரோ ஒருவர் அதில் முருகன் சிலையை வைத்து அதனை கந்தபுராணக்கோவிலாக்கியது என்றும் சொல்கிறார்கள். அத்தோடு முடியவில்லை கந்தர்மடத்தின் கதை. ஒரு மூலைக்குள் முடங்கி ஒரு வேலுடன் ஒதுங்கியிருந்த முருகப்பெருமானை பிளாட்(FLAT) கட்டித்தருகிறேன் என ஆசைகாட்டி அருகிலுள்ள காணிகளை மீளவும் பிடித்து முருகனுக்கு ஒரு பிளாட் கட்டினார் ஒரு கல்யாணபுறோக்கர். முருகன் கோமணாண்டியான கதை அங்கே தான் தொடங்கியிருக்கும் என்பது என் எண்ணம். பிளாட் கட்டிய முருகனுக்கு என்னாச்சு? என்றால் முன்னர் இருந்ததை விட இன்னும் சின்னதாய் பிளாட் போட்ட கீழ் மூமில் முருகன் தங்கிக்கொள்ள மேல்தளத்திலும் மற்றைய அறைகளிலும் கல்யாணபுறோக்கர் குடிபுகுந்தார். ஆக முருகன் இப்போது கல்யாணபுறோக்கர் வீட்டு “சோக்கேஸ் பொம்மை” போல் ஆகியிருந்தார். முருகனுக்கும் பெப்பே. முருகனுக்குத் தானே என காணிகளை ஒதுக்கிக்கொடுத்த அயலவர்களுக்கும் பெப்பே. (வெள்ளை வேட்டி வெள்ளை நஷனல் வாரிஇழுத்ததலை என மிடுக்காய் அலையும் கல்யாணப் புறோக்கரின் கூத்துகள் பின்னால் வரும் தனிப்பதிவாக.)

“ச்சே…. இப்பவே கண்ண கட்டுதே”…. கந்தர்மடம் பற்றிய என் மனப்பதிவுகள் தொடரும்……

*வாசகசாலை நாட்கள்
*ரின் போல் விளையாடிய பொழுதுகள்
*பழம்வீதி பிள்ளையார்
*நல்லூர் விழாக்கால தண்ணீரப்பந்தல்
*ஐஸ்கிறீம் குடிப்பதற்கான சாமிதரிசனங்கள்
*இந்துக்கல்லூரி கனவிலிருந்தவன் ஸ்ரான்லிக்கு ஜாகா வாங்கிய கதை…….
தொடர்ந்தும் பகிரலாம்….. நீங்களும் தான் நண்பர்களே…..
(ப்பா…. ஒரு கொலைவெறிக்கு பயந்து என்னமா எல்லாம் எழுத வேண்டிக்கிடக்கு. ஒரு மனுஷன இப்புடியா பயமுறுத்துறது…… ராஸ்கல்ஸ்……..)

“ஆருத்ரா”வின் தரிசனம்

நண்பர் நாக.தயாகரனின் எழுத்தின் மீது அதிக பற்றுக் கொண்டு காதலித்திருக்கின்றேன். “இதனை இவன் செய்வான் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” கோட்பாடு பெருத்த நம்பிக்கை தருகின்றது.

“கந்தர்மடம்” யாழ்நகர வாழ்வின் சிறுபகுதி. வாசகர்களுக்கு இது யாழின் பதிவு என கூறிக்கொள்ளலாம். மாவி‌டிக்கும் நாகம்மா சாவகச்சேரியிலும் இருந்தார்கள் வேறொருவராக. ஒரு ஊரின் பின்புலத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களை முன்னிலைப்படுத்தி பதிவைத் தொடங்கி, ஆரோக்கியமான பயணத்திற்கு அடி   எடுத்து    வைக்கும்    தயாகரன் ஆருத்ரா தரிசனம் தள அமைப்பிலும், அடுத்து வந்த பணிகளிலும் கூட நடந்த கைத்தடி-நண்பேண்டா.

தொடர்ந்து செல்வோம்.-ஆருத்ரா

அடுத்த பதிவு.

* “கண்ணா உனைத் தேடுகின்றேன் வா”

* கடுதாசிக் கடிதங்கள்.

ஆருத்ரா எழுதியவை | ஜூன் 11, 2012

சின்னச்சாமியும் ,பெரியசாமியும்.

சாவகச்சேரி வாரிவனநாதர்.
எல்லோருக்கும் தெரிந்து
“சிவன் கோவில்”.

பழைய சிவன் கோவில்
மற்றது
புதுச் சிவன்கோவில்.
ஒரே மதிற்சுவர்.
இருபக்கமும்
பழசும் புதிசும்.

புதியவருக்கு
அபிஷேகம், ஆராதனைகள்
நித்திய பூஜைகள் நியமமானவை.

பழையவர் தொன்மையானவர்
எனினும்
எல்லாவற்றிற்கும்
காய்ந்து கொண்டிருப்பார்.

தொன்மை தெரிந்தவர்கள்
மாத்திரமே
“ஒரு எட்டு” எட்டிப் பார்ப்பர்.

திருவிழாக் காலங்களில்
புதிய சிவன்கோவில்
நிரம்பச் சனங்கள்,புதுப்பொலிவு
அல்லோலகல்லோலப்படும்.

ஆதிச்சிவன் அழகிழந்து
அமைதி கொள்வதும்
தேற்றாப் பெருவெளியில்
நினைவு தவறுவதும் நடந்தெய்தும்.

கடவுளைப்
பிரித்துக் கொண்டார்கள்
மனிதர்கள்.

ஏதும் ஒரு ஏகாதசி இரவில்
கடவுள்கள்
கைகுலுக்கிக் கொள்ளக் கூடும்.

“உன்னவள்” பற்றி நீயும்
“பற்றாக்குறை”பற்றி அவரும்
பேசிக் கொள்ளலாம்.

மனிதர்கள்
தெருப்புழுதி வெக்கைக்குள்
கடவுள் பற்றிய சர்ச்சையில்
சண்டையிட்டுக் கொண்டார்கள்.

பிரிவினை
உப்பிப் பெருத்து
உலா வந்தது.

*********************************************************************************************************

ஆருத்ரா எழுதியவை | ஜூன் 5, 2012

மயிர் Vs மசிரு

நீங்கள் முடிவெட்டப்போகும் போது முடிதிருத்தகங்களை கவனித்திருக்கின்றீர்களா? முடிதிருத்தகங்கள் யாவும் சிலபல உபகரணங்களோடு நீளப்பாங்கான வாங்குகளையும் கொண்டிருக்கும். வாங்குகளில் பழைய புதிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், சுவர்களில் ஏகத்துக்கும் கவர்ச்சிகரமான பெண்ணின் படங்கள் என”ஏ” கிளாஸ் அமைப்புடன் காட்சியளிக்கும். முடிதிருத்தகங்கள் எதிலும் பெண்கள் வந்து முடிவெட்டிக்கொள்வதில்லை. அவர்களுக்கென்றே தனியாக வெட்டிவீழ்த்தவென நவீன சலூன்கள் இப்போது பரவலாக முளைத்துள்ளன. எனினும் ஆண்களுக்கான முடிதிருத்தகங்கள் பண்டைய கால பக்குவங்களோடு, அரைகுறை ஆடை சுவர்ப்படங்களோடு “காத்திருத்தலும் சுகமானது” என ஏங்க வைக்கும் அமைப்போடு காட்சி அளிக்கின்றன. “பெண்கள் யாரும் இதற்குள் உள்நுழைவதில்லை” என்ற சத்தியத்தோடு ஊர்க்கதை பேசும் திடல்களாக முடிதிருத்தகம், சலூன் என்றழைக்கப்பட்டு அவைகள் அழகியலின் சந்நிதிகளாக அமைப்புப்பெற்றுள்ளன. கோவில் கட்டுவதற்கென்றே ஆகமவிதிகளை பின்பற்றும் சமூகம் அதற்கென்றே பிரத்தியேக ஆகமஅமைப்புடன் கூடிய சலூன்களை கொண்டிருப்பது நவீன சமூக அமைப்பின் அடையாளம்.

