ஆருத்ரா எழுதியவை | ஜூன் 8, 2013

ஆப்பரேஷன் சக்சஸ்..

மே மாதம் 31 ம்திகதி,  சூரிச்  பல்கலைக்கழக வைத்தியசாலை.

அக்காளைப் பெண் பார்க்க வந்து தங்கையை திருமணம் செய்ததாகி விட்டது என் நிலைமை.சொல்லுவதற்கு இந்த உவமானம் தான் வேண்டியிருக்கின்றது. எனக்கு அக்காளும் தங்கையும் சந்தோசத்தை அள்ளித் தந்து விடவில்லை என்பதே யதார்த்தம்.

hospitalஒன்றரை மாதங்களுக்கு முன்னர்தான் இந்த வைத்தியசாலைப் பக்கம் வரவேண்டியதாகப் போய்விட்டது.இதற்கு முன்னர் பலதடவை வந்திருக்கின்றேன்.எனது இரு பெண்பிள்ளைகளும் இதே வைத்தியசாலையில்தான் பிறந்தார்கள்.மனைவியும் ஒருமுறை நோய்வாய்ப்பட்டு ஏழுநாட்கள் இங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.அப்போதெல்லாம் பார்வையாளர் நேரத்திற்குள் வந்து செல்லும் பாக்கியம் தான் கிடைத்ததே தவிர இங்கே படுத்துக்கிடக்கும் தேவை ஏற்படவில்லை.

சில உபத்திரவமான வலிகள் மறக்க முடியாதவைகளாக அமைந்து விடுவதுண்டு.ஒருமாலை நேரத்தில் ஆரம்பித்து… நடு இரவு வரை தொடர்ந்து…. எதற்காக எங்கே வலிக்கின்றது என்று தெரியாமல் மிகப் பெரிய அவஸ்தைப்பட்டு, இனி வீட்டில் நிற்காமல் வைத்தியசாலைக்குத்தான் போக வேண்டும் என நினைத்து, போன வேளையில் இருந்து இந்த வைத்தியசாலையுடனான பந்தம் தொடர்கின்றது.

அதே நாளில் அவசரசிகிச்சை மையத்தில் என்னை இறக்கிவிட்டு காரைப் பார்க் பண்ணப் போய்விட்ட மனைவி, வைத்தியசாலை நுழைவுக்குள் நிரப்பப்படவேண்டிய காகிதங்களை நீட்டிய தாதி, தாங்கமுடியாத வேதனையுடன் இவற்றை எதிர் கொண்ட நான் என மூன்று கதாபாத்திரங்களுடன் ஆரம்பித்து  இன்றைய பொழுதில் அறுவை சிகிச்சை டாக்டர், அவருக்கு உதவியான அடிக்கடி  வெட்கப்பட்டு சிரிக்கும் அழகான பெண்டாக்டர், எஞ்சிய அழகான தாதிகள் என பல்தேசிய கதாபாத்திரமாகிவிட்டது என் வாழ்க்கை.

அக்காள் – தங்கை என்ற முதல் உவமானத்தை விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது.வந்த முதல் நாளில் எனது சிறுநீரகத்தில் 6 மி.மீ கல் சிறுநீரககுழாயில் அடைப்பை ஏற்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது.அப்பொழுதுதான் எனக்கு குடலிறக்கம் ஆரம்பநிலையில் இருப்பதும் தெரிந்தது.அக்காள் சிறுநீரககக்கல்.சிகிச்சை ஏதும் தேவையின்றி தானாக கரைந்து வெளியேறிவிட்டது.தங்கை குடலிறக்கம் கட்டி அழவேண்டி இருக்கின்றது.அப்படியும் சொல்ல முடியாது ; நேற்றைய பொழுதில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிட்டார்கள்.

பெரிய அறுவைச் சிகிச்சை என்று சொல்ல முடியாதுதான் எனினும் அடிவயிற்றில் இரண்டு பக்கமும் ஆறு சென்டிமீட்டர் நீளத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.இதைத்தான் அடிமடியில் கைவைக்கின்றது என்கிறார்களோ..?

நான் இந்த வைத்தியசாலைக்கு வந்ததின் பின்னர் இரண்டு தடவை பரிநிர்வாணம் அடைந்தேன்.ஆன்மீகத்தின் அதி உச்சமான நிர்வாணநிலை என்றெல்லாம் யாரும் நினைத்துவிடத் தேவையில்லை.

opகேர்ணியா என்ற குடலிறக்கத்தின் ஆரம்பநிலை எப்படி இருக்கும் என்பதை OBERARZT என்ற முதன்மை வைத்தியர் தனக்கு கீழ் பணியில் சேர்க்கப்பட்ட அந்த இளம் பெண்டாக்டருக்கு கற்பிக்க என்னைப் பயன்படுத்திக் கொண்டார்.அந்தப் பெண் டாக்டர் அநியாயத்திற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்.நான் இந்த பரிநிர்வாணநிலையை அடைந்தது என் மனைவியின் கண்ணெதிரில் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

நான் எனக்கான இந்த அறுவைச்சிகிச்சைக்காக மூன்றுநிலைகளில்  தயார்படுத்தப்பட்டேன்.அதற்கான டாக்டர் அறுவைச்சிகிச்சை மிக இலகுவானதென்றும், FAMILY PLANNING பண்ணாவிட்டாலும் இரண்டு வீதமளவில் அதற்கான சேதாரம் நடைபெற வாய்ப்பிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.இதனால் சுவிஸ் சனத்தொகையில் பாதியளவை என்னால் குறைக்க முடியாது போய்விட்டாலும், அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடியளவிற்கு முடியும் என்பதை ஏற்றுக் கொண்டேன்.

மயக்கநிலைக்கு தயார்படுத்தும் டாக்டருடன் அடுத்த சந்திப்பு.முழு மயக்க நிலையில் சத்திரசிகிச்சையை எதிர்கொள்ளப் போகின்றீர்களா?அரைமயக்க நிலையில் எதிர்கொள்ளப் போகின்றீர்களா? என்பதே அவரது கேள்வியாக இருந்தது.முழுதாக மயக்கநிலைக்கு ஆட்படுத்துமாறு சொல்லிவிட்டேன்.

மூன்றாவதுநிலை நான் வேலை செய்யும் இடத்தில் விடுமுறை பெற்றுக்கொள்வது.நான் வேலைக்கு வரமுடியாத இரண்டு வாரத்திற்கும் புதிதாக ஒருவரை வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள்.

30.5.2013 தேதிகுறிக்கப்பட்டு காலை ஏழு மணிக்கு ZURICH UNIVERSITY வைத்தியசாலைக்கு வரும்படியும் பத்து மணிக்கு சத்திரசிகிச்சை செய்வதாகவும் சொல்லப்பட்டது.

முதல்நாள் இரவு பன்னிரண்டு மணிக்கப்பால் உணவு உட்கொள்ளாமல், நீரேதும் அருந்தாமல், காலை ஏழு மணியளவில் இந்த வைத்தியசாலை வளாகத்திற்கு வந்ததும், பெரிய பதைப்புடன் காத்திருந்ததும், ஒவ்வொரு கணத்தையும் பதிவாக எழுத ஆர்வத்துடன் இருந்ததும் எல்லாமுமான பொழுதில் ஒன்றும் தெரியாமல் நினைவிழந்ததும் நடந்து போய்விட்டது.

கண்விழித்துப் பார்த்தால் பகல் ஒன்றரை ஆகிவிட்டிருந்தது.கையால் அடிவயிற்றை தடவிப் பார்த்தால் ஆபரேசன்  நடந்துவிட்டிருந்தது. பெரிய எதிர்பார்ப்பு போய் சப்பென்றாகிவிட்டது.அதன்பின்னர் அனஸ்தீசியா டாக்டரை சந்தித்தபொழுதில் எனக்கென்ன நடந்தது என கேட்டபொழுதில் அவர்கள் தந்த மாத்திரை ஒன்றில் நான் உறங்கிப் போய்விட்டதும், அனஸ்தீசியா தந்து தயாரானதும், ஆபரேசன் நடந்ததும் தெரியவந்தது.

