ஆருத்ரா எழுதியவை | ஒக்ரோபர் 13, 2013

யாழ்- டியூசன் கொட்டில்கள்.

சேகுவேராவுக்கும் எனக்குமான ஒரே ஒரு ஒற்றுமை மிக அதிசயமானது. அந்த ஒரு ஒற்றுமையைத் தவிர சேகுவேராவை என்னுடன் இணைப்பதற்கு வேறெந்த காரணமும் இல்லை. சே மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். உயர்வான போராளி. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். நான் இக்கணம் மிகுந்தும் அக்கணம் தாழ்ந்தும் என நம்பிக்கை கொண்டவன். சேகுவேராவுக்கு எங்களுக்கு வாய்த்த ஒரு மனோமாஸ்டரோ, உப-அதிபரோ வாய்க்கவில்லை. ஆரம்பத்திலேயே அவ்வாறு வாய்த்திருந்தால் பாட்டியை காரணம் காட்டாமலேயே பொறியியல் படிப்பை கைவிட்டு மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுத்திருப்பார்.

சேகுவேராவுக்கு ஒரு பாட்டி இருந்தார் என்பதுவும் அந்த பாட்டிக்கு மார்பகப்புற்று நோய் வந்து காலமானார் என்பதுவும் பாட்டி மீது அதிகபாசம் வைத்திருந்த சேகுவேரா “இனி ஒருபாட்டியும் மார்பகப்புற்றுநோயால் இறக்ககூடாது- அதற்கு மருந்துகண்டுபிடிக்கவேண்டும்” என்று கங்கணம் கட்டி பொறியியல் படிப்பை கைவிட்டு மருத்துவபடிப்பை தேர்ந்தெடுத்தார் என்பதும் புத்தகவாயிலாக அறியக்கிடக்கும் தகவல்கள்.

confused-manஎங்களது ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான காலங்கள் அலாதியானவை. ஆனந்தமளிப்பவை. நாலு தேவாரம் பாடமாக்கி ஒப்பித்து, ஒருசொல்வதெழுதுதல் எழுதிதப்பித்து – கூட்டிக் கழித்து பெருக்கி கணக்குகாட்டி இறுதி தவணைப் பரீட்சையில் புள்ளிகள் பெற்றுக்கொண்டால் பரீட்சை பெறுபேற்றுத் தாளின் அடியில் “வகுப்பேற்றப்பட்டுள்ளார்” எனஆசிரியர் எழுதி விடுவார். அதனடிப்படையில் நாங்கள் வகுப்பேற்றப்பட்டுக் கொண்டிருந்தோம். இவ்வாறான நடவடிக்கை பத்தாம் வகுப்புவரை கிரமமாக நடைபெற்று கொண்டிருந்தது. அந்தக் கிரமத்தின் காரணமாக எங்களுக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை.

பத்தாம் வகுப்பு பரீட்சையில் கொஞ்சம் நிறைவான பெறுபேறுகள் பெற்றுக் கொண்டவர்களானால் தொலைந்தோம். கணிதத்திலோ, விஞ்ஞானத்திலோ மிகக்குறைவான புள்ளிகள் பெற்றுக்கொண்டவர்கள் கலை, வர்த்தகப் பிரிவுகளை இலகுவாக தேர்ந்தெடுத்துக் கொள்ள – எல்லாப்பிரிவுகளையும் தேர்தெடுக்ககூடியபுள்ளிகள் வைத்திருப்பவர்களுக்கு எதைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகப்பெரிய பிரச்சனை ஆகிவிடும். தலையில் ஹெல்மெற் போட்டுக்கொள்ளும் படிப்பா? கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொள்ளும் படிப்பா? என தேர்ந்தெடுப்பது  அதுவரை வகுப்பேற்றப்பட்டு வந்த சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கஸ்டமானதுதானே.

300px-Academ_Base_of_trigonometry.svgநான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்தது கணிதத்தை. த‌லையில் ஹெல்மெற் மாட்டிக்கொண்டு, பெரிய கட்டிடங்கள் கட்டும் பகுதியில் கோப்புகள் வைத்துக்கொண்டு, உத்தரவு பிறப்பிக்கும் பொறியியலாளர் கனவுகள் ஏதும் எனக்கு இல்லையாயினும் எனது நெருங்கிய இரண்டு நண்பர்களும் கணிதத்தை தேர்ந்தெடுத்ததே நானும் அவ்வழி புகக் காரணமாக இருந்தது. அதன் பெறுபேறுகளை அடுத்து வந்த இரண்டு வாரங்களில் நான் பெற்றுக்கொண்டேன்.

பாடசாலையில் க.பொ.த உயர்தரம் தொடங்குவதற்கு முன்னரான பாடசாலை விடுமுறைக்காலப் பகுதியில் தனியார் கல்வி நிலையங்களில் க.பொ.த உயர்தர புதுமுகவகுப்புகள் ஆரம்பமாகிவிட்டன. கச்சாயில் அப்போது மனோமாஸ்டர் கணித வகுப்புகள் எடுத்து வந்தார். எனது நண்பர் ஒருவரே என்னையும் மனோமாஸ்டரின் கணித வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றிருந்தார். எங்களோடு பத்தாம் வகுப்பில் படித்த பலநண்பர்கள் அங்கு வருகை தந்திருந்தார்கள். மனோமாஸ்டர் அன்றுகற்பித்தது SIN, COS, TAN.

வகுப்பு ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் நான் எனது நண்பரின் முகத்தை பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போல மனோமாஸ்டரின் கரும்பலகை எனக்கு ஆகிவிட்டிருந்தது. ஆரம்பமே இவ்வளவு அசத்தலாக இருந்தால் இனிவரும் காலங்களில் என்னாகுமோ என எண்ணத்தலைப்பட்டேன். மனோமாஸ்டர் கடுகதிவேகத்தில் பாடத்தை நடாத்திக் கொண்டிருந்தார். நான் அதன் பின்னே விரைய முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன்.

கற்பித்தல் என்பது ஒரு கலை. ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்றவர்களால் மாத்திரமே ஒரு திறமையான ஆசிரியராக முடியும் என்பதைவிட, கடிடனமான விடயங்களையும் சுவைபடக் கற்பிப்பதற்கு சில ஆசிரியர்களின் தனிப்பட்ட கற்பித்தல் ஆளுமை முழுமை பெற்றிருந்ததை சொல்லியாக வேண்டும்.

வெக்டர் வேலாயுதம், நல்லையாமாஸ்டர் போன்றோரிடம் இரட்டைக்கணித வகுப்புகளுக்கு செல்பவர்களைக் காட்டிலும் ரவிமோகன் மாஸ்டர் வகுப்பில் மாணவர் குழாம் அதிகம் இருக்கும். யாழ் பெருமாள் கோவிலுக்கு முன்பாக ரவிமோகன் மாஸ்டரின் டியூசன் கொட்டில் மிக நீண்டது. முன்னால் கரும்பலகைக்கும், கடைசி வாங்குக்கும் இடையிலான இடைவெளி 75 மீ ஆவது இருக்கும். கற்பித்த கணக்கை அழகாக எழுதி செய்முறையுடன் கடைசியாக விடையையும் எழுதிவிடுவார். பார்த்து எழுதும் கூட்டத்திற்கு எவ்வித கஸ்டமும் இருப்பதில்லை.