ஒவ்வொரு முடிதிருத்தகமும் உரிமையாளருடன்,சில முடிதிருத்தும் பணியாளர்களை கொண்டிருந்தாலும் வாடிக்கையாளர்கள் தமக்குப் பிடித்தமான பணியாளரிடமே முடிவெட்டிக்கொள்ள பிரியப்படுவது அவர்களது தனித்திறமையை, முடிவெட்டும் போதான அவர்களின் கவனிப்பை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கும். அழகாய் வாரப்பட்டிருக்கும் முடிகொண்ட இளைஞர்கள் யாரும், அங்கே பணியாற்றும் முதிய பணியாளரிடம் முடிவெட்டிக்கொள்ளப் பிரியப்படுவதில்லை. அது அந்தப் பணியாளர்கள் மீதான புறக்கணிப்பாக திறமையின் மீதான அவமதிப்பாக அமைந்து அவர்களுக்குப் பெரும் மனஉளைச்சலாக அமைந்து விடுகின்றது. பாவப்பட்ட ஜென்மங்களாக, அவர்களின் காத்திருத்தல் தொடர்கின்றது. மனிதத்தின் ஏகபோக மன உன்னதங்களை வெளிக்காட்டும் முடிதிருத்தகங்கள், மயிரைப்போன்றே மகத்துவம் இழந்து உன்னதங்களை தரைமேல் வீசிச் சென்றிருக்கிறது. இது துயரங்களின் மீதான படிமமாக வாழ்வின் புறக்கணிப்பாக அமைந்து இதயங்களை சீண்டி துவம்சம் செய்கின்றது.

கட்டணங்கள் கொடுத்து செய்யும் காரியங்களுக்கு கஸ்டமர்கள் சமரசம் செய்துகொள்வதில்லை என மனம் சமாதானப்பட்டுக் கொள்கின்றது.

எங்கள் சிறுபராயத்தில் முடிதிருத்தகங்கள், எங்களை கொல்லும் களங்களாக பயமுறுத்தி இருக்கின்றது. பெருங்குளம் சந்தியில் அமைந்திருந்த சின்னத்துரையின் சலூன் பெருவேம்பின் நிழலில் வயற்காற்றை வாரி வழங்கி இயற்கையாக ஏ.சி குளிர்காற்றை ஏகத்துக்கும் இறைக்கும். பத்திரிகைகள் படபடக்கும். காத்திருத்தல்கள் எதுவும் இங்கு காலாவதியாவதில்லை, என்பதை பறைசாற்றவே பத்திரிகைகள் படபடக்கின்றன. கதவு நிலையில் பொருத்தப்பட்ட கத்தரி சாணை பிடிக்கும் பட்டி, எப்போதோ வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட கிரீம் வகையறாக்கள், படிகாரம் என பக்கா சலூன் மகாத்மியங்கள் அரங்கேறுகின்றன. ஒன்றரை மாதத்திற்கொரு தடவை பலவித நிர்ப்பந்தங்களோடு எங்களது வெறுப்பு சுமந்து முடிதிருத்தகத்திற்கு ஏகும் எங்களை பயமுறுத்துவது கத்திரியால் முடிவெட்டியபின் போடும் முள்ளு மெஷினாகும். சிறுசிறு ரத்தப்பூக்களையும் எங்கள் பிடரியில் பூக்க வைக்கும் முள்ளுமெஷின் இப்போது எந்த சலூனிலும் காணக்கிடைக்காத பண்டைய சமாச்சாரம்.

முதல் நாளோ, அதற்கு முதல்நாளோ சின்னத்துரையை சந்திக்கும் எனது தகப்பனார் “ஒட்ட வெட்டிவிடவேண்டும்” என்று முனைப்போடு கூறிவைக்கும் கோரிக்கைகள் எங்களுக்கு உடன்பாடானது அல்ல. அந்த ஒட்ட வெட்டவேண்டும் என்பதன் சாரம் “பொலீஸ்குரோப்” என்ற தமிழல்லாத வார்த்தையோடு மிகப் பின்னிப்பிணைந்தது. எனது தந்தையாரின் கோரிக்கையை சிரமேற்கொண்டு பணியாற்றும் சின்னத்துரை சடசடவென்று கத்திரியை வீசும் பாங்கில் தரையில் வீழ்ந்து தொலைக்கும் முடித்துகள்களால், தன்னை பெரும் சாதனை நாயகனாக எண்ணிக்கொள்வதும், நாங்கள் பலிக்கடாக்கள் போல் ஆக்கப்பட்டிருப்பதும் சமகாலத்தில் நடந்தேறும். எப்படா வெட்டுதல் முடியும் என்று காத்திருந்து வீடு திரும்பும் எங்களை தகப்பனார் தலையில் தடவி கண்காணிப்பதும், சந்தோசப்பட்டுக் கொள்வதும் “விடுங்கடா எங்களை” என்று விசனமேற்படுத்தும். இவ்விடத்தில் “முடி”வாய் என்ன சொல்கின்றீர்கள்? என்று யாரும் கேட்பீர்களாயின் நான் “முடி”வாய் சொல்வது சிறுபராயத்து முடிவெட்டுதல்கள் யாவும் எங்கள் கையில் இல்லை என்பதே.

“சத்யமேவ ஜெயதே” அல்ல “சின்னத்துரை மேவ ஜெயதே”

வரலாறு ஒரே பாதையில் பயணிப்பதில்லை. அதற்கும் சில ஆசுவாசங்களும், அக்கறைகளும் தேவைப்படுகின்றன. எங்களது ஆறாம் வகுப்பிற்கு பிறகு நாங்கள் யாரும் அந்தபக்கமே தலை வைத்துப்படுப்பதில்லை. எங்களெங்கள் சொந்தத்தலைகளை பாதுகாக்கும் ஏகபோகப் பாதுகாவலர்களாக எங்களை நினைத்து சின்னத்துரை முடிதிருத்தகத்தை புறக்கணித்ததோடு, சாவகச்சேரியின் நீதிமன்ற வளாகத்தின் முன்னாலிருந்த ஓடியன் சலூனிலேயே பின்னான காலங்களை கஷ்டமர் என்ற தகுதிச் சொல்லோடு அர்ப்பணித்துக் கொண்டோம்.

சின்னத்துரை சலூனில் எங்கும் எதிலும் கவர்ச்சிப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதில்லை என்பதோடு, அந்த சைவம் நமக்கு ஆகாதே என்ற உண்மையுடன், ஓடியன் சலூனின் ஆடைஅவிழ்ந்து விழும் நங்கைகள் எம்மை வரவேற்று எம்மையும் தங்கள் கஷ்டமர்கள் ஆக்கிக்கொண்டார்கள் என்ற பேருண்மையையும் நான் சொல்லாமலேயே நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள் . அந்த சலூன் வளாகத்தில் எனது தந்தையாரின் கோரிக்கைகள் யாவும் செல்லுபடியற்றவை என்பதையும் பதிவில் இணைத்துக் கொள்ள விரும்புகின்றேன்.