நான்கு நாட்கள் இங்கேயே இருந்தாக வேண்டும்.தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.பார்வையாளர் நேரமென்பது காலையில் இருந்து மாலை வரையானது.இந்த வைத்தியசாலை ZURICH இன் சற்று உயரமான பகுதியில் அமைந்தது.இதன் சன்னலூடாக வெளியே நோக்கினால் ஒரே பார்வையில் எனது வீடு இருக்கும் பகுதியை காணலாம்.

தொடர்ந்து படுத்திருப்பது, தொடர்ந்து புத்தகம் வாசிப்பது, பின்பு எழுதுவது என நேரத்தை கழிக்க தெரியாமல் அவஸ்தையுடன் கழிந்து கொண்டிருக்கின்றது எனக்கான நேரம். வைத்தியசாலையில் தங்கியிருத்தலும், சிறையிலடைத்தலும் தான் மனிதனுக்கான அதிக பட்ச தண்டனையாக இருக்கக் கூடுமென எண்ணத் தோன்றுகின்றது.BED REST கேட்க அழகானதாக தோன்றினாலும் பெரிய சித்திரவதை அதுதான். சுதந்திரமான நடமாட்டத்தை கட்டிப்போட்டுவிட்டு, நோயாளி மனநிலையுடன் வாழ்வதே பெரிய நோய்மையும் மனமுடக்கமும்.

வியாழன் நடந்த ஆப்ரேஷனுக்கு பிறகு வந்த சனியன்றே வீடு போகப்போவதாக அங்கு கடமையிலிருந்த டாக்டரிடம் கூறிவிட்டேன். இருந்தாலும் இன்னொருநாள் பொறுத்து ஞாயிற்றுக்கிழமை வீடு ஏகலாம் என்ற டாக்டரின் கூற்றும் அடுத்த நாளின் விடுதலையும் ஆருத்ராவை களிப்பில் ஆழ்த்தின.

பாரதியாரின் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்ற பாடல் என் நினைவிற்கு வந்தது.

susrutharஅறுவைச் சிகிச்சை பற்றிய வரைபுக்குறிப்பை இதனுடன் இணைத்து விடலாம் எனத் தோன்றுகின்றது.

அறுவைச் சிகிச்சையின்  தந்தை ஆசான் எனப் போற்றப்படுபவர் சுஸ்ருத‌ர். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட சுஸ்ருத‌ சம்ஹிதை கி.மு. 600-800 காலப்பகுதியைச் சார்ந்தது. இந்தியாவின் வட மாநிலமான பனாரஸ் மாநில பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர். உடற்கூற்றியலை ஆரம்பத்திலேயே தெளிவாக அறிந்தவர். மனித உடலை உடற்கூற்றியலை அறிவதற்கு தடையாக சமயசம்பந்தமான தடைகள் ஐரோப்பாவில் இருந்த காலத்தில் கி.மு 600ம் ஆண்டு காலப்பகுதியில் சுஸ்ருதர் கங்கையில் இறந்த குழந்தைகளை நீரில் அழுகவிட்டு  பிண்டம் நீக்கி உடற்கூற்றியலை தனது மாணவர்களுக்கு கற்பித்தார்.

அக்கால வழக்கப்படி போரில் தோற்றவர்களில் உடல் உறுப்புக்களை அறுத்துவிடும் பழக்கம் இருந்து வந்தது. அறுப்பட்டவர்களின் மூக்கு, காது என்பவற்றை வேறுபகுதிகளில் இருந்து தோல் வெட்டியெடுத்து இன்று வழக்கத்திலுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி முறையை அக்காலத்தில் முனைந்து பார்த்து வெற்றி கண்டவர் சுஸ்ருத‌ர். மருத்துவ உலகின் சத்தியப்பிரமாண முறையை வழக்கத்திற்கு கொண்டுவந்தவரும் இவரே.

சுஸ்ருதர் பற்றிய பெரியளவிலான ஆராய்ச்சிகளை செய்த ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறை தலைவரான மெக்டோனேல் அவர்கள் சுஸ்ருதர் காலம் கி.மு. 600-800 என்பதை உறுதிப்படுத்துகின்றார்.

மகிழ்வு

நான் இன்றளவும் மகிழ்ந்து கொண்டிருப்பது நான் சுஸ்ருதர் காலத்தில் வாழவில்லை என்பதை எண்ணியே.இன்றைய மருத்துவ முன்னேற்றம் அளப்பரியது.

ஆருத்ரா எழுதியவை | மே 25, 2013

திருவண்ணாமலை.

இந்தியாவை விடுமுறைக்குரிய சுற்றுலாத்தலமாக  தேர்வு செய்தவுடன்  தமிழ் நாட்டின் பெருநகரங்களும், ஆன்மீகத்தலங்களும்  நினைவாக மேலெழும்புகின்றன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெருநகரங்களும் பெரும்பாலும் கோவில்களை  மையப்படுத்தித்தான் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஊர் சுற்றிப் பார்ப்பது சந்தோசமான விசயம் தான். ஊர்சுற்றிப்  பார்ப்பதுடன் கூடவே  ஆன்மீகத்தலங்களையும் தரிசிப்பது மேலும் உவப்பான விசயம்.

thiruvannamalai2010ம் ஆண்டின் விடுமுறைக்கு  இந்தியா போவதாக  முடிவெடுத்தவுடன் என் நினைவுக்கு வந்தது திருவண்ணாமலை. திருவண்ணாமலை பெருநகரம்   கிடையாது.  அருணாச்சலேச்சுவரர் ஆலயமும்,அதனை அண்டிய வணிக ஸ்தலங்களும்  இணைந்த சிறு நகரம். ரமண மகரிஷி , விசிறி சாமியார் வாழ்ந்து மறைந்த திருத்தலம்  என்ற அளவிலான சிறு புத்தக வாசிப்புடன் எனக்கு அறிமுகமாகிய திருவண்ணாமலையை நேரில் தரிசிப்பதற்கு  ஆவலுற்ற கணங்களை  இந்த சுற்றுலாப்பயணம்  நிறைவேற்றித் தந்தது.

தட தடத்து விரைந்து வாழுகின்ற ஐரோப்பிய வாழ்க்கைச் சூழலை, தாளகதியுடன்  இணைந்த இரசமான நிலைக்கு எடுத்துச் செல்பவை வருடத்தில் ஒருமுறை பயணிக்கின்ற இந்த சுற்றுலாப்பயணங்கள் தான். பயண ஏற்பாடுகளில் முதன்மை பெறுவது இந்த பயணதிட்டத்தில்  பார்க்க வேண்டிய இடங்கள், ருசிக்க வேண்டிய உணவு விடுதிகள் என நான் தயாரிக்கும் சிறு பட்டியல். பெருமளவிற்கு பார்த்த இடங்களையும், தரிசித்த தலங்களையும் மீண்டும் மீண்டும் காண நேரிட்டாலும் அன்றலர்ந்த பொழுதில் அந்தக்கணங்கள் புதிதானவை தான். எப்பொழுதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

இது மூன்றாவது முறையான இந்தியப்பயணம் என்றாலும் எண்பத்து மூன்றிலும், எண்பத்து எட்டிலும் வசித்த மேட்டுப்பாளையம் சிறுநகரமும், அங்கேயே இருக்கின்ற சில நண்பர்களும், திருவண்ணாமலையும் பார்க்க வேண்டியதில் முதன்மை பெற்றன. வளசரவாக்கத்தில் சகோதர முறையான உறவினர் ஒருவர் தங்கள் வீட்டிலேயே எங்களைத் தங்கச் சொல்லி கேட்டிருந்தார். எங்களது சௌகரியம் கருதிய தந்தையாரோ வளசரவாக்கத்தில் உணவுவிடுதியுடன் கூடிய  HOTEL ஒன்றில் அறை ஏற்பாடு செய்திருந்தார். அந்த HOTEL வளசரவாக்கத்தில் விடுமுறைக்கு வருகின்ற  அனைவருக்கும் உகந்தது என்பதை அங்கே தங்கி இருக்கின்ற கனடா, பிரான்ஸ் இலிருந்து வந்திருந்த இலங்கையர் குழாம் உறுதிப்படுத்தி இருந்தது.எனது போதாத காலம் தண்ணீர் குழாயை திறந்தால் வெடில் மணத்துடன் கூடிய மஞ்சள் தண்ணீர் அந்த HOTEL ஐ விட்டு விட்டு உறவினர் வீட்டிலேயே தங்கலாம் என எனக்கு சொல்லியது.

