ஆருத்ரா எழுதியவை | ஓகஸ்ட் 25, 2012

ஒரு குருடனின் நிறப்பிரிகை.

அமாவாசை இருட்டுக்கும்
அப்துல் காதருக்கும்
வெளிச்சங்கள் குறித்த
விவாதம் கிடையாது.

பூமியின் ஆதி இருப்பு
கறுப்பெனவும்
இருட்டெனவும்
கலகம் செய்கிறது அறிவியல்.

தம்மை
நிறப்பிரிகைகளுக்கு
உட்படுத்தாத வானவில்
குறித்து வானங்களுக்கு
அதீத கவலை.

மல்லிகைகளும், ரோஜாக்களும்
இதற்காக
காலம் நெடுக உட்கார்ந்து
கதைத்துக் கொண்டிருப்பதில்லை.

ஈஸ்ட்மென் கலர்களுக்கு
முந்திய கறுப்பு வெள்ளைகளில்
அஞ்சலிதேவியும்
சரோஜா‌‌தேவியும்
கனவில் வந்தார்கள்.

தாத்தாக்களுக்கு
அவர்கள்  உடுத்த
சாறி குறித்த
சஞ்சலம் கிடையாது.

பள்ளிச் சீருடையின் அழகு
வர்ணங்களின் வர்ணாச்சிரமங்களுக்கு
புரிவதேயில்லை.

எல்லாவற்றையும்
தொலைத்த குருடனை
‌மின்னல் வெளிச்சம்
கண்ணைப் பறிப்பதில்லை.

குருடனுக்கு ஏது
கனாவும்   வினாவும்?

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

ஆருத்ரா எழுதியவை | ஓகஸ்ட் 15, 2012

ஆதிப்பூக்கள்.

அந்திமந்தாரை,கனகாம்பரம் என்று உங்கள் ஊரின் ஆதிப்பூக்களைத் தேடி நீங்கள் பெருமூச்சடைகையில்,ஒரு ஆர்க்கிட் பூச்செண்டை அல்லது   ஜெர்பரா ஒற்றைப் பூவை   உங்கள் கையில்  கொடுத்து மேடையில் உட்கார்த்தி வைத்து விடும் மாநகரம் –வண்ணதாசன்.

மேடையில் உட்கார்த்தித்தான் வைத்துவிட்டது மாநகரம். இறங்கி விட முடியவில்லை. “பளிச்” வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்குள் பயணப்பட்டு விடுவோமோ என்று பயமாகத்தான் உள்ளது. புலம் பெயர்ந்த வாழ்க்கைச்சூழலில் அகப்பட்டுக்கொள்கின்ற ஒவ்வொருவரும்  பின்னாட்களில்  சொந்த ஊர்களுக்கு திரும்பி வாழ்ந்து விட முடிவதில்லை.பொருளாதாரம், அவர்  தம் பிள்ளைகளின் கல்வி,வசதிப்பட்ட    வாழ்க்கைமுறை   எல்லாம் தான்   ஒரு பூச்செண்டாக கைகளில் உட்கார்ந்து விடுகின்றன. பிடிக்கவில்லை என்று ஒரு  போதும்  தூக்கி எறிந்து விட்டு போக மனம் அனுமதிப்பதில்லை.

ஆதிப்பூக்கள் கனவாகவே போய் விடுகின்றன. அகதியாகுதல் ஒரு பொருள் கொண்ட சொல் இல்லை. அர்த்தப்படுத்தினால் நிறைய அர்த்தங்கள். சொந்த ஊரினின்றும் நீங்குதல், உறவினின்றும் விடுபடல் ,சந்தோசங்களை முற்றிலுமாக தொலைத்து விடல் என நீள்   வரிசை கொள்கின்றன அர்த்தங்கள்.

ஆதிப்பூக்கள் அழகுடன் அமைதியானவை. பெரிய பளபளப்பு,ஜிகினா தந்திரங்கள் எதுவும் அதற்குத் தெரியாது. வேலிக்கரையோரம் சிவப்புச் செம்பரத்தை, மஞ்சள் செம்பரத்தை, அடுக்குச் செம்பரத்தை என்று அழகாக பூத்துக் குலுங்கிய செடிகளுடன், கிணற்றடி வேலி மறைப்பில் பெயர் தெரியாத கொடி மரத்தில் நீலப்பூக்களும் மழை நாட்களின் ஈரலிப்பை இதழ் தாங்கி பூத்திருக்கும்.

பூக்களின் வண்ணங்கள் கூட அதற்கு ஒரு அடையாளம் தான். மலர்ந்திருத்தல்,இதழ் விரிந்திருத்தல் தான் முக்கியம். தங்களது மகிழ்ச்சியை வெளிப்பரப்பில் காட்டிக் கொள்கின்ற அந்த தருணத்து அழகு தான் அவைகளை தனித்து அடையாளப்படுத்துகின்றன.

மாமரங்களின் சோலையாகக்  காட்சியளிக்கும்  சாவகச்சேரிக்கு மாம்பூக்களும்  அழகுதான் . ஒரு பருவத்தில்  மரம்  முழுக்க மஞ்சள்   இறைத்து தெளித்த  மாம்பூக்கள்  பிறிதொரு  பருவத்தில் நிலத்தில் சுயவரைபாக கோலமிட்டு விடுகின்றன. ஆழ்ந்த மோனத்தில் பகற்பொழுதில்  அசையாத காற்றில் காட்சி அளிக்கும் மாமரம், பின்னேரப் பொழுதுகளில் ஈரலிப்பை ஏந்திய காற்றின் அழுத்தத்தில்  அசைந்தாடுவது, வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத எங்களது    மனக்கிடக்கையை            குறித்த ”ஆதிப்பூக்களின்” தேடல்களாக விரிகின்றன.

ஒவ்வொரு  தடவையும் கண்டி வீதி  வழியாக நுணாவில் பயணப்படும் பொழுதுகளில் போலீஸ் நிலையம் முன்னால் இருந்த வீட்டில் பச்சையும் வெள்ளையும்   கலந்து   அழகாக இலை  விரித்த அந்த   பெயர்   தெரியாத  செடி என்னை   இம்சைப் படுத்திக் கொண்டே   இருந்தது.   எங்கள் வீட்டு முற்றத்தில் வேலிக்கரைகளில் குரோட்டன்களுடன் அதுவும் கூடவே இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்புடன், “ஒரு தடி வெட்டித் தருவீர்களா?” என்ற ஐயப்பாடு பெரிதானதால்   கேட்காமல்    நீண்டு      கொண்டே போயின காலங்கள்.

சாவகச்சேரி போலீஸ் நிலையம் 84 ம் ஆண்டு தாக்கப்பட்டபோது அருகிலிருந்த அந்த வீடும் முழுச் சேதாரத்தோடு ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடிப் போயிற்று. நானும் எனது பெருவயது நண்பரும் ஓர் மெல்லிருட்டில் தயாரானோம். வேலியோரம் என்னை நிறுத்தி வைத்துவிட்டு பெருவயது நண்பர் வேலி பாய்ந்து அந்த மரத்தின் பதியனிட தடி வெட்டித்தந்ததோடு எங்கள் வீட்டு மரங்களுடன் புதியதாக இலை விரித்தன பச்சை,மஞ்சள் கலந்த வண்ணக் கோலங்கள்.

”போலீஸ் ஸ்டேஷன் மரம் ”என்றே எங்கள் வீட்டில் அழைக்கப்பட்ட அதன் கிளைகள் பக்கத்து வீடுகளிலும் அழகை அள்ளி இறைத்தன. அதனை ஒத்த பச்சை மஞ்சள் கலந்த செடியை வெள்ளவத்தை வீட்டில் கண்டபோது என் முக ஆச்சரியத்தை கண்ட அம்மா சொன்னாள் “போலீஸ் ஸ்டேஷன் மரம்” . ஆதிப்பூக்களால் கண் கலங்கிபோயிற்று மனம்.

ஒவ்வொரு வெள்ளி பின்மாலை நேரங்களில் வாரிவநாதர் சிவன் கோவிலுக்கோ,பெருங்குளம் பிள்ளையார் கோவிலுக்கோ சென்றீர்களானால் மென்பச்சை நிறத்தில் வேப்பிலை கருக்குடன் கூடிய நீள் இலையுடன் நீள் கூம்பு மஞ்சள் பூக்கள், சிறு காற்றசைவில் அதன் மென் சுகந்தம் உங்கள் ஆயுசுக்கும் மறக்காது. என் ஆயுசுவுக்கு இன்றளவும் மறக்கவில்லை.அதன்  பெயர்   பொன்னொச்சி.

இன்றளவில் ”ஆதிப்பூக்கள்” என்பது பெருங்கனவுகள் தான். பெரு நினைவுகள் உங்களைத் துரத்தி துரத்தி அடிக்கும். பெரு மூச்சடைய வைக்கும். என்னை கரையேற்றி விடுபவையும், காலமாக்கி விடுபவையும் கனவுகள் தான், பெரு நினைவுகள் தான்.

அதிகாலைக்   கனவுகளால் கரைந்து போயிற்று, தொன்னுாறுகளை அண்டிய காலமாகிய காலம்.    முழுதும் மறந்திருக்க முடியாத ஊரின் நினைவுகளுடன் நண்பர்களையும் பிரிந்திருந்த அந்த அவக்காலத்தின் அதிகாலைக் கனவுகள் – நான் நுணாவில் வீதி வழி பயணிப்பதை, தொடர்ந்து பயணிப்பதாகவே நிகழ்த்திக்கொண்டு இருந்தன.   என்னால் ஒருபோதும் வைரவர் கோவிலடியைத் தாண்டி அப்பால் போக முடிந்ததில்லை. அது ஒரு மீட்சிமைப்படுத்த முடியாத   ஒரு   நீண்ட துயரின் படிமமாக கனவின் நெகிழ்வாக ஆகிப் போய்விட்டது. அவ்வளவில்   எனக்கு அந்திமம்   நிகழ்ந்திருந்தால்   அதனை அண்டிய இடங்களில் அலைந்து கொண்டிருக்கப்  போகின்றோமோ  என்று வியாபகம் கண்ட   எண்ணம் மிக   அண்மையில் முடிந்து போயிற்று.