“பொலிஸ்குரோப்” என்ற ஆங்கிலப் பதப்பிரயோகம் தூக்கி எறியப்பட்டு “சக்கிகட்” என்ற காதைமூடி முடி வளர்க்கும் சமாச்சாரத்தில் இறங்கிவிட்ட எங்களுக்கு, ஓடியன் சலூன் மிகப்பெரும் வரப்பிரசாதம். அங்கே இருக்கும் பணியாளர்கள் யாவரும் இளைஞர்கள் என்பதோடு, நாம் யாரையும் பாகுபடுத்தி இவரிடம் தான் வெட்டவேண்டும் என்ற முனைப்பு காட்டாமல் அழகியலின் திருத்தத்தை, அமைதியாக காத்திருந்து சுகித்துக் கொண்டோம். இனிவரும் பதிவில் இடம்பெற இருக்கும் “திரீஇடியட்ஸ்” மூவரும் அங்கேதான் முடிவெட்டிக் கொள்வோம்.

இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது “தேனும்பாலும்”, “ஒருபடப்பாட்டு”. எஸ்பி. பாலசுப்பிரமணியம் கனிந்து பாடும் “இளையநிலா” சூப்பர்சவுண்ட் சிஸ்ரத்துடன் அங்கு ஒலிப்பதால், காத்திருத்தலின் நேரவிரயத்தை கணக்கிலெடுக்காத நாங்கள் சவுண்ட் சிஸ்ரமே இல்லாத சின்னத்துரை சலூனை கணக்கிலெடுத்து கவலை கொள்வோம்.முடிவெட்டி வரும் என்னை நன்கு உற்றுக் கவனிக்கும் தந்தையார்,என்னிடம் பேசுவதை தவிர்த்து எனது தாயாரிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார் “இன்னும் கொஞ்சம் ஒட்ட வெட்டி இருக்கலாமே”.

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்கள் என்பதெல்லாம் கூடுதலாக மானம் குறித்த பார்வைகளை பதிவு செய்கின்றன. எங்கள் மானம்” மயிரோடு போச்சு”என்பதாக நினைவு வைத்துக்கொண்டாலும் கூட நாங்கள் இழந்த மயிர்களுக்காக பல லட்சம் தடவைகள் உயிர்துறந்திருக்க வேண்டும். அப்படி ஏதும் நடந்ததாக நினைவிலில்லை.

இந்த முடிதிருத்தகங்கள் கூட யாழ்ப்பாண சமுதாய அமைப்பில், சாதீயம் உச்சத்தில் இருந்த காலத்தில் அமைக்க அனுமதிக்கப்படவில்லை. சலூன்கள் எனப்படும் முடிதிருத்தகம் சனப்புழக்கம் அதிகமான சந்திகளில் அமைப்பதற்கு கூட ஒரு காலத்தில் போராட வேண்டி இருந்திருக்கின்றது. யாழ்ப்பாண வெள்ளாள சாதிமான்களால் நாகரீகத்திற்குட்பட்டு அனுமதிக்கப்பட்ட விடயங்களில் முடிதிருத்தகமும் ஒன்று.

நாவிதர்கள் என்ற பெயரோடு அழைக்கப்பட்ட முடிதிருத்தும் கலைஞர்கள், வீடுகளுக்கே சென்று முடிவெட்டி பணமாகவோ பொருட்களாகவோ பெற்றுக்கொள்வது, பழமைவாத யாழ்ப்பாண அடையாளம். கிணற்றுக்கு பக்கத்தில் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து முடிவெட்டி, முழுக்கதைபேசி சொற்ப பணத்தை பெற்றுக்கொள்ளும் நாவிதர்கள் கழுத்துக்கு அருகே கத்தியை வைத்துக்கொண்டு “போகேக்கை கொஞ்சம் குழை அறுத்துக்கொண்டு போகவோ” என்று கேட்பதாக யாழ்ப்பாண வெள்ளாள சமூகம் சில நகைச்சுவைப் புனைவுகளை ஆக்கி வைத்திருக்கின்றது. எல்லாம் வயிற்றுக்கும், வாய்க்கும் பற்றாத பற்றாக்குறையில் செய்யும் ஆவல்கள் என்பதை காணத்தலைப்படுவதில்லை. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட வேண்டாம்,என நீங்கள் கேட்பதாக எடுத்துக்கொண்டால் யாழ்ப்பாண சாதிய சம்பிரதாயங்களை பதிவிலிருந்து நீக்கி விடுகின்றேன்.

மயிர் என்பது பெறுமதியற்றது, அதற்கெல்லாம் அதிகம் மதிப்புக்கொடுக்க வேண்டியதில்லை என்பதான மனிதக்கோட்பாடுகள் அதிகம் வலுப்பெற்றுள்ளதால் தான் மயிரிற்கு அகராதியில் இரண்டு அர்த்த பரிமாணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மயிர் என்பது ஒரு வசைச்சொல்லாக அகராதியில் குறிக்கப்பட்டுள்ளது.

சாதாரண யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பாவிக்கும் மயிரை, தமிழ்நாட்டில் பாவித்தால் தர்மஅடி வாங்க நேரிடலாம். மயிரை விட “மசிர்” என்பது ஆகக்கூடிய கெட்ட சொல். அது தலையில், உடலின் மற்ற பாகங்களில் உள்ள முடிகளைக் காட்டிலும் பிரத்தியேகமாக குறிப்பது வேறொன்றை. கெட்டசொல்லாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள மயிரைக் காட்டிலும் அதன் வினை வடிவமான “சிரைத்தல்” என்பதும் தமிழில் மிக ஆகாத கெட்ட சொல்.

“நீர் என்னத்தை சிரைச்சிட்டீர்?” என்பதும் “நீர் என்னத்தை புடுங்கிட்டீர்?” என்பதும் பெறுமதியற்ற மயிரின் மீதான ஏச்சு வழக்கு வார்த்தைகளாக தமிழை அலங்கரிக்கின்றன. நிஜ வாழ்வியலுக்கு பேச்சுவழக்கும், ஏச்சுவழக்கும் அதிகமான சொற்களை வழங்கி கோபமும் கூட உடல்மொழியாக பதியப்படுகின்றது. கோபத்தை பதிவாக்குவதற்கு மயிர்,சிரைக்கிறது,மயிராண்டி என்பவை சொல்லும் சொல்லை கண வெப்பத்துடன் களமிறக்குபவை.

இயல்புநிலையில் மகிழ்வும் ,கோபமும் சரிசம விகிதத்தில் கலந்து உறவாடுகின்றன. கோபம் வெளியே உலவாத மிருகமாக மனிதனுக்குள் அடங்கி நிற்கிறது. வெளிப்படும் தருணங்களில் கடித்துக்குதறி விடுகின்றது. அந்த வெளிப்படும் தருணம் இயல்புநிலையை மீறி நடக்கின்றது. சுயமதிப்பிடலில் சுயகௌரவம் அசைத்துப்பார்க்கப்படும் தருணங்களில் கோபம் வெளியே வந்து, தன்னாலான சாகசங்களை வெளிப்பரப்பில் வார்த்தைகளாக வெடித்துக் கிளப்புகிறது.