உண்மையில் வீட்டுச்சூழலை HOTEL அறைக்குள் எதிர்பார்ப்பது மடத்தனம். இரண்டும் நேரெதிர் துருவங்கள்.

உறவினர் உரையாடல், அன்பு, வீட்டுச்சாப்பாடு, நட்பு , மேலதிக நெருக்கம் எல்லாம் உறவுகளிலும் உறவினர் வீடுகளிலும் தான் கிடைக்கின்றன. வளசரவாக்கம் நாம் போயிருந்த போது அதிகளவு யாழ்ப்பாணத்தவர் என்று எங்களால் கூறப்படுகின்ற குடாநாட்டுத் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற பகுதியாக தென்பட்டது.பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்கள் வளசரவாக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. சலங்கைஒலி படத்தில் கமலுக்கு அம்மாவாக நடித்த துணை நடிகை, தொலைக்காட்சி தொடர்களின் சிறுநடிகர்கள் பக்கத்து வீடுகளில் தொடர் படமாக்கப்பட்டிருந்த போதும் வீதிவழியே போகும் போதும் காணக் கிடைத்தார்கள்.. உலகம் ஒரு நாடக மேடை. வாழ்க்கை அங்கே நடக்கின்ற நிகழ் தரிசனம்.

ven pongal yesஎனக்கு பிடித்த காலை உணவு வெண்பொங்கல். கூடவே சில்வர் டபாரா தட்டில் தரப்படுகின்ற காபி. நான்  தங்கி இருந்த வீட்டில் இருந்து வளசரவாக்கத்தின் பிரதான வீதியான  ஏற்காடு றோட்டில் அமைந்துள்ள சிறு உணவு விடுதிக்கு ஒன்றரை கீ.மீ தூரம் நடந்து செல்வேன். உறவினர் வீட்டில் சாப்பிடக் கிடைத்தாலும் அந்த வெண்பொங்கல் ருசிக்காக அந்த கடையை தெரிவு செய்திருந்தேன். பச்சை அரிசி, பயறு, பால் சேர்த்த அந்தப் பொங்கலில் மிதக்கும் மிளகும், சிறுசீரகமும் அந்த வாசனையும் “பேஷ்.. பேஷ்” ரொம்ப நல்லாயிருக்கும். கூடவே ஒரு சுள்ளென்ற காபியும் சாப்பிட்டால் அன்றைய  காலை அழகான காலை.

திருவண்ணாமலை போக வேண்டும் என்ற எண்ணத்தை சொன்னவுடன் உறவினர் வாகன ஏற்பாடு செய்துதருவதாக கூறியதை அந்தக் கணமே மறுத்து விட்டேன். நானும் மனைவியும் மாத்திரமே போக எண்ணியிருந்த திருவண்ணாமலைக்கான பயணம் பொதுப்போக்குவரத்து பேரூந்து ஊடாக பயணிக்க விருப்பமாக இருந்தது. காலை பத்து மணிக்கு முதல் திருவண்ணாமலையில் தங்கியிருக்கவும், காலை வனப்பை இழக்காத அந்தப் பொழுதுக்குள் சுவாமி தரிசனத்தையும், திருவண்ணாமலை கோவிலை சுற்றியுள்ள 8 கீ.மீ தூரமான கிரிவலத்தையம் பகற் பொழுதுக்குள் இடையிலும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்பது சிறு பயணத்திட்டத்தின் பதிவாக வைத்திருந்தேன்.

கோயம்பேடு மத்திய பேரூந்து நிலையத்தை சென்றடைவதற்கு ஒரு ஆட்டோ மாத்திரம் ஏற்பாடு செய்து தரும்படி கேட்டிருந்தேன். அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு ஆட்டோவுக்கு உறவினர் ஏற்பாடு செய்து தந்திருந்தார். தி..நகர் போத்தீஸ், குமரன்ஸ் போன்ற வணிக வளாகத்திற்குள் எனது விருப்பத்திற்கு மாறாக அவர்களின் தெரிவுக்கு காத்திருந்து களைக்கின்ற ஆண்வர்க்கத்தினரில் ஒருவனான எனக்கு நான் கேட்டவுடன் திருவண்ணாமலைக்கு வருவதற்கு சம்மதம் சொன்ன சகதர்மிணிக்கு கோடானுகோடி நன்றிகள்.

busstandஅதிகாலை 4.30 மணிக்கு எழுந்து அடங்கி கிடக்கின்ற தெருவழியே விரைந்து கோயம்பேடு அடைந்தால், கோயம்பேடு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. கோயம்பேடு மத்திய சந்தை தொகுதிக்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் காய்கறிகள் லாறிகளில் கொண்டு வரப்பட்டு மொத்த விற்பனையாவது வாடிக்கை. அந்த இரைச்சலான அதிகாலையும், விற்பனை பரபரப்பும் கோயம்பேட்டிற்கு மாத்திரமே உரித்தானது.

கோயம்பேடு பேரூந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை 193 கீ.மீ தூரத்திலானது.நான்கு மணி நேர பிரயாணம். ஐந்து மணிக்கே பஸ் பிடித்து மனைவியின் அருகே உட்கார்ந்து நகர்ப்பகுதி விலகி பின்னர் வருகின்ற கிராம வெளிகள், மரங்களடர்ந்த சோலை, காலையின் குளிர் இதம், காற்றின் மிதமான வருடல் என இப்படியான பிரயாணங்கள் எப்போதாவது தான் வாய்க்கும். காலாகாலத்திற்கும் மறக்காது. பஸ்ஸில் பிரயாணிப்பது சக பயணிகள், அவர்கள்தம் உரையாடல் அது இன்னொரு அனுபவம்.

திருவண்ணாமலை ஆன்மீகத்தின் அதி உச்சம். அக்கினித் திருத்தலம். சிவன் பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் பெரு நெருப்பாக காட்சியளித்த தலம். சிவனின் அடி முடி தேடிப்புறப்பட்ட பிரம்மாவும், விஷ்ணுவும் முடியாது திரும்பிய பொழுதில் பிரம்மா மாத்திரம் தாழம்பூவை பொய்ச்சாட்சி சொல்ல வைத்து, முடியை கண்டதாக சொன்ன நாளில் இருந்து தாழம்பூ கோவில் பூசைகளுக்கு விலக்கி வைக்கப்பட்டதும், பிரம்மாவிற்கு கோவில்கள் இல்லாமற் போனதும் புராணக் கதை. பகவான் ஸ்ரீ ரமணர் , சேஷாத்திரி சுவாமிகள் முக்தியடைந்ததும் பல வெளிநாட்டினர் திருவண்ணாமலையில் வீடு எடுத்து தங்கியிருந்து ஆன்மீகத் தேடலை அமைதியாக தியான வழி ஊடாக அடைவதற்கும் இந்த திருத்தலம் உதவியாக இருக்கின்றது.

super ramana asramகாலை 9.00 மணியளவில் கோவிலை அடைந்திருந்தோம். கோவிலின் மூலவரை தரிசித்து விட்டு அதற்கு அருகில் ரமணர் சிறுவயதில் தங்கியிருந்த குகை கோவிலையும் தரிசித்துவிட்டு வீதிவழியே இறங்கி நடந்தால் ரமணாச்சிரமம் வருகின்றது. அங்கு அதிகமான நேரம் செலவழிப்பதற்கு தேவையிருந்தது. மிக அமைதியான இடம். இரண்டு நாட்களாவது தங்கியிருந்து அந்த அமைதியை இரசிக்கலாம். ரமணாச்சிரமத்தின் பின்புறத்தில் விருப்பாட்சி தேவரின் குகை இருக்கின்றது. மலையில் ஏறி சிறிது தூரம் பயணிக்க வேண்டும். இந்த மலைப் பயணத்தில் திருவண்ணாமலையை மேலிருந்து கண்டு உவகையடையலாம்.

