பழைய மாணவர்சங்க ஒன்றுகூடல்கள், விழாக்கள் யாவும் வடையின்றி அமைவதில்லை எனவும் அவ் ஒன்று கூடல்களில் கலந்து கொள்பவர்கள் வடைகளை தின்று தீர்த்துவிட்டு கலைந்து விடுவதாகவும் என் பெரிய மனது அபிப்பிராயப்பட்டுக் கொள்கின்றது. மெதுவடையுடன் தேனீர் விருந்துபசாரமும் நடைபெற்று, மீதமாக நேரமிருந்தால் சங்கச்செயற்பாடுகள் பற்றி கதைத்துக்கொண்டு கனவான்கள் கலைநிகழ்வுகளையும் ருசித்துக்கொண்டு வெளியேறி பாடசாலை பழையமாணவர் சங்க நிகழ்வுகளுக்கு முடிவுரை எழுதிவிடுவதாக, பார்த்துக்கேட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஊகித்துக்கொள்ள முடிகின்றது.
அவ்வாறே ஒரு பழையமாணவர் சங்கத்தை கொண்டிழுத்து கோட்டைவிட்டவர்கள் என்ற தகுதி தராதரத்தோடு ஒரு துன்பியல் நிகழ்வு அரங்கேற்றம் செய்யப்படுகின்றது. பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் நினைவுகள் துளசி அக்காவின் பெருவடையோடு நினைவு கூரப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் ஏதோவொரு பாடசாலையின் ஒன்றுகூடலும், நிறைவு விழாவும் நடந்தெய்துவதாக தெரியவருகின்றது. பழையமாணவர் சங்க ஒன்றுகூடல்களும், விழாக்கள் பற்றிய செய்திகளும், காலம்-நடைபெறும் திகதி, விழாக்களின் நிகழ்ச்சி நிரல்,பிரதம விருந்தினர் பற்றிய தரவுகளுமாக முகநூல்கள் மூலமாக செய்திகள் தெரியப்படுத்தப்படுகின்றன. கேட்பதற்கு அறிவதற்கு ஆசையாகத்தான் இருக்கின்றது. எந்தப் பாடசாலையை சேர்ந்தவர்கள்? எந்த வருடத்தில் கற்றுத்தேறினார்கள்? பாடசாலைகளின் ஆக்கப்பணிகளில் இவர்களின் பங்கு என்ன? என வினவுவதற்கும், அறிவதற்கும் நிறையவே இருக்கின்றன.
பாடசாலை ஒன்றுகூடல் விழாக்களில் இவர்கள் எல்லாம் தொலைத்ததில் இருந்து மீளப் பெற்றுக்கொள்கிறார்கள் இளமையை, கனவுகளை எல்லாம். விட்டதைப் பிடிப்பதென, ஒரு நாள் கூத்தாக தொலைந்து போகின்றன ஒன்றுகூடல்களும், ஆண்டு விழாக்களும். எனக்கென்னவோ இளவயதுக் கொண்டாட்டங்களுக்கு உரிய களமாக புலம்பெயர்ந்த தேசத்து பழைய மாணவர் சங்கங்கள் செயற்படுவதாகவும், கனவின் இருப்பை மீட்சிமைப்படுத்தும் தளங்களாக இவை காணப்படுவதாகவும், மிக அரிதாக சில பழைய மாணவர் சங்கங்கள் பாடசாலை வளர்ச்சிக்கு நிதியுதவி அளிப்பதாகவும் எனது சிறுபுத்திக்கு உறைக்கின்றது.
நாங்கள் பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து துளசிஅக்காவின் உப்பிப்பெருத்த ஓட்டைவடை சாப்பிட்டு தேனீர் குடித்த கதையாக எங்காவது ப.மா.சங்கங்கள் ஆகியிருந்தால் நாங்களே அதற்கு முன்னோடி அல்லது சம கால சந்தர்ப்பவாதிகள் என தோற்ற உணர்வும் குற்ற உணர்வும் கலந்தடிக்கின்றன. என் செய்வோம் பராபரமே!