2010 இன் இறுதியில் விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்றிருந்த நான்  பக்கத்து வீட்டில் இரவலுக்கு சயிக்கிள் வாங்கி டச்சு வீதி, பூபதி டீச்சர் வீட்டு ரோட், முருகமூர்த்தி கோவிலூடாக இந்துக் கல்லூரி, கண்டி வீதி வழியாக தேவேந்திரா-ஆஸ்பத்திரி, நவீனசந்தை கட்டிடத்தொகுதி, தொடர்ந்து பயணித்து நுணாவில் வைரவ கோவில் அதற்கு அப்பாலும் போக முடிந்தது. தேவை நிறைவு அடைந்தது ஆன்ம ஈடேற்றம் கிட்டியது. இனிமேல் அதிகாலை கனவுகளில் நுணாவில் ஊடாக பயணிக்கப் போவதில்லை. திடுக்கிட்டு முழித்து கண்கலங்கத் தேவையில்லை.

தேமாக்கள் கூட ஆதிப்பூ வகையில் அடங்குபவை. சாவகச்சேரி இந்துக் கல்லூரி மதிலோரம் பூத்திருக்கும் அழகிய தேமாக்களால் அழகிழந்து போயினர் நடமாடும் தேவதைகள்.

நீங்கள் தேடுவதைப் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வரமும் வாழ்வும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நினைவுகள் யாவும் ஆதி முடிச்சுகளில் முட்டி மோதி அவிழ்ந்து விடத் துடிக்கின்றன. கனவான இருப்புக்கள் காலத்தின் பின் பதிவை முகிழ்த்து விடத் துடிக்கின்றன.

“வெடிபலவன்” என்று சொல்லப்படுகின்ற வேலி யோரத்து சிறு மரத்து பூவை எச்சில் தடவி வைத்திருந்தால் ” பட், பட்”டென்று வெடித்துச் சிதறும். அது பூ வகையைச் சார்ந்தது தான். அதன் ஆதார காரணம் இனப்பெருக்க வித்துக்களை ஊர்முழுக்கப் பரப்புவது தான். எனிலும் எங்கள் சிறு பராயத்து பால்ய நினைவுகளே நல்லூரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் விதைக்கபபட்டிருந்தன.

நல்லுார் திருவிழா நாட்களில் துளசி அக்கா வீட்டில் தங்கும் பொழுதுகளில் எங்களை விட ஒருவயது மூத்த அவள் சிறுகைபற்றி அழைத்து சென்று வேலியோர கதிகால்களின் அடியில் முளைத்திருந்த வெடிபலவனை பிடுங்கி வந்து தண்ணீர் தொட்டிக்குள் போட்ட போது ஆச்சரியமான ஆச்சரியம் பட் பட்டென்று வெடித்துச் சிதறின. அன்று மாலை முழுதும் வெடிபலவன் தேடி வீதி வழி அலைந்தும், பிடுங்கி வந்து நீர்ப்பரப்பில் இட்டதும், அதன் சிறு சிறு டப் டப் சத்தத்தில் மகிழ்ந்ததுமான பொழுதுகள் இனி வந்து வாய்க்கப் போவதில்லை. தனது ஆசைச் சேகரிப்பாய் வைத்திருந்த காந்தத்தை வி டைபெறும் நாளில் தந்ததும் கண்கலங்கி நின்றதுமான பொழுதுகளை சென்னையில் புறநகரப் பகுதியில் வசிக்கும் துளசி அக்காள் மறந்து பல நாட்களாகிறது.

ஆதிப் பூக்கள் என்பது பின்னோக்கி வாழ்தல் குறித்த ஒரு குறியீட்டுச் சொல் என்பது இப்போது விளங்குகின்றது. அவை தனியே இதழ் விரித்த, மலர்ந்திருந்த பூக்களைப் பற்றிய தனிக் கவனஈர்ப்பு அல்ல என்பதும், பால்யம் குறித்த பதிவுகளின் தொகுப்பு என்பதும் விரிவான வியாக்கியானம் ஆகித் தொலைக்கின்றன.

சுருட்டுத் தொழில் புரியும் தொழிலாளர்களால் தங்கள் தின சேகரிப்பில் சேர்த்து வைத்த பணத்தில் ஞாயிறன்று சிறுமீன்கள், இறால், சிறு நண்டு, பலாக்கொட்டை, பயற்றங்காய் “கள்ளு வாய்க்கு சுள் உறைப்பு” என பொடித்த மிளகாய், மேற்பரப்பில் தெளிந்த ஒடியல்மா இட்டு கரைத்து ”வத வத” வென்று கொதிக்கும் மீன்கூழின் ஆதிச் சுவை எங்கள் நாக்குகளுக்கு எப்போதாவது தான் வாய்கின்றது.

நக்கல், விளாசல், நையாண்டி, எள்ளல் என முசுப்பாத்தி கலந்த அந்த தொழிலாளர்களின் இட்டுக்கட்டி கதைத்து சிரிக்கும் மனப் பரிமாற்றம் மற்றவர்க்கு வாய்க்காதது. இன்றளவும் சுருட்டுச் சுப்பையாவும், அப்பையா அண்ணையும், சிலாபம் சுருட்டுக் கொட்டிலில் சீவித்திருந்து விடுமுறைக்கு மட்டுவில் சென்று கிணற்றில் வீழ்ந்து வாழ்வை முடித்துக்கொண்ட குமாரண்ணையும் அடிமட்டத்தின் ஆதிக்குடிகள். நகைச்சுவையின் நாயகர்கள். அவர்களது இட்டுக்கட்டி கதை சொல்லும் திறன் அவர்களுக்குரிய தனித்துவ அடையாளம்.

புலம் பெயர் தேசத்தின் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மஞ்சி மலிபன் பிஸ்கட்டுகளும், கண்டோஸ் என்றழைக்கப்படுகின்ற சாக்லேட்டுகளும், தோலகட்டி நெல்லிகிரஸும், நெக்டோ சோடாவும், பனங்கிழங்கும் நினைவு அடுக்கில் நின்றாடும் உங்கள் ஆதிச்சுவைக்கு உங்களை அழைத்துச் செல்கின்றன

இவற்றை விட தரத்திலும் சுவையிலும் சிறந்த பிஸ்கட்டுகளும், குளிர்பானமும் மிக நெருக்கமாக கிடைத்தாலும் எல்லோருக்கும் ஆதிச்சுவை பற்றிய பிரஞ்ஞை அதிகமாகவே பாதித்திருக்கின்றது.

இன்றளவும் சூடை மீன் குழம்பிற்கும், சிறு மாங்காய்ச் சொதிக்கும் அல்லல்ப்பட்டு ஏங்கித் தவிக்கும் நாக்கிற்கு KFC யும் MC DONALDS உம், PIZZA BURGER உம் ஆதிச்சுவை அளிக்கப் போவதில்லை.ஒவ்வொரு மனிதனும் தனது தாயின் அன்புக் கவனிப்பில் தயாரிக்கப்பட்டு -அவசரத்திற்கு சிரட்டையில் வைத்து சுவைக்கப்பட்ட பயற்றங்காய் வதக்கலுக்கும் ,முளைக் கீரை மசியலுக்கும் ஆண்டாண்டு காலம் ஏங்கித் தவிக்கப் போகின்றான்.

தாயோடு அறுசுவை போம்! தந்தையுடன் கவனிப்பு போம்! ஊரோடு நினைவுகள் போம்.

                                         *****************************************************************

வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் வரையும் எஸ். கல்யாணசுந்தரம் இடையிடை தன்னை கல்யாணியாகவும் காட்டிக் கொள்வதுண்டு. தமிழ்நாட்டின் திருநெல்வேலி சொந்த ஊர்.

“உயரப்பறத்தல்” சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையின் சிலவரிகளே என் பதிவின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. மிக நுட்பமான சிறுகதைகள் உயரப்பறத்தலில் அடங்கியுள்ளன. ” ஈரம் , அச்சிட்டு வெளியிடுபவர்கள்” வாசித்தளவில் வண்ணதாசன் என்னுள்   உயரப்   பறந்து   கொண்டுள்ளார்.   நானும்   உயரப் பறக்க  விழைகின்றேன்.  – ஆருத்ரா

ஆருத்ரா எழுதியவை | ஓகஸ்ட் 8, 2012

ப.மா சங்கமும் உளுந்து வடையும்.

பழைய மாணவர்சங்க ஒன்றுகூடல்கள், விழாக்கள் யாவும் வடையின்றி அமைவதில்லை எனவும் அவ் ஒன்று கூடல்களில் கலந்து கொள்பவர்கள் வடைகளை தின்று தீர்த்துவிட்டு கலைந்து விடுவதாகவும் என் பெரிய மனது அபிப்பிராயப்பட்டுக் கொள்கின்றது. மெதுவடையுடன் தேனீர் விருந்துபசாரமும் நடைபெற்று, மீதமாக நேரமிருந்தால் சங்கச்செயற்பாடுகள் பற்றி கதைத்துக்கொண்டு கனவான்கள் கலைநிகழ்வுகளையும் ருசித்துக்கொண்டு வெளியேறி பாடசாலை பழையமாணவர் சங்க நிகழ்வுகளுக்கு முடிவுரை எழுதிவிடுவதாக, பார்த்துக்கேட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஊகித்துக்கொள்ள முடிகின்றது.