Ramanar-40062ரமணாச்சிரமத்திற்கு பின்பு கிரிவலம் வந்தோம். கிரிவலம் என்பது திருவண்ணாமலை கோவிலை புறவீதி வழியே சுற்றுவது. 8 கீ.மீ நீளமான இந்தப்பிரயாணத்தில் பல இறையனார்கள் முக்தியடைந்த சமாதிகளையும், அதனைச் சுற்றியுள்ள இடங்களையும், அழகான திருவண்ணாமலைக் கிராம சூழலையும் காணலாம். உண்மையில் கிரிவலம் என்பது நடந்துதான் போகவேண்டும். நெருக்கமான பயணத்திட்டத்தில் தரிசிப்பவர்களுக்கு ஆட்டோ உகந்தது. ஆட்டோ ஓட்டுநர்கள் தேவையான இடங்களில் ஆட்டோவை நிறுத்தும் போதில் ஆங்காங்கேயுள்ள அந்த சிறு தலங்களை தரிசிக்கலாம்.

kiramamதிருவண்ணாமலையை எண்ணும் போதும் எழுதும் போதும் அங்கேயே ஒரு நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும் என்ற உள்மனக்கிடக்கை எனக்குள் உறங்கிக் கிடக்கின்றது. கிரிவலம் முடிந்து மதியத்தின் பெரும்பசியை விசிறி சாமியார் என்றழைக்கப்படுகின்ற ராம் சூரத்குமார் ஆச்சிரமத்தில் நிவர்த்தித்து கொண்டோம். அருமையான உணவு. அற்புதமான சுவை. காலாறா நடந்தால் யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் வழியே நடந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அ ருமையான கிராமியச் சூழல்.

ramana insideவிசிறி  சாமியாரின் பெரு ஆச்சிரம வளாகத்தில் தங்கியிருந்து வழிபட்டு திருவண்ணாமலை கடைத்தொகுதிகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு 4 மணி வாக்கில் திரும்ப பஸ் பிடித்தால் 9 மணியளவில் வளசரவாக்கம் வந்து விடலாம்.நான் என் மனைவியுடன் தனித்து செய்த நீண்ட பிரயாணமாக திருவண்ணாமலை விளங்குகின்றது.

போகும் வழியில் பெரு மலையில் தென்பட்ட கோட்டை கொத்தளங்கள் செஞ்சிக் கோட்டை. புராதன கால மன்னர்கள் அரசாண்ட பகுதி. அடுத்த பயணத்தில் பார்க்க வேண்டும்.

**********************************************************************************************************

ஆருத்ரா எழுதியவை | ஏப்ரல் 21, 2013

சாவகச்சேரி இந்துக் கல்லுாரி.

நேற்றுப் போன்றிருக்கின்றது பாடசாலைக் காலங்கள். காலையிலிருந்து பின்மதிய நேரம் வரை கனவு தின்று காலம் கழித்ததை சிறுபராயமும், பதின்மத்தின் முழுவதும் செய்து முடித்திருக்கின்றது. மனம் இறக்கை கட்டிப் பறந்ததையும், காதல் களிநடனம் புரிந்ததையும் கல்லூரிக் காலம் உள்ளடக்கி வைத்திருக்கின்றது. கல்லூரிக்கு வருவது கல்விகற்க மட்டும் தான் என்று சொல்லும் ஜென்மமாயின் நீங்கள் சிறுபராயத்தில் சுகப்பிரவேசம் செய்யவில்லை என்றும், வாழ்வின் வசந்தத்தை தவற விட்டவர்கள் என்றும் அர்த்தமாகும்.

DSC_0180பெரிய பாடசாலையின் பின்புறமுள்ள கனிஸ்டபிரிவு கட்டடம் இப்போது என்னவாக இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பது தெரியவில்லை. முப்பந்தைந்து வருடங்களுக்கு முன்னரான காலத்தில் “பிடியதன் உருவுமை” ,”சொற்றுணை வேதியன்” சொல்லித்தந்த இடம். அந்தக்கட்டடத் தொகுதியின் முதல் அறை அழகரத்தினம் ஆசிரியையுடைய இரண்டாம் வகுப்பு. அதற்குப் பக்கத்திலேயே சிறுவர்கள் நம்பர் ONE போகும் அறையும் நெருங்கி இருந்ததால் அந்த இரண்டாம் வகுப்பு மறுநினைவிற்கு மூத்திர வகுப்பாக முன்நிற்கின்றது.

திருக்குறளை எழுதியவர் முருகக்கடவுள் என்ற பிழைபாடான அறிவின் திருத்தமும், ஆக்கினை பண்ணுபவர்கள் ஆசிரியர்கள் என்ற கருத்தின் நெருக்கமும் எம்மை அந்த வகுப்பிற்கூடாக அழைத்துச் சென்றிருக்கின்றது. இரண்டாம் வகுப்பும், அழகரத்தினம் ஆசிரியையும் இனிமையானவர்கள்.

இரண்டாம் வகுப்பு இருட்டான வகுப்பு. ஆசிரியை தேவாரம் சொல்லச் சொல்ல மிக விரைவாக எழுதி முடித்த மாதவனும், பின்னாட்களில் மிக நெருக்கமான இன்னொரு தோழனும் இந்த இரண்டாம் வகுப்பிற்குள் எனக்கு கிடைத்தார்கள். பென்சிலின் விலை 10 சதத்திற்கும், கறுவாப்பட்டை ஐந்து சதத்திற்கும் கிடைத்த காலங்கள். சிறு இடைவேளையில் காற்சட்டைப்பையில் கெயார் பிஸ்கட்டும், மேசையில் சிறுகடை பரப்பி கறுவாப்பட்டை, கோணல்புளி , பாடசாலை உபகரணம் விற்கும் ஆச்சியிடம் வாங்கிய கறுவாப்பட்டை, கோணல்புளியும் இடம்பெற்றிருக்கும். கோணல்புளியின் மெத்தென்ற தோலும் வாயில் வைத்தவுடன் கரைந்து விடும் அதன் உள்ளடக்கமும் ஞாபகத்திற்கு நன்றி சொல்கின்றன.

DSC_0321மிகக் கறுப்பான வைத்திலிங்கம் மாஸ்ரர் அவர்கள் கனிஸ்டபிரிவு அதிபராக கடமையாற்றியதாகவும், அவரது அதிபர் அறை கால் வைக்க கூசும் கவலைக்குரிய பிரதேசமாக எமக்கு ஆகிப்போயிருந்ததையும் சொல்லியாக வேண்டும். அவரிடம் சிக்கிக்கொண்டால் சின்னாபின்னப்பட்டு போய்விடுவோமோ என்கின்ற பயம் ஆறாம் வகுப்பு கற்கும்வரை மறையாமல் இருந்தது.

கனிஸ்ட பிரிவின் கேளிக்கை களமாக சரஸ்வதி பூசை காலங்கள் நினைவில் நிறுத்தப்படுகின்றது. அந்தப்பத்து நாட்களும் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாடலுக்கு அபநயம் பிடித்த சின்னஞ்சிறு கிளியும், சிறுவயது வில்லுப்பாட்டு நிகழ்வும், மகிழ்ச்சிப் பரப்பின் மானசீகக்காலங்கள். முதலாவது பாட வகுப்பிலேயே உபத்திரமான கணித பாடத்திடம் இருந்தும், வாய்ப்பாடு கேட்டு பிரம்பால் வெளுத்து தள்ளும் மூன்றாம் வகுப்பு ஆசிரியரிடம் இருந்தும் பத்துநாள் சரஸ்வதி பூசை காப்பாற்றி எமை அழைத்து சென்றிருக்கின்றது. வெற்றிலை மென்று குதப்பும் லாவகமும், நெற்றியில் பட்டையாக இட்டுக்கொண்ட திருநீறும், வெள்ளைவெளேர் வேட்டியும் அவ்ஆசிரியரை என்றென்றும் நினைவில் நிறுத்தும்.