எஸ்.ராமகிருஸ்ணனின் “இயல்பு” குறுங்கதையில் ஒரு குரங்கு விற்பனைப் பிரதிநிதியாக செல்போன் விற்க முனைகின்றது. மனிதரிலும் விட தான் எவ்வளவு மேலானவன் என்பதைக் குரங்கு சிலபல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டுகின்றது. மனிதரிலும் பார்க்க முற்றிலும் சிறந்த அறிவுஜீவியாக தன்னை வெளிக்காட்டும் குரங்கு பழகும் தன்மையில், பேசும் விதத்தில் தன்னை மிகப்பண்பாளனாகவும் பெறுமதி மிக்கவனாகவும் எஸ்.ராமகிருஸ்ணனின் கதை சொல்லும் உத்தியில் வெளிப்படுத்துகின்றது.

நடைமுறையில் குரங்கு பேசுமா? என்று கேட்டால் அவ்வாறான கதைகள் உருவாக சாத்தியமில்லாமல் போகக்கூடும். MAGICAL REALISM எனப்படும் நடைமுறைச்சாத்தியமற்றதை கருப்பொருளாக கொண்டு, கதைபுனையும் தன்மையின் பெருக்கத்தால் விளைந்த “இயல்பு” குறுங்கதை மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை உங்களுக்குத் தரும்.

“மசிரானுங்க” என்று இயல்பு பிறழ்ந்த தருணத்தில் ஏசும் குரங்கு “உருவி உருவி” என்ற கெட்டசொல்லையும் பதிவு பண்ணுகின்றது. “மசிரானுங்க” என்பதை யாழ்ப்பாண வட்டார வழக்கில் “மயிராண்டி” என்று பொருள் கொள்க.

மயிர்கள்(முடிகள்) அத்தனை பெறுமதியற்றவையா? அவைகளால் பெரும் பயனேதும் இல்லையா? அதனால்தான் கீழ்நிலை மனிதனை சகமனிதன் “மசிர்” என்கின்றானா?

திருப்பதி தேவஸ்தானத்தில் வெட்டி வீழ்த்தப்படும் முடிகள், வருடந்தோறும் பொது ஏலத்தில் ரூபா 133 கோடிக்கு விற்பனையாகின்றது. ஐரோப்பிய வணிகசந்தையில் தரம் பிரிக்கப்பட்ட முடி ஒரு கிலோ ரூபா 12000 திற்கு விற்பனையாகின்றது என்ற உபரிதகவலோடு, இனிமேலும்   மனிதனை மனிதன் மசிரானுங்க  என்று திட்டாதீங்கப்பா.

“இயல்பு”  குறுங்கதையை  வாசிக்க இங்கே  அழுத்துக.

எஸ். ராமகிருஸ்ணன்.

தாகூர் இலக்கிய விருது    பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்  என்ற  பெருமைக்கும் சிறப்புக்கும் உரியவரான எஸ். ராமகிருஸ்ணன் அவர்கள் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர்.  நாவல், சிறுகதை, விமர்சனக் கட்டுரைகள், திரைப்பட உரையாடல்கள் எழுதுபவர் என தொடர்ச்சியாக தமிழில் இயங்கிக் கொண்டிருப்பவர்.இவர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

 ஆங்கில இலக்கியம் கற்று அதில் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்.  இவரது இலக்கிய ஆர்வம் பதினெட்டு வயதில் துவங்கியது. இந்தியாவின் அத்தனை முக்கிய நுலகங்களுக்கும் சென்று வந்தவர். இலக்கியத்தின் மீதான ஈடுபாட்டினால் நெருக்கிய நண்பரான கோணங்கியோடு சேர்ந்து பல இலக்கியவாதிகளை தேடித்தேடி சந்தித்திருக்கிறார், சென்னையில் அறையில்லாமலும் கையில் பணமில்லாமலும் பத்தாண்டுகளுக்கு மேலாகத் திரிந்த அவமானங்களும் வலியும் இன்று அவருடைய எழுத்தின் அடிநாதமாக ஒடிக் கொண்டிருக்கிறது. ஆனந்த விகடனில் இவர் எழுதிய துணையெழுத்து என்ற தொடர் பரவலான வாசகர் கவனத்திற்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி என்று வெளியான கட்டுரைகள் இவருக்கு தமிழில் பரந்த வாசகர் தளத்தினை உருவாக்கியது.

பின்குறிப்பு: ஆக்கத்தில் இடம் பிடித்துள்ள “கவர்ச்சி காலண்டர்” படத்திற்கு நான் பொறுப்பேற்க இயலாது. ஆக்கத்தின் தேவை கருதியே அப்படத்தினை இணைத்ததாக லே-அவுட் நண்பரின் விளக்கத்தை ஆனந்தவிகடன்- மதனின் இயலாமையோடு சொல்லிக்கொள்கின்றேன்.  -ஆருத்ரா

முதல்  அத்தியாயத்தை வாசிக்காதவர்கள்  வாசித்து  தொடர்க!

காதலை எந்தக் கவிஞர்களும் விட்டு வைத்ததில்லை. எழுதிக் குவித்திருக்கிறார்கள். தங்கள், தங்கள் அனுபவப் பகிர்வின்றி எழுதும் காதல் பதிவுகள் உயிர்பெறுவதில்லை. இசை உயிரின் ஆழம் வரை ஒட்டி உறவாடக் கூடியது. கண்களின் ஈரப்பதனுக்கு கனவுகள் காரணமானவை. பதின்வயதுகளில் ஒரு விவஸ்தை இன்றிய அறிமுகமாக எல்லோருக்கும் காதல் எதிர்ப்பட்டிருக்கின்றது. சிலர் சொல்லத்துணிகின்றார்கள். மறைக்க விரும்புபவர்கள் மறந்து போகின்றார்கள்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், பின்னரான தனியார் வகுப்புகளிலும்  முளைவிட்டு முயங்கி மானசீகப் பரப்பில் பரம்பல் கொண்ட எனது பதின்மத்து காதல் யாரையும் காயப்படுத்துவதற்கானது அல்ல. கசிவுகளை வெளிப்பரப்பில் உலவவிட்டு, உயிரனைய உள்ளங்களை உள்-காயப்படுத்தும் கைங்கர்யங்களும் இதற்கு கிடையாது.

முழுநோக்கமும் இசைஞானி தனக்கு வாய்த்த ஆயிரத்திற்கும் அதிகமான வேலை, வில்ல‌ட்டிகளை விட்டுவிட்டு எனக்கான இசைக் கோர்ப்பில், பாடல் பதிவில் கரம் கோர்த்துக் கொண்டதை உலகிற்கு அறிமுகப்படுத்தும் உன்னத கைங்கர்யம் இது.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பெரும்பரப்பில் பூத்த இந்தக்காதல், தனியே பூத்ததாக யாரும் கருதிக் கொள்ளக்கூடாது.தேமாக்களுடன் பூத்தவை. தேமாக்கள் கல்லூரிக்கு அழகு.