அவ்வாறே ஒரு பழையமாணவர் சங்கத்தை கொண்டிழுத்து கோட்டைவிட்டவர்கள் என்ற தகுதி தராதரத்தோடு ஒரு துன்பியல் நிகழ்வு அரங்கேற்றம் செய்யப்படுகின்றது. பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் நினைவுகள் துளசி அக்காவின் பெருவடையோடு நினைவு கூரப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஏதோவொரு பாடசாலையின் ஒன்றுகூடலும், நிறைவு விழாவும் நடந்தெய்துவதாக தெரியவருகின்றது. பழையமாணவர் சங்க ஒன்றுகூடல்களும், விழாக்கள் பற்றிய செய்திகளும், காலம்-நடைபெறும் திகதி, விழாக்களின் நிகழ்ச்சி நிரல்,பிரதம விருந்தினர் பற்றிய தரவுகளுமாக முகநூல்கள் மூலமாக செய்திகள் தெரியப்படுத்தப்படுகின்றன. கேட்பதற்கு அறிவதற்கு ஆசையாகத்தான் இருக்கின்றது. எந்தப் பாடசாலையை சேர்ந்தவர்கள்? எந்த வருடத்தில் கற்றுத்தேறினார்கள்? பாடசாலைகளின் ஆக்கப்பணிகளில் இவர்களின் பங்கு என்ன? என வினவுவதற்கும், அறிவதற்கும் நிறையவே இருக்கின்றன.

பாடசாலை ஒன்றுகூடல் விழாக்களில் இவர்கள் எல்லாம் தொலைத்ததில் இருந்து மீளப் பெற்றுக்கொள்கிறார்கள் இளமையை, கனவுகளை எல்லாம். விட்டதைப் பிடிப்பதென, ஒரு நாள் கூத்தாக தொலைந்து போகின்றன ஒன்றுகூடல்களும், ஆண்டு விழாக்களும். எனக்கென்னவோ இளவயதுக் கொண்டாட்டங்களுக்கு உரிய களமாக புலம்பெயர்ந்த தேசத்து பழைய மாணவர் சங்கங்கள் செயற்படுவதாகவும், கனவின் இருப்பை மீட்சிமைப்படுத்தும் தளங்களாக இவை காணப்படுவதாகவும், மிக அரிதாக சில பழைய மாணவர் சங்கங்கள் பாடசாலை வளர்ச்சிக்கு நிதியுதவி அளிப்பதாகவும் எனது சிறுபுத்திக்கு உறைக்கின்றது.

நாங்கள் பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து துளசிஅக்காவின் உப்பிப்பெருத்த ஓட்டைவடை சாப்பிட்டு தேனீர் குடித்த கதையாக எங்காவது ப.மா.சங்கங்கள் ஆகியிருந்தால் நாங்களே அதற்கு முன்னோடி அல்லது சம கால சந்தர்ப்பவாதிகள் என தோற்ற உணர்வும் குற்ற உணர்வும் கலந்தடிக்கின்றன. என் செய்வோம் பராபரமே!

இன்றளவும் பேனா பிடித்து ஏதோ கிறுக்குகின்றோம் என்றால் நாங்களும் சிற்றறிவு எட்டப்பட்ட பெருந்தகைகள் என்பதையும், எங்களுக்கும் கல்வி புகட்டிய வாத்திமார்கள் இருந்தார்களெனவும், அதற்கு களமாக ஒரு பாடசாலை இருந்ததெனவும், பாடசாலை விட்டு வெளியேறிய வகையில் அதற்கு நாங்கள் பழைய மாணவர்கள் என்பதையும் நான் சொல்லாமலேயே நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்கள்.

அப்படியான வகையில் நாங்களும் அந்தப் பாடசாலைக்கு கைமாறு செய்ய காலம் கனிந்து வந்தது. 2004 என நினைவு. அந்த வருடத்து நாளொன்றில் ZURICH VOLKSHAUS சிறுமண்டபத்தில் தனது கைக்காசை செலவு செய்து மண்டபம் பிடித்து நிறைய மெனக்கெட்டு நண்பர் சிவநேசன் என்னையும் அழைத்திருந்தார்.எல்லோருக்கும் வருந்தி அழைப்பு அனுப்பியும் கிட்டத்தட்ட இருபது பேர் வரை வந்திருந்தனர். இருபதுக்கு ஏன் கிட்டத்தட்ட? இருபது பேர் மட்டுமே வந்திருந்தனர்.பழைய மாணவர் சங்கம் எப்படி அமைய வேண்டும்? தலைவர் செயலாளர் செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது எனவும் அது குறித்த குறித்த விபரங்களை வெளியிடுவது எனவும் அன்றைய நாளின் நிகழ்ச்சி நிரல் மனதுக்குள் படமிட்டிருந்தது. சிவநேசன் அது குறித்து நிறைய திட்டமிடல் செய்திருந்தார். யார் யார் அது குறித்து ஒழுங்காக செயற்பட வல்லவர்கள் ? யாரைப் பிடித்து காரியமாற்றலாம்? வாய்ச்சொல் அருளுபவர் எவர்? என்பதையெல்லாம் சிவநேசன் மிகத் தெளிவாக அறிந்திருந்தார்.

அதனால் தான் பத்தோடு பதினொன்றாக அத்தோடு இதுவுமொன்றாக என்னையும் கூப்பிட்டிருந்தார் எனவும் வாய்ச்சொல் அருளுபவர் லிஸ்ற்றில் என்னையும் இணைத்திருந்தார் எனவும் சங்கசெயற்குழு உறுப்பினர் தெரிவில் நான் இடம்பெறவில்லை என்பதாகவும் நான் மனங்கோணி விடக்கூடாதென பின்னர் என்பெயரையும் ஏதாவது பிரிவில் இணைத்ததாகவும் நினைவுகள் சொல்லிக்கொள்கின்றது.

பாடசாலைக்காலத்திலும் சரி, அதற்கு பின்னரான காலத்திலும் சரி எட்டி நின்று “விடுப்பு ” பார்க்கும் கைங்கர்யமே எனக்கு இலகுவாக ஆகி இருக்கின்ற காரணத்தால் உறுப்பினர் தேர்வு சமயத்திலும் அதற்கு பின்னரான ஒன்றுகூடல்களிலும் என்னை இணைத்த, இணைக்காதற்கு நான் கவலைப்பட்டுக்கொண்டதில்லை; மனங்கோணிக் கொண்டதில்லை. செயற்படுபவர்கள் செயற்பட உதவி ஒத்தாசை பணிகளில் அணிலாக என் சிறு பங்கும் இடம்பெற்று இருக்கின்றது அல்லது தவிர்த்து விடக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றது.

விடுப்பு பார்ப்பது இலகுவான மேம்போக்கான காரியம். அதேசமயம் மிகச் சுதந்திரமானதும் கூட. விமர்சனங்களை மிக எளிதாக முன்வைக்கலாம். விருப்பம் இல்லாதவிடத்து வெட்டிக் கொள்ளலாம்.

ப.மா.சங்கத்தை ஆரம்பிப்பது, அதைக் கொண்டிழுப்பது, இடையில் எழக்கூடிய பிரச்சனைகளை சமாளிப்பது என எதிலுமே போதிய முன் அனுபவத்தை கொண்டிராதபடியால் இவை எல்லாவற்றிலும் போதிய முன்அனுபவம் “வொய்ஸ்” கொண்டிருந்த கணா மாஸ்ரர் அவர்களையும் முதல் சந்திப்புக்கு நண்பர் அழைத்திருந்தார். “கணா” எனவும் “கணபதிப்பிள்ளை மாஸ்ரர்” எனவும் அழைக்கப்படுகின்ற எங்கள் அன்பிற்குரிய கணபதிப்பிள்ளை யாழ்நகரில் சயன்ஸ்சென்ரர் வைத்திருந்தவர். சூரிச் நகரிலும் தற்போது தனியார் கல்வி நிலையம் வைத்திருப்பவர். உடுப்பிட்டி அமெரிக்க மிஸன் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தை வெற்றிகரமாக கொண்டிழுக்கும் முன்னோடி என்ற வகையில் எங்கள் பாடசாலை ப.மா.சங்க ஆலோசனைகளுக்கு புத்தி கூறல்களுக்கு யாவுமாகி நின்றார். போற்றி!

முதல் நாள் சந்திப்புகளுக்கு பிறகு அடுத்தடுத்த அமர்வுகளில் சங்கம் சற்று தளிர்நடை போடத் தொடங்கி இருந்தது. சங்க நடைமுறைகளுக்கு ஒத்து இயங்கக் கூடிய யாப்பு உருவாக்கப்பட்டது. ஓவ்வொரு அமர்விலும் சிறு சலசலப்பும், கணாவின் கைங்கர்யத்தில் சமாளிப்பும் இடம்பெற்று ப.மா.சங்கம்”பரவாயில்லை” சங்கமாக மாறி சிறுநிதி, ஆளணி பெருக்கமுள்ள நிலையை எட்டியிருந்தது.

நினைத்துப்பார்த்தால் ஒவ்வொரு ஆரம்பமும் ஒருபுள்ளியில் இருந்து தொடங்குவதாகவும் – தளிர்நடை, வளர்ச்சி,பெருநிலை என்றபடிகளை தாண்டி உன்னதம் பெற்றவுடன் , கணக்காக “கண்காணிப்பு” செய்தே நினைத்ததை எட்டி விடலாம் எனவும் என் விடுப்பு பார்க்கும் மனம் சொல்லிக் கொள்கின்றது. நண்பர் சிவநேசன் தான் ஒவ்வொரு காரியமாற்றவும் செத்து பிழைத்ததாகவும், நான் இன்னும் கூடமாட நிறைய உதவி ஒத்தாசை பண்ணி இருக்கலாம் எனவும் அபிப்பிராயம் வைத்திருக்கின்றார்.

என்னால் யாருடனும் ஒத்துப்போக முடிவதில்லை. குழுநிலைச் செயற்பாடுகளுக்கு நான் பொருத்தமானவன் இல்லை. உண்பது, உறங்குவது போன்ற தனிநபர் செயற்பாடுகளுக்கு மாத்திரமே பொருத்தமானவன் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை

சங்க அங்குரார்ப்பண தேதியில் இருந்து ஒரு வருட நிறைவுக்குள் ஆண்டு விழாவையும் நடாத்த பெரிதும் ஆசைப்பட்டார் நண்பர். அவர் ஆசைப்பட்டது போலவே காலமும் கனிந்து வந்தது அல்லது திருவருள் கூடிநின்றது.

