அது ஒரு ஆபத்தான அவசரமான பயணம் எனக்கு. நிழல் போல உணர்வால் எனைத் தொடர்ந்தவளை நிஜமாக காண விழைந்ததன் செயல்வடிவமாக பயணத்தை தொடர்கின்றேன். பயணம் பாதைகளை நீட்சி அடையச் செய்துள்ளது. நினைவுகள் மனதின் கண்ணெங்கும் நீந்தி விளையாடுகின்றன. காதல் என்னை கட்டியிழுத்து விரைகின்றது. இக்கரையில் இருந்து பார்த்தால் நீர்ப்பரப்பின் அக்கரையில் மினுமினுக்கும் ஒளிப்பெருவெள்ளம் ஆனையிறவு-கிளாலி இராணுவ முகாமினுடையது. எந்நேரமும் சடசடக்க காத்திருக்கும் இயந்திர வல்லூறுகளின் உயிர்குடிக்கும் தோட்டாக்கள் இக்கரையில் நிற்பவர்களை துளைத்தெடுத்து விடலாம். நீர்ப்பரப்பின் மேலே தென்னைகளூடே இன்றும் அழகான நிலவு எறித்துக்கொண்டிருந்தது. நிலவுகள் ஆபத்தில்லாதவை. உயிர் குடிக்கப்போவதில்லை. உன்னாலும் என்னாலும் தரிசிக்கப்பட்ட நிலவுகள் ஒன்றானவை. தண்மதி
இது ஒரு தொடர்கதை; தினம்தினம் வளர்பிறை.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்தான் இந்த ஊரைவிட்டு நீங்கியிருந்தேன். அதுவரை பாடசாலை உயர்தர வகுப்பை எட்டியிருந்த நான் வடபுலத்தின் இராணுவமுற்றுகைகள், சீரற்ற வாழ்க்கைச்சேதாரங்கள் என கணிப்பிடமுடியாத காலக்கணக்கில் தோற்க விரும்பாமல் லண்டனிற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதுவரை என் ஊர்உலகம் எல்லாம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியை மிக அண்மித்த தாமோதரம்பிள்ளை வீதி அரசடியை சார்ந்ததாகவே இருந்தது.
அது வேறு உலகம். அதில் பரீட்சார்த்தங்கள், பயன்கள் பற்றிய எதுவித புரிதலுமின்றி சூழலோடு இணைந்த சுகித்த வாழ்வு எனது. நட்பூக்கள் நிறைந்த நண்பர்கள் வட்டம் அன்பூக்கள் நிறைந்த குடும்ப இணைப்பு. பொழுது போகாக் காலங்களை சைக்கிள்கள் சமாளிக்கும். காலையில் இருந்து மாலை வரை திறந்திருக்கும் சனசமூகநிலையத்தின் வாசகசாலை. வாசகசாலையின் அரைச்சுவர்களுக்கு மேல் கம்பிவலை பொருத்தப்பட்ட சுவர். வெளிப்பரப்பின் காற்றை உள்ளே இழுத்து வரவும், உள்பரப்பின் நினைவுகளை வெளியே கடத்துவதற்கும், பார்வைகளால் துளைத்தெடுப்பதற்கும் அரைச்சுவர் கம்பிக்கிராதிகள் உதவின. கண்டி ஏ-9 வீதியை கடப்பவர்கள் எங்கள் கண்களை கடந்து தான் பயணிக்க வேண்டும்.
விதி வரைந்த கோலங்கள் புள்ளி வைக்காக் கோலங்கள். உயிர்க்கண்ணி வைத்த கோலங்கள். அதுவரை எங்கோ தூரத்தொலைவில் இருந்து விட்டு ஏன் எங்கள் பாதிச்சுவரைத் தாண்டிய மீதி வீட்டிற்குள் நீங்கள் குடிவர வேண்டும். முல்லைத்தீவின் பிறப்பகம் சாவகச்சேரியின் வசிப்பகம் ஆயிற்று. கண்பார்ப்பதற்கும் காது புசிப்பதற்கும் கவி ஒன்று சொல்லேன் நீ உன் கண்களால், அவை அசைவதன் ஜாலத்தால்.