இன்றளவும் பேனா பிடித்து ஏதோ கிறுக்குகின்றோம் என்றால் நாங்களும் சிற்றறிவு எட்டப்பட்ட பெருந்தகைகள் என்பதையும், எங்களுக்கும் கல்வி புகட்டிய வாத்திமார்கள் இருந்தார்களெனவும், அதற்கு களமாக ஒரு பாடசாலை இருந்ததெனவும், பாடசாலை விட்டு வெளியேறிய வகையில் அதற்கு நாங்கள் பழைய மாணவர்கள் என்பதையும் நான் சொல்லாமலேயே நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்கள்.
அப்படியான வகையில் நாங்களும் அந்தப் பாடசாலைக்கு கைமாறு செய்ய காலம் கனிந்து வந்தது. 2004 என நினைவு. அந்த வருடத்து நாளொன்றில் ZURICH VOLKSHAUS சிறுமண்டபத்தில் தனது கைக்காசை செலவு செய்து மண்டபம் பிடித்து நிறைய மெனக்கெட்டு நண்பர் சிவநேசன் என்னையும் அழைத்திருந்தார்.எல்லோருக்கும் வருந்தி அழைப்பு அனுப்பியும் கிட்டத்தட்ட இருபது பேர் வரை வந்திருந்தனர். இருபதுக்கு ஏன் கிட்டத்தட்ட? இருபது பேர் மட்டுமே வந்திருந்தனர்.பழைய மாணவர் சங்கம் எப்படி அமைய வேண்டும்? தலைவர் செயலாளர் செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது எனவும் அது குறித்த குறித்த விபரங்களை வெளியிடுவது எனவும் அன்றைய நாளின் நிகழ்ச்சி நிரல் மனதுக்குள் படமிட்டிருந்தது. சிவநேசன் அது குறித்து நிறைய திட்டமிடல் செய்திருந்தார். யார் யார் அது குறித்து ஒழுங்காக செயற்பட வல்லவர்கள் ? யாரைப் பிடித்து காரியமாற்றலாம்? வாய்ச்சொல் அருளுபவர் எவர்? என்பதையெல்லாம் சிவநேசன் மிகத் தெளிவாக அறிந்திருந்தார்.
அதனால் தான் பத்தோடு பதினொன்றாக அத்தோடு இதுவுமொன்றாக என்னையும் கூப்பிட்டிருந்தார் எனவும் வாய்ச்சொல் அருளுபவர் லிஸ்ற்றில் என்னையும் இணைத்திருந்தார் எனவும் சங்கசெயற்குழு உறுப்பினர் தெரிவில் நான் இடம்பெறவில்லை என்பதாகவும் நான் மனங்கோணி விடக்கூடாதென பின்னர் என்பெயரையும் ஏதாவது பிரிவில் இணைத்ததாகவும் நினைவுகள் சொல்லிக்கொள்கின்றது.
பாடசாலைக்காலத்திலும் சரி, அதற்கு பின்னரான காலத்திலும் சரி எட்டி நின்று “விடுப்பு ” பார்க்கும் கைங்கர்யமே எனக்கு இலகுவாக ஆகி இருக்கின்ற காரணத்தால் உறுப்பினர் தேர்வு சமயத்திலும் அதற்கு பின்னரான ஒன்றுகூடல்களிலும் என்னை இணைத்த, இணைக்காதற்கு நான் கவலைப்பட்டுக்கொண்டதில்லை; மனங்கோணிக் கொண்டதில்லை. செயற்படுபவர்கள் செயற்பட உதவி ஒத்தாசை பணிகளில் அணிலாக என் சிறு பங்கும் இடம்பெற்று இருக்கின்றது அல்லது தவிர்த்து விடக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றது.
விடுப்பு பார்ப்பது இலகுவான மேம்போக்கான காரியம். அதேசமயம் மிகச் சுதந்திரமானதும் கூட. விமர்சனங்களை மிக எளிதாக முன்வைக்கலாம். விருப்பம் இல்லாதவிடத்து வெட்டிக் கொள்ளலாம்.