அவ் ஆண்டு விழாவில் சுவிஸ் நாட்டில் வசிக்கின்ற அனைத்து பழைய மாணவர்களின் முகவரிகளையும் தேடிப்பிடித்து அவர்களது வருகையின் முக்கியத்துவத்தையும், கலந்து சிறப்பிப்பதால் பாடசாலை வளர்ச்சிக்கு பெருமளவில் உதவ வேண்டியதன் பிரதானத்தையும், தொலைபேசி – கடித வாயிலாக தெரியப்படுத்தி இருந்தோம். நடைபெறும் கலைநிகழ்வுகளில் அவர்களது குழந்தைகளையும் பங்கேற்க வைத்து கலை-கலாச்சார ஒன்றுகூடலாக விழாவை முதன்மைப்படுத்தி இருந்தோம்.

பாடசாலையின் முன்னாள் உதைபந்தாட்ட வீரரான ஹ‌மீம் அவர்களை அட்டில்கூடத்தில் சமையலுக்கு பொறுப்பேற்க வைத்து சுவையான உணவு பரிமாற்றத்திற்கு வழிவகை செய்திருந்தார் சிவநேசன். எங்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணி அன்றைய காலத்தில் அதி சிறப்புமிக்க அணியாக யாழ்மாவட்டத்தில் திகழ்ந்தது. இளங்கோ, தயாளன், ஹ‌மீம் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியின் சிறப்பு வீரர்கள்.

ஹ‌மீம் போர்ச் சூழலில் ஊரினின்றும் வெளியேறி புலம்பெயர் தேசத்தில் ஆத்மார்த்த நட்புடன் கல்லூரியின் ஒன்றுகூடலில் அட்டில் கூடத்தை பொறுப்பெடுத்து செயற்படுத்தினார். நான் காய்கறி நறுக்கி கொடுக்கவும், கலைநிகழ்வை தொய்வின்றி நடாத்தி முடிக்க மாணவச் செல்வங்களை ஒழுங்குபடுத்தி மேடையேற்றி ஒருங்கிணைக்கவும் நியமனம் பெற்று இருந்தேன்.

பாடசாலை அதிபரின் வாழ்த்துச் செய்தியுடன் பழைய மாணவர்சங்க ஒன்றுகூடல் நிகழ்வு தொடங்கியது. பாடசாலையின் மிகப்பழைய மாணவரும், நோர்வேயில் வசிப்பவருமான ஆசிரியர் ஒருவரும் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

பாடசாலையின் இருக்கைகளை “வாங்கு” என்றும் சொல்லிக்கொள்வதுண்டு. முன்வாங்கில் உட்கார்ந்திருப்பவர்கள் வகுப்பில் முதன்மை மாணவர்களாகவும் பின்வாங்கில் வகுப்பின் “சக்கட்டைகள் “உட்கார்ந்து கொள்வதுமாக ஒரு ஐதீகம் நிலவியது. அதை வைத்து “முன்வாங்கு, பின்வாங்கு” என்ற தலைப்பிலான அடியேனின் கவிதையும் இடம்பெற்றது.

மிக இனிய ஒன்றுகூடல் அனுபவத்தையும், சொந்த ஊரின்”இன சனத்தை” ஒரேநாளில் சந்தித்த மனமகிழ்வையும், பாடசாலைக்கு தருவதற்கான ஒரு தொகை பணத்தையும் ஒரு சேரத்தந்த அந்த ஒன்றுகூடல் அந்த வருடத்துடன் நின்று போனது. தொடர்ந்து நடைபெறாமல் போனதற்கு ஆளாளுக்கு ஆயிரம் காரணம் கற்பித்துக்கொண்டார்கள்.

ஊக்கமும், ஊக்கிகளும் இல்லாமல் சோடா உடைத்தவுடன் பொங்கி அடங்கிவிடுவது போன்று ஒன்றுகூடல் ஒருவருடத்துடன் நின்று போனது.

மிக அண்மையில் லண்டனில் அதே பாடசாலையின் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடலும், கலைநிகழ்வும் நடைபெற்றதாக நண்பர்கள் தெரியப்படுத்திய போது இங்கே தின்றுதீர்த்த துளசி அக்காவின் ‌பெருவடையை ஒத்ததான பவளம் அக்காவின் மெதுவடையை ருசிக்காமல் போன கவலை என்னுள் ஆட்கொள்கின்றது.

வடை போச்சே!!!!

வருத்தம்: கட்டுரையின்  தேவை  கருதி   பிரான்ஸ்  ப.மா  சங்க   ஒன்றுகூடல்  அழைப்பிதழ்  பயன்படுத்தப்படுகின்றது. பொறுத்தருள  வேண்டும்.

ஆருத்ரா எழுதியவை | ஜூலை 9, 2012

“கடுதாசிக்” கடிதங்கள்.

எங்களுக்கு ஐந்தாம் வகுப்பிலோ, அதற்கு முன்னரான வகுப்பிலோ கடிதம் எழுத கற்பிக்கப்பட்டது .கடிதம் எழுத்துப் பரிமாற்ற ஊடகத்தினுாடான எண்ணப் பரிமாற்றம். மனதின் பிரதிவிம்ப படிமங்களாக கடிதங்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு நாள் காலையும் அழகாக விடிகின்றது. கடிதங்கள் வரக்கூடும் என்ற நினைப்புடன் வீதியை வெறித்துப் பார்த்த ஞாபகங்களுடன் தபாற்காரரை நோக்கித் தவமிருக்க ஆரம்பிக்கின்றன காலைகள். ஒரு மணி ஓசையின் அழைப்பில் ”கடித வருகை” வானவீதியெங்கும் அறிவிக்கப்படுகின்றது .அவ்வளவு மகத்துவம் கடிதங்களுக்கு. அது அன்றைய காலம். குறும் செய்திகளும், முகநூல்களும் மனிதனின் ஆறறிவுக்கு எட்டாத காலம்தான் போதிய காலம். போதிய காலத்திற்கு எதிர்மறைதான் போதாத காலம்.

அப்போதைய காலம் எதற்கும் நேரஅட்டவணை கிடையாது .உங்களுக்கு இயன்றதை இயன்ற பொழுதில் செய்து முடிக்க அவகாசங்களும், அன்புகளும் நிரம்பவே இருந்தன.மனதின் கண் சேமிக்கப்படும் பிறந்த நாள் நினைவுகளும், திருமண நாள் நினைவுகளும் இலத்திரனியல் சாதனங்கள் முன் வந்து நினைவூட்டத்தேவையில்லை .மறப்பவர்களுக்குத்தானே தனியே நினைவூட்டல் தேவைப்படுகின்றது .

யாரும் ஆத்திர அவசரத்தில் ஓடித்திரிவதில்லை.மனிதனுக்கு பிரமாண்டக்கனவுகள் ஏதும் கிடையாது. பக்கத்து ஊருக்குப் பிரயாணப்படுவதற்கே நாள் கணக்கில் யோசித்து பயண ஏற்பாடுகளும், மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்ட காலம்.காலையைப் பருகாமல் யாரும் தேனீர் பருகிய காலமன்று அது . நின்று நிதானிக்க காலங்களும் அக்கறைகளும் காத்திருந்து களித்திருந்த காலம் .கடிதம் வரைவது அற்புதத்தின் அழகியல்.யாருக்கு எழுதுகிறோம் என்பதைப் பொறுத்து உள்ளடக்கமும், உபரிச்செய்திகளும் அணிவகுக்கின்றன. அப்பாவிற்கான உள்ளடக்கமும்,ஆசிரியருக்கான உள்ளடக்கமும்வேறுபடுகின்றன.காதலிக்கான உள்ளடக்கம் விரிதெரி சொற்களால் இட்டு நிரப்பப்படுகின்றன .

கடிதம் வரைவது மூன்று தனிப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு  எங்களுக்கு கற்பிதம் செய்யப்பட்டது .

1.ஆரம்பம் விளிநிலை – யாருக்கானது -அதற்கான முகமன் ,சுகம் விசாரிப்பு.

2.உள்ளடக்கம் (சாராம்சம்)-எனக்குப் பணம் தேவை, வேலை கிடைத்து விட்டது, சச்சரவுகள்- பின்னணிகள், சரசின் உரசல்  எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். கடிதத்தின் தேவையை உள்ளடக்கத்தின் ஊடாக வெளிப்படுத்துதல்.

3.கடித முடிவு:- சீக்கிரம் பணம் அனுப்பிவை , வேலை கிடைத்துவிட்டது- ஊருக்கு தம்பட்டம் அடித்து பெண் தேடு, சரசை சமாளிக்க முடியவில்லை -இயலாமை என்ற தொனிபொருளுடன் இவ்வண்ணம், இங்ஙனம், உங்கள், உங்கள் பிரியமுள்ள ஏதோ ஒன்று பிரயோகித்து விடை கொடுத்தல்.

கடிதம் எழுத கற்பிக்கப்பட்ட நாளின் மறுநாள் வீட்டிலிருந்து கடிதம் எழுதி வந்து காண்பித்தோம் .கடித உள்ளடக்கத்தில் சிறுபராய சிந்தனைகள் ,கனவுகள். நாய் குட்டி போட்டது ,சேமித்து வைத்த கோலி குண்டுகள், உண்ட உணவு என கடித வரிகள் நீண்டன.

கடிதம் எழுதுவது அன்றைய அளவில் மிகப்பெரும் தேவையுடைய ஊடகம். முகமன், ஓலை,திருமுகம்,பிரெஞ்சு ஆட்சியில் துபாசாகப் பணி புரிந்த ஆனந்தரங்கம்பிள்ளை தனது நாட்குறிப்பேட்டில் “லிகிதம்” எனவும் கூறுவது கிராமப்புறங்களில் சாதாரண வழக்கில் கூறப்படும் ”கடுதாசி”யைக் குறிக்கின்றது .