ஒரு நல்லஆசிரியருக்கு அழகு மாணவர்களை கலவரப்படுத்தாமல் பாடம் எடுப்பது. ஆசிரியரும் மாணவரும் பாடத்திற்கு ஊடாக பயணிப்பது. மாறாக பெரும்பாலான ஆசிரியர்கள் தாங்கள் கற்றதை மாணவர்கள் மீது திணித்துக் கொண்டிருந்தார்கள்.

மனோமாஸ்டர் ஒருவட்டம் வரைந்து அதனை நான்காகப் பிரித்து SIN- COS- TAN விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார். எனக்கு வட்டத்தைப் பார்ப்பதா? கூரையின் விட்டத்தைப் பார்ப்பதா என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அன்றைய ஒரு வகுப்பிற்கு பின்னால் அடுத்து நடந்த வகுப்புகளிற்கு நான் சமூகமளிக்கவில்லை.

DSC_0295கச்சாய் வகுப்புகளில் இருந்தும் கழன்று யாழ் சென்று ரவிமோகன் மாஸ்டரின் வகுப்புகளில் உட்காரத்தொடங்கினேன். உள்ளூரில் சிறிய டியூசன் வகுப்புகளில் படித்தவர்களுக்கு யாழ்ப்பாண டியூசன் கொட்டில் கலாச்சாரம் மாறுபட்டது. மாணவர்களுக்கு கரும்பலகைக்கு கிட்டேயுள்ள ஆசிரியர் நிழலாகத் தெரிவார். ஆசிரியருக்கு தன்னிடம் யார்.. யார்? படிக்கின்றார்கள் என்ற பரிச்சயமே கிடையாது. கணிதப்பிரிவில் பெண்கள் குறைவாகவே இருந்தார்கள். அவர்களை காட்டிலும் அங்கு வேலைபார்த்த செக்ரெட்டரி பெண் அழகாக தென்பட்டாள்.

பாடசாலை விடுமுறை காலப்பகுதி முடிந்து பாடசாலைகள் தொடங்கிவிட்டிருந்தது. பத்தாம் வகுப்பு வரை ஒரே பாடத்திட்டத்திற்கு ஊடாக பயணித்தவர்கள் பல்வேறு கிளைப்பாதைகளூடாக பயணிக்கத் தலைப்பட்டோம். எங்களது கணித வகுப்பிற்கு வகுப்பு ஆசிரியராக உப-அதிபராக கடமையாற்றியவர் நியமனம் பெற்றார். அவருக்கு எதையாவது சொல்லிப் புரிய வைப்பது எங்களுக்கு பெரும்பாடாயிற்று. எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை என்று சொல்வது அவருக்கு விளங்கவில்லை.

அதாவது அவருக்கு கேட்கும்திறன் மிகவும் மந்தமாக இருந்தது. எங்களது வகுப்பறை வீதிக்கருகில்- தண்டவாளத்தை ஒட்டிய பிரதானவாயிலுக்கு அணித்தான வகுப்பறை. எண்பத்து நான்கில் இரயில் போக்குவரத்து கிரமமாக இருந்தது. ஒருநாள் மதியத்திற்கு பிற்பாடான கணிதவகுப்பில் உப-அதிபர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அன்றையவகுப்பில் சார்புவேகம் பாடமாக எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு காரில் பயணிக்கும் ஒருவன் மணிக்கு இன்ன கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க அருகே விரையும் கார் என்னவேகத்தில் செல்கின்றது என்பது சார்புவேகம். அப்போது இரயில் ஒன்று சங்கத்தானை தரிப்பிடத்தை பெரும் சத்தத்துடன் கடந்து சென்றது. பாடம் நடாத்திக் கொண்டிருந்த உப-அதிபர் தனது வகுப்புமாணவர்கள் சத்தம் போடுவதாக எண்ணிவிட்டார். பெரும் கோபத்துடன் வாங்கில் அறைந்து விட்டு சொன்னார் “இனி சத்தம் போட்டீர்களானால் வகுப்பிற்கு வெளியே நிறுத்தி விடுவேன்”. இரயில் வண்டியை இவரால் எப்படி வகுப்பிற்கு வெளியே நிறுத்தமுடியும்? என எண்ணி கவலைப் படத் தொடங்கினேன்.

hibiscus_F2இவ்வாறான உசிதமற்ற போக்கு என்னை முற்றாக கணிதப்பிரிவிலிருந்து விரட்டிஅடித்தது. காற்றில் அலைக்கழிக்கப்பட்ட இலை போன்று சஞ்சரித்து கடைசியாக அடைந்தது உயிரியல். உயிரியல் உண்மையில் உயரியல். உடலின் இயக்க கூறுகளை அறிந்துகொள்வதும், சூழலியல் தாவரங்களுடன் பரிச்சயமாவதும் சந்தோசமானவிடயம் தானே.

படம் வரைந்து பாகம் குறித்து பயின்ற காலங்கள். தாவரங்களில் ஆண்டு வளையம் உண்டென்பதையும் அதைக் கொண்டு  தாவரத்தின் வயதை சொல்லமுடியும் என்பதும் செவ்வரத்தை HIBISCUS குடும்பத்தை சேர்ந்தது என்பதும் மிளகாய்க்கு CAPSICUM INDICUM என்ற தாவரவியல் பெயர் கொண்டது என்பதும் கற்றலின் சுவாரஸ்யத்தை அதிகரித்துக் கொண்டே போனது.

தாவரவியல் சிவவீரசிங்கம், விலங்கியல்  தம்பிராஜா ஆசிரியர்கள் எங்களுக்கு தனியார் கல்வி நிலையத்தில் ஆசிரியர்களாக கிடைத்தார்கள். விலங்கியலின் ஒவ்வொரு உட்பிரிவையும் கற்பித்து முடித்தவுடன் தம்பிராஜா ஆசிரியர் சொல்லும் THATS ALL என்ன? வழக்கமான லண்டன்காரர்கள் பாவிக்கும் THATS ALL இலும் மாறுபட்டது.

sktTHATS ALL என்ன? SKELETAL SYSTEM- வன்கூட்டுத்தொகுதி.  THATS ALL என்ன? EMBRYOLOGY–முளையவியல்.

ஆசை ஆசையாகக் கற்ற பாடங்களும், கற்பித்தஆசிரியர்களும் கனவுகளில் அணி வகுக்கின்றார்கள். சேகுவேரா தனது பாட்டியை காரணம் காட்டி படிப்பை மாற்றிக் கொண்டதைப் போல நாங்களும் தொடர்ந்து கற்காமல் போனதற்கு நாட்டின் சூழலையும், வீட்டுக்கஸ்ட நிலவரத்தையும் காரணம் காட்டலாம். தப்பில்லையே?. அதைத்தானே கடந்த முப்பது வருடங்களாக  செய்து கொண்டிருக்கின்றோம்.

வாழ்க கல்வி!

************************************************************************************************

ஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 29, 2013

கெவின் கார்ட்டர்.

பசியும், பட்டினியும் உலகத்தின் மிகப்பெரும் நோயாக உருவெடுத்திருக்கின்றன. பசியின் தீவிரம் அதிகமாகும் போது தேடுதலின் தீவிரமும் அதிகரிப்பதாக சொல்லப்படுகின்றது. தேடலும் தீவிரமும் அதிகரிக்க சொல்லப்படும் “பசித்திரு விழித்திரு“ எல்லாம் பாசாங்கு சொற்கள்.

நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போன்றது பசித்த வயிற்றுடன் கண்கள் பஞ்சடைய துக்கித்திருப்பது. பசியின் அனுபவத்திறனை பட்டினி கிடந்து தான் கண்டுகொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய பசியை ஒரு புகைப்படம் சொன்னால்- காட்சிப்படுத்தினால் பசியை ஒரு செய்தியாகப் பார்த்தவர்களுக்கு பசியின் தீவிரம் தெரியும். உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் ஒன்றைப் பிடித்து ஒன்று தின்பதற்காக அலைகின்றன. பசி மாத்திரம் இல்லையெனின் உலகின் இயக்க நியதி பாதிக்கப்படும்.

பசியை மையமாக வைத்துத்தான் ஜீவராசிகளின் இயக்க ஒழுங்கு தீர்மானிக்கப்படுகின்றது. ஒன்றிற்கு ஒன்று உணவாக அமைகின்றன. உணவுச்சங்கிலியின் உயர்நிலை மனிதன். எல்லாவற்றையும் உட்கொள்ள பழகிக்கொண்ட மனிதனுக்கு ஒன்றுமே கிடைக்காது போய்விடின் பசியின் தீவிரம் அதிகரிக்கின்றது.

kalukuகெவின் கார்டர் எடுத்து ” டைம்ஸ்” பத்திரிகையில் வெளியான சூடான் சிறுமியின் பசி- உணவுத்தேடல் குறித்த புகைப்படம்- பார்த்தவர்களுக்கு வேதனையையும், கெவின் கார்டருக்கு புலிட்சர் விருதையும் பெற்றுத்தந்தது. சூடான் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடிய பொழுதில் பின்மதிய நேரமாக இருக்க வேண்டும். சூடான் நாட்டிற்கு செய்தி சேகரிப்பவராக சென்றிருந்த கெவின் கார்டர் தனது வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பசியால் உடல் நலிந்திருந்த சிறுமி உடைந்த மானுடத்தோடு நடக்கவியலாமல் சிரமப்பட்டு ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்த ஐக்கிய நாடுகள் உணவு வழங்கும் நிலையத்திற்கு தவழ்ந்து செல்கின்றாள். அவளின் உடலில் எஞ்சியிருந்த சக்தியை திரட்டி தூரத்தே கொடுக்கப்படும் உணவை உட்கொண்டால் மாத்திரமே உடலில் உயிர் தங்கியிருக்கும் இறுதி மணித்துளிகளாக அந்தப்பசி அந்தப் பெண்ணிற்கு வாய்த்திருக்கின்றது.

ஒரு தொழில்முறைப் புகைப்படப் பிடிப்பாளரான கெவின் கார்டர் புகைப்படத்திற்கு கோணம் பார்க்கத் தொடங்குகின்றார். ஈனத்திலும் கோணம் பெரிதாகப் போயிற்று புகைப்படம் எடுப்பவர்களுக்கு. ஒரே நேர்கோட்டில் மண்ணில் தவழும் நலிந்த சிறுமி, அவள் உயிர் தொலைத்தால் அவளை உண்ணக் காத்திருக்கும் கழுகு – ஒரே நேர்கோட்டில் வருகின்றன. கெவின் கார்டர் ஒரு தேர்ந்த புகைப்படக்கலைஞராக, பத்திரிகையாளராக இருப்பதன் காரணமாக இந்தப் புகைப்படக்கோணமும் அதனது முக்கியத்துவமும் அது ஏற்படுத்தப்போகும் அதிர்ச்சியும் அவரால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கின்றது.

ஒரு கணத்தில் தவறவிட்ட காட்சியை மறுகணத்தில் காணக்கிடைப்பதில்லை. அது அதற்குரிய கணத்தில் நடக்கின்ற வேளையில் காட்சிப்படுத்த வேண்டும். ஒரு பொழுது மறு பொழுதாக இருக்காது.

கெவின் கார்ட்டரிற்கு அந்தச் சிறுமியை, பின்புலத்து கழுகுடன் மாத்திரம் காட்சிப்படுத்த விருப்பமில்லை. கழுகு மேலும் சிறகை விரித்தால் நன்றாக இருக்குமென எண்ணத்தலைப்பட்டார். அதற்காக மேலும் இருபது நிமிடங்கள் கரைந்தன. கழுகு சிறகை விரிக்காத நிலையில் 1993ம் ஆண்டு வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

kevinஇறுதி நேரத்தில் அந்தச் சிறுமி என்னவானாள்? அவள் உயிருடன் இருக்கின்றாளா? பசி அவளைக் கொன்று விட்டதா? டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தை தொலைபேசி அழைப்புகளால் நிரப்பியது மானுட அக்கறைகள். ஒரு தொழில் முறை பத்திரிகை புகைப்படக்காரராக தன்னை முதன்மைப்படுத்திக் கொண்ட கெவின் கார்ட்டர், வந்த அலுவல் முடிந்தவுடன் அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டார். பசித்திருந்த சிறுமி பற்றிய தகவல்களை அவர் அறிந்திருக்கவில்லை. மனித நேயத்துடன் நடந்து கொள்ளாமல் தொழில் நேர்த்தியான ஒரு புகைப்படக் கலைஞராக தன்னை வெளிப்படுத்திய கெவின் கார்ட்டர், திரும்பி வந்த கேள்விக்கணைகளால் திக்குமுக்காடிப் போனார். மானுடத்தின் மனச்சாட்சி உலுக்கியது. உயிரின் இறுதி இருப்பை கவனிக்காத குற்ற உணர்வுடன் புகைப்பட பத்திரிகையாளருக்கு வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் விருதைப் பெற்றுக்கொண்டார்.

உலகத்தின் ஒட்டுமொத்த கண்டனத்தையும் வெறுப்பையும் பெற்றுக்கொண்டவராக- சொற்களால் வதைபட்டவராக கெவின் கார்ட்டர் ஏலவே பலமுறை தற்கொலைக்கு தூண்டப்பட்டவராக இருந்து தோற்ற நிலையில் தனது இறுதி தற்கொலையை வெற்றிகரமாக்க முயற்சித்தார்.

கார்பன் மொனொக்சைட்டு வாயுவை தனது வாகனத்தை இயங்குகின்ற நிலையில் வைத்திருந்து அதன் புகைபோக்கியை உள்முகமாகத் திருப்பி பெற்று சுவாசித்து, தான் சிறு வயதில் மகிழ்வுடன் விளையாடித்திரிந்த கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இவ்விடத்தில் இப்பதிவில் கெவின் கார்ட்டரை வேறு சிந்தனைத் தடத்தோடு மேல் நோக்காகப் பார்க்கலாம். அவரிடம் இயல்பிலேயே அரக்க குணம் குடிகொண்டிருக்கவில்லை.தனது இராணுவ சேவையில் அவருடன் பயிற்சியிலிருந்த ஏனைய சகாக்கள் ஜோகனஸ்பேர்க் நகரில் ஒரு கறுப்பின இளைஞரை தாக்கிய துயரப்பொழுதில் இராணுவத்தில் இருந்து முரண்பட்டு தனது சேவையை கைவிட்டவர்.

