முதல் அத்தியாயத்தை வாசிக்காதவர்கள் வாசித்து தொடர்க!
காதலை எந்தக் கவிஞர்களும் விட்டு வைத்ததில்லை. எழுதிக் குவித்திருக்கிறார்கள். தங்கள், தங்கள் அனுபவப் பகிர்வின்றி எழுதும் காதல் பதிவுகள் உயிர்பெறுவதில்லை. இசை உயிரின் ஆழம் வரை ஒட்டி உறவாடக் கூடியது. கண்களின் ஈரப்பதனுக்கு கனவுகள் காரணமானவை. பதின்வயதுகளில் ஒரு விவஸ்தை இன்றிய அறிமுகமாக எல்லோருக்கும் காதல் எதிர்ப்பட்டிருக்கின்றது. சிலர் சொல்லத்துணிகின்றார்கள். மறைக்க விரும்புபவர்கள் மறந்து போகின்றார்கள்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், பின்னரான தனியார் வகுப்புகளிலும் முளைவிட்டு முயங்கி மானசீகப் பரப்பில் பரம்பல் கொண்ட எனது பதின்மத்து காதல் யாரையும் காயப்படுத்துவதற்கானது அல்ல. கசிவுகளை வெளிப்பரப்பில் உலவவிட்டு, உயிரனைய உள்ளங்களை உள்-காயப்படுத்தும் கைங்கர்யங்களும் இதற்கு கிடையாது.
முழுநோக்கமும் இசைஞானி தனக்கு வாய்த்த ஆயிரத்திற்கும் அதிகமான வேலை, வில்லட்டிகளை விட்டுவிட்டு எனக்கான இசைக் கோர்ப்பில், பாடல் பதிவில் கரம் கோர்த்துக் கொண்டதை உலகிற்கு அறிமுகப்படுத்தும் உன்னத கைங்கர்யம் இது.
சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பெரும்பரப்பில் பூத்த இந்தக்காதல், தனியே பூத்ததாக யாரும் கருதிக் கொள்ளக்கூடாது.தேமாக்களுடன் பூத்தவை. தேமாக்கள் கல்லூரிக்கு அழகு.
தேமா அந்தக் கல்லூரியின் அடையாளப்பொருள். தலவிருட்சம்! மதிலை மீறி வளர்ந்திருக்கும் தேமா பூக்களை வீதியெங்கணும் விநியோகம் செய்தது. மென்காற்று வீசுபரப்பில் வாசனைகளையும் விசுக்கி எறிந்தது. வாசிக்கும் உங்களிற்கும் பூக்களின் சுகந்தங்களும்,மலர்களின் பயணங்களும் கனவாகத் தெரிகின்றதா? நான் என்ன பாடுபட்டிருப்பேன்?
உலகின் அத்தனை ஆடை வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பிலும் அதிசிறந்தது, நீ அணிந்துவரும் பள்ளிச் சீருடைகள். அதை நீ அணிந்து மைதானப்பரப்பை வலம் வருகையில், அநாயாச நடையும், அழகு சூழ் பச்சைப் புல்வெளியும் இனி ஒரு பிறப்புளதேல்…. காணக்கிடைக்காது. தேமாக்கள் தலவிருட்சமெனில் ,தீர்த்தக்கிணறு எங்கள் தாக சாந்திக்காக இடைவேளைப்பொழுதுகளில் முண்டியடிக்கும் குழாய்நீர்த் தொட்டிகள்.
தேகம் யாவும் தீயின் தாகம்.
தாகம் தீர நீதான் மேகம்.
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது. ராஜபார்வை (1982)
பாடசாலை தனியே கட்டடங்களால் ஆனதாக ஒரு போதும் எண்ணிக்கொண்டதில்லை. வீசும் காற்றின் நீள்பரப்பில் ஆசைகள், நிராசைகள் இரண்டும் மோதி அலைகின்றன. ஆசைகளின் வீச்சும்,பேசும் பொருளும் அதிகரிக்க அதிகரிக்க காதல் வெட்டி வீழ்த்திய மனிதத்தின் நினைவிடமாக பாடசாலை காட்சியளிக்கின்றது. இப்போது யாரும் பேசாப்பொருளை காற்று பேசிச்செல்கின்றது.