அக்காலத்திய கற்பித்தல் முறைகள், அதற்கு முந்தைய கற்பித்தல் முறைகளில் இருந்து சிறிது தளர்வாக ஆக்கப்பட்டிருந்ததாலும் பெரும்பாலான பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் வைக்கும் வேண்டுகோளான “நல்லா அடிச்செண்டாலும் உவனை படிப்பிச்சு விடுங்கோ” என்பது ஆசிரியர்களுக்குரிய வானளாவிய அதிகாரங்களை வழங்கி விடுகின்றன. மூன்றாம் வகுப்பை போன்று பயமுறுத்திய காலங்கள் போர் உச்சத்தை தொட்ட காலங்களில் கூட அமையவில்லை. தினமும் வயிற்றில் புளியை கரைத்தது போன்ற உணர்வுடன் பாடசாலை ஏகிய காலங்கள்.

DSC_0039எங்கள் ஐந்தாம் வகுப்பு காலங்கள் கணபதிப்பிள்ளை என்ற ஆசிரியையுடயவை. ஆசிரியைகள் எவரும் அவர்களது கணவர் பெயர்களால் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அந்த ஆசிரியைகளது சொந்த பெயரை அறியும் ஆவல் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு. ஒவ்வொரு பெண்ணின் பெயர்களும், அடையாளங்களும், பெண்ணின் அதீத விருப்புடன் ஆணாதிக்க சுவர்களுக்குள் வெட்டி வீழ்த்தப்பட்டதை கவலையுடன் கவனித்திருக்கின்றேன்.

இப்பொழுதெல்லாம் வெளிநாட்டு உற்பத்தியை புறக்கணிப்போம், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்போம் என்ற கோசத்தோடு COLA, PEPSI, WALLMART போன்ற அமெரிக்க பெரு நிறுவனங்களின் பொருளாதார பெரும்பசிக்கு மூன்றாம் உலக நாடுகள் இரையாவதை பற்றியெல்லாம் பெருமளவில் கவன ஈர்ப்பு நடைபெறுகின்றது.

எனது ஐந்தாம் வகுப்பிலேயே எனது சக மாணவர் எனது கவனத்தை ஈர்த்தார். ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் கைவினை சம்பந்தமான பாடம் ஒன்று இருந்தது. பரீட்சை சமயத்தில் கைவினை சம்பந்தமாக ஏதாவது ஒரு பொருளை உருவாக்கி ஆசிரியையிடம் காட்டி புள்ளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். சில மாணவர்கள் கலர் கலரான பேப்பர்களின் உதவியுடன் பூக்கள் செய்வதும், அட்டைப்பெட்டிகள் கொண்டு சிறிய CARகள் செய்வதும், பெண்பிள்ளைகள் சிறிய கைக்குட்டை தைத்தல் போன்றன வழக்கமான வாடிக்கையானவற்றை செய்து கொண்டிருப்பார்கள்.

கல்வயலில் இருந்து எங்கள் வீதிவழியே பாடசாலை விரையும் தோழன் ஊறப்போட்ட தென்னை ஓலையின் பாதியை எடுத்துச் செல்வதை கண்டேன். எனது தாயாரும் “இந்தப்பெடியன் எதற்கு பாடசாலைக்கு தென்னை ஓலையை இழுத்துச் செல்கின்றது” என்று ஐயம்பட வினவினார்.அன்றைய கைவினை பரீட்சையில் நாங்கள் பூக்கள், மரம் என்று மினக்கெட்டுக் கொண்டிருக்க நண்பர் வகுப்பிற்கு வெளியே வைத்திருந்த தென்னை ஓலையை வகுப்பிற்குள் இழுத்து வந்து கிடுகு பின்னிக் காட்டி 85 புள்ளிகள் எடுத்துக் கொண்டார்.வாழ்க உள்ளுர் உற்பத்தி… வளர்க தேசப்பற்று.. அந்த நண்பர் இப்போது நல்லூர் செயலகத்தில் கடமையாற்றி வருகின்றார். சுதாகரன் என்ற திருநாமத்தை வெளியே சொல்வதற்காக என்னை கோபித்துக் கொள்ளமாட்டார் என நம்புகின்றேன். கடந்த பெப்ரவரி விடுமுறைக்கு சாவகச்சேரி சென்றிருந்த போது மட்டுவிலில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது கடைக்குட்டிப் பெண் உருண்டை விழிகளுடன், இரட்டை சடையுடன் அப்பா செல்லமாக அவரது மடியில் உட்கார்ந்து என்னை கவர்ந்து கொண்டிருந்தாள்.

hinduசாவகச்சேரி இந்துக்கல்லூரி பற்றிய பதிவில் பூ.வெற்றிவேறு என்கின்ற ஆளுமை மிக்க, மற்றவர்களால் கீழ்படிதலோடு மதிக்ககூடிய, கம்பீரமான எங்கள் அதிபரை பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் நீண்ட காலம் அதிபராக இருந்தவர் என்பதோடு பாடசாலையை திறம்பட நிர்வகித்தவர் என்பதற்கு அப்பால், காலை வேளைகளில் பாடசாலை விறாந்தை வழியே அவர் நடந்து வருவதே தனி அழகு -கம்பீரம். வெள்ளை அரைக்கை சட்டை அவரது தனித்த அடையாளம். பெரும் சத்தத்தோடு பேச்சுத் தொனிகளால் நிரம்பி வழியும் வகுப்பறைகள் நிசப்த நிலைக்கு வருமானால் அதிபர் அவர்கள் அவ்வழியே ROUNDS வருகின்றார் என்று உய்த்துணர்ந்து கொள்ளலாம். எந்த வகுப்பில் எவர் குளப்படி என்பதெல்லாம் அவர் விரல்நுனியில் தகவல்களாக சேமிக்கப்பட்டிருக்கும். குளப்படிகாரரை தனிப்பட கவனித்தாலே வகுப்பு மொத்தமும் அடங்கிவிடும் என்பதெல்லாம் அதிபரால் கைக்கொள்ளப்படும் எளிதான நடவடிக்கைகள்.

பூ.வெற்றிவேலு அதிபரிடம் அடிவாங்க இருந்து தப்பித்துக் கொண்ட நிகழ்வு ஆருத்ராவிற்கும் இருக்கின்றது.அன்று அடிவாங்காமல் விட்டுவிட்டதற்காக கவலைப்பட்டு ஏங்கிக் கொள்வது இன்று நடந்தெய்திக் கொண்டிருக்கின்றது.

பாடசாலை வளாகத்திற்குள் சைக்கிள் ஓட்டிச் செல்லல் ஆகாது என்று பொதுவிதி இருக்கின்றது. பரீட்சை சமயத்திலும், மதிலால் எட்டி நோக்கி “அதிபர் அறைக்குள் இல்லை” என்று உறுதிப்படுத்திக் கொள்ளும் நேரத்திலும் இவ்விதி எங்களால் மீறப்பட்டு வந்தது.

DSC_0164அன்று பரீட்சை என்பதாலும் மதிலால் எட்டிப்பார்த்ததில் அதிபர் அறை பூட்டப்பட்டிருக்கின்றது என்றதாலும் பாடசாலைக்குள் சைக்கிள் ஓடி வந்தால் அவர் அதிபர் அறையின் வராந்தாவில் நின்று கொண்டிருக்கின்றார். அவர் யாரையாவது கூப்பிட வேண்டுமானால் கைதட்டிக் கூப்பிட்டுக் கொள்வதும் எனக்கும் அவ்வாறே நிகழ்ந்ததும் நினைவில் நிற்கின்றது.