கெவின் கார்ட்டர் பணம் பண்ணுவதற்காகவே கமராவும் கையுமாக அலைந்து துரத்தி துரத்தி படம் பிடிக்கும் PAPPARAZZI வகையை சேர்ந்தவர் அல்லர். இயற்கையின் வறுமையை பதிவு பண்ணிய கலைஞன்.

sudan2உலகத்திற்கும் மனச்சாட்சி என்ற ஒன்று இருக்கின்றது.ஒரு ஊடகமோ ஒரு கலைஞனோ அதை வெளிக் கொணரும்போது அதை ஆமோதிப்பதற்கும் வழிமொழிவதற்கும் “உலக மனச்சாட்சி” தன்னை தயாராக வைத்துக் கொண்டிருக்கின்றது.கெவின் கார்ட்டர் சூடானின் வறுமையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியபோது “உலக மனச்சாட்சி” அவர் மீதே பாய்ந்ததுதான் ஆச்சரியம்.

வீதி விபத்தில் சிக்கி உயிருக்காக போராடும் நிலையிலுள்ள ஒருவரை விட்டு விலகி அவசர வேலையாக போய்க் கொண்டிருக்கின்ற- வெயிலின் வீச்சிலும், பசி மயக்கத்திலும் வீதியோரத்தில் சுருண்டு படுத்திருக்கும் ஒருவனுக்கு மதிய உணவு ஈயாத  மனநிலையில் சட்டைப்பையில் பணம் வைத்திருக்கின்ற- என அந்த ஒவ்வொருவரும் குற்றவாளிகள்தான். கெவின் கார்ட்டரைவிட மிக மோசமானவர்கள்தான். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட மனச்சாட்சியும் சுய விமர்சனத்தை முன்வைக்காத  வரை இந்த பிரகிருதிகள் கெவின் கார்ட்டரை விமர்சனங்களால் கொன்று கொண்டேயிருப்பார்கள்.

பணம் கொடுத்து உணவுப்பொருள் வாங்க முடிந்தவனால் அநாயாசமாக உணவுப்பையை துாக்கிநடக்க முடிகின்றது.பசித்த வயிறுடையவனால் அதை தவழ்ந்துதான் ஏக்கமுற முடிகின்றது.ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனிப்பட்ட கருத்துக்களை மனத்திற்குள் விதைக்கின்றன.

pillaiபோபாலில் எண்பத்து நான்கில் ஏற்பட்ட விஷ‌வாயு கசிவால் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மானுடங்கள் உயிரிழக்க நேர்ந்தது. இந்திய அரசு வெறும் ஆயிரத்து எண்ணுாறு பேர் மரணித்ததாக அறிக்கை வெளியிட்டது. இறந்த பின்பு புதைத்த குழந்தையை தோண்டி எடுத்து முகம் பார்க்கும் தாயாரின் நிலை கூட கெவின் கார்ட்டரால் புகைப்பட பதிவாக எடுக்கப்பட்டிருக்கின்றது. போபால் விஷ‌வாயு அனர்த்தத்தை இந்த புகைப்படம் ஒன்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கப் போகின்றது.

இயல்பிலேயே உணர்ச்சி வசப்பட்ட ஒரு பத்திரிகை புகைப்படப்பிடிப்பாளர் தான் ஒரு உலகப் புகழடையப்போகும் புகைப்படத்தை எடுத்த மகிழ்வில் தன்னிலை மறந்து மகிழ்வு கொண்டவராக- மானுடம் மறந்த மனிதனாக அவரை பதிவாக்க விழைகின்றேன்.

செய்திச் சேகரிப்பில் தீவிரமாக அலைகின்ற ஒரு பத்திரிகையாளனுக்கு அந்த நிமிடத்தில், அந்தக் கணத்தில் பிரத்தியேகமாக நிகழ்கின்றவையும், அபூர்வமாக காட்சி அளிக்கின்றவையும் மிகமகிழ்வான செய்தி சேகரிப்பின் சாராம்சம் தான். அடையாளம் தான்.

தனது முப்பத்துமூன்றாவது வயதில் உயிர்தொலைத்து குற்றவுணர்வில் இருந்து மீண்ட மானுடன் கெவின் கார்டர். மரித்து நிமிர்ந்தார். அவர் எழுதி வைத்துவிட்ட இறுதி வரிகள் Sorry..I am really …really very sorry.

Titanic மூழ்கிய போது LEANARDO DI CAPRIO வும் அழகான KATE WINSLET மாத்திரம் மூழ்கவில்லை. அவர்களுடன் ஒரு ஜப்பானியரும் மூழ்கிக்கொண்டிருந்தார். சிறுவர்களும், பெண்களும் முன்னுரிமை அடிப்படையில் உயிர்காக்கும் படகினால் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதில், தனது உயிரை வெல்லக்கட்டியாக மதித்து உயிர்காக்கும் படகிற்குள் குதித்து உயிர் தப்பிய ஜப்பானியர் நாடு திரும்பிய பொழுதில் ஏளனங்களும் அவமானங்களும் அவருக்காக காத்திருந்தன. ஜப்பானுக்கே பெரும் துரோகமிழைத்து உயிர் தப்பி அவமானப்படுத்தியதாக கண்டனங்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்ட போது தான் Titanic உடன் மூழ்கி இருக்கலாம் `ஏன் உயிர் தப்பினோம்` என்றாகிவிட்டது அவருக்கு.

பெருத்த அவமானங்களையும், ஏளனங்களையும் சந்தித்து தினம் தினம் செத்துப்பிழைத்த அந்த ஜப்பானியர் 1939ல் உயிரிழந்த போது அதில் தப்பியவர்- இதில் உயிர்விட்டார் என்ற கணக்கில் செய்தி வெளியிட்டன. மரணமில்லாப் பெருவாழ்வு

white colouredஉலகின் தலைசிறந்த 10 புகைப்படங்களின் தொகுப்பில் 1950 களில் இன ஒதுக்கீடு உச்சத்தில் இருந்த சமயத்தில் வெள்ளையர்களின் பாவிப்பிற்கு தனித்தண்ணீர் குழாயும் கறுப்பர்களுக்கென்று தனிக்குழாயும் அமைக்கப்பட்டிருந்த அவலத்தையும் கறுப்பர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அழகாகப் பதிவு செய்கின்றது மேற்கண்ட புகைப்படம். அந்தப்பொழுதில் “BLACK IS BEAUTY” என்று அவர்களுக்கு சொல்லத் தோன்றவில்லை.

வரலாறு கறைபடிந்தது.

******************************************************************************************

ஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 14, 2013

நினைவழியா நாட்கள்.

நேரம் எதை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.காலம் எதைக் கடந்துகொண்டிருக்கின்றது என்பது தெரியாத வானத்தின் மீதான நள்ளிரவுப் பயணம். விமானப் பயணங்களின் போதுதான் சில அகால சம்பவங்கள் நிகழ்கின்றன. நள்ளிரவில் உணவு உட்கொள்வது உறக்கமின்றி தவித்திருப்பது தொடர்ந்து உட்கார முடியாத அந்தரத்தில் எழுதுவதற்கு முற்படுவது.DSC_0046

ஆனால் வாழ்வு என்பது அதீத சுவாரஸ்யங்கள் மிகுந்தது. பரமபத விளையாட்டுப் போன்றதுதான் வாழ்க்கை. ஏணிகளில் ஏறி கிடுகிடுவென்று மேலே போனால் அடுத்த கட்டத்தில் பாம்பு எங்களை வழுக்கிக் கொண்டு கீழேவிழுத்த காத்திருக்கும். எங்களுக்கு கஷ்டமானபொழுதையும் இஷ்டமானபொழுதாக ஆக்கிக் கொள்ள முனைந்தால் வாழ்வு தினந்தோறும் திருவிழாதான். துன்பத்தின் முனையளவை ருசித்தால் தான் இன்பத்தின் திணையளவு தெரியும் என்று நண்பர் கூறுவார். பரமபத விளையாட்டு எனக்குபழகிப்போயிற்று.