நீயும் இசையரசி அல்லவா? மோகனா இசையரசியின் மாணவிகளல்லவா நீங்கள்? அருணாச்சலம் மண்டபத்தின் (PRAYER HALL) பக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட இருமாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் நீங்கள் வீசிச்சென்ற சுரக்கூறுகளை முப்பது வருடங்கள் கழித்து இப்போதும் நான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். அருணாச்சலம் மண்டபத்தின் எஃகுத் தூண்களில் எல்லாம் தட தட என அதிர்ந்து கொண்டிருக்கின்றது, நீங்கள் இசைத்த இசைப்பெருவெள்ளம்.
பேராறு நின்ற பெருங்கருணைப் பேராறே?
ஆரா அமுதே! அளவிலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஓளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே -மணிவாசகர்
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றவளே! இது சிவபுராணம் இல்லை. காதல் புராணம். நாயன்மார்கள் நாவால் நவின்றதை நீ கண்களால் பகிர்ந்தவள். உன்வீட்டுத் தெருப்புழுதிகளில் ஒட்டிக்கொண்டுள்ளன என் காலடித்தடங்கள். வீதி எங்கணும் அலைகின்றன நிராசைகள்.
ஓவ்வொரு பொங்கல் நாளின் முன்மதிய நேரத்தில் என் சைக்கிள் உன்வீட்டின் எதிர்க்கரையில் செயின்கழன்று…… காற்றுப்போய் …….எனப் பொய்ப்பாவனைகளால் நின்று நீள்விழிப்பரப்பில் நினைக் காண விழைந்திருக்கின்றது. நின்னைப் பார்ப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருந்ததில்லை. என் மனப்பரப்பை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், நான் உங்களுக்கு எல்லாம் நெருக்கமானவன் என்று காட்டிக் கொள்ளவுமான தன்முனைப்பு உளவியல் என்னை உந்தித்தள்ளியிருக்கின்றது.
மருதடி ஸ்ரீ பரமேஸ்வரா வீதியின் முக்குப்புளியமரம் “ஒரு புளியமரத்தின் கதை“யாக ஆயிரம் கதைகள் சொல்லும்.
முச்சந்தியில் புளியமரம் நின்று கொண்டிருந்த காலத்தில் அந்த இடமே பரிபூரண நிறைவு பெற்றுத் திகழ்ந்தது. அந்த இடத்தைப் பொறுத்தவரை சிருஷ்டிக்கலை, தன் சிகரத்தை எட்டிவிட்டோம் என்ற எக்களிப்பில் தூங்கச் சென்றுவிட்டது என்று தோன்றும். – சுந்தர ராமசாமி
எனக்கும் அப்படித்தான். அது சுந்தர ராமசாமியின் வாழ்வனுபவம். திருதிராட்டினனுக்கு பிறந்தது பாழ்-அனுபவம்.
ஒரு பார்வைக்கு இத்தனை அர்த்தமா?
சட்டென்று மூடுங்கள்
தேவையற்ற அகராதிகளை
இனி உன் கண்களே பேசட்டும்!
என் பதின்மவயது குளறுபடிகள், ஏதாவது அர்த்தபுஷ்டி கொண்டதாக அமையாவிட்டாலும் காதல்புஷ்டி கொண்டு கனத்திருக்கின்றது. செருக்கல் பிள்ளையார் கோவில் பற்றி யாராவது அறிந்திருக்கலாம். எங்கள் தனியார் கல்வி நிலையத்திற்கூடாக செல்லும் பாதை, அந்தப்பிள்ளையார் கோவிலைச் சுற்றி வளைந்து சாவகச்சேரி வைத்தியசாலையின் பின்புறமுள்ள டச்சு வீதியில் கலக்கின்றது.