தேமா அந்தக் கல்லூரியின் அடையாளப்பொருள். தலவிருட்சம்! மதிலை மீறி வளர்ந்திருக்கும் தேமா பூக்களை வீதியெங்கணும் விநியோகம் செய்தது. மென்காற்று வீசுபரப்பில் வாசனைகளையும் விசுக்கி எறிந்தது. வாசிக்கும் உங்களிற்கும் பூக்களின் சுகந்தங்களும்,மலர்களின் பயணங்களும் கனவாகத் தெரிகின்றதா? நான் என்ன பாடுபட்டிருப்பேன்?

உலகின் அத்தனை ஆடை வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பிலும் அதிசிறந்தது, நீ அணிந்துவரும் பள்ளிச் சீருடைகள். அதை நீ அணிந்து மைதானப்பரப்பை வலம் வருகையில், அநாயாச நடையும், அழகு சூழ் பச்சைப் புல்வெளியும் இனி ஒரு பிறப்புளதேல்…. காணக்கிடைக்காது. தேமாக்கள் தலவிருட்சமெனில் ,தீர்த்தக்கிணறு எங்கள் தாக சாந்திக்காக இடைவேளைப்பொழுதுகளில் முண்டியடிக்கும் குழாய்நீர்த் தொட்டிகள்.

தேகம் யாவும் தீயின் தாகம்.
தாகம் தீர நீதான் மேகம்.
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது.        ராஜ‌பார்வை (1982)    

பாடசாலை தனியே கட்டடங்களால் ஆனதாக ஒரு போதும் எண்ணிக்கொண்டதில்லை. வீசும் காற்றின் நீள்பரப்பில் ஆசைகள், நிராசைகள் இரண்டும் மோதி அலைகின்றன. ஆசைகளின் வீச்சும்,பேசும் பொருளும் அதிகரிக்க அதிகரிக்க காதல் வெட்டி வீழ்த்திய மனிதத்தின் நினைவிடமாக பாடசாலை காட்சியளிக்கின்றது. இப்போது யாரும் பேசாப்பொருளை காற்று பேசிச்செல்கின்றது.

நீயும் இசையரசி அல்லவா? மோகனா இசையரசியின் மாணவிகளல்லவா நீங்கள்? அருணாச்சலம் மண்டபத்தின் (PRAYER HALL) பக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட இருமாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் நீங்கள் வீசிச்சென்ற சுரக்கூறுகளை முப்பது வருடங்கள் கழித்து இப்போதும் நான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். அருணாச்சலம் மண்டபத்தின் எஃகுத் தூண்களில் எல்லாம் தட தட என அதிர்ந்து கொண்டிருக்கின்றது, நீங்கள் இசைத்த இசைப்பெருவெள்ளம்.

பேராறு நின்ற பெருங்கருணைப் பேராறே?
ஆரா அமுதே! அளவிலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஓளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே -மணிவாசகர்

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றவளே! இது சிவபுராணம் இல்லை. காதல் புராணம். நாயன்மார்கள் நாவால் நவின்றதை நீ கண்களால் பகிர்ந்தவள். உன்வீட்டுத் தெருப்புழுதிகளில் ஒட்டிக்கொண்டுள்ளன என் காலடித்தடங்கள். வீதி எங்கணும் அலைகின்றன நிராசைகள்.

ஓவ்வொரு பொங்கல் நாளின் முன்மதிய நேரத்தில் என் சைக்கிள் உன்வீட்டின் எதிர்க்கரையில் செயின்கழன்று…… காற்றுப்போய் …….எனப் பொய்ப்பாவனைகளால் நின்று நீள்விழிப்பரப்பில் நினைக் காண விழைந்திருக்கின்றது. நின்னைப் பார்ப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருந்ததில்லை. என் மனப்பரப்பை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், நான் உங்களுக்கு எல்லாம் நெருக்கமானவன் என்று காட்டிக் கொள்ளவுமான தன்முனைப்பு உளவியல் என்னை உந்தித்தள்ளியிருக்கின்றது.

 மருதடி ஸ்ரீ பரமேஸ்வரா வீதியின் முக்குப்புளியமரம் “ஒரு புளியமரத்தின் கதை“யாக ஆயிரம் கதைகள் சொல்லும்.

முச்சந்தியில் புளியமரம் நின்று கொண்டிருந்த காலத்தில் அந்த இடமே பரிபூரண நிறைவு பெற்றுத் திகழ்ந்தது. அந்த இடத்தைப் பொறுத்தவரை சிருஷ்டிக்கலை, தன் சிகரத்தை எட்டிவிட்டோம் என்ற எக்களிப்பில் தூங்கச் சென்றுவிட்டது என்று தோன்றும். – சுந்தர ராமசாமி

எனக்கும் அப்படித்தான். அது சுந்தர ராமசாமியின் வாழ்வனுபவம். திருதிராட்டினனுக்கு பிறந்தது பாழ்-அனுபவம்.

ஒரு பார்வைக்கு இத்தனை அர்த்தமா?
சட்டென்று மூடுங்கள்
தேவையற்ற அகராதிகளை
இனி உன் கண்களே பேசட்டும்!

என் பதின்மவயது குளறுபடிகள், ஏதாவது அர்த்தபுஷ்டி கொண்டதாக அமையாவிட்டாலும் காதல்புஷ்டி கொண்டு கனத்திருக்கின்றது. செருக்கல் பிள்ளையார் கோவில் பற்றி யாராவது அறிந்திருக்கலாம். எங்கள் தனியார் கல்வி நிலையத்திற்கூடாக செல்லும் பாதை, அந்தப்பிள்ளையார் கோவிலைச் சுற்றி வளைந்து சாவகச்சேரி வைத்தியசாலையின் பின்புறமுள்ள டச்சு வீதியில் கலக்கின்றது.

மழைக்காலங்களில் அந்தப்பிள்ளையார் கோவிலும் சூழவுள்ள தெருக்களும் இடுப்பளவு நீரில் மறைந்துவிடும். தவளைகளும், கழிவுகளும், கஞ்சல்களும் நீரில் மிதக்க பாடசாலைக்கு பின்னரான கொண்டாட்ட களங்களாக கல்விநிலையமும் சூழவுள்ள பிரதேசங்களும் மாறிப்போய்விடும். அதிவேக வேகமெடுத்து எங்கள் சைக்கிள்கள் அந்தநீரைக்கிழித்து ஊடறுத்து ஓடுவதும், திரும்பி வருகையில் சர்ரென்று அடிக்கும் பிரேக்கில் மண்துகள்கள் பறக்கப்பாய்வதுமாக சாகசச்செயல்கள் அரங்கேற்றப்பட்டு … ஆகா அற்புதத் தருணங்கள் அவை. அவ் ஆயகலைகளில் சிறப்புடனும், பொறுப்புடனும் செயற்பட்ட என் நெஞ்சனைய தோழர்கள் கனடாவிலும்,அவுஸ்திரேலியாவிலும் இப்பதிவை வாசிக்கக் கூடும். தேவன், பரா,நிர்மலன்,கண்ணன் ரவி,சபாரட்ணம், மறுஉலகம் மாய்ந்துவிட்ட செல்வன்…..

பற்றீசியா, ஆச்சி என்றழைக்கப்பட்ட ….. மற்றும் மஞ்சுளா,ரேணுகா.

உங்கள் நினைவுகளால் நிறைக்கப்படுகின்றது மனப்பெரு‌வெளி. ஆயகலைகளில் தேர்ச்சியுடன் செயற்பட்ட நாங்கள் அடுத்த கலைகளான கற்றலிலும், செயல்நெறிகளிலும் ஓரளவு தேர்ச்சியுடன் செயற்பட்டிருக்கலாம்.