கடந்த ஏழு மாதத்தில் நினைக்கவியலாத சம்பவங்கள் நடந்தேறிவிட்டன.எனது ஆருத்ரா தரிசனத்திற்கு எப்பொழுது நினைவின் நெகிழ்வு என்று சிறுதலைப்பு வைத்தேனோ அன்றிலிருந்து உருகி நெகிழ வேண்டியதாயிற்று. இது உண்மையில் எனக்கு நடந்திருக்குமோ என்றால் கற்பனையில் தான் சாத்தியம் என்பதாக  சுயஅறிவு சொல்லிக் கொள்கின்றது. பரவாயில்லை.

வாழ்வு என்பதேஅதீத  கற்பனைகளின் பிரவாகம் தானே

DSC_0119கற்பனைகளின் பிரவாகம் வானப்பறப்பில் எழுத்தாக வடிகின்றது. விமானம் துருக்கிக்கு மேலால் பறந்துகொண்டிருக்கின்றது. துருக்கியில் நேரம் 2.13 ஆக இருந்துகொண்டிருக்கின்றது. நான் ஜன்னலோர இருக்கையில் மாட்டிக்கொண்டேன். நடுப்பக்கத்தில் இருக்க கிடைத்திருந்தால் எழுந்திருப்பதற்கும் அடிக்கடிஅப்பால் போய் வருவதற்கும் வசதியாக இருந்திருக்கும்.

எனக்கருகில் இருபதுகளை அண்டிய வயதொத்த சுவிஸ் இளைஞன் ஒருவனும் அவனது அவளும். அவள் அவனின் மடியில் சிறுதலையணை போட்டுஉறங்கிக்கொண்டிருக்கின்றாள். அவர்கள் இருவருக்கும் வாழ்வின் தொடக்கபுள்ளியில் கடவுளின் நெருக்கமும்  காதலின் ஆசிர்வதிப்பும் இருந்திருக்கவேண்டும்.

DSC_0135இதே இருபது  எனக்கு…வேண்டாமே. கற்பனை கொள்வதற்கும் கனன்று கொள்வதற்கும் ஏக்கத்து தொனிப்பொருட்கள் ஏராளமிருந்தன.கிடைக்காத ஒவ்வொன்றுமே பெறுமதிமிக்கவைதான்.

சென்றமுறை அவளிடம் சொல்லிவிட்டு சென்ற பிரயாணத்தை “போய்ட்டுவாறன்” என்ற தலைப்பில் பதிவாகஎழுதி இருந்தேன். எங்கேபோனாலும் திரும்ப கட்டுக்கு வந்தாக வேண்டும் மாடு என்பார்கள். இந்த மாடும் அப்படித்தான். நூலில் கட்டிய பட்டம் போன்று சுண்டுபவனின் கெட்டித்தனத்தில் உயரப்பறந்து நூலறுந்தவுடன் ஆடி ஆடி தரையைத் தொடும் நிலைமைதான். அதிக உயரத்தில் இருக்கும் போது தரையில் வீழ்ந்தால் அடிபலமாக இருக்கும். வானத்தின் மீதான பறப்பு ஒவ்வொரு முறையும் அதீத நினைவெழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதை இம்முறைதான் எழுதவாய்த்திருக்கின்றது.

சுவிட்சர்லாந்தின் பள்ளிகளில் கோடைகால விடுமுறைநீண்டது. கோடைகால விடுமுறைகளில் மாத்திரம் தான் பெரும்பாலும் தாயகத்திற்கான பயணங்களை வைத்துக்கொள்வார்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள்.

இம்முறை மாத்திரம் சுவிட்சர்லாந்தில் இருந்துசுமார் முப்பதினாயிரம் தமிழர்கள் தாயகம் நோக்கிய பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள். கோடைகால விடுமுறையின் முதல் வாரத்தில் செல்வதற்கான திகதிகளும் இறுதி வாரத்தில் திரும்புவதற்கான திகதிகளும் கிடைக்காத அளவிற்கு டிக்கெட்டுகள் யாவும் பயணமுகவர்களிடம் விற்றுத் தீர்ந்துவிட்டன.

DSC_0127சிலவேளை போகலாம் என்றமனநிலையில் இருந்துகடைசியில் அடுக்கும் பண்ணிப் புறப்பட்ட எனக்கும் மூன்று நாட்கள் இருக்ககையில் விரும்பியதேதிக்கு டிக்கெட் கிடைத்தது. விமானம் துருக்கிக்கு அப்பால் கருங்கடலை கடந்துகொண்டிருக்கின்றது. நான் இம்முறைசாவகச்சேரிக்கு போகப் போவதில்லை என்ற திட முடிவுடனேயே எனது பயணத்தை தொடக்கிவிட்டிருந்தேன். தேவையில்லாமல் அங்குபோய்…வெறும் மாமரங்கள் சூழ்ந்த இடிந்து வீழ்ந்த வீட்டின் முன்னால் உட்காரந்து.. அந்த காலைப்பொழுதுகளில் அவளின் CHOPPER சிவப்புநிற சைக்கிளின் வருகைக்காக காத்திருப்பது பதின்மூன்று வயதுப் பிரமைகளின் நீட்சிதானே…வேறொன்றுமில்லை.

சாவகச்சேரியில் என்னதான் இருக்கின்றது? ஒருகல்வயலும் ஒரு பெருங்குளம் சந்தியும் இடையில் அந்தப் பிள்ளையார் கோவிலும். காணுமடா… இடையில் எழுதுவதை நிறுத்தி வானப்பரப்பில் தமிழ்ப்பாடல்களின் இசைக்கோர்ப்பை கேட்பதற்காக அதனது இலக்கங்களை அழுத்தினால் “குருவாயூரப்பா“ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

“வா வா என் தேவா

பரிமாறலாம் பசியாறலாம்.

ஏகாந்த இரவும் எரிகின்றநிலவும்”

அதுவரை எனது தாய் தந்தை பெயரில் இருந்த எங்கள் பூர்வீகநிலம் எனதுபெயருக்கு மாறிவந்ததும் அதை பராமரிக்கும் பொறுப்பு என் தலையில் விழுந்ததும் சாவகச்சேரியுடனான எனது தொடர்புகளை முற்றாக அகற்றுவதற்கு தடையாக இருந்தன.சில பல காரியங்களை காரணமாக முன்வைத்து என்னை சாவகச்சேரி போய்வருமாறு பணித்து இருந்தனர் என் பெற்றோர். அதனால் தான் சாவகச்சேரி போகவேண்டி இருந்தது. (உள்ளுரவிருப்பமில்லையாக்கும்)

DSC_0386இலங்கையில் காணப்படுகின்ற மிகப்பெரிய அவமதிப்பு உண்மையாக உழைத்து ஊதியம் பெற விருப்பமில்லாமனநிலை. சும்மா உட்கார்ந்து சோறு சாப்பிடுவதற்கு எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது. இப்படிச் செய்யலாம் அப்படிச் செய்யலாம் என்றுஉபதேசித்தருளும் மனநிலையில் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். ஒற்றைத் துரும்பை தன்கையால் தூக்கிஅப்பால் போடுவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. தன் வீட்டு அழுக்குகளை வீதிவழியே வீசிவிட்டு தன்சட்டையில் பன்னீர் தெளித்துக் கொள்ளும் உயரியபோக்கு அதிகரித்திருக்கின்றது.