ப.மா.சங்கத்தை ஆரம்பிப்பது, அதைக் கொண்டிழுப்பது, இடையில் எழக்கூடிய பிரச்சனைகளை சமாளிப்பது என எதிலுமே போதிய முன் அனுபவத்தை கொண்டிராதபடியால் இவை எல்லாவற்றிலும் போதிய முன்அனுபவம் “வொய்ஸ்” கொண்டிருந்த கணா மாஸ்ரர் அவர்களையும் முதல் சந்திப்புக்கு நண்பர் அழைத்திருந்தார். “கணா” எனவும் “கணபதிப்பிள்ளை மாஸ்ரர்” எனவும் அழைக்கப்படுகின்ற எங்கள் அன்பிற்குரிய கணபதிப்பிள்ளை யாழ்நகரில் சயன்ஸ்சென்ரர் வைத்திருந்தவர். சூரிச் நகரிலும் தற்போது தனியார் கல்வி நிலையம் வைத்திருப்பவர். உடுப்பிட்டி அமெரிக்க மிஸன் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தை வெற்றிகரமாக கொண்டிழுக்கும் முன்னோடி என்ற வகையில் எங்கள் பாடசாலை ப.மா.சங்க ஆலோசனைகளுக்கு புத்தி கூறல்களுக்கு யாவுமாகி நின்றார். போற்றி!
முதல் நாள் சந்திப்புகளுக்கு பிறகு அடுத்தடுத்த அமர்வுகளில் சங்கம் சற்று தளிர்நடை போடத் தொடங்கி இருந்தது. சங்க நடைமுறைகளுக்கு ஒத்து இயங்கக் கூடிய யாப்பு உருவாக்கப்பட்டது. ஓவ்வொரு அமர்விலும் சிறு சலசலப்பும், கணாவின் கைங்கர்யத்தில் சமாளிப்பும் இடம்பெற்று ப.மா.சங்கம்”பரவாயில்லை” சங்கமாக மாறி சிறுநிதி, ஆளணி பெருக்கமுள்ள நிலையை எட்டியிருந்தது.
நினைத்துப்பார்த்தால் ஒவ்வொரு ஆரம்பமும் ஒருபுள்ளியில் இருந்து தொடங்குவதாகவும் – தளிர்நடை, வளர்ச்சி,பெருநிலை என்றபடிகளை தாண்டி உன்னதம் பெற்றவுடன் , கணக்காக “கண்காணிப்பு” செய்தே நினைத்ததை எட்டி விடலாம் எனவும் என் விடுப்பு பார்க்கும் மனம் சொல்லிக் கொள்கின்றது. நண்பர் சிவநேசன் தான் ஒவ்வொரு காரியமாற்றவும் செத்து பிழைத்ததாகவும், நான் இன்னும் கூடமாட நிறைய உதவி ஒத்தாசை பண்ணி இருக்கலாம் எனவும் அபிப்பிராயம் வைத்திருக்கின்றார்.
என்னால் யாருடனும் ஒத்துப்போக முடிவதில்லை. குழுநிலைச் செயற்பாடுகளுக்கு நான் பொருத்தமானவன் இல்லை. உண்பது, உறங்குவது போன்ற தனிநபர் செயற்பாடுகளுக்கு மாத்திரமே பொருத்தமானவன் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை
சங்க அங்குரார்ப்பண தேதியில் இருந்து ஒரு வருட நிறைவுக்குள் ஆண்டு விழாவையும் நடாத்த பெரிதும் ஆசைப்பட்டார் நண்பர். அவர் ஆசைப்பட்டது போலவே காலமும் கனிந்து வந்தது அல்லது திருவருள் கூடிநின்றது.
அவ் ஆண்டு விழாவில் சுவிஸ் நாட்டில் வசிக்கின்ற அனைத்து பழைய மாணவர்களின் முகவரிகளையும் தேடிப்பிடித்து அவர்களது வருகையின் முக்கியத்துவத்தையும், கலந்து சிறப்பிப்பதால் பாடசாலை வளர்ச்சிக்கு பெருமளவில் உதவ வேண்டியதன் பிரதானத்தையும், தொலைபேசி – கடித வாயிலாக தெரியப்படுத்தி இருந்தோம். நடைபெறும் கலைநிகழ்வுகளில் அவர்களது குழந்தைகளையும் பங்கேற்க வைத்து கலை-கலாச்சார ஒன்றுகூடலாக விழாவை முதன்மைப்படுத்தி இருந்தோம்.