அந்தக் கடிதக் கடுதாசியை விநியோகம் செய்யவும்,வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் பெரிய- சிறிய தபாலகங்கள் இயங்கின. சாவகச்சேரி -பருத்தித்துறை வீதியின் மறு பெயர் சாவகச்சேரி நகர எல்லை வரை தபாற்கந்தோர் வீதி.

வாரத்தில் ஒரு நாளோ, மாதத்தின் இரு தடவையோ வந்து ஏகும் கடிதங்களுக்காக நாள் தோறும் காத்திருந்து தொலைப்பது வாடிக்கை விவகாரம். கட்டு எடுத்தல், கட்டுப்பிரித்தல் என எளிதான சொற்பதப் பிரயோகம் இயல்பானது. கட்டு எடுக்க முதல் தபாலில் கடிதம் சேர்ப்பது இறுதி நேர பிரயத்தனம். கட்டுப்பிரித்தல் காலை பகுதிவாரியாக தரம் பிரித்த காகிதங்களுடன் வரும் தபாற்காரரை தபால் நிலைய வாசலில் வழி மறித்தல். இவ்விரண்டு காரியங்களையும் எப்போதோ வந்து வாய்த்த தருணங்களில் செய்ததாக ஞாபகம்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு செல்லும் இரவு நேர ரயிலைக் குறிப்பது MAIL TRAIN. அதே போன்றே அங்கிருந்து இங்கு வருவதையும் MAIL TRAIN என்றுதான் அழைப்போம். அவை அதிகாலை 4 .30 க்கு பலமாகக் கூவி எஙகள் நித்திரைகளை தொலைத்தன.

சிறு வயதுக் கடிதங்களுக்கு பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை .சம்பவங்களும், அது நடந்த காலங்களும் தான் அவசியமானவை .அக்கடிதங்களில் பெரிதான விஷய ஞானமோ, பாண்டித்தியமான பதப் பிரயோகங்களோ இருந்ததில்லை .குருவிப் படம் பொறித்த 25 காசு- அசோகச் சக்கரம் பொறித்த 25 காசு கட்டண முத்திரைகளும்,15 காசு கட்டணம் கொண்ட தபாலட்டைகளும் (POST CARD ) எங்கள் காலத்தில் எண்ண விநியோகத்தை எளிதாக்கின.

அஞ்சல் அட்டைகளில் நிரம்பவிஷயங்களை  எழுதக் கை தேர்ந்த விற்பன்னர்கள் முகவரி எழுதும் இடத்தைத் தவிர முழு இடத்தையும் தங்கள் கைவரிசை காட்டப் பயன்படுத்தி இருப்பார்கள்.நுணுக்குக்காட்டி உதவியுடன் தான் சிலவற்றை வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் முடியும்.

அஞ்சலகங்களின் பிரதான சேவையாக கடிதப்போக்குவரத்து சேவையே விளங்கியது.வானொலி வைத்திருப்பதற்கு கட்டணம் கட்டும் சேவையும் இயங்கியது எனினும் “எங்கள் வானொலிக்கு எதற்குக் நாங்கள் கட்டணம் கட்ட வேண்டும்” என்ற அகலமான சிந்தனைத்தளம் அதைச் செய்யவிடாமல் தடுத்தது.

சாவகச்சேரி பிரதான தபாலகம் பிரதான ஊழியர்களுடன், பத்துப் பன்னிரண்டு தபால் விநியோகம் செய்யும் தபாற்காரர்களையும் கொண்டிருந்தது.

அதிகாலை mail train இல் இருந்து இறக்கி வரப்படும் கடிதகட்டுகள் தரம் பிரிக்கப்பட்டு காலை எட்டு,எட்டரை மணி வாக்கில் வீடுகளுக்கு விநியோகிக்க ஏரியா வாரியாக தபால்காரர்களால் எட்டுத்துச் செல்லப்படும். தபாற்கந்தோர் வீதி விநியோகிப்பாளர் கென்ஸ்மன் லேன், பிரதான வீதியை அண்டிய கிளை வீதிகள் ஈறாக கெருடாவில் வரை பயணித்து கடித விநியோகம் செய்வார்.சாவகச்சேரியின் நகரப் பெரும்பரப்பில் பெரிய தபாலகமும், நகர எல்லை தாண்டிய பரப்பில் உப தபாலகங்களும் அமைந்திருந்தன.எண்பத்து மூன்றாம் ஆண்டுவரை சீரான தபால் விநியோகம் பின்னரான காலங்களில் நொண்டியடிக்க ஆரம்பித்தது. இலங்கைக்குள் இரண்டு மூன்று நாட்களுக்குள் விநியோகம் செய்யப்பட்டவைகள், போக்குவரத்தை காரணம் காட்டி வாரக்கணக்கில் இழுபடத்தொடங்கின .

எனக்கான கடிதத் தொடர்பு எண்பத்து ஒன்பதாம் ஆண்டிலிருந்து முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. புலம்பெயர்ந்து ஐரோப்பிய மண் ஒன்றில் அகதி வாழ்க்கையை ஆரம்பித்த பிறகு தாயும், தந்தையும் உறவுகளும், நண்பர்களும் கடிதமூலம் என்னோடு உரையாடத் தலைப்பட்டனர் . கடிதங்களை வாசிப்பதாக நான் கருதிக்கொள்வதில்லை .எனக்கு அது உரையாடல் தளம். உறவின் செரிமானம் உணர்வுகளால் சூழப்பட்டு,என் கருத்தூன்றிய உணர்வுகளுடன் அவர்களின் எண்ணங்கள் இலகுவாக உரையாடத் தலைப்பட்டன.

சிறிய தங்கைக்கு கடிதம் எழுதத் தெரியாது என்றாலும் அவள் கூட அம்மா மூலம் உரையாடத் தலைப்பட்டாள்.நீண்ட பெரும் துயரின் ஆறுதல்கள் கடிதங்கள்.ஒவ்வொரு கடிதங்களும் ஒரு சுய, சுப வியாக்கியானங்கள்.காலத்தின் வாழ்வை கடிதங்கள் விளக்கி ஒரு வாழ்வாதாரப் போக்கை எனக்குள் விதைத்தன.தொலைபேசிகள் எல்லாம் சாவகச்சேரிப்பரப்பில் அறிமுகமாகாத காலங்கள். நகரசபை, போலீஸ் நிலையம், தபாலகம் போன்ற சிற்சில இடங்களில் மாத்திரமே தொலைபேசிகள் இருந்தன .இருந்தவைகளும் செத்துத் தொலைந்து (Death )போயின .எங்களுக்கு வரும் கடிதங்களின் உள்ளடக்கங்கள் மாத்திரமன்றி நண்பர்களின் கடிதங்களும் எங்களுக்கான நல்கருத்து விளம்பல்களாக அமைந்திருந்தன.நண்பர்களில் பாதிப்பேர் வடபுலத்தின் அனைத்து ஊர்களையும் சேர்ந்தவர்களாக அமைந்திருந்தபடியால், வரும் கடிதங்கள் எல்லாவற்றிலும் எங்கள் கவனக்கண் பதிந்திருந்தது .கடிதங்களின் பெரும்பகுதி சுயதணிக்கைக்கு உட்படுத்தப்பட்டவை. சொல்ல முடியாத சேதிகள் ,ஊர்ப்புலத்தின் அரசியல்,வேண்டாத கருத்தாடல் என தவிர்க்கப்பட்ட கருத்துக்களமாகவும் உறவு சார்ந்த உணர்வுப் பெருக்கமாகவும் கடிதங்கள் எமை வந்தடைந்தன .

பிள்ளையார் கோவில் கொடியேற்றம்,பக்கத்து வீட்டு மாந்தர்களின் வெளியேற்றம்,நண்பர்களது வருகை, பணம் குறித்த தேடல்கள் என கடிதங்கள் பல் சுவைக் கதம்பம். போகப் பத்து நாட்களும்,வரப் பத்து நாட்களுமென மாதத்தில் ஒன்று என அவை அருகிப் போயிருந்தாலும் மாதத்தின் மீதி நாட்களை சுகமாக்கி வைத்திருந்தவை அவைகள். சேமிப்பில் இருந்திருந்தால் அவைகள் காலத்தின் கண்ணாடிகளாக இருந்திருக்கும்.

எனது காலத்தின் கண்ணாடி 2008 , 2009 ஆக விரிகின்றது .அப்போதுதான் பெரியப்பாவின் கடிதங்கள் வன்னிப் பரப்பிலிருந்து வர ஆரம்பித்தன .எங்கேயோ தேடிப்பிடித்து எனது முகவரிக்கு வந்த முதல் கடிதம் பெரியப்பாவின் முகத்தில் அறைந்த வறுமையை ,இயலாமையை சொல்லிப் போனது .உணவுப் பொருட்கள் எல்லாம் வன்னிப்பரப்பில் பெரும் விலை ஏற்றத்துடன் காணப்பட்ட பொழுதில் ஒரு நாள் சீவியத்தை கொண்டு இழுக்கக் கஷ்டப்பட்ட வறிய முதியவரின் வாழ்வாதார தகவல்களாக, வந்த கடிதங்கள் சோகப்பரப்பை சொந்தமாக்கிக் கொண்டன.

தாயார் வழி உறவுகளுடன் பரிச்சயமான உறவைக் கொண்டிருந்த நான்,தந்தை வழி உறவுகளுடன் முதன் முதலாக கடித வாயிலாக களம் இறங்கினேன்.பிள்ளைகளால், அவர்களின்  வறுமையால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பெரிய தகப்பனார் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கடித வாயிலாக தொடர்பு கொண்டு தனது வைத்தியச்செலவு சம்பந்தமான விடயங்களை என்னுடன் பகிர முற்பட்டார். இயலாமை குறித்த நிலவரம் , எங்களது நலம் சார்ந்து கோவிலில் பிரார்த்தனை செய்த விடயங்கள், தன்னை ஒத்த முதியவர் ஒருவருடன் தான் தங்கியிருப்பதான கருத்துக்கள் என உள்ளடக்கம் விரிந்தது. நடுங்கிய கரத்தின் எழுத்துக்கள் காகிதாதி யாவும் கனன்ற துயரத்தை, வாழ்வின் பற்றுதல்களை சுருக்கமாக இயம்பின.