யாழ்ப்பாணப் பக்கங்களில் வெளிநாட்டுபணப்புழக்கம் சும்மா இரு சுகம் கிடைக்கும்என்ற மனநிலையை வளர்த்து விட்டிருக்கின்றது. ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று உறவினர்களாவது வெளிநாட்டில் இருப்பதும் அவர்கள் இவர்களுக்குஉதவ வேண்டியகட்டாயத்தில் இருப்பதும் அதிசய வாழ்க்கை ஆதாரம். நாங்கள் ஊரில் இருந்த காலங்களில் இவ்வாறான வனப்புகள் காணக்கிடைக்கவில்லை. புறப்படும் போது எதையாவது செய்ய முனைவதற்கு திட்டமிட்டு அது நடைமுறையில் இயக்கமின்றி போவதான மனநிலையே மேற்கண்டபராவை எழுத காரணமாக இருந்தது.

இப்போது விமானம் மாலைதீவுக்கு மேலால் பறப்பை மேற்கொண்டிருக்கின்றது. மாலைதீவில் ஒன்றரைணி நேரம் தரித்துவிட்டு SRI LANKA சென்றாக வேண்டும். மாலைதீவுக்கும் கொழும்பிற்கும் இடையிலான பிரயாணநேரம் 1.05 மணிநேரம். பறப்பினிடையே அழகழகான குட்டித்தீவுகள். செந்தழல் சூரியன். இலங்கையை நெருங்குகின்றோம் என்ற உணர்வு–அற்புதமாக இருக்கும்.

DSC_0142விமானம் கட்டுநாயக்காவில் தரையை தொட்டிருந்தது. கொழும்பு விமான நிலையத்தில் அதிகநோண்டுதல் இல்லாமல் வெளியே வரமுடிகின்றது. இழுத்தடிக்கும் பழைய தொழில்நுட்பம் வழக்கொழிந்து போய்விட்டிருந்தது. இன்னும் அரைமணிநேரத்தில் வத்தளையை அடைந்துவிடுவேன். வத்தளை பெருநகரமுமில்லா கிராமமும் இல்லாத வனப்பான நகரம். நான் இருக்கும் இடத்தில் இருந்து அருகாமையில் மிகநீண்டஅழகானகடற்கரை. மாலை நேரத்தில் பரபரப்பாகும் கடைத்தொகுதிகள்.

பெரிய பஸ்சில் சாவகச்சேரி போவதென்றால் நீர் கொழும்பு மெயின் ரோடு போய் காத்திருக்க வேண்டும்.சொன்ன நேரத்திற்கு வரமாட்டார்கள். போய் சாவகச்சேரி பிரதான பாதையிலேயே இறங்கி கொள்ள வேண்டும்.பெரிய பஸ்சில் ஒரே வசதி அலுங்காமல் குலுங்காமல் பிரயாணம் செய்யலாம்.பதினான்கு இருக்கை கொண்ட வான்-1400 கட்டணம்-வீட்டில் வந்து ஏற்றிச் செல்வார்கள்.சாவகச்சேரியிலும் வீட்டு வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

DSC_0357மழை சிணுசிணுங்க வத்தளையில் பத்து மணிக்கு வானில் ஏறினால் அதிகாலை நாலு மணி வாக்கில் கலகலவென நிலம் காய்ந்த சாவகச்சேரிப் பரப்பில் கால் வைக்கலாம்.சாவகச்சேரியில் போய் இறங்கிக் கொள்கின்ற தருணங்களில் எல்லாம் கேட்பதற்கும் பேசுவதற்கும் நிறைய விடயங்கள் இருக்கும். அதிகாலை இருட்டுக்குள் வீட்டின் முன்னால் இறங்கி இன்னும் விடிவதற்கு இரண்டு மணி நேரமிருக்கின்ற பொழுதில் பெரிய தாயார் தயாரித்து தந்த சூடான தேநீருக்கு பின்பாக சொன்னவைகள் எதிர் வீட்டை சுட்டி “புதிதாக கல்வயல் ஆட்கள் குடி வந்திருக்கினம்.எங்களுக்க துாரத்து சொந்தமாம்”.அந்த துாரம் எத்தனை கிலோ மீட்டர்கள் என்பதை அறிய ஆவலுற்றேன்.

-இதன் அடுத்த பகுதி இந்த அம்மாவின் நினைவுகளாக வரும்.

“அன்பு” என்ற தலைப்பில்
மிகச் சிறிய
கவிதை கேட்டார்கள்.

“அம்மா” என்றேன் உடனே.

அம்மாவே கேட்டிருந்தால்
இன்னும் சின்னதாக சொல்லியிருப்பேன்.
“நீ” என்று.

*************************************************************

ஆருத்ரா எழுதியவை | ஜூலை 18, 2013

கழுதையிடம்-கடவுளிடம்.

bye.1

கனடாவுக்கு செல்பவர்கள்
எவரும்
கழிப்பறைக்கு போகும்போது
சொல்லிச் செல்வதில்லை.

போய்ட்டு வாறன்-போய்ட்டு வந்திட்டன்
எண்டாலும்
சொல்லாச் செல்லும் பயணங்கள்
சொர்க்கமளிப்பதில்லை.

பக்கத்து பிரான்ஸ்ற்கோ
தொலைதுார சொந்த தேசத்திற்கோ
பயணத்துாரம் குறைவோ- கூடவோ
தோழியிடமோ – யாரிடத்தோ
சொல்லிச் சென்று பழக்கப்பட்டவர்கள்

தொடர்பாடல் நின்றதும்
திண்டாடிப் போவார்கள்.

விடுமுறைப் பயணம் இல்லை.

வயதான பெற்றோர் அரு‌கிருந்து
அழுதுவிட்டு வரும் பயணம்தான்.

மௌனத்தின் துணையுடன்
தனித்திருக்கும் நாட்கள்தான்!

எங்கே சொல்லலாம்?

காற்றிடம்….

காற்றிடம் சொல்லிப் பயனில்லை.
அது வெற்றிடம்.

வெறுவெளியில் அசைந்தாடும் மரத்திடம்……..
மரத்திடம்…வேண்டாம் மறந்திட்டம்.

எனக்குப் பிடித்த கழுதையிடம்
அன்றி கடவுளிடம்
சொல்லலாம்.

திரும்பி வருவதற்குண்டான
பயணங்களை சொல்லித்தான்
சென்றாக வேண்டும்

இறுதிப்பயணத்தில்
சொல்லாமல் போவதற்கான
சாத்தியங்களே நிரம்ப இருப்பதால்

அதுவரைக்குமான பயணங்களை
சொல்லித்தான் சென்றாக வேண்டும்.
கழுதையிடம்-கடவுளிடம்.

************************************************************************************************

ஆருத்ரா எழுதியவை | ஜூலை 4, 2013

ஏன் என்று கேளுங்கள்.