மழைக்காலங்களில் அந்தப்பிள்ளையார் கோவிலும் சூழவுள்ள தெருக்களும் இடுப்பளவு நீரில் மறைந்துவிடும். தவளைகளும், கழிவுகளும், கஞ்சல்களும் நீரில் மிதக்க பாடசாலைக்கு பின்னரான கொண்டாட்ட களங்களாக கல்விநிலையமும் சூழவுள்ள பிரதேசங்களும் மாறிப்போய்விடும். அதிவேக வேகமெடுத்து எங்கள் சைக்கிள்கள் அந்தநீரைக்கிழித்து ஊடறுத்து ஓடுவதும், திரும்பி வருகையில் சர்ரென்று அடிக்கும் பிரேக்கில் மண்துகள்கள் பறக்கப்பாய்வதுமாக சாகசச்செயல்கள் அரங்கேற்றப்பட்டு … ஆகா அற்புதத் தருணங்கள் அவை. அவ் ஆயகலைகளில் சிறப்புடனும், பொறுப்புடனும் செயற்பட்ட என் நெஞ்சனைய தோழர்கள் கனடாவிலும்,அவுஸ்திரேலியாவிலும் இப்பதிவை வாசிக்கக் கூடும். தேவன், பரா,நிர்மலன்,கண்ணன் ரவி,சபாரட்ணம், மறுஉலகம் மாய்ந்துவிட்ட செல்வன்…..
பற்றீசியா, ஆச்சி என்றழைக்கப்பட்ட ….. மற்றும் மஞ்சுளா,ரேணுகா.
உங்கள் நினைவுகளால் நிறைக்கப்படுகின்றது மனப்பெருவெளி. ஆயகலைகளில் தேர்ச்சியுடன் செயற்பட்ட நாங்கள் அடுத்த கலைகளான கற்றலிலும், செயல்நெறிகளிலும் ஓரளவு தேர்ச்சியுடன் செயற்பட்டிருக்கலாம்.
அதைக் குறுக்கறுக்கும் விதமாக இளையராஜாவின் இசைக்கோர்ப்பிற்கும், இசைச்சேர்ப்பிற்கும் காரணமாகவும் காரியமாகவும் வந்து தொலைத்த உன்னை கவிதைகளால் குளிப்பாட்ட வேண்டும்.
சற்றுமுன் நீ நடந்து போன
தடயம் எதுவுமின்றி
அமைதியாகக் கிடக்கின்றது வீதி.
எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்து போன தண்டவாளம் போல்
இன்றும் அதிர்கின்றது
என் இதயம்.
பேச்சு மூச்சற்றுப்போய் பார்வைப் புலத்தில் பதியன் இட்டகாலம் பலகாலம். தனியார் கல்விநிலையம் சார்ந்த இயற்கைச் சூழலும், நட்புச்சுற்றமும் வகுப்புக்கள் நடக்காத லீவு நாட்களிலும் எங்களை ஏங்க வைத்திருக்கின்றது. யாருமற்ற பகற்பொழுதில், ஆளரவமற்ற வீதிப்பரப்பில், மௌனம் குடிகொண்டிருக்கும் தனித்த பொழுதுகளில் எல்லாம் அவ்விடத்தில் பலதடவை சைக்கிளை நிறுத்தி ஏங்கித் தவித்திருக்கின்றேன். அங்கே காணப்படும் சற்றே வளைவான தென்னை மரத்தில் எங்கள் செருப்புகள் கொழுவி வைக்கப்பட்டு, காணாமற்போன செருப்புகள் பட்டியலில் இடம்பெற்று விடைபெறும் தறுவாயில் கொடுத்து உதவப்படும்.
நிழலின் ஆதரவாய் நின்றீர்கள். நினைவின் ரணங்களாய் கொன்றீர்கள். யாபேரும் நலமா? நம்மை நினைத்துப் பார்ப்பதுண்டா?
இவ்விடத்தில் சற்று நிறுத்தி மூச்சுவிட அனுமதியுங்கள். இனி இளையராஜாவைத் தொடர்வோம்! தலைப்பிற்கும் நிகழ்விற்கும் சம்பந்தமில்லாப் பெருந்திடலில் அலையவேண்டாம்.