சைக்கிளால் இறங்கி அவரிடம் சென்றால் சிக்கி சின்னாபின்னப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் சைக்கிளை அதிவிரைவாக செலுத்தி சைக்கிள் விடும் இடத்தில் விரைவாக விட்டுவிட்டு, அருணாச்சல மண்டபத்தின் பரீட்சை HALLக்குள் சென்று உட்கார்ந்துவிட்டேன். அங்குள்ள மாணவர் குழாத்தினுள் கலந்துவிட்டால் தனித்து என்னை அடையாளப்படுத்த முடியாது என்ற தைரியம் என்னை அவ்வாறு வழிநடாத்தியது.

DSC_0161இரண்டு தடவை HALLக்குள் வந்து எட்டிப்பார்த்து விட்டு கைக்கு அகப்படாத கோபத்தில் அதிபர் சென்று விட்டார். அவர் எனக்கருகில் வந்திருந்தால் பயத்திலேயே நடுங்கி பிடிபட்டிருப்பேன். தினமும் கனவுகளை தின்று செரித்து வாழும் எனக்கு தற்போதெல்லாம் அதிபரிடம் ஒரு அடி வாங்கியிருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகின்றது.

எங்கள் பாடசாலைக் காலத்திலேயே நடந்த இன்னொரு நடப்பும் நினைவில் தடம் பதிக்கின்றது.1978, 1980 களில் அது நடந்ததாக நினைவு. சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆசிரியர்களுக்கான சம்பளப் பணம் மாதத்தின் தொடக்கத்தில் அதிபர் அறையில் வைத்து வழங்கப்பட்டு வந்தது. அதற்கான பணத்தை மக்கள் வங்கி கிளையிலிருந்து அதிபர், இன்னொரு ஆசிரியர் எடுத்து வந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது மாதாந்த நடவடிக்கை.

அக்காலத்தில் சிறு ஆயுதப் புழக்கமும், விடுதலைப் போராட்ட எழுச்சியும்,கூ டவே வளர்ந்த கொள்ளைகளும் தாராளமாக இருந்தன. மக்கள் வங்கிக் கிளையிலிருந்து பணம் எடுத்து வந்த கார் கல்லூரிக்குள் நுழைய வேண்டிய இடத்தில் சிறு ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் வழிமறிக்கின்றனர். அதிபர் அவர்கள் பணம் எடுத்து வந்த பையை விடவேயில்லை. இழுபறியில் பணப்பை கிழிந்து வீதியில் பணம் கொட்டியதும், திட்டமிட்ட கொள்ளை பிசுபிசுத்து விட்டதும், கொள்ளையர்கள் ஓடிவிட்டதும் மைதானத்தினூடாக வகுப்பறையிலிருந்து தரிசித்த நிகழ்வுகள். வெற்றிவேல்-வீரவேல்.

நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க, உயர்வகுப்பு மாணவர்களால் உற்று நோக்கப்பட்டு “நடையலங்காரம்” என்ற பட்டப்பெயரோடு அழைக்கப்பட்ட ஆசிரியை தற்போது எங்கிருக்கின்றார் என்பதும், தனது “நாபிக்கமலத்தை” வெளித்தெரியும்படி சாறி கட்டிக்கொண்டு வரும் பௌதீக ஆசிரியை தற்போதும் இரட்டை அர்த்த நகைச்சுவை சொல்லி சிரித்துக் கொள்வாரா? என்பதும் என் மண்டைக்குள் குத்திக் குடையும் கேள்விகளாக இருந்து கொண்டிருக்கின்றன. (ரொம்ப முக்கியம்)

DSC_0173படிப்புகளை பெற்றுக்கொள்கின்ற இடமாக பாடசாலைகள் திகழ்கின்றன என்றால் நான் பெரும் படிப்பினையை பெற்றுக்கொண்ட இடமாக அது திகழ்கின்றது. மீளமுடியாத கனவுகளையும், தாளமுடியாத துக்கங்களையும் பாடசாலை பரிசளித்திருப்பின் அவைகள் படிப்பினைகள் தானே.வேறென்ன சொல்வது?

ஒவ்வொரு விடுமுறைக்கும் ஐரோப்பாவில் இருந்து சாவகச்சேரி செல்லும் பொழுதுகளில் பிரதான வீதிவழியே சங்கத்தானை நெருங்குவதும் இருளின் பிடியில் அமிழ்ந்திருக்கும் பாடசாலைக் கட்டடங்கள் ஆழ்ந்த நினைவுப் பிடிப்பை என்னுள் ஏற்படுத்துவதும், இறந்த கால நினைவுகளில் நான் மூச்சு திணறுவதும் இன்றளவும் வாடிக்கை.

எல்லோருக்குள்ளும் ஏதோ கதைகளும், பிணைக்கப்பட்ட பதிவுகளும் இருக்கின்றனவே?.தூக்க முடியாமலும், தவிர்க்க முடியாமலும் இருக்கின்ற தவிப்புகளும் இருக்கின்றனவே.ஆறுதல்களால் ஆற்ற முடியாத அம்மணங்கள் அவை.

DSC_0234பாடசாலை மனதிற்கு நெருக்கமானது. அழகானது. நெஞ்சார்ந்த உவகையை அள்ளித்தருவது.பக்கத்திலே இராமநாதன் வீடு, சைக்கிள் விட்டு வருகின்ற விதானையார் வீடு, முருகமுர்த்தி கோவில், அதற்கு முன்னான சனசமுக நிலையம் என சற்று நேரம் நின்று நெடு மூச்செறியலாம். வாழ்வு அதற்குத்தான் வாய்ப்பளித்திருக்கின்றது.பாடசாலைக் காலங்கள். சொர்க்கத்தின் உற்சவங்கள்.

வெறும் கட்டடங்களால் ஆனதாக எண்ணிக் கொண்டதில்லை. அதற்குள் உயிர்த்துடிப்பான உணர்வுகளும் கடவுள்களாக எண்ணிக் கொண்ட கனவுகளும் மீதமிருக்கின்றன. வாழ்வின் ஆதார சுருதி அங்குதான் இசைக்கப்பட்டது.வெளித்தெரியாத உணர்வுகளுக்கான வடிவம் செதுக்கப்பட்ட சிற்பக்கூடம். நினைவாலே சிலை செய்த சில  நினைவுத்துளிகள்.காதலின் கனதி. கனவின் மீதம்.

குறிப்பு: எழுதியவற்றில்  பெரிய பதிவு. எழுதி  முடிக்கப்படாமல்  “இன்னும் , இன்னும்”  ஏதோ  இருப்பதாக எண்ணுகின்றேன்.எங்கள்A/L புதுமுக வகுப்பு,  BAG வாத்தியார் என்கின்ற  சிவலிங்கம் MASTER,  எங்களுடன் ஐந்து வருடங்களாக வகுப்பாசிரியராக பயணித்த  லோகநாதன் ஆசிரியர், இரசாயன  ஆய்வுகூட நெருப்பு  என  ஏராளமான  எண்ண அலைகள். கண்ணாடி  டீச்சர்!!எங்கே  போய்  கனப்பது!! கண்ணீர் சிந்துவது!!!!!

பரம்பரம் சோதி.பரனே போற்றி. நலம் நாடுக! புரிக!  ஔிர்க!

நண்பர்களே! இந்தப் பதிவை  நண்பர்களுக்கு  SHARE  பண்ணுங்கள். இதுவே எனது கடைசிப் பதிவாகவும் அமையலாம்.