எனக்குத் தெரிந்து இற்றைவரை இரண்டு குரங்குக் கதைகள் ஞாபகத்தில் இருக்கின்றன. குரங்குகளை நினைவில் வைத்திருப்பதால் பெரிதாக பயன் ஒன்றும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்றாலும் கதைகளாக நினைவில் இருப்பதால் சிறிதளவேனும் பயன் இருப்பதாகவே தெரிகின்றது.

நான் ஏழுவயதாக இருக்கும் போது முதலாவது குரங்கு கதையை அறிந்து கொண்டேன். ஆத்மஜோதி எனும் மாதஇதழ் நாவலப்பிட்டியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அந்த இதழில் இடம்பெற்ற அந்த குரங்குக்கதையை தந்தையார் வாசித்துக் காட்டினார்.

DSC_0115ஒரு பரிசோதனைச்சாலையில் ஒரு தாய்குரங்கும், அதனது சேய்க்குரங்கும்- தாய்க்குரங்கின் உயரத்திற்கு சற்று மேலதிக உயரத்தைக் கொண்ட கண்ணாடி ஜாடிக்குள் விடப்பட்டன. ஜாடியினுள் கீழ் இருந்து நீர்செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. நீரினுள் தாய்க்குரங்கும், சேய்க்குரங்கும் விளையாடத் தொடங்கின. தங்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே நீர் உள்ளே வருவதாக நினைத்துக் கொண்டன. நீர்மட்டம் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியது. தாய்க்குரங்கின் இடுப்பு மட்டம்வரை நீர் அதிகரித்து விட்டது. தாய்க்குரங்கு குட்டிக்குரங்கை தனது தோள்களில் ஏற்றிக்கொண்டு விளையாட்டைத் தொடர்ந்தது. வரப்போகும் ஆபத்தை உணரவில்லை. நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. தாயக்குரங்கின் மூக்குமட்டம் வரை நீர் உயர்ந்து விட்டது. விளையாட்டை கைவிட்ட தாய்க்குரங்கு உயிராபத்தை உணரத்தொடங்கியது. குட்டிக்குரங்கை தனது தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துக் கொண்டது. தாய்மையின் உன்னதத்தை வெளிப்படுத்தி குட்டிக்குரங்கை காப்பாற்றி நின்றது.

நீர்மட்டம் அதிகரித்து தாய்க்குரங்கின் தலைக்கு மேலே வந்துவிட்டது. தாய்க்குரங்கு மூச்சுத்திணறத் தொடங்கியது. அப்பொழுது தான் அந்தத் தாய்க்குரங்கு யாரும் எதிர்ப்பார்க்காத காரியமொன்றை செய்தது. தனது தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துக் கொண்டு காப்பாற்றி வந்த குட்டிக்குரங்கை நீரினுள் இழுத்து காலடிக்கு கொண்டு சென்று அதற்கு மேல் ஏறிநின்று தன்னை காப்பாற்றிக்கொண்டது.

கதையை வாசித்துக் காட்டிய எனது தந்தையார் கதை முடிந்தவுடன் என் முகத்தைப் பார்த்தார். கதையின் முடிவு என்னை வெகுவாக பாதித்திருந்தது. குட்டிக்குரங்கின் பரிதாபநிலைக்காக கண்கலங்கி இருந்தேன். “கதைதானே விடு” எனத் தந்தையார் என்னை சமாதானப்படுத்தினாலும் அது கதையல்ல என்பது அவருக்கும் தெரிந்திருந்தது.

இதுவரை குட்டிக்குரங்கு நீருள் மூழ்கியதாலேயே இறந்து போனதாக எனது சிறுபராயத்து அறிவு சொல்லிக்கொண்டிருந்ததை நானும் நம்பிக் கொண்டிருந்தேன். நான் இன்றைய வயதில் இந்தக் கதைக்குள் மேலதிகமாக வேறொன்றும் இருப்பதாக உணர்ந்து கொள்கின்றேன். “தாய்க்குரங்கு தன்னை காப்பாற்றும்” என்று நினைத்திருந்த குட்டிக்குரங்கின் நம்பிக்கை தகர்ந்த அக்கணம் தான் அது மரணித்திருக்க வேண்டும். நம்பிக்கை பொய்த்துப்போதல் தான் மனிதனுக்கு கூட மரணிக்கின்ற தருணங்களை நினைவுபடுத்துகின்றன.

vetathiriஇரண்டாவது குரங்கு கதை “சங்கரன் பிள்ளையும் குரங்குகளும்” என்பதாக அமைகின்றது. சங்கரன்பிள்ளை இதுவரை வாழந்த வாழ்க்கையில் வெறுப்புற்று துறவி ஒருவரை நாடினார். தனக்கு மன அமைதி கிடைப்பதற்குரிய பயிற்சிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். துறவி சிறிது யோசனை செய்துவிட்டு சங்கரன்பிள்ளையிடம் கூறினார். இந்தப்பயிற்சி மிக இலகுவான பயிற்சி தான். நீ ஒரு வாரத்திற்கு எதைப்பற்றியும் பெரிதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். முக்கியமாக குரங்குகளைப் பற்றி நினைக்காமல் இருந்தால் போதும்.

“சரி” என்று சொல்லிவிட்டுச் சென்ற சங்கரன்பிள்ளை குரங்குகளை நினைப்பதில்லை என சங்கல்பம் எடுத்துக்கொண்டார். “குரங்குகளை நினைப்பதில்லை” என பல தடவைகள் மனதிற்குள் சொல்லிக்கொண்டார். உறுதி எடுத்துக்கொள்ள எடுத்துக்கொள்ள குரங்குகள் மேலெழுந்து வரத் தொடங்கின. அவருடைய நினைவுகளில் குதியாட்டம் போட்டன. இரண்டாவது நாளே சங்கரன்பிள்ளை துறவியிடம் ஓடினார். சுவாமி தயவு செய்து என்னை குரங்குகளிடம் இருந்து காப்பாற்றுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்;.

நாம் எதை, எதை நினைக்காமல் இருக்கவேண்டும் என நினைக்கின்றோமோ அவைகள் மாத்திரம் தான் மனதை பெரிதாக ஆக்கிரமிக்கின்றன. மனதிற்கு கட்டளைகள் போடமுடியாது.கஷ்டப்பட்டு செய்வன துன்பத்தை தருகின்றன.

மனம் பொறி வழியில் இயங்குகின்றது. ஐம்பொறிகளால் இயங்குகின்ற மனம் அறிவின்வழி நிற்காது- உணர்வின் வழி மயக்கமுற்று மேலதிக துன்பங்களை வருவித்துக்கொள்கின்றது. சில கணங்களில் மனம் இதை உணர்ந்து கொண்டாலும் துன்பங்களுக்கு காரணம் தான்தான் என மனத்தையே கூறிக்கொண்டாலும் அதனின்றும் வெளியேறி விடுபடமுடியாத அளவிற்று தத்தளிக்கின்றது. மனத்தை அடக்க நினைத்தால் அலையும். மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்.