ஒன்பதாம் வகுப்புக் கற்கைக்கான பாடநெறிகள் டிசெம்பர் விடுமுறை தினங்களில் ஆரம்பிக்கப்பட்டன. எல்லோரும் வந்து ஒன்று சேர்ந்து ஒழுங்கான கற்கைநெறி தொடங்குவதற்கு முன்னால், ஆரம்பநாட்களில் மிகக்குறைவானவர்களுடன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனக்கென்னவோ அந்த வகுப்புக்கள் எங்கள் இருவருக்கு மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டதாக நினைவு. நீயும் அவளும், நானும் இவனுமென நாலைந்து பேர்கள். வகுப்பு நடைபெறும் தருணங்களில் எல்லாம் கற்பித்த கனவான் கரும்பலகையில் ஏதோ கிறுக்க…. சிறுகல் கொண்டு உன்மீது விட்டெறிந்து நீ திரும்புவதை, அசைவதை, நீள்கூந்தல் நெற்றிப்பரப்பில் விழுவதை ஓதுக்கிக்கொள்வதில் என கரையாப்பொழுதுகளின் நீளம் அதிகம். எங்கே போயின அர்த்தம் பிறழ்ந்த பார்வைகள்.
அழகில் உனக்கும் எனக்கும்
ஏணி வைத்தாலும் எட்டாது
ஆனால்
காதல் வைத்தால் எட்டும். -தபூ சங்கர்
மேற்கொண்டு, மேற்கொண்டு ஏதாவது செய்யப்புகுந்து தொலைந்தழிந்தன காலங்கள். உன்னுடன் கதைப்பதற்கான பலவித தயார்ப்படுத்தல்கள்,தொடர்பாடல் குறித்த கங்கணம், உன்னைப்பார்ப்பதற்கான எத்தனங்கள், முடியாப் பொழுதுகளின் நீள்துயரம்.
எனக்கு மட்டும் சொந்தம்
உனது இதழ் கொடுக்கும் முத்தம்.
உனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் உருகும் சத்தம். அலைகள் ஓய்வதில்லை.(1981)
அந்த தனியார் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்த ஆசிரியை தன்னிடம் கற்பவர்களை தனது வீட்டிற்கே வந்து கற்றுத்தேறுமாறு கனிவுடன் கூறிவிட்டார். நான் கால்நடைத்தமிழன்: அதனால் அந்த ஆசிரியையிடம் ஆங்கிலம் கற்கவில்லை. உயிரனைய நீயும், உள்ளம் நொந்த நானும் மேற்கில் அஸ்தமனத்திற்கு தயாரான கதிரவனுடன் நாங்கள் வளர்த்த காதலையும் சேர்த்து அனுப்பினோமா? என்ற ஐயப்பாடுகள் என்னுள். உதிக்காத காதலுடன், மறைதலுக்கும் தயாரான நாங்கள் அந்த ஆங்கில ஆசிரியை வீட்டு முன்னால் இருந்த புளியமரத்தின் பெருநிழலை சந்தர்ப்பவசத்திற்கான சாட்சிகளாக வைத்து ஒரு பெருமழைநாளில் பேசத்துணிந்தது பேசாப்பொருளான காதலைப்பற்றி.
பேசாப்பொருள் ஆளாளுக்கு வேறுபடுகின்றது. பிச்சைக்காரனுக்கு வராத வருவாய். புரோகிதனுக்கு விழாத உண்டியல் பணம், கத்தரிப்பவனுக்கு வராத கஸ் டமர். அந்த பெருமழைநாளின் பெருவிருட்சமான புளியமரம் இப்போதைக்கெல்லாம் பட்டுப்போய் அதனருகிலேயே இன்னொரு புளியமரமாக கிளைவிடுகின்றது , என்னை ஒத்த இன்னொருவனுக்கு இன்னொரு கிளைக்கதை புனைய.
-தொடரும் வருவாரத்தின் மறுவாரம்.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
அற்புதமான பதிவு. ஆங்காங்கே உள்ள மேற்கோள்களும், கவிதை வரிகளும் அருமை.
By: சித்திரவீதிக்காரன் on ஜூன் 6, 2012
at 2:01 பிப