அதைக் குறுக்கறுக்கும் விதமாக இளையராஜாவின் இசைக்கோர்ப்பிற்கும், இசைச்சேர்ப்பிற்கும் காரணமாகவும் காரியமாகவும் வந்து தொலைத்த உன்னை கவிதைகளால் குளிப்பாட்ட வேண்டும்.

சற்றுமுன் நீ நடந்து போன
தடயம் எதுவுமின்றி
அமைதியாகக் கிடக்கின்றது வீதி.
எனினும்

அதிவேக ரயிலொன்று
கடந்து போன தண்டவாளம் போல்
இன்றும் அதிர்கின்றது
என் இதயம்.

பேச்சு மூச்சற்றுப்போய் பார்வைப் புலத்தில் பதியன் இட்டகாலம் பலகாலம். தனியார் கல்விநிலையம் சார்ந்த இயற்கைச் சூழலும், நட்புச்சுற்றமும் வகுப்புக்கள் நடக்காத லீவு நாட்களிலும் எங்களை ஏங்க வைத்திருக்கின்றது. யாருமற்ற பகற்பொழுதில், ஆளரவமற்ற வீதிப்பரப்பில், மௌனம் குடிகொண்டிருக்கும் தனித்த பொழுதுகளில் எல்லாம் அவ்விடத்தில் பலதடவை சைக்கிளை நிறுத்தி ஏங்கித் தவித்திருக்கின்றேன். அங்கே காணப்படும் சற்றே வளைவான தென்னை மரத்தில் எங்கள் செருப்புகள் கொழுவி வைக்கப்பட்டு, காணாமற்போன செருப்புகள் பட்டியலில் இடம்பெற்று விடைபெறும் தறுவாயில் கொடுத்து உதவப்படும்.

நிழலின் ஆதரவாய் நின்றீர்கள். நினைவின் ரணங்களாய் கொன்றீர்கள். யாபேரும் நலமா? நம்மை நினைத்துப் பார்ப்பதுண்டா?

இவ்விடத்தில் சற்று நிறுத்தி மூச்சுவிட அனுமதியுங்கள். இனி இளையராஜாவைத் தொடர்வோம்! தலைப்பிற்கும் நிகழ்விற்கும் சம்பந்தமில்லாப் பெருந்திடலில் அலையவேண்டாம்.

ஒன்பதாம் வகுப்புக் கற்கைக்கான பாடநெறிகள் டிசெம்பர் விடுமுறை தினங்களில் ஆரம்பிக்கப்பட்டன. எல்லோரும் வந்து ஒன்று சேர்ந்து ஒழுங்கான கற்கைநெறி தொடங்குவதற்கு முன்னால், ஆரம்பநாட்களில் மிகக்குறைவானவர்களுடன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனக்கென்னவோ அந்த வகுப்புக்கள் எங்கள் இருவருக்கு மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டதாக நினைவு. நீயும் அவளும், நானும் இவனுமென நாலைந்து பேர்கள். வகுப்பு நடைபெறும் தருணங்களில் எல்லாம் கற்பித்த கனவான் கரும்பலகையில் ஏதோ கிறுக்க…. சிறுகல் கொண்டு உன்மீது விட்டெறிந்து நீ திரும்புவதை, அசைவதை, நீள்கூந்தல் நெற்றிப்பரப்பில் விழுவதை ஓதுக்கிக்கொள்வதில் என கரையாப்பொழுதுகளின் நீளம் அதிகம். எங்கே போயின அர்த்தம் பிறழ்ந்த பார்வைகள்.

அழகில் உனக்கும் எனக்கும்
ஏணி வைத்தாலும் எட்டாது
ஆனால்
காதல் வைத்தால் எட்டும். -தபூ சங்கர்

மேற்கொண்டு, மேற்கொண்டு ஏதாவது செய்யப்புகுந்து தொலைந்தழிந்தன காலங்கள். உன்னுடன் கதைப்பதற்கான பலவித தயார்ப்படுத்தல்கள்,தொடர்பாடல் குறித்த கங்கணம், உன்னைப்பார்ப்பதற்கான எத்தனங்கள், முடியாப் பொழுதுகளின் நீள்துயரம்.

எனக்கு மட்டும் சொந்தம்
உனது இதழ் கொடுக்கும் முத்தம்.
உனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் உருகும் சத்தம்.       அலைகள்  ஓய்வதில்லை.(1981)

அந்த தனியார் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்த ஆசிரியை தன்னிடம் கற்பவர்களை தனது வீட்டிற்கே வந்து கற்றுத்தேறுமாறு கனிவுடன் கூறிவிட்டார். நான் கால்நடைத்தமிழன்: அதனால் அந்த ஆசிரியையிடம் ஆங்கிலம் கற்கவில்லை. உயிரனைய நீயும், உள்ளம் நொந்த நானும் மேற்கில் அஸ்தமனத்திற்கு தயாரான கதிரவனுடன் நாங்கள் வளர்த்த காதலையும் சேர்த்து அனுப்பினோமா? என்ற ஐயப்பாடுகள் என்னுள். உதிக்காத காதலுடன், மறைதலுக்கும் தயாரான நாங்கள் அந்த ஆங்கில ஆசிரியை வீட்டு முன்னால் இருந்த புளியமரத்தின் பெருநிழலை சந்தர்ப்பவசத்திற்கான சாட்சிகளாக வைத்து ஒரு பெருமழைநாளில் பேசத்துணிந்தது பேசாப்பொருளான காதலைப்பற்றி.

பேசாப்பொருள் ஆளாளுக்கு வேறுபடுகின்றது. பிச்சைக்காரனுக்கு வராத வருவாய். புரோகிதனுக்கு விழாத உண்டியல் பணம், கத்தரிப்பவனுக்கு வராத கஸ் டமர். அந்த பெருமழைநாளின் பெருவிருட்சமான புளியமரம் இப்போதைக்கெல்லாம் பட்டுப்போய் அதனருகிலேயே இன்னொரு புளியமரமாக கிளைவிடுகின்றது , என்னை ஒத்த இன்னொருவனுக்கு இன்னொரு கிளைக்கதை புனைய.

-தொடரும்  வருவாரத்தின்  மறுவாரம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

நலமா? உங்கள் இருவருக்கும் தனியே கடிதம் எழுதவே விருப்பம். பின்நாட்களில் தாங்கள் ஆன்மீகத் தொலைவிற்கு அப்பாற்பட்டு, தங்களுடன் தகாத செயலுக்கு வற்புறுத்தியதாக குற்றம் சுமத்தி, நானும் கம்பி எண்ணும் பெரும் பாக்கியத்தை தவிர்க்கவே இவ்வாறான “மூடிமறைப்பில்லாத கடிதம்“

நீங்கள் இருவரும் எவ்வாறு மூடி மறைப்பதில்லையோ அவ்வாறே நானும் மூடிமறைப்பதில்லை. பேச்சு பேச்சாக இருக்க வேண்டும். தாங்கள் இருவரும் முற்றும் துறந்தவர்கள். ஆசைகளை,பாசங்களை,உறவுகளை துறத்தலே உண்மை ஆன்மீகவாதிக்கு அழகு. தனக்கென ஒற்றைக் கோவணத்தையும், தனக்கென பிச்சாபாத்திரத்தை வைத்திருக்காததுமே ஆன்மீகவாதியின் அடையாளம் எனச் சான்றோர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள். உங்கள் இருவரையும் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதில்லை. விழிப்புணர்வு கொண்ட மானுடனிற்கு தென்படுவதெல்லாம் இறைசக்தி! தெய்வாதியர்கள்!!