பாடசாலையின் முன்னாள் உதைபந்தாட்ட வீரரான ஹமீம் அவர்களை அட்டில்கூடத்தில் சமையலுக்கு பொறுப்பேற்க வைத்து சுவையான உணவு பரிமாற்றத்திற்கு வழிவகை செய்திருந்தார் சிவநேசன். எங்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணி அன்றைய காலத்தில் அதி சிறப்புமிக்க அணியாக யாழ்மாவட்டத்தில் திகழ்ந்தது. இளங்கோ, தயாளன், ஹமீம் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியின் சிறப்பு வீரர்கள்.
ஹமீம் போர்ச் சூழலில் ஊரினின்றும் வெளியேறி புலம்பெயர் தேசத்தில் ஆத்மார்த்த நட்புடன் கல்லூரியின் ஒன்றுகூடலில் அட்டில் கூடத்தை பொறுப்பெடுத்து செயற்படுத்தினார். நான் காய்கறி நறுக்கி கொடுக்கவும், கலைநிகழ்வை தொய்வின்றி நடாத்தி முடிக்க மாணவச் செல்வங்களை ஒழுங்குபடுத்தி மேடையேற்றி ஒருங்கிணைக்கவும் நியமனம் பெற்று இருந்தேன்.
பாடசாலை அதிபரின் வாழ்த்துச் செய்தியுடன் பழைய மாணவர்சங்க ஒன்றுகூடல் நிகழ்வு தொடங்கியது. பாடசாலையின் மிகப்பழைய மாணவரும், நோர்வேயில் வசிப்பவருமான ஆசிரியர் ஒருவரும் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
பாடசாலையின் இருக்கைகளை “வாங்கு” என்றும் சொல்லிக்கொள்வதுண்டு. முன்வாங்கில் உட்கார்ந்திருப்பவர்கள் வகுப்பில் முதன்மை மாணவர்களாகவும் பின்வாங்கில் வகுப்பின் “சக்கட்டைகள் “உட்கார்ந்து கொள்வதுமாக ஒரு ஐதீகம் நிலவியது. அதை வைத்து “முன்வாங்கு, பின்வாங்கு” என்ற தலைப்பிலான அடியேனின் கவிதையும் இடம்பெற்றது.
மிக இனிய ஒன்றுகூடல் அனுபவத்தையும், சொந்த ஊரின்”இன சனத்தை” ஒரேநாளில் சந்தித்த மனமகிழ்வையும், பாடசாலைக்கு தருவதற்கான ஒரு தொகை பணத்தையும் ஒரு சேரத்தந்த அந்த ஒன்றுகூடல் அந்த வருடத்துடன் நின்று போனது. தொடர்ந்து நடைபெறாமல் போனதற்கு ஆளாளுக்கு ஆயிரம் காரணம் கற்பித்துக்கொண்டார்கள்.
ஊக்கமும், ஊக்கிகளும் இல்லாமல் சோடா உடைத்தவுடன் பொங்கி அடங்கிவிடுவது போன்று ஒன்றுகூடல் ஒருவருடத்துடன் நின்று போனது.
மிக அண்மையில் லண்டனில் அதே பாடசாலையின் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடலும், கலைநிகழ்வும் நடைபெற்றதாக நண்பர்கள் தெரியப்படுத்திய போது இங்கே தின்றுதீர்த்த துளசி அக்காவின் பெருவடையை ஒத்ததான பவளம் அக்காவின் மெதுவடையை ருசிக்காமல் போன கவலை என்னுள் ஆட்கொள்கின்றது.
வடை போச்சே!!!!
வருத்தம்: கட்டுரையின் தேவை கருதி பிரான்ஸ் ப.மா சங்க ஒன்றுகூடல் அழைப்பிதழ் பயன்படுத்தப்படுகின்றது. பொறுத்தருள வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்