இன்னொருவரில் பணத்தேவைக்காக தான் தங்கியிருப்பதன் துயரமாக வரும் கடிதங்கள் மிகச்சொற்பமானவை தான் என் கைக்கு வரப்பெற்றன என்றாலும் அவை காலாகாலத்திற்கும் நினைவுப்பரப்பில் இல்லாத சோகத்தை தமக்குரித்தாக்கி கொண்டன.

கிளிநொச்சி வைத்தியசாலையில் தனது அறுவை சிகிச்சைக்காக வைத்தியர்களின் ஆதாரக்குறிப்புகளுடன் இணைத்திருந்த கடிதம்- “தான் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணம் வீண் செலவுக்கானது இல்லை” என நிறுவமுற்பட்டு,அவைகள் மிகப்பெரும் தேவைகளுக்கானது என்ற உண்மைத் தோற்றப்பாட்டை நியாயமாக்கின. என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பணத்திற்கும் அவர் மிகவும் வெட்கப்பட்டு கூனிக்குறுகியதாக இயலாமையின் சுவடுகள் நெஞ்சில் அறைந்து சொல்கின்றன.

“ஆதாரங்களை அனுப்பி என்னை சிறுநிலைப்படுத்த வேண்டாம்” என்ற   கோரிக்கையோடு, அவருக்கு நான் உதவவேண்டியதன் கடப்பாடு  பற்றியும்  பிறிதொரு  கடிதத்தில் விளக்கமுற்பட்டேன். ஆனாலும் வருடத்திற்கு மூன்று தடவை வரும் கடிதங்களில் அவர் இணைத்திருப்பது வைத்தியசாலை மருத்துவ குறிப்புகள், தனக்கான சிகிச்சை பற்றிய தகவல்கள், அவருடன் பரிவாக இருக்கும் வைத்தியர்கள்- தாதிகள் என்பதான  உள்ளடக்கங்களே.

ஒரு முழுத்தாளின் அரைப்பக்கத்திற்குள் எல்லாம் கிறுக்கி வங்கிக்கணக்கு இலக்கம் வரை குறிப்பிடப்பட்ட கடிதம் கடைசியாக வந்தது, கிளிநொச்சியை இராணுவம் முற்றுகை இடுவதற்கு முதல் வாரம். முன்னைப்போன்று தன்னால் நடமாட முடியாததான முதிர்வின் தளர்வு, நோயின் உபாதை ,நோயின் தீவிரம், அடுத்து தான் செய்ய வேண்டிய நோயிற்கான பரிகாரம் என்பவற்றை மாத்திரமே உள்ளடக்கிய கடிதத்தில் துளிக்கு கூட எனக்கும் அவருக்கும் பிடிக்காத அரசியல் கள நிலவரம் புகுத்தப்படவில்லை. மிக இயல்பான ஒரு முதிய நடுத்தரவர்க்க மனிதனின் வாதை குறித்த பதிவாக இடம்பெற்ற அந்த கடிதம்தான், எங்கள் தொடர்பாடலின் இறுதியானது என நானோ, அவரோ நினைத்திருக்கவில்லை.

“கிளிநொச்சிக்கு பணம் அனுப்பினால் பெற்றுக்கொள்ள இயலுமா”? என்று தொலைபேசியில் உரையாடிவிட்டு பணம் அனுப்பலாம் என நினைத்திருந்த பொழுதில் கிளிநொச்சி ஆட்களற்ற மனித சஞ்சாரமற்ற நினைவுப்பெருவெளி ஆகிற்று.

81ம் ஆண்டில் முரசுமோட்டையில் எனது தந்தையின் தாயாரின் (பாட்டி) இறுதிச்சடங்கில் மாத்திரமே கண்டு உணர்ந்துகொண்ட பெரியப்பாவை, இறுதிக்காலங்களில் இரண்டு வருடங்கள் வைத்திய பராமரிப்பு செலவிற்காக என்னை அணுகிய வறிய முதிர்மனிதனை, இயலாமையிலும் துயரங்களை பகிர்ந்து கொள்ளாத பண்பட்ட மனித உள்ளத்தை,தங்கியிருத்தலை சமாளித்து சமாதானப்படுத்திக்கொண்ட இயல்புநிலை மனிதனை……..

காணவில்லை. காணாமற் போனோர் பட்டியலில் மனிதம் தொலைத்த மானுடன். இனிமேல் வராத கடிதங்களுடன் தேங்கிய தபாற்பெட்டி   வெறுமைபூசி திரிகின்றது. உள்ளடக்கங்கள் ஏதுமின்றி…..

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

ஆருத்ரா எழுதியவை | ஜூன் 24, 2012

கண்ணா! உனைத் தேடுகின்றேன் வா!!

அது ஒரு ஆபத்தான அவசரமான பயணம் எனக்கு. நிழல் போல உணர்வால் எனைத் தொடர்ந்தவளை நிஜமாக காண விழைந்ததன் செயல்வடிவமாக பயணத்தை தொடர்கின்றேன். பயணம் பாதைகளை நீட்சி அடையச் செய்துள்ளது. நினைவுகள் மனதின் கண்ணெங்கும் நீந்தி விளையாடுகின்றன. காதல் என்னை கட்டியிழுத்து விரைகின்றது. இக்கரையில் இருந்து பார்த்தால் நீர்ப்பரப்பின் அக்கரையில் மினுமினுக்கும் ஒளிப்பெருவெள்ளம் ஆனையிறவு-கிளாலி இராணுவ முகாமினுடையது. எந்நேரமும் சடசடக்க காத்திருக்கும் இயந்திர வல்லூறுகளின் உயிர்குடிக்கும் தோட்டாக்கள் இக்கரையில் நிற்பவர்களை துளைத்தெடுத்து விடலாம். நீர்ப்பரப்பின் மேலே தென்னைகளூடே இன்றும் அழகான நிலவு எறித்துக்கொண்டிருந்தது. நிலவுகள் ஆபத்தில்லாதவை. உயிர் குடிக்கப்போவதில்லை. உன்னாலும் என்னாலும் தரிசிக்கப்பட்ட நிலவுகள் ஒன்றானவை. தண்மதி

நிலவு தூங்கும் நேரம்.

நினைவு தூங்கிடாது.

நினைவு தூங்கினாலும்

உறவு தூங்கிடாது.

இது ஒரு தொடர்கதை; தினம்தினம் வளர்பிறை.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்தான் இந்த ஊரைவிட்டு நீங்கியிருந்தேன். அதுவரை பாடசாலை உயர்தர வகுப்பை எட்டியிருந்த நான் வடபுலத்தின் இராணுவமுற்றுகைகள், சீரற்ற வாழ்க்கைச்சேதாரங்கள் என கணிப்பிடமுடியாத காலக்கணக்கில் தோற்க விரும்பாமல் லண்டனிற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதுவரை என் ஊர்உலகம் எல்லாம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியை மிக அண்மித்த தாமோதரம்பிள்ளை வீதி அரசடியை சார்ந்ததாகவே இருந்தது.

அது வேறு உலகம். அதில் பரீட்சார்த்தங்கள், பயன்கள் பற்றிய எதுவித புரிதலுமின்றி சூழலோடு இணைந்த சுகித்த வாழ்வு எனது. நட்பூக்கள் நிறைந்த நண்பர்கள் வட்டம் அன்பூக்கள் நிறைந்த குடும்ப இணைப்பு. பொழுது போகாக் காலங்களை சைக்கிள்கள் சமாளிக்கும். காலையில் இருந்து மாலை வரை திறந்திருக்கும் சனசமூகநிலையத்தின் வாசகசாலை. வாசகசாலையின் அரைச்சுவர்களுக்கு மேல் கம்பிவலை பொருத்தப்பட்ட சுவர்.  வெளிப்பரப்பின் காற்றை உள்ளே இழுத்து வரவும், உள்பரப்பின் நினைவுகளை வெளியே கடத்துவதற்கும், பார்வைகளால் துளைத்தெடுப்பதற்கும் அரைச்சுவர் கம்பிக்கிராதிகள் உதவின. கண்டி ஏ-9 வீதியை கடப்பவர்கள் எங்கள் கண்களை கடந்து தான் பயணிக்க வேண்டும்.

விதி வரைந்த கோலங்கள் புள்ளி வைக்காக் கோலங்கள். உயிர்க்கண்ணி வைத்த கோலங்கள். அதுவரை எங்கோ தூரத்தொலைவில் இருந்து விட்டு ஏன் எங்கள் பாதிச்சுவரைத் தாண்டிய மீதி வீட்டிற்குள் நீங்கள் குடிவர வேண்டும். முல்லைத்தீவின் பிறப்பகம் சாவகச்சேரியின் வசிப்பகம் ஆயிற்று. கண்பார்ப்பதற்கும் காது புசிப்பதற்கும் கவி ஒன்று சொல்லேன் நீ உன் கண்களால், அவை அசைவதன் ஜாலத்தால்.

.எங்கள் இருவரது வீடுகளும் ஒற்றைச்சுவரால் பிரிக்கப்பட்ட முற்றும் இணைந்த வீடுகள். பிரிந்திருந்தன என்பதைச் சொல்லி பிரிவுக்கு வழிகோலவில்லை. இணைந்திருந்தன என்பதைச் சொல்லி இணைவுக்கு வழிதேடினேன்

என்னைவிட 7வயது இளையவள் நீ. கல்வி சார்ந்த புத்தகப்பரிமாற்றங்கள், காதல் சார்ந்த கண்பரிமாற்றங்கள், கேலியான சொற்பரிவர்த்தனைகள் (மண்வெட்டிப்பல்) விதைத்திருந்தது. விடுவிடென விரைந்தேகியது காதல். தன்பாதையில் பல சாகசங்களைச் செய்தது. இணைத்திருந்தால் இன்பங்களை சேர்த்து சோகங்களைச் சொத்தாக ஆக்கியிராது.