ஆனால் என்னவொரு வித்தியாசம், கட்டிலில் அடிக்கடி முற்றும் துறக்கின்றீர்கள். ஆடை,ஆபரணம்,கழுத்தணிகலன்கள் (கவனம்: குத்தி தொலைத்து விடப்போகின்றது) என எல்லாவற்றையும் துறக்கின்றீர்கள். துறவி என்ற சொல்லிற்கே அதிக அர்த்த பரிமாணத்தை கற்றுத்தந்தவர்கள் நீங்கள் என தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலையாரிகள் உங்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். கொண்டாடட்டும். உனக்கென்ன ஆயிற்று? எனக் கேட்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

நான் இப்போது முழு விழிப்புணர்வு நிலைக்கு ஆட்பட்டிருக்கின்றேன். எனது விழிப்புணர்வின் நோக்கம் இறைசக்கதியை உய்த்துணர்வது,இறைவனுடன் நித்தியத்தில் கலப்பது என்பதென எதுவாகவும் இருந்திருக்க வேண்டும், நான் உங்களிடம் ஏமாறுவதற்கு முன்பு. காலம் செய்த சதியில் நானும் ஏமாந்து தொலைத்துவிட்டேன்.

ஒரு சின்னப்பயலுக்கு இவ்வளவு ஆன்மீகத் தெளிவா? ஆன்மீகத்தை சிறுவயதில் உய்த்துணர்ந்த பாலகுருவாக காலம் தங்களை பிரசவித்திருக்கின்றது என மாய்ந்து மாய்ந்து எண்ணிக்கொண்டேன். திருவண்ணாமலை மிகுதியான ஆன்மீகத்தலைவர்களை, ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இறைவன் பெருநெருப்பாக,அக்னி சக்தியாக மிளிர்வது திருவண்ணாமலையில் தான் என்றெல்லாம் படித்த ஞாபகம். உன்னதத் துறவியான ரமணமகரிஷியும், சேஷாத்திரி சுவாமிகளும், வடஇந்தியாவைச் சேர்ந்தவர் எனினும் திருவண்ணாமலையில் குடிகொண்ட ராம் சூரத்குமார் யோகியரும் திருவண்ணாமலை என்ற அக்னித் தலத்தில் ஆச்சிரமம் அமைத்து, தாங்கள் கண்டநிலைக்கு மற்றையோரையும் வழிப்படுத்தி அழைத்துச் செல்ல முற்பட்ட தலம். ரமணாஷ்ரமத்தின் பின்பகுதியில் விருப்பாட்ஷை குகை என சுற்றிய இடமெல்லாம் தபோவனங்கள், ஆன்மீகவாதிகள்.

அங்குதான் தாங்களும் திருக்கொண்டதாக தங்களின் பக்தகேடிகள் (கோடிகள்) வெளியில் பரப்பித்திரிகின்றார்கள். திருவண்ணாமலையின் உன்னதம் உங்களால் கெட்டுவிடப்போகின்றது என தங்கள் தாயாரே கனவில் நினைத்திருக்கமாட்டார்.

திருவண்ணாமலைப் பெரும்பாறையொன்றில் ஒருநாள் மதியம் நீங்கள் இறையுடன் கலந்ததாக டப்பாச் செய்தியை தங்களின் புத்தக வரிகளில் எழுதித் தள்ளியிருக்கிறீர்கள். நீங்களாவது எழுதுவதாவது? அந்த நேரக் கணக்குகளில் ஆயிரம் சில்மிஷங்கள் செய்யலாம் உங்களால் ரஞ்சிதாவுடனோ? அருகிருந்து சாமரம் வீசும் பெண்டிருடனோ?

இயக்குனர் சங்கர் முதல்வன் படத்தில் அறிமுகப்படுத்திய டிக்கிலோனா, கப்ளிங்ஸ், spoon passing எல்லாவற்றையும் ரஞ்சிதாவுடன் முயற்சித்துப் பார்த்ததுண்டா இறைமுதல்வோனே? கிரிவலப்பாதையில் பாதையில் தங்கள் ஆசிரமம் கண்டு வியந்து போனேன். ஒருமுறையேனும் உள்நுழைந்து யோகக்கிரியாதி முறைகளில் நானும் தேர்ச்சி பெற வேண்டும் என அடுத்தடுத்த முனைவுகள் என்னுள். எனது வயது அப்படி எல்லாம் யோசிக்க வைத்தது. ஆழ்ந்து அனுபவித்தாயிற்று, அடுத்த கட்டம் இறைவழி என என்னுள் வியாபித்தது.

முதலிலிருந்தே ஆழ்ந்து அனுபவிக்க தாங்கள் இப்பொழுதுதான் தொடங்குகின்றீர்கள். பாலபாடம், இடைநிலை (றஞ்சிதாவின் இடைநிலை) , மேல்நிலை என ஆன்மீகத்தின் சகலகூறுகளையும் கற்று சற்றே தெளிவான பாதைக்குள் நுழைவதற்கு, தங்களை முன்னிலைப்படுத்தியது பெரும் தவறென உணர்கிறேன். நான் விழிப்பு நிலையிலிருந்து விண்ணான நிலைக்குள் விழுந்தது இங்குதான்.

அந்த இடைவேளைக்குள் தாங்கள் கட்டம் கட்டி கபடி ஆடிவிட்டீர்கள் றஞ்சிதாவுடன். காமத்து ஸூத்திரங்களை தாங்கள் பிரயோகித்துப் பார்க்க கிடைத்த பரிசோதனைசாலை தான் ரஞ்சிதாவா? என எனக்கு தலை கிறுகிறுக்கிறது. அவ்விடத்தில் ஆனந்தத்தேன் பெருக்கெடுத்தோடிப் பாய்ந்ததா? என இருவரில் ஒருவர்தான் சொல்லவேண்டும் ஐயனே!

இடையில் ஏன் மதுரை ஆதீனம் பரமஹம்ச சுவாமிகளையும் உள்ளிழுத்துக் கொண்டீர்கள். ஏதாவது பரஸ்பர பரிமாற்றமா? நான் தேடியலைந்தது இறைவழியை. தாங்கள் காட்டியது கறைவழியை.

இயமம், நியமம், ஆசனம், பிரணயாமம்,பிரத்தியாகாரம்,தாரணை, தியானம், சமாதி எனப் படிநிலைகளைக் கொண்டது இறைவனைக் கூடுவது. தாங்கள் இயமத்திலேயே அடிபட்டு மண்கவ்விக் கொண்ட மகாசுதன், மகாஉன்னதன். இறைவனைக் கூடுதல் என்பதையே தப்பாகப் புரிந்து கொண்டு ரஞ்சிதாவுடன் கூடுவதாக எனது திருதிராட்டின நண்பர்கள் கேலி செய்து சிரிக்கின்றார்கள்.

நீங்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலிருந்து அவன் கவனிக்கின்றான் என்ற சொற்றொடரை. அந்த அவன் கனொன் கமராவாகவோ, நிக்கொன் D 5000 ஆகவோ இருந்து தொலைக்கப்போகின்றது. நீங்கள் HI TECH சாமியார்களாச்சே. புது TREND எனப்படும் காலத்தை சமைக்கும் கனபுருஷர்களே.