.எங்கள் இருவரது வீடுகளும் ஒற்றைச்சுவரால் பிரிக்கப்பட்ட முற்றும் இணைந்த வீடுகள். பிரிந்திருந்தன என்பதைச் சொல்லி பிரிவுக்கு வழிகோலவில்லை. இணைந்திருந்தன என்பதைச் சொல்லி இணைவுக்கு வழிதேடினேன்
என்னைவிட 7வயது இளையவள் நீ. கல்வி சார்ந்த புத்தகப்பரிமாற்றங்கள், காதல் சார்ந்த கண்பரிமாற்றங்கள், கேலியான சொற்பரிவர்த்தனைகள் (மண்வெட்டிப்பல்) விதைத்திருந்தது. விடுவிடென விரைந்தேகியது காதல். தன்பாதையில் பல சாகசங்களைச் செய்தது. இணைத்திருந்தால் இன்பங்களை சேர்த்து சோகங்களைச் சொத்தாக ஆக்கியிராது.
கிளாலியூடாக அந்த கடல் நீரேரியைத் தாண்டித்தான் சாவகச்சேரி வரவேண்டுமென்பதில்லை. நிலரீதியான தொடர்பு இருந்தது. தொண்டைக்குழிக்குள் பிரதான இராணுவமுகாம். அதற்கான இராணுவ தொடர்வேலி. சாத்தியப்படாத பயணங்களை சாகசம் பண்ணி நீரேரி இணைக்கின்றது.
தண்மதி நிலவு எறித்துக் கொண்டிருக்கிறது. நாளை காலைக்கருக்கலில் உனது பிறந்தநாள். முந்தைய இரவு எனது நீண்ட பிரயாணம். முடிவில் உனைக் காண்பதுடன் ஊரையும் தரிசிப்பேன்.
தென்றல் காற்றே! கொஞ்சம் நில்லு!
மேடை ஏறக் கூடுமோ? மீண்டும் நமது நாடகம்.
நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்.
யாரை சொல்லி நோவது காலம் செய்த கோலம்.
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்.
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே!
என்ன செய்வது சொல்லடி முல்லையே!
கிளாலிக்கூடான பயணம் என்பது மறுபிறப்பு குறித்த இந்துக்களின் நம்பிக்கையை பெருமளவு உண்மையாக்குகின்றது. “கண்டவர் விண்டிலர்” “விண்டவர் கண்டிலர்”. அனுவபவத்திற் கூடாகவே கிளாலிப் பயணத்தின் பாதுகாப்பின்மை குறித்த பக்குவங்களை பெற்றுக்கொள்ள முடியும். குறுக்காகவும் மறுக்காகவும் 5 கிலோமீற்றர் நீளவாக்கில் அமைந்த கடல்நீரேரிப் பயணத்தின் போதே கடற்படையினரின் சிறு உந்துவிசைப்படகுகளையும், பாதுகாப்பிற்காக ஆயுதம் தரித்த இளைஞர்கள் படகுகளையும் காணமுடியும். பயணத்தின் நடுவழியில் இருதரப்பு யுத்தம் ஆரம்பமாகிவிட்டால் பயணிக்கும் சாதாரண பயணிகளின் பாடு திண்டாட்டமாகிவிடும். தரையில் ஒளிந்து கொள்ள இடம் தேடலாம், வெட்டவெளி நடுக்கடலில் ஊர்ப்பட்ட தெய்வங்களை மனதிற்குள் நினைத்தபடி விதிகுறித்த வரைபுகளை மீளாய்வு செய்யவேண்டி வரும். எனது பயணம் அதற்கூடாக தொடர்கின்றது. வடபுலத்தின் மக்கட்சமூகம் கல்வி மேம்பாட்டிற்கு தலைஅசைத்து வரவேற்கும் சமூகப் பண்பாடுடையதாக மாறி இருந்தது. புலம்பெயர்ந்த தருணத்து போர்ச்சூழல் முழுதான கல்வியை காணக்கிடைக்காது தடுத்தது. எனது உயர்தர வகுப்பு பெறுபேறுகள், காதல் பெறுபேறுகளை தட்டிக்கழிக்கும் என்பதால் லண்டன் பல்கலைக்கழக சிவில் என்ஜினியரிங் பட்டப்படிப்பை முழுதாக முடித்து “மருமகனே” என்றழைத்த உன்தாயாரிடம் மனதின் உட்கிடக்கையை வெளிப்பரப்பில் சொல்வதற்காக விரைந்து கொண்டிருக்கின்றேன்.