கிளாலியூடாக அந்த கடல் நீரேரியைத் தாண்டித்தான் சாவகச்சேரி வரவேண்டுமென்பதில்லை. நிலரீதியான தொடர்பு இருந்தது. தொண்டைக்குழிக்குள் பிரதான இராணுவமுகாம். அதற்கான இராணுவ தொடர்வேலி. சாத்தியப்படாத பயணங்களை சாகசம் பண்ணி நீரேரி இணைக்கின்றது.

தண்மதி நிலவு எறித்துக் கொண்டிருக்கிறது. நாளை காலைக்கருக்கலில் உனது பிறந்தநாள். முந்தைய இரவு எனது நீண்ட பிரயாணம். முடிவில் உனைக் காண்பதுடன் ஊரையும் தரிசிப்பேன்.

தென்றல் காற்றே! கொஞ்சம் நில்லு!

மேடை ஏறக் கூடுமோ? மீண்டும் நமது நாடகம்.

நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்.

யாரை சொல்லி நோவது காலம் செய்த கோலம்.

உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்.

 கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே!

என்ன செய்வது சொல்லடி முல்லையே!

கிளாலிக்கூடான பயணம் என்பது மறுபிறப்பு குறித்த இந்துக்களின் நம்பிக்கையை பெருமளவு உண்மையாக்குகின்றது. “கண்டவர் விண்டிலர்” “விண்டவர் கண்டிலர்”. அனுவபவத்திற் கூடாகவே கிளாலிப் பயணத்தின் பாதுகாப்பின்மை குறித்த பக்குவங்களை பெற்றுக்கொள்ள முடியும். குறுக்காகவும் மறுக்காகவும் 5 கிலோமீற்றர் நீளவாக்கில் அமைந்த கடல்நீரேரிப் பயணத்தின் போதே கடற்படையினரின் சிறு உந்துவிசைப்படகுகளையும்,  பாதுகாப்பிற்காக ஆயுதம் தரித்த இளைஞர்கள்  படகுகளையும் காணமுடியும். பயணத்தின் நடுவழியில் இருதரப்பு யுத்தம் ஆரம்பமாகிவிட்டால் பயணிக்கும் சாதாரண பயணிகளின் பாடு திண்டாட்டமாகிவிடும். தரையில் ஒளிந்து கொள்ள இடம் தேடலாம்,  வெட்டவெளி நடுக்கடலில் ஊர்ப்பட்ட தெய்வங்களை மனதிற்குள் நினைத்தபடி விதிகுறித்த வரைபுகளை மீளாய்வு செய்யவேண்டி வரும். எனது பயணம் அதற்கூடாக தொடர்கின்றது. வடபுலத்தின் மக்கட்சமூகம் கல்வி மேம்பாட்டிற்கு தலைஅசைத்து வரவேற்கும் சமூகப் பண்பாடுடையதாக மாறி இருந்தது. புலம்பெயர்ந்த தருணத்து போர்ச்சூழல் முழுதான கல்வியை காணக்கிடைக்காது தடுத்தது. எனது உயர்தர வகுப்பு பெறுபேறுகள், காதல் பெறுபேறுகளை தட்டிக்கழிக்கும் என்பதால் லண்டன் பல்கலைக்கழக சிவில் என்ஜினியரிங் பட்டப்படிப்பை முழுதாக முடித்து “மருமகனே” என்றழைத்த உன்தாயாரிடம் மனதின் உட்கிடக்கையை வெளிப்பரப்பில் சொல்வதற்காக விரைந்து கொண்டிருக்கின்றேன்.

கடினமான அந்தப் பயணம் மிக சுவாரசியமானது. நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் ஊரைவிட்டு நீங்கியிருந்து லண்டனில் இருந்து உனைக் காண்பதற்காக நீரேரியின் கரைகளில் நிற்கின்றேன் நினைவுகள் சுமந்து. நினைவழியாநாட்கள். இந்த நான்கரை ஆண்டுகளில் ஊர் தனக்கான பிரதான பாதையை இழந்திருந்தது. லண்டனில் இருந்து இலங்கை திரும்புவதற்கு சட்டம் அனுமதியாச் சூழலில் பிறிதொரு நாட்டிற்குள் புகுந்து அங்கிருந்து இங்கென இழுத்து வந்தது உன்மீதான காதல் அக்கறைகள். அக்கறை இப்போது இக்கரையில் நிற்கின்றது.

இக்கரையில் இருந்து அக்கரைக்கு மூன்றரை மணிநேரப் பிரயாணம். நிலவு மாத்திரமே வானத்து வெளிச்சம். இருள் பாதுகாப்பானது. பெருமீன்கள் படகுப்பிரயாணத்தில் துள்ளி படகுக்குள் விழத்தொடங்கின. பதட்டப்படாமல் பிரயாணம் மேற்கொள்வதே பாதுகாப்பானது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருந்தது.

நாளை அவளது பிறந்தநாள் என்பதே ஆனந்தபிரவாகம். அவளுக்கு பரிசளிப்பதற்காக திருச்சி சாரதாஸில் தேடித்தேடி வாங்கிய காஞ்சிபுரம் பட்டுப்புடவையும் லண்டனிலிருந்து கொண்டுவந்த பரிசுப்பொருட்களும் எனது துணிவுத்தொகுதியை விட திணிவுத் தொகுதியை அதிகமாக்கி இருந்தன. வாராயோ வான்மதி.

மெல்ல மெல்ல படகு விரைந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நடுப்பரப்பு மீது பயணித்துக் கொண்டிருந்த படகு அதேயளவான எதிர்க்கரை நோக்கிய பயணத்தை  தொடர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அதே அரைமணி நேரத்தில் கரையைத்த தொட்டு விடலாம். கடலின் கரையும் காதலின் கரையும் பாதுகாப்பானவை. பயணத்திற்கு இலக்குகள் தாம் முக்கியம். வந்த வழியல்ல என எனது மனம் இடித்துச் சொல்கின்றது. கரையைத் தொட்டோம். கரையின் மணற்பெருவெளி பதட்டமுடையதாக இருந்தது. படகுப் பயணத்தை முடித்து தயாராக இருந்த வாகனத்தினூடாக சாவகச்சேரியை அடைய வேண்டும்.

மெல்ல அதிகாலைப் பொழுதை அண்டிவிட்டிருந்த காலைகளின் புள்ளின் ரீங்காரம் தூரத்து இராணுவமுகாம் வெளிச்சங்கள். இக்கரையில் பயப்பதட்டத்துடன் கூடிய முகங்கள். எல்லாவற்றையும் தாண்டி விரைந்தது அதிக பயணிகளுடனான கி.மு வை சேர்ந்த வாகனம். மண்ணெண்ணெய் + பெற்றோலில் ஓடும் அந்த வாகனம் வானத்து புகையை எல்லாம் தன்னிலிருந்து வெளியேற்றியது.

தற்போது நான் நிற்பது தாமோதரம்பிள்ளை வீதியிலமைந்த எங்கள் வீட்டின் முன்னால்.

எங்கள் வீட்டின் கேற்றினடியில் இருந்து வீட்டைப்பார்க்கின்றேன். வீடு பெரு மௌனத்துடன் குப்புறப்படுத்த கட்டடமாக தெரிந்தது. உன்னைப்பார்க்க உறக்கத்தை விட்டேன். நான் வந்தது தெரிந்து என்னைப் பார்க்க நண்பர்கள் வருவதற்கிடையில் உன்னைக்காண விழைந்தேன்.

நீயும் நானும் நீர் மொண்டு அள்ளிய கிணற்றின் கப்பி காலை வேளையில் கிரீச்சிடுகின்றது. சற்றேறக்குறைய  இன்னும் விடிந்து விட்டால் கிணற்றடியில் உன்னை தரிசிக்கலாம். பார்வைகளால் பதியன் இடலாம். முன்னைய எங்கள் கிணற்றடிக் கனவுகள் கண்களை நிறைத்தது. பாடசாலை புறப்படுதலுக்கான அவசரப்பொழுதுகளில் அசராப் பொழுதுகளாக காலை கிணற்றடி தரிசனங்கள் வாய்த்தன. நித்திரை முறித்த சோம்பலுடன் பூசாப்பூச்சுகளுடன் அலங்காரமின்றிய அவள் நீயாக என்னுள் நிறைந்தாய். அலங்காரமின்றிய அற்புத அழகு. என்னவள் கண்களில் நிறைந்து கனிநடம் புரிந்தாள்.

ஒரே நேரத்தில் இப்பாலும் அப்பாலுமாய் நான், நீ என இரண்டும் இரண்டும் நான்கானது. பார்வை ஒன்றே போதுமே. அந்தப் பங்குக் கிணற்றை மறைத்தது தகரவேலி.  உன்பங்கிலிருந்து நீயும் என்பங்கிலிருந்து நானுமாக பெருமளவில் காதலை வளர்த்துக் கொண்டது.  கிணற்றுக்குள் திடுதிப்பென போடும் வாளிகள் ஒன்றை ஒன்று முட்டி இருவருக்குமான பரிவர்த்தனை தளமாக கிணற்றடியை மாற்றியமைத்தது.

எனது வருகையை தெரிந்து கொண்ட உனது தாயார் எனக்கும் உனக்கும் உறவினரான நல்லக்காவிடம் “எனது மருமகன்” வந்திருக்கிறார் எனச் சொன்னதாக சொல்லிச் சென்றார். எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.

கண்ணா உன்னை தேடுகின்றேன் வா!

கண்ணீர்க் குயில் பாடுகின்றேன் வா!

உன்னோடு தான் வாழ்க்கை.

உள்ளே ஒரு வேட்கை.

கண்ணீர் இன்னும் ஓயவில்லை!

கன்னங்களும் காயவில்லை!