இவ்விடத்தில் நான் என்ற குறியீட்டுடன் “ஆருத்ரா” என்ற படர்க்கை உங்களுடன் உரையாட முற்படுகின்றது.
சதா சர்வ காலமும் சிறுவயதிலிருந்து மத்திம வயதுவரை மற்றவர்களால் இன்பம் என உணரப்பட்ட புலன் நுகர்வுகளில் இருந்து தன்னை விலத்தியே வாழ்க்கையை கடத்தி இருக்கின்றது இந்த மனம். சதா வெறுப்புற்று சதா எரிச்சலுற்று, அனர்த்தங்களில் அல்லலுற்று என எனக்கான மனம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டதோ என ஐயம் உற்றிருக்கின்றேன். மனம் எனைக் கட்டி இழுத்து விரைந்திருக்கின்றது. நான் அதன்வழி பயணப்பட்டிருக்கின்றேன். மனத்தின்வழி விரைந்து விட்டு வீழ்ந்தவுடன் விதியின் மீது பழியைப்போடும் லாவகம் மற்றவர்களைப் போலவே எனக்கும் வாய்த்திருக்கின்றது.

ஆனால் இவற்றை எல்லாம் மீறி மனத்தை முழுதாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற பெரு விருப்பு மற்றவர்களைக்காட்டிலும் எனக்கு இருந்திருக்கின்றது. மனம் பொறிவழியில் அல்லலுறுவதை வெளிப்படையாக உணர்ந்து கொண்டவருக்குத் தான் அதில் இருந்து மீட்சி அடையவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தெழுகின்றது.

murugesuஆன்மீகத்தின்பால் உற்ற ஆவலினால் ஒருமுறை நுவரெலியா சென்றபோது காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றிருக்கின்றேன் அவரால் கற்றுத்தரப்படும் ஆன்மீக வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பு புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்கின்ற எனக்கு அவரின் மறைவிற்கு பின்பு அடிபட்டுப் போயிற்று. அதன்பின்பு யோகாசன வகுப்புகளில் கலந்து கொண்டதனால் பெற்றுக்கொண்ட சிறிய சிறிய யோக அனுபவங்கள் ஆன்மீகத்தின் பக்கம் மேலும் இழுத்துச் சென்றன.

மூச்சுப்பயிற்சி என்கின்ற பிராணயாமக்கலை பெரிதான மன அமைதியை பெற்றுத்தந்திருக்கின்றது. அதனுடன் கூடவே கற்றுத்தரப்படும் முத்திரைகைள் மனக்கூர்மைக்கும் மன ஓர்மைக்கும் வழி சமைக்கின்றன. எல்லாம் நன்றாகவே இனிதாகவே நடைபெற்றன. இவ்விடத்தில் தாய்க்குரங்கு தான் தப்பித்தலுக்காக சேய்க்குரங்கை காலடியில் போட்டு ஏறி நின்ற துயரம் நடந்தேறியது.

muthraவாழ்வியல் அனுவபங்கள் பெரிதான பாடங்களை கற்றுத்தருகின்றன. ஆனால் அதைப் பெற்றுக்கொள்வதற்காக தரப்படும் விலைகள் மிக உச்சமானவை. வலி ஏற்படுத்தக் கூடியவை.

துன்பம் ஏற்படுகின்ற வேளைகளில் எல்லாம் ஆன்மீகத்தை தூசிதட்டிப் பயன்படுத்திக்கொள்வது எனக்கு பழக்கமாக இருந்திருக்கின்றது. கெட்ட பழக்கமாக இருந்திருக்கின்றது. கற்றுத்தந்த காலத்தில் இருந்து இற்றைவரை ஒழுங்காக பின்பற்றியிருந்தால் ஆன்மீகத்தின் சில பயிற்சிகளை அடைந்திருந்திருப்பேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால் ஆன்மீகத்தின் சில உச்சங்களை தொட்டவர்கள் தன்னடக்கம் காரணமாக தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. தியானமுறைகள், அகத்தவம் என்பவற்றில் மேலோங்க மேலோங்க இயல்பான தன்னடக்கம் வாய்த்துவிடும். பூர‌ண நித்திய அமைதிக்குள் அவர்கள் உவகை கொள்வார்கள்.

2010 ன் சில நாட்கள் வேதாந்திரி மகரிஸி அவர்களின் மனவளக்கலை மன்றத்தினரின் வகுப்புக்களில் கலந்து கொண்டேன். இந்தியாவில் இருந்து வந்திருந்த பேராசிரியர் ஒருவர் அகத்தாய்வுப்பயிற்சி, காயகல்பப்பயிற்சி துரியத்தவம் வரை கற்றுத்தந்து விட்டு போயிருந்தார். அதற்கு முதலே மனவளக்கலை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து தருவித்திருந்தேன். இங்கும் அங்குமாக நடைபெற்ற ஆன்மீக சம்பந்தமான பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொண்டு வீடு வந்தால் அங்கு கற்றுத்தந்தவைகள் எல்லாம் யோகாசனத்தின் சில பகுதிகளே என்பது புலனாகும். ரவிசங்கர் அவர்களின் “வாழும்கலை” சம்பந்தமான வகுப்புக்களில் கூட கலந்து கொண்டிருக்கின்றேன்.

asanaஎல்லாவற்றிலும் அடிப்படையான சில விசயங்கள் யோகாசனம், பிராணயாமம், சில தியான முறைகள் என்பவையாக அமைந்திருந்தன.

இவற்றில் நான் மிகச் சிறந்ததாக ஏற்றுக்கொள்ளவது வேதாந்திரி மகரிஸி அவர்களின் மனவளக்கலை சம்பந்தமான அகத்தாய்வு பயிற்சிகளும், தியானமுறையும் தான். அவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க நடைமுறைப்படுத்தத் தக்க வகையில் அமைந்திருக்கின்றன.

மனதைப்பற்றி சொல்லித்தருகின்றார்கள். மனதை மனதால் ஆராய்வது பற்றி சொல்லித்தரப்படுகின்றது. காயகல்பப்பயிற்சி எனப்படும்( Anti Aging) மிகப்பழமையான பயிற்சிநெறி. இலகுவான முறையில் சொல்லித்தரப்படுகின்றது.

இவற்றை கைக்கொள்வதற்கும் உள்ளகப்படுத்துவதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்பது போல இவற்றை அறிவதற்கும் மேற்கொள்வதற்கும் இறைசித்தம் தேவையாயிருக்கின்றது.

எனக்கு சில விடயங்கள் பிடித்துப்போய் இருக்கின்றன.விலகி விலத்திப் போய் இருப்பவர்களை எல்லாம் நினைப்பில் பதியன் இட்டிருக்கின்றேன்.நெஞ்சார நினைவில் இருத்தி இருக்கின்றேன். “வாழ்க வளமுடன்” என்று இப்போது கற்றுத் தரப்படுவதற்கு முன்பே வாழ்த்தி வணங்கி இருக்கின்றேன்.அன்பை மீறிய ஆயுதம் எதுவும் இருக்காது.

நமது முன்னோர்களின் யோகக்கலையும் பிராணாயாமமும் மேலைத் தேசத்தவர்களால் விரும்பி வரவேற்கப்பட்டு கைக்கொள்ளப்படுகின்றன.அவர்களுக்கு அதன் மகத்துவம் புரிந்திருக்கின்றது.எங்களவர்கள் யோகத்தை ஆன்மிகத்துள் அடக்கி ஒதுக்கி விட்டார்கள்.

வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மன்ற தொடர்புகள்.

இந்திய முகவரி

26, II Seaward Road, Valmiki Nagar
Thiruvanmiyur, Chennai – 600041

SKY Trust UK
‘Wavertree’, 6 Hillcroft Avenue
Pinner
Middlesex HA5 5AW,
United Kingdom,

எனக்கு பயிற்சி தந்த லட்சுமணன் ஐயாவின்  பேட்டி.

*********************************************************************************************

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்