கடினமான அந்தப் பயணம் மிக சுவாரசியமானது. நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் ஊரைவிட்டு நீங்கியிருந்து லண்டனில் இருந்து உனைக் காண்பதற்காக நீரேரியின் கரைகளில் நிற்கின்றேன் நினைவுகள் சுமந்து. நினைவழியாநாட்கள். இந்த நான்கரை ஆண்டுகளில் ஊர் தனக்கான பிரதான பாதையை இழந்திருந்தது. லண்டனில் இருந்து இலங்கை திரும்புவதற்கு சட்டம் அனுமதியாச் சூழலில் பிறிதொரு நாட்டிற்குள் புகுந்து அங்கிருந்து இங்கென இழுத்து வந்தது உன்மீதான காதல் அக்கறைகள். அக்கறை இப்போது இக்கரையில் நிற்கின்றது.
இக்கரையில் இருந்து அக்கரைக்கு மூன்றரை மணிநேரப் பிரயாணம். நிலவு மாத்திரமே வானத்து வெளிச்சம். இருள் பாதுகாப்பானது. பெருமீன்கள் படகுப்பிரயாணத்தில் துள்ளி படகுக்குள் விழத்தொடங்கின. பதட்டப்படாமல் பிரயாணம் மேற்கொள்வதே பாதுகாப்பானது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருந்தது.
நாளை அவளது பிறந்தநாள் என்பதே ஆனந்தபிரவாகம். அவளுக்கு பரிசளிப்பதற்காக திருச்சி சாரதாஸில் தேடித்தேடி வாங்கிய காஞ்சிபுரம் பட்டுப்புடவையும் லண்டனிலிருந்து கொண்டுவந்த பரிசுப்பொருட்களும் எனது துணிவுத்தொகுதியை விட திணிவுத் தொகுதியை அதிகமாக்கி இருந்தன. வாராயோ வான்மதி.
மெல்ல மெல்ல படகு விரைந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நடுப்பரப்பு மீது பயணித்துக் கொண்டிருந்த படகு அதேயளவான எதிர்க்கரை நோக்கிய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அதே அரைமணி நேரத்தில் கரையைத்த தொட்டு விடலாம். கடலின் கரையும் காதலின் கரையும் பாதுகாப்பானவை. பயணத்திற்கு இலக்குகள் தாம் முக்கியம். வந்த வழியல்ல என எனது மனம் இடித்துச் சொல்கின்றது. கரையைத் தொட்டோம். கரையின் மணற்பெருவெளி பதட்டமுடையதாக இருந்தது. படகுப் பயணத்தை முடித்து தயாராக இருந்த வாகனத்தினூடாக சாவகச்சேரியை அடைய வேண்டும்.
மெல்ல அதிகாலைப் பொழுதை அண்டிவிட்டிருந்த காலைகளின் புள்ளின் ரீங்காரம் தூரத்து இராணுவமுகாம் வெளிச்சங்கள். இக்கரையில் பயப்பதட்டத்துடன் கூடிய முகங்கள். எல்லாவற்றையும் தாண்டி விரைந்தது அதிக பயணிகளுடனான கி.மு வை சேர்ந்த வாகனம். மண்ணெண்ணெய் + பெற்றோலில் ஓடும் அந்த வாகனம் வானத்து புகையை எல்லாம் தன்னிலிருந்து வெளியேற்றியது.
தற்போது நான் நிற்பது தாமோதரம்பிள்ளை வீதியிலமைந்த எங்கள் வீட்டின் முன்னால்.
எங்கள் வீட்டின் கேற்றினடியில் இருந்து வீட்டைப்பார்க்கின்றேன். வீடு பெரு மௌனத்துடன் குப்புறப்படுத்த கட்டடமாக தெரிந்தது. உன்னைப்பார்க்க உறக்கத்தை விட்டேன். நான் வந்தது தெரிந்து என்னைப் பார்க்க நண்பர்கள் வருவதற்கிடையில் உன்னைக்காண விழைந்தேன்.
நீயும் நானும் நீர் மொண்டு அள்ளிய கிணற்றின் கப்பி காலை வேளையில் கிரீச்சிடுகின்றது. சற்றேறக்குறைய இன்னும் விடிந்து விட்டால் கிணற்றடியில் உன்னை தரிசிக்கலாம். பார்வைகளால் பதியன் இடலாம். முன்னைய எங்கள் கிணற்றடிக் கனவுகள் கண்களை நிறைத்தது. பாடசாலை புறப்படுதலுக்கான அவசரப்பொழுதுகளில் அசராப் பொழுதுகளாக காலை கிணற்றடி தரிசனங்கள் வாய்த்தன. நித்திரை முறித்த சோம்பலுடன் பூசாப்பூச்சுகளுடன் அலங்காரமின்றிய அவள் நீயாக என்னுள் நிறைந்தாய். அலங்காரமின்றிய அற்புத அழகு. என்னவள் கண்களில் நிறைந்து கனிநடம் புரிந்தாள்.