மதுரை ஆதீனத்தை நினைத்தால் கவலை வந்து என்னுள் உட்கார்ந்து கொள்கின்றது. திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்டதாக மதுரை ஆதீனம் சொல்லிக்கொள்கின்றது. சிறுவயதிலேயே தேவாரம் பாடி உமைப்பால் குடித்த உன்னதரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரைஆதீனத்தில் ரஞ்சிதாவின் முலைப்பால் குடிக்கும் நித்தியானந்தாவோ ஆட்சி செய்வது என ஒரு கடம்ப கவிஞர் கவிதை வரைகின்றார். 292 பேர் பீடாதிபதிகளாக பரிமளித்த மதுரை ஆதீனம் 292 ஆலும் 293 ஆலும் களங்கப்பட்டு கண்ணீர் வடிக்கின்றது. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கன காலத்திற்கு முன்பே இறையடி சேர்ந்த திருஞானசம்பந்தர், முன்பே உய்த்துணர்ந்து கொண்டிருந்தால் திருநீற்றுப்பதிகம் பாடாமல் பாண்டிய மன்னனின் வெப்புநோயை தன்னுள் உள்வாங்கி தன்முடிவை தானே தேடிக் கொண்டிருப்பார்.

இந்துமதத்தின் மிகப்பெரியஅவமதிப்பாளர் நீங்கள். இந்துமதத்தை உலகில் மிகக் கேவலப்படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர். பிரேமானந்தா தொடங்கி காஞ்சி சங்கராச்சாரியார் ஊடாக உங்களின் ஆன்மீகமும் அழுக்கடைந்து அலைக்கழிகின்றது. ஒரு கிருஸ்தவனுக்கும், ஒரு முஸ்லிமுக்கும் முன்னால் இந்து மதத்தை சேர்ந்தவனாகிய நான் தலைகவிழ்ந்து நிற்பது, பூட்டிய அறைக்குள் யாரும் பார்க்கமாட்டார்களே என்ற தைரியத்தில் றஞ்சிதாவும் நீங்களும் ஆடிய கப்ளிங்ஸ் ஆட்டம்தானே ஐயன்மீர்?

மரணபயம் ஒன்றே ஆன்மீகத்தை வழிநடத்தி அழைத்துச் செல்கின்றது. சாதாரண மானுடன் ஒவ்வொருவனும் தன்னிலை உணர்வதற்கும், மேல்நிலை காண்பதற்கும் மதத்தை வழிகோலாக்கி பயணிக்கின்றான். மதங்களும், இறைவனும், இறைநோக்கமும் அழகானவை: அப்பழுக்கில்லாதவை. மனிதனும், தெய்வ உருவில் நடமாடும் மானுடர்களும் சேறு பூசி அழுக்காக்கி வைத்திருக்கின்றார்கள்.

நிறுவனரீதியாக இந்துமதம் ஒன்றே மற்றோரை ஆக்கினை செய்யாதது: வளர்த்தெடுக்கப்படாதது என்றெல்லாம் கூறி பெருமைப்பட்டுக் கொண்ட காலம் மலையேறியாயிற்று. இந்துமதத்தின் மிகப்பெரும் நிறுவன வியாபாரமாக, ஆன்மீகத்தை ஆக்கி பிழைக்கக் கற்றுக்கொண்ட ஆதிவேசித்தனத்தின் ஆன்மீகப்பற்றாளரான நீங்களும், அவிழ்த்துப்போட்டு ஆடிய றஞ்சிதாவும், அண்மையில் சேர்ந்துகொண்ட மதுரை ஆதீனமும் கழுத்துவரை மணலில் புதைக்கப்பட்டு யானையின் கால்களால் இடறிக் கொல்லப்படவேண்டியவர்கள். வரலாற்றுக் கறைகள் கால்களால் இடறப்படவேண்டும்.

“கதவைத்திற காற்று வரட்டும்”, “தியானம்” என்ற இரு புத்தகங்களையும் இந்தியக்காசு ஆயிரத்து இருநூறு ரூபாவிற்கு வாங்கி யோகத்தில் பழுத்துப்போக நான் செய்த முயற்சிகளின் பயன், உங்களால் பிய்ந்து போன கட்டில் மெத்தைகளுக்கு பதிலாக புதிது வாங்கப் பயன்பட்டிருக்கும் என நினைக்கின்றேன். எனக்கே கூச்சமாக உள்ளது: “கதவைத்திற காற்று வரட்டும்” புத்தகத்தின் இன்னொரு பிரதியை வாங்கி எனது தந்தையாருக்கு பரிசளித்ததற்கு. மகன் தந்தைக்காற்றும் உதவி கொல் எனும் சொல்.

மூலாதாரச்சக்தியை மேல் எழுப்பி சுவாதிஸ்டானம், மணிப்பூரகம், விசுத்தி, ஆங்ஞை வழியாக சகஸ்ராரம் வரை கொண்டு போய் நிறுத்துவதே உண்மை யோகிக்கு அழகு. தாங்கள் மாத்திரமே மூலாதாரச்சக்தியை கவட்டுக்குள் மாத்திரம் நிலை நிறுத்திக் கொண்டவர்கள். சிறுபராயத்தில் சுவட்டு மைதான மெய்வல்லுநர் போட்டிகளில் முதலிடம் பெற்றீர்களோ? இல்லையோ? நீங்களும், றஞ்சிதாவும் கவட்டு மைதான மெய்வல்லுநர் போட்டிகளில் முதலிடம் பெறத் தகுதியானவர்கள்.

இப்போது நான் கேட்பது ஆன்மீகத்தை அல்ல. தவறான வழியில் நான் செலவழித்த எனது பணம் ஆயிரத்து இருநூறு ரூபாவையும் நீங்கள் திருப்பித் தரவேண்டும் என்பதே. புத்தகமாகத்தான் தந்தாயிற்றே என்பீர்களேயானால், நான் வாங்கி வைத்துக்கொண்டது மஞ்சள் பத்திரிகை என்பதை தாங்கள் உணரவேண்டும். ஆயிரத்து இருநூறு ரூபாவும், 24 மாத வட்டியுடன் சேர்த்து இரண்டாயிரம் ரூபா அளவில் வருகின்றது. உங்கள் சொந்தச் செலவில் மெத்தை வாங்கி அதில் வித்தை காட்டுக. கூடமாட ஒத்தாசைக்கு மதுரை ஆதீனத்தையும் வைத்துக் கொள்க.

அப்போது மாத்திரம் கதவைத் திற: காற்று வரட்டும் என இருந்து விடாதீர்கள். காற்றும் கூடவே காக்கிச்சட்டைகளும் வந்து விடக்கூடும். எனக்கு நான் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்கின்றேன். எனக்குத் தரவேண்டிய பணத்தை முடிந்தால் முழுதாகத் தாருங்கள். அன்றேல் ரஞ்சிதாவை விட்டு தரச்சொல்லுங்கள். ரஞ்சிதா தருவதெனில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் முத்தமாகவும் தரலாம். முத்தமாகத் தருக! அதையும் மொத்தமாகத் தருக!! மொத்த முத்தத்துடன் வட்டி முத்தங்களும் ஏற்கப்படும்.

இங்ஙனம்
அல்லலுறும் அபலன்.

000000000ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்