***************************************************************************************************

வருகின்ற  சனிக்கிழமை  27.04.2013  சாவகச்சேரி  இந்துக்கல்லுாரி  இங்கிலாந்து  கிளையினரால்  19 வது  வருட  ஒன்றுகூடல்  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.733954_632595770099237_698191090_n

TICKETS:

£20 for a Family ticket (2 Adults & 2 Children)

£10 for a Single ticket
Venue:
Earls Mead Stadium (Harrow football club hall)
Earld Mead
Harrow
HA2 8SS
For tickets please contact:
Mr S Krishnamoorthy – 07939 324638
Dr K Arul – 07950 494995
Mr V Asokan – 07725 544565
Dr P Jegatheesan – 07903 817295
Mr S Sathiyamoorthy – 07429 145612
Mr S Sivashankar – 07931 730830
Thank you for you support as always.
Kind regards,
The committe
On behalf of OSTACHC, UK
ஆருத்ரா எழுதியவை | ஏப்ரல் 7, 2013

போய்ட்டு வாறன்.

கடந்த பெப்ரவரி இலங்கைக்கு செல்வதற்கு அதற்கு மூன்று மாதங்கள் முன்னரே டிக்கெட் வாங்கி வைத்தாயிற்று. முன் அலுமாரியின் கீழ்த்தட்டில் அந்த டிக்கெற் உறங்கிக் கொண்டிருந்தது. பயணத்திகதி, நேரம் சரிபார்த்து கொள்ளுமாறு மனையாள் அறிவுறுத்தியும் மனநிலை, மந்தநிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. விடுமுறை குறித்த கனவுகளும், ஊர் பற்றிய நினைவுகளுமாக முளைவிட்டு மகிழ்ச்சிப் பரப்பில் ஆழ்த்தும் முந்தைய பயணங்களைப் போல இது அமையப்போவதில்லை என எனக்குத் தெரிந்திருந்தது. வாதைகளும், உபாதைகளும் நிறைந்த வயதான பெற்றோருடன் மூன்று வாரங்கள் தங்கி நிற்றல் என்பது இன்னோரு துயரப்படிமானத்தை என்னுள் விதைக்கும், என்னை சிதைக்கும் என்ற பயம் தான் பிரயாணம் செய்வதான சுகங்களை மழுங்கடித்திருந்தது.

flightபுத்தர் தனது 16வது வயதில் தரிசித்த மூப்பு, பிணி, சாக்காடு பற்றிய வாழ்க்கை நிதர்சனங்கள் எனக்கு இந்த வயதில் வந்து வாய்த்திருக்கின்றது. புத்தரைப் போன்று தப்பித்து செல்லமுடியாது. “போய்வா அனுபவித்து வா”என்று அனுப்பி வைத்து விட்டு கைகொட்டிச் சிரித்தது என் மீதமுள்ள வாழ்க்கைக்காலம். இதற்கு நடுவில் எனது பிரயாணம் குறித்து தெரிந்த நல்ல உள்ளங்கள் “பிரயாணம் சிறப்பாக அமையட்டும்” என்று அனுப்பி வைத்த குறுஞ்செய்திகள் என் கைத்தொலைபேசியில் பதிவாயின. கடவுளே!

விமான டிக்கெட்டுக்கள் யாவும் போக வர என இரண்டு தாள்களை கொண்டு கிழித்து வைத்துக்கொள்ளும் பரிமாணத்தில் இருந்து கணணியால் துப்பப்படும் கலாசாரத்திற்கு மாறி கன நாட்களாகிறது. பயணச்சீட்டின் இலக்கத்தை, பயணிக்கின்ற விமான சேவையின் இணையத்தளத்திற்கு சென்று சரிபார்த்துக்கொள்ளும் வசதிகள் வாய்த்திருந்தும் சரிபார்க்காமல் போய் டுபாய் விமாநிலையத்தில் 7 மணிநேரம் TRANSIT ல் காத்திருக்க வேண்டியதாயிற்று. கஸ்ட உபயம் சூரிச்சில் இயங்குகின்ற ஒரு தமிழ் பிரயாண முகவர்.

800px-Emirates_777_Economy_seatsஅதைவிட மோசமானது பிரயாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக கையோடு எடுத்து செல்வதற்கு ஆக எடுத்து தந்திருந்த பிரயாணப் பை. BODY LINE BRAND உள்ளாடை (கோவணம் என்றும் சொல்லலாம். BRANDED உள்ளாடை அணியும் முதல் மனிதா) நான்கைந்து கோப்பு நிறைய காகிதங்கள் (வீட்டு உறுதி,சோலைவரி கட்டிய ரசீதுகள்) எல்லாம் உள்ளடங்கி வயிறு உப்பி 10 கிலோவாகி இருந்த பிரயாணப்பையின் கீழ்ச்சக்கரம் லொடலொடத்தது. ஓட்டுமொத்த உலகமும் இந்த பிரயாணத்திற்கெதிராக சதி செய்வதாகப்பட்டது.

இரவு 8.40 ற்கு சூரிச்சிலிருந்து புறப்பட்டு அழகான வனிதையரின் அன்பு பரிமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு 6 மணி நேரப் பிரயாணத்தின் பின்னர் மிகப்பெரும் வணிக வளாகத்தில் இறக்கி விடப்படும் நாங்கள் சுவிஸ் கடிகாரங்கள், சுவிஸ் CHOCOLATE கள் என நிறைந்திருக்கும் வணிக வளாகத்தில் திரும்பவும் பிரவேசிப்பது சுவிட்சர்லாந்திற்குள் நிற்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தும்..

ஒண்டுக்கு அடிக்கப் போனால் மலசலகூடத்தை தொடர்ந்து சுத்தமான பராமரிக்க வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் இந்திய இலங்கை கவலை தோய்ந்த முகங்களையும் பணிப்பெண் வேலைக்கென இலங்கையில் இருந்து வந்திறங் பலதரப்பட்ட முகங்களையும் தரிசிக்க இயலும். வாழ்க்கை கோடு போட்டு அழைத்து வந்திருக்கின்றது.

dubai-international-ariport-02ஒவ்வொரு அரைமணிக் கொருதரம் வணிக வளாகத்தை பார்வையால் மேய்ந்துவிட்டு திரும்பவும் உறங்குவதற்கு தோதாக அமைக்கபட்ட இருக்கையில் அமர்ந்து எதையாவது நோண்டி நொங்கெடுத்து, அலுத்துப்போய் அடுத்த விமானமேறி கட்டுநாயக்க போயடைந்தால் என்னை அழைத்துப் போக வந்திருந்தது வழக்கமாக அழைத்துப்போக வரும் அப்பா அல்ல; சித்தி மகன்.

இவ்விடத்தில் தான் நீக்கமற நிறைந்திருந்த அப்பா என்ற விம்பம் கலைந்து போயிற்று. நிகழ்கால சோகம். விடுமுறைக்கு வருவதாக சொன்னதும் எந்த விமானம்? எத்தனை மணிக்கு வருகின்றது? என்பதான தகவல்களை சேகரித்துக் கொண்டு தொலைபேசியில் திரும்ப திரும்ப அதை உறுதிப்படுத்திக்கொண்டு விமான நிலைய வரவேற்பறையில் காத்திருத்து அழைத்துப்போகின்ற அப்பா இப்போது காலாவதியாகி படுக்கையில் முடங்கிக் கொண்டார். எழுந்து நடமாடுவதும் உரையாடலும் முடங்கி கொண்டன. எஸ்.ராமகிருஸ்ணனின் துயில் நாவலில் நோய் வாதை என்ற சொற்களும் நோய்மையின் தீவிரமும் கதைக்களனாக அமைந்திருக்கும். வாதைக்கு பொருள் கொண்டால் “வேதனையோடு கூடிய நோய்” என்பதின் தெளிவான பொருள் அப்பாவாக எனக்கு தென்பட்டார்.

colomboவிமான நிலையத்தை அடைந்ததும் புலன் நுகர்ச்சி, வேறு விதமானதட்பவெப்பம் , வாகனப் புகைகளின் வாசனை, புழுதி மணம் என்பதாக பழைய நினைவுகளோடு ஒன்றிப்போகும். இலங்கையும் இருபது வருட மாற்றத்திற்கு ஊடாக மாறுபட்டிருக்கின்றது. உள்நுழைந்து பொருட்களை தெரிவு செய்து வாங்கும் CARGILLS களும் KEELS SUPER MARKET களும் எங்கும் பெருகிவிட்டன.BROILER கோழிகள் கழுத்தில் தூக்கு போட்டபடி ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்தன. வங்கிகளில் வங்கி அட்டைகளில் 10 ஆயிரத்திற்கு உட்பட்ட தொகைகளை பெற்றுக்கொள்ளும் பணப்பட்டுவாடா இலகுவாக்கப்பட்டிருக்கின்றது. குப்பை பொறுக்கும் குப்பனும் சுப்பனும் காதுக்குள் தொலைபேசியை பொருத்திக் கொண்டு வேலை நேரத்தில் உரையாடிக் கொள்ளும் கனத்த கலாச்சாரம் தேசிய மயமாக்கப்பட்டிருக்கின்றது.MINI SKIRT கள் முட்டிக்கு மேலான SHOTRS களாகி விட்டன. (தயா! இவ்விடத்தில் கவனிக்க… அண்ணை போன அலுவலை விட வேறு அலுவலும் கவனிக்கிறார்.)