ஒரே நேரத்தில் இப்பாலும் அப்பாலுமாய் நான், நீ என இரண்டும் இரண்டும் நான்கானது. பார்வை ஒன்றே போதுமே. அந்தப் பங்குக் கிணற்றை மறைத்தது தகரவேலி. உன்பங்கிலிருந்து நீயும் என்பங்கிலிருந்து நானுமாக பெருமளவில் காதலை வளர்த்துக் கொண்டது. கிணற்றுக்குள் திடுதிப்பென போடும் வாளிகள் ஒன்றை ஒன்று முட்டி இருவருக்குமான பரிவர்த்தனை தளமாக கிணற்றடியை மாற்றியமைத்தது.
எனது வருகையை தெரிந்து கொண்ட உனது தாயார் எனக்கும் உனக்கும் உறவினரான நல்லக்காவிடம் “எனது மருமகன்” வந்திருக்கிறார் எனச் சொன்னதாக சொல்லிச் சென்றார். எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.
கண்ணீர்க் குயில் பாடுகின்றேன் வா!
உனது 19வயது பிறந்தநாளில் உனைக் காண்பதற்காக ஒரு முழுப்பகலை நான் தொலைத்திருந்தேன். வீடுகள் நெருக்கமாகவே இருந்தன. நீயும் நானும் அதிக தொலைவிலில்லை. பின்மதிய நேரத்தில் தாயாருடன் நீ வந்திருந்தாய். கொண்டு வந்திருந்த நீலநிற பட்டுப்புடவையை உன்னிடத்தில் தந்து விட எண்ணியபோது சாத்திர-சம்பிரதாயத்தில் ஊறிய எங்கள் சிந்தனை பஞ்சாங்கம் பார்க்க விளைந்தது. திருச்சியில் வாங்கிய அந்தப் பட்டுப்புடவை அட்டமி-நவமி நாளில் வாங்கியதாக தெரிந்தது. “அட்டமியில் தொட்டது துலங்காது” என பழமைச்சம்பிரதாயத்தில் ஊறிய உட்கிடக்கை என்னை பயம் கொள்ள வைத்தது. நெருக்கமான உறவு நீடித்திருக்க வேண்டும் என நினைத்த நான் அந்த நீலநிறப்பட்டை உன் பிறந்தநாளுக்கு பரிசளிக்காது தவிர்த்து விட்டேன். இன்றளவும் எனைக்கொல்லும் உட்கிடக்கை அதுவாகப் பதிவாகின்றது.
எங்கள் இருவருக்குமான உரையாடல்கள் காதல் பற்றியதாகவோ, கனவு பற்றியதாகவோ இருக்கவில்லை. உன்னருகில் உனது தாயும், என்னருகில் எங்கள் வீட்டாருமென இருந்து பாரம்பரிய சூழலை பக்குவப்படுத்திக் கொண்டதில் எங்கள் விருப்பங்களை விளக்கிச் சொல்லிக்கொண்டிருக்க முடியவில்லை. முடியாமல் போனதெல்லாம் முடிவாய்ப்போயின. தொடரமுடியா உறவுகளை தொலைதூரமாக்கி விட்டன.
அதற்கடுத்த நாள் உன்வசம் நீயிருக்கவில்லை. உயர்தரப் பரீட்சை முடிவுகள் அன்றந்த நாளில் வெளியாகியிருந்தது. நீ எதிர்பார்த்திருந்த மருத்துவப்படிப்பிற்கான நுழைவு மதிப்பெண்கள் கிடைக்காத காரணத்தால் அழுதுகொண்டிருந்தாய். தினசரி மகிழ்வாய் பூத்திருந்த மலர்களை ஒத்த உன் முகத்தை அழுது வடித்து படிந்த துயரத்துடன் காணச்சகிக்காமல் என் வீட்டிற்குள் நான் முடங்கிக்கொண்டேன். சந்தர்ப்பங்களை தவறவிடுவதில் தான் காதல் தோற்றுப் போகின்றது. The ball is on your court என்பர். நான் அடித்து ஆடாததன் வலியை இன்றளவும் உணர்கிறேன். ஒரு முடிவெடுக்க புறப்பட்ட பிரயாணம், ஒரு முடிவுமின்றி தொடர்ந்தது.
