ஆருத்ரா எழுதியவை | ஜூலை 18, 2013

கழுதையிடம்-கடவுளிடம்.

bye.1

கனடாவுக்கு செல்பவர்கள்
எவரும்
கழிப்பறைக்கு போகும்போது
சொல்லிச் செல்வதில்லை.

போய்ட்டு வாறன்-போய்ட்டு வந்திட்டன்
எண்டாலும்
சொல்லாச் செல்லும் பயணங்கள்
சொர்க்கமளிப்பதில்லை.

பக்கத்து பிரான்ஸ்ற்கோ
தொலைதுார சொந்த தேசத்திற்கோ
பயணத்துாரம் குறைவோ- கூடவோ
தோழியிடமோ – யாரிடத்தோ
சொல்லிச் சென்று பழக்கப்பட்டவர்கள்

தொடர்பாடல் நின்றதும்
திண்டாடிப் போவார்கள்.

விடுமுறைப் பயணம் இல்லை.

வயதான பெற்றோர் அரு‌கிருந்து
அழுதுவிட்டு வரும் பயணம்தான்.

மௌனத்தின் துணையுடன்
தனித்திருக்கும் நாட்கள்தான்!

எங்கே சொல்லலாம்?

காற்றிடம்….

காற்றிடம் சொல்லிப் பயனில்லை.
அது வெற்றிடம்.

வெறுவெளியில் அசைந்தாடும் மரத்திடம்……..
மரத்திடம்…வேண்டாம் மறந்திட்டம்.

எனக்குப் பிடித்த கழுதையிடம்
அன்றி கடவுளிடம்
சொல்லலாம்.

திரும்பி வருவதற்குண்டான
பயணங்களை சொல்லித்தான்
சென்றாக வேண்டும்

இறுதிப்பயணத்தில்
சொல்லாமல் போவதற்கான
சாத்தியங்களே நிரம்ப இருப்பதால்

அதுவரைக்குமான பயணங்களை
சொல்லித்தான் சென்றாக வேண்டும்.
கழுதையிடம்-கடவுளிடம்.

************************************************************************************************


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்