கடந்த வருடங்களைப் போலவே இந்த முறையும் DUTY FREE ல் வாங்குவதற்கான தொலைக்காட்சிப் பெட்டி INTERNET YOU TUBE வசதிகளுடன் வாங்கி வர வேண்டுமென்பதாய் உறவினர் சொல்லியிருந்தார். DUTY FREE ஐ தாண்டும் போது அலங்க மலங்க விழித்தபடி கடைகளை நோக்கினீர்கள் என்றால் உங்களை கடைக்காரர்கள் சூழ்ந்து கொள்வார்கள். தெரிவு செய்ய வழியே இல்லாமல் தங்களது தான் சிறந்தது என தலையில் கட்டி விடுவார்கள். பின்னர் உறவினர்களுடன் லோல் பட வேண்டியிருக்கும். இணையத்தில் உலாவி சிறிதான தகவல்களையும் தாங்கி சென்றீர்கள் என்றால் கொள்வனவிற்கு இலகுவாகி இருக்கும். உறவினர்கள் இன்முகத்துடன் வரவேற்றுக் கொள்வார்கள். சிறப்பான விருந்து உபசாரம் நடைபெறும்.

ஆனாலும் விமான நிலையம் விட்டு சிறு வெள்ளை வானில் புறப்படுகையில் வெளித்தெரிவன எல்லாம் அழகாக இருக்கும். மனதிற்கு நெருக்கமானதாக தோன்றும். ஐரோப்பாவின் முழு அந்நியத் தனம் எமது பார்வையை விட்டு மறைந்திருக்கும். ஒரு இலகுதன்மை தொற்றிக்கொள்கின்றது.

நான் எண்ணும் பொழுது சிறு சுகம், இன்பதினம்.
…. செல்லும் மனது
ஆற்றிலே ஆற்றங்கரை ஓரத்திலே
அங்கு வந்த காற்றினிலே தென்னை இளங்கீற்றினிலே

சீதுவை, கந்தானை, மாபாகே எல்லாம் கடந்து வத்தளைப் பெரு நகரம். கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட எல்லைக்கு அணித்தான நகரம். தமிழும் தமிழர்களும் பெருகி வாழ்கின்ற சூழல்.

chava townவீட்டை அடைந்தால் அம்மா வந்து அன்புடன் கட்டிக் கொண்டார்கள். அப்பா கைபற்றி விசிப்புடன் சிறு விசும்பல். நேற்றியில் சூடான முத்தம். நீண்ட நேரம் கனத்த பெரு மௌனம். ஒரே வருடத்திற்குள் இரண்டாவதான பயணம் என்றாலும் அப்பாக்களின் அம்மாக்களின் அழுகைகளும், விசும்பல்களும் அன்பும் பெருகித்தான் போயின.

தென்னை மரங்களினூடே அணில்களின் கீச்சுகீச்சு சத்தம். சாமியறையில் இருந்து தருவித்து நெற்றியில் அப்பா பூசிவிட்ட திருநீறு. சற்றே முறுகலான நெய்வாசத்துடன் அம்மா வார்த்து வைத்த தோசை. தொட்டுக்கொள்ள உளுந்து வறுத்து கூடவே கூடவே இடித்து வைத்திருந்த சம்பல்.

வாழ்க்கை கனவு மீதாக பயணிக்கின்றது. இந்த நாள் என்பது இன்றைய கணப்பொழுதுதான். இன்னும் இரண்டு மணி நேரத்தில் சாவகச்சேரி நோக்கி பயணிக்க வேண்டும். அண்ணை ரைட்.

***************************************************************************************************

ஆருத்ராவின் மருத்துவமனைக் குறிப்புகள்.

இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சூரிச் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாயிற்று. சிறுவலியாக உருவெடுத்தது இடது வயிற்றுப்புறத்தில் பெருவலியாக உணரப்பட்டது.இது போன்றதொரு வேதனையை இதுவரைஅனுபவித்ததில்லை.

நோய்களின் வருகை வாழ்வை அதீதமாக உணரவைப்பதற்காகத்தான் என்று எனக்குப் படுகின்றது.அந்த இரவுப்பொழுது வலி மிகுந்த துயர் நிறைந்தது.அங்கு பணியாற்றும் நண்பர்களல்லாத தமிழ் அன்பர்கள் ஓரளவிற்கு பரிச்சயமானார்கள்.

அடுத்த நாளில் இருந்து அங்கு பணியாற்றும் பயிற்சி பெறும் மருத்துவ மாணவிகள் சிவகௌரியும், வாத்சனாவும் அடிக்கடி வந்து கதைத்து கவனித்துக் கொண்டார்கள். சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.தெரியாத இடத்தில் புதிதான நட்பு. வாழ்க்கை நோய் சார்ந்தும் அன்பு சார்ந்தும் இயங்குகின்றது.

****************************************************************************************************

ஆருத்ரா எழுதியவை | பிப்ரவரி 21, 2013

காதல் பாராயணம்!!

DSC_0102

இதுதான் என் வீடு
சொல்லிக் கொள்ள மட்டுமே
முடிகின்றது.

எச்சங்கள் தான்
சரிந்து கிடக்கின்றன.

கிணற்றடியில் நின்ற
நீலப்பூங்கொடி
பற்றையாக வளர்ந்து கிடக்கின்றது.

வரிசையாக நீருற்றி வளர்க்கப்பட்டதில்
ஒற்றைக் குரோட்டன்
எஞ்சியுள்ளது.

DSC_0038உடைந்து சிதைந்த
வீட்டின் தாழ்வாரத்தில்
உட்கார்ந்து
வீதி பார்க்க முடிகின்றது.

கிணற்றுச் சுவரும்
குளிக்கும் அறையும்
சிதிலமாகி கிடக்கின்றன.

வளவின் மூலையில் இருந்த
முருக்கமரம்
முறிந்தபடி பூத்து கிடந்தது.

மாமரம் குப்பைகளால்
சொரிந்து காற்றாடி இருந்தது.

தனித்து நிற்கும் பொழுதுகள்
தவிக்கின்ற பொழுதுகளாயின.

வீதியில் செல்கின்ற
கல்லூரி சீருடை தரித்தவர்கள்
உன்னைப் போன்றே
தென்படுகின்றனர்.

உற்றுப் பார்த்தால்
வெறுமை சூழ்கின்றது.

nagulaநான் உயிர்வாழ
உணவும் நீரும்
உன்னுடைய நினைவுகளும் போதும்.

நினைவுத் திறன் மாத்திரம்தான்
என்னுடன்.

நீயில்லை!!நீயில்லை!!! .

முப்பது வருடங்களுக்கு
முந்திய பொழுதுகள் திரும்பாதா?

வாழ்ந்த எச்சங்களும்
வாழா மிச்சங்களும்
சுவைத்து
இனி ஈடேற வேண்டும்.

வீதி வழியே
கனவுகள் கானல் நீராக!!

சாவகச்சேரி 21.02.2013

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்