எனது போதாத காலத்தின் பெரும் துயரமாக பிரிவு வந்து அழுத்தியது. மிக இறுக்கத்துடன் முடிவுகள் எட்டப்படாவிட்டால் காலப்பெருவெளியில் முடிவுகள் நீர்த்து நிலையற்றுப்போய்விடும். வெற்றி பெற்ற மனிதனுக்கும், தோல்விகளை தினசரி சந்திக்கின்ற மனிதனுக்கும் இடையிலான வேறுபாடு சரியான தருணங்களில் எடுத்த முடிவுகளும் முடிவுகளுக்கூடாக கிடைத்த இறுதி இலக்குகளுமேயாகும்.
இடைப்பட்ட காலத்தில் உனது தாயார் எனது தந்தையை சந்தித்து எங்கள் இருவருக்குமான பொருத்தம் பார்ப்பதற்காக எனது ஜாதகத்தை கேட்ட பொழுதில் எனது தகப்பனார் கூறியது “என்னளவில் நான் இதற்கு சம்மதிக்கவில்லை. எனது மகனுக்கு விருப்பமெண்டால் ஒத்துக்கொள்கிறேன்” என்று. பெரியவர்கள் தங்கள் தீர்மானங்களில் பிடிவாதங்களில் விடாப்பிடியாக நின்றார்கள்.
எனது தாயாரின் சகோதரி திருமணம் முடித்த வகையில் உனது நெருங்கிய உறவாக மாறியிருந்தும், உனது வீட்டாரிடம் எனது ஆவல்களை வெளிப்படுத்துவதற்கு அவருக்கிருந்த அதீத செல்வாக்கும் என்னளவில் பயன்படாது போயிற்று. பெரியவர்கள் பெரிதாக எதிர்பார்ப்பார்கள். சின்னவர்கள் சின்னத்தனங்களுடன் கனவு காண்பதாக பெரியவர்களின் அகராதியில் எழுதி வைத்துள்ளது பெரும் பிழை வடிவமாகும்.
அவன் என்னிடம் ஒரு சொல் சொல்லியிருந்தால் அவர்களது திருமணத்தை நான் நடத்தி வைத்திருப்பேன் என சித்தியும் பொருமிக்கொண்டார். அவரைப் பெருமைப்படுத்தி முன்னிலைப்படுத்தாத காரணத்தால் என் காதலின் பிரிவுக்கு சித்தியும் பெருமளவு காரணமாக இருந்தார்.
பெரியவர்கள் என்ற பெருமையை மூத்த உறுப்பினர்கள் என்ற மகிமையை இளையவர்களான சிறுவர்களான நாம் குலைத்து நாசமாக்கி விட்டதாக நம்பும் இந்த சமுதாய அமைப்பு முறையின் முடைநாற்றம், என்னை பெருமளவு நாசப்படுத்தி விட்டது. சாத்தியமுள்ள இணைவுகளை சாத்திரங்கள் பிரிக்கின்றன. நாளும் கோளும் நல்லதே செய்யும். ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. கேட்டதில்லையா நீ? கேளாச்செவிகளா உன் பெற்றோருக்கு. படிக்கிறது தேவாரம் இடிக்கிறது நான் வளர்த்த காதல் கோட்டை.
காதல் கோட்டை பெயரளவில் பாதுகாப்பானது. இருவரது உணர்வுகளை பாதுகாத்துக் கொள்ள. எங்கள் இருவரது உணர்வுபூர்வ செயல்களால் காப்பாற்றியிருக்க வேண்டும் கோட்டையை. ஒருபக்கம் காத்துக்கொள்ள மறுபக்கம் இடித்து துவம்சம் செய்தார்கள் பொருந்தாக் கோட்பாடுகளால்.