உனது 19வயது பிறந்தநாளில் உனைக் காண்பதற்காக ஒரு முழுப்பகலை நான் தொலைத்திருந்தேன். வீடுகள் நெருக்கமாகவே இருந்தன. நீயும் நானும் அதிக தொலைவிலில்லை. பின்மதிய நேரத்தில் தாயாருடன் நீ வந்திருந்தாய். கொண்டு வந்திருந்த நீலநிற பட்டுப்புடவையை உன்னிடத்தில் தந்து விட எண்ணியபோது சாத்திர-சம்பிரதாயத்தில் ஊறிய எங்கள் சிந்தனை பஞ்சாங்கம் பார்க்க விளைந்தது. திருச்சியில் வாங்கிய அந்தப் பட்டுப்புடவை அட்டமி-நவமி நாளில் வாங்கியதாக தெரிந்தது. “அட்டமியில் தொட்டது துலங்காது” என பழமைச்சம்பிரதாயத்தில் ஊறிய உட்கிடக்கை என்னை பயம் கொள்ள வைத்தது. நெருக்கமான உறவு நீடித்திருக்க வேண்டும் என நினைத்த நான் அந்த நீலநிறப்பட்டை உன் பிறந்தநாளுக்கு பரிசளிக்காது தவிர்த்து விட்டேன். இன்றளவும் எனைக்கொல்லும் உட்கிடக்கை அதுவாகப் பதிவாகின்றது.

எங்கள் இருவருக்குமான உரையாடல்கள் காதல் பற்றியதாகவோ, கனவு பற்றியதாகவோ இருக்கவில்லை. உன்னருகில் உனது தாயும், என்னருகில் எங்கள் வீட்டாருமென இருந்து பாரம்பரிய சூழலை பக்குவப்படுத்திக் கொண்டதில் எங்கள் விருப்பங்களை விளக்கிச் சொல்லிக்கொண்டிருக்க முடியவில்லை. முடியாமல் போனதெல்லாம் முடிவாய்ப்போயின. தொடரமுடியா உறவுகளை தொலைதூரமாக்கி விட்டன.

அதற்கடுத்த நாள் உன்வசம் நீயிருக்கவில்லை. உயர்தரப் பரீட்சை முடிவுகள்  அன்றந்த நாளில் வெளியாகியிருந்தது. நீ எதிர்பார்த்திருந்த மருத்துவப்படிப்பிற்கான நுழைவு மதிப்பெண்கள் கிடைக்காத காரணத்தால் அழுதுகொண்டிருந்தாய். தினசரி மகிழ்வாய் பூத்திருந்த மலர்களை ஒத்த உன் முகத்தை அழுது வடித்து படிந்த துயரத்துடன் காணச்சகிக்காமல் என் வீட்டிற்குள் நான் முடங்கிக்கொண்டேன். சந்தர்ப்பங்களை தவறவிடுவதில் தான் காதல் தோற்றுப் போகின்றது. The ball is on your court என்பர். நான் அடித்து ஆடாததன் வலியை இன்றளவும் உணர்கிறேன். ஒரு முடிவெடுக்க புறப்பட்ட பிரயாணம், ஒரு முடிவுமின்றி தொடர்ந்தது.

எனது போதாத காலத்தின் பெரும் துயரமாக பிரிவு வந்து அழுத்தியது. மிக இறுக்கத்துடன் முடிவுகள் எட்டப்படாவிட்டால் காலப்பெருவெளியில் முடிவுகள் நீர்த்து நிலையற்றுப்போய்விடும். வெற்றி பெற்ற மனிதனுக்கும், தோல்விகளை தினசரி சந்திக்கின்ற மனிதனுக்கும் இடையிலான வேறுபாடு சரியான தருணங்களில் எடுத்த முடிவுகளும் முடிவுகளுக்கூடாக கிடைத்த இறுதி இலக்குகளுமேயாகும்.

இடைப்பட்ட காலத்தில் உனது தாயார் எனது தந்தையை சந்தித்து எங்கள் இருவருக்குமான பொருத்தம் பார்ப்பதற்காக எனது ஜாதகத்தை கேட்ட பொழுதில் எனது தகப்பனார் கூறியது  “என்னளவில் நான் இதற்கு சம்மதிக்கவில்லை. எனது மகனுக்கு விருப்பமெண்டால் ஒத்துக்கொள்கிறேன்” என்று. பெரியவர்கள் தங்கள் தீர்மானங்களில் பிடிவாதங்களில் விடாப்பிடியாக நின்றார்கள்.

எனது தாயாரின் சகோதரி திருமணம் முடித்த வகையில் உனது நெருங்கிய உறவாக மாறியிருந்தும், உனது வீட்டாரிடம் எனது ஆவல்களை வெளிப்படுத்துவதற்கு அவருக்கிருந்த அதீத செல்வாக்கும் என்னளவில் பயன்படாது போயிற்று. பெரியவர்கள் பெரிதாக எதிர்பார்ப்பார்கள். சின்னவர்கள் சின்னத்தனங்களுடன் கனவு காண்பதாக பெரியவர்களின் அகராதியில் எழுதி வைத்துள்ளது பெரும் பிழை வடிவமாகும்.

அவன் என்னிடம் ஒரு சொல் சொல்லியிருந்தால் அவர்களது திருமணத்தை நான் நடத்தி வைத்திருப்பேன் என சித்தியும் பொருமிக்கொண்டார். அவரைப் பெருமைப்படுத்தி முன்னிலைப்படுத்தாத காரணத்தால் என் காதலின் பிரிவுக்கு சித்தியும் பெருமளவு காரணமாக இருந்தார்.

பெரியவர்கள் என்ற பெருமையை மூத்த உறுப்பினர்கள் என்ற மகிமையை இளையவர்களான சிறுவர்களான நாம் குலைத்து நாசமாக்கி விட்டதாக நம்பும் இந்த சமுதாய அமைப்பு முறையின் முடைநாற்றம், என்னை பெருமளவு நாசப்படுத்தி விட்டது. சாத்தியமுள்ள இணைவுகளை சாத்திரங்கள் பிரிக்கின்றன. நாளும் கோளும் நல்லதே செய்யும். ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. கேட்டதில்லையா நீ? கேளாச்செவிகளா உன் பெற்றோருக்கு. படிக்கிறது தேவாரம் இடிக்கிறது நான் வளர்த்த காதல் கோட்டை.

காதல் கோட்டை பெயரளவில் பாதுகாப்பானது. இருவரது உணர்வுகளை பாதுகாத்துக் கொள்ள. எங்கள் இருவரது உணர்வுபூர்வ செயல்களால் காப்பாற்றியிருக்க வேண்டும் கோட்டையை. ஒருபக்கம் காத்துக்கொள்ள மறுபக்கம் இடித்து துவம்சம் செய்தார்கள் பொருந்தாக் கோட்பாடுகளால்.

நாங்களே வரைந்து கொண்ட பாதைகள்.  நாங்களே வளர்த்துக் கொண்ட எல்லைகள். நாங்களே வகுத்துக் கொண்ட பயணங்களுக்கு பாதைகளும், எல்லைகளும் சம்மதிக்காத போது அழித்து திருத்தப்படும். நாளும், கோளும், மூலமும், திருவாதிரையும் ,8ம் இடத்து குருபகவானும், 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் வியாழனும் தீர்மானிக்க அனுமதித்திருந்தால் உங்களுக்கு காதல் என்ன வேண்டியிருக்கின்றது என என் மனச்சுவடுகள் உன்னிடம் கேள்வி கேட்கின்றன.

ஜாதகத்தை வாங்கிச்சென்ற உனது தாயார் பொருத்தம் பார்த்த இடத்தில் 7ல் செவ்வாய் தோசத்துடன் கூடிய என்னை மருமகன் ஸ்தானத்திலிருந்து நழுவவிட்டார்.

ஓன்றுமே நடக்காமல் ஒன்றுமே இயங்காமல் விட்ட சூழலை மீண்டும் இயங்க வைப்பதற்காய் 94ம் ஆண்டிலும், 96ம் ஆண்டிலுமென இரண்டு பிரயாணங்கள். இறுதிச் சந்திப்பில் கொழும்பில் வைத்து நீ வீட்டிலிருக்கும் பொழுதில் நீ வீட்டிலில்லை எனவும்  எனது மகளுக்கு சம்மதமில்லை எனவும் கூறி மருமகனை மறுமகனாக ஆக்கி வைத்தார் உன் தாயார்.

லண்டன் வைத்தியசாலையில் தனது இயலாமைக்காலத்தில் வைத்திய பராமரிப்பிற்கு உள்ளான எனதினிய சித்தி “கால் குளிருதடா காலுறையை மாட்டிவிடு” என்ற பொழுதில் சித்தியின் கால் பற்றி காலுறை அணிவித்த கணத்தில் மனதார வாழ்த்தினேன்.

கனன்ற காயம், துயரப்படிமம், பாதகமான சித்தி, பழம்பெருமை பேசும் சமூகமுறை, மெலிதான உணர்வுகளை புதைத்த வன்கொடுமை, செவ்வாய் தோசம் பற்றிய பரிதலின்றிய மூடத்தின் முழுப்பகை, கிரக சஞ்சாரம், காதல் கணிதத்தில் விட்ட பெரும் பிழைகள், தோச ஜாதகப் பிழைகளான  அவளின் தந்தையின் திடீர்மறைவு, இராணுவ முகாமில் இருந்து ஏவிய ஷெல் வீச்சால் நிகழ்ந்தது. திடீர்மறைவு அவளின் தாயாரில் ஏற்படுத்திய தாக்கம்  எல்லாம் சேர்ந்து காதலை கனபரிமாணத்துடன் குழப்பி விட்டது.

இப்போது

எல்லாம் புறம்தள்ளி நிமிர்ந்து கொண்டேன்.

குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகின்றாய்.

மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா.

குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகின்றாய்.

உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா.

இருவரும் வாழ்க!

“ஆருத்ரா” தரிசனம்

எல்லோரிடமும் கதைகள் ஒளிந்திருக்கின்றன. மனிதமுகங்கள் கதையின் வரிவடிவங்கள். எங்கோ தொலைவில் யாரிடமோ ஒளிந்திருந்த கதை, முகத்தின் வரிவடிவங்களில் படிந்த கதை,  ஒரு கதைசொல்லியாக  என்மூலம் வெளிப்பட்டிருக்கின்றது.

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்