நாங்களே வரைந்து கொண்ட பாதைகள். நாங்களே வளர்த்துக் கொண்ட எல்லைகள். நாங்களே வகுத்துக் கொண்ட பயணங்களுக்கு பாதைகளும், எல்லைகளும் சம்மதிக்காத போது அழித்து திருத்தப்படும். நாளும், கோளும், மூலமும், திருவாதிரையும் ,8ம் இடத்து குருபகவானும், 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் வியாழனும் தீர்மானிக்க அனுமதித்திருந்தால் உங்களுக்கு காதல் என்ன வேண்டியிருக்கின்றது என என் மனச்சுவடுகள் உன்னிடம் கேள்வி கேட்கின்றன.
ஜாதகத்தை வாங்கிச்சென்ற உனது தாயார் பொருத்தம் பார்த்த இடத்தில் 7ல் செவ்வாய் தோசத்துடன் கூடிய என்னை மருமகன் ஸ்தானத்திலிருந்து நழுவவிட்டார்.
ஓன்றுமே நடக்காமல் ஒன்றுமே இயங்காமல் விட்ட சூழலை மீண்டும் இயங்க வைப்பதற்காய் 94ம் ஆண்டிலும், 96ம் ஆண்டிலுமென இரண்டு பிரயாணங்கள். இறுதிச் சந்திப்பில் கொழும்பில் வைத்து நீ வீட்டிலிருக்கும் பொழுதில் நீ வீட்டிலில்லை எனவும் எனது மகளுக்கு சம்மதமில்லை எனவும் கூறி மருமகனை மறுமகனாக ஆக்கி வைத்தார் உன் தாயார்.
லண்டன் வைத்தியசாலையில் தனது இயலாமைக்காலத்தில் வைத்திய பராமரிப்பிற்கு உள்ளான எனதினிய சித்தி “கால் குளிருதடா காலுறையை மாட்டிவிடு” என்ற பொழுதில் சித்தியின் கால் பற்றி காலுறை அணிவித்த கணத்தில் மனதார வாழ்த்தினேன்.
கனன்ற காயம், துயரப்படிமம், பாதகமான சித்தி, பழம்பெருமை பேசும் சமூகமுறை, மெலிதான உணர்வுகளை புதைத்த வன்கொடுமை, செவ்வாய் தோசம் பற்றிய பரிதலின்றிய மூடத்தின் முழுப்பகை, கிரக சஞ்சாரம், காதல் கணிதத்தில் விட்ட பெரும் பிழைகள், தோச ஜாதகப் பிழைகளான அவளின் தந்தையின் திடீர்மறைவு, இராணுவ முகாமில் இருந்து ஏவிய ஷெல் வீச்சால் நிகழ்ந்தது. திடீர்மறைவு அவளின் தாயாரில் ஏற்படுத்திய தாக்கம் எல்லாம் சேர்ந்து காதலை கனபரிமாணத்துடன் குழப்பி விட்டது.
இப்போது
எல்லாம் புறம்தள்ளி நிமிர்ந்து கொண்டேன்.
குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகின்றாய்.
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா.
குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகின்றாய்.
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா.
இருவரும் வாழ்க!
“ஆருத்ரா” தரிசனம்
எல்லோரிடமும் கதைகள் ஒளிந்திருக்கின்றன. மனிதமுகங்கள் கதையின் வரிவடிவங்கள். எங்கோ தொலைவில் யாரிடமோ ஒளிந்திருந்த கதை, முகத்தின் வரிவடிவங்களில் படிந்த கதை, ஒரு கதைசொல்லியாக என்மூலம் வெளிப்பட்டிருக்கின்றது.
கதை அருமை!
By: Theresa Selvan on ஜூன் 25, 2012
at 10:55 பிப
Excellent. Well done.
High quality of the writing.
Nice.
By: Bavan on ஜூன் 29, 2012
at 9:49 பிப
நண்பா என் நெஞ்சை தொட்டு விட்டது உன் கதை. உன்னது மட்டுமல்ல எத்தனையோ காதல் ஜோடிகளை இந்த சனி , செவ்வாய் , வியாழன் என்று குழப்பி இருக்கிறது!! இனி வரும் சந்ததிகள் இதை உணர்ந்து நடப்பார்களா?
By: shiva on ஜூலை 1, 2012
at 12:05 பிப
கதை மிகவும் அருமை. காதலுக்காக நாடு கடந்து வந்து சந்திப்பது, முதலில் ஏற்கும் பெற்றோர் பிறகு காதலைப் எதிர்ப்பது என்று கதை விறுவிறுப்பாக செல்கிறது. பகிர்விற்கு நன்றி.
By: சித்திரவீதிக்காரன் on ஜூலை 2, 2012
at 12:38 முப